Thursday 21 January 2010

கடவுள் யாருக்குச் சொந்தம்? திரு.சிவசக்திபாலன்

முழுவதும் படிக்க இங்கே அழுத்தவும். -----> கடவுள் யாருக்குச் சொந்தம்? - திரு சிவசக்திபாலன்.


1. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு அத்வானியாலோ, அப்துல் சமதினாலேயோ ஏற்படுத்தப் படுவது அல்ல.

பள்ளி வாசல் - சர்ச் - கோவில், இதில் எங்காவது நின்று கொண்டு வருவோர் போவோரிடம் "நீங்கள் ஏன் கடவுளை நம்புகின்றீர்கள்?" என்று கேட்டுப் பாருங்கள். நோய் நொடி, பொருளாதாரச் சிக்கல், திருமணப் பிரச்னை, பிள்ளைப் பேறு, குடும்பத் தகராறு, நம்பிக்கைத் துரோகம், விபத்துக்கள் என்று மனித வாழ்வின் துயரங்களில் தன்னுடைய பிரார்த்தனைகள் மூலம் கடவுளின் அற்புதங்களைக் கண்டதாய் ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாய்க் கூறுவதைக் கேட்கலாம்.

2. ஆதிசக்தி - அதிலிருந்து பிரம்மா - விஷ்ணு - சிவன், அவர்களுக்கு சரஸ்வதி - லட்சுமி - பார்வதி மற்றும் பிள்ளையார் - முருகன்.

இவர்களுக்குக் கீழே இந்திரன், நவக்கிரகங்கள், ஐம்பூதங்கள், இதற்கும் கீழே சொல்லப் போனால், குல தெய்வங்கள், மாரியம்மன்கள், எல்லையம்மன்கள், அய்யனார் கருப்பணன் போன்ற தெய்வங்கள்.

இது தான் ஆதியிலிருந்து இந்தியாவில் இருந்து வரும் தெய்வ நம்பிக்கை.

ரிக் வேதம், "ஏகம் சத்; விப்ர பஹூத வதந்தி" என்று எடுத்த எடுப்பிலேயே ஆணித்தரமாய்க் கூறுகின்றது. இதற்குக் கடவுள் ஒருவரே, ஞானிகள் அவரைப் பல பெயரிட்டு அழைக்கின்றார்கள். என்பது பொருள்.

இந்தப் பிரபஞ்சம் நாம் நினைக்கும்படி அவ்வளவு சிறியதல்ல. கடவுளின் சக்தி மனிதனின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மார்க் போட்டு அவனை நரகத்திலோ, சொர்க்கத்திலோ தள்ளும் வாத்தியார் வேலை போன்று அவ்வளவு சிறியதல்ல.

3. நியூட்டனின் விதி ஒவ்வொரு செயலும் தன் தன்மைகளுக்குச் சம விகிதத்தில் எதிர் செயலைத் தோற்றுவிக்கின்றது என்று கூறுகின்றது.

நாம் வாழ்கின்றோம், பேசுகின்றோம், பார்க்கின்றோம், கேட்கின்றோம், உண்ணுகின்றோம், உறங்குகின்றோம். எந்த நேரமும் ஏதாவது ஒரு செயலைச் செய்து கொண்டே இருக்கின்றோம். விஞ்ஞானம் கண்டறிந்த இயற்கையின் விதிப்படி, நமது ஒவ்வொரு செயலும் தன் தன்மைகளுக்குச் சமமான எதிர் செயலை ஏற்படுத்தியாக வேண்டும். இல்லையென்றால் விஞ்ஞான விதியே தப்பு என்றல்லவா ஆகி விடும்?

இதைத் தான் நம் முன்னோர்கள் நாம் செய்யும் பாவம் புண்ணியம், அதற்குரிய பலனை நாம் அனுபவிப்போம் என்று கூறியுள்ளார்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

4. இந்தக் கடவுள் எங்கே இருக்கின்றார்?

கடவுள் ஏதோ மேக மண்டலத்துக்கு அப்பால் சொர்க்கத்தில் இருக்கிறார் என்றால் அதை நம்பி விடாதீர்கள். அதே போல் மாய மந்திரம் செய்பவன் தான் கடவுள் என்று யாரேனும் நினைத்தால் அதை மூட்டை கட்டி வைத்து விடுங்கள்.

பயிர் நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்தால் மாங்காய் கிடைக்கும். மந்திரத்தால் மாங்காய் வருவதில்லை.

இவ்வாறு கடவுளின் செயல்கள் அத்தனையும் நேர்த்தியாய் தீர்க்கமான செயல்பாடுகள் கொண்டிருப்பதால் கடவுளை விஞ்ஞான ரீதியாய் சுட்டிக் காட்ட முடியும். அது பாவச் செயலும் அல்ல.

5. யார் செய்த பாவமோ தெரியவில்லை, கடவுளைப் பற்றிய தெளிவான சிந்தனை மனித இனத்திற்கு ஏற்படவே இல்லை. ஒவ்வொருவரும் யானையைத் தடவிப் பார்த்த குருடர்களைப் போல தத்தம் கொள்கைகளே உண்மையானவை என்று எண்ணிக் கொள்கிறார்கள்.

இது விஞ்ஞான யுகம். நம் முன்னோர்கள்-ஞானிகள், கடவுளைப் பற்றிக் கூறிய அனைத்துத் தத்துவங்களையும், அவை எந்த மதத்துக் கொள்கையாய் இருப்பினும் விஞ்ஞான ரீதியாய் அலசி ஆராய்ந்து கடவுளின் தன்மைகளைப் பற்றி ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். இப்படியாக இருப்பவர் தான் கடவுள் என்று அறுதியிட்டுக் கூற வேண்டும்.

கடவுள் ஆதி அந்தம் இல்லாதவர். இதில் எந்த மதத்திற்கும் பேதம் இல்லை. ஆக, ஆதி அந்தமில்லாத ஒன்றைக் கடவுள் என்று கூறுவது தவறில்லை தானே!.

6. ஒரு பொருள் திடப் பொருளாகவோ, திரவமாகவோ, வாயுவாகவோ இருப்பதற்குக் காரணம் அப்பொருளில் உள்ள அணுக்களின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபட்ட வேகமே காரணம். இன்று நம் உடலை ஒளியின் வேகத்தில் செலுத்தினால் நாம் நாமாக இருக்க மாட்டோம். நாமும் ஒளியாகவே மாறி விடுவோம். இதுவே சிருஷ்டி!

இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். மிரண்டு விடாதீர்கள். எப்படி நாம் ஒளியின் வேகத்தில் சென்றால் ஒளியாகவே மாறி விடுவோமோ, அதைப் போன்றே நம் இயக்கத்தின் வேகத்தை நிறுத்தினால் இந்த அண்டத்தில் இருக்கும் ஒரே ஒரு பொருளாகிய பரம்பொருளாகவே மாறி விடுவோம்.

இத்தத்துவம் விஞ்ஞான பூர்வமானது. சும்மா எடுத்துக்காட்டி எழுதப்பட்டதல்ல. வேதங்கள் எடுத்த எடுப்பிலேயே - 'தத்வமசி' - நீயே அது என்று கூறுகிறது.

7. மரத்தடியில் படுத்திருந்த நியூட்டன் நெற்றியில் ஒரு ஆப்பிள் விழுந்தது. இக்கனி ஏன் மேல் நோக்கிச் செல்லாது கீழ் நோக்கி வந்தது என்று நியூட்டன் தன்னுள் கேள்வியை எழுப்பினார். முடிவு புவி ஈர்ப்பு சக்தியை அறிந்தார்.

அவர் கேள்விக்குப் பதில் எங்கிருந்து கிடைத்தது? வானத்திலிருந்து விழுந்ததா? அல்லது மண்ணுக்குள்ளிருந்து முளைத்ததா? நியூட்டன் கேள்வியை யாரிடம் கேட்டார்? யார் அவருக்குப் பதில் அளித்தார்கள்? அவர் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். பதில் அவர் உள்மனதில் இருந்து வெளிப்பட்டது.

8. ஆசை, கோபம், அஹங்காரம் என்ற சிருஷ்டியின் அனைத்து உணர்ச்சி வெள்ளத்திலும் அடித்துச் செல்லப்படக்கூடிய சந்தர்ப்பம் அமையப் பெற்றுள்ள அத்தனை இல்லறத்தாருக்கும் எதிர் நீச்சல் போட ஒரு எளிய படகை கடவுள் அளித்துள்ளான். நம் உள்ளத்தில் எழும் எல்லா ஆசைகளையும் அறுத்தெறிய இறைவன் ஒரு இலகுவான ஆயுதம் அளித்துள்ளன்.

அது தான் அன்பு, தூய அன்பு, பரந்த அன்பு.
9. பயம் மனிதனின் அடிப்படை உணர்ச்சி.

இந்த பய உணர்ச்சி இருப்பதால் தான் நம்மில் பல பேர் நல்லவர்களாக இருக்கின்றார்கள். தாய் தந்தைக்குப் பயந்து கீழ்ப்படிபவன் பண்புள்ளவனாய் வளர்கின்றான். கணவனுக்குப் பயந்து நடக்கும் மனைவியும் மனைவிக்குப் பயந்து நடக்கும் கணவனும் நாகரீகமான சமுதாயத்தைப் படைக்கின்றார்கள்.

நான் சொல்லும் பயம் அன்பினால் ஏற்படும் பயம். தன் உயிர் மேல் ஆசை - உடைமைகள் மீது ஆசை - எதிர்பார்க்கும் சுகத்தின் மீது ஆசை ஆகியவற்றால் ஏற்படும் பயத்தைச் சொல்லவில்லை. அன்பினால் ஏற்படும் பயம் பக்தி எனப்படும். ஆசையால் ஏற்படும் பயம் அடிமைத்தனம் எனப்படும்.

பக்தி, தன்னுடைய இன்ப - துன்ப - சுக - துக்கம் அத்தனையையும் இழந்து நிற்கத்தயாராய் இருக்கும்.

இந்த பக்தி இருக்கிறதே! அப்பப்பா. இதைச் சொல்லியோ எழுதியோ புரிய வைக்க முடியாது. அனுபவிக்க வேண்டும்.

10. மூன்று ஆயுதங்களை இது வரை பார்த்தோம். மிஞ்சி இருப்பது ஒரே ஆயுதம். அதன் பெயர் தியானம். இதைத் தான் நம் பெரியவர்கள் ராஜயோகம் என்றார்கள்.

11. மதத் தீவிரவாதிகளே! உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். உங்கள் மனதை அடக்கி விட்டீர்களா? ஐம்புலன்களினால் ஏற்படும் ஆசையை வென்று விட்டீர்களா? அப்படியென்றால் மட்டுமே கடவுளைப் பற்றி பேசுங்கள். அவர்கள் தான் மக்களுக்கு ஆன்மீகத்தின் அற்புதத்தை உணர வைக்க முடியும்.

12. கடவுள் எண் குணங்களைக் கொண்டவர்.

ஆதி அந்தமில்லாதவர். எல்லையில்லாதவர். உருவமில்லாதவர். கால நேரங்களைக் கடந்தவர்.
அவரன்றி அண்டத்தில் வேறொன்றில்லை என்று வியாபித்திருப்பவர். பற்றற்றவர். இப்படித்தான் இருப்பார் என்று எடுத்துரைக்கத் தக்க தன்மைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிர்க்குணமாய் இருப்பவர். இடம், பொருள், காரண, காரியங்கள் இல்லாதவர்.

13. ஆதி சங்கரர் இங்கு அனைத்துமாய் காட்சியளிப்பது ஒரே பரம்பொருள் என்னும் அத்வைத கொள்கை கொண்டிருந்தார். ஸ்ரீராமானுஜரோ நாமெல்லாம் கடவுளின் அங்கங்கள் என்னும் விசிஷ்டாத்வைதக் கொள்கை கொண்டிருந்தார். மத்வாச்சாரியாரோ, கடவுள் வேறு, ஜீவன்கள் வேறு என்னும் த்வைதக் கருத்துகளைக் கொண்டிருந்தார். புத்தரோ, மறந்து கூட கடவுளைப் பற்றி பேசவில்லை. ஆனால் அவரையே கடவுளாக்கி நம்மவர்கள் கலவரங்களைச் செய்கிறார்கள்.

14. "பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதை நிறுத்திக் கொண்டால் அதன் நிலை என்னவாகும்?"

சுக்கு நூறாய் உடைந்து போகும்? சிதறிப் போகும்? சூரியனில் போய் விழும்? எரிந்து விடும்? என்றெல்லாம் பதில் தந்தால் பூஜ்ஜியம் தான் உங்களுக்கு மதிப்பெண் போட முடியும்.

பதில் என்னவென்றால், "பூமி மாயமாய் மறைந்து விடும்"

திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட சூட்சும நிலையை அடைந்து விடும்.

15. அணுவைப் பற்றி படித்திருப்பீர்கள். புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் பற்றியும் தெரிந்திருப்பீர்கள். இதில் புரோட்டான் பாசிட்டிவ் எனவும், நியூட்ரான் நியூட்ரல் எனவும், எலக்ட்ரான் நெகடிவ் எனவும் தெரிந்திருப்பீர்கள். அணுக்களின் இயக்கம் இந்த முப்பெரும் சக்திகளாலேயே ஏற்படுகின்றது. அணுக்களின் பிளவு, சிதைவு, கலவை, கோர்வை, மூலக்கூறுகளின் தோற்றம், கூட்டுப் பொருட்களின் வெளிப்பாடு, அவற்றின் மூலம் ஏற்படக்கூடிய பூமி, சூரியன், நட்சத்திரங்கள் அனைத்தும் இந்த முப்பெரும் சக்திகள் ஏற்படுத்தும் மின் காந்த அலைகளினால் மட்டுமே சாத்தியமாகின்றன.

இதைத்தான் மும்மூர்த்திகள் என்று கூறுகின்றேன். இவை முறையே, ஆக்கல், காத்தல், அழித்தல் பணிகளைச் செய்கின்றன.

16. ஒரே ஒரு செல்லிலிருந்து ஒரு மனிதனை உருவாக்கி விடலாம் என்று உங்களுக்குத் தெரியும்.

17. "துன்பத்திற்குக் காரணம் ஆசையே" - புத்தர்.

துன்பம் என்றால் என்ன?

ஒரு குழந்தை தான் ஆசையாய் விளையாடிய பலூன் உடைந்து விட்டால் அளவில்லா துன்பத்தை அடைகிறது. ஆனால் சில நேரங்கள் சிலர் பலூன் உடைப்பதையே விளையாட்டாய் விளையாடுகின்றனர்.

18. அரைகுறை டிரைவிங் படித்தவர்கள் காரினை தாறுமாறாய் ஓட்டி விபத்தில் சிக்கிக் கொள்வது போல் நமது குணாதிசயங்களை தாறுமாறாய் பயன்படுத்தி நாம் ஆபத்தை வரவழைக்கிறோம்.

எனவே, நமக்கு எவ்வாறு வாழ்வது என்பது கற்றுத் தரப்பட வேண்டியதாகும்.

எனவே, பிச்சை புகினும் கற்கை நன்றே.

19. மரணத்தின் மூலம் இந்த இயக்கமற்ற நிலையை சாதிக்க இயலுமா? இயலாது. ஏனென்றால் ஜனனம், மரணம் என்னும் இந்த இரண்டுமே இயக்க நிலையாகிய சிருஷ்டியின் இரு பெரும் அத்தியாயங்கள்.

விரிந்து பரந்த அண்டமே மிகச்சிறிய பிண்டமாய் இந்த மனிதனாயும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

அண்டத்தின் விளைவே பிண்டம். பிண்டத்தை விட்டு தாண்டிக் குதித்தாலே அண்டத்தையே தாண்டிக் குதித்தது தான்.

எனவே, ஐம்புலன்கள், மனம், புத்தி, நான் என்னும் அகங்காரம் இவற்றை எவ்வழியாயினும், எம்மதத்தின் மூலமாகவேனும் அடக்கி ஆண்டு ஜெயித்துக் காட்டுங்கள்.

மீண்டும் சொல்கிறேன். கடவுளை உணருங்கள். கடவுளாய் உணருங்கள்.

13 comments:

கோவி.கண்ணன் said...

Nice article. But some of the statements are not clear (for me) . Sorry for English typing.

Radhakrishnan said...

முழு கட்டுரையும் முத்தமிழ்மன்றத்தில் இணைப்பில் உள்ளது கோவியாரே.

ஒவ்வொரு பகுதியிலிருந்து சில சில வரிகளை மட்டும் இங்கே தொகுத்து வெளியிட்டேன்.

நீங்கள் சொல்வது போல இங்கே பல விசயங்கள் தெளிவாகப் புலப்படாதுதான், ஆனால் அவர் விளக்கங்களுடன் மிகவும் அழகாக எழுதி இருக்கிறார்.

பா.ராஜாராம் said...

கிரேட் ராதா மக்கா..

அருமையான பகிர்வு.

நன்றியும்.

Chitra said...

பகிர்வுக்கு நன்றி. கருத்துக்கள், யோசிக்க வைக்கும்.

ஹேமா said...

விஞ்ஞான விளக்கத்தோடு படிக்க சுவாரஸ்யமாய் இருக்கு.சிந்திக்கவும் வைக்குது.நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வுக்கு நன்றிங்க

Paleo God said...

எனவே, ஐம்புலன்கள், மனம், புத்தி, நான் என்னும் அகங்காரம் இவற்றை எவ்வழியாயினும், எம்மதத்தின் மூலமாகவேனும் அடக்கி ஆண்டு ஜெயித்துக் காட்டுங்கள்.//

மனிதனை தவிற மற்றெல்லா ஜீவராசிகளும் அதைத்தானே செய்து கொண்கிருக்கிறது நண்பரே..:)
எந்த மதமும் இல்லாமல்..

தமிழ் உதயம் said...

கடவுளைப் பற்றிய தெளிவான சிந்தனை மனித இனத்திற்கு ஏற்படவே இல்லை. ஒவ்வொருவரும் யானையைத் தடவிப் பார்த்த குருடர்களைப் போல தத்தம் கொள்கைகளே உண்மையானவை என்று எண்ணிக் கொள்கிறார்கள்.//////
இது தான் எல்லா அவலத்துக்கும் காரணம். பக்திக்கு பின்னால் ஒளிந்து இருப்பது தீவிரவாதம். மனிதர்களின் கண்டு பிடிப்புகளிலேயே அணுகுண்டை விட மோசமானதும், ஆபத்தானதும் மதம் தான்

Shakthiprabha (Prabha Sridhar) said...

//மீண்டும் சொல்கிறேன். கடவுளை உணருங்கள். கடவுளாய் உணருங்கள்.//

நச் ன்னு சொல்லிட்டீங்க. ரொம்ப அருமையான பதிவு.

Ashok D said...

:)

Radhakrishnan said...

மிக்க நன்றி பா.ரா

மிக்க நன்றி சித்ரா

மிக்க நன்றி ஹேமா

மிக்க நன்றி ஞானசேகரன்

மிக்க நன்றி சங்கர், நீங்கள் சொல்வதும் சிந்திக்க வேண்டியதே, ஒருவேளை நமக்குத் தெரியாத மதங்கள் ஏதேனும் மற்ற ஜீவராசிகள் வைத்திருக்குமோ?

மிக்க நன்றி தமிழ் உதயம், பக்திக்கு பின்னால் அல்ல தீவிரவாதம், மனிதர்களின் மனத்துக்குப் பின்னால்தான் தீவிரவாதம். மதம் மோசம் அல்ல, அதை தவறாகப் பயன்படுத்தும் மனிதர்களே மோசம்.

மிக்க நன்றி சக்திபிரபா

மிக்க நன்றி அசோக்.

cheena (சீனா) said...

அன்பின் இராதாகிருஷ்ணன்

அருமையான இடுகை - தேர்ந்தெடுத்த வரிகளைத் தொகுத்து வெளியிட்டமை நன்று

//யார் செய்த பாவமோ தெரியவில்லை, கடவுளைப் பற்றிய தெளிவான சிந்தனை மனித இனத்திற்கு ஏற்படவே இல்லை. ஒவ்வொருவரும் யானையைத் தடவிப் பார்த்த குருடர்களைப் போல தத்தம் கொள்கைகளே உண்மையானவை என்று எண்ணிக் கொள்கிறார்கள்.//

இதுதான் இன்றைய நிலை

//கடவுளை உணருங்கள். கடவுளாய் உணருங்கள்.//

நல்வாழ்த்துகள் இராதாகிருஷ்ணன்

Radhakrishnan said...

வணக்கங்களும், நன்றிகளும் ஐயா.