Friday 15 January 2010

தாரவி - Kevin McCloud, London, Channel 4

தொலைகாட்சி பார்ப்பதென்றால் சில நேரங்களில் மட்டுமல்ல, பல நேரங்களில் சற்று ஏமாற்றமாக இருக்கும். தொலைகாட்சியில் இன்று என்ன ஒளிபரப்பு செய்கிறார்கள் என நாளிதழ்கள் மூலமும், இணையங்கள் மூலமும் அறிந்து கொள்ள வாய்ப்பு இருந்தாலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் பல விசயங்கள் தெரியாமலேப் போய்விடுவதுண்டு. இவ்வாறிருக்க நேற்று தாரவி பற்றி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்ததை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது.

இருபத்தி நான்கு வருடங்கள் இந்தியாவில் நெரிசலிலும், குப்பை கூளங்களிலும் வளர்ந்து திரிந்து வாழ்க்கை வாழ்ந்த விதம் தனை நினைத்தபோது கண்ணீர் கண்களில் நிறைந்தது. Slumdog Millionaire எனும் திரைப்படம் பார்த்தபோது மனதில் ஏதும் தோன்றவில்லை. அது ஒரு திரைப்படம் தானே என்கிற உணர்வுதான் மேலோங்கி இருந்தது. ஆனால் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்ட தாரவி மனதில் பல கேள்விகளை எழுப்பிச் சென்றது.




இந்தியாவில் இருந்தபோது 1994ல் மும்பை பகுதிக்கு கல்லூரியில் இருந்து கல்விச் சுற்றுலாவாக ஒரே ஒரு முறை சென்றதுண்டு. மாதுங்கா எனும் இடத்தில் ஏழு நாட்கள் தங்கி இருந்தோம். தாரவியில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள் என்று கேள்விபட்டதோடு சரி, தாரவியை நேரில் சென்று பார்த்ததில்லை.

கெவின் எனும் தொலைகாட்சி நிருபர் தாரவிக்கு இரண்டு வார பயணமாக சென்று அங்கே வாழ்க்கை முறையை பற்றி உலகுக்கு சொல்ல முற்பட்டிருக்கிறார். படம் எடுத்த விதம் நிதர்சனத்தைச் சொன்னாலும் மனதில் பெரிய வலியை ஏற்படுத்தியது.

நினைத்த இடத்தில் மலம் கழிக்கும் சிறுவர்கள், மலம் கழித்த இடத்தின் அருகிலேயே விளையாடும் அதே சிறுவர்கள், குப்பை கூளங்களில் கட்டப்பட்ட வீடுகளா எனும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் குப்பையும், கழிவுகளும் நிறைந்து காணப்பட்டது. குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத ஆனால் ஜன நெருக்கடி அதிக இருக்கும் இந்த இடம் தான் ஆசியாவிலேயே முதன்மை இடமாக கருதப்படுகிறது.

ராஜேஷ் என்பவர் கெவினுக்கு இடங்களை சுற்றிக் காட்டுகிறார். கெவினுக்கு தலை சுற்றுகிறது, எப்படி இந்த இடத்தில் இவர்கள் வாழ முடிகிறதென. ராஜேஷ் வீட்டில் ஒரு நாள் தங்கிய கெவினுக்கு காலை எழுந்ததும் தண்ணீருக்கு கஷ்டப்படும் மனித வாழ்க்கை ஆச்சரியம் தருகிறது. சாலைகள் கழிவுகள் செல்ல இடமின்றி நிரம்பி இருப்பதை கண்டதும் அவரின் முகபாவனைகள் ஏனடா வந்தோம் என்பது போன்றே இருந்தது. மேலும் ஒரு விசயம் செய்வதற்கு எத்தனை சிரமங்கள் என எவரும் அவருக்கு உதவி செய்யாமல் காக்க வைப்பதை நினைக்கும்போது அவருக்கு வெறுப்பு வருகிறது.

இத்தனைக்கும் நடுவில் 85 சதவிகிதம் தாரவியில் உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள் எனவும், பல கோடி ரூபாய்களுக்கு வியாபாரம் நடக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டதைவிட, எந்த பொருளும் தாரவியில் இருந்து தயாராகிறது என்பதை குறிப்பிடாமலே பொருள்கள் விற்பனைக்கு செல்கிறது என்பதை அறிந்த போது உலக மக்களின் சுகாதாரத்திற்கும் இந்த மக்கள் விலை பேசுகிறார்கள்தான்.

பலர் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள், இருப்பினும் அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்கிறார் கெவின். ஒரே வீட்டில் இருபத்தியொரு பேர் வசிப்பதை அறிந்து பிரமிப்பு அடைகிறார். பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் வீட்டில் தங்கும் அவர், அங்கே எலித் தொல்லையால் அந்த இரவு உறங்க முடியாமல் தவிக்கிறார்.

இத்தனை நெருக்கமாக வாழும் இவர்கள் எப்படி தாம்பத்ய உறவு கொள்கிறார்கள் என்கிற பொல்லாத யோச்னையும் வந்து சேர்கிறது கெவினுக்கு, அதையும் கேட்டு வைத்திட, விடுதிகளில் வைத்துக்கொள்வோம் என்கிறார் ஒருவர். வாழ்க்கையின் அடிநிலையில் இருக்கும் மனிதர்களின் உணர்வுகள் மேல்தட்டு மனிதர்களுக்கு எப்போதுமே புரியப் போவதில்லை.

அரசுக்கு வரி செலுத்தாமல் பல கோடி வியாபாரம் நடக்கும் இந்த பகுதியானது கெவினுக்கு புதிதாக இருந்ததில் ஆச்சரியமில்லை. உழைப்பாளிகளில் சிறுவர்களும் அடக்கம், அதுவும் தகுந்த பாதுகாப்பில்லாமல் உழைப்பவர்கள் கண்டு ஆடித்தான் போகிறார் கெவின்.

அடிப்படை வசதிகள் இல்லாது இருப்பினும் சந்தோசமாக வாழ்கிறார்கள், கொஞ்சம் கூட சுகாதரம் இல்லை இருப்பினும் சந்தோசமாக வாழ்கிறார்கள் என கெவினின் கண்ணுக்கு தெரிகிறது. மேலும் இங்கு குற்றங்கள் மிகவும் குறைவாகவே நடக்கிறதாம். ஒற்றுமையாக அனைவரும் இருப்பதை கண்டு இங்கிலாந்தினை குறைபட்டு கொள்கிறார் கெவின். ஒருவர் வீட்டினுள் இறந்தால் மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் இறந்தாரா, இருக்கிறாரா என்பது கூட இங்கிலாந்தில் வெளித் தெரியாமல் போக வாய்ப்புண்டு, ஆனால் தாரவியில் அப்படியில்லை என்கிறார்.

ஜன நெருக்கடியான ஒரு தெருவில் திடீரென பலர் கூடி தொழுகை நடத்துகிறார்கள். இருபது நிமிட தொழுகை மட்டுமே. பின்னர் அனைவரும் கலைந்து போய்விடுகிறார்கள். அத்தனை நெருக்கடியிலும் இறைவனை தொழும் நம்பிக்கை பிரமிப்பாக இருக்கிறது கெவினுக்கு. தாரவியில் நடக்கும் ஒரு விழா காட்டுகிறார், அங்கே தரப்படும் உணவினை சாப்பிட யோசிக்கிறார் கெவின். எத்தனை பேர் கைபட்டதோ என மனம் வெதும்புகிறார்.

தாரவியில் வாழ்பவர்கள் அனைவருமே குற்றவாளிகள் போல் தான் என் கண்களுக்குத் தெரிந்தார்கள். இயற்கையை சீரழிக்கும் குற்றவாளிகள், தங்கள் உரிமைகளை பறிகொடுத்துத் தவிக்கும் குற்றவாளிகள்.

இத்தனை சந்தோசம் இருந்தும், உழைப்பு இருந்தும் குப்பைகளை அகற்றி இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளக் கூடாதா என இங்கு வாழும் மக்களை ஏக்கத்துடன் எனது கண்களும் பார்த்துத் தவித்தது. இந்த இடமானது முற்றிலுமாக மாற்றப்பட்டு சகல வசதிகளுடன் உருவாக்கப்படும் திட்டம் இருப்பினும், இங்கே வசிப்பவர்களுக்கு இடமே இல்லாமல் செய்யும் திட்டம் என்பதால் இப்படியே இங்கேயே வாழ்கிறோம் என இருக்கும் இவர்களை காணும்போது கவலையாகத்தான் இருந்தது.

சுகாதாரம்? எனது சிறு வயது காலங்கள் நினைவுக்கு வந்தது. வீட்டின் முன்புறத்திலோ, பின்புறத்திலோ மலமும், சிறுநீரும் கழித்த காலங்கள். இயற்கை உரம் என சொல்லி தோட்டங்களிலும், காடுகளிலும் மாட்டின் கழிவுகளோடு கழிந்த தருணங்கள். இப்பொழுது கூட பல கிராமங்கள் அப்படியேதான் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் எதுவுமில்லை. கழிவுகள் இருந்த இடத்திலிருந்து விளைந்ததையா சாப்பிட்டீர்கள் என என்னிடம் கேள்வி கேட்கபட்டபோது ஆம் என்று மட்டுமே சொல்ல முடிந்தது. எந்த ஒரு சுகாதாரத்தையும் பற்றியும் எண்ணத் தோன்றவில்லை.

சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வோ, அக்கறையோ கொஞ்சமும் நமது நாட்டில் செயல்பாட்டில் இல்லை. படித்தவர்களும் சரி, பாமர மக்களும் சரி எச்சில் துப்புவது, நினைத்த இடத்தில் குப்பை கொட்டுவது என கழிவுகளுடன் வாழப் பழகிக்கொண்டோம். இதில் தாரவி மட்டும் விதிவிலக்கா என்ன!



14 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

எல்லோருக்கும் சோம்பேறித்தனம் தான் மிஞ்சுகிறது .

தான் இருக்கும் இடத்தை மட்டுமே துப்புரவு செய்தாலே போதுமே

ஆனா யாரும் செய்ய மாட்டாங்க , நமக்கென்ன என்று இருந்தா ...

நல்ல அருமையான விமர்சனம் ராதாக்கிருஷ்ணன் சார் .

Chitra said...

அடிப்படை வசதிகள் இல்லாது இருப்பினும் சந்தோசமாக வாழ்கிறார்கள், கொஞ்சம் கூட சுகாதரம் இல்லை இருப்பினும் சந்தோசமாக வாழ்கிறார்கள் என கெவினின் கண்ணுக்கு தெரிகிறது. மேலும் இங்கு குற்றங்கள் மிகவும் குறைவாகவே நடக்கிறதாம். ஒற்றுமையாக அனைவரும் இருப்பதை கண்டு இங்கிலாந்தினை குறைபட்டு கொள்கிறார் கெவின். ....
............ஒவ்வொரு நிலையினரிடம் இருந்தும் கற்று கொள்ள எவ்வளவோ இருக்கிறது. நல்ல பதிவு.

Thekkikattan|தெகா said...

ம்ம்ம்... தங்களின் ஆதங்கம் புரிகிறது, வெ. இரா. நான் கவனித்திருக்கிறேன் நம்முடைய வீடுகளிலே ஒட்டடைகளோடும், ரேடியோ, டிவிக்களின் மீது படியும் தூசிகளோடும் மாதக் கணக்கில் வாழக் பழகிக் கொண்ட நமக்கு, பொது இடங்களில் சுகாதாரம் கருதி சுத்தம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை...

//அத்தனை நெருக்கடியிலும் இறைவனை தொழும் நம்பிக்கை பிரமிப்பாக இருக்கிறது கெவினுக்கு.//

சாதாரணமாக (பெரும்பான்மையில்) ஒரு மனிதனுக்கு எப்பொழுது இறைவன் தேவைப்படுகிறான், மிக்க சோதனைகளில் அல்லலுறும் பொழுதா அல்லது செல்வத்தில், மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் பொழுதா?

கிரி said...

தாராவி மக்களின் வாழ்க்கை ரொம்ப சோகமாக இருந்தாலும் அவர்கள் பற்றி செய்திகள் ரொம்ப சுவாராசியமா இருக்கு!

நம்மவர்கள் அங்கே சென்றாலே மிரண்டு விடுவார்கள் அப்படி இருக்கும் போது வெளிநாட்டினர்!... ரொம்ப கஷ்டம் தான்

பகிர்ந்தமைக்கு நன்றி

Radhakrishnan said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
எல்லோருக்கும் சோம்பேறித்தனம் தான் மிஞ்சுகிறது .

தான் இருக்கும் இடத்தை மட்டுமே துப்புரவு செய்தாலே போதுமே

ஆனா யாரும் செய்ய மாட்டாங்க , நமக்கென்ன என்று இருந்தா ...

நல்ல அருமையான விமர்சனம் ராதாக்கிருஷ்ணன் சார்//

மிகவும் சரியாகச் சொன்னீங்க. உடல், மனம், வீடு, நாடு எல்லாம் தூய்மையாக இருக்க சுறுசுறுப்பு மிகவும் அவசியம்.

Radhakrishnan said...

//வானம்பாடிகள் said...
நல்ல பகிர்வு.//

மிக்க நன்றி ஐயா.


//Chitra said...
ஒவ்வொரு நிலையினரிடம் இருந்தும் கற்று கொள்ள எவ்வளவோ இருக்கிறது. நல்ல பதிவு.//

ஆம், கற்றுக்கொள்ள வேண்டியது என்னவோ அதிகமே சித்ரா அவர்களே.

Thekkikattan|தெகா said...

வெ. இரா, உங்களுக்கான பதில் ரெடி இங்கே... கொஞ்சம் நேரமிருக்கும் பொழுது எட்டிப் பாருங்க காதலர்களா? தியாகிகளா?

vignaani said...

தாராவியில் வசிப்பவர்கள் இந்த எல்லா சிரமங்களையும் சகித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது ஒரு விதத்தில் நல்லதே. இன்னொரு விதத்தில் பார்த்தால், தம் சுற்றுப் புறத்தை கொஞ்சம் மேம்படுத்த கொஞ்சம் கூட முயலாலாதது அடிப்படையிலேயே அவர்களுக்கு சுகாதாரத்தில் சிறிதேனும் கவனம் இல்லாதாதை சுட்டுகிறது. இது தமிழர்களுக்கே இந்த விஷயத்தில் அக்கறை இல்லையோ என எண்ண வைக்கிறது. கண்ட இடத்திலே சிறு நீர் கழிப்பதில் சராசரி இந்தியனை விட தமிழர்கள் மோசமாக உள்ளனர் எனவே எண்ண வைக்கிறது. கட்டணக் கழிப்பறைகள் பராமரிப்பு நான் கண்ட பெரு நகரங்களிலே மோசமாக இருப்பது சென்னையும் தமிழ் நாட்டின் மற்ற நகரங்களும் ஆகும.
கல்வி அறிவிலும், தொழில் வளர்ச்சி இன்ன பிற விஷயங்களிலும், இந்தியாவின் முதன்மை மாநிலம் . இந்த விஷயத்தில் கெட்ட பெயர் பெறுவது மாற வேண்டும்.
சராசரி தமிழ் நாட்டவன், கட்டணக் கழிப்பறைகளை சரியாக பராமரிப்பு செய்ய வைக்க வேண்டும். இந்தியா முழுதும் நம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், நம் ஊர் நிலையைக் கண்டு மனம் வெதும்ப வேண்டாமா? நடவடிக்கைகள் எடுக்க வேண்டாமா? இது என் ஆதங்கம்.

Radhakrishnan said...

//Thekkikattan|தெகா said...
ம்ம்ம்... தங்களின் ஆதங்கம் புரிகிறது, வெ. இரா. நான் கவனித்திருக்கிறேன் நம்முடைய வீடுகளிலே ஒட்டடைகளோடும், ரேடியோ, டிவிக்களின் மீது படியும் தூசிகளோடும் மாதக் கணக்கில் வாழக் பழகிக் கொண்ட நமக்கு, பொது இடங்களில் சுகாதாரம் கருதி சுத்தம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை...//

அழகிய கருத்துகள். சுத்தம் நம்மிலிருந்து, நம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். நிச்சயம் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்.

Radhakrishnan said...

//Thekkikattan|தெகா said...

சாதாரணமாக (பெரும்பான்மையில்) ஒரு மனிதனுக்கு எப்பொழுது இறைவன் தேவைப்படுகிறான், மிக்க சோதனைகளில் அல்லலுறும் பொழுதா அல்லது செல்வத்தில், மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் பொழுதா?//

சாதாரணமாக ஒரு மனிதனுக்கு இறைவன் எல்லா நேரங்களிலும் தேவைப்படுகிறான். அல்லல் தீர வேண்டியும், இருக்கும் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியும் இறைவன் தேவைப்படுகிறான்.

மேம்போக்காக மகிழ்ச்சியில் திளைத்திருப்பவருக்கு இறைவனின் அவசியம் தேவையில்லாதது போலத் தெரிந்தாலும் அந்த மனிதனுக்கும் இறைவனின் தேவையிருக்கிறது.

அது ஏன், இறைவன் இல்லை எனச் சொல்பவர்களுக்கு கூட இறைவன் இல்லை எனச் சொல்ல இறைவனின் தேவை இருக்கிறது.

Radhakrishnan said...

//கிரி said...
தாராவி மக்களின் வாழ்க்கை ரொம்ப சோகமாக இருந்தாலும் அவர்கள் பற்றி செய்திகள் ரொம்ப சுவாராசியமா இருக்கு!

நம்மவர்கள் அங்கே சென்றாலே மிரண்டு விடுவார்கள் அப்படி இருக்கும் போது வெளிநாட்டினர்!... ரொம்ப கஷ்டம் தான்

பகிர்ந்தமைக்கு நன்றி//

ஆமாம் கிரி அவர்களே, ஆனாலும் கெவின் சமாளித்துவிட்டார்.

சுந்தரா said...

படிக்கப்படிக்க கஷ்டம்தான் மிஞ்சுது ரங்கன்.

நம்மவர்கள் சுத்தம் சுகாதாரம் பற்றிய விஷயங்களில் அவ்வளவு அக்கறைப்படுவதில்லைதான்...

மக்களாக முயற்சியெடுத்தால் நிலைமை மாறலாம். ஆனால், அங்கேயும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டைபோடுகிறார்களோ என்னவோ?

Radhakrishnan said...

//vignaani said...
தாராவியில் வசிப்பவர்கள் இந்த எல்லா சிரமங்களையும் சகித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது ஒரு விதத்தில் நல்லதே. இன்னொரு விதத்தில் பார்த்தால், தம் சுற்றுப் புறத்தை கொஞ்சம் மேம்படுத்த கொஞ்சம் கூட முயலாலாதது அடிப்படையிலேயே அவர்களுக்கு சுகாதாரத்தில் சிறிதேனும் கவனம் இல்லாதாதை சுட்டுகிறது. இது தமிழர்களுக்கே இந்த விஷயத்தில் அக்கறை இல்லையோ என எண்ண வைக்கிறது. கண்ட இடத்திலே சிறு நீர் கழிப்பதில் சராசரி இந்தியனை விட தமிழர்கள் மோசமாக உள்ளனர் எனவே எண்ண வைக்கிறது. கட்டணக் கழிப்பறைகள் பராமரிப்பு நான் கண்ட பெரு நகரங்களிலே மோசமாக இருப்பது சென்னையும் தமிழ் நாட்டின் மற்ற நகரங்களும் ஆகும.
கல்வி அறிவிலும், தொழில் வளர்ச்சி இன்ன பிற விஷயங்களிலும், இந்தியாவின் முதன்மை மாநிலம் . இந்த விஷயத்தில் கெட்ட பெயர் பெறுவது மாற வேண்டும்.
சராசரி தமிழ் நாட்டவன், கட்டணக் கழிப்பறைகளை சரியாக பராமரிப்பு செய்ய வைக்க வேண்டும். இந்தியா முழுதும் நம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், நம் ஊர் நிலையைக் கண்டு மனம் வெதும்ப வேண்டாமா? நடவடிக்கைகள் எடுக்க வேண்டாமா? இது என் ஆதங்கம்.//

மக்களும் தங்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். பொது மக்களின் செயல்பாட்டில் ஒரு புது யுகம் அமைத்திடலாம். அரசியல்வாதிகள் அதைக் கண்டு பழகிக் கொள்வார்கள். நாம் தான் தொடங்கி வைக்க வேண்டும் விஞ்ஞானி அவர்களே.

Radhakrishnan said...

//சுந்தரா said...
படிக்கப்படிக்க கஷ்டம்தான் மிஞ்சுது ரங்கன்.

நம்மவர்கள் சுத்தம் சுகாதாரம் பற்றிய விஷயங்களில் அவ்வளவு அக்கறைப்படுவதில்லைதான்...

மக்களாக முயற்சியெடுத்தால் நிலைமை மாறலாம். ஆனால், அங்கேயும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டைபோடுகிறார்களோ என்னவோ?//

:) அரசியல்வாதிகள் மக்களை கண்டு மனம் மாறும் வகையில் செய்தல் அவசியம் சகோதரி.