Wednesday 28 October 2009

ஆன்மிகம் என்றால் சைவமா? யோகன் ஐயாவிற்கான பதில்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது. //

மிக அருமையான முத்தாய்ப்பு...என்னை வெகுநாட்களாக குடையும் கேள்வி!


நான் அசைவம் உண்பவன். எனவே" குருவிக்கு அரிசியைப் போட்டுவிட்டு"; மற்றைய உயிர்கள் மேல் அன்பு செலுத்துகிறேனெனச் சொல்வது சுத்த பொய்.

//ஒரு உண்மையை மிகவும் தைரியமாகச் சொன்னதற்காக எனது பணிவான வணக்கங்கள் ஐயா. நீங்கள் அசைவம் உண்பது என்பது தங்களின் உணவுப் பழக்க வழக்கம் என எடுத்துக் கொள்ளலாம் //

இதே வேளை ஆத்மீக வாதியாக வாழ ;

அன்புடையவனாக வாழ ;

ஒழுக்க சீலனாக வாழ;

உண்மைபேசுபவனாக வாழ;

உழைத்து உண்பவனாக வாழ..

அவன் சைவ உணவுதான் உண்ண வேண்டுமா? ஆமெனில் துருவத்தில் வாழும் மக்கள், இந்தோனேசியக் காட்டுவாசிகள்; அமேசன் காட்டு வாசிகள், வேடர்கள் இவ்வுலகில் வாழத் தகுதியற்றவர்களா? அவர்களிடம் ஆத்மீகம் இல்லையா?


//சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே மேற்கூறப்பட்ட குணநலன்களுடன் வாழ்கிறார்கள் என வரையறுத்துவிட இயலாது என்பதுதான் உண்மை. அதே வேளையில் மேற்கூறப்பட்ட குணநலன்களுடன் அசைவ உணவு உண்பவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சைவ உணவுப் பொருட்களை உண்டு ஒரு உயிரினத்தால் வாழ இயலும் எனச் சூழ்நிலைச் சந்தர்ப்பங்கள் இருக்கும்போது ஏன் அசைவ உணவு வகைகளை உண்டு வாழும் நிலையை உருவாக்கிக் கொண்டோம் எனச் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும். அசைவ உணவு உண்பவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் எனச் சொல்ல இயலாது, அவர்களிடம் ஆன்மிகம் இல்லை எனவும் மறுக்க இயலாது. எனினும் இதன்படி நடந்தால் சிறப்பு என்று மட்டுமே ஒரு விசயத்தைச் சுட்டிக் காட்ட இயலும், ஏன் அதன்படி நடக்காமலும் சிறப்பாக இருக்க இயலாதா எனக் கேள்வி கேட்டால் இரு சிறப்புகளுமே வெவ்வேறு அர்த்தம் கொண்டவை என்று மட்டுமேச் சொல்ல இயலும் //


எனவே இந்த மற்றும் உயிர்மேல் அன்பென்பது ஒரு இடைச்செருகல்... குறிப்பாக இடைக்கால இந்தியாவில் உள்னுளைந்த சமாச்சரமோ? ஆடையே இல்லாமல் வாழ்ந்த மனிதன் ஆடைகட்டி; இப்போ மானம் காக்கிறோம்; என்று சொல்வது போல்.


//காலப்போக்கில் எல்லாமே மாற்றம் கொள்ளும் நிலையை அடைந்தது. உயிர் கொன்று வாழும் மனித இனங்களே முன்னாலிருந்தது. நரபலி கொடுக்கும் மனிதர்களும், நரமாமிசம் சாப்பிடுவோர்களும் வாழ்ந்து வந்தனர். எதையுமே சாப்பிடும் சீனர்கள் என ஒரு பொது கருத்தும் உண்டு. பிற உயிர்களை கொலை செய்வது என்பது மட்டும் பார்க்கப்படவில்லை, பிற உயிர்களை வதைத்து வேலை வாங்கும் தன்மையும் கண்டு இளகிய மனம் படைத்தோர் உருவாக்கிய எண்ணம் எனக் கொள்ளலாம். பிற உயிர்கள் என்பது சக மனிதரையும் குறிக்கும் என்பது முக்கியம். //


அதனால் ஆத்மீகத்துக்கும் மற்றைய உயிர் கொல்லாமல் வாழ்வதற்கும்;சைவ உணவுப் பழக்க வழக்கத்துக்குமான தொடர்பு வெறும் இட்டுக்கட்டலா? அதனால் மற்றைய உயிர்களின் மேல் அன்பு செலுத்த முடியாத; அசைவமுண்ணும் நான் ஆத்மீகத்துக்கு உகந்தவனில்லை எனக் கருதுகிறீர்களா?


// ஆன்மிக உணர்வு என்பது எந்தத் தீங்கும் விளைவிக்காது இருப்பது. சைவ உணவுப் பழக்கமும், ஆன்மிகமும் ஒன்றுக்கொன்றுத் தொடர்புடையதாகக் கருத வேண்டிய நிர்பந்தம் எதுவுமில்லை. ஆனால் பிற உயிர்களின் மேல் அன்பு செலுத்துவது என்பது ஒரு பொது நலம் கருதிய செயலாகக் கருதலாம், அதுவே ஆன்மிகம் எனவும் கொள்ளலாம். அசைவம் உண்ணும் தாங்கள் ஆன்மிகத்துக்கு உகந்தவரா என்பதை நீங்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மருத்துவ ஆராய்ச்சியில் உயிர் கொன்று பணி புரியும் நான் என்னை ஒரு ஆன்மிகவாதியாக எப்போதுமே எண்ணிக் கொண்டதில்லை. //


என் மனம் கத்தரிகாய்ப் பிஞ்சுக்கும்; முளைக்கீரைக்கும் உயிர் இருக்கிறது. அதையும் வெட்டி; அவித்து; பொரித்து, வறுத்து உண்பதுகூட பாவமாகத்தான் படுகிறது. ஆனால் நான் வாழ வேண்டும் எனும் சுயநலம் என்னைத் தடுக்கிறது. அதனால் அது பாவம் இல்லை;இது பாவம் என சால்சாப்பு தேடுகிறது.


//அசைவம் உண்பவர்கள் இதை ஒரு கருத்தாகக் கொள்வது உண்டு. தாவரங்கள் தானே உணவு உற்பத்தி பண்ணும் திறன் உடையவை. மரத்திலிருந்து பழம் பறித்து உண்பது என்பது கொலையாகாது, ஆனால் அந்த மரத்தையே வெட்டுவது கொலையாகக் கருதப்படும் எனக் கொள்ளலாம். மேலும் கத்தரிக்காய்தனை அப்படியே விட்டுவிட்டால் அழுகிப் போய்விடும். எனவே அவையெல்லாம் கொலை எனவோ, பாவம் எனவோ கருதுவது கூடாது. தாவரங்கள் அல்லாத பிற உயிர்கள் தாவரத்தை முதல் உணவாகக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமே. தானாக இறந்த விலங்குகளை உண்பது தவறில்லை எனக் கொள்வது சரியென சொல்வாரும் உண்டு. ஆனால் ஒரு உயிரைக் கொன்று அதை உண்பது பாவப்பட்ட செயலே ஆகும். இதில் தாவர இனங்கள் உட்படா //


ஆத்மீகவாதிகளும், அறிவு படைத்தோரும் தமக்கு வசதியானதைக் கூறி அதையே பொது விதி ஆக்குவார்கள்.என்னைப் போன்ற பரதேசிகள் ஏற்கவேண்டும்; அல்லது சாகவேண்டும்.
அந்த பொது விதியில் தான்....ஒபாமாவுக்கு நோபல் பரிசும் கொடுத்தார்கள்.


//அப்படியெல்லாம் எதுவும் இல்லை ஐயா. பொது விதி என்பது பொதுவான விசயத்திற்காக வைக்கப்பட்டது. அவரவர் வசதிற்கேற்ப வாழ்க்கை அமைத்துக் கொண்டு வாழ்வதுதான் நடந்து கொண்டு வருகிறது. 'எது உனக்குச் சரியாகப்படுகிறதோ, அதை நீ சந்தேகமின்றி, சந்தோசமாகச் செய்து கொண்டு வா' என்பது கூட ஒரு பொது விதி தான். அப்படியெனில் கொலைகாரர், கொள்ளைக்காரர் எல்லாம் தனது செயல் சரியே என வாதிடக் கூடும். எது எப்படியோ, இந்த உலகம் இருளும் வெளிச்சமும் கொண்டு இருக்கிறது என்பதே உண்மை. //




7 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

arumaiyaana padhivu

கிருஷ்ண மூர்த்தி S said...

முதலில் ஆன்மீகம் என்பது என்ன?
அதை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதில் இருந்தே சரி தவறு என்ற வாதங்கள் எழுகின்றன.

இதையும் கடந்துபோனால் தான் ஆன்மீகத்தின் கடைசிப் படிக்கட்டையாவது நம்மால் தொட முடியும்.

vasu balaji said...

மிக மிக அருமையான விளக்கங்கள்.

Sabarinathan Arthanari said...

தவறுதலான விளக்கம். உங்களுக்கான பதில் விரைவில் என் பதிவில் தருகிறேன் (விளக்கமாக).

சுருக்கமாக ஒரு கனியை பறிக்கும் போதும் ஒரு உயிரை வெட்டும் போதும் நீங்கள் ஒரே வித மன நிலையில் இருக்க முடியுமா ?

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி.

ஆன்மிகம் என்றால் என்ன என்பதை அறிந்திட முயல்கிறேன் கிருஷ்ணமூர்த்தி ஐயா.

சபரி அவர்களின் கேள்வி மிக அருமை, அவரது விளக்கம் கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

கோவி.கண்ணன் said...

நல்ல இடுகை.

சைவ அசைவ மட்டுமல்ல உணவுகளைக் குறித்து ஆன்மீகவாதிகள் சித்து விளையாடுவது மதங்கள் ஒவ்வொன்றிலும் நடப்பில் உள்ளவையே. எ.க பன்றி இறைச்சி உண்ணுபவர்களை இறைக் கட்டளையை ஏற்காத நாத்திகர்களாக பார்க்கும் வழக்கம் இஸ்லாமியரிடையே உள்ளது.

இந்தி மதத்தில் உயிர் கொலை / கொல்லாமை என்ற செயலாகப் பார்த்து சைவம் அசைவம் என்கிறார்கள்.

இறைச்சி படைத்த கண்ணப்பனுக்கும் இறைவன் காட்சி கொடுத்ததாக பெரிய புராணக் கதைகள் உண்டு.

உணவு முறைகளை விட உள்ளார்ந்த அன்பே ஆன்மிகத்திற்கு தேவை. இருந்தாலும் ஆறறிவு படைத்த மனிதன் சுவையாக இருக்கிறது என்பதற்காக உயிரனங்களை அழித்துவிட்டால் எஞ்சுவது எதுவுமில்லை. பயிரிடுதலைப் போல் அடித்து உண்ணும் விலங்குகளுக்கு குறிப்பாக மான் போன்ற காடுவாழ் உயிரனங்களை மனிதர்கள் பெருக மனிதர்கள் எந்த முயற்சியும் செய்வது இல்லை. கடல் வாழ் உயிரனங்கள் கண்டபடி அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றிலெல்லாம் கட்டுப்பாடு இருந்தால் உண்ணுதலுக்கான உயிர் கொலை என்பது இனப்பெருக்கக் கட்டுப்ப்பாடு என்கிற முறையில் ஞாயப்படுத்த முடியும்.

நான் சைவ கட்சி !
:)

Radhakrishnan said...

//உணவு முறைகளை விட உள்ளார்ந்த அன்பே ஆன்மிகத்திற்கு தேவை. இருந்தாலும் ஆறறிவு படைத்த மனிதன் சுவையாக இருக்கிறது என்பதற்காக உயிரனங்களை அழித்துவிட்டால் எஞ்சுவது எதுவுமில்லை. பயிரிடுதலைப் போல் அடித்து உண்ணும் விலங்குகளுக்கு குறிப்பாக மான் போன்ற காடுவாழ் உயிரனங்களை மனிதர்கள் பெருக மனிதர்கள் எந்த முயற்சியும் செய்வது இல்லை. கடல் வாழ் உயிரனங்கள் கண்டபடி அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றிலெல்லாம் கட்டுப்பாடு இருந்தால் உண்ணுதலுக்கான உயிர் கொலை என்பது இனப்பெருக்கக் கட்டுப்ப்பாடு என்கிற முறையில் ஞாயப்படுத்த முடியும்.//

அழகிய கருத்துகள் ஐயா.