Monday, 20 September 2010

விளையாட்டுப் பெண்கள்

மணமான என்னை என்னுடன் வேலை பார்க்கும் பெண் மணந்து கொள்ள எதற்கு நினைத்தாள் என்பதற்கான காரணத்தை என்னால் சிறிது நேரம் கூட யோசிக்க இயலவில்லை. அறையின் கதவை திறந்து கொண்டு அவளின் அறைக்கு செல்ல இருக்கையில் அவளே அவளது அறையில் இருந்து வெளியில் வந்தாள். அவளது கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தது.

'உங்களிடம் பேச வேண்டும்' என்றாள். கவனியுங்கள், அவர் என அவளை இதற்கு முன்னர் வரை சொல்லிக் கொண்டு இருந்தேன். இனிமேல் அவள் தான். 'எனது அறையா? உனது அறையா?' எனக் கேட்டேன். 'எனது அறை' என்றாள். எனக்கு எனது மனைவி கன்னத்தில் அறை விடுவது போன்று ஒருவித உணர்வு வந்து போனது. அவளின் விருப்பப்படியே அவளது அறைக்கு சென்றேன். அங்கிருந்த நாற்காலியில் நான் அமர்ந்தேன். அவளும் என் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

'நீங்கள் என்னை ஏன் மணம் முடிக்க கூடாது?' எனக் கேட்டாள். 'நான் மணமானவன், மறந்துவிடாதே' என்றேன். 'மணமுடிக்காமல் இருந்தால்?' என்றாள். 'எனக்கு வேலை கிடைத்து இருந்து இருக்காது என நினைப்பவர்கள் அதிகம்' என்றேன். எனது பதிலை மிகவும் சாதுர்யமாக நான் பேசியது எனக்கு வியப்பை தந்தது. அவளிடம் உன்னை திருமணம் பண்ணும் வாய்ப்பே இருந்து இருக்காது  என ஏன் என்னால் நேரடியாக சொல்ல இயலவில்லை என யோசனை எழுந்தது. அதற்குள் அவள் ஒரு சின்ன கதை சொன்னாள்.

முருகனுக்கு எதற்கு இரண்டு பொண்டாட்டிகள்  எனக் கேட்டாள். எனக்கு தெரியாது என சொன்னேன். மனிதர்களின் வாழ்க்கையில் அவர்களை தேடி ஒன்று வரும், அது போல மனிதர்கள் அவர்களாகவே ஒன்றை தேடி போவார்கள் என்பதை சொல்லும் வண்ணம் தான் முருகனுக்கு இரண்டு பொண்டாட்டிகள் என்றாள். வள்ளி அவராக தேடி சென்றது, தெய்வானை அவரை தேடி வந்தது. அது போல உங்கள் மனைவி நீங்கள் தேடியது, நான் உங்களை தேடி வந்தது என நிறுத்தினாள். நான் இருந்த சூழலையே மறந்து கட்டிடங்கள் இடிந்து விழும் வண்ணம் சிரித்து தொலைத்தேன்.

அப்படியெனில் உன்னைத்  தேடி ஒருவன் வந்தான் எனில் அவனையும் ஏற்றுக் கொள்வாயா என சிரிப்பின் இடைவெளியில் கேட்டு வைத்தேன். எனது கேள்வி எனக்கு சரியாகத்தான் பட்டது. அவள் முகத்தில் கோபம் அனலாக வெடித்தது. நான் ஒன்றும் கேவலமான பிறவி இல்லை என்றாள். உனது எண்ணத்தை சரிபார்த்து கொள் என சொல்லிவிட்டு எழுந்தேன். அன்று பேசியவள்தான், அதற்கு பின்னால் ஒருநாள் கூட பேசவும் இல்லை, நானும் பேசுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவும் இல்லை.

வாழ்க்கையை விளையாட்டுத்தனமாக பார்ப்பவர்களுக்கு வாழ்க்கையின் அன்பின் அடித்தளம் புரிவது இல்லை. வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக எதையும் யோசிக்காமல் செய்பவர்களின் நிலைமை அத்தனை நிம்மதியாக இருப்பதில்லை. எவரோ சொன்னது எனது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. நான் எனது உறுதியான செயல்பாடினால் மிகவும் நிம்மதியாக இருந்தேன். நேரம் இருக்கும்போதெல்லாம் தொலைபேசி மூலம் எனது மனைவியின் உடல்நலம் விசாரித்து கொண்டிருந்தேன்.

ஹாங்காங்கில் இருந்து ஊருக்கு திரும்பினேன். அவளும் தான் விமானத்தில் உடன் வந்தாள். ஆனால் அடுத்த நாளில் இருந்து வேலைக்கு வரவே இல்லை. வேலையை விட்டுவிட்டதாக அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். கேட்கவா வேண்டும்? எனது மாமா மகளை தவிர அலுவலகத்தில் இருந்த பெண்கள் அவள் வேலையை விட்டுவிட்டதற்கு நான் தான் காரணம் என பேச ஆரம்பித்து இருந்தார்கள். சில வாரங்கள் பின்னர் அவளுக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொன்னார்கள். வேலையை  விட்டு விட்டதற்கு திருமணம் தான் காரணம் என இப்போது சொன்னார்கள். மனதில் சிரித்து கொண்டேன்.

எனது மனைவி ஒவ்வொரு நாள்தனையும் மிகவும் கொண்டாடி வாழ்ந்து கொண்டிருந்தார். தான் தாய் ஆகப் போகிறோம் எனும் எண்ணம் அவரை அளவில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தி கொண்டிருந்தது.

இந்த வேளையில் தான் எனது மாமா மகள்  'மாமா, என்னை காதலிச்சவனுக்கு இப்போ விவாகரத்து ஆயிருச்சி' என்றாள். 'நீ எதாச்சும் பண்ணினயா' என பதட்டத்துடன் கேட்டேன். 'எனக்கு எதுக்கு அந்த வேலை, கட்டாய கல்யாணம் பண்ணி வைச்சதால தினமும் சண்டைதானாம். என்னை பிடிக்காம எதுக்குடா கல்யாணம் பண்ணின அப்படினு விவாகரத்து வரைக்கும் அந்த பொண்ணு போயிருச்சாம். பெரியவங்க சொல்லியும் அந்த பொண்ணு கேட்கலையாம், விவாகரத்து வாங்கிருச்சாம்' என்றாள். 'இந்த கதை உனக்கு எப்படி தெரியும்' என்றேன். 'என்னோட பிரண்டுதான் சொன்னா, நான் அவனுக்கு வாழ்க்கை தரலாம்னு இருக்கேன் மாமா' என கலகலவென சிரித்தாள். 'விளையாட்டுத்தனமா எதுவும் பண்ணிராதே' என சொன்னேன். 'அவன் வாழ்க்கையில விளையாடப் போறேன்' என சொல்லிவிட்டு விறுவிறுவென கடந்து போனாள். 'ஐயோ பெண்கள்' என தலையில் அடித்து கொள்ள வேண்டும் போலிருந்தது.

அன்று வீட்டுக்கு சென்றபோது வீட்டில் என்னுடன் முதலில் வேலை பார்த்த பெண் எனது மனைவியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்ததும் எழுந்து வரவேற்றாள். எனது கையில் காகிதம் ஒன்றை தந்தாள். சரி பாருங்க, அச்சடிக்கனும் என்றாள். மணமகன் எனும் இடத்தில் எனது பெயர் போட்டு இருந்தது. கொதித்து போனேன். என்ன காரணம் என யோசிக்க எல்லாம் எனக்கு அப்போது தோணவே இல்லை.

(தொடரும்)

8 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா... இதென்ன தொடருமா / முற்றுமா... ஒண்ணும் போடாம குழப்பறீங்களே... எனக்கு புரியற அளவுக்கு இல்லியோ... சரி விடுங்க... கதை இன்னும் தொடரும்னு நம்பி போறேன்... நல்லா இருக்கு எழுதற ஸ்டைல்

Chitra said...

ஹா,ஹா,ஹா,..... தொடருங்க... தொடருங்க.....

சைவகொத்துப்பரோட்டா said...

இதென்ன கலாட்டா!! சுவராசியமா போகுதே!!

Gayathri said...

sama swarasiyama irukku..thodarungal

சுந்தரா said...

'ஐயோ பெண்கள்' என்று அடித்துக்கொள்ளுமளவுக்கு பயமுறுத்தியிருக்காங்களா? :)

விறுவிறுப்பா இருக்குது கதை. தொடருங்க ரங்கன் :)

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி.

தனி காட்டு ராஜா said...

////முருகனுக்கு எதற்கு இரண்டு பொண்டாட்டிகள் எனக் கேட்டாள். எனக்கு தெரியாது என சொன்னேன். மனிதர்களின் வாழ்க்கையில் அவர்களை தேடி ஒன்று வரும், அது போல மனிதர்கள் அவர்களாகவே ஒன்றை தேடி போவார்கள் என்பதை சொல்லும் வண்ணம் தான் முருகனுக்கு இரண்டு பொண்டாட்டிகள் என்றாள். வள்ளி அவராக தேடி சென்றது, தெய்வானை அவரை தேடி வந்தது. அது போல உங்கள் மனைவி நீங்கள் தேடியது, நான் உங்களை தேடி வந்தது என நிறுத்தினாள். நான் இருந்த சூழலையே மறந்து கட்டிடங்கள் இடிந்து விழும் வண்ணம் சிரித்து தொலைத்தேன்.////

தல,
எனது மனதில் பட்டதை நான் அப்படியே சொல்லுகிறேன் .....இந்த கமெண்ட் -யை approve செய்வது அல்லது செய்யாமல் இருப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம் ...
நானும் வாழ்க்கை சுழலை கவனித்து பார்த்து உள்ளேன் ...வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல கணவன் -மனைவி என்று கல்யாணம் செய்து கொண்டு வாழுங்கள் என்று சொல்லவில்லை....
அன்பு என்பது உண்மை என்றால் அது யார் மிது வேண்டுமானாலும் வரும் .....
கல்யாணமான பின் தான் அன்பு வரும் என்பது வெறும் குடும்ப வியாபாரம் .....
எனக்கு என்னமோ அந்த பெண் உங்களிடம் உண்மையாக தன் அன்பை வெளிப்படுத்தி உள்ளார் ....
உங்கள் மனைவி போன்ற சந்தேக பேர்வழிகள் அருவருப்புக்கு உரியவர்கள் ....
இது போன்ற சந்தேக பேர்வழிகளிடம் வாழ்வதை காட்டிலும் பிரிவதே சிறந்தது ......
ஆனால் நீங்களோ கல்யாணம் என்பது அன்புக்கு அடிப்படை என்று சொல்லுகிறீர்கள் ..... கல்யாணம் என்பது வெறும் வியாபாரம் ....அன்பு என்பது கட்டுப்பாடு அற்றது ....

உண்மையில் உங்களை தேடி வந்து அன்பை சொன்ன அந்த பெண்மணிக்காக(தெய்வானை ) நான் இரங்குகிறேன்....

Radhakrishnan said...

உங்கள் கருத்தினை தணிக்கை செய்யும் வசதியை நான் வைத்து இருக்கவில்லை ராஜா அவர்களே. அப்படி ஒரு வசதி இருந்து இருந்தாலும் அப்படியேதான் வெளியிட்டு இருப்பேன்.

தங்கள் கூற்றுப்படியே கல்யாணம் வெறும் வியாபாரமாக இருக்கட்டும். ஆனால் வியாபாரத்தில் குளறுபடி இருந்தால் வியாபாரம் செழிக்காது.

அன்பு என்பது வேறு. கல்யாணத்தில் அன்பு என்பது வேறு. அன்பு காட்டுகிறார்கள் என்பதற்காக நினைத்தவர்களுடன் எல்லாம் எவரும் குடும்பம் நடத்த இயலாது. அன்பு கட்டுப்பாடற்றது ஆனால் உறவுகள் கட்டுகோப்பானது.

சுயமாக சிந்திக்கத் தெரிந்த எவரும் ஒருபோதும் அன்பை விலை பேசமாட்டார்கள்.

நன்றி.