Thursday, 3 June 2010

நிலை கொள்ளாமல்

இறந்துவிடுவோம் என்ற எண்ணமும் அந்த இறப்பிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளக் கூடிய வேட்கையும் தீபக்கின் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர்.

தண்ணீரில் மூழ்கிக் கொண்டு இருந்த அந்த வானம் தொடும் கட்டிடத்தின் உச்சியில் தண்ணீர் முட்டிச் சென்று கொண்டு இருந்தது. கடலின் தண்ணீர் அளவானது இப்படி உயரும் என்று ஒருவரும் கனவில் கூட நினைத்துப் பார்த்து இருக்கமாட்டார்கள்.

'என்னடா இங்கேயெ உட்கார்ந்துட்டு இருக்க, கிளம்புடா' சக நண்பன் சதீஸ் தீபக்கை அவசரப்படுத்தினான். தீபக் வாய்மூடி எதுவும் சொல்ல முடியாதவனாய் இருந்தான். தண்ணீரில் மீன்களாக மனிதர்கள்.

எவரும் இந்த தண்ணீருக்கு தப்பி இருப்பார்களாக தெரியவில்லை.  நிலமாக இருந்த இந்த பூமி இப்போது ஒரே தண்ணீராய். எந்த கரையை எப்படி காண்பது? தண்ணீரில் நீந்த ஆரம்பித்தான் தீபக்.

எந்த திசை நோக்கிச் செல்வது? நீச்சல் தெரியாதவர்கள் நீச்சல் அடிக்காமலே மிதந்து கொண்டு இருந்தார்கள். எப்படி இவ்வளவு பெரிய நிலப்பரப்பினை தண்ணீர் தனக்குள் அடக்கிக் கொண்டது.

நீர்வாழ் உயிரினங்கள் என்ன நடந்தது என அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தன. தண்ணீரில் நாம் உபயோகித்த நச்சுப்பொருட்கள் கலந்ததால் மிச்ச மீதி எதுவும் இன்றி எல்லாம் தண்ணீருக்கு இரையாகி இருந்தன.

'கடவுளே எப்படியாவது காப்பாற்று, எங்காவது ஒரு நிலப்பரப்பினை கண்களுக்கு காட்டு' என வேண்டிக் கொண்டே தொடர்ந்து நீந்தினான். அனைவரும் அடங்கிப் போய்விட்டார்கள் என்று மட்டும் தெரிந்தது, எங்கே சதீஸ்? எங்கே தீபா? எங்கே சுற்றமும் குலமும்? சதீஸும் அடுத்த பத்து நிமிடத்தில் தண்ணீரினால் ஆட்கொள்ளப்பட்டான்.

எதிர்பட்ட உயிரற்ற சடப்பொருள்களை விளக்கிக் கொண்டு இலக்கின்றி நீந்தினான், எஞ்சிய உயிர் என்னது மட்டும்தானா? தீபக்கின் கைகள் கால்கள் அலுப்பைத் தந்தன. வயிர் பசிக்க ஆரம்பித்தது. இந்த தண்ணீரைக் குடிப்பதா?

கரைகள் இல்லா நீர்பரப்பு! இனி இங்கு வாழ முடியாது. பிற கிரகங்களில் வாயுக்கள் ஆக்கிரமித்து இருப்பதை போல் இங்கு தண்ணீர் ஆக்கிரமித்து விட்டது. இனி இந்த தண்ணீர் என்று வற்ற? மனித இனம் மட்டுமின்றி எல்லாம் முடிந்து போனதோ?

படித்தவைகள் மனதில் அழுத்தியது! வறண்ட பகுதிகள் என இருக்கையில், வறுமை கொடுமைப் பண்ணி கழிக்கையில் எல்லாம் எரித்து எரித்து வெப்பம் அதிகரிக்கிறது என சொல்லியும் கேட்காமல் பனி உருகுகிறது என புரியாமல் அடுத்த கிரகம் என நினைத்து இருக்கிறதை காக்காமல் கைவிட்டுப் போனதே என நினைத்துக் கொண்டபோது  தீபக் நீந்த முடியாமல் மிதக்கத் தொடங்கினான்.

Wednesday, 2 June 2010

எனது கவிதையை தேர்ந்தேடுக்கமாட்டீர்கள்தானே சிவராமன்

எனக்கு ஜ்யோவ்ராம் சுந்தர், சிவராமன் நடத்துகிற  உரையாடல் அமைப்பு மேல ஒரு தனி மதிப்பு உண்டு. இருவரும் தமிழுக்கு ஆற்றிவரும் தொண்டு அதுவும் முக்கியமாக  சிறுகதை பட்டறை பற்றி அறிந்தபோது சந்தோசமாக இருந்தது.

சிறுகதைப் போட்டியில், கவிதைப் போட்டியில் கலந்து கொண்டேன். வரும் ஜுன் 21ம் தேதி போட்டி முடிவுகள் வெளியாகப் போவதாக புது அறிக்கை அறிந்தேன். போட்டி முடிவுகள் எப்பொழுது வரும் என ஆர்வமுடன் எதிர்பார்ப்பவனில் நானும் ஒருவன். 
 
நான், கோவியார் மற்றும் சுரேஷ் என்பவரை மட்டுமே வலைப்பதிவு எழுத வந்ததன் மூலமாக சந்தித்து இருக்கிறேன்.  எனக்கு யாரையும் தனிப்பட்ட முறையில தெரியாது. அதனால் ஒருத்தொருக்கு ஒருத்தர் வசைபாடி எழுதுவதை படிக்கும்போது எனக்கு வேப்பங்காய் போலத்தான் இருக்கும். யாரையும் தாக்கி எழுதுவது எனக்கு சுத்தமாகப் பிடிப்பது இல்லை. இதில்  ஜாதீயம், பெண்ணீயம், ஆணாதிக்கம், பின் நவீனத்துவம், வெங்காயம் இது எல்லாம் எனக்கு சுத்தமாக  புரிவது  இல்லை. 
 
ஒரு  ஆண் தவறாக நடந்து கொண்டால் அது ஆணாதிக்கமா? ஒரு ஆணோ, பெண்ணோ தப்பு செய்தால் அது தப்பு செய்த ஆணின், பெண்ணின் தனிப்பட்ட பிரச்சினை. அதுக்கு என்ன அடைமொழி வேண்டி இருக்கிறது. எதற்கும் ஒருதரம் ஒரு பொண்ணு பேசற பேச்சா இது அப்படிங்கிற இடுகையை வாசிச்சிட்டு வாங்க. எழுதத் தோணினா எப்படி இருக்கும்னு தெரியனுமா  பெண்களை கண்டாலே எரிச்சல் அப்படிங்கிற இடுகையும் ஒரு பார்வை பாருங்க. தனக்கென போராடாத சமூகம் இருக்கும் வரை அமைப்புகள் ஒன்றும் சாதித்துவிட முடிவதில்லை.தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள முயற்சிக்காத மனிதன் எந்த உதவி இருப்பினும் உயரவே மாட்டான். 
 
எனக்கு சிவராமன் வினவு தளத்தில் கட்டுரை எழுதிக் கொடுத்தார் என்பதெல்லாம் பிரச்சினை இல்லை. எவரேனும் எழுதி இருந்தாலும் கூட அந்த கட்டுரையில் தனிப்பட்ட முறையில் பலரை தாக்கி இருப்பதுதான் எரிச்சலாக இருக்கிறது. இதை சிவராமன் நான் வரிக்கு வரி அப்படித்தான் எழுதி இருப்பேன் என வாக்குமூலம் தந்திருப்பது எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தியது. அளவுக்கு மீறிய  எரிச்சல் நர்சிம் எழுதியதை வினவு தளத்தில் படித்தபோது இருந்தது.  இருப்பினும் இவர்கள் எல்லாம் பலருக்கும் தெரிந்தவர்கள், பலராலும் வாசிக்கப்படுபவர்கள் என்பதால்தான் பிரச்சினை.  இப்படி தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுபவர்களை கடைநிலை மனிதர்கள், இழிநிலை மனிதர்கள் என மொத்தமாக சொல்லிவிட்டுப் போய்விடுவதில் இருக்கும் சுதந்திரம் தனிதான். அப்படி எழுதுவதால் எனக்குள் இருக்கும் ஆதங்கம் தீரும், ஆனால் இவர்கள் மாறுவார்களா? ஒரு மாதமோ, ஒரு வருடமோ, ஒரு வாரமோ ஏதாவது பிரச்சினை வரும், அப்போதும் பாருங்கள். எவர் எவர் திருந்தினார்கள் என தெரியும்.

உரையாடல் அமைப்பின் தலைவரான சிவராமன் அவர்களே, இதோ இந்த கவிதை போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை. நிச்சயம் பரிசுக்குரிய கவிதையாக தேர்ந்தெடுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். 
 
அரசியல்வாதிகள்

வெட்டிப் பேச்சு, வீண் எழுத்து
சட்டி சட்டியாய் நிறைந்திருக்கும்

அதை செய்தோம், இதை செய்தோம்
கதை சொல்லி காலம் கடத்தும்

ஆதங்கங்கள் நிறைய கொண்டு
வாதங்கள் செய்வது மட்டும் உண்டு

நாட்டின் நிலைமையை கைகாட்டுவோமே
வீட்டின் நிலைமையை பார்த்தோமா

உற்ற உறவுகளையும், பெற்ற நட்புகளையும்,
கற்ற கல்வியையும், சிற்றறிவுடன்
விற்ற பெருமையும் நம்மை சார்ந்ததாம்

கட்சியில்லை, கொடியுமில்லை
கூட்டம் கூட்டமாய் அலைந்து திரிவோம்
மாட்சியில்லா மந்தைகளாய் மாய்ந்தும் போவோம்

எத்தனை வாக்குறுதிகள், எத்தனை உறுதிமொழிகள்
பித்தனைப் போல், எத்தனைப் போல்
வருடவேஷம் கட்டி நீசமனம் கொண்டு
திருடகோஷம் போடும் நாமும் அரசியல்வாதிகளே.

Tuesday, 1 June 2010

கடவுளும் சிட்டுக்குருவியும்



உன்னைப் பிடித்து
கூண்டில் அடைக்க
ஒருவரும் வரமாட்டார்

மரத்தின் இலையின் நிறமாய் உடல்
மரத்தின் கிளையாய் உன் தலை
மரத்தின் கனியாய் உன் மூக்கு

வெட்ட வெளியில் நின்று
உன்னை மறைத்துக் கொள்ளும்
உவமை கடவுளுக்கும் ஆகுமோ?