Showing posts with label தொடர்கதை அ-அ. Show all posts
Showing posts with label தொடர்கதை அ-அ. Show all posts

Wednesday 17 November 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 32


கதிரேசன் அடுத்தநாள் காலையில் அவசரம் அவசரமாக கிளம்பினான். மதியம் வீடு திரும்புவதாக ஈஸ்வரியிடம் கூறிவிட்டு வைஷ்ணவியைச் சந்திக்கச் சென்றான். வைஷ்ணவி கதிரேசனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். 


''என்ன விசயமா பேசனும், சொல்லு'' என்றான் கதிரேசன். 


''நேத்து ஈஸ்வரிகிட்ட பேசினப்ப அவகிட்ட ஒருவித பயம் தெரிஞ்சது. நீ அவளை விட்டுட்டுப் போயிருவனு நினைக்க ஆரம்பிச்சிட்டா. அதனால அவளுக்குனு ஒரு குழந்தைப் பொறந்துட்டா அந்த பிடிமானத்தோட நீயும் கூடவே இருப்பனு நினைக்கிறா. நீ கொஞ்சம் உன்னோட சிவன் பக்தியை தள்ளி வைக்கக் கூடாதா'' என்றாள் வைஷ்ணவி.


''நம்மைப் பத்தி நாம பிறருக்கு விளக்கம் சொல்லிக்கிட்டிருக்கத் தேவையில்லை. நம்மளைப் புரிஞ்சவங்களுக்கு விளக்கம் அவசியமில்லை, நம்மளைப் புரியாதவங்களுக்கு நாம சொல்றது நம்பும்படியா இருக்கப் போறதில்லை, சிவன் பக்தியை தள்ளி வைக்கச் சொல்றதைத்தான் முக்கியமான விசயம்னு ஈஸ்வரிகிட்ட சொன்னியா?'' என்றான் கதிரேசன். 


''இல்லை, மதுசூதனன் பத்தி பேசனும், ஆனா அதுக்கு முன்னால இந்த விசயத்தையும் பேசலாம்னு நினைச்சேன். நீ ஈஸ்வரியை விட்டு பிரியமாட்டியில்ல'' என்றாள் வைஷ்ணவி. ''என்ன பேச்சு இது, பிரிஞ்சிப் போறதுக்கா அவளைக் கல்யாணம் பண்ணினேன், ஏன் இப்படி ஒரு நினைப்பு வருது உங்க இரண்டு பேருக்கும். அவளையும் பிரியமாட்டேன், உன்னையும் பிரியமாட்டேன்'' என்றான் கதிரேசன். 


''பட்டினத்தார், அருணகிரிநாதர், திருநீலகண்டர், திருஞானசம்பந்தர்னு ஏதேதோ பேசுறா ஈஸ்வரி'' என்றாள் வைஷ்ணவி. ''அவ படிச்சது அப்படி, அவ என்னைவிட்டுப் பிரியாம இருந்தாலே போதும்'' என்றான் கதிரேசன். மதுசூதனன் பற்றி கேட்டான்.  தனது செயல்களே ஈஸ்வரியின் இந்த மனநிலைக்கு காரணம் என அறிந்து கொண்டான். அவள் தன்னிடம் சொல்ல இயலாமல் தவிப்பதை நினைக்கும்போது கதிரேசனுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. 


மதுசூதனன் திருமணம் சில பிரச்சினைகளால் தடைப்பட்டுப் போனதாகவும், அவனது செய்கையால் அவனது பெற்றோர்கள் பெரும் அவமானத்துக்கு உள்ளானார்கள் என அறிந்து கொண்டதாக கூறியவள், அவனுக்கு ஏதேனும் வகையில் உதவி செய்ய வேண்டும் என கதிரேசனிடம் கூறினாள் வைஷ்ணவி. அதைக் கேட்ட கதிரேசன் ''இதெல்லாம் எப்பொழுது நடந்தது, எப்படி இவ்விசயம் தெரிய வந்தது, இன்னும் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறாயா, மிகவும் தெளிவானவளாக அல்லவா நீ இருந்தாய் ஏன் மனம் இப்படி அலைபாய்கிறது'' எனக் கேட்டான் கதிரேசன். 


''நீ மட்டும் ஈஸ்வரியை திருமணம் செய்துகிட்டு  இன்னமும் சிவனையே நினைச்சிட்டு இருக்கலையா? '' என்றாள் வைஷ்ணவி. ''அது வேற   , இது வேற. இந்நேரம் அவன் திருமணம் செஞ்சி இருந்தா என்ன செய்து இருப்ப?'' என்றான் கதிரேசன். ''நினைப்பு இருந்திருக்கும்'' என்றாள் வைஷ்ணவி. ''தெளிவா பேசிய நீயா இப்படி குழம்புறது, உனக்கு தகவல் சொன்னது யார்?'' எனக்கேட்டான் மீண்டும். ''மதுசூதனனின் நண்பன்தான் பேசினான்'' என்றாள் வைஷ்ணவி. ''நீ அவனை மறக்க மாட்டாயா?'' என்றான் கதிரேசன். ''நீ சிவனை மறக்கமாட்டாயா?'' என்றாள் வைஷ்ணவி. ''நீ விசயம் கேள்விபட்டதும் அவன்கிட்ட நேரடியா பேசியிருக்கனும்'' என்றான் கதிரேசன். ''முயற்சி பண்ணினேன், ஆனா அவன் எடுக்கலை'' என்றாள் வைஷ்ணவி. 


''கொஞ்சம் இரு'' என சொல்லிவிட்டு மதுசூதனனுக்கு உடனே அழைப்பு விடுத்தான் கதிரேசன். எதிர்முனையில் ஒரு பெண் குரல் கேட்டது. ''யார் பேசறது'' என்றது குரல். ''கதிரேசன் பேசறேன், மதுசூதனனோட நண்பன், இது மதுசூதனனோட நம்பர் தானே, நீங்க யாரு'' என்றான் கதிரேசன். ''அவர் வெளியேப் போயிருக்கார், இப்ப வந்துருவார், நான் அவரோட மனைவி பேசறேன், வந்ததும் சொல்றேன்'' என இணைப்பைத் துண்டித்தாள். கதிரேசன் மிகவும் கோபமானான். ''வைஷ்ணவி அவன் உன்னோட வாழ்க்கையில விளையாடறான், நீ இப்படி ஏமாளியா இருக்காதே. அவன் கல்யாணம் எல்லாம் நல்லாவே நடந்துருச்சி''. 


சிறிது நேரத்தில் கதிரேசனை அழைத்தான் மதுசூதனன். ''எதுக்குடா போன் பண்ணின, என் கல்யாணம் நின்னுப்போச்சுனு கேள்விப்பட்டு என்னை அவளோட சேர்த்து வைக்க முயற்சி பண்றியா. அவளோட கல்யாணம் தான் இனிமே ஒவ்வொருதடவையும் நிற்கும். நீ அவளை ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் உண்டு. அவளைப் புரிஞ்சிக்கிட்ட சிவனாச்சே நீ'' என சொல்லி பயங்கரமாக சிரித்தான் மதுசூதனன். கதிரேசன் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. ''நீ தானே அவளை வேணாம்னு ஒதுக்கின, இப்போ ஏன் அவளுக்கு தொந்தரவு தர. இப்ப கூட உனக்கு உதவனும்னு நினைக்கிறா, அவகிட்ட பேசு'' என்றான் கதிரேசன். 


''உங்ககிட்ட எனக்கு என்னடாப் பேச்சு, வடிகட்டின முட்டாள்டா நீ'' என சொல்லிவிட்டு வைத்தான் மதுசூதனன். கதிரேசனுக்கு கோபம் அதிகமானது. வைஷ்ணவி கதிரேசன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள். கதிரேசன் ஆறுதல் சொன்னான். ''நீ கவலைப்படாதே, நாங்க எல்லாம் இருக்கோம்'' என வைஷ்ணவியை தன்னுடன் வீட்டுக்கு அழைத்து வந்தான். கதிரேசன் பூஜை அறைக்குள் நுழைந்தான்.


''காதலில் கேடும் உளதோ கண்டறியேன் பெருமானே
காதலும் காத்தே நிற்கும் உண்மையோ
ஒருமுறை காதல் வயப்பட்டுப் போய்விடின் மறந்தே
மறுமுறை காதல்வருமோ சொல்சிவனே''


(தொடரும்)

Wednesday 3 November 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 31


ஈஸ்வரி வேகமாக வந்தாள். 'என்ன விசயம்?' எனக் கேட்டாள். கதிரேசன் சுருக்கமாக சில வரிகளில் சொன்னான். 'சரி நான் பார்த்துக்கிறேன்' என சொன்னாள் ஈஸ்வரி. பெண்ணின் மனதை ஒரு பெண்ணே அறிவாள் என நினைத்தான் போலும் கதிரேசன்.

ஈஸ்வரி வைஷ்ணவிக்கு ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்தாள். அப்பொழுது வைஷ்ணவி ''நான் ரொம்பத் தெளிவாத்தான் இருந்தேன், ஆனா இழப்புனு வரப்போ தாங்கிக்க முடியலை, இன்ன காரணத்துக்குனு ஒருத்தரை ஒதுக்க முடியாதில்லையா?'' என வைஷ்ணவி கூறினாள். ''ம், சட்டுனு எதையும் செஞ்சிரமுடியாது, ஆனா இப்போ நிலமை கைக்கு மீறிப் போயிருச்சி அதனால அவனை இனிமே நினைச்சிட்டு இருக்கிறதுல்ல அர்த்தமில்லை'' என்றாள் ஈஸ்வரி. ''ம்'' எனக் கேட்டுக் கொண்டாள் வைஷ்ணவி. ஈஸ்வரியே தொடர்ந்தாள்.

''எப்பவுமே நமக்கு இருக்கிறது மேல அக்கறையே இருக்காது, இல்லாதது மேலதான் அக்கறையே இருக்கும், இருக்கிறதை நல்லா வைச்சிக்கத் தெரியாது, இல்லாததை பத்தியே யோசிச்சி காலம் போகும், அப்புறம் நாள் போனப்பறம் தான் தெரியும் இருக்கிறதை ஒழுங்காப் பாதுகாக்காம விட்டதால இருக்கிறதும் இல்லாமப் போயிரும்'' என மெதுவாக நிறுத்திச் சொன்னாள் ஈஸ்வரி. கதிரேசனின் காதிலும் அது விழுந்தது.

''எனக்கு அவனுக்கு கல்யாணம் நிச்சயம்னு சொன்னதும் மனசு கொஞ்சம் தளர்ந்திருச்சி, என்னை வெறுப்பேத்தத்தான் இந்த தகவலையே ஃபோன் பண்ணிச் சொல்றேன், கல்யாணத்துக்கெல்லாம் வந்துராதேனு சொல்லிட்டு ஃபோனை வைச்சிட்டான், அதுதான் கதிரேசன் கிட்ட சொல்லலாம்னு நேரில வந்தேன்'' என்றாள் வைஷ்ணவி. ''நீயும் ஃபோன் பண்ணி ஒருத்தனை காதலிக்கிறேனு சொல்லு, அதுவும் இப்பவே. உன்னால முடியலைன்னா என்கிட்ட கொடு நான் சொல்றேன் அவனுக்கு'' என்றாள் ஈஸ்வரி.

''சே சே வேண்டாம்'' என்றாள் வைஷ்ணவி. ''உயிருக்குயிரா காதலிச்ச ஒருத்தரை எப்படி லேசா தூக்கிப் போட முடியும்?'' எனக் கேட்டாள் ஈஸ்வரி. ''நம்ம காதலே, காதல்னு இல்லைனு சொல்லிட்டுப் போறவனுக்கு, நம்ம காதல் இருக்குனு வாழறது கோழைத்தனம்'' என சொன்ன வைஷ்ணவியின் கண்கள் தெளிவாக பிரகாசித்தது.

''வழி தேடிக்கிற சக்தி உள்ளவங்களுக்கு வலி எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை, ரொம்பப் பிடிச்சிருக்கு உங்களை, நான் கூட நீங்க மனசு வெறுத்துட்டீங்களோனு நினைச்சேன், சீக்கிரம் ஒரு பையனைப் பார்த்துருவோம்'' என்றாள் ஈஸ்வரி. ''எனக்கும் தான் உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு, ம் பையனா? சரி'' என்றாள் வைஷ்ணவி.

கதிரேசன் அங்கே காபியுடன் வந்தான். ''என்ன வைஷ்ணவி, என்ன முடிவு பண்ணியிருக்க?'' எனக் கேட்டான் கதிரேசன். ''உங்களை மாதிரி ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம்'' என்றாள் ஈஸ்வரி. ''நல்ல முடிவு தான'' என்றான் கதிரேசன். ''பையன் கிடைக்கனுமே'' என்றாள் ஈஸ்வரி. ''ஏன் உன் அண்ணன் சங்கரன் இல்லையா?'' என்றான் கதிரேசன். வைஷ்ணவி புன்னகைத்தாள். ''கொஞ்சம் நாள் ஆகட்டும், இப்ப எல்லாம் எதுவும் வேண்டாம்'' என சொன்னாள் வைஷ்ணவி.

இத்தனை நாட்களில் ஈஸ்வரிக்கு மிகவும் நெருங்கிய தோழியாகிப் போனாள் வைஷ்ணவி. தினமும் மாலையில், வார விடுமுறையில் கதிரேசனின் வீட்டுக்குத் தவறாமல் வந்துவிடுவாள் வைஷ்ணவி. ஈஸ்வரியுடன் சில மணி நேரங்கள் பேசிவிட்டுச் செல்வாள். மாதங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ''எப்போ குழந்தை?'' எனக் கேட்டாள் வைஷ்ணவி. ''சிவன் மனசு வைக்கனுமே'' எனச் சிரித்தாள் ஈஸ்வரி. ''சிவன்?'' என வினாவுடன் பார்த்தாள் வைஷ்ணவி.  ''கொஞ்ச நாள் ஆகட்டும்'' என்றாள் ஈஸ்வரி. ''கதிரேசன் இன்னும் அப்படித்தான் இருக்கானா?'' எனக் கேட்டாள் வைஷ்ணவி.

வைஷ்ணவியின் கேள்வியை ஈஸ்வரி எதிர்பார்க்கவில்லை. ''என்ன அர்த்தம்?'' எனக் கேட்டாள் ஈஸ்வரி. ''உடல் தொடுறது கள்ளம்னு நினைச்சான், காதல் இல்லைனு சொன்னான்'' என ஈஸ்வரியினைப் பார்த்தாள் வைஷ்ணவி. ''நீயும் அவரும் நெருக்கமா?'' எனக் கேட்டாள் ஈஸ்வரி. ''ம் எனக்கு கதிரேசன்கிட்ட பேசறது ரொம்பப் பிடிக்கும், என்கிட்ட எல்லா விசயமும் பேசுவான் அப்போதான் உன்னைப் பத்தியும் சொன்னான், நான் கூட அறிவுரை சொன்னேன், கல்யாணத்துக்கப்பறம் என்கிட்ட முன்னைப் போல பேசறதில்லை, எப்பவும் ரொம்ப பிஸியாவே இருக்கான்'' என்றாள் வைஷ்ணவி. ''ம்ம் கதிரேசன் மாதிரி ஒருத்தர் உனக்கு கணவனா வாய்ச்சா என்ன பண்ணி இருப்ப?'' எனக் கேட்டாள் ஈஸ்வரி. ''தெரியலை, அந்த சூழ்நிலையில எப்படி இருந்திருப்பேனோ, ஒருவேளை உன்னை மாதிரியே சந்தோசமாவே இருந்திருப்பேனோ என்னவோ?'' என பதில் சொன்னாள் வைஷ்ணவி.

''ஆமாம் எனக்கு முதல் ஒரு வாரம் என்ன இது அப்படினு இருந்திச்சி, ஆனா அதுக்கப்புறம் எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லாமப் போக ஆரம்பிச்சிருச்சி. ரொம்பவே சந்தோசமா இருக்கேன். வீட்டுல கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க! கல்யாணம் பண்ணினா உடனே குழந்தை அப்படிங்கிற மனசுதான் எல்லோருக்கும், இல்லைன்னா புழுப் பூச்சி இல்லைன்னு பேசிருவாங்க'' என்றாள் ஈஸ்வரி. ''ஆச்சரியமா இருக்கு?'' என்றாள் வைஷ்ணவி. ''எதையும் ஏத்துக்கிறப் பக்குவம் வேணும், கிடைச்சா சரினும், கிடைக்கலைன்னா சரின்னும் இருந்தா இருக்கிறது எப்பவுமே இல்லாமப் போகாது'' என ஈஸ்வரி சொன்ன வேளையில் கதிரேசன் வீட்டினுள் நுழைந்தான். வைஷ்ணவி சில நிமிடங்களில் விடைபெற்றுச் சென்றாள்.

நாட்கள் நகரத் தொடங்கியது. வைஷ்ணவியின் வருகையும், அவளது பேச்சும் ஈஸ்வரியை வெகுவாகவே கவர்ந்தது.

கதிரேசன் அலுவலகத்தில் வீட்டிற்கு கிளம்பும் முன்னர் வழக்கம் போல ஒரு அறையில் தியானத்தில் அமர்ந்தான். சிவன் வழக்கம்போல மனதில் வட்டமிட்டார்.

வீட்டிற்கு வந்தான். ''வைஷ்ணவி வந்திருந்தா, உன்கிட்ட முக்கியமாப் பேசனுமாம்'' என்றாள் ஈஸ்வரி. ''ம்'' என சொல்லிவிட்டு வைஷ்ணவியைத் தொடர்பு கொண்டான் கதிரேசன். ''எப்போ ஃபிரீயா இருப்ப, உன்கிட்ட நேரில பேசனும்'' என்றாள் வைஷ்ணவி. ''நாளைக்கு வா'' என்றான் கதிரேசன்.

(தொடரும்)

Thursday 28 October 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 30

வைஷ்ணவி தனது பெற்றோர்களை மறுதினமே ஊருக்கு அனுப்பிவிட்டாள். சில தினம் பின்னர் நேர்முகத் தேர்வுக்குச் சென்றவள் மிகுந்த சந்தோசத்துடன் மாலை நேரம் இனிப்புகளை வாங்கிக்கொண்டு ஈஸ்வரியின் வீட்டில் கொடுத்துவிட்டு கதிரேசன் வீட்டிற்கு வந்தாள். அந்த சில நாட்களும் ஈஸ்வரியின் வீட்டில்தான் வைஷ்ணவி தங்கி இருந்தாள்.

''ஸ்வீட் எடுத்துக்கோ? எனக்கு வேலை கிடைச்சிருச்சி'' என ஈஸ்வரியிடம் தந்தாள் வைஷ்ணவி. ''வாழ்த்துகள்'' எனச் சொல்லிக்கொண்டு இனிப்புகள் எடுத்துக் கொண்டாள் ஈஸ்வரி. வெளியே சென்றிருந்த செல்லாயி வந்ததும் அவரிடமும் இனிப்புகள் தந்தாள் வைஷ்ணவி. அவரும் வாழ்த்தினார். காபி போட்டு வருவதாகச் சொன்னாள் ஈஸ்வரி. கதிரேசன் வரட்டும் என சொன்னாள் வைஷ்ணவி. கதிரேசன் வரும் வரை ஈஸ்வரியுடன் பேசிக்கொண்டிருந்தாள். கதிரேசன் பற்றியும் மதுசூதனன் பற்றியும் பேச்சு வந்தது. 

''எப்படியெல்லாம் நம்மை ஒருத்தர் இருக்கனும்னு நினைக்கிறாரோ, அவரை நாம எதிர்பார்க்கிறமாதிரி இருக்க வைச்சிரனும் அதுதான் அன்போட வெற்றி. நான் மட்டும் கொஞ்சம் அசந்திருந்தா இவர் என்னை கல்யாணம் பண்ணியிருக்கவே மாட்டார், இவரை என்னைத் தேடிவர வைச்சேன். நீ இப்படி இங்க வேலைப் பார்த்தா மதுசூதனன் எப்படி உன்னைத் தேடி வருவார், உனக்கும் அவருக்கும் எப்படி அந்நியோன்யம் உருவாகும். எண்ணங்களால் காதலிக்கிறது எல்லாம் கற்பனைகாலக் காதல், இப்ப எல்லாம் உடல் ஸ்பரிசமும் வேணும்'' என்றாள் ஈஸ்வரி. 

''பார்க்கலாம்'' என வைஷ்ணவி சொல்லும்போதே கதிரேசன் உள்ளே நுழைந்தான். கதிரேசனை கண்ட சந்தோசத்தில் ''எனக்கு வேலை கிடைச்சிருச்சி கதிரேசா, இந்தா ஸ்வீட்'' என எடுத்துத் தந்தாள் வைஷ்ணவி. 

''வாழ்த்துகள், நன்றி'' என இனிப்பு எடுத்துக் கொண்டான் கதிரேசன். கை கால்கள் முகம் அலம்பிவிட்டு வந்து அமர்ந்தான். ஈஸ்வரி காபி போடச் சென்றாள். ''நிறைய கேள்வி கேட்டாங்க. எம் டி ஒரே கேள்விதான் கேட்டார்'' என்றாள் வைஷ்ணவி. ''ஓ என்ன கேட்டார்'' என்றான் கதிரேசன். ''சென்னை, பெங்களூருனு போகாம ஏன்மா இங்க வந்திருக்கனு கேட்டார்?, அதுக்கு நான் இப்படி நகரத்தையே முன்னேத்திக்கிட்டே இருந்தா இந்த ஊரு எல்லாம் எப்ப முன்னேறுரதுனு சொன்னேன், அந்த பதில் பிடிச்சி இருக்குமோ என்னவோ?'' என்றாள் வைஷ்ணவி. 

''நீ சங்கரன்கோவிலை முன்னேத்த வந்தியாக்கும்?'' என சிரித்தான் கதிரேசன். வைஷ்ணவி உடன் சிரித்தாள். ''உண்மையிலேயே நீ எதுக்கு இந்த ஊருக்கு வந்தேனு எனக்குத் தெரியும், அப்பா அம்மாட்ட சொல்லிட்டியா?'' என்றான் கதிரேசன். ''ம் ஃபோன் போட்டு சொல்லிட்டேன், ரொம்ப சந்தோசப்பட்டாங்க, நான் ஹாஸ்டலுல தங்கிக்கிறப் போறேன், ரொம்ப நாள் ஈஸ்வரி வீட்டுல தங்க முடியாது கதிரேசா'' என்றாள் வைஷ்ணவி. ''எங்களோட தங்கிக்கோ'' என்றான் கதிரேசன். ''ம் அதெல்லாம் சரிப்பட்டு வராது, நான் ஹாஸ்டலுக்கேப் போறேன்'' என சொல்லும்போதே காபியுடன் வந்தாள் ஈஸ்வரி. 

''இங்கேயே தங்கலாமே, அத்தையோட ரூமுக்குப் பக்கத்தில ஒரு ரூம் இருக்கு'' என்றாள் ஈஸ்வரி. செல்லாயியும் சம்மதம் சொன்னார். ஆனால் வைஷ்ணவி மறுத்துவிட்டாள். ஈஸ்வரி வைஷ்ணவியை தங்கச் சொல்லி மிகவும் வற்புறுத்தினாள். கதிரேசனிடமும் சொன்னாள். ஆனால் வைஷ்ணவி வேண்டாம் என சொல்லிவிட்டு மகளிர் விடுதி ஒன்றில் அன்றே இடம் பார்த்தாள்.

அன்று இரவு ஈஸ்வரி கதிரேசனிடம் வைஷ்ணவி இங்கு வேலை பார்க்க வர காரணம் என்ன என கேட்டாள். ''வைஷ்ணவி மதுசூதனனை விட்டு சற்றுத் தள்ளி சென்றுவிடலாம் என நினைத்துத்தான் இங்கே வந்திருக்கக்கூடும், சென்னை, பெங்களூர் எனும் நகரமெனில் அவனும் அங்கே வேலைக்குச் செல்ல வாய்ப்பு உண்டு, இங்கே அவன் வர வாய்ப்பில்லை என்பதால் இருக்கும்'' என சொன்னான். 

''அருகில் இருந்தும் நான் தள்ளியேதானே இருக்கிறேன்'' என்றாள் ஈஸ்வரி. ''சிவனே! சற்று பொறுத்துக்கொள்'' என்றான் கதிரேசன். ''இன்னும் எத்தனை நாட்களுக்கு?'' என்றாள் ஈஸ்வரி. ''என் மனம் சிவனை உட்கிரகித்துக் கொள்ளும் வரை'' எனச் சொன்னான் கதிரேசன். ''என் சீவன் அகலும் முன்னர் நடந்துவிடும் அல்லவா ஈசனே'' எனச் சொல்லிச் சிரித்தாள் ஈஸ்வரி. ''கோபம் இல்லையா?'' என்றான் கதிரேசன். ''கோபமா?, அன்பில் இடைபுகுமோ கோபம்'' என கதிரேசனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

''ஏமாத்துறேனு நினைக்கிறியா, உன்னோட குடும்பம் நடத்துவேனு சொல்லிட்டு...'' என கதிரேசன் சொல்லும்போதே ''செய்ற செயலை தப்பா சரியானு யோசிச்சிட்டே செய்ய வேணாம், இப்போதைக்கு இப்படி எண்ணம் இருக்கறப்ப அப்படியே இருக்கட்டும்'' என இடைமறித்துச் சொன்னவள் ''தனியாப் போய் படுனு என்னை சொல்லலையே'' என்றாள். ''இவ்வளவு புரிஞ்சி வைச்சிருக்க'' என்றான் கதிரேசன். ''இருபக்கமும் புரிதல் இருக்கனுமே'' என கண் சிமிட்டினாள். கதிரேசன் சிரித்தான். 

காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்தான் கதிரேசன். ஈஸ்வரியும் உடன் அமர்ந்தாள். கதிரேசன் பாடினான்.

''உன்னை அருகில் வைத்துக் கொண்டே இல்லையென
கண்ணை மூடியிருத்தல் சுகம் தருமோ ஈசனே
உயிரால் உணர்வால் எனக்காகிய இவள் வாழ்க்கை
வயிறும் காணுமோ சொல்சிவனே''

பூஜை முடிந்ததும் சாப்பிட்டான் கதிரேசன். அலுவலகத்திற்குக் கிளம்பும் முன்னர் கதிரேசனிடம் ஈஸ்வரி சொன்னாள். ''இனி சிவன்கிட்ட பாடறப்ப, மாயமும் மந்திரமும் தராது, தாயத்தும் வழியும் சொல்லாது, உன் தாரம் தானாய் உருவாக்கிய பிள்ளையார் போல் என் தாரமும் ஒரு பிள்ளையை தானாக உருவாக்குவாரோ சொல்சிவனேனு கேட்கலாமே'' என்றாள் ஈஸ்வரி. ''மனசுக்குள்ள வெறுப்பு உருவாகுதுல்ல'' என்றான் கதிரேசன். ''எப்பவுமே அதுக்கு நான் இடம் தரமாட்டேன், என்னோட விருப்பத்தையும் கேட்கச் சொன்னேன், வெறுப்பை வளர்க்கிறோமோ என நினைக்கிறிங்களோ'' என்றாள் ஈஸ்வரி. இல்லை என தலையாட்டிவிட்டு நடந்தான் கதிரேசன். 

''எப்பதான் அவனுக்கு சிவன் பைத்தியம் தெளியுமோ?'' என்றார் செல்லாயி. ''என்ன அத்தை?, அதெல்லாம் தெளிஞ்சிதானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்'' என்றாள் ஈஸ்வரி. ''நானும் ஒரு பொண்ணும்மா'' என்றார் செல்லாயி. ''அத்தை நான் பக்கத்து ஸ்கூல டீச்சரா வேலைக்கு சேரப் போறேன், ஸ்கூல் அப்பாவோட பிரெண்டோடது. அவர் முன்னமே சொல்லிட்டு இருப்பார், படிச்சி என் ஸ்கூலுக்குத்தான் வேலைக்கு வரனும்னு'' என்றாள் ஈஸ்வரி. ''ம் சரிம்மா'' என்றார் செல்லாயி. 

ஈஸ்வரி கதிரேசனிடம் அன்று மாலையில் பள்ளி வேலை விசயத்தைக் கூறினாள். கதிரேசனும் சரியென சொன்னான். அன்று மாலை வைஷ்ணவி கதிரேசனின் வீட்டுக்கு வந்தாள். 'கதிரேசனிடம் ''மதுசூதனன் ஃபோன் பண்ணினான்'' என்றாள் வைஷ்ணவி. ''என்ன விசயம்?'' என்றான் கதிரேசன். ''அவனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சாம்'' என்றவளின் கண்கள் கலங்கியிருந்தது. ''உட்கார்'' என சொன்னவன் ''ஈஸ்வரி இங்கே வா'' என்றான். 



(தொடரும்) 

Wednesday 20 October 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 29

கதிரேசன் அடுத்ததினமே ஈஸ்வரியைச் சந்தித்தான். ''என்ன விசயம்?'' என்றாள் ஈஸ்வரி. அவள் எதிர்பார்க்காத வண்ணம் அவளைக் கட்டிப்பிடித்தான் கதிரேசன். ஈஸ்வரி திக்குமுக்காடிப் போனாள். ''என்ன காரியம் செய்ற?'' என அவனை புறந்தள்ளி கோபம் கொண்டாள் ஈஸ்வரி. 

''எனக்காக சிவனை உதறிட்டியா?'' என்றாள். கதிரேசன் அந்தக் கேள்வியை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ''ம்'' என்றான் கதிரேசன். ''உன் கொள்கையைத் தூக்கி எறிஞ்சிட்டியே, என்னைத் தூக்கி எறிய உனக்கு எவ்வளவு நேரமாகும்?'' என்றாள். கதிரேசன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். 

''உன்னோட எப்படி என்னால வாழ்க்கையை நடத்த முடியும்'' என்று சொன்னாள் ஈஸ்வரி. கதிரேசன் அவளையே உற்று நோக்கினான். ''நேத்துதான் என்னை தொடரவேணாம்னு சொன்னேன், இன்னைக்கு என்னை வந்து என்னோட அனுமதி இல்லாம கட்டிப்பிடிக்கிற'' என்றாள் மேலும். ''என்ன இது விளையாட்டு'' என்றான் கதிரேசன். ''அந்த சிவன்கிட்டயே கேட்டுக்கோ'' எனச் சொல்லிவிட்டுச் சென்றாள். கதிரேசன் நிலையாய் அங்கேயே நின்றான். மனம் ஈஸ்வரியின் வார்த்தைகளை நம்ப மறுத்தது. 

கதிரேசன் அமைதியாகிப் போனான். ஈஸ்வரியைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்தபோது பேசிட நினைந்து செல்கையில் அவள் பேசாதே போனாள். ஒருநாள் அவளது கரங்களைப் பிடித்து நிறுத்தினான். 

'கல்லும் உன் நெஞ்சோ' என்றான் அவன். ''சொல்லும் சொல்லில் மனம் வை'' என்றாள் அவள். ''கல்லும் உன் நெஞ்சோ'' என்றான் மீண்டும். ''அருணகிரிநாதர் போல், பட்டினத்தார் போல் ஆவாயோ'' என்றாள். கதிரேசன் பதறினான். ''ஏன் இப்படி பேசுற'' என்றான். ''நீதானே தமிழ்ப்புலவர் மாதிரி கல்லும் உன் நெஞ்சோனு கேட்ட'' எனச் சிரித்தாள். ''அதில்லை, அருணகிரிநாதர், பட்டினத்தார்னு சொன்னியே'' என்றான். 

''குடும்ப வாழ்க்கையில ஈடுபட்டுட்டு சிவனேனு நீயும் போயிட்டா என்ன நியாயம்'' என்றாள். ''திருப்புகழ் கிடைச்சது, தத்துவம் சொன்னது'' என்றான் கதிரேசன். ''வாழ்க்கை தொலைஞ்சது'' என்றாள். கதிரேசன் அவளை கட்டிப்பிடித்தான் மீண்டும். ''என்னை ஏத்துக்கோ'' என்றான். ''எனக்காக எதுவும் செய்வியா?'' என்றாள் ஈஸ்வரி. ''எனக்காக நீ எப்படியும் இருப்பனு சொன்ன'' என்றான் கதிரேசன். ''என்னை வந்து பொண்ணு கேளு'' எனக் கூறிவிட்டுப் போனாள். 

மாதங்கள் கடந்தது. ஈஸ்வரிக்கு கல்லூரிப் படிப்பும் முடிந்தது. கதிரேசனுக்கும் ஈஸ்வரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு, கல்லூரிப் படிப்பை முடித்திருந்த வைஷ்ணவி தனது அப்பா அம்மாவுடன் கல்யாணத்திற்கு முன் தினமே வந்திருந்தாள். அவளிடம் ''மதுசூதனன் வரலையா'' எனக் கேட்டான் கதிரேசன். ''தெரியாது'' என்றே பதில் சொன்னாள் வைஷ்ணவி. 

மதுசூதனனிடம் தொடர்பு கொண்டபோது ''சைவத் திருமணத்திலெல்லாம் கலந்து கொள்ற வழக்கம் எனக்கில்லை'' என கோபமாகப் பேசி இணைப்பைத் துண்டித்தான். கதிரேசன் கலக்கமுற்றான். வைஷ்ணவியிடம் கேட்டபோது ''சிலர் திருந்தறதைப் போல நடிப்பாங்க, ஆனா திருந்தவே மாட்டாங்க, ஏதாவது ஒரு காரணம் வைச்சிட்டே இருப்பாங்க'' என்றாள்.

''அப்படின்னா...'' என்ற கதிரேசனிடம் ''நீ கல்யாண மாப்பிள்ளை, இப்ப அவனைப் பத்தி எதுக்கு, சந்தோசமா இரு, நான் சந்தோசமா இருக்கேன்'' என்றாள். ''வேலை?'' என்றான் கதிரேசன். ''இந்த ஊரில இருக்கிற கம்பெனியில தான் வேலைக்கு விண்ணப்பிச்சிருக்கேன், நாலு நாள் கழிச்சி நேர்முகத் தேர்வு'' என சொன்னாள் வைஷ்ணவி. ''இங்கயா?'' என ஆச்சரியமாகக் கேட்டான். ''ம் கிடைக்குதானுப் பார்ப்போம்'' என்றாள் வைஷ்ணவி. ''ஆச்சர்யமா இருக்கு'' என்றவன் ஈஸ்வரியிடம் வைஷ்ணவியை அழைத்துச் சென்றான். வைஷ்ணவியை முதன்முதலாய் பார்த்த ஈஸ்வரி அன்புடன் அவளை ஆரத் தழுவினாள். வைஷ்ணவி ஈஸ்வரியின் அன்பில் கண்களில் ஈரம் கொண்டாள்.



சிறிது நேரம் ஈஸ்வரியிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வைஷ்ணவி கல்யாண மண்டபத்தில் தங்களுக்கான விடுதி அறையில் தங்கிக்கொள்ள விடைபெற்றுச் சென்றாள். ''ரொம்ப அழகான, அறிவான பொண்ணு உனக்குக் கிடைச்சிருக்கா'' என்றாள் கதிரேசனிடம். ''ஆமா, எனக்கு சந்தோசமே'' என்றான் கதிரேசன். ''உன்னை மாதிரி எனக்கும் ஒரு வாழ்க்கை அமையனும்னு எனக்காக சிவனை வேண்டிக்கோ'' என்றாள் வைஷ்ணவி. ''நிச்சயம் நல்ல வாழ்க்கை அமையும், இதிலென்ன சந்தேகம்'' என்றான் கதிரேசன். ''ம்ம் நான் ரூமுக்குப் போறேன், நீ வீட்டுக்குப் போ'' எனச் சொல்லிவிட்டு நடந்தாள். ''இரு நானும் வரேன்'' என கதிரேசனும் அவளுடன் சென்றான். 

விடுதி அறையில் வைஷ்ணவியின் தாயும் தந்தையும் இருந்தார்கள். கதிரேசனை தனது தந்தைக்கு அறிமுகப்படுத்தினாள் வைஷ்ணவி. கதிரேசனிடம் நன்றாக பேசியவர் ''எவ்வளவோ தூரம் தள்ளி இங்க வேலைக்கு வரனும்னு விண்ணப்பிச்சிருக்கா, நாலு நாளு இங்கதான் இருக்கனும்'' என்றார் அவர். ''நாளைக்கு மட்டும் இங்க இருங்க, அப்புறம் எங்க வீட்டுல தங்கிக்கிரலாம்'' என்றான் கதிரேசன். ''அதுக்கு சொல்லைப்பா, எங்களை விட்டு இவ்வளவு தூரம் இவ பிரிஞ்சி வரனுமானுதான், நாலு வருசம் படிக்கிறேனு தனியா போனா'' என்றார் மேலும். ''கவலைப்படாதீங்க சார், நாங்க எல்லாம் இங்க இருக்கோம்ல, வைஷ்ணவியப் பார்த்துக்கிறோம்'' என்றான் கதிரேசன். அவ்வார்த்தைகளைக் கேட்டு சந்தோசம் கொண்டார்கள். 

கதிரேசனுடன் படித்த சில நண்பர்கள் மட்டுமே கல்யாணத்திற்கு வந்திருந்தார்கள். பலர் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார்கள். செல்லாயி கதிரேசனிடம் ''எங்கப்பா இவ்வள நேரம் போயிருந்த, தலைக்கு மேல வேலை இருக்கு'' என்றார். ''மாமா வரலையா?'' என்றான் கதிரேசன். ''அவன் வரமாட்டான், என்னைக்கு உனக்குப் பொண்ணு தரமாட்டேனு சொன்னானோ, அவன் எப்படி வரப்போறான்'' என்றார். ''நம்ம ஊருல இருந்து காலையில வரும்போது அவங்களோடவாவது வரச் சொல்லும்மா'' என்றான் கதிரேசன். ''உன் தாத்தாகிட்ட போய் கேளு அவன் என்ன சொன்னானு, அண்ணனாம் அண்ணன்'' என்றவர் ''நீ எல்லாம் சரியா இருக்கானு பாரு, நிக்காதே'' என செல்லாயி பரபரப்புடன் திரிந்தார். 

''என்ன தாத்தா, மாமா வரலையா?'' என கட்டிலில் படுத்திருந்தவரிடம் போய்க் கேட்டான். ''வரலைனு சொல்லிட்டான்'' என்றவரிடம் ''என்னவோ சொன்னாராமே'' எனக் கேட்டான் கதிரேசன். ''அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா'' என்றவரிடம் மீண்டும் மீண்டும் கேட்கவே ''சன்யாசம் போனவனுக்கு கல்யாணத்தைப் பண்ணி வைச்சா நிலைக்குமானு சொல்லி உன் அத்தையையும் போக வேணாம்னு தடுத்திட்டான், அதான் நாங்க மட்டும் கிளம்பி வந்துட்டோம்'' என்றார் அவர். கதிரேசனின் மனம் கோபம் கொண்டது. ''அந்த பிள்ளை கூடவா வரலை'' என்றான் கதிரேசன். ''தெரியலைப்பா, அது வரனும்னுதான் நிக்குது'' என்றார். 

கதிரேசனுக்குத் தூக்கமே வரவில்லை. சன்யாசம் போனேனா? என யோசனையிலே தூங்கிப்போனான். அதிகாலையில் புளியம்பட்டியில் இருந்து கல்யாணத்திற்கு பலர் வந்து சேர்ந்தார்கள். லிங்கராஜூவின் மகளும், அவளது அம்மாவும் கல்யாண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்கள். செல்லாயி வீட்டினை விசாரித்து வீட்டினை அடைந்தார்கள். அவர்களைக் கண்ட செல்லாயிக்கு மனம் மிகவும் சந்தோசமானது. ''வறட்டு கெளரவம் பிடிச்ச மனுசனை எப்படி திருத்துறது'' என சலித்துக் கொண்டார். அவர்களைக் கண்ட கதிரேசன் மிகவும் மகிழ்ந்தான். லிங்கராஜூவைப் பத்தி எதுவுமே கேட்கவில்லை. 

கல்யாண மண்டபம் நிறைந்து இருந்தது. பட்டு சட்டை பட்டு வேட்டியில் கதிரேசனைப் பார்த்த வைஷ்ணவி ''என் கண்ணே பட்டுடும் போலிருக்கு'' என சொன்னாள். ''சாப்பிட்டியா?'' என்றான் கதிரேசன். ''ம் பிரமாதமான சாப்பாடு, என்ன ராத்திரிதான் தூங்க முடியலை, பையனுக ஒரே சத்தம், விளையாட்டுனு அலங்கோலப் படுத்திட்டாங்க, இதுபோல நேரம் தானே ரொம்ப சந்தோசமா இருக்கும்'' என்றவள் ''நெத்தி முழுசுமா திருநீறு பூசியிருக்க'' என ஆச்சரியமாகக் கேட்டாள். ''உடம்பு பூராதான் பூசியிருக்கேன்'' என்றான் கதிரேசன். ''சிவனை விடலையா?'' என்றாள். ''விடமுடியாத உறவு அது'' எனச் சிரித்துச் சொன்னவன் ''வா மேடையில எங்கப் பக்கத்துலயே இரு'' என்றான் கதிரேசன். ''அதெல்லாம் வேண்டாம், நான் கீழேயே இருக்கேன் அப்பதான் உங்க ரெண்டு பேருடைய வெட்கப்படற முகத்தைப் பார்த்துட்டே இருக்க முடியும்'' எனச் சொல்லிவிட்டு தனது தாய் தந்தையருடன் சென்று முதல் வரிசையில் அமர்ந்து கொண்டாள். 

புரோகிதர் வந்திருந்தார். மேடையில் ஆட்கள் நிறைந்து காணப்பட்டார்கள். மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தார் புரோகிதர். சற்று நேரத்திற்கெல்லாம் ஈஸ்வரி வந்து அமர்ந்தாள். சேலை மாற்றிவரச் சொல்லி அனுப்பினார்கள். பின்னர் இருவரும் மேடையில் அமர்ந்தார்கள். முகூர்த்த நேரம் நெருங்கியது. ஈஸ்வரியை தனது மனைவியாக்கிக் கொண்டான் கதிரேசன், கதிரேசனை தனது கணவனாக்கிக் கொண்டாள் ஈஸ்வரி. ஈஸ்வரியின் முகத்திலும், கதிரேசனின் முகத்தில் அளவில்லா ஆனந்தம் யாகம் வளர்த்த தீயினால் வியர்வையாக வழிந்து கொண்டிருந்தது. செல்லாயி பேரானந்தம் கொண்டார், தனது துணை உடனிருந்திருக்கக் கூடாதோ என நினைத்தார்.

ஒவ்வொருவரும் பரிசு பொருட்களை வழங்கிச் சென்றார்கள். சிவசங்கரன் வேண்டாம் என மறுக்க இயலாது இருந்தார். வைஷ்ணவி மேடைக்கு வந்தபோது ஈஸ்வரியின் அருகில் நிற்கச் சென்றவளை ஈஸ்வரி வைஷ்ணவியை கதிரேசனின் பக்கத்திலேயே நிற்கச் சொன்னாள். புகைப்படங்களும், அசைபடங்களும் எடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. மேடையிலேயே இருந்த கதிரேசனின் அத்தை கதிரேசனுக்கு சங்கிலி ஒன்றை அணிவித்தார். ஈஸ்வரியின் கன்னங்களைத் தடவியவர் ஈஸ்வரிக்கும் ஒரு சங்கிலியை அணிவித்தார். உறவு ஒன்று விலகிப் போகிறதே என்கிற வருத்தமெல்லாம் அங்கே இல்லை. எல்லாருமே உறவுகள் தான் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. 

கல்யாணம் மிகவும் சிறப்பு எனவும், கல்யாணச் சாப்பாடு பிரமாதம் என அனைவரும் பாராட்டிச் சென்றார்கள். மணமக்கள் புளியம்பட்டிக்கு சென்றார்கள், வைஷ்ணவியும் உடன் சென்றாள். பின்னர் இரவு கதிரேசனின் சங்கரன்கோவிலில் உள்ள புதிய வீட்டிற்கு மணமக்கள் திரும்பினார்கள். வைஷ்ணவி தனது பெற்றொருடன் சிவசங்கரன் வீட்டில் தங்கினாள்.

கதிரேசனின் வீட்டில் சாந்தி முகூர்த்தத்திற்காக அவனது அறை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 
''நீங்க எப்பவும் பாடற பாட்டு பாடலையே?'' என்றாள் ஈஸ்வரி. ''என்ன புதுசா மரியாதை?'' என்றான் கதிரேசன். ''நீங்க சிவனோட அடியார்'' என்றாள் ஈஸ்வரி. ''நீயும் தான் சிவனோட அடியார்'' என்றான் கதிரேசன். ''பாடுங்க'' என்றாள் ஈஸ்வரி. ''மரியாதையா இன்னும்'' என்றான் கதிரேசன். கதிரேசனை இறுக்கமாகக் கட்டிப்பிடித்தவள் ''பாடு'' என்றாள். 

'உமையாளை ஒருபாகமாய் உன்னில் கொண்டோனே ஈசனே
இமையகலாதினி எண்ணக்கமலத்துடன் இணைந்து விட்டாள்
கலங்கும் வாழ்க்கையை ஒருபோதும் ஏற்படுத்திட வல்லேன்
துலங்கும் அன்றோ சொல்சிவனே'

பாடலைக் கேட்டவள் 'பாடலுக்கு என்ன பரிசு தெரியுமா?'' என்றுக் கேட்டுக்கொண்டே கதிரேசனின் இதழ்களில் அன்பைப் பதித்தாள். அன்பு எப்பொழுதுமே தித்தித்துக் கொண்டே தானிருக்கும். 



(தொடரும்) 

Sunday 10 October 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 28

கண்களைத் துடைத்துக்கொண்டார் ஆதிராஜன். கதிரேசன் அமைதியாகவே அமர்ந்து இருந்தான். ''எல்லாமே ஒண்ணா இருக்கக்கூடாதானு இப்பவும் நினைப்பேன், ஆனா இனிமே எப்படி ஒண்ணா ஆகப்போகுதுனு தெரியலை'' என்றார் ஆதிராஜன். ''பிரிஞ்சே இருந்தாலும் ஒண்ணாத் தெரியறமாதிரி எல்லாருமே 'இறைவன் ஒருவனே' னுதானே சொல்றாங்க, அதனால எல்லாமே ஒண்ணுதான்'' என்றான் கதிரேசன்.

''
ஆமா, சமணம் வணங்குற ஆதிநாதனுக்கும், சைவம் வணங்குற சிவனுக்கும் ஆயிரம் ஒற்றுமை சொல்லலாம். உலகத்துல ஒவ்வொருத்தருக்குக்கும் ஒரு நம்பிக்கை வச்சி அதுல இணைஞ்சி வாழறவங்க இருந்துட்டுதான் வராங்க. தன்னோட நம்பிக்கையில மனசை வைக்கிறதோட இல்லாம, மத்தவங்க நம்பிக்கைக்கும் மரியாதைக் கொடுத்து வாழறப்ப எல்லா நம்பிக்கைகளும் அவநம்பிக்கையை எப்பவுமே தராது. எப்ப மத்தவங்களோட நம்பிக்கையை மதிக்காமப் பார்க்கறமோ அப்பதான் பிரச்சினையே ஆரம்பிக்குது'' என்றார் ஆதிராஜன்.

''
மதிக்கிறமோ, மதிக்கலையோ எல்லா நம்பிக்கைகளும் தன்னோட வேலையைச் செஞ்சிட்டு வருது, எத்தனையோ நம்பிக்கைகள் அழிஞ்சிட்டு வரத்தானே செய்து, அதுல சமணமும் அடக்கம்தானே'' என்றான் கதிரேசன். ''சமணம் சொன்ன நம்பிக்கையும், கொள்கையும் எப்பவுமே அழியாது. சமணம்னு இருக்கற பேரு வேணும்னா மாறுமேத் தவிர கொள்கை எப்பவுமே மாறாது, அழியாது. மொத்தத்தில இந்து மதத்துக்கு முன்னமேத் தோன்றினதுதான் இந்த சமண மதம். சமண மதக் கொள்கைகளை எடுத்துட்டு இந்து மதம் நிலைக்க ஆரம்பிச்சது. எங்களோட கொள்கைக்கு பேரு மாறட்டும், கொள்கை நிலைச்சி நிற்கனும் அதுதான் முக்கியம் அதைப் பின்பற்றி வாழற மக்கள் அதிகரிக்கனும் எந்த மதம்னு இருந்தா என்ன'' என்றார் ஆதிராஜன். 

மேலும் அவரே தொடர்ந்தார். ''சைவம், வைணவம் இருக்கறவரைக்கும் இந்த சமணமும் நிலைச்சி நிற்கும். வரலாறே இல்லாத விசயத்துக்குக் கூட வரைபடம் காமிக்கிற இந்த உலகத்துல பெரிய வரலாறு வைச்சிருக்கிற சமணத்தை அழிக்கிறது அத்தனை ஈசியில்லை, பெரிய பெரிய கோவில் எல்லாம் இருக்கு, மகாபலி கோவில் சாதாரணமானது இல்லை. எப்ப மனுசங்க இதையெல்லாம் நிராகரிக்கத் தொடங்கறங்களோ அப்ப வேணும்னா மாறும் ஆனா அழியாது'' என்றார் ஆதிராஜன். 

''
நீங்க சமணரா?'' என்றான் கதிரேசன் சட்டென. ''ஆமா நான் சமணர்தான், என்னை சமணர்னு அடையாளம் காட்டுறதல எனக்கு எப்பவுமே இரண்டாவது கருத்து இல்லை. நான் முதல்ல மனுசன் அப்படினு  புத்திசாலித்தனமா சொல்றதைவிட எனக்குனு ஒரு அடையாளம் தரது இந்த சமணம் தான். ஒரு மாகாணம், நாடு, நிறம், இனம் ஒவ்வொருத்தருக்கு ஒரு அடையாளம் தந்து வைச்சிருக்குங்கிறதை நீ மறுக்கிறயா? நானும் வைணவக் குடும்பப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணியிருக்கேன், அவளை நான் சமணத்துக்கு மாறச் சொல்லலை, நான் வைணவத்துக்கு மாறவும் இல்லை. கொள்கையைச் சொல்றது தப்பில்லை, இதுதான் சிறந்த கொள்கை, மாறுனு கட்டாயப்படுத்துறது ரொம்பவேத் தப்பு'' என நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்தார் ஆதிராஜன்.

''
என மனசுக்கு சிவன் தான் எல்லாம். அதுல மாத்தமே இல்லை'' என்றான் கதிரேசன். ''ஊருக்காக நம்மளை மாத்திக்கிரது ஒருபோதும் உதவாது, உள்ளத்தில மாற்றம் ஏற்பட வைக்கனும், நீ போகப் போக புரிஞ்சிப்ப, அன்போட இரு, பிறரை துன்புறுத்தாத. நீ நம்பிக்கை வைச்ச சிவனை ஒருபோதும் கைவிடாத, அந்த சிவன் உன்னை ஒருபோதும் எப்பவும் எதுக்காகவும் கைவிடவே மாட்டார்'' என்றார் ஆதிராஜன்.

''
உங்களையுமா?'' என்றான் கதிரேசன். ''எல்லாரையும்'' என்றார் ஆதிராஜன். கதிரேசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ''அப்படின்னா ஏன் நீங்க சமணர்?'' எனக் கேட்டான் கதிரேசன். ''எனக்குத் தெரிஞ்சது, எனக்குப் பழக்கப்பட்டது, நான் பழகினது, வேற எதுக்கும் மாற மனசு இடம் தரல, ஆனா எல்லாத்தையும் ஏத்துக்கிறப் பக்குவம் இருக்கு. மத்த உயிரை மதிச்சி நடக்கனும், உயிர்களைக் கொல்லாமை, விகாரமில்லா காமம், அன்பே சிறப்புனு சொல்ற சமணம் எனக்கு ரொம்பவே சம்மதம்'' என்றார் அவர். கதிரேசன் சரியெனத் தலையை ஆட்டினான். 

நேரம் ஆகிக்கொண்டிருந்தமையால் ஊருக்குச் செல்ல வேண்டுமெனத் திட்டமிட்டவன் ஆதிராஜனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டான். ஆதிராஜன் கதிரேசனை ஆரத் தழுவினார்.

கதிரேசனை வழியனுப்ப பேருந்து நிலையம் வந்தாள் வைஷ்ணவி. அவன் பிரிந்து சென்ற பேருந்தினைப் பார்த்தபடியே வீடு வந்து சேர்ந்தாள். மனம் மிகவும் கனமாக இருந்தது. சில மணிநேரத்திற்கெல்லாம் மதுசூதனன் வைஷ்ணவியை தொலைபேசியில் அழைத்தான். 

''
என்னை மன்னிச்சிரு வைஷ்ணவி, இனிமே நம்ம காதலை கேவலப்படுத்தமாட்டேன்'' என்றான் அவன். ''ம் ஒருதரம் தடம்மாறிப் போய்ட்டா எப்ப இனி தடம் மாறுமோனு பயமாத்தான் இருக்கும், நீ எப்பவும் தடம் மாறமா இருப்பனு நினைக்கிறேன், இன்னும் வருசம் இருக்குப் பார்க்கலாம்'' என சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

கதிரேசன் இரவு வேளையில் வீடு வந்து சேர்ந்தான். அவனது வீட்டில் ஈஸ்வரி இருந்தாள். கதிரேசனைப் பார்த்ததும் ''அம்மா ரொம்பக் கவலைப்பட்டுட்டாங்க, கடைக்குப் போயிருக்காங்க'' என்றாள்.

சந்திப்பில் நடந்த அனைத்து விசயத்தையும் சொன்னான் கதிரேசன். ''மத்தவங்களுக்காக வேசம் போடவேக் கூடாது, அது நல்லதில்லை'' எனச் சொன்னவளிடம் ''நான் வைணவத்துக்கு மாறினா ஏத்துப்பியா?'' எனக் கேட்டான் கதிரேசன். ''நீ சமணத்துக்கு மாறினாக் கூட நான் ஏத்துப்பேன், எனக்கு வைணவப் பொண்ணா மாற ஒரு நிமிசம் கூட ஆகாது, உனக்கு நான் எப்படி வேணும்னாலும் இருப்பேன்'' என ஈஸ்வரி சொன்னதும் முகம் கழுவச் சென்றான் கதிரேசன். 

முகம் கழுவித் திரும்பிய கதிரேசனிடம் ''அடையாளம் போடாத வரைக்கும், அடுத்தவங்க அடையாளம் குத்தாதவரைக்கும் எல்லாருமே மனுசங்கதான்'' என முதன்முதலாக கதிரேசனைக் கட்டிப்பிடித்துச் சொன்னாள் ஈஸ்வரி. கதிரேசன் ஈஸ்வரியின் தலைக்கேசத்தை விரல்களால் கோதியவாரே பாடினான். 

கள்ளமில்லா உள்ளத்து அன்பில் களித்து நின்றேன்
தெள்ளிய நீரோடையாய் எண்ணம் கொண்டேன்
பொல்லாத வினையாவும் இல்லாது போனதென்று உணர்ந்தேன்
சொல்லாதது எதுவுமிருந்தால் சொல்சிவனே.
அன்றைய தின நேரம் புது அனுபவமாகவே இருந்தது கதிரேசனுக்கு. தன்னை ஈஸ்வரியின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டவன் ஈஸ்வரா எனச் சொல்லிக்கொண்டான். ஈஸ்வரி தன்னிலை வந்தவளவாய் கண்களைத் துடைத்துக் கொண்டு மெல்லிய புன்னகை ஏந்திக்கொண்டாள். ''இதுவே முதலும் கடைசியாக இருக்கட்டும்'' என்றான் கதிரேசன். ''என்னச் சொல்ற'' என்றாள் ஈஸ்வரி. 

''
என்னை நீ திருமணம் செய்து கொள்ளும்வரை நம்மில் உடல் ஸ்பரிசம் தேவையில்லை'' என்றான் கதிரேசன். ''நீ பாடின பாட்டுக்கு என்னதான் அர்த்தம்'' என்றாள் ஈஸ்வரி. ''என்ன பாடினேன்'' என்றான் கதிரேசன். ''பொல்லாத வினையாவும் இல்லாது போனதென்று உணர்ந்தேன்'' என்றாள் ஈஸ்வரி. ''தெரியாது'' என்றான் கதிரேசன். அப்பொழுது செல்லாயி வீட்டினுள் நுழைந்தார். ''எப்பப்பா வந்தே, இவ்வளவு லேட்டாவா வரது'' எனச் சொல்லிவிட்டு சாப்பிடுவதற்கு எல்லாம் தயாராக எடுத்து வைக்கச் சென்றார். ''ஏன் பாடினனு தெரியாதா'' என ஈஸ்வரி கேட்டுக்கொண்டே தான் வீட்டிற்குச் செல்வதாய் கூறினாள். செல்லாயி சாப்பிட்டுச் செல்லுமாறுக் கேட்டுக் கொண்டார், ஆனால் ஈஸ்வரி மறுத்துவிட்டாள். 

கதிரேசனைப் பார்த்துக் கொண்டேச் சென்றுவிட்டாள் ஈஸ்வரி. ஈஸ்வரி கதிரேசனைக் காண அவனது வீட்டுக்கு பல நாட்களாக வரவேயில்லை. கதிரேசனும் ஈஸ்வரியைத் தேடிச் செல்லவில்லை. சில மாதங்கள் பின்னர் ஈஸ்வரி கதிரேசனை தற்செயலாக கடைத் தெருவில் பார்த்தாள். ''ஈஸ்வரி'' என அழைத்தான் கதிரேசன். ''பொல்லாத வினையாவும் பதில் சொல்'' என்றாள் ஈஸ்வரி. ''எப்படியிருக்க'' என்றான் கதிரேசன். ''நீ நலமா இல்லைன்னா எனக்குனு ஒண்ணு ஆயிராதா, அதுபோல நான் நலமில்லைன்னா உனக்குனு ஒண்ணு ஆயிரும்'' என பதில் சொன்னாள் ஈஸ்வரி. ''எந்த இலக்கியம் படிச்ச'' என்றான் கதிரேசன். 'ஓரமா நின்னு பேசுங்கலே, தாமிரபரணி ஆத்துப் பக்கம் போய் பேசுங்கலே, இப்படியா வரவங்க போறவங்களுக்கு வழிமறிச்சிட்டு பேசுறது' என ஒருவர் கதிரேசனைத் தட்டிச் சொல்லிவிட்டுப் போனார். அதைக்கேட்டு இருவரும் சிரித்தார்கள். இருவரும் அவ்விடத்தை விட்டு நடந்து ஒரு மடத்தில் வந்து நின்றார்கள். ஈஸ்வரி பாடினாள்.


கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்


''
ம்ம் நல்லா இருக்கு, சொல்லு'' என்றான் கதிரேசன். ''மாணிக்கவாசகரே தான் பொல்லாத வினையை உடையவன் என தன்னைத் தானே சொல்றார், அப்படியிருக்க நீ எது போனதாய் சொன்ன'' என்றாள் ஈஸ்வரி. ''தெரியலை'' என்றான் கதிரேசன். ''என்னோட குடும்ப வாழ்க்கை உன்னால நடத்த முடியுமா?'' எனப் பட்டெனக் கேட்டாள் ஈஸ்வரி. கதிரேசன் பதட்டம் அடைந்தவனானான். ''சொல்லு'' என்றாள் ஈஸ்வரி. ''என்ன சந்தேகம் இப்போ'' என்றான் கதிரேசன்.

''
உள்ளத்து அன்பில் கொள்ற மகிழ்ச்சி போல உடலின் தொடுதல் இன்பத்திலும் மகிழ்ச்சி இருக்கனும்'' என சற்று வேகமாகவேச் சொன்னாள் ஈஸ்வரி. ''கல்யாணம் ஆகிற வரைக்கும் இதுபத்தி பேசாதே'' என்றான் கதிரேசன். ''உன்னிட்ட சில விசயங்களைத் தெளிவுபடுத்திக்க ஆசைப்படறேன்'' என்றாள் ஈஸ்வரி. ''எனக்காக நீ எப்படியும் இருப்பனு சொன்ன'' என்றான் கதிரேசன். ''ஆமா ஆனா என்னால உள்ளுக்குள்ள வேசம் போட முடியாது'' என்றாள் ஈஸ்வரி. கதிரேசன் சற்றே தடுமாறினான். ''இன்னொரு நாளைக்குப் பேசலாம், இப்போ வேணாம்'' என்றான் கதிரேசன். ''என்னை பொண்ணுப் பார்க்க வரப்ப பேசுறமாதிரி வைச்சிக்காதே'' என சொல்லிவிட்டு சென்றாள் ஈஸ்வரி. கதிரேசனுக்கு கவலையாக இருந்தது. 

பொல்லாத வினை இல்லாது போனதா, சொல்லியதால் வந்ததா என யோசனையிலேயே நாட்கள் நகர்த்தினான் கதிரேசன். மாதங்கள் கடந்தன. ஒரே ஊரில் இருந்து கொண்டு பார்க்காமலேயே இருவரும் இருந்தார்கள். சிவன் கோவில், வேலை, வீடு என்றே இருந்தான். ஒருதினம் ஈஸ்வரியை சந்தித்தான் கதிரேசன். ''என்னைப் பார்க்கனும்னு இப்பவாச்சும் தோணிச்சே'' என்றாள் ஈஸ்வரி. ''உனக்குத் தோணவே இல்லையா'' என்றான் கதிரேசன். ''உன்னை எப்பவும் எனக்குள்ளப் பார்த்துக்கிட்டேதானே இருக்கேன்'' என்றாள் ஈஸ்வரி. ''நீ வார்த்தை அலங்காரம் செய்ற'' என்றான் கதிரேசன். ''வாழ்க்கையும் அப்பதான் அலங்காரமா இருக்கும்'' என்றாள் ஈஸ்வரி. 

''
உன்னோட என்னால குடும்ப வாழ்க்கை நடத்த முடியும்'' என்றான் கதிரேசன். ''அப்படின்னா என்னை இப்போ கட்டிப்பிடிச்சிக்கோ'' என்றாள் ஈஸ்வரி. ''கல்யாணம் ஆகட்டும்'' என்றான் கதிரேசன். ''என்ன நீ, இவ்வளவு கல்லா இருக்க'' என்றாள் ஈஸ்வரி. ''எனக்கு இஷ்டமில்லை'' என்றான் கதிரேசன். ''தொடுறதுல காதல் இருக்கு'' என்றாள் ஈஸ்வரி. ''அதில் கள்ளமும் உண்டு'' என சொன்னவன் வார்த்தையை சட்டென நிறுத்தினான். ஈஸ்வரி விறுவிறுவென சென்றுவிட்டாள். தனது நாக்கைக் கடித்துக் கொண்டான் கதிரேசன். வலியெடுத்தது. ஈஸ்வரியைத் தொடர்ந்தான். ''என்னை தொடர்ந்து வராதே'' என சொல்லிவிட்டுப் போனாள் ஈஸ்வரி. வலி மிகவும் அதிகமானது. 

''
என்னிடம் நீ என்ன எதிர்ப்பார்ப்பாய் ஈசனே
தன்னிடம் இருந்தும் தராத காரணத்தால்
புறந்தள்ளி போவாயோ அகம் வெறுத்து செல்வாயோ
அறமெனப் படுவதுயாது சொல்சிவனே''

(
தொடரும்)