Monday 2 November 2009

விழுதுகள் நாங்கள்

தமிழ் மொழி தந்த அடையாளம்
தரணியெங்கும் பெயர் சொல்லும்
தமிழ்தனை மொழியாகக் கொண்டதால்
சொந்த நாட்டில் இடமின்றி போகுமோ?

விதையது விதைத்த நிலம்
புதையுண்டு போகுமோ எங்கள் பலம்
கதையதை பிறிதோர் பேசிட
பதைபதைக்குமோ எங்கள் நெஞ்சம்

உலகமெலாம் பரந்து விரிந்தோம்
உள்ளூரில் எங்கள் உயிர் துறந்தோம்
வேர்தனை வெட்டி வீழ்த்திட்டாலும்
விழுதுகளாய் எம்மினம் தாங்கி நிற்போம்

கேடுகளால் நலிந்தது எங்கள் மனம்
ஆறுதலற்றுப் போயினும், எம் சனம்
தேடுதலைத் தொலைத்திடாது
தமிழ் ஈழமே எங்கள் கவனம்

உயிர் கொல்லப்படலாம் எம் இனமே
உரிமையது கொல்லப்பட விடுவோமா
அதர்மம் வென்றது போன்றே தோன்றும்
கொண்ட தர்மம் அது வென்றே தீரும்

எமது குரல்கள் உலகமெலாம் ஒலித்திடும்
எமது ஈழத்து கனவு பலித்திடும்
எமது மரக்கிளைகள் ஒருபோதும் பட்டுவிடாது
விழுதுகளாய் நாம் தாங்கி நிற்போம்

பிஞ்சு குழந்தைகள் என்ன செய்தன
நஞ்சை ஊட்டியே நசியச் செய்தனன்
நெஞ்சம் கசிந்து எம் இனம் அலறினும்
அஞ்சி ஒளியோம் அறிந்து கொள்ளடா

எமக்கென்று ஓரிடம் உன்னிடம் கேட்க
தமக்கென்று எல்லாம் வைத்துக் கொண்டாய்
எமதிடத்தை உனதிடமாக்கிய உனது
கள்ளத்தனத்தைத் தூள் தூளாக்குவோம்

ஒரு கை மட்டும் அல்ல உதவிட
ஓராயிரம் கைகள் உண்டு எம்மிடம்
உன் மூச்சுத் திணறலைப் பார்த்திடும்
நேரம் நெருங்கியே விரைவில் வந்திடும்

எங்கள் இனத்தை நீ நசுக்கிட
போடும் வேசங்கள் எத்தனையோ
எங்கள் இனமது மீண்டிடும்
விழுதுகளாய் இருந்தே காக்கின்றோம்

வேரோடு அழித்திட நீ புறப்பட்டாய்
சேறினை முகத்தில் நீ பூசிக்கொண்டாய்
வீரம் விளைந்த நெஞ்சத்து
விழுதுகள் கொண்டே ஜெயித்திடுவோம்

எத்தனை கொடிய அரக்கன் நீ
அத்தனைக்கும் உனக்கு பதிலிருக்கு
எட்டப்பர்கள் யாவரும் உன்னிடமே
உன்னை குட்டிக் குட்டியேக் குலைத்திடுவார்

தமிழ்ஈழம் எங்கள் கனவு
தமிழ்ஈழம் எங்கள் வாழ்க்கை
தமிழ்ஈழம் எங்கள் பயணம்
தமிழ்ஈழம் அடைந்தே தீர்வோம்.

5 comments:

vasu balaji said...

/தமிழ்ஈழம் எங்கள் கனவு
தமிழ்ஈழம் எங்கள் வாழ்க்கை
தமிழ்ஈழம் எங்கள் பயணம்
தமிழ்ஈழம் அடைந்தே தீர்வோம்./

ஆம் ஐயா. அருமை.

/எத்தனை கொடிய அரக்கன் நீ
அத்தனைக்கும் உனக்கு பதிலிருக்கு
எட்டப்பர்கள் யாவரும் உன்னிடமே
உன்னை குட்டிக் குட்டியேக் குலைத்திடுவார்/

ஆஹா. சபாசு.

கலகலப்ரியா said...

என்னிடம் வார்த்தைகள் இல்லை..! :-)

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா, கலகலப்ரியா.

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html

Please accept this gift from me with deep appreciation for your blog.

-vidhya

Radhakrishnan said...

மிக்க நன்றி வித்யா. விருதினை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டேன்.