Friday 24 September 2010

நுனிப்புல் பாகம் 2 (16)

16. பெருமாள் கடிதம்

திருமால் சில தினங்களாக வாசன் பற்றிய நினைவில் இருந்தார். குழந்தைகளைப் பார்க்கும்போதும் வாசன் வந்து போனான். ஆனால் இதுகுறித்து எதுவும் பேசாது இருந்தவர் செவ்வாய் மாலை தனது மனைவியிடம் தான் திருவில்லிபுத்தூர் சென்று வருவதாக கூறினார். ஆனால் அவரது மனைவியோ வேண்டாம் என்பதுபோல் பார்த்தார். திருமால் பேசினார்.

''ஒரு முக்கியமான வேலை இருக்கு, நான் போய்ட்டு கூடிய சீக்கிரம் வந்துருவேன், இதுதான் சமயம், நீயும் பிள்ளைகளும் ஆஸ்ரமத்திலேயே தங்கிக்கோங்க''

''என்ன விசயமா திருவில்லிபுத்தூருக்குப் போறீங்க, அதுவும் திடீருனு''

''வாசன்''

''திருமலைக்குப் போகப் போறீங்க, எவ்வளவு தடுத்தாலும் போய்த்தான் தீருவேனு அடம்பிடிக்கிறீங்க, இப்போ வாசன் அங்கப் போகப்போறானா, போய்ட்டு வாங்க''

''பெருமால் தாத்தா இப்போ உயிரோடில்லை''

திருமால் சொன்னதை கேட்டதும் தனது கையில் இருந்த பாத்திரத்தை தவறவிட்டார் யோகலட்சுமி.

''எப்ப நடந்தது?''

''பாரதியும் கிருத்திகாவும் வந்தப்ப சொன்னாங்க, உடனே சொல்லத் தோணலை''

நீங்க அன்னைக்கேப் பார்க்க போயிருந்திருக்கனும், நான் தான் உங்களைத் தடுத்திட்டேன்''

''ம்ம் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கலை, இப்போ நான் போயிட்டு வந்துருரேன்''

''சாத்திரம்பட்டிக்கும் போகப் போறீங்களா?''

''இல்லை, நாம் எல்லாம் சேர்ந்து ஒருநாள் போய்ட்டு வருவோம், குளத்தூர் போய்ட்டு போகலாமானு ஒரு எண்ணம் இருக்கு''

சிறிது நேரத்தில் யோகலட்சுமியையும், குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு திருமால் அவரது ஆஸ்ரமம் நோக்கி நடந்தார். ஆஸ்ரமம்தனை அடைந்ததும் அங்கிருந்த முக்கிய பொறுப்பாளரிடம் விபரம் கூறிவிட்டு பாதுகாப்புடன் செயல்புரியுமாறு கூறினார்.

மிகப்பெரிய பரப்பளவில் அந்த ஆஸ்ரமம் அமைந்து இருந்தது. குழந்தைகள் தங்குவதற்கான அழகான கட்டிடமும், பாடசாலையும் சுற்றியிருந்த நிலப்பரப்பில் விவசாயம் என ஒரு சிறிய ஊர் போல இருந்தது. நிலப்பரப்பைச் சுற்றி பெரும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. திருமாலைக் கண்டதும் குழந்தைகள் ஓடி வந்தனர். ஒரு சிறுவன் கேட்டான்.

''பிரபோ, முக்காலம் உணரும் கலைதனை எப்பொழுது ஆரம்பிக்க இருக்கிறீர்கள், நேற்று கேட்டேன் எந்த பதிலும் தராமல் புன்னகைத்தீர்கள்''

''யார் இது குறித்து இத்தனை ஆவலை உன்னில் தூண்டியது?''

''உடலுக்குள் உயிர் புகுமெனில், உயிர் வளருமெனில், உடல்விட்டு உயிர் போகுமெனில் அக்கலையை அறியத் தாருங்கள்''

மற்ற சிறுவர் சிறுமியர்களும் ஆமாம் என்பது போல் பார்த்தனர். திருமால் தான் அவசரமாக வெளியூர் செல்வதால் திரும்பி வந்தவுடன் இதுகுறித்து கலந்துரையாடுவதாக கூறினார். அனைவரும் சம்மதம் சொன்னார்கள். யோகலட்சுமி ஆஸ்ரமத்தில் இருந்து சில வரைபடங்களை எடுத்து வந்தார். அந்த வரைபடங்கள் அங்கிருந்த சிறுவர் சிறுமியர்களால் வரையப்பட்டது. சில படங்களைக் காட்டி ஆண்டாள் கோவிலில் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார். திருமாலும் சரியென சில படங்கள் எடுத்துக்கொண்டார்.

பேருந்து நிலையம் வந்தடைந்தார். மதுரையை மறுநாள் புதன் காலையன்று வந்தடைந்தார். மதுரையில் காலைக் குளியல் முடித்துவிட்டு நேராக மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றார். மீனாட்சி அம்மனை வணங்கிவிட்டு கோவில் பிரகாரம் சுற்றி வந்தபோது மாதவி அவர் முன்னர் எதிர்பட்டாள். மாதவியை திருமால் அழைத்தார்.

''குளத்தூர் இங்கே இருந்து எவ்வளவு நேரம் ஆகும், எப்படி போறதுனு கொஞ்சம் சொல்ல முடியுமா''

''எந்த குளத்தூர்?''

''நான் விசாரிச்சவரைக்கும் எல்லாரும் எந்த குளத்தூர்னுதான் கேட்கறாங்க, குளத்தூருக்கு எதுக்கு முகவரினு நினைச்சி வந்துட்டேன்''

''பக்கத்துல பெரிய ஊர் ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க, சரியா சொல்வாங்க. என்னோட ஊர் குளத்தூர் தான், நாணல்கோட்டை பக்கத்துல சோலையரசபுரம் இருக்கு, அங்க இருக்கிற குளத்தூர்தான் என்னோட ஊர் அந்த ஊரை கேட்கறீங்களா''

''ஆமா அதே குளத்தூர் தான், உங்களுக்கு வாசன் அப்படிங்கிறவரைத் தெரியுமா''

மாதவி திருமால் அவர்களைப் பார்த்தாள். மனதுக்குள் பல கேள்விகள் எழுந்தது. அந்த கேள்விகளை எல்லாம் ஓரங்கட்டினாள். தெரியாத ஒருவரிடம் பேசுவதாய் அவள் மனதுக்குப்படவில்லை. பரிச்சயமானவர் போலவே இருப்பது போல் இருந்தது. சற்றும் யோசிக்கவில்லை

''தெரியும்''

''பெருமாள்''

''உயிரோட இல்லை, நீங்க யாரு? என்ன விபரமா இதையெல்லாம் கேட்கறீங்க''

திருமால் எந்த பதிலும் சொல்லாமல் தான் கிழக்கு நடைபாதை வழியில் சென்று காத்து இருப்பதாகவும் அம்மனை தரிசித்துவிட்டு வருமாறு மாதவியிடம் கூறிவிட்டு பின்னர் விபரமாக பேசுவதாக கூறிச் சென்றார். தான் இன்னும் அம்மனை தரிசிக்கவில்லை என இவருக்குத் தான் சொல்லவே இல்லையே என மனதில் மாதவி நினைத்தாள்.

மாதவி கோவிலில் சென்று வழிபட்டுவிட்டு கிழக்கு நடைபாதைக்கு வந்தாள். திருமால் அங்கு நின்று கொண்டிருந்தார். மாதவி திருமாலிடம் தான் கல்லூரி செல்வதற்கு நேரம் ஆவதால் விரைவாக கூறும்படி கேட்டுக்கொண்டாள். தனக்கும் நேரம் ஆகிறது என சுருக்கமாக கிருத்திகா, பாரதி பற்றி கூறினார் திருமால்.

''மாமா இன்னைக்கு இந்நேரம் திருவில்லிபுத்தூர் கிளம்பிப் போய்ட்டு இருப்பார், குளத்தூர் வர நாட்கள் ஆகும்'

''ம்ம் திருவில்லிபுத்தூருல எங்க தங்குவாரு, முகவரி இருக்கா, குளத்தூர் முகவரி மாதிரி தேடமுடியாது''

மாதவி நேரமாகிறது என பாவனை காட்டியவள் திருமலை முகவரியைக் கூறினாள். திருமால் சிரித்தார். மாதவியும் சிரித்தாள். விஷ்ணுப்பிரியன் பற்றி திருமால் குறிப்பிட்டார். மாதவி மீண்டும் சிரித்தாள். திருமால் அவர்களை தன்னுடன் கல்லூரிவரை வருமாறு கேட்டுக்கொண்டாள். திருமால் சரியென மாதவியுடன் நடந்தார். மாதவி திருமாலிடம் எல்லா விபரங்களையும் கூறினாள். திருமால் மாதவியிடம் தனது பைகளிலிருந்து பெருமாள் எழுதிய கடிதப் பக்கங்களை எடுத்துக் கொடுத்தார். வாங்கிக்கொண்டவள் தான் நகல் எடுத்துத் தருவதாக கூறினாள். திருமால் வேண்டாம் எனவும் தன்னிடம் நகல்கள் இருப்பதாகவும் கூறினார். திருமால் தான் திரும்பி வரும்போது மீண்டும் சந்திப்பதாக கூறி விடைபெற்றுக்கொண்டார். கடிதம்தனை தனது அறையில் பத்திரப்படுத்திவிட்டு கல்லூரிக்குச் சென்றாள். மூளை பற்றிய தனது தனிப்பட்ட ஆராய்ச்சிக்கான முழு விபரங்களையும் இன்று கல்லூரி ஆசிரியை தெய்வீகம்பாளிடம் தந்து சந்தித்துப் பேச எண்ணினாள். தெய்வீகம்பாள் மாதவியைத் தேடி வந்தார்.

(தொடரும்)

2 comments:

Chitra said...

நன்றாக செல்கிறது.....

Radhakrishnan said...

Thank you