Thursday 23 September 2010

இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் - 1

ஸ்காட்லாந்து பயண கட்டுரையை பின்னர் எழுதி கொள்ளலாம் என ஒதுக்கி வைத்து விட்டேன். ஸ்காட்லாந்து பயண கட்டுரையை எழுதி இருந்தால் இந்த இந்திய பயண கட்டுரைக்கு இந்த தலைப்பு அவசியம் வந்து இருக்காது.

ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு செல்ல வேண்டுமென பிப்ரவரி மாதம் முடிவு எடுத்தாகிவிட்டது. பயணத்திற்கான தேதி எல்லாம் குறித்து பயண சீட்டு பெற்றபோது ஏப்ரல் மாதம் ஆகி இருந்தது. அப்பொழுதுதான் தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தக பணியும் நடந்து கொண்டிருந்தது. நாம் சென்றபின்னர் புத்தக வெளியீட்டு வைத்து கொள்ளலாம் என நினைத்தபோது ஏனோ மனதில் முழு சம்மதம் இல்லை. புத்தகத்தினை நான் செல்லும் முன்னரே வெளியிட்டு விடலாம் என கருதி அதற்கான ஏற்பாடுகளை அகநாழிகை திரு. பொன். வாசுதேவன் அவர்கள் மூலம் செய்து கொண்டிருந்தேன்.

எப்பொழுதுமே இந்திய பயணத்தின் போது  திட்டமிட்டு எதையும் செய்வதில்லை. அங்கே இருக்கும் சூழல்படி பயணத்தை அமைத்துக் கொள்வது வழக்கம். சென்றமுறை இந்தியா சென்றபோது துபாயில் மூன்று நாட்கள் தங்கி இருந்து சென்றோம். ஆனால் இம்முறை இந்தியாவில் சில இடங்கள் செல்லலாம் என திட்டமிட்டோம். அதன்படி பெங்களூரு, கோவா, கோயமுத்தூர் என ஒரு வார பயணம் திட்டமிட்டோம். மதுரையில் இருந்து பெங்களூரு, பெங்களூருவில் இருந்து கோவா, கோவாவில் இருந்து மறுபடியும் பெங்களூரு, அதன் பின்னர் பெங்களூருவில் இருந்து கோயமுத்தூர். இதுவரை திட்டம் மிகவும் சரியாகவே செய்தேன். இதற்கான விமான பயண சீட்டு, தங்கும் அறைகள் என எல்லாம் லண்டனில் இருந்து கிளம்பும் முன்னர் தயார் செய்துவிட்டேன். கோயமுத்தூரிலிருந்து அடுத்து எங்கு செல்வது என்ன என்பதான திட்டம் எதுவும் இல்லை. அதுவும் ஊரில் இறங்கிய ஒரு வாரம், ஊரில் இருந்து கிளம்பும் முன்னர் இருக்கும் ஒரு வாரம் எந்த திட்டமும் இல்லை.

கடைசி வாரத்தில் 'தொலைக்கப்பட்ட தேடல்கள்' புத்தக விமர்சன கூட்டம் ஒன்றை மதுரையில் நடத்தலாம் என யோசனை இருந்தது. ஆனால் தேதி குறிக்கவில்லை. சென்றபின்னர் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து இருந்தேன். எனது ஆசிரியர்கள், எனது நண்பர்கள், எனது புத்தகங்களை வெளியிட்ட புத்தக வெளியீட்டார்கள் என அனைவரையும் அழைத்து சிறப்பிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆவலுடன் இருந்தேன்.

பயண தினம் நெருங்க நெருங்க என்றைக்குமில்லாத ஆவல் அதிகமாகவே இருந்தது. சென்னையில் தங்கி செல்ல இயலாத வண்ணம் ஊரில் சில விசேசங்கள் திட்டமிட்டு இருந்தார்கள். அதனால் சென்னையில் இருந்து நேராக விமானம் மூலம் மதுரை செல்வதாக விமான பயண சீட்டு எல்லாம் எடுத்தாகிவிட்டது. இவ்வேளையில் முத்தமிழ்மன்ற நண்பர் ஒருவருடைய நண்பரின் மகள் லண்டனுக்கு படிக்க வரவேண்டும் அதற்கு உதவி செய்ய இயலுமா என கேட்டு இருந்தார். சரி என சொல்லி இருந்தேன்.

ஆகஸ்ட் மாதம் பதின்மூன்றாம் தேதி, காலை சரியாக எட்டு மணி. லண்டன் விமான நிலையத்துக்கு செல்ல எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தோம். கைப்பேசி ஒன்றை சமீபத்தில் மாற்றியதால் அதில் எவருடைய  எண்களையும் சேகரிக்கவில்லை. ஆதலினால்  முந்தைய கைப்பேசி ஒன்றையும் எடுத்துக்கொண்டேன். அப்பொழுது இந்தியாவில் இருந்து தொலைபேசி வந்தது. மதுரை செல்லும் விமானம் ரத்தாகிவிட்டது மதுரைக்கு செல்ல வேறு எந்த விமானத்திலும் இடம் இல்லை  என்றார்கள்.

மாற்று திட்டம் தீட்டி கோயமுத்தூர் செல்ல நினைத்தேன். விமான பயண சீட்டு அதிக விலையாக இருந்தது. இத்தனை விலை கொடுத்து எதற்கு செல்வானேன் என கோயமுத்தூரில் இருந்த எங்களது வாகனம் ஒன்றை சென்னைக்கு வருமாறு சொல்லிவிட்டு லண்டன் விமான நிலையத்தை அடைந்தோம்.

(தொடரும்)

3 comments:

Chitra said...

நாங்களும் சேர்ந்து பயணிக்கிறோம்.... :-)

Vidhoosh said...

:)

????? --i hope your understand this :)

Radhakrishnan said...

நன்றி சித்ரா.

நன்றி விதூஷ், மிகவும் வருந்துகிறேன்.