Friday 16 April 2010

சிரிக்கத் தெரியாதுங்க, மன்னிச்சிருங்க.

எத்தனை தடவை, திரும்பத் திரும்ப ஒளிபரப்பினாலும், அதே நகைச்சுவை காட்சிகள் பார்த்து ரசித்து சிரித்து மகிழ்ந்து இருப்பேன். எத்தனை தடவை நகைச்சுவை பதிவுகள் பார்த்து மனம் விட்டு சிரித்து இருந்திருப்பேன். சிரிப்பு ஒன்றுதான் மனிதர்களை மற்ற விலங்கினங்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது என சொல்லும் போதெல்லாம் சிரிப்புடன் சிந்தனையும் வந்து சேர்ந்து விடுகிறது.

சிரிப்பது என்ன அவ்வளவு கஷ்டமான வேலையா? பிறரை சிரிக்க வைப்பது என்பது என்ன அவ்வளவு கஷ்டமா? எனக் கேள்வி கேட்டால் பல நேரங்களில் ஆமாம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

நகைச்சுவை என்பது மிகவும் மெல்லிய கயிறு. அதை சற்று அதிகமாக இழுத்துவிட்டால் அறுந்து போகும் தன்மை உடையது. இதில் வயது வந்தோர்க்கான நகைச்சுவையும் இருக்கத்தான் செய்கிறது. அதில் வக்ர எண்ணங்கள் தலை காண்பித்தாலும் அவை நகைச்சுவை எனும் போர்வையால் மறைக்கப்பட்டு விடுகிறது. நகைச்சுவை உணர்வுடன் எல்லா விசயங்களையும் அணுகினால் துன்பம் விலகிப் போய்விடும் என்பது சத்தியமான உண்மை, ஆனால் அந்த நகைச்சுவைதனை எல்லா இடங்களுக்கும் பொருத்திப் பார்ப்பது இயலாத காரியம்.

நகைச்சுவை என சொல்லிக் கொண்டு எதை வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் எனும் உரிமையே பல நேரங்களில் எதிர்பாராத விளைவுகளை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. நகைச்சுவைதனை உற்று நோக்கும் போது தோன்றுவது என்னவெனில் ஒருவரின் முட்டாள்தனத்தை கண்டு சிரிக்கிறோமா அல்லது ஒருவரின் சமயோசித புத்தியை நினைத்து ரசிக்கிறோமா என பாகுபாடு பார்க்க இயல்வதில்லை.

ஒன்றின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுவது என்பது அந்த நம்பிக்கையின் அடிப்படை.  பிறரது நம்பிக்கைகள் கேலிக்குரியதாகத் தெரியலாம். பிறரின் செயல்பாடுகள் அர்த்தமற்றதாகத் தெரியலாம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுபவர்களுக்கு ஒரு விசயத்தை தன்மையுடன் புரிய வைக்காமல் நகைச்சுவை செய்தால் சிரித்துவிட்டுத்தான் போகத் தோன்றும், சிந்திக்கத் தோன்றாது.

நான் மிகவும் கோபக்காரனாகவே தெரிகிறேன், முகத்தை கடுகடுவென வைத்திருக்கிறேன் என பலரும் சொல்லும்போது மனதுக்குள் சிரித்துக் கொள்கிறேன். 'இஞ்சி தின்ன குரங்கு' எனும் பழமொழியை 'உர்ராங்கொட்டான்' எனும் அடைமொழியை என்னால் மிகவும் ரசிக்க முடிகிறது.

கலகலப்பாகவே பேசும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். ஆனால் பேசி முடித்து கிளம்புகையில் ஒரு வெறுமை உணர்வு எட்டிப் பார்க்கிறது. துயரப்படுபவர்கள் கண்களில் வட்டமிடுகிறார்கள். அடுத்தவர்களை பாவம் என்று எண்ணாதே, நீதான் பாவம் என என்னை நோக்கிச் சொல்லும்போதெல்லாம் என்னால் சிரித்து மகிழ்ந்திருக்க இயலவில்லைதான்.

பொது நல வாழ்க்கைக்காக வசதியான வாழ்க்கையை துறந்துவிட்ட பல தலைவர்களை கோமாளிகள் என பிறர் சொல்லக் கேள்விபடும் போதெல்லாம் இனம் புரியாத வலி வந்து சேர்ந்துவிடுகிறது. இலங்கையில் துயரப்படும் தமிழ் உறவுகளை கண்டு ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் பேசிப் பேசியே அந்த கொடிய நிகழ்வுகளை நகைச்சுவையாக்கும் தன்மை கண்டு சிரித்து மகிழ எப்படி முடியும்?

என் சட்டைப் பையில் கொஞ்சம் பணம் அதிகமாகவே இருக்கிறது, அழுத பையன் அழுதபடியே எனும் வரிகள் என்னை வாட்டும் போதெல்லாம் எப்படி என்னால் மகிழ்ந்து இருக்க இயலும்?

இப்படி எத்தனையோ வாழ்வியல் கசப்புகளை மறந்துவிட்டு எப்பொழுதும் சிரித்து மகிழ்ந்திருங்கள் எனச் சொல்வது நகைச்சுவையாகத்தான் இருக்கும். இருப்பினும் எதையும் மாற்ற இயலாது, ஏன் வீணாக மனதையும் உடம்பையும் கெடுத்துக் கொள்கிறீர்கள் என்று சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. கல்யாண வீட்டில் அழுது கொண்டிருப்பது எத்தனை அசெளகரியமோ அது போல சாவு வீட்டில் சிரித்துக் கொண்டிருப்பது அத்தனை அசெளகரியம். இந்த பூமியானது கல்யாண வீடாகவும், சாவு வீடாகவும் மாறி மாறி காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. எங்கெங்கு அழ வேண்டுமோ அங்கங்கு அழுது விடுவதும், எங்கெங்கு சிரிக்க வேண்டுமோ அங்கங்கு சிரித்து விடுவதும் செளகரியமான ஒன்றாகவே இருக்கிறது.

ஒரு பட்டிமன்றம் பார்த்த போது நான் மிகவும் ரசித்த நகைச்சுவை ஒன்று:

மனைவி: 'இன்னைக்கு சாம்பார் வைக்கவாங்க, இல்லைன்னா ரசம் வைக்கவாங்க'

கணவன்: 'நீ ஏதாச்சும் ஒன்னு செஞ்சி வைச்சிரு, அப்புறம் பேரு வைச்சிக்கலாம்'

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும். உலக உயிரினங்கள் யாவும் எப்போதும் மகிழ்ந்திருக்க நல்லதொரு வாய்ப்புதனை நல்குவாய் பரம்பொருளே.

12 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான நகைச்சுவை..

உலகில் மனிதர்கள் பல தோற்றங்களில் பல்வேறு பண்புகளைக் கொண்டிருந்தாலும் நகைச்சுவையுணர்வு இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை என்பது என் எண்ணம் நண்பரே..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஹிட்லர், வ்லடிமிர் புடின்; நம் நரசிம்ம ராவ் போன்றோர் கூட சிரிப்பதை பார்க்கக் கூடியதாக இருந்ததால்;
அந்தந்த நேரத்தில் எந்தச் சிடு மூஞ்சியும் சிரிக்கும்.
நல்ல அலசல்
முத்தாய்ப்பான பகிடி சுப்பர்

குலவுசனப்பிரியன் said...

//நகைச்சுவை என சொல்லிக் கொண்டு எதை வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் எனும் உரிமையே பல நேரங்களில் எதிர்பாராத விளைவுகளை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது.//
நகைச்சுவை என்ற பேரில் சில திட்டமிட்ட மட்டம்தட்டும் போக்கும் உள்ளது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜேம்ஸ் டி வாட்சன், ஐரிஸ்காரர்களை முட்டாளாக சித்திகரிக்கப்பட்ட பொது புத்தியால், தனக்கு படித்து முன்னேற முடியாது என்று தாழ்வுமனப்பான்மை இருந்ததாகக் கூறுகிறார். பின்னாளில் ஆங்கிலேயர்கள் அவர்களை ஒடுக்குவதற்காக செய்த இந்த தந்திரங்களைப் பற்றி புரிந்துகொண்டதாக சொல்வார்.

சைவகொத்துப்பரோட்டா said...

பட்டி மன்ற நகைச்சுவை நல்லா இருக்கு.

Radhakrishnan said...

மிகவும் நன்றி முனைவர், யோகன் ஐயா, பிரியன் ஐயா மற்றும் பரோட்டா ஐயா.

Chitra said...

என் அப்பா, பட்டிமன்றங்கள் பலவற்றில் நடுவராக இருந்து இருக்கிறார். அவர், இந்த பட்டிமன்ற நகைச்சுவையை சிறிது வேறு படுத்தி சொல்வார்.
கணவன், தன் நண்பனிடம்: "என் மனைவி, சமையலில் நன்கு கலக்குபவள். டூ இன் ஒன் ஐட்டம் எல்லாம் செய்வாள்.
நண்பன்: அது என்ன டூ இன் ஒன் ஐட்டம்?
கணவன்: மேலே கலக்காமல் ஊத்தினால் ரசம் மாதிரி இருக்கும். கலக்கி ஊத்தினால், சாம்பார் மாதிரி இருக்கும்.
:-)
மிகவும் அருமையாக இந்த பதிவை எழுதி இருக்கிறீங்க. ரசித்தது படித்தேன்.

Chitra said...

Your blog page opens up fast now. Thank you for correcting it. :-)

அண்ணாமலை..!! said...

"
கல்யாண வீட்டில் அழுது கொண்டிருப்பது எத்தனை அசெளகரியமோ அது போல சாவு வீட்டில் சிரித்துக் கொண்டிருப்பது அத்தனை அசெளகரியம். இந்த பூமியானது கல்யாண வீடாகவும், சாவு வீடாகவும் மாறி மாறி காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. எங்கெங்கு அழ வேண்டுமோ அங்கங்கு அழுது விடுவதும், எங்கெங்கு சிரிக்க வேண்டுமோ அங்கங்கு சிரித்து விடுவதும் செளகரியமான ஒன்றாகவே இருக்கிறது."

உண்மைதான்! நல்ல பதிவு!

குலவுசனப்பிரியன் said...

//மேலே கலக்காமல் ஊத்தினால் ரசம் மாதிரி இருக்கும். கலக்கி ஊத்தினால், சாம்பார் மாதிரி இருக்கும்.//
நமக்கு இது பகடி. ஆனால் கர்நாடகாவில் இதுவே நடைமுறை. சாம்பாருக்கு சாரு, ரசத்திற்கு திளிசாரு (தெளிந்த சாரு) என்று பெயரிலேயே இந்த மர்மம் இருப்பதை புரிந்துகொள்ளாமல் தொடக்கத்தில் ஏமந்து இருக்கிறேன்.

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா. அருமையான நகைச்சுவை அது. மிக்க நன்றி அண்ணாமலை. புது விசயம் தான் பிரியன், மிக்க நன்றி.

ப.கந்தசாமி said...

//நகைச்சுவை என சொல்லிக் கொண்டு எதை வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் எனும் உரிமையே பல நேரங்களில் எதிர்பாராத விளைவுகளை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது.//

என்ன ஒரு தீர்க்க தரிசனம்?

Radhakrishnan said...

உலக நடப்பு தானே, நன்றி ஐயா.