Monday 19 December 2011

பைத்தியகாரர்கள் சங்கமம்

இவர்கள் ஏனோ குழுமமாய் திரிகிறார்கள். இவர்கள் நோக்கங்கள் எவரேனும் அறிந்தது உண்டா!
இணையத்தில் எழுதுகிறார்கள். எழுதியதால் இணைகிறார்கள். வருடம் ஒருமுறையோ சிலமுறையோ கூடி கழிக்கிறார்கள், களிக்கிறார்கள். 

எழுத்து பைத்தியங்கள் இவர்கள். பைத்தியகாரத்தனத்தை பதிவு செய்தும் வைக்கிறார்கள். இவரின் பராக்கிராமங்களை  படித்துப் பார்த்தது உண்டா! கட்டிங், வெட்டிங், ஒட்டிங் என்றே கண்டதையும் சொல்லித் திரிகிறார்கள், பிரிகிறார்கள். 

அறியா சங்கங்கள் வைத்ததால் நாடு பலன் பெற்றது உண்டா! ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொண்டதை அறியாதோர் போல் நடந்தே செல்கிறார்கள். மன அழுத்தத்தில் முகம் தனை மறைத்தே உலவுகிறார்கள், உறைகிறார்கள். 

சின்னதாய் ஆரம்பித்தே பெரியதாய் மாறப்போகும் தன்மை கண்டது உண்டா! ஈக்கள் மொய்த்தால் பண்டங்கள் கெட்டுவிடும்.எங்கும் பைத்தியங்கள் மீண்டும் மீண்டும் சங்கமித்தால் இவ்வுலகம் கெட்டுவிடும்.  கலாச்சார சீரழிவின் கரையை தொடுகிறார்கள், ஓடுகிறார்கள். 

பாராட்டு மழையில் நனைந்ததோ சிலர். பார்த்து ரசித்ததோ பலர். தாங்கள் செல்ல முடிந்தும் இதுபோன்ற பைத்தியகாரதனத்தில் ஈடுபட மனமின்றி விலகி நின்றோரை கண்டதுண்டா! வரமுடியவில்லையே என வருத்தம் தெரிவிக்கிறார்கள், அறிவிக்கிறார்கள். 

வெளிநாட்டில் வாழ்ந்தும் உள்நாட்டில் மனம் வைத்திருப்போர். வழி தெரியாது தவித்திருப்போர். எட்டாத கனியை கண்டு ஏக்கம் கொண்டு நிற்பார்கள் பார்த்தது உண்டா! கனவுலகம் என்றே அறிந்தே காலையும், மாலையும் பாராது அலைகிறார்கள், சிலைகளாகிறார்கள்.

இன்னும் இன்னும் எப்படியோ! எவரேனும் ஏதேனும் சொல்லித் திரிவார்கள். துவண்டு போய் தொலைந்து போய்விடுவோமோ! பிறர் பார்வையில் பைத்தியங்களாகவே இருந்துவிட்டுப் போவோம். குறைந்த பட்சம் இந்த பைத்தியங்கள் மூலமாவது இந்த உலகம் சுபிட்சம் பெறட்டும். 

விதை மெதுவாய் வளரட்டும். விருட்சம் ஆகட்டும். விழி கொண்டு பார்த்தே மகிழட்டும். விடை பெறும் தருணமிது. வியக்கும் நாள் அது வருமது. கனவுகள் கலைகிறது, மனிதர்கள் கவலைகளால் கதறிக் கொண்டே இருக்கிறார்கள், மரிக்கிறார்கள். 

Sunday 18 December 2011

பின்னூட்ட புண்ணாக்கு

புண்ணாக்கு எனப்படுவது மாட்டு தீவனத்தில் ஒன்று. இந்த புண்ணாக்கு பொதுவாக எண்ணை நிறைந்த வித்துகளில் இருந்து எண்ணை நீக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்படுகிறது. அதாவது தமிழில் சக்கை என சொல்வார்கள். இந்த சக்கையில் என்ன சத்து இருந்து விடப்போகிறது என நினைக்காமல் அதை ஒரு தீவனமாக பயன்படுத்திய முன்னோர்களின் அறிவு!

தாவரங்கள் ஒளியின் உதவியால் உணவை உற்பத்தி செய்கின்றன. தாவரங்கள் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) உட்கிரகித்து அவற்றை நீருடன் இணைத்து ஆக்சிஜனையும், குளுக்கோசையும் உருவாக்குகிறது.  இந்த உணவு உருவாக்கும் முறையானது இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. ஒன்று ஒளியின் உதவியால் நடைபெறுகிறது மற்றொன்று ஒளியின் உதவியின்றி நடைபெறுகிறது. நீரினை பகுத்திட ஒளி பயன்படுகிறது. அத்துடன் ஒளியின் வேலை முடிவடைந்து விடுகிறது. அதன் பின்னர் எலக்ட்ரான்கள் உயர் ஆற்றல் நிலை அடைவது, புதிய ஆற்றல் மூலக்கூறு நடைபெறுவது என வேலை தொடர்கிறது. அதற்கு பின்னர் ஒளியற்ற நிலையில், கால்வின் சக்கரம், குளுக்கோஸ் உருவாக்கப்படுகிறது. இலையின் பசுமை நிறத்து காரணியான குளோரோபில் எனப்படும் பொருளின் மூலமே இந்த உணவு தயாரிக்கும் முறை நடைபெறுகிறது, ஏனெனில் இந்த குளோரோபில் ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டது. மனிதரின் செல்களில் இந்த குளோரோபில் போன்ற ஒன்றை உருவாக்க இயலுமா என்பதுதான் எனது நீண்ட நாளைய ஆராய்ச்சி கனவு. அதாவது மரங்களே இல்லாத சூழல் ஒன்று வருகிறது என வைத்து கொள்வோம், அப்பொழுது மனிதர் போன்ற விலங்கினங்கள் தங்களுக்கு தாங்களே உணவு தயாரிக்க இயலுமா என்பதுதான் பரிணாம, மரபணு வழியில் வந்த ஒரு புது சிந்தனை. பார்க்கலாம்.

ஒளி தாயரிப்பு எப்படி ஏறடுகிறது என்பதற்கான வேதிவினை இது.

                                                       ஒளி
கார்பன் டை ஆக்சைடு + நீர் --------------------------> குளுக்கோஸ் + ஆக்சிஜன்
                                                    குளோரோபில்

இந்த குளுக்கோஸ் பலவகையில் மாற்றம் கொள்கிறது. இந்த குளுக்கோஸ் செல்களில் உள்ள செல்லுலோசாக மாற்றம் கொள்கிறது. அதாவது பாலிமர் என இதை குறிப்பிடுகிறார்கள். இந்த குளுக்கோஸ் பல குளுக்கோஸ்களுடன் ஒரு இணைப்பு சங்கிலி ஏற்படுத்தி உருவாவதுதான் செல்லுலோஸ்.

மேலும் இந்த குளுக்கோஸ் எளிதாக நீரில் கரையும் தன்மை உடையதால் எதிர்கால சேமிப்புக்கு என இவை அப்படியே இருக்க முடியாது என்பதால் இவை ஸ்டார்ச் எனும் மற்றொரு பாலிமர் போன்று தன்னை மாற்றி கொண்டு சேமிப்பாக மாறிவிடுகிறது. இந்த ஸ்டார்ச் பிறிதொரு நாளில் தாவரங்கள் உணவு தயாரிக்க முடியாது போகும் பட்சத்தில் குளுக்கோஸாக மாற்றம் உடைந்து பயன்படுகிறது. இந்த ஸ்டார்ச் கரையும் தன்மை அற்றது. இந்த ஸ்டார்ச் அமைலோஸ், அமைலோபெக்டின் எனும் இரு பொருட்களால் ஆனது. இந்த இரண்டுமே பல குளுக்கோஸ் இணைந்து உருவான சிறிது வேறுபாட்டுடன் கூடிய இரட்டை பிள்ளைகள்.

இப்படியான குளுக்கோஸ் தாவர விதைகளில் எண்ணையாக மாற்றம் கொள்கிறது. மேலும் இந்த குளுகோஸ் பழங்களில் வேறொரு இனிப்பாக சுக்ரோஸ், பிரக்டோஸ் என மாற்றம் கொண்டு அதிக இனிப்பு தன்மையை உருவாக்குகிறது. மேலும் இந்த குளுக்கோஸ் நைட்ரெட் போன்ற தாது பொருட்களுடன் இணைந்து அமினோமிலங்கள் உருவாக்கி பின்னர் புரதம் உருவாக்குகிறது. மிக முக்கியமாக ஆற்றலை தருவது இந்த குளுக்கோஸ் தான். செல்களில் நடைபெறும் சுவாச வேதி வினையின் காரணமாக இந்த குளுக்கோஸ் ஆற்றலாக மாறுகிறது.

குளுக்கோஸ் + ஆக்சிஜன் ------------------> கார்பன் டை ஆக்சைடு + நீர் + ஆற்றல் (சக்தி)

இப்படி தாவர விதைகளில் எண்ணையாக மாறிய குளுக்கோஸ் தனை விதைகளை நசுக்கி, பிழிந்து எண்ணையை பிரித்தெடுத்து விடுகிறார்கள். சில நேரங்களில் விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து எண்ணையை ஆவியாக்கி பின்னர் குளிரூட்டி பிரித்து விடுகிறார்கள். இப்பொழுது கிடைக்கும் சக்கையானது இந்த குளுக்கோஸ் மூலம் உருவான பல பொருட்களால் ஆனது. அதைத்தான் புண்ணாக்கு என அழைக்கிறார்கள். இது சக்கை என்றாலும் இதில் உள்ள பொருட்களை செரிக்கும் தன்மையை இந்த மாடு போன்ற விலங்கினங்கள் கொண்டுள்ளன. நம்மால் இந்த பொருட்களை செரிக்கும் திறன் கிடையாது, எனவேதான் கரும்பில் இருக்கும் திரவத்தை உறிஞ்சிவிட்டு சக்கையை துப்பி விடுகிறோம். வாழைப்பழ தோலை தூக்கி எறிவதும் இதன் காரணமே. ஆனால் ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் இவைகளை உண்டு செரித்து கொள்கின்றன.

புண்ணாக்கு பெயர்க்காரணம் கூறுக. தாவர விதையை காயப்படுத்தி உருவாக்கப்பட்ட பொருள் என்பதால் புண்ணாக்கு என அழைக்கப்பட்டது. புண் + ஆக்கு = புண்ணாக்கு என கொள்ளலாம்.  பிண்ணாக்கு =பிண்ணம் +ஆக்கு , அதாவது சிதைத்து பின்னர் உருவாக்கியது, விதைகளை கூழாக நசுக்கி பின்னர் கிடைப்பது எனப்பொருள், ஹி..ஹி இது ஏதோ நினைவில் இருந்து எழுதுகிறேன், சரியானு தமிழ் ஆர்வலர்கள் தான் சொல்லனும்! (நன்றி வவ்வால்) இந்த புண்ணாக்கு கடலை, தேங்காய், எள்ளு, ஆமணக்கு போன்ற எண்ணை விதைகளில் இருந்து உருவாக்கப்படுகிறது.

புண்ணாக்கு என ஒருவரை அழைப்பது அவரிடம் சரக்கு எதுவும் இல்லை என்பதை குறிக்கவே. அதாவது மிகவும் பயன்பாடான எண்ணை நீக்கப்பட்ட பின்னர் உள்ள சக்கையை போல அவர் இருக்கிறார் என சொல்லாலம், ஆனால் அது கூட ஒருவகை தவறுதான், ஏனெனில் புண்ணாக்கு கூட பயன்பாடான பொருளாகவே இருக்கிறது என்பதை அறிந்தோம். ஜீரோ எழுத்தில் எழுதப்பட இருப்பதை போல எந்த ஒரு பொருளும் ஒன்றும் இல்லாமல் இல்லை. அதாவது எதுவுமே இல்லாமல் எதுவுமே இல்லை.

மதிப்பிற்குரிய எனது நண்பர் ஒருவர் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது தவறு என சொன்னார். அதாவது இந்த வலைப்பூ எழுதுவதன் மூலம் பிறர் பயன்பட வேண்டும் என்றும் கருத்து பரிமாற்றம் நிகழ வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். பலர் வந்து மறுமொழியோ, பின்னூட்டங்களோ எழுத வேண்டும், அப்படி எழுதி கருத்துகளை பரிமாற வேண்டும். ஒரு எழுத்துக்கு  பின்னூட்டங்கள், மறுமொழிகள், எழுதுபவரை உற்சாகத்தில் வைத்திருக்கும், இல்லையெனில்  ஈ ஓட்டுவது, காற்று வாங்குவது என பொருள்படும் என்பது அவரது கருத்து. ஆனால் எனக்கு சொல்லி தந்த ஆசிரியரோ எவருமே செருப்பு அணியாத இடத்தில் சென்று செருப்பு விற்பவனே அதி புத்திசாலி என சொல்லிக் கொடுத்தார். ஒன்றை விரும்பாத, ஒன்றை அறியாத மக்களிடம் சென்று புதுமையை புகுத்துவது. அதன் மூலம் அவர்களை அந்த விசயத்திற்கு அடிமையாக்குவது என்பதாகும்.

நீங்கள் வலைப்பூக்களில் சென்று இடும் உங்கள் பின்னூட்டங்கள் புண்ணாக்கா? எண்ணையா?

Thursday 15 December 2011

இவர்கள் எல்லாம் ஏன் எழுதுவதில்லை

சேவல் கூவும் முன்னர் எழுந்திருந்து, சூரியன் உதிக்கும் முன்னர் வாசல் தெளித்து, கோலம் இட்டு பழைய சோற்றினை பாங்காய் உண்டு களை எடுத்திட காட்டுக்கு விரைந்து நெற்பயிர்களும், சோலைக் கதிர்களும் வளர வழி செய்து, ஆட்டுக்கும், மாட்டுக்கும் புல் கட்டு சுமந்து ஓயாமல் ஆடியாடி ஓடியாடி வேலையே கதியென கிடக்கும் இவர்கள் ஏன் எழுதுவதில்லை?

பூமியை தோண்டி அதற்குள் சிமேண்ட்டையும், கற்களையும் குழைத்து போட்டு வீடு கட்ட செங்கலும், சுண்ணாம்பு கலவையும் சுமந்து திரியும் சித்தாள்களும், பிதாகரஸ் தியரம் தெரியாது போனாலும், அல்ஜீப்ரா, டிரிக்நோமேட்ரி என எதுவும் புரியாது போனாலும் விழுந்து விடாத வீட்டை வலுவாக கட்டி வைக்கும் கொத்தனார்களும் ஏன் எழுதுவதில்லை?

உயிருக்கு போராடும் மாந்தருக்கு தனது உயிரையும் பொருட்படுத்தாது இரவும் பகலும் கண் விழித்து வாந்தியையும் வாடையையும் பொருட்படுத்தாது உயிர் காப்பாற்ற உழைக்கும் நர்ஸ்களும், சிறிது நேரம் கூட ஓய்வில்லாமல் அறுவை சிகிச்சை அறையிலேயே அடைந்து கிடக்கும் மருத்துவர்களும் ஏன் எழுதுவதில்லை?

மௌனமாய் மரத்தின் கீழ் அமர்ந்து மாபெரும் சோதி கண்டபின்னும் தான் கண்டது கடவுளென கூறாமல் கலையாத தவம் கொண்டோர்களும், குப்பை நிறைந்த சாலைகளை துப்புரவாக்கி, பசியென அலையும் பலருக்கு அன்னம் தயாரித்து சமூக சேவகமே தனது சிந்தனையாய் போராடுபவர்கள் ஏன் எழுதுவதில்லை?

உரிமைகள் தொலைந்தது என உயிரை தந்து உரிமை மீட்டிட ஒரு வாய் சாதம் கூட நிம்மதியாய் உட்கார்ந்து சாப்பிட வழியின்றி சமூக அவலங்களை துடைத்திட துடியாய் துடிப்பவர்கள் ஏன் எழுதுவதில்லை?

கருமமே கண்ணாய், காரியமே கருத்தாய் கண்ணீர் துடைப்பதே செயலாய் முதியோர்களுக்கு குழந்தைகளாய், ஆளில்லார்க்கு ஆளாய் அவதியை இன்பமாய் பாவித்து வாழ்பவர்கள் ஏன் எழுதுவதில்லை?