Monday 23 January 2012

எந்திரனை மிஞ்சிய நண்பன்

ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் கதையமைப்பில் அல்ல, அது எத்தனை தூரம் வசூலை அள்ளி குவிக்கிறது என்பதை பொருத்துத்தான் அமைகிறது என்பதை சமீப காலங்களில் அறிந்து கொண்ட திரையுலகினர் படம் ஐம்பது நாள் ஓடுகிறதா, நூறு நாள் ஓடுகிறதா, வெள்ளிவிழா கொண்டாடுகிறதா என்பதெல்லாம் பற்றி கவலைப்படுவதில்லை. எவ்வளவு வசூல் வந்தது என்பதுதான் இப்போதைய வெற்றி கணக்கு. அதன்படி பார்க்கும்போது பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்கள் இயக்கம் படங்கள் 'குப்பைகளாக' இருந்தாலும் வெற்றி பெற்ற படங்களாகவே ஆகிவிடுகின்றன. அதற்கு முக்கிய காரணம் விளம்பரங்கள். ஒரு கரகாட்டகாரன், ஒரு சந்திரமுகி என பல நாட்கள் திரையரங்குகளில் ஓடிய படங்கள் என விரல் விட்டு எண்ணிவிடலாம். இப்போதெல்லாம் தொழில்நுட்பம் பெருகிவிட்டதால் படங்கள் அடுத்த நாளிலேயே இணையதளங்களில் எளிதாக கிடைத்துவிடுகின்றன. இப்படிப்பட்ட சூழலிலும் தமிழ் திரைப்படங்கள் வசூல் சாதனை புரிந்து கொண்டுதான் இருக்கின்றன. 

எந்திரன் படம் தயாரிக்கப்பட்ட போது படத்தை பற்றிய அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த நண்பன் படம் அப்படி ஒன்றும் எதிர்பார்க்கப்பட்ட படமாக அமையவில்லை. இதற்கு காரணம் இது ஒரு இந்தி படத்தின் தழுவல். 'ஈ அடிச்சான் காப்பி' என்பது போல இந்த படத்தை வெகு நேர்த்தியாகவே சங்கர் காப்பி அடித்துவிட்டார் எனும் பரவலான குற்றச்சாட்டு உண்டு. அது அவரது திறமைக்கு ஒரு சான்று என சான்றிதழ் தருபவர்கள் உண்டு. 

நண்பன் ஒரு ஈ அடிச்சான் காப்பி என்றாலும் அது மக்களிடம் நல்ல பெயரை வாங்கி இருப்பதாகவே பல இணையதளங்கள் செய்திகளை எழுதி வெளியிட்டு கொண்டிருக்கின்றன. அதிகாரப் பூர்வமாக அறிவித்தலில் கூட பல குளறுபடிகள் இருக்கும் என்றாலும் அது அதிகாரப் பூர்வமான அறிவிப்பு என்றே பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். இந்த நண்பன் படம் சரியாக வசூல் குவிக்கவில்லை என ஒரு பக்கம் ஒரு தரப்பு எழுதுவதும், அதே வேளையில் எந்திரனை மிஞ்சிய படம் என மறு சாரார் எழுதுவது என இந்த நண்பன் வசூல் குறித்த உண்மை நிலவரம் இதுவரை வெளிவரவில்லை. மிக சிறந்த படங்கள் அனைத்துமே வசூலில் அள்ளி குவிப்பதில்லை என்பதுதான் தமிழக திரையுலக வரலாறு.  

விஜய் அவர்களுக்கு நிறைய கனவுகள் இருப்பது பாராட்டப்பட வேண்டியதுதான். அரசியலில் இறங்க வேண்டும் எனும் அவரது எண்ணம் நல்லதுதான். இதற்கான முயற்சிகளை அவர் செய்கிறாரோ இல்லையோ அவரது தந்தை மிகவும் எச்சரிக்கையுடன் அதற்கான விதைகளை தூவிக்கொண்டே இருக்கிறார். இதற்கு திரையுலகில் வெற்றியை மிகவும் முக்கியமானதாகவே விஜய் கருதுகிறார். தனுஷ், சிம்பு என அடுத்த கட்ட நடிகர்கள் பலமுகங்களுடன் திரையுலகை ஆக்கிரமித்து கொண்டு வருகிறார்கள். இந்த சூழலில் விஜய் தொடர்ந்து வெற்றிப்படங்கள் தராது போனால் அவரது கனவுகள் தகர்க்கப்பட்டுவிடும் என்பதால் நண்பன் போன்ற படங்களில் எல்லாம் விஜய் நடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார் என்றே திரையுலகினர் கருதுகிறார்கள். 

விக்கிபீடியா ஒருநாள் செயல்படாமல் இருக்கப்போவதை கண்டு ஒருவர் 'அப்பாடா இனிமேல் நான் பொய்யான தகவல்களை வாசிக்கவோ, சேகரிக்கவோ வேண்டியதில்லை' என நகைச்சுவையாக எழுதினார். இந்த விக்கிப்பீடியாவில் வரும் பல செய்திகள் நம்பகத்தன்மை இல்லாத தளங்களில் இருந்தெல்லாம் விசயங்களை சேகரித்து வெளியிடுகிறது. இந்த விக்கிபீடியாவில் வெளியிடப்பட்ட விபரங்களில் படி ஒரு மூன்று படங்களின் (எந்திரன் ஏழு நாட்கள், நண்பன் நான்கு நாட்கள், மங்காத்தா ஐந்து நாட்கள்) வசூலைப் பார்ப்போம். இதன் கணக்குப்படி பார்த்தால் நண்பன் எந்திரனை மிஞ்சிவிடும். மேலும் தயாரிப்பு செலவு என பார்த்தால் நண்பன் பெற்று இருப்பது எந்திரனை விட பெரும் வெற்றிதான். எனவே இனிமேல் விஜய் தான் 'சூப்பர் ஸ்டார்' என அறிவிக்கப்பட வேண்டும். 


பொய்யான தகவல்களை தருவதும், கவர்ச்சிமிக்க தலைப்புகளில் எழுதுவதும் மீடியாக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. அதில் நாமும் கரைவோம்.


8 comments:

முத்தரசு said...

//விஜய் அவர்களுக்கு நிறைய கனவுகள் இருப்பது பாராட்டப்பட வேண்டியதுதான். அரசியலில் இறங்க வேண்டும் எனும் அவரது எண்ணம் நல்லதுதான்//

அப்படி போடு அருவாளை

//இனிமேல் விஜய் தான் 'சூப்பர் ஸ்டார்' என அறிவிக்கப்பட வேண்டும்//


அட்ரா சக்கை அட்ரா சக்கை

Radhakrishnan said...

அவரும் எத்தனை நாளைக்குத்தான் இளைய தளபதியாவே இருப்பாரு. நன்றி மனசாட்சி.

THALAPATHI ANAND said...

விஜய் தான் NEXT 'சூப்பர் ஸ்டார்'

வருண் said...

***பொய்யான தகவல்களை தருவதும், கவர்ச்சிமிக்க தலைப்புகளில் எழுதுவதும் மீடியாக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. அதில் நாமும் கரைவோம். ***

நண்பன் படம் நல்லாத்தான் போயிக்கிட்டு இருக்குங்க. அதனால் பொய்யான தகவல்னு சொல்ல முடியாது.

சின்னத்தம்பி, கரகாட்டக்காரன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளன. (செலவு, வரவு கணக்குப் பார்த்தால்). நண்பனும் போற போக்கப் பார்த்தால் அதுபோல ஆகலாம்தான். எந்திரனை அந்த வகையில் சேர்க்க முடியுமானு தெரியலை.

எந்திரன், ஹிந்தில ஒரு 40 கோடி போலவும், ஆந்திராவில் ஒரு 40 கோடி போலவும் வசூல் பெற்றுள்ளது.

நண்பன் அந்த வாய்ப்பை ஹிந்தியில் இழந்துவிட்டது. ஆந்திராவில் இதுவரை ரிலீஸ் செய்யப்படவில்லை. அதனால, எந்திரன் வெற்றிக் கொஞ்சம் வேறுவகையில் சேரும்னு நெனைக்கிறேன்.

Rajni was called "super star" because he never had a "director dad" or any kind of back-up when he entered Tamil cinema. He was introduced as a villain and people loved to hate him. Later, his growth was amazing in a very short period (nobody, even em gee aar never grew that fast in tamil cinema) and he could maintain it all the way. So, I would not call vijay a super star but you can call him of course :-)

Radhakrishnan said...

நன்றி ஆனந்த்.

நன்றி வருண். விரிவான விபரங்களுக்கு. படம் நன்றாக ஓடினாலும் வசூல் விபரங்கள் எல்லாம் படங்களைப் பொறுத்தவரை பொய்யான தகவல் தான். ஏனெனில் சரிவர விபரங்கள் எப்போதுமே மீடியாக்களுக்கு கிடைப்பதில்லை. கள்ளப்பணம், டிக்கட் விலை என பல காரணிகள் உண்டு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பகிர்வு ராதாகிருஷ்ணன் சார்.

Radhakrishnan said...

நன்றி ஸ்டார்ஜன். மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

Radhakrishnan said...

//இன்றைய தட்ஸ்தமிழ் செய்தியில்: எதிரியான நண்பன்

நண்பன் வசூல் குறித்து தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை வெளியிடும் 'தமிழ்நாடு என்டர்டெயின்மெண்ட்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் ராமானுஜம் இப்படிக் கூறுகிறார்:

நண்பன் வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிட்டது என்பது மிகப் பெரிய பொய். இந்தப் படம் இன்னும் 30 கோடியைக் கூட தாண்டவில்லை என்பதுதான் உண்மை.

முதல் நாள் சுமாரான கூட்டத்துடன்தான் படம் வெளியானது. முதல் நான்கு நாட்களும் சராசரியாக ரூ 4 முதல் 4.5 கோடி வரை வசூலித்தது இந்தப் படம். அதன் பிறகு விழுந்துவிட்டது. நியாயமாக நல்ல விமர்சனம் வந்துள்ள நிலையில் இந்தப் படம் பெரிதாகப் போயிருக்க வேண்டும். ஆனால் நல்ல படம் என பாராட்டப்பட்டும், எதனால் கூட்டம் குறைந்தது என்பது ஆராய வேண்டிய சமாச்சாரம்.

சென்னையில் படத்துக்கு சுமாராக கூட்டம் வந்துவிட்டால் படம் ஜெயித்துவிட்டது என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேண்டுமானால் நண்பன் வெற்றி, ரெக்கார்டு பிரேக் என்று கூவலாம். அடிவாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் பஞ்சாயத்து வைக்கும்போதுதான் உண்மை புரியும்.

நண்பன் படத்தின் பட்ஜெட் ரூ 65 கோடி. இதில் பாதிக்கு மேல் வசூலித்தாலே பெரிய விஷயம்தான் என்பது இன்றைய நிலவரம். அடுத்த வாரம் மொத்த வசூல் விவரமும் வந்துவிடும். எங்கள் பத்திரிகையிலேயே தியேட்டர்வாரியாக வசூலை வெளியிடவிருக்கிறோம்," என்றார். //

மேலிடப்பட்ட செய்தி எத்தனை தூரம் உண்மை?