Tuesday 30 June 2009

வேத நூல் - 3

சாங்கோ மிபலோவிடம் விளக்கம் சொல்ல சொன்னான். மிபலோ விளக்கம் தெரியாது என்றான். பிறகு ஏன் அந்த வார்த்தையைச் சொன்னாய் என்றான் சாங்கோ. அந்த வார்த்தையைக் குறித்துத்தான் நான் இத்தனை நாட்களும் சிந்தனை செய்து கொண்டிருக்கிறேன் என்றான் மிபலோ. சாங்கோவுக்கு கோபம் வந்தது. ஏன் எண்ணங்கள் தயார் என்றாய் என்றான் சாங்கோ.

சாங்கோ கோபம் அடைந்ததைப் பார்த்த குவ்விலான் சில வரிகள் எழுதினான். ''கடவுள் - எந்த ஒரு சுவடும் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கும்''. குவ்விலான் எழுதியதைப் பார்த்த சாங்கோ கடும் கோபம் கொண்டான். குவ்விலானைப் பார்த்து கிழித்துப் போடு எனக் கத்தினான்.

மிபலோ என்ன சொல்கிறானோ அதை மட்டுமே நாம் எழுத வேண்டும், நீ சொல்ல நினைப்பதை தனியாக எழுதிக் காட்டு, இப்படி ஒன்றுடன் ஒன்று கலக்காதே என சீறிட்டான். இதையெல்லாம் கேட்டு மிபலோ பொறுமையாகவே இருந்தான். இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் எனக் கேட்டான் சாங்கோ மறுபடியும். அப்பொழுது மிபலோ சொன்னான். ''அர்த்தமற்று இருக்கும், ஆனால் அர்த்தம் பொதிந்து இருக்கும், எனக்கு அர்த்தம் தெரியாது'' என்றான் மிபலோ.

சாங்கோ எரிச்சல் அடைந்தான். சாத்தான் என்ற வார்த்தைக்கு என்ன விளக்கம் எழுதுவது என முழித்தான். சரி மேலே சொல்லு என்றான் சாங்கோ. ''கடல், ஆகாயம் நமக்குக் கிடைத்த ஆதாயம்'' என்றான் மிபலோ. அவன் சொன்னதைக் கேட்டதும் குவ்விலானிடம் எழுதிக்கொள், எழுதிக் கொள் இவனைப் பெரிய சிந்தனையாளன் என நினைத்தேன், சரியான முட்டாளாக இருக்கிறான் என்றான் சாங்கோ. சொல்லிக்கொண்டே கடல் ஆகாயம் சாத்தானால் உருவானது என எழுதினான் சாங்கோ. மிபலோ சிரித்துக்கொண்டு நாளைத் தொடரலாம் என எழுந்தான். இவ்வளவுதானா? என்றான் சாங்கோ. நிறைய இருக்கிறது என நடந்தான் மிபலோ. அப்படியென்றால் இன்னும் சொல் என்றான் சாங்கோ.

சாங்கோவை நோக்கி ''என் சிந்தனையை வெல்ல உன் சிந்தனைக்கு எப்படி வலிமை வந்தது'' என்றான் மிபலோ. சாங்கோ அதிர்ச்சி அடைந்தான். குவ்விலானுக்கு ஒன்றும் புரியவில்லை. சாங்கோவின் கையில் இருந்ததை பறித்த குவ்விலான் அதைப் படித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். ''நான் சொன்னதை மாற்றி எழுதுகிறான் இவன்'' என்றான் மிபலோ. மிபலோ சொன்னதை கேட்டதும் ஆம் எனத் தலையாட்டினான் குவ்விலான்.

''இருவரின் கை அசைவுகளும் எழுத்து வடிவமும் வேறாக இருப்பது கூடவா எனக்குத் தெரியாது'' என சொன்னான் மிபலோ. சுதாரித்துக் கொண்ட சாங்கோ நான் சரியாகவே எழுதுகிறேன், இவனே மாற்றி எழுதுகிறான் என சொன்னான் சாங்கோ. மிபலோ சாங்கோ சொன்னதை நம்பிட தயாராக இல்லை. ''இனிமேல் என் சிந்தனைகள் நீ எழுதாதே, குவ்விலானே எழுதட்டும்'' என மிபலோ சொன்னதும் சாங்கோ கோபத்துடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

மிபலோ குவ்விலானிடம் ''நீ நான் சொல்வதை அப்படியே எழுதுவாய் என்ற என் நம்பிக்கையை சிதறடித்துவிடாதே'' என்றான். குவ்விலான் கண்கள் பணித்தான். இருவரும் சாங்கோவைத் தேடிச் சென்றார்கள். சாங்கோ சிரகமெராவிடம் இவ்விருவரைப் பற்றிக் கத்திக் கொண்டிருந்தான். சிரகமெரா சமாதனம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

''சாங்கோ நீ எங்களுடனே எப்போதும் போல் இருக்க வேண்டும் நீ எப்படி வேண்டுமெனினும் எழுது'' என்றான் மிபலோ. குவ்விலான் மன வருத்தம் கொண்டான். ஆனால் வெளிக்காட்டாமல் இருந்து கொண்டான். சாங்கோவின் தந்தை அன்றே தான் கடல்வழிப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக சொன்னதும் சாங்கோ தானும் வருவதாக சொன்னான். மிபலோவும் இணைந்து கொள்வதாக சொன்னான். குவ்விலான் வேறு வழியின்றி சேர்ந்து கொண்டான்.

எந்த திசை செல்லலாம் என சாங்கோவே முடிவை எடுத்தான். மிபலோ சிந்தனைகளை மேலும் மெருகேற்றத் தொடங்கினான். அன்றே பயணத்திற்கான நாளைக் குறித்தார் சாங்கோவின் தந்தை ரேண்ட்டர். சிரகமெரா சாங்கோவிடம் தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டாள். சாங்கோ மறுப்பு தெரிவிக்க சிரகமெரா ஆர்பாட்டம் பண்ணினாள். சரி என்றான் சாங்கோ.

(தொடரும்)

என் கூட வா!

உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.


மழை சொட்டு சொட்டாக பூமியில் பொட்டு வைத்துக்கொண்டிருந்தது. தனது சட்டையிலும் பொட்டு வைத்ததை உணர்ந்ததும் வெகுவேகமாக ஓட நினைத்தான் சிவபாலன். அவன் வெகுவேகமாக ஓட நினைத்தபோதே மழையும் வேகமாக வந்து சேர்ந்தது. எங்கே நனைந்துவிடுவோமோ என அதிவேகமாக ஓடினான். மூச்சு இறைத்தது. மழை அவனை நனைக்கும் முன்னர் சிவதாசினியின் வீட்டின் கதவைத் தொட்டான் சிவபாலன்.


கதவைத் தட்டினான், சிவதாசினியின் தந்தை கதவைத் திறந்தார். அவரது தந்தையை எதிர்பாராதவனின் மூச்சு மேலும் இறைக்கத் தொடங்கியது.


‘’என்ன வேணும்’’


‘’சாரி சார், தப்பான அட்ரஸுக்கு வந்துட்டேன், மழை வேற பெய்யுது’’


எதுவும் பேசாமலேயே கதவைச் சாத்திவிட்டுச் சென்றார் சிவதாசினியின் தந்தை. கால்களை மழை நனைக்க ஆரம்பித்தது. காற்றினால் வீசப்பட்ட சில தூறல்களும் முகத்தில் பட்டுச் சென்றது. ஓடிவந்ததில் உடலில் ஏற்பட்ட உஷ்ணம் வெளிப் பறக்க சில்லென்றே உணர்ந்தான். சற்று நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டினான். இம்முறை சிவதாசினியின் தாய் வந்து கதவைத் திறந்தார்.


‘’யாரைப் பார்க்கனும்?’’


‘’சிவதாசினியோட வீடு…’’


‘’இதுதான், நீ யாரு?’’


‘’அவளோட கூடப் படிச்ச பெரண்டு, ஒன்னாப் படிச்சோம, அவளைப் பார்க்கனும்’’


‘’அவ இங்க இல்லை’’


சிவபாலனின் பதிலை எதிர்பார்க்காமல் சிவதாசினியின் தாய் கதவைச் சாத்திவிட்டுச் சென்றாள். சிவபாலனுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. மழையில் நனைந்து கொண்டே யோசனையுடன் திரும்பி நடந்தான்.


தனது நெருங்கிய நண்பன் சுப்புராஜன் தகவல் சொல்லியிருக்காவிட்டால் அவன் சிவதாசினியைத் தேடி டில்லியிலிருந்து இத்தனை அவசரமாக வந்திருக்கமாட்டான். கைப்பேசியின் மூலம் சிவதாசினியைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அந்த எண் உபயோகத்தில் இல்லை என அறிந்ததும் பதட்டம் கொண்டான்.


சிவபாலன் சுப்புராஜனைத் தொடர்பு கொண்டு பேசினான். அந்த ஒரு விபரத்தைத் தவிர சிவதாசினி எங்கு போனாள், என்ன ஆனாள் எனத் தனக்குத் தெரியாது, தெரிந்தால் சத்தியமாக தகவல் சொல்கிறேன் என்றான் சுப்புராஜன்.


பிறரிடம் விசாரித்தபோது எங்களுக்கெல்லாம் எந்த ஒரு தகவலும் தெரியாது, அப்படியா? என அனைவருமே ஆச்சரியமாகக் கேட்டதும் மனமுடைந்து போனான் சிவபாலன்.


இரண்டு நாட்களானது. சிவதாசினியைத் தேடி அலைந்து திரிந்தவன் தனது வீட்டில் இரவில் மாடியில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் தவறாகப் போகவே மீண்டும் எண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது வீட்டுக் கதவினைத் தட்டும் சப்தம் கேட்டு வெகுவேகமாக ஓடி வந்தான்.


வெளியே சுப்புராஜன் நின்று கொண்டிருந்தான். சுப்புராஜனின் முகமெல்லாம் வியர்த்து இருந்தது, உடலில் ஒருவித நடுக்கம் தெரிந்தது.


‘’சிவதாசினியைப் பார்த்தேன்டா’’


‘’எங்கேடா இருக்கு அவ வீடு’’


‘’அவ புருசன் அவளை வைச்சித் தொழில் நடத்துறான்டா’’


‘’சீ… இன்னுமாடா அந்தப் பழக்கத்தை நீ விடலை’’


‘’மாத்திக்க முடியலைடா, இதுதா அட்ரஸூ நீ போய் பார்த்துக்கோ, என் செல் புது நம்பர் மாத்திட்டேன்’’


வார்த்தை குளறி குளறிப் பேசிய சுப்புராஜன் இருட்டில் சென்று மறைந்தான். முகவரியினை சென்று அடைந்தான் சிவபாலன். கதவைத் தட்டினான். கதவைத் திறந்தவன் சற்று வயதானவன் போல இருந்தான்.


‘’லேட்டாயிருச்சி, நாளைக்கு வா’’


‘’கூடப் போட்டுத் தரேன்’’


உள்ளே அனுமதித்தான். சிவதாசினியைக் கண்டான். சுப்புராஜன் தகவல் சொல்லியே வந்ததாகவும் தன்னுடன் வந்துவிடுமாறும் கெஞ்சிக் கூத்தாடி அவளை அழைத்துக்கொண்டு திறக்கப்படாதப் பெட்டியுடன் அவசரமாக டில்லிக்கு சிவதாசினியுடன் கிளம்பிச் சென்றான் சிவபாலன். டில்லி வரும்வரை அவளிடம் அவன் எதுவும் கேட்கவில்லை, அவளும் எதுவும் சொல்லாமல் அழுத விழிகளுடனே இருந்தாள்.


காணாமல் போனவளை காவல் நிலையத்திலும் சொல்ல வழியின்றி அவளால் வந்த பணத்தையெல்லாம் கொண்டுபோய் விலைமகள் ஒருவளிடம் தந்து அழுது கொண்டிருந்தான் சிவதாசினியின் கணவன்.


டில்லியில் தனது அறையில் சிவதாசினியை அமர வைத்துவிட்டு பெட்டியைத் திறந்து சேலைகள், சுடிதார்கள், நகைகள் என எல்லாம் காட்டி அவளை குளித்துவிட்டு, பிடித்த சேலை, நகைகள் எல்லாம் போடச் சொன்னான். மனம் மரத்துப் போனவளாய் அவன் சொன்னவாறே சிவதாசினி செய்தாள்.


‘’இப்போதான் என் சிவதாசினி மாதிரி இருக்க’’


‘’சுப்புராஜன் கூட தெரிஞ்சே என்னை….’’


விக்கித்து அழுதாள். துடிதுடித்துப் போனான் சிவபாலன்.


(முற்றும்)

Monday 29 June 2009

வேத நூல் - 2

அத்தியாயம் 2.

''என்ன யோசனை'' என்றான் சாங்கோ. மிபலோ தான் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாகக் கூறினான். சாங்கோ சிரித்தான். ''உன் ஆழ்ந்த சிந்தனைக்கு வழி செய்கிறேன்'' என சொல்லிவிட்டு தான் ஒரு வார்த்தைச் சொல்லி அதற்கான எழுத்தை வரைந்தான் சாங்கோ. குவ்விலான் அதே போல மணலில் எழுதிக் காட்டினான். மிபலோவை எழுதச் சொன்னபோது அதிலெல்லாம் ஆர்வமில்லாதவன் போல சிந்தனையிலேயே அமர்ந்து இருந்தான்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்த்தையில் உள்ள எழுத்துக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தான் சாங்கோ. ஒரு எழுத்துக்கு ஒரு வடிவம் என்பதிலே கவனமாக இருந்தான். இப்படியாக தினமும் இவர்கள் இவ்வாறு செய்ய சாங்கோவின் தந்தை சாங்கோவின் எண்ணம் அறிந்து பாராட்டினார். சில எழுத்துக்கள் உருவாக்கிய பின்னர் அந்த எழுத்தை வைத்தே சிரகமெராவுக்கு ஒரு கவிதை எழுதினான் சாங்கோ.

''காதல் மனதோடு களிக்கும்'' என அர்த்தம் தந்தது அந்த மூன்று வார்த்தை கவிதை. சாங்கோ அதை குவ்விலானிடம் வாசித்துக் காட்ட குவ்விலான் ''காதல் கண் காண்பதில்லை'' என எழுதினான். அதில் வந்த ஒரு எழுத்தைப் புரியாத சாங்கோ என்ன எனக் கேட்டான். ''புது எழுத்து'' என எழுதினான் குவ்விலான். சாங்கோ கோபம் கொண்டான். ''நான் உருவாக்குவது மட்டுமே எழுத்து, நீயாக உருவாக்குவது எனில் நீயே செய்து கொள், ஏன் நான் உருவாக்கவேண்டும்'' என கோபத்துடன் கூறினான். பக்கம் பக்கமாக எழுத இயலாமலேயே இருந்தது. மிஞ்சிப் போனால் பத்து வார்த்தைகளையே எழுத முடிந்தது.

சாங்கோவும் குவ்வில்லானும் எழுத்து வடிவத்தை பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். வயதும் ஆகிக் கொண்டிருந்தது. தனது கவிதை என சிரகமெராவிடம் சாங்கோ ஒருமுறை சொல்ல சிரகமெரா தனது கண்களை மூடியும் திறந்து காட்டிவிட்டு ''கண் பேசாதோ காதல்கவிதை'' என சொல்லிவிட்டு ஓடினாள். சாங்கோ துள்ளினான். குவ்விலானிடம் ''காதல் கண் காண்பதில்லை, கண் காதல் பேசும்'' என சொன்னதும் குவ்வில்லான் கைதட்டி ஆரவாரம் செய்தான். ஆனால் மிபலோ சீரிய சிந்தனையிலேயே அமர்ந்து இருந்தான். பதினைந்து வயது ஆகி இருந்தது. ஓரளவுக்கு எல்லா எழுத்துக்கும் வடிவம் கொடுத்து வைத்தான் சாங்கோ. அத்தனையும் பத்திரமாக சேமித்தான். குவ்விலான் சாங்கோ சொன்னதிலிருந்து எழுத்தை உருவாக்கவில்லை, ஏனெனில் என்ன எழுதுகிறோம் என புரியாது என விட்டுவிட்டான்.

ஒருநாள் மிபலோ ''எழுத்துக்கள் தயாரா? என் எண்ணங்கள் தயார்'' என சொன்னான். ''கொஞ்சம் நாளாகட்டும்'' என்றான் சாங்கோ. குவ்விலான் தனது மனதில் தோன்றுவதை ஒவ்வொருமுறை எழுதிக் காட்டினான். ஒருமுறை ''சிரகமெரா எனக்குப் பிடித்தமானவள்'' என குவ்விலான் எழுதி வைக்க சாங்கோ கோபத்தின் உச்சத்திற்கேப் போனான். ''உன்னை வேட்டையாடி விடுவேன் அவள் எனக்கானவள்'' என்றான் சாங்கோ. குவ்விலான் ''நான் அவ்வாறு அர்த்தம் கொள்ளவில்லை'' என எழுதிவிட்டு அன்றிலிருந்து எழுதுவதையே விட்டுவிட்டான். சாங்கோ தினமும் கடும்பயிற்சி மேற்கொண்டான். குவ்விலான் எழுத்து வடிவம் மறக்க ஆரம்பித்தான்.

குவ்விலானிடம் சாங்கோ மன்னிக்குமாறு கூறியவன் எழுத்து வடிவம் கற்றுக்கொண்டு மனதில் உள்ளதை எழுது என சொன்னான் சாங்கோ. குவ்விலான் அதன்பின்னர் எழுத்து வடிவம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். சிரகமெராவிடம் குவ்விலான் எழுதியதை ஒருநாள் சாங்கோ விளையாட்டாக சொல்ல சிரகமெரா குவ்விலான் மேல் பரிவு கொண்டாள். தினங்கள் நகர பதினெட்டு வயதை அடைந்தார்கள். மிபலோ பொறுமையிழக்காது இருந்தான். சாங்கோ ஆச்சரியமாக மிபலோவிடம் கேட்டான் ''உனக்குப் பொறுமை போகவில்லையா?'' மிபலோ சொன்னான், ''நீ தயாராக இருந்தால்தானே என் எண்ணங்கள் சொல்ல முடியும், உன்னை அவசரப்படுத்த எனக்கு விருப்பமில்லை, என் சிந்தனைகள் மேலும் மெருகேறும்'' என்றான் மிபலோ. அப்போது குவ்விலான் ''நான் எழுதுகிறேன், நீ சொல்'' என்றான். இதுதான் தருணம் என நினைத்த சாங்கோ ''நாம் இருவரும் எழுதலாம்'' என்றான்.

எட்டு வருடத்தில் எழுத்தை எழுத பலவிதமாக முயன்று எழுதுகோலும், மையும் உருவாக்கி இருந்தார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என யாருமே கண்டுகொள்ளவில்லை. யாருக்கும் அக்கறை இல்லை. சிரகமெரா குவ்விலான் எழுத்தைப் போற்ற ஆரம்பித்து இருந்தது சாங்கோவுக்கு எரிச்சல் தர ஆரம்பித்து இருந்தது, ஆனால் தனது மனதில் கொண்ட திட்டம் நிறைவேற சாங்கோ வெளிக்காட்டாது அமைதியாக குவ்விலான் என்ன எழுதினானோ அதையே சிரகமெராவுக்கும் மிபலோவுக்கும் வாசித்துக் காட்டினான். குவ்விலான் எழுத்து வடிவம் அழகாக இருந்தது.

மிபலோ முதல் வார்த்தை சொன்னான். ''கடவுள்'' மிபலோ சொன்னதும் குவ்விலான் ''கடவுள்'' என எழுதினான். சாங்கோ ''சாத்தான்'' என எழுதி வைத்தான்.

(தொடரும்)