Wednesday 1 July 2009

வேத நூல் - 9

கிரகமெஸ்ட் மிபலோவைக் கைது செய்ய முடியாது எனக் கூறியதும் சாங்கோ மிகவும் எரிச்சல் அடைந்தான். அன்று இரவே மிபலோவைக் கொல்வது என முடிவு செய்தான் சாங்கோ. அதற்கானத் திட்டத்துடன் மிபலோவைச் சந்தித்தான் சாங்கோ. மிபலோ மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தான்.

''சாங்கோ நான் என்னுடைய உயிர் போய்விடும் நிலைக்கு வந்துவிட்டது. எனது எண்ணங்கள் எல்லாம் சிதைந்து போய்விட்டது, குவ்விலான் அன்றே நீ எழுதுவதைத் தடுத்துவிடக் குறிப்பிட்டதைக் கேட்காமல் நான் விட்டுவிட்டேன், இன்றோ நீ செய்த மாற்றங்களையே இங்கே பரப்பி இருக்கிறாய், தானேஸ்ராவிலும் நீ செய்த செயல் கண்டுதான் நான் உடனடியாகத் திரும்ப வேண்டியதாகிவிட்டது. அனைவருக்கும் எழுத்துச் சொல்லிக் கொடுத்து உனது எண்ணங்களை நிலைநாட்டிக் கொண்டாய். ஆனால் அனைத்துமே கொடூரங்களையும், கொலைகளையும் முன்னிறுத்தியே நீ செயல்பட்டதால் எனக்கு பெருத்த அவமானமாக இருக்கிறது சூரியன் வந்தபின்னர் நான் அஸ்தமனம் ஆகிவிடுவேன்'' என்றான் மிபலோ.

''நீ சொன்னதை எல்லாம் நான் மாற்றி எழுதவில்லை, நீ சொன்னதற்கு மாறாக சிந்தித்து எழுதினேன். எனது சிந்தனை இது, உனது சிந்தனை அது, இதைக்கூட உனக்கு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லையெனில் உன் உயிர் போகத்தான் வேண்டும்'' என்றான் சாங்கோ.

''மனிதர்களுக்கு நல்லவிசயங்களையேப் பரப்ப வேண்டும், தீமைகளைச் சொல்லி நன்மைகளின் பலன் சொல்லக் கூடாது, நன்மையை மட்டுமே பேச வேண்டும் என நான் வலியுறுத்தியக் கருத்துக்கள் சிதைந்துவிட்டதே'' என்றான் மிபலோ.

''அது உன் தவறு, அன்றே நீ எழுதும் முறைக் கற்றிருந்தால் இன்று உனக்கு ஏன் இந்தப் பிரச்சினை. உன்னை யார் உனது எழுத்துக்களைப் பிரமிடுக்குள் போட்டு பூட்டி வைக்கச் சொன்னது, எந்தக் காலத்திலும் உன் எழுத்தை எவராலும் எடுக்க முடியாது, இனி எதிர்காலம் கேடு செய்வது கேடுடன் வாழ்வது பற்றியே சிந்திக்கும்'' எனச் சொல்லிவிட்டு மிபலோ உயிர் துறந்துவிடுவான் என நம்பிக்கையில் வெளியேறினான் சாங்கோ.

சிரகமெராவிடம் சொல்லிச் சிரித்தான் சாங்கோ. சிரகமெரா அளவிலா கோபம் கொண்டாள். அன்று இரவே சாங்கோவை மிகவும் நுணுக்கமான முறையில் கொலை செய்தாள் சிரகமெரா. அவனைக் கொலை செய்துவிட்டு நேராக மிபலோவிடம் சென்றாள்.

''நான் சாங்கோவை கொலை செய்துவிட்டேன்'' என்றாள் சிரகமெரா. மிபலோ அதிர்ச்சியடைந்தான். இரவு நீடித்தது.

(தொடரும்)

வேத நூல் - 8

மிபலோ குவ்விலானுடன் தானேஸ்ரா பயணத்தைத் தொடங்கினான். சாங்கோ சிரகமெராவுடன் எகிப்தில் இறங்கியபோது மிபலோ குவ்விலானுடன் தானேஸ்ராவில் இறங்கினான். தானேஸ்ரா சில மாற்றங்களைப் பெற்றிருந்தது. மிபலோவின் பெற்றோரும் குவ்விலான் பெற்றோரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். சாங்கோ எகிப்து சென்ற விசயம் அறிந்து மிபலோ அச்சம் கொண்டான்.

எகிப்தில் இறங்கிய சாங்கோ மிபலோ தானேஸ்ரா சென்றது அறிந்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தான். மிபலோ கட்டிய பிரமிட் கண்டு பிரமித்து நின்றான். கிரகமெஸ்ட்டிடம் விபரங்கள் கேட்டான். அப்பொழுது குவ்விலான் எழுதிய விபரங்களை பிரமிட்டிற்குள் மூடிவைத்து இருப்பதாகச் சொன்னான் கிரகமெஸ்ட். சாங்கோ உற்சாகமானான்.

மொத்த பிரமிட்டையும் மூடினால் தான் அந்த விபரங்கள் பாதுகாப்பாக என்றும் இருக்கும் என அறிவுரை சொன்ன சாங்கோ தன்னிடம் இருந்த விபரங்களை அங்கிருந்த சிலரிடம் பரப்ப ஆரம்பித்தான். எழுத்துக்களைச் சொல்லிக்கொடுக்கவும் செய்தான் சாங்கோ. சாங்கோ மேல் பலருக்கு நல்ல நம்பிக்கை ஏற்படத் தொடங்கி இருந்தது. சிரகமெரா சாங்கோவின் செயல்பாடுகள் கண்டு வெறுப்பு கொள்ள ஆரம்பித்தாள். சில தினங்களிலேயே சாங்கோவைப் பின்பற்றும் ஒரு கூட்டம் உருவானது. அந்த நிலையைக் கண்ட கிரகமெஸ்ட் சாங்கோவிடம் தானும் உடன் சேர்வதாக அறிவித்தான்.

ஊரில் இருப்பதில் பயன் இல்லை என உணர்ந்த மிபலோ குவ்விலானுடன் கிளம்பினான், ஆனால் குவ்விலானுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தடுத்துவிட்டார்கள். எனவே சில வேறு நபர்களுடன் மிபலோ எகிப்து பயணமானான்.

எகிப்தில் இறங்கிய மிபலோ சாங்கோவின் புகழினைக் கண்டு ஆச்சரியமடைந்தான். ஆனால் அனைவரும் சாத்தான் என்றே சொல்ல மிபலோ கலக்கமடைந்தான். தனது எண்ணங்களை எடுக்க பிரமிட் சென்றபோது அந்த பிரமிட் வழிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க கிரகமெஸ்ட்டிடம் விபரம் கேட்டான் மிபலோ. சாங்கோவின் ஆலோசனை என்றான் கிரகமெஸ்ட். செய்வதறியாது விழித்தான் மிபலோ. சாங்கோ கிரகமெஸ்ட்டிடம் மிபலோவை கைது செய்யுமாறு கூறினான்.

(தொடரும்)

வேத நூல் - 7

மிபலோ முன்னேறிச் சென்றதைத் தடுத்தான் கிரகமெஸ்ட். ஆனால் ரேவிரன் மிபலோவிற்கு வழிவிடுமாறு கூறினான். மிபலோ ரேவிரனிடம் சென்று தனது கையில் இருந்த எழுத்துக்களைக் காட்டினான். அதைப் பார்த்த ரேவிரன் அதைப் பறித்து பக்கத்தில் நின்ற காவலாளியிடம் கொடுத்து இதனை உடனடியாக எரித்துவிடு எனச் சொன்னான். காவலாளியும் அதனை வாங்கிச் சென்று தீயில் போட்டான். மிபலோ செய்வதறியாது விழித்தான். குவ்விலான் அழுதான்.

கிரகமெஸ்ட்டிடம் படகில் தாங்கள் சென்றுவிடுவதாகவும் தங்களை கொன்றுவிட வேண்டாம் என சாங்கோ சொன்னான். மிபலோ கண்களை மூடி ரேவிரன் முன்னர் அமர்ந்தான். சூரியன் அனலாக சுட்டெரித்தது. இதோடு மட்டுமல்லாமல் இடியையும் மின்னலையும் கேட்டு ரேவிரன் அச்சம் கொண்டான். தனது செயல்தான் இதற்கு காரணம் என அவனது மனம் அவனை வதைக்கத் தொடங்கியது. அனைவரையும் அமைதியாக இருக்குமாறு பணித்தான் ரேவிரன். நால்வரையும் எதுவும் செய்து விடவேண்டாமெனக் கேட்டுக்கொண்டான. ஆனால் மிபலோ மூடிய கண்களைத் திறக்கவில்லை. பனி உருகத் தொடங்கி கடலின் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. நைல் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

கண்களைத் திறந்தான் மிபலோ. மிபலோவிடம் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுமாறு பணித்தான் ரேவிரன். மிபலோ ஏற்றுக்கொண்டான். ரேவிரன் சிலநாட்களிலேயே மரணத்தைத் தழுவினான். கிரகமெஸ்ட் மிபலோவிற்கு உதவி புரிவதாக வாக்கு அளித்தான். தான் சொன்ன விசயங்கள் எல்லாம் தொலைந்து போனது குறித்து மிகவும் வேதனையுற்றான் மிபலோ. ரேண்ட்டர் சாங்கோவுடன் தனது ஊர் நோக்கிச் செல்லத் திட்டமிட்டார்.

அப்பொழுது ஏற்பட்ட இந்த பெரும் பிரளயத்தால் அட்லாண்டீஸ் எனும் நிலப்பரப்புபகுதி அப்படியே கடலுக்கடியில் மூழ்கியது. அங்கிருந்து தப்பித்து வந்த அட்லாண்டீஸ்காரர்கள் பலர் எகிப்தில் தஞ்சம் புகுந்திடத் தொடங்கினார்கள். எகிப்தில் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது.

அட்லாண்டீஸ்லிருந்து தப்பி வந்த மக்களுடன் நல்லதொரு தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டான் மிபலோ. சாங்கோ மிபலோ மேல் அதிகம் பொறாமை கொண்டான். மிபலோ தான் மிகப்பெரிய பிரமிட் ஒன்றை கட்ட வேண்டும் என எனும் எண்ணம் கொண்டு அட்லாண்டீஸ்காரர்களுடன் இணைந்து திட்டத்தைத் தொடங்கினான். எரிச்சலுற்ற சாங்கோ அதிக செல்வங்களுடன் ரேண்ட்டருடன் தனது ஊருக்கான பயணத்தைத் தொடங்கினான். தான் எழுதி வைத்திருந்த அனைத்தையும் பத்திரப்படுத்தினான் சாங்கோ. அவர்களை வழியனுப்பி வைத்தான் மிபலோ.

மிபலோ மீண்டும் குவ்விலானை எழுதச் சொன்னான். கடவுள். குவ்விலான் கடவுள் என்று மட்டுமே எழுதினான்.

பத்து வருடங்கள் போராடி மாபெரும் பிரமிட் ஒன்றைக் கட்டி முடித்தான் மிபலோ. இந்த பிரமிட் தனது எண்ணத்தால் அலங்கரிக்கப்படட்டும், இந்த பூமியில் ஏற்பட்ட இந்த பிரளயத்தையும், அட்லாண்டீஸ்காரர்களின் சிறப்பைச் சொல்லட்டும் என்றான் மேலும். பிரமிட்டில் பாதுகாப்பான அறை ஒன்றில் தான் சொல்லி குவ்விலான் எழுதியதை எல்லாம் உள்ளே வைத்து பூட்டினான்.

பத்து வருடத்திற்குப் பின்னர் சாங்கோ சிரகமெராவுடன் எகிப்து நோக்கி பயணம் செய்தான்.

(தொடரும்)