Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Monday 17 August 2009

உருவமில்லா இறைவன்!

இறைவனுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை, அதாவது தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. உருவமற்றவன் எனவும் இறைவனைச் சொல்வார்கள். ஆனால் சொல்ல வந்ததை எல்லாரும் ஏற்கும் வண்ணம் எவராலும் சொல்ல இயலுவதில்லை என்பதைவிட என்னால் சொல்ல இயலுவதில்லை. பிறர் சொல்ல வருவதென்ன என என்னாலும் புரிந்து கொள்ள இயலுவதில்லை. இறைவனுக்கு உருவம் உண்டா? இல்லையா? உருவம் இருந்தால் என்ன, இல்லாது போனால் என்ன என பேசாமல் இருந்து விடலாம். இதைத் தெரிந்து கொள்வதால் எவர்க்கு லாபம் என நினைத்தால் இருக்கவே இருக்கிறது உருவ வழிபாடுகள். உருவ வழிபாடு இல்லையெனில் கோவில்கள் அவசியமற்றுப் போய்விடும். பின்னர் பக்தர்கள் தேவை பூர்த்தியடையாது. ஆக உருவம் ஒரு பெரிய விசயம் தான்.

கோவில்கள் தேவையில்லை என்பதை உணர்த்தும் வண்ணம் பூசலை நாயினார் கதையும் உண்டு. என்னவொரு பிரச்சினை, எல்லாரும் பூசலை நாயினார் ஆகிவிட முடியுமா?! சரி, உருவம் இருக்கா? இல்லையா? உருவம் இல்லை என்றே சொல்வேன் நான். ஏனெனில் எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ஆனால் உருவம் இருப்பதாகத்தான் பலரும் சொல்கிறார்கள், பின்பற்றி வருகிறார்கள். இதில் இறைவனே இல்லை எனச் சொல்பவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?. எதுவும் இல்லை என்பதற்கும், உண்டு ஆனால் இல்லை என்பதில் இருக்கும் வித்தியாசம் போலத்தான்.

சரி, விசயத்துக்கு வருவோம்,

இறைவனை சோதி வடிவானவன் என சொல்லும்போதே உருவம் வந்து விடுகிறது!

அலகில் சோதியன் எனச் சொன்னாலும் உருவம் இருக்கிறது ஆனால் அளக்கமுடியாது எனும்போது உருவம் தலைதூக்குகிறது.

தீ க்கு உருவம் இல்லை, ஒளிக்கு உருவம் இல்லை என கொள்வது தகுமா? இதுதான் இன்னதுதான் உருவம் என வகுத்தது நாம். கண்ணுக்குத் தெரியாத காற்றுக்கும் உருவம் உண்டு. அதனால் தான் உருவமுமாய் அருவமுமாய். சாதாரண கண்களுக்குத் தெரியாத உருவத்தையே அருவம் என கொள்ளலாமே தவிர மொத்தமாகவே உருவமற்றது என கொள்ள இயலாது.

அறிவியல் விளக்கப்படி சடப்பொருளுக்கு உருவம் உண்டு. தண்ணீருக்கு தான் கொள்ளும் பாத்திரத்தின்,இடத்தின், உருவம் உண்டு ஆனால் வாயுவுக்கு உருவம் இல்லை. வாயுவுக்கு உருவம் இல்லை என சொன்னதன் காரணம் ஒரு சின்ன விசயத்தை ஒப்புமைப்படுத்திச் சொல்லமுடியாததே. அதே வாயுவை ஒரு குடுவையில் அடக்கி வைத்தால் அதன் உருவம் வராதா? வராது என்று சொல்கிறதா அறிவியல்?

மனிதன் என்றால் இப்படிப்பட்ட உருவம் என இருப்பதைப் போன்றே ஒவ்வொன்றுக்கும் ஒரு உருவம் உண்டு. வெறுமைக்கும் உருவம் உண்டு.

விளக்குதலும் விளங்குதலும் காலம் காலமாகவே பிரச்சினையாக உள்ளது. நான் விளங்கிக்கொண்ட முறை சரியென நான் சொன்னால் உலகம் மெத்த சரி என சொல்லிவிடுமா? ஒவ்வொருடைய விளக்கமும், விளங்கிக்கொள்தலும் அதனதன் உண்மை நிலையை ஒளித்து வைத்துவிடுவது மறுக்க இயலாத விசயம்.

சில கருத்துகள் ஏற்புடையவனாகவும், ஏற்புடையதற்றதாகவும் இருப்பது உலக இயல்பு. ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள முயலும்போது இதுபோன்று நிகழ்ந்துவிடுகின்றன. என்னைப் பொருத்தவரை ஒருவரின் பார்வையில் ஒரு விசயம் எப்படி அறியப்படுகிறது என்பதை உற்று நோக்குவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. என்னைப் பொருத்தவரை இறைவன் உருவமில்லாமல் தான் இருக்கிறான். இருப்பினும் உருவமில்லா இறைவனுக்கு உருவம் தந்த பெருமை நம்மைத்தான் சேரும்.

அடுத்து 'தோன்றாப் பெருமையனே' எனும் பெருமை கொண்ட இறைவனுக்குத் தோற்றம் தந்தது எங்ஙனம் என்பதைப் பார்ப்போம்.

Friday 14 August 2009

சொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்

இந்து சாமிகளில் யார் பெரியவர் எனும் கேள்விக்கணையை சுந்தர் அவர்கள் தொடுத்திருக்க, அவருக்கு எனது கவிதையான சொல் எனும் சொல் கவிதையைத் தந்து இறைவனிடம் சென்று அவரை இந்த கவிதை குறித்து என்ன சொல்கிறார் எனக் கேட்டு வரச் சொன்னேன். அவரும் இறைவனிடம் கேட்டு வந்ததாகவும் "ரகசியம் என்று ஒன்று இருக்கிறது என்று தீராத வாஞ்சையுடன் நீங்கள் தேடுகிறீர்கள் அறியாத ஒன்றை அறிந்ததாக நினைத்துகோள்கிறீர்கள்" அவ்வளவுதான் பதில் எனச் சொல்லி இருந்தார். ஆனால் எனக்கோ அந்தப் பதிலை பார்த்ததும் இப்படி ஒரு பதில் எல்லாம் தருவார் இறைவன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு நான் எனது பதிலைத் தெரிவித்தேன். ''கவிதையை வாசித்து என்ன சொல்கிறார் என்று தானே கேட்டேன், நான் என்ன நினைக்கிறேன் என அவரை சொல்லச் சொன்னேனா ஐயா? இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்த மனுசர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். இதிலிருந்து தெரிகிறதா ஐயா நீங்கள் கேட்ட கேள்விக்கான யார் பெரியவர் எனும் கேள்விக்கான பதில்.''

பின்னர் அவர் என்னிடம் கேட்ட சில விசயங்களுக்கு கீழ்கண்டவாறு பதில் அளித்து இருந்தேன். நீங்களும் தெரிந்தால் சொல்லுங்கள்.

சுந்தர்: உங்கள் கவிதையை பற்றி மட்டும் பேசுவோம்,
முதலில் அந்த கவிதை நீங்கள் எழுதியதா அல்லது இறைவனிடம் இருந்து பெற்றதா?
உங்களுக்கு அதன் அர்த்தம் தெரியுமா? தெரியாதா?
இரகசியத்தை நீங்கள் அறிந்து கொண்டீர்களா அல்லது இன்னும் அறியவில்லையா?

நான்: உண்மையைச் சொல்லப் போனால் எழுதியது நானேதான், ஆனால் ''எழுதியது நானே'' என சொல்லும்போது ஆணவம் மட்டுமே மிஞ்சுகிறது, எனது நினைவுக்குத் தெரிந்தவரை இறைவனிடம் இருந்து பெறவில்லை ஐயா. இப்படித்தான் இறைவன் சொல்வதாய் ஒரு கவிதை எழுதிவிட்டு இதை எழுதியது நான் அல்ல, ரங்கனே என குறிப்பிட்டு இருக்கிறேன், அந்த கவிதையும் விரைவில் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அர்த்தமில்லாத, அர்த்தம் கொடுக்காத கவிதைகளை ஒருபோதும் எழுதிடத் துணிவதில்லை, ஒரு வார்த்தையாவது முழு கவிதைக்கு அர்த்தம் கொடுத்துவிடும், அவை வெறும் வார்த்தைகளாக இருந்தாலும். ஆம் ஐயா அர்த்தம் தெரியும்.

இரகசியம் அறிந்து கொண்டேன். இதைச் சொல்லும்போதே இரகசியம் காப்பாற்றப்படுவது முடியாததாகிறது. எனவே இரகசியம் அறியாததுபோலவே இருக்கின்றேன். அறிந்ததை பிறருக்கு அறியச் செய்த இராமானுஜர் எங்கே, அறிந்தும் அறியாத அஞ்ஞானம் உடையவனாய் இருக்கும் நான் எங்கே!

இறைவன் தங்களை என்னிடம் கேள்வி கேட்க வைத்து அவர் சொன்ன பதில் சரிதான் என நிரூபிக்கப் பார்க்கிறார் போலும்.


சுந்தர்: சிலரை போல் அல்லமால் உங்களுக்கு உலகத்துக்கு அப்பாற்பட்ட சிந்தனைகள் இருக்கிறது என்பது எனக்கு தெரிகிறது அது நல்லதுதான் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எந்த ஆராச்சியினாலும், அறிவினாலும் இறைவனை மட்டும் அறிந்துவிட முடியாது.

நான்: உலகத்திற்கு அப்பாற்பட்ட சிந்தனைகள் எதுவும் இல்லை, ஆனால் உலகத்திற்கு உட்பட்ட சிந்தனை இருக்கிறது, அது மட்டுமே இருக்க முடியும், அதுதானே எனக்குத் தெரிந்த ஒன்று. பிறரது சிந்தனைகள் எனது சிந்தனையைவிட வலிமையானவை என்றே அறிந்திருக்கிறேன்.

அனைத்திற்கும் அப்பாற்பட்டு இருப்பவனும், அனைத்திலும் கட்டுப்பட்டு உள்ளே இருப்பவனும் இறைவன் என்பதை தாங்கள் மறுக்கமாட்டீர்கள் என்றே நினைக்கின்றேன்.


சுந்தர்: நான் விடாபிடியாக எதையும் தேடுபவன்தான். ஆனால் தேடுதலில் பயன் இருக்க வேண்டும். இறைவன் என்று ஒருவர் இருக்கிறான் என்பதை கண்டுகொண்டேன் எனவே விடாப்பிடியாக அவரை தேடுகிறேன்.

நான்: ஐயா, தேடிக்கண்டெடுக்கும் பொருள் அல்ல இறைவன் என்பதை நீங்கள் அறிவீரோ? கண்டுகொண்ட ஒன்றை தொலைத்தால்தானே தேட வேண்டும், காணாத ஒன்று இருப்பதாய் அறிந்ததால் அதைத் தேடுகிறீர்களா? தேடலுக்கெல்லாம் உட்படாதவன் இறைவன், தேடுங்கள் எனச் சொன்னதெல்லாம் உங்களை நீங்களே உணரத் தேடச்சொன்னது, இறைவனை அல்ல!

சுந்தர்: உங்கள் கவிதைக்கான பதிலை கண்டுபிடிக்க நான் விடப்பிடியாய தேட வேண்டும் என்றால் எனது மேற்கண்ட கேள்விக்கு பதில் தரவும்.

நான்: பதில் அளித்துவிட்டேன் ஐயா, தேடலைத் தொலைத்துவிடாதீர்கள்

சுந்தர்: நான் எழுதுவது பலருக்கு ஜோக்காக தெரிந்தாலும் சிலர் பற்பல இடங்களில் இருந்து என்னை தொடர்புகொண்டு உண்மை பற்றி விசாரித்து அறிகின்றனர், அவர்கள் இருதயத்தை இறைவன் திறந்துள்ளார். அது தான் நான் எதிர்பார்ப்பது.

இறைவனைப் பற்றி அறிந்த ஒருவர் அமைதியாக இருப்பாரேயன்றி இறைவனைப் பற்றி பிரசங்கம் செய்து கொண்டிருக்கமாட்டார். வாழ்வியல் நெறிமுறைகள் பற்றி பேசிய, வாழ்ந்த மாபெரும் மனிதர்கள் இருந்த பூமிதானே இதுவன்றி இறைவனை பற்றி பிரசங்கம் செய்த பூமி அல்ல இது. அது அவசியமில்லாதது, ஆனால் அதுபோன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது நமது தவறே. பிரபஞ்சம் படைத்தவனை பற்றி யார் யாருக்குச் சொல்லித் தரவேண்டும்? இது அறிவியல் இல்லை ஐயா, சூரியன் மையமாகவும், கோள்கள் சுற்றிவருவதாகவும் சொல்லித்தருவதற்கு. ஒவ்வொருவரும் அறிந்த ஒன்றை அவர் அறியவில்லை என நாம் நினைத்துச் சொல்லித்தர முனைகின்றோம், ஆனால் அறிவிற்கு அப்பாற்பட்டவன் அல்லவா அவன். இதயம் எங்குமே திறந்துதான் இருக்கிறது, அனைவரும் அறிவார்கள், நல்லது ஐயா. ஆனால் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருப்பவன் அவன்.

கேலிக்குரிய விசயங்கள் என ஒன்றை நாம் ஏன் ஏற்படுத்தித்தர வேண்டும்? உலக மக்கள் அனைவரும் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதிலிருந்தே நாம் சொல்லும் விசயங்களை பற்றித்தானே நமக்கு அக்கறை இருக்கவேண்டுமேயன்றி அனைவரும் ஏற்க வேண்டும் எனும் நோக்கம் இருக்கக் கூடாது, அதனால் மனம் சலிப்பு அடையவும் கூடாது.


சுந்தர்: பள்ளியில் வாத்தியார் எல்லோருக்கும் ஒன்றுபோல்தான் பாடம் சொல்லி தருகிறார் ஆனால் எல்லோருமா புரிந்துகொள்கின்றனர்? இல்லையே! அதுபோல் புரிபவர்களுக்கு புரியட்டும் புரியாதவர் சிரித்துவிட்டு போகட்டும்

அனைவருக்கும் புரியும்படிச் சொல்லித்தருபவரே சிறந்த ஆசிரியர், புரிந்துகொள்ளும்படி நடப்பவரே சிறந்த மாணாக்கன். புரிதல் இருந்தும் சிரிப்பவர்கள் இருக்கலாம் அல்லவா! அந்த உணர்தல் நமக்கு இருந்தால் போதும், பிறரை நாம் எப்பொழுதும் மாபெரும் மனிதர்களாகவே மதித்து நடத்துவோம்

சுந்தர்: படிக்கும் நேரத்தில் வேறு விஷயத்தில் நேரத்தை செலவழிக்கும் பலர் வாழ்வில் துன்பப்படும் போது அதை உணர்கின்றனர் அது போல் உணருகின்ற காலம் ஒன்று விரைவில் வரும் ! நாம் பிறருக்கு இறைவனை உணர்த்தவேண்டிய நமது கடமையை செய்வோம்!

நான்: உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருப்பவனும் அவனே. உணர்வில்லாத நிலையில் கூட அவனை உணரலாம் ஐயா. மீண்டும் சொல்கிறேன் ஐயா, பிரபஞ்சம் படைத்தவனைப் பற்றி யார் யாருக்கு சொல்லித்தர வேண்டும்? இதுதான் தங்கள் கடமையாக கருதுவீர்களேயானல் செவ்வனே செய்யுங்கள், எதற்கும் மனம் தளராதீர்கள். நாம் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் போதும், அவன் ஆனந்தப்பட்டுப் போவான்.

Thursday 30 July 2009

உண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா?! என்னாது!

கோவிலுக்கு எனப் பணத்தைச் செலவழிக்கிறோம், மக்களை மறந்துவிட்டோம், முக்கியமற்ற செய்திகளை நாளேடுகள் வெளியிடுகின்றன எனும் செய்திக்கு என்னுள் எழுந்த வினாக்கள் இவை.

1. நாம் குடியிருக்கும் வீடு மூன்று குடும்பங்களுக்கு தங்க வைத்துக் கொள்வதற்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக பண வசதியின்றி வீடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு வாடகை வாங்காமல் வீட்டில் தங்க வைத்திடும் தைரியம் எவர்க்கேனும் உண்டா? (எனக்கு இல்லை!)

2. கடவுளைப் பற்றி காராசாரமாக விவாதிக்கும் நாம் நமது குடும்பத்தில் நடக்கின்ற விசயங்களை (உண்டியல் போடுவது முதற்கொண்டு அனைத்து விசயங்களைச் சொல்கிறேன்) நம்மால் தடுத்த நிறுத்த இயலுமா? (என்னால் இயலாது காரணம் நம்பிக்கை கொண்டவர்களை புண்படுத்தும் பழக்கம் என்னிடம் இல்லை).

3. எதற்கெடுத்தாலும் ஆலயங்கள், வருமானம் என பேசுகிறோமே இப்படியெல்லாம் நடக்கிறதே என அலுத்துக் கொள்கிறோமே, நமது வீட்டில் நாம் சாப்பிடும் சாப்பாடுடன் இன்னும் பலருக்கு சாப்பாடு போட்டு அவர்களை வாழ்வில் முன்னேற வழிவகுக்கும் திறமை இருந்தும் நாம் செய்கிறோமா? (நான் செய்வது இல்லை, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை)

4. நாளிதழ்களின் பணி அவர்களுக்கு வருமானம் வேண்டும் அதன் காரணமாக பிரபலங்களை, மக்கள் கவரும் விசயங்களை (எதுவேண்டுமெனினும்) வெளியிட்டு கொள்கின்றன, ஆனால் இப்படி வெளியிடுகிறார்கள் என புறக்கணிக்கும் சக்தி உண்டா? ஓசிப் பேப்பராவது படிக்கிறோமே? (இங்கு ஓசி பேப்பர்கள் அதிகம் வெளியிடப்படுகிறது)

5. சமூக நலத்திட்டம் , சமூக நலத்திட்டம் என பேசும் நாம், நமது வீட்டினைச் சுத்தமாக நமது எண்ணங்களை சுத்தமாக வைத்து கொள்கிறோமா? சரி கோவில்களுக்கு வந்த பணத்தில் தான் கோவில்களுக்கு செலவழிக்கிறார்கள், நிதி என கேட்டு வந்தால் தராமல் இருந்து விடுங்கள், யாரும் வற்புறுத்தி எந்த கோவிலும் வருமானம் சேர்த்துக் கொண்டதாய் இல்லை. நமது வீட்டை அலங்காரப்படுத்தும் பணத்தில் தெருக்களை சீரமைக்கும் சக்தி நமக்கு உண்டா?

6. அறநிலையத் துறை மட்டும்தானா அடித்தட்டு மனிதர்களின் வளர்ச்சிக்குத் தடை? பணக்காரனாக நாம் இருந்தால் அடித்தட்டு மனிதரின் நிலை குறித்து கவலைப் படக் கூட நேரம் இருக்காது காரணம் இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசை. நமது தேவைகள் பெரும் தேவைகளாக இருக்கும்.

7. மடாபதிகளும் ஆத்திகர்களும் மக்கள் இல்லையா? அவர்களை இப்படி ஒதுக்கி வைத்துப் பார்ப்பதே பெரும் குற்றமாகத் தெரியவில்லையா? இதுவும் ஒருவகையில் தீண்டத்தகாமையைச் சார்ந்தது.

8.நிரூபிக்கப்படாத கடவுள்? நாளை நாம் யார் என்பதை இந்த உலகம் மறந்து போகும் நம்மை எப்படி நிரூபிப்பது? ஆண்டாண்டு காலமாய் வழக்கத்தில் வந்து கொண்டு இருக்கும் அந்த ஒன்று இல்லாததாய் இருப்பினும் இருப்பதாய் உணர்வினை உரச வைக்கிறதே அதனை எதிர்க்கிறோம் என பேசுவது முரண்பாடாகத் தெரியவில்லையா? இல்லாமல் போகப் போகும் நமக்கு நாம் எவ்வளவு செலவு செய்கிறோம்? இதனை நியாயப்படுத்தினால் அதுவும் நியாயம் தான். ஆதங்கப்படுவதே நமக்கு வாடிக்கையாய் போய்விட்டது, முடிந்ததை செய்து அதன் மூலம் திருப்தி அடைவதுதான் வாழ்க்கை என்னும் ஒரு சின்ன தத்துவம் கூட நம்மால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை என்னும் பட்சத்தில் நமது பேச்சுக்கள் வியப்பைத் தரும்?

9. ஏழைக்கு உணவு தருதல் அல்ல வாழ்க்கை முறை, ஏழையை உணவு உற்பத்தி பண்ணச் சொல்லி அதன் மூலம் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதுதான் வாழ்க்கை முறை.

10. பணம் பணம் பணம் இதுதானே மூல காரணம், இதனை அழிக்க முடியுமா நம்மால்? இதனை ஒழிக்க முடியும் எனில் கடவுளை உணர்வது பற்றி உரைக்கிறேன். அப்படி முடியாது எனில் தயவு செய்து கடவுள்களை இம்சிக்காதீர்கள், பேதம் பார்க்காதீர்கள். காரணம் நமது மனித இனத்தை மதிக்கத் தெரியாத, மனம் குறுகிப் போன மனிதர்கள் நாம் என்பதை மறந்து போகாதீர்கள்.

Saturday 4 July 2009

கடவுளை கடவுளாக!

ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா! வைச் சேர்ந்த நண்பர்கள் இலண்டனில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவிலிருந்து இங்கே வந்து வேலைப்பார்ப்பவர்கள்தான் எனினும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் ஈடுபாடு கொண்டு வாரத்தில் ஒருநாள் பகவத் கீதை படிப்பதும், நீதி சொல்வதும் என சமூகத்திற்கு தொண்டாற்றி வருகிறார்கள்.

சென்ற வருடம் அக்டோபர் மாதம் 13ம் தேதியிலிருந்து நவம்பர் 13ம் தேதி வரை சிறப்பு மாதமாகக் கொண்டாடினார்கள். விருப்பப்பட்டு அழைப்பவர்களின் வீடுகளுக்குச் சென்று ஒன்றரை மணி நேரம் பஜனையும், தீப ஒளியும் ஏற்றிக் கொண்டாடுவார்கள்.

இப்படி ஒருமுறை அவர்கள் ஒரு வீட்டில் செய்து கொண்டிருக்க அங்கே கடைசியில் சென்ற நான் அமைதியாக இருந்துவிட்டு 'எல்லாமே கடவுள்' இதில் என்ன பாரபட்சம் வேண்டி இருக்கிறது என்று கேட்டுவிட்டேன். அமைதியாகவே இருந்திருக்கலாம் நான்!

''அது எப்படி எல்லாமே கடவுள் ஆகும்? ஒருவன் மாட்டினை வெட்டினால் அவன் எப்படி கடவுள் ஆவான், அவன் பொல்லாதவன்'' என்றார். அதற்கும் நான் பேசாமல் இருந்து இருக்கலாம், நானோ ''அவனைப் பொறுத்தவரை அவன் நல்லவன், அவன் மாட்டினை வெட்டுகிறான் என்பதற்காக தீயவன் என எப்படி கருதலாம்'' என சொன்னேன்.

அதற்கு அவர் ''உங்கள் மேல் ஒரு நாற்காலியைப் போடுகிறேன், வலிக்கிறதா இல்லையா என சொல்லுங்கள்'' என்றார். நானோ ''எனக்கு வலிக்காது, ஏனெனில் ஆன்மாவுக்கு வலி இல்லையல்லவா'' என்றேன். ஒரு கணம் சிந்தித்தார். அவர் அமைதியாய் இருக்க நான் தொடர்ந்தேன்.

''இப்படித்தானே நீங்கள் சொல்லி வருகிறீர்கள், ஆன்மாவை எதுவும் செய்ய முடியாது, ஆன்மா துன்பப்படாது, வீணாக உடலைப்பற்றி கவலைப்படுகிறோம், இதுதானே உங்கள் மூலக்கருத்து. அப்படியிருக்க அந்த மாட்டினை வெட்டியவன் ஆன்மாவோ, அந்த மாட்டின் ஆன்மாவோ பாதிக்கப்படுவதில்லை தானே'' என்றேன்.

''அதற்கு அவர் நீங்கள் சாமான்ய நிலையில் இருந்து பேசுங்கள், நீங்கள் பேசும் அந்த உயர்வுக்கு வேண்டுமெனில் எல்லாமே கடவுள் என்பது சரியாகப்படும்'' என்றார். எனக்கு ஏன் பேசினோம் என்றாகிவிட்டது. ஏனெனில் என்னைப் பொருத்தவரை 'கடவுளைப் பற்றி யாரும், எவருக்கும் விளக்கம் சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை'

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பற்றி பிரசாரம் செய்பவர்களிடம் இப்படி சொன்னது எவ்வளவு மடத்தனம் என எனக்குப் புரிய வெகுநேரமாகியது. ஆனால் எனக்கோ கிருஷ்ணன் எனில் கொள்ளைப்பிரியம். ஆனால் கிருஷ்ணன் தான் எல்லாம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. கடவுள் எல்லாமாக இருப்பார், நாம் எல்லாமாக இருக்க முடியுமா என்ன? அதுபோலத்தான் கிருஷ்ணனும். அவர்களை வருத்தப்பட வைத்துவிட்டோமோ என மனம் வருந்தி எனது நுனிப்புல் புத்தகம் ஒன்றைத் தருவதாகச் சொன்னேன். இனிமேல் இப்படியெல்லாம் பிறரை நிந்தனை செய்து பேசக்கூடாது என எனது சின்ன புத்திக்குச் சொல்லிக்கொண்டேன்.

நாங்கள் அழைப்பு வைக்க ஒரு வாரம் கழித்து எனது வீட்டுக்கு வந்தார்கள். பொதுவாக பணத்திற்காக பல காரியம் செய்வார்கள், ஆனால் பக்தி பரப்புவதே எங்கள் நோக்கம் என இவர்களின் செய்கை எனக்கு சற்று வியப்பைத் தந்தது. முழு முதற்கடவுள் நாராயணனே என்றார்கள். ம்ம் என்றுதான் சொல்ல முடிந்தது. விநாயகர் அல்லவா என ஒருவர் கேட்டு வைக்க அதற்கு விளக்கமும் வந்தது. பார்வதியால் உருவாக்கப்பட்டவரே விநாயகர் எனவே முழுமுதற்கடவுள் அல்ல என்றார்கள். சரிதான்!

அப்பொழுதுதான் இரண்டு விசயங்கள் சொன்னார்கள். ஒன்று நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றியது. மற்றொன்று நியூட்டன் பற்றியது.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் - இவர் நிலவில் சென்று கால் தடம் பதிக்கவேயில்லையாம். அவர் பேட்டியின்போது கண்கள் கலங்கி பேசினாராம். மேலும் அமெரிக்க கொடி அசைந்ததாம். நிலவில் காற்றில்லையென்கிறீர்கள் எப்படி கொடி அசையும்? மனிதனால் எல்லா இடங்களுக்கும் செல்ல இயலாது. அது இறைவன் ஒருவனாலேயே முடியும் என்றார்கள்.

நியூட்டன் - இவரது நண்பர் ஒருமுறை நியூட்டனிடம் கடவுள் இல்லை, எல்லாம் இயற்கையாய் வந்தது என்றாராம். அப்பொழுது நியூட்டன் அவரது நண்பரை ஒருநாள் வீட்டிற்கு வரச் சொல்லி இருந்தாராம். வீட்டுக்கு வந்த நபர் நியூட்டனின் அறையில் இருந்த சூரிய மற்றும் கோள்கள் அமைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து இது யார் செய்தார்கள் என்றாராம். அதற்கு நியூட்டன் தானாக வந்தது என்றாராம். அது எப்படி தானாக வரும், நிச்சயம் நீங்களோ அல்லது வேறு யாரோ செய்து இருப்பார்கள் என்றாராம். அதற்கு நியூட்டன் இதை ஒருவர் படைத்திருப்பார் என நீங்கள் நம்பும்போது இந்த மொத்த பிரபஞ்சத்தையும் ஒருவர் படைத்திருக்க வேண்டும் அல்லவா? அவர்தான் கடவுள் என்றாராம் நியூட்டன். ந்ல்லவேளை கடவுளை எவர் படைத்தார் என எவரும் கேட்கவில்லை, நான் உட்பட.

இந்த இரண்டு விசயங்களும் என்னை யோசிக்க வைத்தன, கடவுளுக்கு இப்படியெல்லாம் விளக்கம் ஏன் தேவைப்பட வேண்டும் என்றுதான். ஆனால் இம்முறை நான் பாடம் கற்றுக்கொண்டேன். மறுப்பு எதுவும் பேசவில்லை. எனது நுனிப்புல் புத்தகம் எடுத்துக் கொடுத்தேன்.

அதில் வரும் முதல் கவிதையைக் கைகாட்டினேன்.

''நீ என் மிகஅருகினில் இருப்பினும்
உன்னை என்னுள் உணராதவரை
உன்னை தேடுதல் ஒரு தேவை''

எழுதிய எனக்கு இன்னமும் இந்த கவிதைக்கான அர்த்தம் முழுமையடைந்ததாக தெரியவில்லை. மிகச்சரி என வந்த அந்த நபர் சொன்னார்.

அவர்களுக்கு விடை தந்து அனுப்புகையில் ''வருவாய் வருவாய் வருவாய் கண்ணா வருவாய்' எனும் பாடலை இசைக்கவிட்டேன். மனம் மகிழ்ந்து இருப்பார்கள் என மிகச் சாதாரண மனிதனாய் தெரிந்தேன். அடுத்தவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என நாம் நடந்து கொள்ளும் முறைகளும் செயல்களும் என்னை பலமுறை யோசிக்க வைத்து இருக்கிறது.

எனது மகனின் பிறந்தநாளை அவர்கள் அழைப்பை ஏற்று அவர்கள் அழைத்த இடத்துக்குச் சென்று கொண்டாடினோம்.

கேக்கில் வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியை ஊதுவதற்குப் பதிலாக காகிதம் வீசி அணைத்தார்கள். ஏன் எனக் கேட்டேன். எச்சில் பண்டம் பிறருக்குத் தருவது கூடாது என்றார்கள். வெங்காயம் பூண்டு இல்லாமல் வைக்கப்பட்ட குருமா அத்தனை சுவையாக இருந்தது. அட என்றேன். இது பிரசாதம் என்றார்கள். நாம் நடந்து கொள்ளும் முறையில் தான் வாழ்க்கை சுவையாக இருக்கிறது என்றார்கள்.

மிக நல்ல நண்பர்களுடன் கிடைத்த இந்த பக்தி மனதிற்கு இதமாக இருந்தது. ஏனோ கடவுளை கடவுளாக மட்டுமேப் பார்க்க வேண்டும் என்றுதான் மனம் எப்பொழுதும் நினைக்கிறது.

Friday 12 June 2009

இறைவனும் இறை உணர்வும் - 1

இறைவனும் இறைஉணர்வும் – 1


இத்தொடரைத் தொடங்கிட கடவுள் வாழ்த்து எழுத வேண்டும், ஆனால் இப்பொழுது எந்த இறைவனுக்கு வாழ்த்துச் சொல்லி எழுதுவது? எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இறைவன்கள் எல்லாம் எனக்கு மனிதர்களாகவேத் தெரிகிறார்கள் அல்லது இறைவனே மனிதவடிவில் கடவுளராக வந்ததாகச் சொல்லி இருக்கிறார்கள். மொத்தத்தில் இறைவன் இறைவனாகவே வந்ததாக எனக்கு பாடம் எவருமே நடத்தவில்லை அதாவது அப்படியொரு பாடத்தை நான் இதுவரை கற்றத் துணிந்தது இல்லை என எழுதுவதே மிகச்சரியாக இருக்கும். அசரிரீ என்றெல்லாம் கேள்விபட்டு, மனதில் உள்ளே குரல் ஒலிக்கிறது என்றெல்லாம் சொல்லிவிடும் தருணம் எதுவாக இருப்பினும் இறைவனின் குரல் இதுநாள்வரை நான் கேட்டதே இல்லை. இது இப்படியிருக்க எங்ஙனம் இறைவன் வாழ்த்துத் தொடங்குவது?.

தெய்வப்புலவர் எனப் போற்றப்படும் திருவள்ளுவர் எழுதிய கடவுள் வாழ்த்து போல் எழுதினால் திருவள்ளுவர் சமணர், இந்து என அவர் மீது சமய, மத முலாம் பூசுவது போல் இந்த எழுத்துக்கு ஆகிவிடும், அவரது அரிய கருத்துக்கள் பேச்சுப்போட்டிக்கும், கட்டுரைப்போட்டிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பது போல எனது எழுத்தும் ஆகிவிடும் எனும் அச்சமெல்லாம் எனக்கு இல்லை. என் பெயரைப் பார்த்ததும் வைணவன் என அவரவராக முடிவு கட்டிக்கொள்வார்கள், ஒருவேளை எனது எழுத்துக்களைப் பார்த்து இறைநம்பிக்கை அற்றவன் என முடிவுக்கும் பலர் வரக்கூடும்.


ஒருவருக்கு இறை நம்பிக்கை இருக்கிறதா? இறை நம்பிக்கை இல்லையா? என்பதா நமது வாழ்க்கையில் முக்கியம் என்பது பலருக்குத் தெரியாது என எழுதும்போதே அவரவருக்கு அததது முக்கியமாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டுவிட்டேனெனில் மிகச் செளகரியமாக இருக்கும். இதைச் சொல்வதற்குக் காரணம் இறைவன் அவரவர் செளகரியத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டார் என்றால் எவரேனும் மறுப்புத் தெரிவித்து விடுவீர்களோ என எண்ணுவதற்கெல்லாம் இடமே இல்லை. எங்கேயும் இறைவன் இறைவனாக காட்சித் தருவதில்லை, ஆனால் காட்சிப் பொருளாகக் காட்டப்படுகிறார் அது வெற்றிடமாக இருப்பினும் கூட! இறைவன் மேல் அலாதிப் பிரியம் எனக்கு உண்டு. ஆகவே எந்த இறைவனுக்கு வாழ்த்துச் சொல்வது என்பதை ஒரு பொருட்டாக கருதாமல் அனைத்துலகுக்கும் சொந்தமான இறைவனுக்கு ஒரு வாழ்த்து எழுதுவதே முறையாகும்.


இறைவன் வாழ்த்து.


மறைந்திருக்கும் உண்மையே நீயாவாய்

மறைமூலம் வெளிப்படுத்தப்பட்ட உண்மையும் நீயாவாய்

உண்மையாய் இருப்போர்க்கே உண்மையராய்

உம்மையும் எமக்கு அறிவித்தார் இப்பாரினில்

முதலாய் முடிவாய் இருப்பவராய்

இடையில் எம்மை இருந்திடச் செய்தீரோ

புதையலாய் எங்கு புதையுண்டீர்

தடையின்றி உள்ளத்தில் இருப்பீராம் அறிவித்தார்

ஆக்கிட அழித்திட முடியாது

அணுவின் சிறப்பைப் போல நீயிருப்பாய்

நீக்கமற நிறைந்திருக்கும் சிந்தையே

பணிவுடன் யாம் வாழ்த்துவோம் உம்மை.


உண்மையாய் இருப்போர்க்கே உண்மையினைப் பற்றித் தெரிய வாய்ப்புண்டு. அதாவது உண்மை என நம்பிக்கைக் கொண்டோர்க்கு என அர்த்தப்படுத்திக் கொள்வதேச் சாலச் சிறந்தது. மனிதர்களாகிய ஞானிகள் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் பொருட்டு தாங்கள் அறிந்தவற்றை பேசியதன் மூலம் இறைவனை வெளிக்கொண்டு வர முயற்சித்தார்கள். பின்னர் எழுத்துக்கள் மூலம் எழுதி இறைவனை உலகுக்கு அறிமுகம் செய்தார்கள். இறைவன் அவரவருக்கு மட்டுமேத் தெரிந்த உண்மையாக இருப்பதாகக் காட்டப்பட்டது. அனைவருக்கும் தெரிந்த உண்மையாக இறைவனைக் கொண்டுவர வேண்டுமென எழுதப்பட்டதுதான் மறை நூல்கள்.


இந்த மறை நூல்கள் மறைந்திருக்கும் உண்மையை வெளிச்சொல்ல வந்ததேயெனினும் இறைவன் இரகசியமானவனாகவே இருந்து வருகிறான், இல்லையெனில் இறைவன் மறுப்புக்கொள்கை ஒன்று தோன்றியிருக்கவே இருக்காது, மேலும் ஒரு இறைவனைச் சொல்ல பல வேதங்கள், மதக் குருமார்கள், ஞானிகள் என அவசியமே இருந்திருக்காது. எல்லா மக்களும் இறைவன் என நிம்மதியாய் இருந்திருப்பார்கள். மனிதர்களுக்கு இறைவனின் அவதாரங்கள், தூதர்கள் என இறைவனை வலியுறுத்திய வசனங்களுக்குத் தேவை ஏற்பட்டிருக்காது. இறைவனை அடைய பல வழிகள் என இருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் சரியே என சொற்பொழிவு ஆற்ற வழியின்றிப் போயிருந்திருக்கும். மேலும் இதுபோன்ற காரியங்களால் மட்டுமே இறைவன் தனிமைப்படுத்தப்பட்டு உண்மை அறிவு சாதாரண பார்வைக்கு மறைந்தே இருப்பது போல் தோற்றம் அளிக்கிறது.


அப்படியெனில் இறைவன் யாராக இருக்கக் கூடும்? என்றே கேட்டு வைத்தேன். கொஞ்சம் கூட யோசிக்காமல் எதைப் பற்றியும் சிந்திக்காமல் உடனடியாக பதிலும் வந்து விழுந்தது, இறைவன் யாராகவும் இருக்கக் கூடும். உண்மையிலேயே இறைவன் யாராகவும் இருக்கக் கூடுமோ?!


(தொடரும்)

Thursday 4 June 2009

இறைவனும் இறை உணர்வும்

முன்னுரை:

ஒருநாள் திடீரென என் அன்னையிடம் கேள்வி கேட்க ஆசையாக இருந்தது.

''அம்மா, எங்கே இருக்காரம்மா இறைவன்?''

''இறைவன், தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்''

''சகல இடங்களிலும் வியாபித்து இருப்பானாம்மா இறைவன்?''

''ஆமாம்பா, எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பான்''

''எனக்கு இறைவனை காட்ட முடியுமாம்மா உங்களால்?''

''உன் எதிரில் நிற்கிறேனப்பா, உன் கண்ணுக்குத் தெரியவில்லையா''

விழிகளில் கண்ணீர் வடியக் கட்டிக்கொண்டேன் என் அன்னையை. என் அன்னையும் ஒருநாள் இறந்து போனார். அழுகை பீறிட்டு வந்தது. இப்பொழுதெல்லாம் எவரிடமும் நான் இறைவன் எங்கே இருக்கிறார் எனக் கேட்பதே இல்லை. இதை எழுதும்போதே எனது கண்களில் நீர் கோர்த்து நிற்கிறது.

என் அன்னை, நான் இந்தத் தொடர் எழுதிடும் வண்ணத்தை வானத்தில் இருந்துப் பார்த்துக் கொண்டேயிருப்பார் என்கிற அசட்டுத்தனமான நம்பிக்கையுடனும், இத்தொடரை எழுத எழுத என்னிடம் அவர் வந்து ''நல்லா எழுதியிருக்கேடா'' எனச் சொல்லும் குரலையும் கேட்பேன் என்கிற நழுவி விடாத நம்பிக்கையுடனேத் தொடங்குகிறேன்.

மனநிலை பிறழ்வு என அறிவியல் இத்தொடருக்கு விளக்கம் சொன்னாலும் சொல்லும். அதையும் மறுக்காது ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இருநிலை மனோபாவம் என அறிவிற் சிறந்தோர்கள் சொல்லக்கூடும், அதையும் ஏற்றுக்கொண்டே இதை எழுதுகிறேன்.

''அம்மா, நீ இதைக் கவனித்துக் கொண்டுதானே இருக்கிறாய்?''

என் அன்னை எனக்கு பதில் சொல்லவில்லை, ஆனால் மனதில் ஒரு மூலையில், எனது மூளையின் ஒரு பாகத்தில் ஒரு குரல் சன்னமாக ஒலித்துவிட்டுச் செல்கிறது.

''எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான், எப்பொழுதும் கவனித்துக் கொண்டேதான் இருக்கிறான்''

(தொடரும்)