Thursday, 9 September 2010

நுனிப்புல் (பாகம் 2) 15

15. கிராமத் தலைவர் வாசன்

அனைவரையும் வழியனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்தான் வாசன். சாப்பிட அமர்ந்தான்.

''நல்லா சாப்பிடுப்பா''

கண்கள் கலங்கியபடியே வாசனின் தாய் சொன்னார்.

''என்னம்மா, என்னை சென்னைக்குப் போகச் சொன்ன, இப்ப கண் கலங்குற''

''அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா, ஜோதி உன்னை பத்திரமா பாத்துக்கிறேனு சொல்லியிருக்கா, அவங்க வீட்டுலயே தங்கி இருப்பா''

''கவலைப்படாதேம்மா, நாங்க வேகமா வந்துருவோம்''

சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வாசனின் மனம் கலங்கியது. வாசன் சாப்பிட்டு வெளியில் வந்து அமர்ந்தான். தாய் தோட்டம் செல்ல தயாரானார்கள். அம்மாவிடம் மீண்டும் சென்று சொன்னான்.

''பொன்னுராஜ் மாமாவும், முத்துராசு அண்ணனும் விவசாயத்தை கவனிச்சிக்கிருவாங்கம்மா''

''நீ தைரியமாப் போய்ட்டு வாப்பா''

தைரியம் இல்லாமல் சொன்னார் ராமம்மாள். வாசன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இது குறித்து கேட்டபோது அதிகம் யோசிக்காமல் நல்ல காரியம் என சரியென சொல்லியவர் இரண்டு தினம்தான் இருக்கிறது என்றதும் வருத்தம் வந்து அவருக்குச் சேர்ந்தது. சிறுவயதில் இருந்தே எங்கும் பிரிந்து செல்லாத வாசன் தற்போது விலகிச் செல்வதை நினைக்கும்போது வேதனையாக இருந்தது. இந்த காரியம் வெகுவிரைவில் நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார். வாசனும் அம்மாவுடன் தோட்டம் சென்றான். தோட்டத்தில் இன்னும் வேலை தொடங்கி இருக்கவில்லை. பொன்னுராஜ், முத்துராசு பேசிக்கொண்டு இருந்தார்கள். வேலனும் வந்து சேர்ந்தார். ராசாத்தி மற்றும் பலரும் வந்து சேர்ந்தார்கள்.

''என்ன மருமகனே, திருவில்லிபுத்தூருக்கு தயாரா''

''ஆமா மாமா''

''வாசு அங்க பொண்ணு பார்த்து அங்கேயே தங்கிரு, இனி நான் தான் இந்த ஊருக்கு தலைவரு''

முத்துராசு சிரித்துக் கொண்டே சொன்னார். வாசன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான்.

''நீங்க தலைவருன்னா, ஊரே செழிப்பாயிரும்''

''ராசு வா வா வேலையை கவனிப்போம்''

பெண் பார்க்கும் பேச்சை ஆரம்பித்ததால் பொன்னுராஜ் முத்துராசுவை அழைத்துச் சென்றார். வாசனும் வேலை செய்யத் தொடங்கி்னான். பெண்கள் களையெடுக்கத் தொடங்கினார்கள்.

''என்ன ராமக்கா, தம்பி எப்ப திரும்பி வரும், செடிய அனுப்பிவைக்கச் சொன்னா கேசவன் போயிருக்குல்ல, கொண்டு வந்துரப் போகுது, இதுக்கு எதுக்கு இவங்க இரண்டு பேரும் அங்க போய்த் தேடனும், அப்படி என்ன செடியோ''

ராசாத்தி செடியின் அருமை தெரியாது பேசினார்.

''அதான் அன்னைக்கி கூட்டத்துல பெரியவரு சொன்னாருலே, இது என்னமோ வளர ஒரு வருசம் ஆகும்னு, அதுக்குள்ள எத்தனை தரம் களை எடுக்கறது, எத்தனை தரம் மருந்தடிக்கிறது நமக்கு எல்லாம் நல்ல வேலை இருக்கு, நம்ம வேலையும் பார்க்கனும்''

முனியம்மாள் தெரிந்தவிசயம் போல் சொன்னார்.

''தெரியலை ராசாத்தி, மலைப்பகுதியெல்லாம் தேடனுமாம், ஊரே போனா என்னன்னு தோணுது''

ராமம்மாள் வருத்தமாகச் சொன்னார்.

''ஏன் ராமக்கா, தம்பி ஊர்த்தலைவரு ஆயிருச்சே நம்ம ஊருல வேலை வெட்டி இல்லாம இருக்கறவங்களுக்கு ஏதாச்சும் பண்ணலாம்ல''

''யார் வேலையில்லாம இருக்கா, வேலைக்குத்தான் ஆள் இல்லாம இருக்கு, விவசாயம் யார் பார்க்குறா''

''ஏன் ராசாத்தி, மரத்தடியில உட்கார்ந்து விளையாடறவங்களை சொல்றியா, ராமக்கா நாம அவங்களைத் திருத்த முடியாது''

முனியம்மாள் சரியாகவே சொன்னார். வாசனிடம் அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கினார்கள். பெரியவரிடம் பேச அச்சப்பட்டவர்கள் வாசனிடம் நேரடியாய் பேசலாம் என நினைத்தார்கள். ஆனால் வாசன் பெரியவரை மீறி எதுவும் செய்யமாட்டான் என எண்ணவும் செய்தார்கள். பேசிக்கொண்டே அவர்கள் வேலையும் எளிதாக சென்று கொண்டிருந்தது.

மதியவேளை உணவு உண்ண அனைவரும் அமர்ந்தார்கள். வாசன் வேலை செய்து கொண்டிருந்தான். வேலன் சித்தப்பா வாசனிடம் சென்றார்.

''அடுத்தவாரம் கோவில்பட்டியில இருந்து உன் சித்தப்பா வரானாமே''

''அப்பா சொல்லிட்டு இருந்தார், ரோஹிணிக்கு படிப்பு முடிய இன்னும் மூணு மாசம் இருக்கு, முடிச்சிட்டுதான் வருவாங்கனு நினைக்கிறேன்பா''

சுந்தரன் பற்றி பேச்சை ஆரம்பித்தார் வேலன். இப்பொழுது வேண்டாம் என்றான் வாசன். ஆனால் வேலன் சுந்தரன் நேற்று பேசியதாகவும் விபரங்களைச் சொன்னார்.

''நல்லவேளை அவனே மனசு மாறிக்கிட்டான்''

''எனக்கு வருத்தம்பா''

''இது நடக்கிற காரியம் இல்லைனு அன்னைக்கு சொன்னேனே நாம ஏதாவது பேசி இருந்தா பிரச்சினை வந்துருக்கும் எல்லாம் நல்லபடியா நடக்கனும்னு பெருமாளை வேண்டிக்கிறேன்''

சாப்பிட வருமாறு அழைத்தார்கள். வாசன் சென்று அமர்ந்தான்.

''என்ன வாசு, வேலை செஞ்சு களைச்சிட்டே, மரத்தடியில உட்கார்ந்து இருக்கறவங்களை ஏதாவது செய்யலாம்ல''

முனியம்மாள் சொன்னார். திருவில்லிபுத்தூர் சென்று வந்து செய்வதாக சொன்னான் வாசன். முத்துராசு கேட்டார்.

''என்ன பண்றதா உத்தேசம், பட்டணத்துக்கு அனுப்பப் போறியா''

''அனுப்பி வைச்சிருவோம்ணே''

ராமம்மாள் குறுக்கிட்டார்.

''உன் இஷ்டத்துக்கு எதுவும் செய்யாதப்பா''

''மருமகன் சரியாத்தான் செய்வாரு, என்ன மருமகனே''

வாசன் தலையாட்டினான். அனைவரும் சாப்பிட்டுவிட்டு வேலை செய்யத் தொடங்கினார்கள். வாசனுக்கு மாதவி பற்றிய நினைவு வந்து சேர்ந்தது. பூங்கோதையின் நிலை நினைத்து வருந்தினான். மாலை வந்து இரவும் நகர்ந்தது. அடுத்த நாள் சற்று வேகமாகவே கடந்தது. வாசன் மாலை வேளையில் அனைத்தும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான். சாரங்கன் வாசனின் வீட்டிற்கு வந்தார். சாரங்கனைப் பார்த்ததும் வாசனுக்கு தேவையில்லாத பிரச்சினை ஒன்று வந்திருப்பதாகப் பட்டது. சாரங்கன் வந்ததும் வராததுமாய் வாசனைப் பார்த்து கேட்டார். வாசன் திடுக்கிட்டான்.

(தொடரும்)

3 comments:

Chitra said...

அருமையாக போகுது... தொடருங்கள்!!!

ஹேமா said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு விடுபட்ட முதற் பகுதிகளை வாசிக்கிறேன்.தொடருங்கள்.

Radhakrishnan said...

நன்றி சித்ரா, நன்றி ஹேமா