Thursday 7 January 2010

உண்மை வேறு நம்பிக்கை வேறு

ஆன்மிகப் பாடல்கள் என்றால் மிகவும் விருப்பமாகவே பலருக்கும் இருக்கும். இறைவனை நினைத்து எழுதப்பட்ட பாடல்கள் என்றே மனம் நினைத்து நினைத்து பெருமிதம் கொள்ளும். பலரின் கண்களும் நீர் கோர்த்துக் கொண்ட தருணங்களும் அதிகம் உண்டு. மனதில் இருக்கும் மென்மை உணர்வினைத் தழுவிச் சென்ற ஆன்மிக பாடல்களைக் கேட்கும்போது பலமுறை யோசித்தது உண்டு. ஏனிந்த நிலை என?

அமைதியான சூழ்நிலையை விரும்பும் உயிரினங்கள் மிகவும் அதிகம் உலகில் உண்டு என எடுத்துக் கொள்ளலாம். அமைதியாக இருக்கும்போது நமக்கு ஆனந்தமாக இருக்கும். அதே வேளையில் விழாக்காலங்களில் ஏற்படும் சப்தங்களும் நமக்கு ஆனந்தமாக இருக்கும். ஆனால் இதே சப்தமானது சண்டைகளின் போது ஏற்பட்டால் நமது ஆனந்தம் தொலைந்து போய்விடும். இப்படி பலவிதமான உணர்வுகளை நம்மிடம் நாம் ஏற்படுத்தியதன் நோக்கம் எதுவென ஆராய்ந்து கொண்டிருக்க ஆவல் அதிகமாகவே இருந்தது. இதில் எப்படி இறை உணர்வை மட்டும் தனிமைப்படுத்திப் பார்ப்பது எனப் புரியாமலேதான் இருக்கிறது.

ஒரு விசயத்தை நமக்குப் பிடித்தமானவர் சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், நமக்குப் பிடித்தமில்லாதவர் சொல்லும்போது அதை ஒதுக்கித் தள்ளும் பக்குவமும் நமக்குள் ஏற்பட்டது எவ்வாறு எனச் சிந்தித்தபோது பல விசயங்கள் புரியப்படாமலே இருந்து ஒதுங்கிப் போவதுண்டு. இதற்கெல்லாம் ராசிகளும், நட்சத்திரங்களும் கூட கூட்டுச் சேர்ந்து கொண்ட விதம்தனை கூட படித்துப் பார்த்து அறிந்து கொள்ள அவசியம் வந்ததுண்டு.

முதலில் சொன்ன பாடலையே சிந்தித்துப் பார்க்கலாம். காதலன் காதலியை நோக்கி எழுதும் பாடல். காதலி காதலனை நினைத்து எழுதும் பாடல். இதே பாடலை இறைவனுக்கும் இணைத்துப் பார்க்கலாம். மிகவும் பொருந்தித்தான் போகிற‌து. யோசித்தேன், மனிதர்கள் செய்யும் செயல்களை நாம் எதனுடனும் இணைத்துப் பார்த்தாலும் அது போலவேத் தோற்றம் எடுத்துக்கொள்ளும்படி நமக்குள் ஒரு வித எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்த நிலையை கண்டு பிரமிப்பு ஏற்பட்டது.

ஒரு விசயத்தை எப்படி நீ பார்க்க நினைக்கிறாயோ அப்படியே அந்த விசயம் தன்னை மாற்றி அமைத்துக்கொள்கிறது எனச் சொல்ல இயலுமா? அந்த விசயம் மாற்றம் கொள்ளவில்லை, ஆனால் அந்த விசயத்தை மாற்றியமைத்துக் கொண்டது நமது எண்ணம். இதற்கு மூல காரணன் யார்? நம்பிக்கை.

உண்மை வேறு, நம்பிக்கை வேறு என எவரேனும் பிரித்துப் பொருளுணர்ந்து கொள்ள முனைந்திருப்போமானால் இன்று உலகில் பல்வேறு சர்ச்சைகள் இருந்திட நியாயமில்லை. ஒருமுறை இருவரிடம் நடந்த ஒரு உரையாடலைக் கேட்க நேர்ந்தது.

'கடவுளிடம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?'

'இல்லை'

'அப்படியெனில் கடவுளிடம் நம்பிக்கை இல்லையா?'

'இல்லை'

'நீங்கள் கடவுளை நம்பவில்லை எனலாமா?'

'அப்படியே சொல்லலாம்'

'நீங்கள் மிகவும் சிறந்த ஆன்மிகவாதி என்று கருதியது என் தவறா?'

'அதுகுறித்து என்னால் எதுவும் சொல்ல இயலாது'

'கடவுள் இருக்கிறாரா, இல்லையா?'

'இருக்கிறார்'

'பின்னர் ஏன் கடவுள் மீது நம்பிக்கை இல்லை எனச் சொல்கிறீர்கள்?'

'இருக்கிறது எனச் சொல்வதற்கு நம்பிக்கையின் தேவை அவசியம் எனில் அங்கே இருக்கிறது எனச் சொல்லப்படுவதன் அர்த்தம் சந்தேகத்துக்கு உட்படுகிறது'

'எனக்குப் புரியவில்லையே, கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்கிறீர்கள், ஆனால் கடவுள் இருக்கிறார் என்கிறீர்கள்'

'ஒன்றை நம்புவது வேறு, ஒன்று இருக்கிறது என அறிந்துணர்வது வேறு. நாம் நம்பும் விசயத்தை பிறர் நம்பும்படி நாம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, அதன் காரணமாக நம்பிக்கையில்லாத் தன்மை ஏற்பட வாய்ப்பு அமைத்து தந்துவிடுகிறோம்'

'என்னதான் சொல்கிறீர்கள், கொஞ்சமும் விளங்கவில்லை, கடவுளை நம்புகிறீர்களா, இல்லையா?'

'கடவுளை நான் நம்பவில்லை, ஆனால் கடவுள் இருப்பதாக உணர்கிறேன்'

'புரியும்படிச் சொல்லுங்கள், என்னை நீங்கள் நம்புகிறீர்களா?'

'இல்லை'

'எனக்குப் புரிந்துவிட்டது ஐயா, நீங்கள் மிகச் சிறந்த ஆன்மிகவாதி'

இந்த உரையாடல் முடிந்ததும் எனக்குள் ஒரு பாடல் ஒலித்தது. கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...

நானும் சிந்தித்துப் பார்த்தேன், நம்பிக்கை இல்லாத பட்சத்தில் இறைவன் இல்லாது ஒழியக்கூடும் அல்லவா? அப்போதே மனதுக்குள் ஒரு எண்ணம் எழுந்தது. நம்பிக்கை இல்லாத போதிலும் அவன் இருந்து கொண்டுதானிருக்கிறான் என்பதை எவரையும் நான் நம்ப வைக்கவேண்டிய அவசியம் எனக்கு ஒருபோதும் ஏற்படப் போவ‌தில்லை.

அது இருக்கட்டும், நம்பிக்கையினால் மட்டுமா இறைவன் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்?

28 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நம்பிக்கை தான் வாழ்க்கை

Chitra said...

கடவுள் மனிதனை படைத்தார் - பலரின் நம்பிக்கை.
மனிதன் இறைவனை படைத்தான் - சிலரின் நம்பிக்கை.
இந்த நம்பிக்கைகளில் மட்டும் இறைவனும் இருப்பதில்லை - மனிதனும் இருப்பதில்லை. அதற்கும் ஆழமாய் இன்னொமொரு பரிமாணம்.
நல்ல இடுகை.

கோவி.கண்ணன் said...

இருக்கு என்று நம்புவது தவறே இல்லை. ஒருவர் எதை நம்புவது என்பது அவரது உரிமை. ஆனால் நம்பிக்கைகள் பிறரிடம் வலியுறுத்தப்படும் போது அந்த நம்பிக்கை குறித்த தரவுகள், உண்மைகளை கேள்வி கேட்கும் உரிமை கேட்பவர்களுக்கு உண்டு.

Vidhoosh said...

:) solluvatharkku yethuvume illai. :) super sir.
-vidhya

கிருஷ்ண மூர்த்தி S said...

நம்பிக்கை ஒரு தொடக்கப் புள்ளிதான்! அந்தத் தொடக்கப் புள்ளியில் இருந்து நீங்கள் எப்படிப் பயணிக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத் தான், உணர்வது என்ற அனுபவம் வரும். உணர்வது உறுதியாகும் பொது, உண்மையாகவும் நிற்கும்.

இங்கே நம்பிக்கைகளோடு நின்று விடுபவர்களும், வெறுமே அதைக் கேள்விக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுமாகத் தான் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் தாண்டிப் போகும்போது தான், அடுத்த கட்டம் என்ன என்பதே தெரிய வரும்.

Radhakrishnan said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நம்பிக்கை தான் வாழ்க்கை//

நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம் என்பதும் இதில் அடங்கி இருக்கிறதுதானே ஐயா. மிக்க நன்றி.

Radhakrishnan said...

//Chitra said...
கடவுள் மனிதனை படைத்தார் - பலரின் நம்பிக்கை.
மனிதன் இறைவனை படைத்தான் - சிலரின் நம்பிக்கை.
இந்த நம்பிக்கைகளில் மட்டும் இறைவனும் இருப்பதில்லை - மனிதனும் இருப்பதில்லை. அதற்கும் ஆழமாய் இன்னொமொரு பரிமாணம்.
நல்ல இடுகை.//

மிக்க நன்றி சகோதரி.

பல பரிமாணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மை அது ஒன்றாகவே இருக்கிறது.

Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
இருக்கு என்று நம்புவது தவறே இல்லை. ஒருவர் எதை நம்புவது என்பது அவரது உரிமை. ஆனால் நம்பிக்கைகள் பிறரிடம் வலியுறுத்தப்படும் போது அந்த நம்பிக்கை குறித்த தரவுகள், உண்மைகளை கேள்வி கேட்கும் உரிமை கேட்பவர்களுக்கு உண்டு.//

நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பமே. கேள்விகள் கேட்கும் உரிமையானது அனைவருக்கும் உண்டுதான். நம்பிக்கைகள் மாறும், கேள்விகளுக்கு உட்படும், ஆனால் உண்மை ஒருபோதும் மாறாது. அது எப்போதும் உண்மையாகவே இருக்கும்.

காலத்திற்கு உட்பட்டது எனினும் சரி, காலத்துக்கு அப்பாற்பட்டது எனினும் சரி உண்மை அது எப்போதும் உண்மையே.

மிக்க நன்றி கோவியாரே.

Radhakrishnan said...

//Vidhoosh said...
:) solluvatharkku yethuvume illai. :) super sir.
-vidhya//

மிக்க நன்றி சகோதரி.

Radhakrishnan said...

//கிருஷ்ணமூர்த்தி said...
நம்பிக்கை ஒரு தொடக்கப் புள்ளிதான்! அந்தத் தொடக்கப் புள்ளியில் இருந்து நீங்கள் எப்படிப் பயணிக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத் தான், உணர்வது என்ற அனுபவம் வரும். உணர்வது உறுதியாகும் பொது, உண்மையாகவும் நிற்கும்.

இங்கே நம்பிக்கைகளோடு நின்று விடுபவர்களும், வெறுமே அதைக் கேள்விக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுமாகத் தான் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் தாண்டிப் போகும்போது தான், அடுத்த கட்டம் என்ன என்பதே தெரிய வரும்.//

இங்கேதான் அனைவருமேத் தவறிவிட்டோம். நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுவது என எடுத்துக்கொண்டால் பல தடுமாற்றங்கள் ஏற்படும்.

அதில் ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிலையானது ஏற்படுகிறது. அப்படிபட்ட முடிவுக்கெல்லாம் வராமல் உண்மையை அப்படியே அதன் நிலையிலேயே ஏற்றுக்கொள்வது என்பது மட்டுமே ஒரு நிலையான விசயமாக எப்போதும் நிலைதடுமாறாமல் இருக்கும். ஆனால் எது உண்மை என்பது எவரும் உண்மையிலேயே அறிந்திராத காரணத்தினால் நம்பிக்கைகள் பலம் பெற்றவையாகவே இருக்கின்றன. இதனால் உண்மையைத் தடுமாறச் செய்து கொண்டே இருக்கிறது.

மிக்க நன்றி ஐயா.

தமிழ் said...

/நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுவது என எடுத்துக்கொண்டால் பல தடுமாற்றங்கள் ஏற்படும்.

அதில் ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிலையானது ஏற்படுகிறது. அப்படிபட்ட முடிவுக்கெல்லாம் வராமல் உண்மையை அப்படியே அதன் நிலையிலேயே ஏற்றுக்கொள்வது என்பது மட்டுமே ஒரு நிலையான விசயமாக எப்போதும் நிலைதடுமாறாமல் இருக்கும். ஆனால் எது உண்மை என்பது எவரும் உண்மையிலேயே அறிந்திராத காரணத்தினால் நம்பிக்கைகள் பலம் பெற்றவையாகவே இருக்கின்றன. இதனால் உண்மையைத் தடுமாறச் செய்து கொண்டே இருக்கிறது. /
உண்மை தான்

தங்களின் இடுகையை வாசிக்கும் பொழுதும்,த‌ங்க‌ளின் பின்னோட்ட‌த்தைப் ப‌டிக்கும் பொழுதும்
நினைவிற்கு வருகிறது விசய குமார் அவர்களின் வரிகள்

நான் நாத்திகன் தான்
ஆனாலும் நம்புகிறேன்
க‌ட‌வுள் இருக்கிறார் என்ப‌தை...
உழைப்பாளியின் விய‌ர்வையில் ;
குழ‌ந்தையின் சிரிப்பில் !

நான் ஆத்திக‌ன் தான்
ஆனாலும் ந‌ம்ப‌ வில்லை
க‌ட‌வுள் இருக்கிறார் என்ப‌தை
அப‌லைக‌ளின் க‌ண்ணீரில் ;
ஏழையின் துய‌ர‌த்தில்

Radhakrishnan said...

நல்லதொரு கவிதையை பகிர்ந்தமைக்கு தங்களுக்கு நன்றி திகழ் அவர்களே.

வால்பையன் said...

//நம்பிக்கையினால் மட்டுமா இறைவன் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்?//

மிகச்சிறந்த வியாபாரத்தாலும் தான்!

Radhakrishnan said...

//வால்பையன் said...
//நம்பிக்கையினால் மட்டுமா இறைவன் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்?//

மிகச்சிறந்த வியாபாரத்தாலும் தான்!//

ஹா ஹா!

இறைவனுக்கு இரை தேவை இல்லை!

இறைவனுக்கு பணம் அத்தியாவசியம் இல்லை!

இறைவனுக்கு புகழ் தேவை இல்லை!

இறைவனுக்கு பெருமை அவசியம் இல்லை!

இப்படி எதுவுமே தேவை இல்லாத இறைவனுக்கு
வியாபார நோக்கம் என்று எதுவும் இல்லை.

இறைவன் இல்லை என்று கூக்குரலிடுபவர்களுக்கும், இறைவனே எல்லாம் என்று போற்றிக்கொண்டு இருப்பவர்களுக்கும் மேலே இல்லை என்று சொன்னதெல்லாம் இருக்கிறது என்றாகிறது என்பது அல்லவா உண்மை.

இப்பொழுது சொல்லுங்கள் மிகச் சிறந்த வியாபாரத்தால் வாழ்வது மனிதர்களா? இறைவனா?

வால்பையன் said...

//இப்பொழுது சொல்லுங்கள் மிகச் சிறந்த வியாபாரத்தால் வாழ்வது மனிதர்களா? இறைவனா? //

இறைவனை வளர்த்து கொண்டிருக்கும் மனிதன்!

Radhakrishnan said...

//இறைவனை வளர்த்து கொண்டிருக்கும் மனிதன்!//

ஆஹா, நன்றாக இருக்கிறது ஐயா.

இறைவனால் வளர்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் என்பதுதானே சரியாக இருக்கும்.

இறைவன், மனிதர்களால் ஒருபோதும் வளர்ச்சி அடைந்ததில்லை. மேலும் தன்னிடம் ஒரு வளர்ச்சியைக் காட்டி எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு எப்போதும் இல்லை.

காலம், காலமாக இறைவனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வாழ்ந்த மனிதர்களும், இறைவனை தனக்கு பாதகமாக பயன்படுத்தி வாழ்ந்த மனிதர்களும் மிக மிக அதிகம். ஆனால் இந்த மனிதர்களின் உதவியோ, எந்த உயிரினங்களின் உதவியோ இறைவன் எதிர்பார்த்து நின்றது இல்லை.

ஒன்று மட்டும் உண்மை, இந்த மனிதர்களால் இறைவன் ஒருபோதும் வளர்ந்ததில்லை, மாறாக மதங்கள் பெருகின, சமய சடங்குகள் அதிகமாகின என வேண்டுமெனில் கருத்தாக எடுத்துக் கொள்ளலாம்.

இறைத்தூதர், ஞானிகள், மகான்கள் என அறியப்பட்டோர்கள் எவரையும் இறைவன் ஒருபோதும் அனுப்பவும் இல்லை, வேத நூல்கள், சமய சடங்குகள் என எந்த இரகசியமும் எவரிடமும் இறைவன் சொல்லவும் இல்லை.

வால்பையன் said...

//இறைவனால் வளர்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் என்பதுதானே சரியாக இருக்கும்.//

உங்களுக்கு சரி என்பதால் எல்லாம் சரியாகி விடுமா?

//இறைவன், மனிதர்களால் ஒருபோதும் வளர்ச்சி அடைந்ததில்லை. மேலும் தன்னிடம் ஒரு வளர்ச்சியைக் காட்டி எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு எப்போதும் இல்லை.//

பிறகு எதற்கு இந்த உலகமும், மனிதர்களுக்கும் படைக்கப்பட்டார்களாம்? யாருக்கும் நிறுபிக வேண்டியதில்லை என்பதால் சும்மா அமுக்கிகிட்டு இருந்திருக்கலாம் தானே!?

//காலம், காலமாக இறைவனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வாழ்ந்த மனிதர்களும், இறைவனை தனக்கு பாதகமாக பயன்படுத்தி வாழ்ந்த மனிதர்களும் மிக மிக அதிகம்.//

காலம், காலமாக சாதகமும், பாதகமும் இருக்கு! ஆனா இறைவன் மட்டும் இல்லை.

//மனிதர்களால் இறைவன் ஒருபோதும் வளர்ந்ததில்லை, மாறாக மதங்கள் பெருகின, சமய சடங்குகள் அதிகமாகின//

ஏன் அதிகமாச்சு!? எவையெல்லாம் தவறான நம்பிக்கைகள், எவையெல்லாம் சரியான நம்பிக்கைகள், இறைவன் சரியானதை சொல்லியிருக்கலாமே! ஏன் அவருக்கு பேச வராதா!?

//இறைத்தூதர், ஞானிகள், மகான்கள் என அறியப்பட்டோர்கள் எவரையும் இறைவன் ஒருபோதும் அனுப்பவும் இல்லை, வேத நூல்கள், சமய சடங்குகள் என எந்த இரகசியமும் எவரிடமும் இறைவன் சொல்லவும் இல்லை.//

இறைவன் இருந்தா தானே அனுப்புறதுக்கு!

Radhakrishnan said...

//உங்களுக்கு சரி என்பதால் எல்லாம் சரியாகி விடுமா?//

எனக்கு நிச்சயம் சரியாகி விடும். மேலும் எல்லாம் சரியாகி விட வேண்டும் என்கிற நிதர்சனமற்ற எதிர்பார்ப்பு என்னிடம் இருப்பதில்லை ஐயா.

//பிறகு எதற்கு இந்த உலகமும், மனிதர்களுக்கும் படைக்கப்பட்டார்களாம்? யாருக்கும் நிறுபிக வேண்டியதில்லை என்பதால் சும்மா அமுக்கிகிட்டு இருந்திருக்கலாம் தானே!?//

ஹா ஹா! உலகமும், மனிதர்களும் உருவானதின் ரகசியம் இயற்கையிடம் இருக்கிறது. இறைவன் அமைதியுடனும், அடக்கத்துடனும் தான் எப்போதும் இருக்கிறார், நாம் தான் சற்று அதிகமாக அலட்டிக் கொண்டிருக்கிறோம்.

//காலம், காலமாக சாதகமும், பாதகமும் இருக்கு! ஆனா இறைவன் மட்டும் இல்லை.//

அந்த இறைவனுக்கு இது மிக மிக நன்றாகவே தெரியும் ஐயா.

//ஏன் அதிகமாச்சு!? எவையெல்லாம் தவறான நம்பிக்கைகள், எவையெல்லாம் சரியான நம்பிக்கைகள், இறைவன் சரியானதை சொல்லியிருக்கலாமே! ஏன் அவருக்கு பேச வராதா!?//

இறைவன் எதையும் சொல்லவில்லை என்கிறபோது, சரியானதைத்தான் சொல்லியிருக்க வேண்டும் என சொல்வது நியாயம் இல்லை என்றே படுகிறது ஐயா.

//இறைவன் இருந்தா தானே அனுப்புறதுக்கு!//

அனுப்பினால் தான் இறைவன் இருக்கிறார் என்கிற கட்டுபாடுகளும், நிச்சயம் பண்ணக்கூடியவைகளும் கூட இறைவனுக்கு கிடையாது. இறைவன் மிகவும் சுதந்திரமானவர்.

இறைவனை பற்றி குறை, குற்றம் சொல்லும் முன்னர் இவ்வுலகத்தில் மனிதர்களின் நடவடிக்கைகள் குறித்து சிந்தித்துக் கொள்வது அவசியம். நமது மனித இனத்தில் இருக்கும் வேறுபாடுகளுக்கெல்லாம் இறைவன் காரணமாகிவிட வேண்டும் என்கிற அவசியம் ஒருபோதும் இல்லை. மேலும் எதற்கெடுத்தாலும் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டிய நிலையும் இறைவனுக்கு இல்லை.

மனிதர்கள் வகுத்துக் கொண்ட விதிகளுக்கும், வினைகளுக்கும் இறைவன் ஒருபோதும் காரணன் ஆக வேண்டியதில்லை.

இறைவன் இல்லை என சொல்லும் நீங்கள் இவ்வுலகில் நடக்கும் விசயங்களுக்கு இறைவனை காரணனாக்கிடப் பார்ப்பது எவ்விதத்தில் நியாயம்?

வால்பையன் said...

//உலகமும், மனிதர்களும் உருவானதின் ரகசியம் இயற்கையிடம் இருக்கிறது. இறைவன் அமைதியுடனும், அடக்கத்துடனும் தான் எப்போதும் இருக்கிறார்,//

இயற்கை, இறைவன்!(இனாவுக்கு இனா! தமாஷா இருக்குல)

உலகத்தை படைத்தது இயற்கை என்றால் இறைவனை படைத்தது!?

வால்பையன் said...

//அந்த இறைவனுக்கு இது மிக மிக நன்றாகவே தெரியும் ஐயா.//

முதல்ல இந்த ஐயாவை தூக்கி குப்பையில போடுங்க! மரியாதை கொடுக்குறதால நான் கடவுள் இருக்குன்னுலாம் நம்ப போறதில்ல!

மிக மிக எது நன்றாக தெரியும்!?

உலகில் இத்தனை மதம் தோன்றும், கடவுள் பெயரால் எல்லாம் அடிச்சிகுவாங்க, மாத்தி மாத்தி குண்டு போட்டுக்குவாங்க, சர்வாதிகாரிகள் தோன்றுவாங்க, அப்பாவி மக்களை கொல்லுவாங்க, இன்னும் வேறென்னவெல்லாம் ”மிக மிக” நன்றாக தெரியும்! கேட்கும் போதே சிரிப்பா வருதுல்ல, நல்லா தெரிஞ்ச கடவுளுக்கு பாடை கட்டினா தான் சரியா வரும்னு நினைக்கிறேன்!

வால்பையன் said...

//இறைவன் எதையும் சொல்லவில்லை என்கிறபோது, சரியானதைத்தான் சொல்லியிருக்க வேண்டும் என சொல்வது நியாயம் இல்லை என்றே படுகிறது ஐயா. //

எதற்கும், இறைவனுக்கும் சம்பந்தமில்லை என்ற போது இறைவனின் வேலை தான் என்ன!?
சும்மா இருக்குற சொம்பைக்கு ஏன் இறைவன் என்று பெயர்!

வால்பையன் said...

//இறைவன் இல்லை என சொல்லும் நீங்கள் இவ்வுலகில் நடக்கும் விசயங்களுக்கு இறைவனை காரணனாக்கிடப் பார்ப்பது எவ்விதத்தில் நியாயம்? //

இருக்குன்னா பொறுப்பேத்துகனும், இல்லைனா கடவுள் இல்லைன்னு ஒத்துக்கனும்! எஹையும் செய்யாம இருக்குறதுக்கு பெயர் தான் இறைவனா!?,

எதையும் செய்ய முடியாதத போது, அது எதையும் செய்ய முடியாத சக்தியற்றதாய் உருவகபடுகிறது, சக்தியற்றதாய் என்கிற பொழுது அது எந்த வித செயலையும் செய்ய முடியாத ஒன்று, அது இல்லாத ஒன்று என்பதே!,

இருக்கு ஆனா எதையும் செய்யாது என்பதற்கும், இல்லை அதனால் எதையும் செய்ய முடியாது என்பதற்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்!

Radhakrishnan said...

//இயற்கை, இறைவன்!(இனாவுக்கு இனா! தமாஷா இருக்குல)

உலகத்தை படைத்தது இயற்கை என்றால் இறைவனை படைத்தது!?//

உலகம் உருவானதின் ரகசியம் தான் இயற்கையிடம் உள்ளது எனக் குறிப்பிட்டேன், இயற்கை உலகை படைத்ததாக குறிப்பிடவில்லை. இறைவன் இருப்பதன் இரகசியம் இயக்கத்தில் இருக்கிறது.


//முதல்ல இந்த ஐயாவை தூக்கி குப்பையில போடுங்க! மரியாதை கொடுக்குறதால நான் கடவுள் இருக்குன்னுலாம் நம்ப போறதில்ல!

மிக மிக எது நன்றாக தெரியும்!?

உலகில் இத்தனை மதம் தோன்றும், கடவுள் பெயரால் எல்லாம் அடிச்சிகுவாங்க, மாத்தி மாத்தி குண்டு போட்டுக்குவாங்க, சர்வாதிகாரிகள் தோன்றுவாங்க, அப்பாவி மக்களை கொல்லுவாங்க, இன்னும் வேறென்னவெல்லாம் ”மிக மிக” நன்றாக தெரியும்! கேட்கும் போதே சிரிப்பா வருதுல்ல, நல்லா தெரிஞ்ச கடவுளுக்கு பாடை கட்டினா தான் சரியா வரும்னு நினைக்கிறேன்!//

சக மனிதருக்கு மரியாதை தருவது என்பது கூட தவறாகபடும் பட்சத்திலும், தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் எனும் நிலை இருக்கும்போது உலகில் எந்த ஒரு நியாய தர்மங்களும் ஒரே கண்ணோட்டத்தில் நோக்கப்பட வாய்ப்பு இல்லை.

பதிவினைப் படித்தீர்களா? மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள் ஐயா. எவரையும் நம்ப வைக்க வேண்டிய அவசியம் எனக்கு ஒருபோதும் ஏற்படாது என்றே குறிப்பிட்டு இருக்கிறேன். நீங்கள் நம்பினால் தான் இறைவனின் இருப்பு பலப்படும் என்பதும், நான் நம்பாமல் போய்விட்டால் இறைவனின் இருப்பு பலவீனப்படும் என்பதும் வீணான கனவுகள். எப்போதும் இருப்பவர் இறைவன்.

மேலும் நீங்கள் குறிப்பிடும் விசயங்கள் எல்லாம் செய்யும்,செயல்படுத்தும் மனிதர்களிடம் விழிப்புணர்வு வந்தால் தான் எல்லாம் சரியாக வரும். இதற்கு இறைவன் பொறுப்பாக முடியாது. இறைவன் தன்னை விளம்பரபடுத்தச் சொல்லவில்லை, தனது பெயரால் காரியங்கள் புரியவும் தூண்டவில்லை.

//எதற்கும், இறைவனுக்கும் சம்பந்தமில்லை என்ற போது இறைவனின் வேலை தான் என்ன!?
சும்மா இருக்குற சொம்பைக்கு ஏன் இறைவன் என்று பெயர்!//

இறைவன் ஏன் சும்மா இருக்கக் கூடாதா? சும்மா இருக்கின்ற இறைவனை இத்தனை பாடுபடுத்தும் மனிதர்கள் மத்தியிலும் இறைவன் சும்மா இருப்பதே பெரிய விசயம். இறைவன் சும்மா மட்டும் இல்லை சுகமாகவே இருக்கிறார். இறைவனுக்கு முன்னர் குறிப்பிட்டது போல எந்த தேவையும் இல்லை, எனவே வேலை பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.


//இருக்குன்னா பொறுப்பேத்துகனும், இல்லைனா கடவுள் இல்லைன்னு ஒத்துக்கனும்! எஹையும் செய்யாம இருக்குறதுக்கு பெயர் தான் இறைவனா!?,

எதையும் செய்ய முடியாதத போது, அது எதையும் செய்ய முடியாத சக்தியற்றதாய் உருவகபடுகிறது, சக்தியற்றதாய் என்கிற பொழுது அது எந்த வித செயலையும் செய்ய முடியாத ஒன்று, அது இல்லாத ஒன்று என்பதே!,

இருக்கு ஆனா எதையும் செய்யாது என்பதற்கும், இல்லை அதனால் எதையும் செய்ய முடியாது என்பதற்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்!//

நிறையவே வித்தியாசம் இருக்கிறது. எனது செயல்களுக்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன். உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்று இருக்கிறீர்கள். சும்மா இருக்க வேண்டும் எனும் செயலுக்கு இறைவன் பொறுப்பேற்று இருக்கிறார். இதில் எங்கே தவறு வந்தது. இறைவன் தனது செயலில் ஒருபோதும் தவறியதில்லை.

மனிதர்கள் தங்கள் செயல்களில் தவறுகிறார்கள். அதனால் ஏற்படும் பிணக்குகளுக்கு இறைவன் பொறுப்பாளியாக முடியாது.

எதையும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என்பதற்கும், எதையும் செய்ய முடியாது என்பதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. இறைவனுக்கு எதனையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இதனால் இல்லை என்றோ, அதனால் இருக்கிறதோ என்றோ இறைவனை வகைப்படுத்த முடியாது. சுயநல நோக்கங்களுக்கு எல்லாம் இறைவன் கட்டுபடுபவர் அல்ல.

வால்பையன் said...

ரைட்டு விடுங்க!

சும்மா இருக்குற சொம்பைய பத்தி யாருக்கும் எந்த கவலையும் இல்லை!
அது இருந்தாலும் இல்லாட்டியும் எனக்கு ஒன்னு தான்! நான் பாட்டுக்கு என் வேலையை பார்க்கிறேன், நீங்க பாட்டுக்கு உங்க வேலையை பாருங்க. அடுத்த பதிவில் சந்திப்போம்!

Unknown said...

Pls read Vethaathiri Maharishi in Bio-Magnetism and Universal Magnatism you may get clarification of the above subject and details-Joe-Coimbatore.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஓசோ (கோவை ஜோ)

cheena (சீனா) said...

அன்பின் இராதாகிருஷ்ணன்

நலமா

நல்லதொரு இடுகை - ஆன்மீகச் சிந்தனை நன்று -ஆத்திகமும் நாத்திகமும் விவாதம் செய்வது தொடர்கதை - அதற்கு முடிவே இல்லை - தீர்ப்பும் வராது.

கோவியின் கொள்கை தான் சிறந்த கொள்கை

//இருக்கு என்று நம்புவது தவறே இல்லை. ஒருவர் எதை நம்புவது என்பது அவரது உரிமை. ஆனால் நம்பிக்கைகள் பிறரிடம் வலியுறுத்தப்படும் போது அந்த நம்பிக்கை குறித்த தரவுகள், உண்மைகளை கேள்வி கேட்கும் உரிமை கேட்பவர்களுக்கு உண்டு.//

வாலின் ஆழ்ந்த கொள்கைப் பற்று எனக்கு மிகவும் பிடிக்கும் - அது அவரது உரிமை. நமக்கு நம் கொள்கைகள் சிறந்தது - அவருக்கு அவர் கொள்கைகள் சிறந்தது - அவரது கொள்கைகள் நமக்கு வேண்டாம் - நம் கொள்கைகள் அவரிடம் வலியுறுத்த வேண்டாம்.

இறுதியில் அழகாக விலகுகிறார் வால்

//ரைட்டு விடுங்க!

சும்மா இருக்குற சொம்பைய பத்தி யாருக்கும் எந்த கவலையும் இல்லை!
அது இருந்தாலும் இல்லாட்டியும் எனக்கு ஒன்னு தான்! நான் பாட்டுக்கு என் வேலையை பார்க்கிறேன், நீங்க பாட்டுக்கு உங்க வேலையை பாருங்க. அடுத்த பதிவில் சந்திப்போம்! //

இதுதான் வேண்டும்.

அன்பின் வால்

ஐயா என்று அழைப்பது சகபதிவரைப் பற்றிய அறிமுகம் இல்லாதபோது - மரியாதை நிமித்தம் அழைப்பத்துதான் - தவறில்லை - ஆனால் ஐயா என்றழைத்து ஆத்திகத்தை வலியுறுத்துவதாக எப்படி ஒரு எண்ணம் வந்தது. - ஆத்திகமும் நாத்திகமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் - எண்ணங்கள் எதிர்த் திசையில் தான் பயணிக்கும் - முடிவில்லாத விவாதம்.

நல்வாழ்த்துகள் வால்

Radhakrishnan said...

நலமே ஐயா.

உண்மைதான் ஐயா, இங்கே நான் வாதங்கள் எனும் நோக்கத்தில் பார்க்காமல் என்னுள் இறைவன் பற்றிய சிந்தனைகளை அருண் அவர்களின் சிந்தனை மென்மேலும் சிந்திக்கத் தூண்டியது எனும் நோக்கத்தில் மட்டுமே தொடர்ந்து எழுதினேன். ஏனோ இப்படி அவருக்கு பதில் தொடர்ந்து எழுதியபோது மனம் மிகவும் வருந்திக்கொண்டே இருந்தது, எந்த சூழலிலும் அருண் அவர்களின் மனம் நோகும்படி எழுதிவிடக்கூடாதென.