Wednesday 27 January 2010

காமம் - 1

1. எனக்கு மிகவும் பயமாகத்தான் இருக்கிறது. எங்கேனும் எவரேனும் இதனைப் படித்துவிட்டு என்ன நினைப்பார்களோ என்கிற அச்சம் அதிகமாகவே இருக்கிறது. இதனை எழுதி முடித்த பின்னர் ஒளித்து வைத்துவிடலாம் என்று மனதில் ஒரு எண்ணம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. எழுதியதை ஒளித்து வைத்து இருப்பேனோ எனும் ஒரு தேடல் உங்களுக்குள் இப்போதைக்கு எழுந்து இருக்கலாம்.

'காமம்' என்ற சொல் மிகவும் அருவெறுப்பாகவேத் தெரிகிறது. காமம் என்பதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் எனும் ஒரு தேடல் என்னுள் இருந்தது. இப்பொழுதெல்லாம் ஏதேனும் தேவையெனின் நூலகங்களுக்கோ, அறிவிற்சிறந்தவர்களைத் தேடியோ செல்ல வேண்டிய நிர்பந்தங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது ஒரு செளகரியமாக இருக்கிறது.

காமம் என்ற சொல்லுக்கு ஆசை, விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பங்களையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல் எனவும்  காமம் என்பதின் விளக்கம் காம சூத்திரத்தில்

'ஸ்ரோத்ரதவக்சக்ஷுர்ஜிஹ்வாக்ராணானாம் ஆத்மசம்யுக்தேன மனசாதிஷ்டிதானாம் ஷ்வேஷு ஷ்வேஷு ஆனுகூல்யதாம் ப்ரவருத்திம் காமம்'

எனும் சுலோகம் மூலம் சொல்லப்பட்டு அதற்கு விளக்கமாக காமம் என்பது ஐம்புலன்கள், மனம், ஆன்மா ஆகிய அனைத்தின் சங்கமத்தால் உணரக்கூடிய அனைத்து இன்பம் தருபவனவற்றையும் குறிக்கும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது கண்டு அதிசயமாக இருந்தது.

இந்த காமசூத்திரத்தை வாத்சயானர் எனும் முனிவர் எழுதினார் என பலமுறைக் கேள்விபட்டதுண்டு. அப்படி என்னதான் எழுதி இருக்கிறார் என இதுவரை படிக்கும் வாய்ப்புக் கிட்டியதில்லை. ஆனால் இந்த காமசூத்திரம் பலரால் பின்னர் தொகுத்து எழுதப்பட்டது என தமிழ்விக்கிபீடியா சொல்கிறது.

அதுவும் காமசூத்திரத்தின் முதல் வரிகள் 'தர்மார்த்த காமேப்யோ நம' அதாவது 'அறம் பொருள் இன்பமே போற்றி' எனவும் சொல்கிறதாம். அதோடு மட்டும் இல்லாமல் ஒரு மனிதன் ஒவ்வொரு பருவகாலத்திலும் என்ன என்ன செய்ய வேண்டும் எனச் சொல்வதாகவும் ஒரு சுலோகம் அமைந்திருக்கிறது.

அந்த சுலோகத்தின் விளக்கமாக குழந்தைப் பருவத்தில் கல்வி மற்றும் பொருள் எனவும், இளமைப் பருவத்தில் காமம் எனவும் முதுமைப்பருவத்தில் தர்மம் செய்யவும் அதனால் மோட்சம் கிட்டும் என்பது போல் எழுதப்பட்டு இருக்கிறது.

ஷாதாயுர் வை புருஷோ விபஜய காலம் அன்யோன்யானுபத்தாம் பரஸ்பரசஸ்யானுபகாடகம் த்ரிவர்கம் சேவேத
பால்யே வித்யாக்ரஹணாடின் அர்தான்
காமம் ச யௌவனே
ஸ்தாவிர தர்மம் மோக்ஷம் ச

காமம் என்றாலே தலைதெறிக்க ஓடிய காலங்களும், காமம் பற்றி பேசினால் அவர்கள் தவறானவர்கள் எனும் எண்ணம் கொண்ட அந்த சிறு வயது முதலான இளமைப் பருவ காலங்கள் நினைவுக்கு வந்தது. ஒரு அறிவியல் நோக்கோடுப் பார்க்க வேண்டும் எனும் நிர்பந்தமோ, சொந்த அறிவோ இருந்திருக்கவில்லை.

திருக்குறளில் எழுதப்பட்ட காமத்துப்பால் பக்கம் எட்டி கூடப் பார்ப்பதற்கு அத்தனை அசெளகரியமாக இருந்தது. அசிங்கமான வார்த்தைகளாகக் எனக்குக் காட்டப்பட்டவைகள் என எதையுமே எப்போதும் பிரயோகம் செய்தது இல்லை. அப்படி பேசினால் நான் மோசமானவன் எனும் எண்ணம் என்னுள் ஆழ வேரூன்றியிருந்தது. எழுத்து நாகரீகம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் எனக்கு, 'கொச்சையான வார்த்தைகள் எல்லாம் அவற்றை கொச்சையாகப் பார்ப்பதில்தான் இருக்கிறது என பலர் உரக்கச் சொல்லிக்கொள்வதோடு எழுத்திலும் வைக்கிறார்கள். ஆனால் எனக்குத்தான் அதிர்ச்சியாக இருக்கிறது.

திருப்பாவை எழுதிய ஆண்டாள் எழுதவில்லையா எனவும் கேட்கிறார்கள். இலக்கியத்தரத்தோடு ஒரு விசயத்தை பார்க்க வேண்டும், வக்கிர புத்தியோடு பார்த்தால் எல்லாம் வக்கிரமாகத்தான் தெரியும் எனவும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதில் ஏதேனும் உண்மை இருந்துவிடட்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் உண்மையிலேயே நமது கலாச்சாரத்திற்கு அவையெல்லாம் முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளாகவே இன்றுவரை எனக்குத் தெரிகிறது. இலைமறை காயாகவே எல்லாம் உணர்த்தப்பட்டு வந்திருக்கிறது. வெளிப்படையாக பேசுவது என்பது நாகரிகமற்ற செயலாகவே கருதப்பட்டு வருகிறது. இனப்பெருக்கம் பற்றிய விசயங்களை பாடம் சொல்லித்தர  ஒருவித தயக்கமாகத்தான் இருக்கிறது. நிற்க.

'மோகத்தைக் கொன்றுவிடு; அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு' எனும் கவிதையை மனதில் பதிவு செய்தபோது 'மோகம்' என்றால் பெண் மோகம் என்றுதான் அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தேன். மோகம் என்பதற்கான அர்த்தங்கள் நன்றாக தமிழ் தெரிந்ததும் பலவகையில் புரிந்து  போனது.

காமம் சம்பந்தமான விசயங்கள் எதுவெனினும் கெட்டவர்கள் செய்யக்கூடியது என்றும் 'நீலப்படம்' பார்ப்பவர்கள் அயோக்கியர்கள், அங்க அவயங்களை வெளிக்காட்டும் எந்த ஒரு இதழ்களையும் பார்ப்பவர்கள் கேவலமானவர்கள் என்றெல்லாம் மனதில் சித்திரம் வரைந்து வைத்திருந்தேன்.

ஏன் அப்படி இருந்தேன், எதற்காக அப்படி இருந்தேன் என என்னுள் கேட்டுக் கொண்டபோது எனக்குள் ஒரே ஒரு விசயம் தெரிந்தது. என்னை எவரும் தவறாக நினைத்துவிடக்கூடாது என்பதுதான் அது. அதாவது நல்லவன் என்றால் மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது, பிற பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பது போன்றவைதான் எனக்குத் தெரிந்தவைகள். கல்லூரிக் காலங்களில் பெண்களிடம் பேசுவதற்கு வெட்கப்பட்டு ஓடி ஒளிந்திருக்கிறேன். அவர்களாகவே நான் எழுதிய கவிதையைப் பாராட்டிய போது என்ன சொல்வது எனத் தெரியாமல் விழித்திருக்கிறேன்.

இந்த காமம் வாழ்க்கையில் ஒருவர் அடைய வேண்டிய குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் என்பன ஒருவர் வாழ்வில் அடைய வேண்டிய செயல்களாகும்.

ஆனால் சமீபத்தில் எழுதிய 'காதல் மட்டும்' கவிதை ஒன்றில் இப்படியும் எழுதினேன்.

நான் உன்னை காதலிக்கிறேன் என்றோ
நீ என்னை காதலிக்கிறாய் என்றோ
ஒருபோதும் சொல்லியதுமில்லை
காதல் சொல்லித்தான் தெரிவதில்லை

காதலில் ஆசை கடுகளவும் இல்லை
காதலில் காமம் தர்மம் இல்லை
உணர்வினால் மட்டுமே காதலி
அதுதானே காதலின் உயிர்மொழி.

நான் காமத்திலிருந்து காதலைப் பிரித்துப் பார்க்கிறேன். காதலை காமத்திலிருந்து விலக்கி வைத்திடவே விளைகிறேன். காதல் கொண்ட பார்வைக்கும், காமம் கொண்ட பார்வைக்கும் வேறுபாடு இருப்பதாகவேத்தான் நான் பார்க்கிறேன்.

காமம் இன்பம் தருவதில்லை, மாறாக காதல் இன்பம் தருகிறது. இப்பொழுது காமம் என்பதற்கான அர்த்தம் எனக்குள் வேறுபடுகிறது.

(தொடரும்)

12 comments:

Thekkikattan|தெகா said...

வெ. இரா, நல்ல தொடக்கம். மனதில் புரிந்ததைத்தானே நாம் பார்க்கும் விசயங்களின் ஊடாக வைத்துப் பார்த்து புரிந்து கொள்ள முடியும். எனவே, காட்ச்சிக்கு கிடைக்கும் பொருட்களின் தன்மையும் மாறிக் கொண்டே வரும், நம் வளர்ச்சியின் படி நிலைகள் தோரும், இல்லையா?

ஓஷோவின் "காமத்திலிருந்து கடவுளுக்கு" என்ற புத்தகத்தையும் வாசித்து விட்டு மற்ற பாகங்களைத் தொடருங்கள். நேரமிருப்பின். நன்றி!

Chitra said...

காமம் இன்பம் தருவதில்லை, மாறாக காதல் இன்பம் தருகிறது. இப்பொழுது காமம் என்பதற்கான அர்த்தம் எனக்குள் வேறுபடுகிறது. ............. :-)
Best wishes!

நிகழ்காலத்தில்... said...

அவசியம் சிந்திக்க வேண்டிய தலைப்பு, தொடருங்கள்

என் ஆதரவு உண்டு..

Radhakrishnan said...

மிக்க நன்றி தெகா. மிகவும் அருமையான எண்ணங்கள். நிச்சயம் ஓசோவின் புத்தகம் படித்து விடுகிறேன். ஓசோவின் அன்பின் இருப்பிடம் படித்தது உண்டு.

மிக்க நன்றி சித்ரா.

மிக்க நன்றி சிவா.

SUMAN said...

எதற்காக காமம் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை என்றால் அதன் அது ஒருவருடன் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டியது. பொது உடமைக்குரியது அல்ல. வெளிப்படையாகப் பேசினால் அதுபற்றிய பயம் இல்லாது போய்விடும். யாருடனும் யாரும் உறவுகொள்ளலாம் என்ற நிலைவந்துவிடும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வுதான் என்றும் நீண்ட மகிழ்ச்சி தரும் என்பது அநுபவ உண்மை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து

பித்தனின் வாக்கு said...

// காமம் இன்பம் தருவதில்லை, மாறாக காதல் இன்பம் தருகிறது. இப்பொழுது காமம் என்பதற்கான அர்த்தம் எனக்குள் வேறுபடுகிறது.//
இந்தக் கருத்தில் நான் வேறுபடுகின்றேன். காமம் இன்பம் தருவதில்லை என்பது தவறானது. காமம் இன்பத்துடன்,மனனிறைவையும்,மன அமைதியும் தருகின்றது. ஒருமுறை பரிபூரண கூடலுக்குப் பின்னர் மீண்டும் எண்ண அலைகள் வரும்வரை அனுபவிக்கும் அமைதி எப்படி இருக்கும் என்றால் நீண்ட நேரம் தியானத்தில் இருந்து கண்விழித்தால் எப்படி ஒரு பரவசம் கிடைக்குமே அது போல இருக்கும். காதல் என்பது முதல் படி, இந்தக் காதலை காமம்தான் ஆழப்படுத்து கின்றது. நன்றி.

Radhakrishnan said...

மிக்க நன்றி சுமன். இது தங்களின் தனிப்பட்ட கருத்து எனினும் மிகவும் அருமையான கருத்து. இதை வலியுறுத்தும் வண்ணமே தொடர் எழுதத் தொடங்கினேன்.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா. நல்லதொரு சிந்தனை, இது குறித்து தொடர்ந்து எழுதுகிறேன்.

விஜய் said...

நல்ல சிந்தனை... படித்தல் என்பதன் பயனே ஒருவனின் சிந்தனை திசையை ஆற்றுப்படுத்துவதுதான்... திருக்குறளின் காமத்துப்பால் என்னை என்றும் கவர்ந்த ஒன்று, அறம் பொருளை எழுதிய அந்த பேரறிஞர் காமத்தையும் எழுதியுள்ளார் என்றால் அது தவறானது அல்ல என்ற உறுதியான எண்ணத்துடன் நான் அதைப் படித்துள்ளேன் - ஆனாலும் மறைவாக! :)

இன்று என் கருத்துக்களை துணிந்து முன் வைக்கும் மனனிலையைப் பெற்றுள்ளேன் - தாங்களும் அவ்வழியில் வருவது போல் இருக்கிறது இத்துவக்கம்... வரவேற்கிறேன்!

நல்லதொரு பதிவிற்கு நன்றி!

அன்புடன்,
விஜய்

Radhakrishnan said...

மிக்க நன்றி விஜய். மனதோடு ஒரு தயக்கம் எவருக்குமே உண்டு. திருவள்ளுவர் எழுதியதைப் பார்த்தீர்களேயானால் பொதுவான கருத்துகளையே வைத்திருப்பார், தனிப்பட்ட கருத்துகளை அவர் எழுதியிருக்கமாட்டார். அதனால்தான் திருக்குறள் பொதுநூல் எனும் பெயர் பெற்றது. தனிப்பட்ட ஆசாபாசங்களை எழுதும்போது அங்கே காமத்திற்கான எல்லை எது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

cheena (சீனா) said...

அன்பின் வெ.இரா

காமம் பற்றி எழுதுவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். நம்மைப்பற்றி மற்றவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் / கருத்து மாறி விடுமோ எனப் பயப்பட வைக்கும். இருப்பினும் எழுதத்துவங்கியமைக்கு நல்வாழ்த்துகள் - தொடர்க

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா.