Wednesday 15 October 2008

பேரின்பத் தழுவல்கள் நிறைவுப் பகுதி (9)

பொய்யென சொல்ல ஆரம்பித்ததும் அதில்
மெய்யும் இருக்கும் என்றே நீயும்
தாயாய் காத்து இருந்தாய் நானும்
சேயாய் விளையாடி விட்டேன்

இருநிலை வைத்ததன் நோக்கம் மனம்
ஒருநிலை எவர்கொள்வார் என்றே அறியவோ
பலநிலை பார்த்தபின் பழிசொல்லும் குணமற்று
தவநிலை எய்திட விரைந்தேன்

நடந்திடும் செயல்களில் எல்லாம் நீயென
கிடந்து உழலும் மனம் கொண்டதும்
மடிந்து எழும் மானிட பிறவிகள்
நொடிந்து போகாது இருத்திடுவாய்.

இருக்கிறாய் என்றே உரக்கச் சொல்கிறேன்
உருக்கிய உயிரை உனதென தருகிறேன்
தெளிவாய் சிந்தையில் ஒளிர்வாய் என்றென்றும்
அளிப்பாய் ஓரருள் யாவர்க்கும்.

பாதைகள் பலவென போடச் சொல்லி
போதையில் அமிழ்த்தி விட்டது போதும்
உனை அடையும் வழியானது ஒன்றேயென
வினை தீர்த்து சொல்லிடுவாய்!

முடி ரொம்பத்தான் அழகு

''ஏண்டா போய் முடிவெட்டிட்டு வரதுதானே, இப்படி பரட்டையாட்டம் முடிக்கு எண்ணெய் தேய்க்காம சீவாம இப்படியா வெயிலுல அலைஞ்சிட்டுத் திரிவ'' அம்மா ஏகநாதனிடம் சத்தம் போட்டார்.

''எனக்கும் உன்னைப்போல முடியை வளர்க்கனும்னு ஆசைம்மா, பேசாம இரேன்''

''சொன்னா கேளுடா, போய் முடியை வெட்டிட்டு வா, முடி ரொம்ப இருந்தா ஜலதோசம் பிடிச்சிக்கப் போகுது''

''இத்தனை நாளு பிடிக்காத ஜலதோசம் இன்னைக்காப் பிடிக்கப் போகுது நீ வேலையப் பாரும்மா''

''உங்க அப்பா வரட்டும் அவரைக் கூட்டிட்டுப் போய் வெட்டிவிடச் சொல்ரேன்''

''அவரே முடியை ஒழுங்கா வெட்டுரதில்லை, இதுல எனக்குத் துணையா அனுப்புறியா, அவருக்கு முடியை வெட்டச் சொல்லிட்டு நான் வேடிக்கைப் பார்த்துட்டு இருப்பேன்''

''நீ முடியை வெட்டாம வீட்டுக்குள்ள வந்த உனக்கு சாப்பாடு இல்லை சொல்லிட்டேன்''

''சாப்பாடு நீ போடாட்டா எதிர்த்த வீட்டு பாட்டி வீட்டுல சாப்பிட்டு போறேன்''

''அம்மா கூட பேசாதடா, எதிர்த்த வீட்டுல போய் சாப்பிடுவானாம்''

''பேசாதேனு சொல்லாதம்மா, நாளைக்கு வெட்டிட்டு வரேன்''

ஏகநாதனுக்கு முடியை வெட்டுவது என்றால் கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை. ஒவ்வொருமுறையும் நன்றாகவே வளரவிட்டு பின்னர் அம்மாவுடன் சண்டையிட்டு வெட்டிக்கொண்டு வருவது வழக்கம். இந்த முறையும் அவ்வாறே சண்டையிட்டுவிட்டு மனதில்லாமல் முடியை வெட்டச் சென்றான். முடியை வெட்டிக்கொண்டு ஆற்றினில் குளித்துவிட்டு தலையைத் துவட்டிக்கொண்டு இருக்கையில் ஒரு முனிவர் போல் தோற்றம் கொண்டவர் மரத்தில் கீழ் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவர் அருகில் சென்றான் ஏகநாதன்.

''உங்களை இதுக்கு முன்னமே இங்கே பார்த்ததில்லையே''

''எப்பவும் இங்கதான் நான் வந்து உட்கார்ந்திருப்பேன், நீ என்னைப் பார்த்திருக்க மாட்ட, என்ன விசயம் சொல்லு''

''நீங்க இவ்வளவு நீளமா முடியை வளர்த்து வைச்சிருக்கீங்க, தாடியும் பெரிய தாடியா இருக்கே, முடி வெட்டுறதில்லையா அதுவும் ஜடைவிழாமே நல்லா இருக்கே''

''நீட்டலும் மழித்தலும் வேண்டா, அது அதுபாட்ட வளர்ந்துட்டுப் போகுது, விழுந்துட்டுப் போகுது''

''எனக்கும் ஆசைதான், ஆனா முடியை வெட்டச் சொல்லி வற்புறுத்துராங்க''

''வெட்டமாட்டேனு வளர்த்துப் பாரு அப்புறம் வெட்டச் சொல்ல மாட்டாங்க, நான் சின்ன வயசில இருந்து இதுவரைக்கும் முடியை வெட்டினது இல்லை''

''நீங்க கொடுத்து வைச்சவருதான்''

''பேப்பர் எல்லாம் படிக்கிறது உண்டா?''

''இல்லையே''

''அறிவியலுல ஆர்வம் இருக்கா''

''அது எதுக்கு''

''ரத்தம் மூலம் உடலுல என்ன என்ன இருக்குனு அறிய முடியறதைவிட முடியை வைச்சி நம்ம உடலுல என்ன என்ன அப்படினு ஆதியில இருந்து சொல்லிரலாம் அதுக்கான ஆய்வு முறையை கண்டுபிடிச்சி இருக்காங்கலாம்''

''மரத்துக்கீழ உட்கார்ந்தா ஞானம் வரும்னு நினைக்கிறீங்களோ''

''இந்தா பேப்பரை படிச்சிப் பாரு, அறிவியல் விசயம் தெரியும். மூடவிசயம்னு சொல்லப்படற செய்வினை செய்றதுக்குக் கூட முடியை உபயோகிப்பாங்க தெரியுமா''

''அதுதான் இவ்வளவு நீளமா முடியை வளர்த்து வைச்சிருக்கிங்களா''

''நீளமான முடி நிறைய உயிரியல் விசயங்களை அடக்கி வைச்சிருக்குமாம், அதனால என்னோட சின்ன வயசு கால முதல் இன்னைக்கு வரைக்கும் என்ன இருந்ததுனு சொல்லிரலாம், எப்படி சாப்பிட்டாங்க, என்ன சாப்பிட்டாங்கனு கூட இந்த முடியில விசயம் மறைஞ்சிருக்குமாம்''

''அப்ப ஏன் மொட்டை போடுறாங்க''

''எல்லாம் தெரிஞ்சிருச்சினு வைச்சிக்கோ அகங்காரம் வந்துரும். முடிதான் ஒருத்தருக்கு அழகு. அப்படி அகங்காரத்தை தொலைக்கத்தான் மொட்டை போடச் சொல்றதா சொல்வாங்க, வளருர முடிதானே அதான் மொட்டை போடறதா சொல்வாங்க''

''இனி நான் முடியை வெட்டவே மாட்டேன், எனக்கும் உயிரியல் விசயங்களை இந்த முடி அடக்கி வைக்கட்டும்''

''தானா கொட்டிராம பார்த்துக்கோ''

''அட பாவிகளா'' ஏகநாதன் சொல்லிவிட்டு வேகமாய் ஓடினார் முடி திருத்தும் கடையில் தனது முடியைத் தேடி!

பேரின்பத் தழுவல்கள் 8

பிறவிப்பயன் எதுவென்று புரியாத நிலையின்று
கறந்தசொல் எதுவும் காதினுள் புகாது
மறதியில் மனம் சிக்குமோ மாயனே
அறம் உரைத்ததை காணுமோ?

சொற்சுடரே அழியாது நிற்கும் தவமே
அருட்சுடரே எம்மை ஆட்கொண்டு நின்றபின்
கறுக்கும் வானம் பொழியும் மழையில்
வெறுக்கும் எண்ணம் கரையுமோ?

ஐந்தெழுத்து மந்திரத்தில் அகமும் களிப்புற்று
பைந்தமிழில் புகழ்பாடும் பரந்தாமனின் எட்டெழுத்து
மந்திரத்தில் ஏதும் ஆவதில்லை என்றே
தந்திரம் செய்யுமோ மனம்

கொண்ட அருளை கூறுபோட்டு உள்பார்த்து
தீண்டலில் சுகமில்லையென்றே திருட்டு சொல்லி
வேண்டாமென ஒதுக்கிய விரக்தி நிலையை
தாண்டிட உனதருள் நாடுவனே

இக்கோலமும் புரிந்திட எனைநீயும் பணித்தாயோ
முக்காலமும் ஒருகாலமென அறிந்திட செய்தாயோ
சிக்கலையும் கலைத்திட வழியும் சொன்னாயோ
திக்கெலாம் உனையன்றி எதுவுமில்லை.