Wednesday 22 September 2010

இயற்பியலில் இறைவனுக்கு இடமில்லை

இயற்பியலை எப்படி பிரித்து சொல்வது என தமிழ் ஆசிரியரைத்தான் கேட்க வேண்டும். எனக்கு தெரிந்த தமிழில் இயல்பு+இயல் என பிரித்து லகரம் றகரமாக திரிந்தது என சொல்லித் தந்து விடுவது எளிதாகத்தான் இருக்கும்.

இந்த இயற்பியல் விதிகள் மூலம் இந்த உலகத்தை பார்த்தால் இறைவன் என்பவர் ஒருவர் இருக்கும் வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக ஒரு அறிவியலாளர் அறிவித்து இருக்கிறார். இயற்கையாகவே எல்லாம் நடந்தது என்பதுதான் அவரது விதி. யாரும் எதையும் படைக்கவில்லை என்பது அவரது உறுதிப்பாடு. பல அறிவியல் அறிஞர்கள் பல வித கண்டுபிடிப்புகளை கண்டு சொன்னாலும் இறைவன் என்பவரை ஒதுக்குவதில் சற்றே தயக்கம் காட்டினார்கள்.

எங்கள் மனதிலும், எங்கள் அனுபவத்திலும் இருக்கும் இறைவனை எவராலும் அகற்ற இயலாது என நம்பும் கூட்டம் உண்டு என்பதை உறுதிபடுத்தும் வண்ணம் சமீபத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து என சுற்றிப் பார்க்க வந்த போப் அவர்களை பார்க்க குழுமியிருந்த கூட்டம் உறுதிபடுத்தியது.

இந்த அறிவியல் அறிஞரின் இயற்பியல் விதியை நமது மக்களிடம் சொன்னால் 'வேலை வெட்டி இல்லாத ஆள்' என சொல்லிவிட்டு போவார்கள். நாங்கள் தான் இயற்கையை மட்டுமல்ல எல்லாமே இறைவன் என ஏற்றுக் கொண்ட பின்னர் இதில் என்ன பாகுபாடு வேண்டி இருக்கிறது என்பதில் அவர்கள் உறுதியாய் இருப்பார்கள்.

எதையும் உறுதியாய் நம்புவர்களின் உள்ளத்தில் ஒருபோதும் கீறல் ஏற்படுவதில்லை. இறைவனை உறுதியாய் நம்புவர்களுக்கு இறைவன் சுகமாக இருக்கிறார்.

இறைவன் பற்றிய கவலையைவிட இப்போதெல்லாம் திருடர்களை பற்றித்தான் அதிகம் கவலைப்பட வேண்டி இருக்கிறது. பொருளாதார சரிவினால் மட்டுமல்ல, திருடுவதை ஒரு தொழிலாக கொண்டு வாழ்பவர்கள் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். திருடர்களின் தொல்லை மிகவும் அதிகம் ஆகிவிட்டது.

இந்தியாவுக்கு செல்லும் முதல் நாள் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் வாகனம் திருடு போனது. இன்னமும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஊரில் இருந்து வந்தபின்னர், ஊரில் இருந்து எடுத்த படங்கள் அனைத்தையும் வழக்கம் போல அச்சடிக்க அனுப்பி இருந்தேன். அவர்களும் அடுத்த தினமே அச்சடித்து அனுப்பி இருந்து இருக்கிறார்கள். எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் இடம் வரை அந்த படங்கள் வந்து சேர்ந்துவிட்டது. ஒரு வாரம் ஆகியும் எனக்கு கிடைக்காமல் இருந்ததால் எனக்கு சந்தேகம் ஏற்படவே விசாரித்தேன். அதை எனக்கு கொண்டு சேர்க்க வேண்டி கொண்டு வந்த வாகனம் திருடு போய்விட்டதாக இன்று தகவல் சொன்னார்கள். கோவில் படங்கள் பல அதில் இருந்தது.

திருடியவனின் கண்ணை சாமி குத்துமா என இயற்பியலில் இறைவனுக்கு இடமில்லை என  சொன்ன அறிவியல் அறிஞருக்கு தொலைபேசி போடலாமா என நினைத்தேன், ஆனால் அதைவிட  எனக்கு கோவிலில் எடுத்த படங்களில் இருந்த தெய்வங்கள், மலைகளிலும், மரங்களிலும், மழைத்துளிகளிலும், மக்களிலும் நிறைந்து இருந்த இறைவன் தொலைந்து போன  வருத்தம் மட்டுமே மிஞ்சி இருந்தது.

8 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

//இந்த இயற்பியல் விதிகள் மூலம் இந்த உலகத்தை பார்த்தால் இறைவன் என்பவர் ஒருவர் இருக்கும் வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக ஒரு அறிவியலாளர் அறிவித்து இருக்கிறார். //\

Stephen hawking எழுதிய "The Grand design" என்பதைப் பற்றி குறிப்பிடுகிறீர்களா?

Shakthiprabha (Prabha Sridhar) said...

//திருடியவனின் கண்ணை சாமி குத்துமா என இயற்பியலில் இறைவனுக்கு இடமில்லை என சொன்ன அறிவியல் அறிஞருக்கு தொலைபேசி போடலாமா என நினைத்தேன், ஆனால் அதைவிட எனக்கு கோவிலில் எடுத்த படங்களில் இருந்த தெய்வங்கள், மலைகளிலும், மரங்களிலும், மழைத்துளிகளிலும், மக்களிலும் நிறைந்து இருந்த இறைவன் தொலைந்து போன வருத்தம் மட்டுமே மிஞ்சி இருந்தது//

ரொம்ப அழகா முடிச்சிருக்கீங்க.

"தெய்வம் என்றால் அது தெய்வம்
சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை"

என்ற வரிகளையொட்டி இருக்கிறது உங்கள் இடுகை.

Chitra said...

உங்கள் நம்பிக்கையை புகட்டாமல், இந்த இடுகையை வாசிப்பவரையே, தங்கள் நம்பிக்கையை ஒரு கணம் சீர் தூக்கி பார்த்து, உறுதி படுத்த வைத்து விட்டீர்கள்.

Thekkikattan|தெகா said...

வெ. இரா,

ஒரு சிந்திக்கும் மனிதனுக்கு இந்த பரந்த ப்ரபஞ்சத்தை பார்க்கும் போதெல்லாம் அடிப்படையாக தோன்றும் கேள்விதான் ‘இந்த கடவுள்’ கான்செப்டே. அதற்கு பதில் பெற வேண்டுமாயின் அறிவியலின் மூலமே பதிலுரைக்க முடியும். அதுவும் இந்த space and time என்று வரும் பொழுது இயற்பியலே அதற்கு தக்க சான்றினை கொடுக்க முடியும்.

//திருடியவனின் கண்ணை சாமி குத்துமா என இயற்பியலில் இறைவனுக்கு இடமில்லை என சொன்ன அறிவியல் அறிஞருக்கு தொலைபேசி போடலாமா என நினைத்தேன்,//

இதற்கு எதற்கு ஸ்டீவனுக்கு தொலைபேசி, அவருதான் சொல்லிட்டாரே இதெல்லாம் நிகழ்தகவுன்னு, நீங்கதான் சொல்லணும் கடவுள்ங்கிற ஒருத்தரு குச்சி வைச்சிட்டு எங்கோ உட்கார்ந்து எல்லாத்தையும் கவனிச்சிட்டு இருக்காருன்னா, மதங்கள் மூலமா வர்ற சண்டையில்லாம பண்றது, அடுத்தவன் வீட்டு சொத்துக்கு ஆசைப்படாம இருக்கிற மனங்களை மட்டுமே கொடுத்து மனுசங்களை படைக்கிறதுன்னு சொஞ்சிருக்கலாமே!

ஏன் அவருக்கு தொலைபேசி, புரியல?

Radhakrishnan said...

ஆம், நன்றி சகோதரி.

நன்றி சித்ரா.

நன்றி தெகா. நலம்தானே. இயற்பியல் மூலம் எல்லா விசயங்களுக்கும் பதில் சொல்ல இயலாது. உயிரியல் என்று ஒன்று இருக்கிறது என்பதை எவரும் மறுக்கவியலாது.

அவருக்கு எதற்கு தொலைபேசி என்றால், காலம் காலமாக அறிவியல் எதற்கு ஆன்மிக உணர்வோடு முரண்டு பண்ண வேண்டும், இது இப்படி இருக்கிறது என அறிவியல் மூலம் கட்டினால் போதுமே, கற்றுக் கொள்பவர்கள் கற்று கொள்ளப் போகிறார்கள் அதைவிட்டுவிட்டு கடவுள் படைக்கவில்லை, கடவுள் இல்லை என இன்றைய அறிவை வைத்து எதையும் சொல்வது என்ன நியாயம்? இது அறிவியலுக்கு ஒரு இழுக்கு என நான் கருதுகிறேன் என கூறத்தான். அத்துடன் சாமி கண்ணை குத்துவது நிகழ்தகவா என கேட்கலாம் என நினைத்தேன். ;)

கோவி.கண்ணன் said...

பர்ஸில் சாமிப்படம் வைப்பதினால் பர்ஸ் களவு போகாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை
:)

Radhakrishnan said...

ஹா ஹா கோவியாரே, மிகவும் ரசித்தேன். நன்றி.

salahudeen said...

கடந்த 11/10/12 - 12/10/12 அன்று நாத்திகர்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் (TNTJ) இடையே மூன்று தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. அதில் முதல் தலைப்பு இறைவன் இருக்கின்றானா? இப்பேரண்டம் தானாக உருவானதா? இறைவனால் படைக்கப்பட்டதா? என்பதாகும்.

இந்த விவாத வீடியோவை பார்க்க : http://onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/


இந்த விவாதத்தை பார்க்கும் யாவரும் நடுநிலையோடு சிந்திக்கும்பட்சத்தில் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்ற முடிவுக்கே வர முடியும்.

*****ஆற்றல் அழிவின்மை விதி (Law of conservation of energy) :ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றலை மற்றோர் வகை ஆற்றலாக மாற்றலாம். ஒரு தொகுப்பில் உள்ள ஆற்றலின் கூட்டுத்தொகை ஒரு மாறிலி.*****

இவ்விதியின்படி இம்மாபெரும் பேரண்டம் உருவாவதற்குரிய அந்த ஆற்றல் எப்படி வந்தது என்று இறைவனை மறுப்பவர் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளனர்.

mail me : salahudeen33@gmail.com