Wednesday 7 April 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 5

5. கதிரேசன் கல்லூரிக்குச் சென்றான். விடுதியைவிட்டு ஏன் வெளியே அனுப்பினார்கள், இப்பொழுது எங்கே தங்கி இருக்கிறாய் என சிலர் கேட்டு வைத்தார்கள். கதிரேசன் வேறு என்ன காரணம் என்று யோசித்து வைக்கவில்லை. சிங்கமநல்லூரில் ஒரு வீட்டில் தங்க இடம் கொடுத்திருக்கிறார் ஒருவர் என்று மட்டுமே சொல்லி வைத்தான்.

கல்லூரியில் இருந்த நேரம் நன்றாகவே இருந்தது. விடுதியைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட விசயம் மனதில் வலியை ஏற்படுத்தி இருந்தாலும் தங்க ஓர் இடம் இருப்பது சற்று ஆறுதலைத் தந்து இருந்தது. அம்மாவுக்கு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும். மாலை வேளையில் வீட்டுக்கு கிளம்பும்போது கதிரேசனை கல்லூரி வளாகத்தில் மதுசூதனன் பார்த்தான்.

''இப்போ எங்கே இருக்க நீ'' என்றான் மதுசூதனன். ''சிங்கமநல்லூர்ல இருக்கேன்'' என்றான் கதிரேசன். ''ஏன் உன்னை வெளியே அனுப்பினாங்க, ஏன் காலையில என்கிட்ட அப்படி சொன்ன'' எனக் கேட்டான் மதுசூதனன். ''சொல்சிவனே அப்படினு சிவனை நோக்கி நான் பாடின பாட்டுதான் என்னை விடுதியை விட்டு வெளியே போக வச்சிருச்சி, என்னை அப்படி பாடக்கூடாதுனு பிரின்சிபால் சொன்னாரு'' என கதிரேசன் சொன்னதும் ''பாடமாட்டேனு சொல்ல வேண்டியதுதான, நான் சிவனைத் தொழுவதே இல்லை'' என மதுசூதனன் சொன்ன நேரம் சிவநாதன் அவர்களை கடந்தார். ''பிரின்சிபால்'' என மெதுவாக கூறியவாரே மதுசூதனனைத் தட்டினான் கதிரேசன். ''யாரா இருந்தா என்ன, நான் சிவனைத் தொழுவது இல்லை'' என அழுத்திச் சொன்னான் மதுசூதனன். சிவநாதன் திரும்பினார்.

''இங்கே வாங்க'' என அவர்களை அழைத்தார் சிவநாதன். கதிரேசன் மிகவும் பயந்து இருந்தான். மதுசூதனன் தைரியமாகவே நடந்தான். மதுசூதனனை நோக்கி ''நீ சிவனை தொழாம இருக்கிறதுனால சிவனுக்கு ஒன்னும் ஆகப்போறது இல்லை, நீ எந்த இறைவனையும் தொழுதுக்கோ, ஆனா எந்த இறைவனையும் ஒருபோதும் இப்படிச் செய், அப்படிச் செய், ஏன் இப்படி இருக்க, பதில் சொல்லுனு மட்டும் பேசாதே. நாம எல்லாம் தொழ மட்டுமே சிவன்'' என்றார் சிவநாதன். ''நான் வைணவம் ஐயா'' என்றான் மதுசூதனன். ''அதான் சொன்னேன்ல, சொன்னது புரியலையா'' என்றார் சிவநாதன். மதுசூதனன் பதில் பேசாமல் நின்றான். கதிரேசன் தலையை குனிந்தபடியே நின்றான். ''ஒழுக்கம் முக்கியம், காலேஜ்லயோ வெளியிலேயோ பிரச்சினையை உண்டுபண்ண வேண்டாம், யார் பெரியவங்க, யார் சிறியவங்கனு, போய் படிக்கிற வேலையை மட்டும் பாருங்க'' என சொல்லிவிட்டு நடக்கலானார்.

''ஏன் நீ இப்படி பேசற'' என்று கேட்டான் கதிரேசன். ''நீ ஏன் அப்படி பாடின'' எனக் கேட்டான் மதுசூதனன். கதிரேசனால் பதில் சொல்ல இயலவில்லை. அமைதியானான். ''எனக்கு என்னோட குலம் முக்கியம், என் உயிர் போகிற தருணமா இருந்து சிவனால் தான் என்னை காக்கமுடியும்னு இருக்கும் நிலை வந்தாலும் நான் சிவனைத் தொழமாட்டேன், எனது வேண்டுதல் எல்லாம் விஷ்ணுகிட்ட மட்டும் தான்'' என கண்கள் மல்கச் சொன்னான் மதுசூதனன். கதிரேசன் அதிர்ச்சி அடைந்தான். ''திருமால் முதற்கொண்டு அனைவராலும் தொழப்படுபவர் சிவன், நீ அறிஞ்சது இல்லையா'' என கதிரேசன் சொன்னதும் ''எழுதி வைச்சதெல்லாம் யார்னு போய் படி உனக்குப் புரியும் இனி அதைப்பத்தி பேச எனக்கு விருப்பமில்ல, நான் போறேன்'' என மதுசூதனன் விறுவிறுவென நடந்து சென்றான். கதிரேசன் மனம் சஞ்சலமானது.

வீட்டினை அடைந்தான் கதிரேசன். வயதானவரிடம் விசாரித்தான். நீலகண்டன், சிங்கமநல்லூர் பிறப்பிடம். மனைவி இல்லை. மகள் மட்டுமே உண்டு. திருமணமாகி மகன் பேரன் பேத்திகளுடன் சங்கரன்கோவிலில் வசித்து வருகிறார்கள் என சொன்னார். தன்னைப்பற்றி சொன்னான் கதிரேசன். அதனுடன் கல்லூரியில் நடந்த விசயத்தையும் மதுசூதனன் பற்றியும் சொன்னான்.

''அந்த காலேஜ் முதல்வரை எனக்கு நல்லாத் தெரியும், அவர் சொல்றதுல தப்பு இல்லை. ஆனா நான் நீ பாடக்கூடாதுனு சொல்லமாட்டேன். உன்னோட விருப்பம். அதுபோல மதுசூதனன் சொல்றதுலயும் தப்பு இல்லை. அது அவனோட விருப்பம். நான் பூஜை பண்ணப் போறேன், நீ படி'' என்றார் நீலகண்டன். பூஜையில் கலந்து கொள்வதாக சொன்னான் கதிரேசன். நீலகண்டன் புன்னகையுடன் அவனைப் பார்த்தார்.

(தொடரும்) 

2 comments:

Chitra said...

பூஜையில் கலந்து கொள்வதாக சொன்னான் கதிரேசன். நீலகண்டன் புன்னகையுடன் அவனைப் பார்த்தார்.

.... nice story.

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா.