Thursday 7 February 2013

உணர்வுகளின் பரிணாமம்

இறைவனும் இறை உணர்வும் - 4

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம் - 6

நரம்பியல் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கால சூழல் அமைய வேண்டும் என்றே எண்ணுவது உண்டு. அப்படிப்பட்ட நரம்பியல் பற்றி தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் எனும் கேள்வி எழுப்பும்போதே நரம்பியிலின் நுண்ணியதன்மை வெளிப்பட்டுவிடுகிறது.

ஐந்து வகையான உணர்வுகள், தொடுதல், சுவாசித்தல் , பார்த்தல், கேட்டல், சுவைத்தல்,  பற்றி பாடப்புத்தகத்தில் படித்த காலங்கள் உண்டு. பார்வைக்கு கண் என்றும், தொடுதலுக்கு தோல் என்றும், சுவாசித்தலுக்கு (வாசனைக்கு) நாசி என்றும், கேட்டலுக்கு காது என்றும் வகைப்படுத்தப்பட்டது.

ஒளி இருப்பின் பார்வையும், ஒலி இருப்பின் கேட்டலும் என்றே ஆனது. ஆனால் நமது பார்வையும் சரி, கேட்டலும் சரி ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் மட்டுமே இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம்.

ஆனால் இந்த உணர்வுகளைத் தாண்டி மேலும் பல உணர்வுகள் இருப்பதாகவே அறிவியல் நமக்கு அறிவுறுத்துகிறது. தொடுதலில் மென்மை, வலி, காமம் என எவ்வாறு நாம் வேறுபடுத்தி கொள்கிறோம் என்பதும்  அதைப்போல நாம் பார்க்கும் பொருளின் தன்மையை வேறு வேறு விதமாக நாம் எவ்வாறு உருவகித்து கொள்கிறோம் என்பதும்  சற்றே வித்தியாசமான ஒன்றுதான். நமது எண்ணமே இந்த உணர்வுகளைத் தூண்டுகிறதா? அல்லது உணர்வுகளால் நமது எண்ணங்கள் தூண்டப்படுகிறதா? என்பது சற்றே சிந்திக்கக் கூடிய விசயம்.

ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதா உபதேசத்தில் ஒரு தேரானது உடம்பாகவும், அந்த தேரினை இழுத்து செல்லும் ஐந்து உணர்வுகள் ஐந்து குதிரைகளாகவும், தேரோட்டியை மனமாகவும் சித்தரித்து உள்ளதாக குறிப்பு உள்ளது.

தாயைத் தொடும்போது உள்ள தொடுதல் உணர்வுக்கும், தாரத்தைத் தொடும்போது உள்ள தொடுதல் உணர்வுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பது மனம் சம்பந்தம் கொண்டதா, அல்லது உணர்வு சம்பந்தம் கொண்டதா? இந்த விசயத்தில்தான் பகுத்தறிவு என ஆறாம் உணர்வினை சொன்னார்கள். நமது மனதின் எண்ணவோட்டத்தின் பொருட்டே உணர்வுகளின் நிலை வேறுபடுகிறது என்றுதான் தொன்று தொட்ட காலம் முதல் சொல்லப்பட்டு வருகிறது.




உணர்வு நரம்பு, கடத்தும் நரம்பு, வெளிபடுத்தும் நரம்பு என மூன்று வகையாக நரம்பினைப் பிரிக்கலாம். பார்வை, கேட்டல், தொடுதல் என உணர்வு நரம்பு மூலம் கடத்தும் நரம்புக்கு சென்று பின்னர் மூளையின் செயல்பாடு, அல்லது செயல்பாடற்ற தன்மைக்கு பின்னர் வெளிப்படுத்தும் நரம்பு மூலம் ஒன்றை உணர முடிகிறது.

உதாரணமாக, ஒரு மிகவும் சூடான பாத்திரத்தை கையால் தூக்கும்போது சூடு தாங்க முடியாமல் கீழே போட்டுவிடுகிறோம். அப்படி கீழே போட வேண்டும் என மூளையின் கட்டுபாடுகளுக்கு நாம் காத்து இருப்பது இல்லை. அதே வேளையில் சூடாக இருந்தாலும் அதில் இருக்கும் பொருளின் மதிப்பை கண்டு நாம் கீழே போடாமல் இருக்க நாம் நமது மூளைக்கு கட்டுபடுகிறோம. இப்படியான ஒரு செயலை தனிச்சை செயல் என்றும் அனிச்சை செயல் என்றும் பிரிக்கலாம்.

ஏதாவது ஒன்று நம்மிடம் சொல்லும்போது சற்று கூட யோசனை செய்யாமல் பேசிவிடுவது கூட மூளைக்கு சம்பந்தம் உள்ளதா? இல்லையா என்பது குறித்து சர்ச்சைகள் உண்டு.

நன்றி: கூகிள்

இப்படி ஒவ்வொரு உணர்வும் எப்படி வேறுபாடு அடைகின்றன என சிந்திக்கும் வேளையில் இந்த ஐந்து உணர்வுகளில் எந்த உணர்வு முதலில் தோன்றி இருக்க கூடும்?

தொடுதல் என்கிறார்கள் சிலர். கேட்டல் என்கிறார்கள் சிலர். வாசம் என்கிறார்கள் சிலர். பார்த்தலும், சுவைத்தலும் இறுதியாக வந்து இருக்கலாம் என்றே சொல்கிறார்கள். இன்னும் எத்தனையோ உணர்வுகள் இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். இது குறித்து பின்னர் பார்ப்போம். அதில் ஒன்றுதான் இறை உணர்வு, முக்காலமும் உணரும் தன்மையான உணர்வு.

(தொடரும்)

Wednesday 6 February 2013

அவள் இறங்கிவிட்டாள்

எட்டிப் பிடித்த பேருந்து ஒன்றில்
முட்டி மோதி இடம் பிடிக்கையில்
பட்டுபோன்ற கன்னம் கொண்டவள்
சிட்டாக அமர்ந்து இருந்தாள்
எதிர் இருக்கையில்

இதயத்தில் மொட்டு ஒன்று
உதயம் ஆனது போன்று
புன்னகை பூக்கள்
மென்னகையாய் விழுந்தது
எதிர் இருக்கையில்

அவள் செல்லுமிடத்து
நானும் சென்றிடவே
எண்ணம் கொண்ட வேளையில்
நடந்துவந்த நடத்துனரிடம்
நளினமாக பேசிய அவள்
கண்ணிமைக்கும் நேரத்தில்
இறங்கியே போனாள்
எவரேனும் இனி அமரக்கூடும்
எதிர் இருக்கையில். 

Monday 4 February 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 12

முன் பகுதி 

கோபத்துடன் என்னை முறைத்துப் பார்த்த காயத்ரியின் கண்களை நான் உற்று நோக்கினேன்.  அம்மாவும், காயத்ரியின் அக்காவும் வேறு வேலைகள் செய்ய சென்றார்கள். காயத்ரி என்னை நோக்கி கேட்டாள்.

''என்ன அப்படி பார்க்கிற''

''நீதான என்னை முறைச்சிப் பார்க்கிற''

 ''உனக்கு பெண்கள் மேல மட்டு மரியாதையே இல்லையா?''

அவள் அப்படி கேட்பாள் என்று ஒருபோதும் நான் நினைத்துப் பார்க்கவில்லை. இருந்தாலும் சுதாரித்து கொண்டேன்.

''நீ அப்படி என்னத்தை கண்ட?''

''தூசி துகள் ஈர் பேன் பெருமாள் அப்படின்னு சொல்ற''

''உள்ளதைத்தான் சொன்னேன், இந்த பேரண்டம் தோன்றியதற்கு காரணமே தூசிதானே''

எனது பதில் அவளிடம் மேலும் கோபத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவளது முகத்தில் சிறு மாற்றம் கண்டேன். சட்டென முகத்தைத் திருப்பி கொண்டாள்.

''பாரு காயூ, இந்த பேரண்டம் தூசியினால் மட்டுமே உருவாக்கப்பட்டது, அப்படி இந்த பேரண்டம் உருவாக உதவியாக இருந்த தூசினை மாசு படுத்திவிட்டார்கள். தூசு என்றால் மாசு என்றே பொருள் ஆனது. அதனால் தான் எதையாவது குறைத்து மதிப்பிட வேண்டுமெனில் என் கால் தூசிக்கு சமம் என பேசுவார்கள். புரிந்து கொள்''

நான் காயூ என காயத்ரியை முதன் முதலில் அப்போதுதான் அவ்வாறு அழைத்தேன். காயூ என்பது கூட நன்றகாத்தான் இருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

''என்னை எப்படி கூப்பிட்ட?''

''காயூ''

அவளிடம் இருந்த கோபம் சட்டென மறைந்தது. புன்னகை பூத்தாள்.

''ம்ம் ரொம்ப நல்லாருக்கு''

''எது தூசு பத்திய விசயமா?''

''காயூனு என்னை கூப்பிடுறது''

''தூசு பத்தி என்ன நினைக்கிற?''

''நீ ஒரு லூசுனு நினைக்கிறேன்''

''எப்பவும் அப்படித்தானே என்னை நினைக்கிற, எதுவும் புதுசா சொல்லு''

''நான் பெருமாளை நம்புறவ, நீ தூசியை நம்புறவன், இருந்தாலும் உன்னை நானும், என்னை நீயும் நேசிக்கிறது அபூர்வம் தான்''

அவள் அப்படி சொன்னபோது எனக்குள் ஒருவித சலனம் உருவானது. இவள் இறைபக்தி உடையவளாக இருக்கலாம், இருந்துவிட்டு போகலாம். அதற்காக என்னை இறைபக்தி இல்லாதவன் என்று எப்படி முடிவுக்கு வந்தாள். ஒரே மாதிரி உணர்வு உள்ளவர்கள் மட்டுமே காதலித்தல் சாத்தியமா? கர்மவினை என்றாள், இப்போது அபூர்வ விசயம் என்கிறாள், என்னதான் இவளின் மனதில் எண்ணம் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றே எண்ணத் தொடங்கினேன்.

''காயூ, நீ என்னதான் சொல்ல வர, நாம நேசிக்கிறது எல்லாம் கர்மவினைனு சொல்றியா?''

''அப்படித்தான் வச்சிக்கோயேன்''

''அப்படித்தான் வச்சிக்கிறதுனா, என்ன அர்த்தம்?''

''நாம பார்த்தது, பழகினது, என் அம்மா இறந்தது, எங்க அப்பா எங்களை விட்டு போனது அப்புறம் இப்படி உங்க வீட்டுல நாங்க இருக்கிறது, எல்லாமே''

காயத்ரி இப்படி பேசுவாள் என்று நான் சற்று கூட  எதிர்பார்க்கவே இல்லை. அவள் பேசியதில் உறுதி தெரிந்தது. தாயின் மரணம், தந்தையின் செயல்பாடுகள் அவளுக்குள் வாழ்வினைப் பற்றிய விரக்தியை ஏற்படுத்தி இருக்க வேண்டும், அவளது தந்தையின் மீதான ஏமாற்றம் என் மீதும் வந்து தொலைந்து இருக்க வேண்டும் என்றே என் மனம் நினைத்தது. காயத்ரியின் கைகளைப் பிடித்தேன். தொடுதல் உணர்வில் எனது எண்ணம் அவளுக்குள் சென்று தொலைய வேண்டும் என்கிற ஒரு நட்பாசை.

''காயூ, இந்த பூமியில் வாழுற வரைக்கும் உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்கமாட்டேன். நீ உன் அப்பா மேல இருக்கிற கோவத்தை என் மேல காட்டாதே, கர்மவினை எல்லாம் ஒன்னும் இல்ல, இதை மனசுல பதிய வைச்சிக்கோ''

''அதெல்லாம் இல்ல முருகேசு, கர்மவினை தான்''

''எல்லாம் என் கர்மவினை''

''என்ன சொன்ன, என்ன சொன்ன''

''வாய் தவறி வந்து விழுந்த வார்த்தை அது''

எனது கைகளை அவளது கன்னங்களில் ஒட்டிக்கொண்டவள் கலகலவென சிரித்தாள். முருகேசு முருகேசு என சிரித்தாள். அவளது சிரிப்பிற்கான காரணங்கள் என்னவென முழித்தேன்.

''தானா தவறியதா?''

அவளது அந்த கேள்வியில் நிலைகுலைந்து போனேன். அப்போது என்னை காப்பது போல காயத்ரியின் அக்கா எங்களை நோக்கி வந்தார். எனது கைகள் விடுபட்டு இருந்தது.

''நீங்க எப்ப அவரைப் பார்க்கப் போறீங்க''

''இன்னும் அரைமணி நேரத்தில போலாம்னு இருக்கேன்''

''அவர்கிட்ட தகராறு பண்ண வேண்டாம். எனக்கு மனசுக்குப் பிடிக்கலை. மனசு தாங்காம அம்மாகிட்ட சொல்லிட்டேன்''

''ம்ம்''

நான் எதற்கு தகராறு பண்ண போகிறேன். ஒவ்வொருவரிடம் வம்பு பண்ணிக்கொண்டு இருப்பதுதான் என்னோட வேலையா? அந்த அவர் குறித்து காயத்ரியின் அக்காவிடம் எப்படி பழக்கம், எத்தனை நாள் பழக்கம் என்றெல்லாம் நான் விசாரிக்கவில்லை. விசாரிக்கவும் தோணவில்லை. காயத்ரி அக்கா கொடுத்த முகவரியை சரிபார்த்து கொண்டேன்.

நான் கிளம்பியபோது காயத்ரி என்னுடன் வருவதாக சொன்னாள். நான் வேண்டாமே என்றே மறுத்தேன். ஆனால் அவள் செவிகொடுக்கும் நிலையில் இல்லை. நாங்கள் இருவருமாக சேர்ந்து அந்த அவரின்  முகவரியை அடைந்தோம். அந்த அவரின் பெயர் ரங்கநாதன்.

வீட்டினைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. சுற்று சுவர்கள் கட்டப்பட்டு, கம்பிக் கதவு எல்லாம் போடப்பட்டு இருந்தது. மலர்களின் வாசனை ரம்மியமாக இருந்தது. கதவினை திறந்து கொண்டு நடக்கும்போது மல்லிகையும், கனகாம்பரமும் வாசம் அதிகமாக தந்து கொண்டு இருந்தது. வாயிற்கதவு மணியை அழுத்தினேன். வாசலில் ஒரு பெண்மணி வந்து நின்றார். ரங்கநாதனின் அம்மாவாக இருக்க கூடும். எங்கள் இருவரையும் ஏற இறங்க பார்த்தார்.

''யார் வேணும்?''

''ரங்கநாதன் சாரைப் பார்க்கனும்''

''உள்ளே வாங்க''

நாங்கள் இருவரும் ஓரிடத்தில் அமரவைக்கப்பட்டோம். உள்ளே சென்றவர் எங்களுக்காக பலகாரங்கள், பழச்சாறு எல்லாம் எடுத்து வந்தார். உலகில் சக மனிதர்களின் மீதான நம்பிக்கை உடையவர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றியது. இந்த நம்பிக்கையினை பயன்படுத்தி மோசம் செய்பவர்களும் இருக்கிறார்களே என கூடவே மனம் நினைத்தது.

சில நிமிடங்களில் ஒரு அறையினில் இருந்து எனது வயது மதிக்கத்தக்க என்னை விட சற்று உயரமான உருவத்தில் வந்தது ரங்கநாதன் என்றே யூகித்து கொண்டேன்.

''உன்னைத்தான் பார்க்க வந்திருக்காங்க''

எங்களை நோக்கி வந்தவர் ஹலோ என கைகள் குலுக்கினார். காயத்ரியின் அக்காவின் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவரது அம்மா அருகினில் இருக்கும்போதே நேரடியாகவே கேட்டேன்.

''சார், காயத்ரியின் அக்கா பயப்படுறாங்க, நீங்க அவங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இன்னிக்கு தகராறு பண்ணினது ஏன் ?''

''என்னப்பா சொல்ற, என் பையன் தகராறு பண்ணினானா?

''உங்க பையன் கிட்ட கேளுங்கம்மா''

அடுத்து சில நிமிடங்கள் நடந்த உரையாடலில் நான் உறைந்து போனேன். காயத்ரியை போலவா, காயத்ரியின் அக்காவிற்கும் தன காதலன் மீது வெறுப்பு வந்து சேர வேண்டும். எல்லாம் கர்மவினை என தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

(தொடரும்)