Tuesday 8 November 2011

வேணாம்னா விட்டுருங்க அணுத்தொல்லையை

கூடங்குளத்தில் வேகமாக பயன்பாட்டுக்கு உட்படுத்தவிருக்கும் அணுமின் நிலையத்தை எதிர்த்து ஒரு சாரார் போராட்டம் நடத்தி வருவது வியப்புக்குரியது அல்ல. இதற்கு முக்கிய காரணம் பயம். 

இந்த திட்டம் ராசீவ் காந்தியால ஆரம்பிக்க பட்டது. சோவியத் யூனியன்ல பிரச்சினை வராம இருந்து இருந்தா இந்நேரம் கூடங்குளம்  சூப்பரா வேலை செஞ்சிட்டு இருந்துருக்கும். காலம் கடந்ததால் இந்த கூப்பாடுகள். அதைவிட முக்கியமான ஒன்னு என்னன்னா யுரேனியம் நம்ம நாட்டுல குறைந்த அளவுலதான் கிடைக்குதாம். நாம பல நாடுகள்கிட்ட ஒப்பந்தம் போட்டு இறக்குமதி செய்றம். அதுக்கு எத்தனை கோடி செலவோ? இப்படி கஷ்டப்பட்டு கடனை உடனை வாங்கி 14000  கோடி ரூபாய்ல 2001  ல ஒரு ஒப்பந்தம் போட்டு அப்படி இப்படின்னு கூடங்குளம் அணுமின் நிலையத்த ஆரம்பிக்கிற நேரத்தை பார்த்து சிவ பூஜையில புகுந்த கரடி மாதிரி ஜப்பான் நாட்டுல நடந்த துயர செய்தி லேசு பாசா இருந்த போராட்டத்துக்கு ரொம்ப வசதியா போச்சு. 

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைமை அப்படின்னு அஞ்சாங்கிளாசுல படிச்சது எல்லோருக்கும் நினைவில இருக்கும் போல. அதுவும் இந்த ஜப்பான் நாட்டுல நடந்த பெரும் துயரத்திற்கு அப்பால உலக நாடுகளே ஒரு நிமிஷம் நமக்கு அணு உலை எல்லாம் தேவையான்னு ஒரு மாநாடு போட்டுகிட்டாங்க அவங்க அவங்க ஊருல. 

எப்படித்தான் இருந்தாலும் துணிஞ்சவனுக்கு துக்கமில்லை அப்படின்னு 1986ல  தற்போதைய உக்ரைன், அன்றைய சோவியத் யூனியன்,  நாட்டுல நடந்த பெரும் அணு உலை விபத்து நடந்தப்பறம் கூட உலகத்துக்காரங்க எதையும் நிறுத்தி வைக்கலையே. இது ஒரு செயற்கை விபத்து. இதனால பாதிக்கப்பட்டவங்க ரொம்ப பேரு. இந்த பூமி எப்பவும் அழிவை எதுத்துதான் போராடுதுன்னு பாதிக்கப்பட்டவங்களுக்காக துக்கம் அனுசரிச்சிட்டு அடுத்த வேலைய அந்த ஊரு மக்கள் கவனிக்க போய்ட்டாங்க. இந்த விபத்தினால சோவியத் யூனியனோட மொத்த பொருளாதாரமே ஆட்டம் கண்டுருச்சி. இந்த  விபத்தினால வந்த அழிவை சரி செய்ய கோடி கோடியா ரூபில்ஸ் செலவாகிப் போச்சு.   ஆனா ஜப்பான் நாட்டுல நடந்த இந்த அணு உலை விபத்து இயற்கை சீற்றத்தினால வந்தது. அங்க கசிஞ்ச கதிரியக்கம் அயர்லாந்து நாட்டுல ரெகார்ட் ஆச்சு அப்படின்னு பேசிகிட்டாங்க. காலம் போகப் போக நம்ம மனுஷ சாதி பல விசயங்களை மறந்துரும். இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சி பாருங்க, புது அணுமின் நிலையத்தை ஜப்பான் நாட்டுக்காரங்க கட்ட ஆரம்பிச்சிருவாங்க, அதுவும் எப்படி தெரியுமா? எந்த இயற்கை சீற்றம் வந்தாலும் நொட்டமுடியாதபடி. அது அவங்களோட போராட்ட குணம். 

நமக்கும் போராட்ட குணம் இருக்கு. உங்களுக்கென்ன தெரியாதா? போராடுவோம், போராடுவோம் அணு உலையை எதிர்த்து போராடுவோம். வைக்காதே வைக்காதே எங்கள் உயிருக்கு உலையை வைக்காதே. போராடுவோம் போராடுவோம் ஊழலை எதிர்த்து போராடுவோம் அப்படின்னு கத்து கத்துனு கத்திட்டு இந்த அரசாங்க பலத்துக்கு முன்னால கடைசியில பம்மிட்டு போறவங்கதான் முக்காவாசி நம்ம ஊருக்காரங்க. 'ஏலே ஒழுங்கா உண்ணாவிரதத்தை நிறுத்திட்டு ஓடிப்போயிரு, சாலைய மறிக்கிறது, கட்டவிடாம தடுக்கிறது அப்படின்னு ஆட்டம் கிட்டம் போட்ட குண்டர் தடுப்பு சட்டம், தீயவர் தடுப்பு சட்டம், அணு உலை அக்கிரமர்கள் சட்டம் அப்படி இப்படி ஆரம்பிச்சி உள்ள போட்டுருவோம்'   என மிரட்டி அடக்கிருவாங்கே. இந்த போராட்டம் இங்க மட்டும் இல்லைங்க, மும்பைக்கு பக்கத்துல ஜைடாபூர் அங்கிர ஊருல புதுசா ஒரு அணு மின் நிலையம் கட்டப்போறத எதிர்த்து அங்க வாழற மக்கள் போராடிகிட்டு இருக்காங்க. பத்தாயிரம் பேரு தங்களுடைய இடம், காடு எல்லாத்தையும் இந்த திட்டத்துக்காக இழக்கனுமாம். மீனவர்கள் தங்களோட மீன் பிடிப்புக்கு பாதிப்பு வரும்னு ஒரே எதிர்ப்பு. மேற்கு வங்காள அரசு 'போங்கடா நீங்களும் உங்க அணுத் தொல்லையும்' அப்படின்னு ஹரிபூர்ல கட்ட கூடாதுன்னு விரட்டி அடிச்சிட்டாங்க. 

அப்துல்கலாம் கனவு காண சொன்னாரு, அது ரொம்ப பேருக்கு ரொம்ப ஈசியா இருந்துச்சி. ஹையா ஐயா சொல்லிட்டாரு அப்படினுட்டு ரொம்ப பேரு கனவு காண ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப ஐயாவும் தன்னோட பங்குக்கு இப்படியெல்லாம் எதிர்க்காதீங்க, விளைவுகள் நினைத்தால் விளைச்சல பார்க்க முடியுமா அப்படிங்கிற ரேஞ்சுக்கு சொல்லிட்டாரு. அதனால ரொம்ப பேரு இந்த போராட்டத்தை கைவிட்டுரலாம்னு யோசனையில இருப்பாய்ங்க அப்படினுட்டு ரொம்ப பேரு அப்துல்கலாம் சொல்றதை கேட்காதீங்க அப்படிங்கிற அளவுக்கு போராட்டத்தை தீவிரபடுத்தி இருக்காங்க. 

நம்ம மக்களோட பயம் நியாயம்தானே. ஒழுங்கா ரோடு போட தெரியாதவங்க கிட்ட போய் இந்த அணு உலைய கொடுத்தா குரங்கு கையில பூமாலை கொடுத்த கதை மாதிரி ஆகிப்போயிரும். போபால் கதை எல்லாம் நமக்கு மறந்து போச்சா. அது மறந்துருக்கும், நமக்கு கோபால் கோபால் அப்படிங்கிற வசனம் தான் நியாபகத்துல இருக்கும். நம்ம நாட்டுல இதுவரைக்கும் ஆறு தடவை இந்த அணு உலை சிறு விபத்து நடந்துருக்கு. இதெல்லாம் சின்ன சின்ன விபத்துதான் அப்படின்னு ஒதுக்கி வைக்க முடியாது. அதே நேரத்துல ஒரு விசயத்தை செஞ்சா ஆயிரத்தெட்டு பிரச்சினை வரும், பிரச்சினைய நினைச்சா வாழ முடியுமாலே. பிரச்சினை வரத்தான் செய்யும்னு சொல்றியள, ஏலே பிரச்சினைக்கு என்ன சொலுசண் வைச்சிருக்க,  ஒழுங்கா சேப்ட்டி பண்ணிகிட்டா எங்களுக்கு என்ன பிரச்சினை. அதை சொல்லுவே அப்படிங்கிற மக்களோட கோரிக்கை நியாயம் தானே. ஆனால் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடிமா என அரசுதனை கேட்டால் அவர்கள் என்ன சித்திரகுப்தர்களையா மந்திரிசபையில் உட்கார வைத்து இருக்கிறார்கள், கணக்குகளை எல்லாம் மாற்றி எழுத. 

மின்சாரம் எப்படி தயாரிக்கிறது அப்படிங்கிறதை பத்தியும், இந்த அணு உலை எப்படி செயல்படுது, வேறு மாற்று வழிகள் என்ன எனபதையும், ஐசொடோப்கள், புளுடோனியம், யுரேனியம் அதனோட 'பாதி வாழ்க்கை காலம்' (4600 மில்லியன் வருடங்கள் அல்லது 4.6  பில்லியன் வருடங்கள் யுரேனியம் பாதியா குறைய), ஆல்பா, பீட்டா, காமா போன்ற கதிர்கள் பத்தின தகவல்களை, இதனால் ஏற்படும் விளைவுகளை இன்னொரு பதிவுல விளக்கமா பார்ப்போம். அப்பத்தான் நம்மவங்களோட பயம் நியாயமா இல்லையா அப்படின்னு தெரியும். 


சரி அதெல்லாம் இருக்கட்டும் என்னதான் முடிவு. 

அணு உலை வேணுங்கிறவங்க தமிழ்நாட்டுல வாழட்டும். 'அணு உலை வேணாம்னு நினைச்சீங்கன்னா, உங்க போராட்டம் ஜெயிக்காதுன்னு ஆகிப்போச்சுனா ஒரே வழி இருக்கிறது. தமிழகத்தை விட்டு மட்டுமில்லை, இந்தியாவை விட்டே ஓடிப்போயிருங்க அப்படின்னு கூட நாலு ஐஞ்சு பேரு அறிவுரை சொல்லலாம். எல்லாத்துக்கும் தலையாட்டிக்கிட்டே அவதிபட்டுட்டு அங்கேயே இருங்க. 

மத்தவங்க சொல்றது இருக்கட்டும், நான் என்ன சொல்ல வரேன்னா 'ஊருல மின் பற்றாக்குறை ரொம்ப ஜாஸ்தி. இதுக்கு உற்பத்தி அளவு குறைச்சல் மட்டுமில்லை காரணம். நாம அளவோட மின்சாரத்தை உபயோகம் செய்றது இல்ல. புது வீடு, புது ஏசி, புது சலவை மெசினு, புது மோட்டாரு அப்படின்னு சகல வசதிகளையும் பெருக்கி வைச்சிட்டு நைட்டுல தூங்கறப்ப கூட லைட்ட போட்டு தூங்குறது, நல்ல மழை பெய்யும் ஆனாலும் வாய்க்காலுல தண்ணி விடறது, வக்காளி பொதுக்கூட்டம் போட்டாலும் சரி, ஒரு படம் ரிலீசானாலும் சரி, பொண்ணு வயசுக்கு வந்துட்டாலும் சரி, மாப்பிளைக்கு கல்யாணம் வைச்சாலும் சரி, அம்மனுக்கு தெருவெல்லாம் தேரு இழுத்தாலும் சரி, நட்டு வைச்சிருக்கிற அத்தனை போஸ்ட்ல இருந்தும் கரண்ட களவாடறது, குளிர்காலத்துல ஏசி தியேட்டுர்ல போய் உட்கார்ந்துட்டு ஏசிய போட சொல்லி அலம்பல் பண்றது, அல்லாப்பயகளும் தூங்கனப்புறம் கூட விளம்பர தட்டிக்கு லைட்டு கனக்சன் கொடுக்குறது   இப்படி சகட்டு மேனிக்கு நாம மின்சாரத்தை வேஸ்ட் பண்றத நிறுத்தறதுக்கு ஒரு போராட்டம் நடத்தனும். ஜெயராம் ரமேஷும், கோபால கிருஷ்ணனும், யாரு இவங்க அப்படின்னு கேட்டு தொலைசிராதீங்க, தங்களோட வாய்ச காட்டட்டும். நாமளும் வாய்ச மட்டும் காட்டாம உடனே வெட்டியா ஓடிட்டு இருக்கிற அத்தனை எலேக்டரிகளை நிறுத்துவோம். 

Monday 7 November 2011

புத்தகங்களும் ஆராய்ச்சி கனவுகளும்

 நுனிப்புல் பாகம் இரண்டு தயாராகி சில வருடங்கள் ஆகிவிட்டது. அந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என நண்பர் அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களிடம் சென்ற வருடம் விசாரித்தபோது 'தொலைக்கப்பட்ட தேடல்கள்' சிறுகதை தொகுப்பு இன்னமும் அப்படியே இருக்கிறது, நீங்கள் அனுப்பி வைத்த நுனிப்புல் பாகம் ஒன்று நாவல் இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒரு அறை எல்லாம் புத்தகங்களாக நிரம்பி வழிகின்றன என்றார். சரி என்ன செய்வது சற்று தாமதிக்கலாம் என விட்டுவிட்டேன். சில பல காரணங்களால் வலையுலகத்தில், இணைய உலகத்தில் பழகிய பலர் தொடர்பில் தற்போது இல்லவே இல்லை. இதற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம் என நான் நினைத்தாலும், என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என எவருமே நினைக்கவில்லை என்பது சற்று வித்தியாசமாகவே உணர முடிந்தது. வாழ்க்கை புரிந்து போனது. 

சரி, தம்பி செல்வமுரளியிடம் விசாரிப்போம் என சில வருடங்கள் முன்னர் முதலில் கேட்டபோது, நீங்கள் எந்த புத்தகத்தையும், எந்த பதிகப்பதார் மூலமாவது வெளியிடுங்கள் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை ஆனால் ஒரு ஆராய்ச்சியாளனின் பாதையை நீங்கள் எழுதி முடித்தபின்னர் எனது பதிப்பகத்தின் மூலம் தான் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். சரி என ஒப்புதல் தந்தாலும் இன்னமும் எழுதி முடிக்கவில்லை. இதில் பல விசயங்கள் இணைத்து, கழித்து பின்னர் வெளியிட வேண்டும். எனவே இன்னும் சில வருடம் கால தாமதம் ஆகலாம். 

எனது மகன் பெறும் 'ப்ளாக் பெல்ட்' கராத்தே சான்றிதழ் வழங்கும் விழா அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடக்கலாம். அதற்கு எனது புத்தகம் ஒன்றை வெளியிடலாம் என கராத்தே மாஸ்டர் சில மாதங்கள் முன்னர் சொன்னபோது எனக்கு மனதில் இருந்த இரண்டு கதைகள் ஒன்று நுனிப்புல் பாகம் இரண்டு, மற்றொன்று அடியார்க்கெல்லாம் அடியார். நுனிப்புல் பாகம் இரண்டு வெளியிட்டால் தான் நுனிப்புல் பாகம் மூன்று அடுத்த வருடம் எழுதலாம் என்கிற யோசனை வேறு. என்ன செய்வது?

ஒரு நல்ல பதிப்பகம் வேண்டும், புத்தகங்களை மட்டும் வெளியிட்டு விட்டு அத்தோடு நிறுத்திவிடாமல் அதை நல்ல முறையில் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை பல தொண்டு நிறுவனங்களுக்கு தர வேண்டும். இதை சிரத்தையுடன் செய்வது யார்? எழுதும் ஆசிரியன் எனக்கே இந்த விளம்பர புத்தி இல்லாமல் இருந்தால் எவரைப் போய் குற்றம் சொல்வது? ஆங்கில நாவல் எழுத வேண்டும் என ஆவலுடன் தொடங்கிய எழுத்து ஒரு அத்தியாயம் கூட தாண்டாமல் அப்படியே இருக்கிறது. 

இந்த புத்தகங்களை எல்லாம் சிறப்பாக அச்சிட ஏதேனும் நிறுவனம் கிடைக்குமா? நாமே பதிப்பகம் என போட்டு வெளியிடலாமா எனும் ஓராயிரம் யோசனையுடன் புத்தக கனவுகள் அப்படியே நிற்கின்றன. 

நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இதோடு பதினான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு வருடத்தையும் திரும்பி பார்க்கும்போது ஏதோ ஒன்று மிச்சப்பட்டு போனது போன்றே உணர்வுகள். 

பலமுறை கிடைத்த தொடர் தோல்விகள். பலமுறை ஏற்பட்ட தடங்கல்கள். இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும், மக்கள் பயன் பெறுவார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு மருந்து ஆமை போலவே நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இதை செய்து தாருங்கள், அதை செய்து தாருங்கள் என பல ஆய்வுகள் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். இன்னமும் மருந்து வெளிவந்தபாடில்லை. 

புதிய மருந்துகள் கண்டுபிடிக்க எண்ணற்ற விலங்குகளை கொன்றது மட்டுமே மிச்சமாக இருக்கிறது. சில ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் சில மூலக்கூறுகளை காப்புரிமை செய்து வைத்திருக்கிறார்கள், ஆனால் எனக்கு அதில் உரிமை என்றே சொல்லிவிட்டார்கள். பல ஆய்வு கட்டுரைகள் வெளியிட முடியாத நிலையில் இருக்கின்றன. எனது ஆய்வு குறித்த முழு விபரங்களும் எங்கேயும் சொல்ல முடியாத நிலைதான் நிலவுகிறது. இரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்றே சொல்கிறார்கள். மக்கள் பயன் பெற எவர் பெயர் எடுத்தால் என்ன என்கிற மனநிலையே எனக்கு இருக்கிறது. 
இந்த ஆராய்ச்சி கனவுகள் கூட முழுமை பெறாமல் அப்படியே நிற்கின்றன.

கனவுகள்தனை நிறைவேற்றும் முயற்சிக்கான போராட்டம் தொடரட்டும். 

Sunday 6 November 2011

புகழைக் கண்டு அஞ்சுபவரோ?

பாராட்டு மழைக்கு மகிழாதவர்களே இல்லை. நாம் செய்வது நமக்கு திருப்தியாக இருந்தாலும் மற்றவர் அந்த செயலை சுட்டிக்காட்டி பாராட்டினால் மனதில் ஒருவித சந்தோசம் நிலவும். இதை வெளிக்காட்டிக் கொள்ளும் நிலை ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. 

ஒரு செயலை செய்துவிட்டு அதற்கான பாராட்டுகளை எதிர்நோக்கி இருப்போரும் உண்டு. அப்படி பாராட்டு கிடைக்காத பட்சத்தில் எதற்கு அந்த செயலை செய்தோம் என்கிற சலிப்பும் ஆற்றாமையும் ஏற்படுவது உண்டு. 

எனது கடமையை செய்கிறேன், இதன் மூலம் எனக்கு பாராட்டுகளோ, அவமதிப்புகளோ ஏற்பட்டாலும் பரவாயில்லை, எனது வேலையை தொடர்ந்து செய்வதுதான் எனது தலையாய பணி என இருப்பவர்கள் வெகு சிலரே. ஏனெனில் நமது மனம் சின்ன சின்ன அங்கீகாரத்தை எதிர்நோக்கியே பயணத்தைத் தொடர்கிறது.  இந்த சின்ன சின்ன அங்கீகாரம், பாராட்டுதனை  'உந்து சக்தி' என அழைக்கிறார்கள்.

சின்ன சின்ன பாராட்டுகள் மனிதர்களை மிகவும் மகிழ்ச்சியுடன் வைப்பதோடு மட்டுமன்றி தொடர்ந்து சிறப்புடன் பணியாற்ற வைக்கின்றன. தொழிற்சாலைகள் போன்றவற்றில் இதற்காகவே சிறப்பு விருதுகள், அன்பளிப்புகள், ஊக்கத் தொகை என கொடுத்து பணியாளர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். 

'நாம பண்ற காரியத்தைப் பாத்து நாலு பேரு பாராட்டுனும்யா, அதுதான்யா மனுசனுக்கு அழகு' என்றும் 'செய்ற செயலுக்கு உதவி செய்யாட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் இல்லாம இருந்தா போதும்' என்றும் வழக்கு மொழிகளில் பரிமாறி கொள்பவர்கள் உண்டு. 

இப்படித்தான் மனைவியுடனும், மகனுடனும் நேற்று இரவு காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது 'ஒரு செயலை செய்ததற்காக என்னை வெகுவாக பாராட்டினார்கள். அவர்கள் செய்யும் செயலை கூட உங்களோட ராசி, இதை செய்து தாருங்கள், அதை செய்து தாருங்கள் என கேட்டார்கள். நானோ இதில் என்ன இருக்கிறது, எல்லாம் இறைவன் செயல், எனது கடமையை செய்தேன், நடந்தது. இதில் எனது ராசி எல்லாம் எங்கே வந்தது, நீங்களே செய்து கொள்ளுங்கள் என சொன்னேன்' என்றேன். இதைக் கேட்ட 'எனது மனைவியோ, ஊருக்கு எல்லாம் செய்துட்டு தான் ஒண்ணுமில்லை என வந்துவிடுபவர் உனது அப்பா' என்றார். எனது பதினோரு வயது மகன் 'நீ புகழுக்கு அஞ்சுகிறாய்' என்றான்.  எனக்கு எனது மகன் சொன்னதை கேட்டதும் 'உண்மையோ, நான் புகழுக்கு அஞ்சுகிறேனா' எனும் எண்ணம் பரவியது. இதே மாதம் சென்ற வருடம் என்னை நோக்கி 'எதற்கு அந்த தொண்டு நிறுவனத்தில் நீ செயலாளராக பணியாற்றுகிறாய், தலைவராக அல்லவா இருக்க வேண்டும், ஏதேனும் இளைய தலைவர் பதவி இருந்தால் எனக்கு கொடுக்க சொல்' என்றான். 

அவன் சொன்னதை யோசித்துப் பார்க்கிறேன். புகழுக்கு அஞ்சுபவர்கள் இருக்கக் கூடும். பேரும் புகழும் அடைந்துவிட்டால் சுதந்திரம் பறிபோய்விடும் என நினைக்கலாம். நான் ஒரு செயலாளர் என்பது அங்கு வருபவர்கள் பலருக்கு இன்னமும் தெரியாது. என்னை முன்னிலைப்படுத்தி அங்கே ஒருபோதும் நான் நிற்பது இல்லை. எனது எழுத்துகள் மட்டும் பலருக்கு தெரியட்டும், என்னைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாம் என எனது குறிப்புகள் கூட இந்த வலைப்பூவில் இருந்து நீக்கி இருக்கிறேன். எனது நூல்கள் பற்றிய விளம்பரம் கூட விலக்கி இருக்கிறேன்.  அவையெல்லாம் இனி திருப்பி எழுதிவிட வேண்டும், புகழுக்காக அல்ல, விபரத்துக்காக. 

பதவிகளும், பாராட்டுகளும் என்னை யோசிக்க வைக்கின்றன. எல்லாம் சரியாக இருந்தால் ஆஹோ ஓஹோ என பாராட்டும் அதே வாய் வார்த்தைகள் தான் சிறு தவறு இருப்பினும் மாற்றி பேசுகின்றன எனும் அச்சம் வெகுவாக நிலவுவது உண்டு. பாராட்டப்பட வேண்டும் என்றோ, பெருமைப்பட வேண்டும் என்றோ காரியம் செய்ய பலரும் துணிவதில்லை.  விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் பணியாற்றுகிறார்கள். மக்களுக்கென சேவை செய்ய தனது மொத்த வாழ்க்கையை அர்பணித்த, அர்பணித்து கொண்டிருக்கும் மாமனிதர்கள் இந்த பூவுலகில் உண்டு. 

வசதிகள், வாய்ப்புகள் எல்லாம் பெருக பெருக பணிவும், அடக்கமும் அவசியம் என்றே அறிவுறுத்தப்படுகிறார்கள். தலைமையில் இருப்பவர்கள் பிறரை அச்சுறுத்தி வைத்தே காரியங்களை சாதிக்கிறார்கள். பயம் ஏற்படுத்தி சாதித்தல். இல்லையெனில் 'தலயில மிளகா அரைச்சிருவாங்க' என புரிந்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். 'நேர்மையும், நீதியும், தைரியமும் உடையவர்கள்' பிறரை அச்சுறுத்தி வாழ வேண்டிய அவசியமில்லை, பிறருக்கு அச்சப்பட வேண்டிய தேவையும் இல்லை. 

எத்தனையோ மாமனிதர்கள் தங்கள் கடமையை செய்து கொண்டே இருக்கிறார்கள், இவர்கள் புகழுக்கு என ஏங்குவதும் இல்லை, புகழ்தனை கண்டு அஞ்சுவதுமில்லை. 

நாம் செய்யும் பணி பலருக்கும் உதவட்டும், அது ஒன்றே உன்னதமானது.