Thursday 3 September 2009

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3

கதையும், ஆன்மிகமும், கவிதையும் என்னை நேசித்து கொண்டிருக்கும் வேளையில் இந்த அறிவியல் என்னை பயமுறுத்துகிறது.

ஒரு விசயம் என்னை மிகவும் பாடுபடுத்தியது. ஒரு பகவத் கீதை தந்த கிருஷ்ணரோ (கடவுளின் அவதாரமாகத் தன்னை சொல்லிக் கொண்டவர்) பைபிள் தந்த இயேசுவோ (கடவுளின் மகன் எனச் சொல்லிக் கொண்டவர்) குர்-ஆனை தந்த நபிகள் (இறைத் தூதராக தன்னை காட்டிக் கொண்டவர்), இவர்களுக்கெல்லாம் இந்த அணுக்களை பற்றி, விதிகளைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லாமல் போனதா, இல்லை பொருள்கள் எல்லாம் ஆன்மிகத்திற்கு எதிர் என விட்டு விட்டார்களா? மனித குல நெறிமுறைகளைப் பற்றித்தானே அவை அதிகம் பேசுகின்றன, ஆனால் இப்போது இவர்கள் எழுதியதை விஞ்ஞானத்தோடு ஒப்புமைப்படுத்தி பேசும் நிலை வந்து கொண்டிருக்கிறது.

டால்டனும், ரூதர்ஃபோர்டும், மேன்டலீவும் எதற்கு கடவுள் தந்தது என அவர்கள் கண்டதைச் சொல்லவில்லை? தன்னலம் அற்ற மனிதர்கள் இவர்கள்? அப்படியென்றால் அவர்கள்? வினாக்களுடன் அறிவியல் பயணிக்கிறது.

டால்டனுக்கு ஒரு அதிசயம் அவரது மனதில் நிகழ்ந்தது. இந்த அணுக்கள் இருப்பதை அவருக்குள் ஏதோ ஒன்று உணர்த்த அணுக்கொள்கையை முதலில் சொல்லியதோடு அணுவை பிளக்கலாம் என கூறிவிட்டார். ஆனால் அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என நமது வேதங்கள் பல வருடங்களுக்கு முன்னமே தெரிந்து வைத்து இருந்தது? இந்த அறிவியல் நுட்பம் எல்லாம் ஐந்நூறு வருடங்களுக்குள் நிகழ்ந்தவைகள்தான் எனலாம். நாற்பதாயிரம் வருடங்கள் முன்னர் இருந்த அட்லாண்டிஸ் நாகரீகம் பற்றியெல்லாம் சொல்வார்கள். அது குறித்த ஆராய்ச்சி அவசியமில்லை.

எலக்ட்ரான் புரோட்டான் எல்லாம் 18ம் நூற்றாண்டுகளில்தான் வெளிச் சொல்லப்பட்டன. இதற்கு முன்னர் இருந்தவைகள்தானே இவை. உலகம் தோன்றி பில்லியன் வருடங்களில் இந்த 200 வருடங்கள் பெரும் சோதனைக் காலங்கள், சாதனைக் காலங்கள் எனலாம். டார்வின் கூட இந்த 18ம் நூற்றாண்டின் சொந்தக்காரர். ஆக நமது அறிவு விழித்துக் கொண்டது இந்த 200 வருடங்களில்தானா? இல்லை, இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போனால் 16ம் நூற்றாண்டும் கண்ணுக்குத் தெரியும். கலிலியோ... இன்னும் பின்னோக்கிப் போனால் உலகம் தோன்றிய அந்த பில்லியன் வருடங்களும் தெரிந்தாலும் தெரியும்?

ஆனால் வேதியியலின் வித்து டால்டன் எனும் அற்புத மனிதனே. ரூதர்ஃபோர்டின் அணுக்கொள்கை இவரிடமிருந்து சற்று வித்தியாசப்பட்டது. ரூதர்ஃபோர்டு கூற்றுப்படி வேகமாக எலக்ட்ரான்கள் புரோட்டானை சுற்றும் எனில் நாளடைவில் எலக்ட்ரான் சக்தியிழந்து வலுவிழந்து விடும், எனவே அது தவறு எனச் சொல்லி எலக்ட்ரான் ஒரு நிலையில் இருந்து வேறு நிலைக்கு மாறும் போது மட்டுமே சக்தி இழப்போ, ஏற்போ நடைபெறுகிறது, ஒரே நிலையில் இருக்கும்போது எந்த மாற்றமும் அடைவதில்லை ஆதலால் அந்த எலக்ட்ரான் புரோட்டானுக்குள் சென்று விழச் சாத்தியமில்லை எனச் சொன்னவர் போஹ்ர்.

இவர்கள் தாங்கள் கண்டது தவறாக இருக்கும் எனச் சொல்லாமல் விட்டார்களா? இல்லை மறைத்து வைத்தார்களா? என்ன கண்டார்களோ அதை அப்படியேச் சொன்னார்கள். சொன்னது தவறு என பின்னால் வந்த வல்லுநர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். அறிவியலில் எல்லாமே சரிதான் எனும் கொள்கை எப்போதும் இருப்பதில்லை. இடைச்செருகல்கள் எல்லாம் ஒன்றும் செய்ய முடியவில்லை இங்கு. அறிவியலுக்கு தவறோ, சரியோ நிரூபிக்கச் சாத்தியக் கூறுகள் தேவை, அவ்வாறு இல்லாதபட்சத்தில் அது ஒரு கொள்கையாக மட்டுமே கருதப்படும். ஆனால் ஆன்மிகத்திற்கு? எதையும் தவறாகப் பார்க்காத ஒரு துறை எதுவெனில் அது ஆன்மிகம்தான்.

(தொடரும்)

Wednesday 2 September 2009

சனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா?

என்ன சொல்வது? எவ்வளவு தூரம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் என முன்னேறினாலும், நாடுவிட்டு நாடு போனாலும் இந்த தின பலன்கள், வார பலன்கள், மாத பலன்கள் ஆண்டு பலன்கள் படிப்பதில் இருக்கும் சுகமே அலாதிதான். அதுவும் குருப்பெயர்ச்சி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. அவற்றின் முக்கியத்துவம் குறித்து தனிப் புத்தகங்கள் இருக்கக் கூடும்.

இதில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை விட அப்படி என்னதான் எழுதி இருக்கிறார்கள் எனப் படிப்பதில் கொஞ்சம் ஆர்வம் அதிகமே உண்டு. நமது ராசியைப் போலவே உலகில் எத்தனையோ பேர்கள் இருக்க, அத்தனை பேரும் ஒரே மாதிரி வாழ்க்கை வாழாமல் இருப்பது தெரிந்தும் வாசிப்பது என்பதை மட்டும் விடத் தோணுவதில்லை. அதுவும் எழுதியதை வாசித்துவிட்டு அதற்கடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டே இருப்பதுதான் வழக்கமாக இருக்கிறது.

விளையாட்டுச் செய்திகள் படித்துவிட்டு கண்கள் நோக்குவது என்னவோ இன்றைய பலன்கள் செய்தியைத்தான். செய்தியில் உண்மையில்லாமலும் இருக்கக் கூடும். மேலும் ஒரு நண்பர் சொன்னது என்னவெனில் எந்த ராசி எனத் தெரியாமலே ஒரு ராசியை எடுத்துக்கொண்டு இதுதான் நம் ராசி எனப் படித்தாலும் கூட சரியாகவே இருக்குமாம். ஆனால் ராசி தெரிந்த காரணத்தினால் பிற ராசிகளைப் படிக்கும்போது அப்படி எனக்குத் தோன்றவில்லை. மனைவியின் ராசிக்குத் தவிர பிற ராசிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதில் படிப்பதில் ஒரு பிடிப்பும் இருப்பதில்லை, இருப்பினும் எழுதியவரின் மனநிலை என்ன என அறிந்து கொள்ள அனைத்து ராசிகளையும் ஒரு கண்ணோட்டம் விடுவதுண்டு.

இப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள் படித்தபோது பல ராசிகளுக்கு ஒட்டுமொத்தமாக சரியில்லை எனும் வகையில் எழுதப்பட்டிருப்பதைப் படிக்க நேர்ந்தது. அடடா, எழுதுபவர்கள் நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் எல்லாமே நன்றாக நடக்கும் என எழுதியிருந்தால் படிப்பவர்களுக்கு ஒருவித மன சந்தோசம் ஏற்படுமே என்றுதான் தோணியது. வேறு எவரேனும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்றுப் பார்த்தால் ஆம் ஒருவர் எழுதி இருந்தார், சனி சங்கடம் தருவார் என பயப்பட வேண்டாம் எனும் தொனியில் அனைத்து ராசிகளுக்கும் அமைந்து இருந்தது. எப்படியிருப்பினும் படிக்கும்போது இருக்கும் சுவாரஸ்யம் அதிகமே.

'மடியில் கனமிருந்தால் வழியில் பயம்' என சொல்வார்கள், அதுபோல நாம் முறையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இடப்பெயர்ச்சியாளர்களால் எதுவும் நேராதுதான், ஆனால் முறையான வாழ்க்கையையா நாம் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என கணப் பொழுது யோசித்தால் இந்த இடப்பெயர்ச்சியாளர்கள் இடம்பெயராமலே இன்னலுக்கு நம்மை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியும் தான். இப்போ சொல்லுங்க, சனிப்பெயர்ச்சி பலன் படிச்சாத்தான் பயம் வருமா?

ஆவலுடன் ராசிகளைப் படிக்க நினைத்து இருப்பீர்கள், அதனால் நான் விரும்பிப்படிக்கும் மாத ராசி பலன்களின் இணைப்பு இதோ. இவர் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும், மாதம் ஒரு முறை மறக்காமல் படித்துவிடுவது உண்டு. நீங்களும் படித்துப் பாருங்களேன்.

எல்லாம் தெரிந்தது போல்

எல்லாம் தெரிந்ததுபோல் இருக்கிறது
மது அருந்தும் பழக்கத்தால்
கல்லீரல் கரைபட்டு போகும்
இதயம் இடியென துடிக்கும்
புகை பிடித்து பார்ப்பதால்
நுரையீரல் விரைத்து நோகும்
உதடு மட்டுமின்றி
ரத்தம் கூட தன் நிறம் மாற்றும்
அளவுக்கும் நேரத்திருக்கும்
உட்படாத உணவு
அடிவயிறை அரித்து பார்க்கும்
கவனமின்றி போயின்
கலை இழந்த கண்களும்
வழுவிழந்த பல்லும் எலும்பும் மிச்சம்
தண்ணீர் இல்லா சிறுநீரகம்
பிணைய கைதியாய்
நல் எண்ணம் இல்லையேல்
மூளை முரண்டு பிடிக்கும்
மனம் மரத்து போகும்
உண்மை ஒழுக்கம் இல்லா வாழ்க்கை
கற்பில்லாத காதல்
உயிரை உருக்குலைய செய்யும்
ஏனோ எல்லோர்க்கும்
எல்லாம் தெரிந்தது போல்
மட்டுமே இருக்கிறது.

ஆசைப்படு அவதிப்படாதே
ஆசை துன்பம் தருமெனில்
துயரபடாமல் உயரம் ஏது?
கர்வப்படு கருணை இழக்காதே
பொறாமைப்படு பொசுங்கிப் போகாதே
இரக்கபடு இழந்து நிற்காதே
கோபப்படு கொன்று விடாதே
காதலிக்க கற்று கொள்
கரைந்து போகாதே
சாந்தமாக இரு செத்து போகாதே
ஏனோ எல்லோர்க்கும்
எல்லாம் தெரிந்தது போல்
மட்டுமே இருக்கிறது
எவையும்
செயல்படுத்த முடியாமல்
புதைந்துபோய் கிடக்கிறது.