Friday 26 March 2010

புத்தகங்கள்











தமிழ் அலை பதிப்பகம், 1, காவலர் குறுந்தெரு, ஆலந்தூர் சாலை, சைதாப்பேட்டை, சென்னை - 15, தொடர்புக்கு: இஷாக் 978 621 8777



நயினார் பதிப்பகம்,  அகநாழிகை பொன். வாசுதேவன் 999 454 1010

Thursday 25 March 2010

நானும் மதங்களைத் திட்டவா?!

எனக்குத் தெரிந்த மதங்கள் என இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம், புத்த மதம் மட்டுமே. எனக்கு யூதர்கள் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்ததுண்டு. மேலும் யூதர்கள், ஹிட்லர் போன்ற விபரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமெனும் ஆவல் இதுவரை வந்தது இல்லை. இனிமேலும் வந்தாலும் வந்து தொலையும். இந்த இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம் கொண்டுள்ள புனித நூல்கள் எனக் கருதப்படும் முறையே பகவத் கீதை, பைபிள், திருக்குரான் என எதையுமே அதன் வடிவில் முழுமையாகப் படித்தது இல்லை. அதன் காரணமாக இதுவரை எதையும் இழந்து விட்டதாக கருதவும் இல்லை. மதங்கள் எத்தனைதான் இருக்கின்றன எனத் தேடிப் பார்த்ததில் இருபது மதங்கள் சம்பந்தபட்டவை இருப்பதாக தெரிந்து கொண்டேன். அப்போதுதான் எனக்குத் தெரிந்திருந்த ஜெயின், சீக்கிய மதம் எல்லாம் மதங்கள் என நினைவுக்கு வந்திருந்தது. மேலும் மதங்கள் என்றால் என்ன என முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அதுகுறித்து முழு விளக்கங்கள் வழக்கம்போல விக்கிபீடியாவில் தென்படுகிறது.

மதம் என்றால் என்ன? மதக் கோட்பாடுகள் என்றால் என்ன என்பதை ஒருவர் முழுமையாகத் தெரிந்து கொண்டால் மட்டுமே மதங்கள் குறித்த பார்வையானது முழுமை பெறும். ஆனால் நம்மில் பலர் என்ன செய்து கொண்டிருக்கிறோம் நமக்குக் கிடைக்கும் விசயங்களின் அடிப்படையில், அவ்வப்போது ஏற்படும் சில பிரச்சினைகளின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம், நமது ஆதங்கங்கள் நமது சிந்திக்கும் திறனைக் கட்டுப்படுத்திவிடுகிறது. மொத்தமாகவே மதங்கள் பொல்லாதவை, மதங்களை பின்பற்றும் மனிதர்கள் பொல்லாதவர்கள் எனும் பார்வையை ஏற்படுத்திக் கொள்கிறோம். ஒரு சமூகத்திற்கு ஏற்படும் அவலங்களுக்கு அந்த சமூகத்தைச் சார்ந்த மனிதர்களும், அந்த சமூகத்தைச் சுற்றியுள்ள காரணிகளுமே முழு பொறுப்பாக முடியும் என்பதை தெரிந்து கொள்ள ஆராய்ச்சி பட்டம் பெற வேண்டிய அவசியம் இல்லை. அந்த சமூகத்தைச் சுற்றியுள்ள காரணிகள் என முழு பங்கு வகிப்பது மதங்களே என பட்டிமன்ற தீர்ப்பு வழங்குவது போல பார்வை இருப்பதை கண்டு வருத்தமாகத்தான் இருக்கிறது.

அண்ணல் காந்தி ஒரு கோவிலுக்குச் சென்றாராம், அங்கே கோவில் களை இழந்து காணப்பட்டதாம், கோவில் வியாபாரக்கூடமாக இருப்பதைக் கண்டு அண்ணல் மிகவும் வருந்தினாராம். அதற்கடுத்து அந்தக் கோவிலுக்கு அண்ணல் காந்தி போகாமல் இருந்தாரா என்றால் அதுதான் இல்லை, அந்த கோவிலுக்கு பலமுறை சென்று இருக்கிறார். இப்போது அங்கே வியாபாரம் நடக்கிறது என்பது எந்த வகையில் ஒரு தனி மனிதனின் இறைவன் சம்பந்தபட்ட வேண்டுதலுக்குத் தொல்லை தருகிறது. நம்மை பொருள் வாங்கச் சொல்லி நச்சரிக்கும் போது நமக்கு எரிச்சலாக வருகிறது. கோவிலின் வாசலில் அமர்ந்து நம்மிடம் கையேந்தும் போது நமக்கு வேதனையாக இருக்கிறது. அவர்களின் இதுபோன்ற நிலைமைக்கு காரணம் அந்த கோவில் இருப்பதால்தான் என்றால் சற்றே சிந்தித்துப் பாருங்கள். ஏனெனில் இந்த பூமி இருப்பதால்தான் கோவில் வந்தது என நினைத்து இந்த பூமியையே அழிக்க முயற்சித்துவிட வேண்டாம். ஆனால் அதைத்தான் பெரும்பாலோனோர் மறைமுக செய்து கொண்டு வருகிறோம். மேலும் நமக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதைத்தானே நாம் செய்து கொண்டு வருகிறோம், அதுமட்டுமின்றி நமது தேவைக்காக நமக்கு விருப்பம் இல்லாததையும் நாம் செய்யத் தயங்கமாட்டோம் என்பதும் உலகம் அறிந்த விசயம்.

தீவிரவாதத்திற்குத் தொடர்புடைய மதம் என இஸ்லாமைச் சொன்னபோது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. சில மனிதர்களின் செயல்பாட்டால் ஒரு மதம் இன்னலுக்கு உள்ளாவது எத்தனை கொடுமை. சைவம் தாக்கிய சமணம் என சொல்லும்போது ஒரு வரலாற்று நிகழ்வு மதத்திற்கே பெரும் இழக்காக அல்லவா அமைந்து போகிறது. தேவர்கள், அசுரர்கள் என பிரிவினையில் எத்தனை அவதாரங்கள் தான் வந்து போனது. அன்பினால் அனைவரையும் குணப்படுத்துகிறேன், அனைவரது பாவங்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என ஒருவர் சொன்னபோது இவருக்கு என்ன அக்கறை என்றுதானே பார்க்கத் தோன்றுகிறது. என் பாவங்களுக்கு நானே காரணன் எனும் எண்ணம் எப்போது ஒவ்வொருவரிடமும் எழவில்லையே அதுவரை எந்தவொரு நிலையும் மாறப்போவது இல்லை.

நமக்கு கிறிஸ்துவ நண்பர்கள் பலர் உண்டு, இந்து நண்பர்கள் பலர் உண்டு, முஸ்லீம் நண்பர்கள் பலர் உண்டு எனச் சொல்வதில் என்ன பெருமை இருந்து விடப் போகிறது. நமக்கு வாய்த்த நண்பர்கள் நல்ல நண்பர்களா, நாம் நல்ல நண்பராக நமக்கு வாய்த்த நண்பர்களிடம் இருக்கிறோமா என்பதில்தானே நமது அக்கறை இருக்க வேண்டும், பெருமைபட்டுக் கொள்ள வேண்டும். இந்த மதத்தின் சாயம் பூசப்பட்டதால் மட்டுமல்ல, மதத்தின் சாயம் பூசப்படாதபோதும் கூட நண்பர்கள் என எவரையேனும் ஏற்றுக்கொள்வது பெரும் சிரமமான காரியமாகத்தான் நமக்கு இருக்கிறது. எவரைத்தான் நம்பிக்கையின் பேரில் இந்த உலகில் நம்பி வாழ்வது, நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறார்கள், அந்த நம்பிக்கையினால் மட்டுமே அழிந்து கிடப்போர்கள் எண்ணிக்கை இவ்வுலகில் அதிகம். இதற்கு மதம் மட்டுமே எப்படி பொறுப்பாக முடியும்? கடவுள் காப்பாத்துவார் எனும் நம்பிக்கை இருக்கிறவர்கள் எவரேனும் படிக்காமல் இருக்கிறார்களா? வேலைக்குப் போகாமல் இருக்கிறார்களா? அவரவர் அவரவருக்குத் தெரிந்த காரியங்களைத்தானே செய்து வருகிறார்கள். இதில் மதங்களின் செயல்பாடு என்பது எப்படி ஒரு தனி மனிதனுக்குத் தொல்லையாக முடியும்.

சாமியார்கள் பற்றி பெரும் விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகிறது, இங்கே குறிப்பிடப்போகும் விசயம் என்னவெனில் சாமியார்கள் மட்டுமா ஏமாற்றுகிறார்கள், ஏதாவது ஒருவகையில் சக நண்பரை, தந்தையை, தாயை, சகோதரியை, சகோதரனை, மனைவியை, முதலாளியை, தொழிலாளியை என உறவுகளையே ஏமாற்றி வாழும் வாழ்க்கைதானே நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றிக்கொண்டிருப்பதை நாம் சகித்துக் கொண்டு வாழ்கிறோமே, ஏமாற்று வேலையைச் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதி ஒருவர் மக்களை ஏமாற்றும் நயவஞ்சகர்களை பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்காது என்கிறார், நல்லதொரு செய்தி என்றே ஆமாம் ஆமாம் என தலையாட்டிச் செல்லும் மனிதக் கூட்டங்களாகத்தானே நாம் இருக்கிறோம். இதை வள்ளுவர் அழகாகச் சொல்வார் மக்கள் அல்ல மாக்கள் என! ஒரு தனிமனிதனின் கேலிக்கூத்துக்கெல்லாம் ஒரு சமயமோ, மதமோ பொறுப்பாக முடியாது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். கருத்துகளாலும், செயல்களாலும் கவரப்படுபவர்கள் அதன் வலியை பொறுத்துக் கொள்ளும் வலிமை பெற்றுக்கொள்ள வேண்டும். யாரோ என சொன்னப்பட்ட கருத்துக்கு எத்தனை மரியாதை இருக்கிறது இந்த உலகில், ஆனால் இவர் சொன்னார், அவர் சொன்னார் உடனே ஆஹா ஓஹோ என பாராட்டும் மனப்பக்குவம் எந்த மதம் கற்றுத் தந்தது.

மேலும் ஒரு விசயம் மட்டும் எனக்குத் தெளிவாகவே புரியவில்லை. மனிதம் மனிதம் என்று சொல்லித் திரிகிறோமே மனிதம் என்றால் என்ன என்பதை இதுவரை எவரேனும் தெள்ளத் தெளிவாக தெளிந்து வைத்திருக்கிறோமா என்றால் என்னைப் பொருத்தவரை நிச்சயமாக இல்லை என என்னால் சொல்ல இயலும்.

இந்து மதத்தைத் திட்டுகிறீர்களே, ஏன் இஸ்லாம் மதத்தைத் திட்டிப் பாருங்களேன் என சண்டையை மூட்டிவிடும் எண்ணம் பலருக்கு இருக்கிறது என்பதை அறிந்த போது மிகவும் கவலையாகத்தான் இருந்தது. ஏன் இஸ்லாம் மதத்தைத் திட்டக்கூடாது என ஏதாவது சட்டம் இருக்கிறதா?  வேதநூல் என ஒரு கதையையே எழுதி வைத்து இருக்கிறேன், ஆனால் அந்த கதையின் நுட்பம் பலருக்குப் புரியாது. இந்து மதத்தில் கூறப்படும் அவதாரங்கள் எல்லாம் மனிதர்களே என்றுதான் என்னளவில் ஏற்றுக்கொண்டு இருக்கிறேன். இறந்து போன என் தாயை தெய்வம் என கொண்டாடும் அளவுக்கு எனது எண்ணம் ஒன்றும் மழுங்கிப் போய்விடவில்லை. ஆனால் தாய் என்கிற மரியாதை, அன்பு எல்லாம் நிறையவே உண்டு. புத்தர் எனும் மனிதர் சொன்ன கருத்துகள் பிடித்திருக்கிறது என்பதற்காக என்னை பெளத்தனாக்கிக் கொள்ளும் ஆசை என்னிடம் இல்லை. என் முன்னோர்களை நினைத்து கண்ணீர் விட்டுவிடும் அளவுக்கு மனதளவில் நான் ஒரு கோழைதான்.

பெரியோர்களின் ஆசிர்வாதம் என சொல்வார்கள், அதற்காக அல்ல, பிறரின் மனம் புண்படும்படியாய் நடக்கக்கூடாது என்பதில் தான் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். இயேசு கிறிஸ்துவை ஒரு மனிதன் எனச் சொல்ல எனக்கு எவரும் தைரியம் தரத் தேவையும் இல்லை. இத்தனை காலம் மனிதர்களின் மனதில் நிலைத்துவிட்ட அந்த மனிதனை பாராட்டித்தான் ஆகவேண்டிய கட்டாயம் எதுவும் எனக்கு இல்லை.

இறைவன் மிகப்பெரியவன், இறைவனே எல்லாம் என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. மனிதனே மிகப் பெரியவன், இல்லையெனில் தனது சிந்தனையை சொல்ல இறைவனுக்கு மனித அவதாரங்களும், மனித தூதர்களும் அல்லவாத் தேவைப்பட்டார்கள். அவரவர் காரண காரியங்களுக்கு அவரவரே பொறுப்பு என்பதில் உறுதியாக இருக்கிறேன். பிறரின் உணர்வுகளை மதிக்கும் பொருட்டு நடந்து கொள்வதுதான் மனிதம் என்கிற காரணத்தினாலேயே மனிதம் மீறிச் செயல்படுவோர்களை காணும்போதெல்லாம் நம்மில் பலருக்கு வெறுப்பும் எரிச்சலும் வந்து சேர்கிறது. இது போன்று பல விசயங்கள் கேள்விப்படும்போது எனக்குள் நகைப்புதான் வருகிறது, ஏனெனில் பல நேரங்களில் மனிதம் மீறியச் செயல்களை நாமும் செய்து விடுகிறோம். வேதநூல் மனிதம் மீறிய செயல், எனது பல கட்டுரைகள் மனிதம் மீறிய செயல். பிறர் உணர்வுகளை எங்கேயாவது ஒருவிதத்தில் புண்படுத்தி இருப்பேன், இது தெரிந்தே செய்தது அல்ல, எனது எண்ணங்கள் எவரேனும் ஒருவரை புண்படுத்திவிடும் என்பதை அறிந்தே வைத்திருக்கிறேன், ஏனெனில் வாழ்க்கையில் ஒரே விதமான மனிதர்களை நான் இதுவரை சந்தித்ததே இல்லை.

ஒரு இசைத்தட்டு வெளிவந்தது, அதை இசை அமைத்தவர் வேறு, ஆனால் இசைத்தவர் எனப் பெயரிட்டப்பட்டவர் வேறு. பெயரிடப்பட்டவர் பிரபலமானவர் என்பதற்காகவே அந்த இசைத்தட்டு மிகவும் விற்பனையாகிப் போனது. ஏமாற்றப்பட்டுவிட்டோம் என கூக்குரல் இட்டார்கள். இப்பொது சொல்லுங்கள் இசை கேட்டு வாங்கும் பழக்கம் உடையவர்களாக இருந்தால் மக்கள் ஏமாறுவார்களா? தானாக ஏமாந்து போவார்களாம், ஐயோ ஏமாற்றப்பட்டு விட்டேனே என புலம்புவார்களாம். பரிதாபப்படுவதா எனத் தெரியவில்லை. ஏனெனில் பிறரின் மேல் கொள்ளும் பரிதாபம் அவர்களுக்கு ஒரு வித தூண்டுகோலாகவே முடியும். புனிதநூல்கள் அப்படி என்னதான் சொல்லித் திரிகின்றன என ஆங்காங்கேப் படித்தால் மிகவும் எரிச்சலாக இருக்கிறது. 

2012ல் உலகம் அழியப் போகிறதாமே, அதையும் பைபிளில் எழுதி இருக்கிறதாமே என என்னிடம் கேட்கப்பட்டபோது எனக்கு எரிச்சலாக இருந்தது. இப்படித்தான் 2000த்தில் உலகம் அழியப் போவதாக பைபிளில் சொல்லப்பட்டு இருப்பதாகச் சொல்லித் திரிந்தார்கள். உலகம் அழிவதில்லை, உலகம் மாறுபாடு கொள்கிறது என அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள் என சொன்னால் எவருக்குப் புரியப் போகிறது. அறிவியலின் யுரேனியத்தின் மதிப்பீட்டின் படி இந்த உலகம் பதின்மூன்று பில்லியன் ஆண்டுகள் முன்னால் பெரு வெடிப்புக் கொள்கையின் மூலம் காலம் கொண்டு தொடங்கியது என்பதை படித்தபோதும் என்னால் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இன்றைய காலகட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை வைத்து ஒன்றை தீர்மானிப்பது என்பது எனக்கு அத்தனை செளகரியமாக இல்லை.

எதற்கெடுத்தாலும் இதோ திருக்குரானில் எழுதி இருக்கிறது பாருங்கள். அறிவியல் அனைத்தையும் மிகவும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இதோ கரு உருவாவது பற்றி கூட எழுதி இருக்கிறது, பெரு வெடிப்புக் கொள்கை பற்றியும் எழுதி இருக்கிறது என அறிவியலுடன் இஸ்லாமை இணைத்துப் பார்ப்பதில் பலருக்கு பலவிதமான சந்தோசம். இதில் பல ஆராய்ச்சியாளர்கள் வேறு, ஆமாம், ஆமாம் திருக்குரானில் அப்படியே சொல்லி இருக்கிறது என சான்றிதழ்கள் வேறு. இறைவனையும், மனிதனையும் தனித்தனியே பார்க்கிறதாம் இஸ்லாம். நானும் தான் இறைவனை தனியாக வைத்துப் பார்க்கிறேன், அதற்காக நான் என்ன முஸ்லீமா?! ஒரு தனி மனிதனின் சிந்தனையை இறைவனின் சிந்தனை என எப்போது முலாம் பூசுகிறோமோ அப்போதே தெரிந்து கொள்ள வேண்டியதுதான் இறைவன் வேறு மனிதன் வேறு என்பதை ஒழுங்காகச் சொல்லவில்லை என. இதற்காக கடவுள் என்றே ஒரு பெரும் கவிதையை வடித்து வைத்திருந்தேன். அந்த கவிதையை முடிக்கும் போது இதை எழுதியது நான் அல்ல என கடவுள் சொல்வதாகவே அமைத்து இருந்தேன்.

இஸ்லாம் மட்டுமா அறிவியல் பேசுகிறது, இந்து மதமும் அறிவியல் பேசுகிறது என உதாரணங்கள் காட்டுவார்கள். பார்வதியின் மகன் விநாயகர் உருவான கதை தெரியுமா? தனது உடம்பிலிருந்த அழுக்கை நீக்கியே விநாயகர் உருவாக்கினாராம் பார்வதி. இதையே இப்போது ஸ்டெம் செல் எனும் தத்துவத்தில் அடக்கலாம் என்கிறார்கள். மேலும் விநாயகரின் தலையானது யானை தலை என்பது என அனைவரும் அறிவார்கள். அதையும் அறிவியலின் உறுப்பு மாற்று சிகிச்சையின் முன்னோடி என கதை சொல்லலாமா? புஷ்பக விமானம், திரிசங்கு உலகம் என புராணங்கள் பேசும், வேதங்கள் சொல்லும் பல விசயங்களை அறிவியலுடன் இணைத்தேப் பேசலாம். நோய் தீர்க்கும் ஜெபக்கூட்டங்கள் பற்றி என்ன சொல்வது, ஒரு நோய் அதன் தன்மையைப் பொருத்து மாறுபாடு அடையும். அறிவியலில் ஆச்சரியத்தக்க நிகழ்வு என சொல்வார்கள், அதையே ஜெபக்கூட்டங்கள் செய்வதாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு மனிதருக்கு பிறர் நோய் தீர்க்கும் சக்தி என்பது குறித்து ஒரு கட்டுரையே எழுதி இருக்கிறேன். இப்படி தனிமனித சிந்தனைகளை எல்லாம் புனிதநூல்களில் எழுதப்பட்ட விசயங்களை இன்று நடைபெறுகின்ற விசயத்திற்கு ஒப்புமைப்படுத்தி பேசுவதன் மூலம் புனித நூல்கள் களங்கம் அடைகின்றனவேயன்றி பெருமை கொள்வதாகத் தெரியவில்லை.

இப்படித்தான் இந்த மதங்களை எல்லாம் ஒழித்துவிட்டு ஒரு புதிய கொள்கைகள் உருவாக்க வேண்டும் என சொன்னபோது மத ஒழிப்பு எப்போதுமே நடைபெற வாய்ப்பில்லை என்பதுதான் முற்றிலும் உண்மையாகிப் போனது. அக்பரின் தீன் இலாஹி என்னவானது? கடவுள் இல்லை எனச் சொன்ன புத்தரே கடவுளாகிய பரிதாபம் நிகழ்ந்தேறியது இந்த பூமியில் தான் என சொல்வார்கள். மேலும் நமது கொள்கைகள் கூட பின்னாளில் மதம் எனும் சாயம் பூசப்பட்டு விடும் அபாயம் மிகவும் அதிகமாகவே உள்ளது. மனிதர்கள் தொடங்கிய காலத்திலிருந்தே பிரிவுகளும், பிரிவினைகளும் தவிர்க்க முடியாததாகிப் போய்விட்டன. தீபாவளியோடு ரம்ஜான் கிறிஸ்துமஸ் என ஒரே ஒரு விழாவாக கொண்டாட இயலாத மக்கள் வெறும் இனிப்புகளால் ஒற்றுமைச் சொல்லித் திரிவார்கள். நானும் புன்னகை புரிந்து கொண்டு போவேன்.

எனக்கு மதங்களைத் திட்ட இயலாது, ஏனெனில் மனிதர்களை அல்லவாத் திட்டி தீர்க்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. சக மனிதர்களை அன்புடன் பாவிக்காத எவருமே தன்னை நாத்திகர் என்றோ ஆத்திகர் என்றோ சொல்லித் திரிய வேண்டிய அவசியம் இல்லை, சக மனிதரை அன்புடன் பார்க்காதவர்கள் அனைவருமே மாக்கள் எனத் திட்டிவிடத்தான் தோன்றுகிறது, அட என்னைத் திட்டுவது போல் அல்லவா இருக்கிறது.

Wednesday 24 March 2010

இல்லாத பிரச்சினையை எப்படி உருவாக்கினேன்?

அடிப்படை அறிவு 

மேற்குறிப்பிட்ட இந்த பதிவுதனை ஒருவேளை நீங்கள் படித்து இருந்தால் மட்டுமே மேற்கொண்டு படியுங்கள். ஏனெனில் அப்பொழுதுதான் என்ன சொல்ல வருகிறேன் என ஓரளவுக்குப் புரியும். என் மேல் கோபம் கோபமாகத்தான் வந்து கொண்டிருந்தது. ஒருமுறை எனில் மன்னித்துவிடலாம், ஆனால் இதையேத் தொடர்ந்து செய்து வரும்போது ஏன் இது போன்று நடந்து கொள்கிறேன் எனும் கோபம் பொறுத்துக் கொள்ளக்கூடியதுதான். இதைச் சொல்லும் போதே நான் முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த பொட்டிப்புரம் எனும் கிராமத்துக்கு அருகில் வாழ்ந்த தாத்தா ஒருவர் பாடிய 'கோபம் ஏனய்யா, நாம சாவது நிசமய்யா' எனும் பாடல் நினைவுக்கு வந்து தொலைகிறது.

சரி ஒரு விஷயத்தை பற்றிய பிரச்சினை என வரும்போது அதற்கான காரணிகள் என்னவாக இருக்கும் என அலசிக்கொள்வது என்பது எத்தனை சுலபமான செயலாக இருக்க வேண்டியது. ஆனால் பல வேளைகளில் நாம் என்ன செய்கிறோம்? ஒரு சுலபமான விசயத்தைப் பற்றிய அறிவை சிந்திக்காமல் என்னவோ ஏதோ என பதறி விடுகிறோம். எங்கள் ஊர் உப்புநக்கி பாட்டி கூட செத்துப் போகும் முன்னர் இதை பலருக்குச் சொல்லி இருப்பார்கள். 'பதறிய காரியம் சிதறிப் போகும்' என.

எவருக்குத்தான் பழமொழியின் மேல் அக்கறை இருக்கப் போகிறது. இது இயந்திர உலகம், ஓடிக்கொண்டே தான் இருக்க வேண்டும், நின்று சிந்தித்துக் கொள்வதில் நேரம் செலவழிக்கக் கூடாது என்றே அனைவருக்கும் நினைவு இருக்கும். ஆனால் நாம் செலவழிக்கும் நேரங்களைப் பார்க்கும் போது பல நேரங்கள் பயனில்லாத வகையில் செலவாகிக் கொண்டேதான் இருக்கும். கோபம் கோபமாக வருகிறது என்று சொன்னாலும் மனதில் எனது அறியாமை விலகிக் கொண்டதை நினைக்கும் போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

இப்பொழுது விசயத்துக்கு வருவோம். முதலில் அந்த பதிவில் குறிப்பிட்ட இணையதளம் பற்றியது. முதல் பக்கத்துக்கு உதவி பக்கம் என ஒன்றை இணைக்க வேண்டும், ஆனால் நான் செய்த முறையில் உதவி பக்கம் என்னால் இணைக்கவே முடியவில்லை. சரி என சம்பந்தபட்டவர்களை அணுகினேன். அவர்களும் சொன்னார்கள் எல்லாம் சரியாகவே இருக்கிறது இதோ ஒரு உதவிப்பக்கம் இணைத்து காட்டுகிறேன் என இணைத்து காண்பித்தார்கள். எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. சரி என நானும் இணைத்துப் பார்த்தேன். இணையவே இல்லை. அது சரி, எப்படி இணைப்பது எனத் தெரிந்தால் தானே இணைப்பது.

ஏதேனும் வேறு வழியில் இணைக்கிறார்களோ என நினைத்து, துணைப் பக்கம் எப்படி இணைப்பது எனச் சொல்லித் தாருங்கள் என அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டு வைத்தேன். இதோ இதைப் பார்த்துத் தெரிந்து கொள் என ஒரு படம் அனுப்பினார்கள். எனக்கு எங்கள் ஊர் ஆசிரியர்கள் நினைவுக்கு வந்து போனார்கள். இந்நேரம் பக்கத்தில் அமர்ந்து இப்படி செய்யனும், அப்படி செய்யனும் என அருமையாய் சொல்லித் தந்து இருப்பார்கள். நானும் ஆவலுடன் அதை கற்று இருந்திருப்பேன். ஆனால் அவர்கள் அனுப்பிய படத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை, இப்படித்தானே செய்தோம், ஆனால் செய்ய இயலவில்லையே தோன்றியது. அவர்கள் இணைத்து இருந்த உதவிப் பக்கத்தை வேறொரு பக்கத்துக்கு மாற்றிப் பார்த்தேன். அட, மாறியது. கற்றுக்கொண்டேன். ஓ இவ்வளவுதானா என மனம் சொன்னது. இல்லாத பிரச்சினையை எப்படியடா உருவாக்கினாய் எனக் கேட்டுக் கொண்டேன்.

அது மட்டுமல்ல, மற்றொரு பிரச்சினையையும் அவர்களிடம் சொல்லி இருந்தேன். அதாவது எடிட்டர் பொத்தான்கள் தொலைந்து போகிறது என. அதற்கு அவர்கள் ஒருபோதும் பதில் சொல்லவில்லை, சொன்ன பதில் என்னவோ எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது மட்டுமே. ஸ்கிரீன் ஸாட் எடுத்து அனுப்பச் சொன்னார்கள். நானும் அனுப்பினேன். அதைப் பார்த்த பின்பும் ஒரு பதிலும் சொல்ல வில்லை. எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்றார்கள். எனக்கு வருத்தமாகப் போய்விட்டது. அதெப்படி உங்களுக்கு மட்டும் நன்றாக இருக்கிறது என கேட்டே விட்டேன். இதுவரை பதில் அளித்த ஆண்கள் சரியாகச் சொல்லவே இல்லை. ஒரு பெண்மணி பதில் அனுப்பினார், ஒழுங்காக உனது பிரச்சினை என்னவென சொல் அப்பொழுதுதான் உனக்கு என்னால் உதவ இயலும், மேலும் தேவையெனில் இந்த உதவிகளை படி என ஒரு இணைப்பு தந்து இருந்தார். எனக்கு பெண்கள் என்றாலே ஒருவித பயம் தொற்றிக்கொள்ளும், ஏனெனில் அவர்கள் அறிவுக்கூர்மை வாய்ந்தவர்கள். அந்த இணைப்பை படித்துப் பார்த்தேன். அப்பொழுதுதான் எழுதி இருந்தது, மொஜில்லா, நெருப்பு நரி, இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் மட்டுமே இந்த எடிட்டர் பொத்தான்கள் வேலை செய்யும் என இருந்தது. எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. நான் உபயோகித்ததோ கூகிள் குரோம். உடனே இண்டெர்நெட் எக்ஸ்ஃப்ளோரரில் சரி செய்து பார்த்தேன், அட ஒரு பிரச்சினையும் இல்லாமல்தான் இருந்தது.

இல்லாத பிரச்சினையை இப்படியும் உருவாக்கிக் கொண்டேன், ஆனால் அவர்களிடம் ஒன்று மட்டும் சொல்ல நினைத்துக் கொண்டேன், கூகிள் குரோம் ல் எடிட்டர் பொத்தான் வேலை செய்யும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என. மேலும் எவரேனும் இதுபோன்ற பிரச்சினை என வந்தால் என்ன உபயோகிக்கிறீர்கள் எனும் கேள்வியையும் எழுப்புங்கள் என.

இப்படித்தான் ஒருமுறை தமிழ்மணத்தில் பதிவு இணைக்க இயலவில்லை என நினைத்து உடனடியாக ஒரு பதிவு எழுத பல பதில்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு அளித்தது, அதைப்போலவே முன் சொன்ன பதிவின் மூலம் ஒரு ஆராய்ச்சியாளரின் உதவியும் கிடைக்க இருக்கிறது.

பிரச்சினைகள் என நமக்குள்ளே மூழ்கிக் கொண்டிராமல் வெளியேயும் எட்டிப் பார்க்கச் சொல்கிறது எனது எண்ணங்கள், உலகில் உதவும் எண்ணம் கொண்டவர்கள் மிகவும் அதிகமாகவே இருக்கிறார்கள் என்பது எனக்கு எப்பொழுதும் நினைவில் இருக்கிறது.

தனிமனித கவலைகள், கனவுகள் யாவும் சமுதாய கவலைகள், கனவுகள் ஆகட்டும். அப்பொழுதாவது சமுதாயம் விழித்துக் கொள்ளும் நிலை வரும்.