Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

Thursday 2 July 2009

கேள்வியும் பதிலும் - 4

4) நுனிப்புல்லிற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டால்...... என்ன செய்வீர்கள்?

அதென்ன சகோதரி நான் நினைத்து இருந்து இருக்கிறேன், நீங்கள் கேட்கிறீர்கள். இது குறித்து யாரிடமும் நான் சொல்லவில்லையே. இங்கும் சொல்லி இருக்கமாட்டேன், பதில் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். எனது கனவுகள் எப்பொழுதுமே உறங்கிக் கொண்டே இருக்கும் அதன் நினைவு திரும்பும்வரை.

நாவல் எழுதும்போதே சாகித்ய அகாடமி விருதினைப் பெற வேண்டும் என்ற ஆவலில்தான் எழுதவே ஆரம்பித்தேன். இது மிகவும் உண்மை. எனக்கு நிறையவே அந்த விருதினைப் பெற வேண்டுமென ஆசை உண்டு. அப்படி ஒரு நிலை வருமெனில் எண்ணிய எண்ணமெல்லாம் கைகூடுகிற அளவுக்கு என்ன பாக்கியம் செய்தேன் என அந்த இறைவனின் முன்னால் நின்று மனம் கலங்கி நிற்பேன். அப்படியே இந்த உலகம் அமைதியினை முன்னிறுத்தி வாழ வேண்டிக் கொண்டு இருக்கும் அந்த ஆசையையும் அமைதியாய் சொல்லி வைப்பேன்.

(தொடரும்)

கேள்வியும் பதிலும் - 3

3. நீங்கள் விரும்பும், மதிக்கும் நண்பர் உங்கள் பின்னே (உங்களின்) இன்னொரு நெருங்கிய நண்பரிடம் தாறுமாறாக உங்களைப் பற்றி பேசுவதை அந்த நண்பர் வந்து சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை கேட்ட நிலையில் நீங்கள் எவ்விதம் உணர்வீர்கள்? என்ன செய்வீர்கள்?

அப்படி பேசுவார்களா என்ன? அப்படி பேசினால் நான் மதிக்கும் நண்பராக அவர் இருக்க முடியாது! அவரது நண்பராக நான் இருந்து இருக்க முடியாது.

கேள்விக்கு பதில் சொல்வது என வைத்துக் கொண்டால்...

வேடிக்கையாக முதலில் உணர்வேன். எதற்காக அப்படி பேசினார் அப்படி பேச வேண்டிய நிலையை நான் எதற்கு உருவாக்கினேன் என காரணம் அறிந்து கொள்ள என்னிடம் கேள்விகள் கேட்டு கொள்வேன். விடை தெரிந்தால் திருத்திக் கொள்வேன். இல்லையெனில் வீணாக அதைப்பற்றி எனது நேரத்தை வீணாக்க மாட்டேன். அது போன்ற மதிக்கும் நண்பர்களை தவிர்த்து விடமாட்டேன் ஆனால் அளவோடு வைத்துக் கொள்வேன். தவறு என்பக்கம் இருந்தால் மன்னிப்புக் கேட்டு கொள்வேன் மறுபடியும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். வீணான குற்றசாட்டு எனில் எனது தரப்பு நியாயத்தை எல்லாம் விளக்கிக் கொண்டு இருக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை விழலுக்கு இறைத்த நீர்தான்.

என்னிடம் வந்து சொன்ன நண்பரிடம் இதனை என்னிடம் சொல்லாமல் தவிர்த்து இருந்து இருக்கலாம் என சொல்வேன். என்னைப் பொறுத்தவரை எனது முகத்திற்கு நேராக பேசும் வார்த்தைகளுக்கு சொன்னவர் நேராக சொன்னால்தான் மதிப்பே தருவேன், பிறர் வாயிலாக வரும் வார்த்தைகளுக்கு அதிகம் செவி சாய்ப்பதில்லை.

(தொடரும்)

கேள்வியும் பதிலும் - 2

2) உங்கள் குழந்தை தமிழ் கற்றுக் கொள்ள மறுத்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

மிகவும் நல்ல கேள்வி. எனது ஆசை என்னவாக இருந்தது எனில் என்னால் எனது சிறு வயது ஆசையான நாவல் எழுத முடியாமல் போவதைக் கண்டு மனம் கலங்கியது. எனது மகன் மாபெரும் நாவலாசிரியனாக வரவேண்டும் (தமிழில் தான்) என அவனுக்கு கல்கி என பெயர் சூட்டினேன். யாருக்கும் அப்பெயர் பிடிக்கவில்லை. பின்னர் நவீன் என சூட்டினேன். காரணம் நவீன் என்றால் புதியது என பொருள்படும். புதிய இராதாகிருஷ்ணனாய் அவன் வரட்டும் என்ற எண்ணம்தான்.

அப்படிப்பட்ட எண்ணம் கொண்டு இருக்கையில் இருப்பது இலண்டனில், எப்படி தமிழ் கற்றுக் கொள்வது? தமிழ் பள்ளிக்கு அனுப்பி வைத்தோம். தமிழ் ஒருநாள்தான் கற்று வருகிறான். சில நேரங்களில் தமிழ் பள்ளி பிடிக்கவில்லை என அவன் சொல்லும்போது, நான் அவனிடம் பிடிக்கவில்லையெனில் விட்டுவிடு எனச் சொல்வேன். அவனோ இல்லை நான் படிக்கிறேன் என படித்து வருகிறான். நிச்சயம் தமிழ் என்னைவிட நன்றாக கற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கிறது. எதையும் நிர்பந்தப்படுத்துவது இல்லை. இது செய் என சொல்வதோடு சரி, அவனாக விருப்பப்பட்டால் ஒழிய நான் புகுத்துவது இல்லை. கடவுள் கிருபையால் தமிழ் அவனுக்குப் பிடித்து இருக்கிறது. அவன் தமிழ் பாடும்போது (சங்கீதம், மிருதங்கம் பயின்று வருகிறான்) மிகவும் சிரிப்பாக இருக்கும், பெருமையாக இருக்கும்.

ஆக தமிழ் கற்றுக் கொள்ள மறுத்து இருந்தால் கஷ்டமாக இருந்து இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். இருந்தாலும் 'அவனுக்கு விதித்தபடி நடக்கிறான்' என ஆண்டவன்மேல் பாரத்தை போட்டுவிட்டு போய் இருப்பேனோ என்னவோ? இப்பொழுதுதானே படித்துக் கொண்டு இருக்கிறான், இறைவன் அருள்புரிவான் என் நம்புகிறேன்.

(தொடரும்)

கேள்வியும் பதிலும் - 1

முத்தமிழ்மன்றம் எனும் வலைத்தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு நான் அளித்த பதில்களும்.

1. அஹிம்சை என்ற உங்கள் ஆன்மீக எண்ணங்களுக்கு எதிர்மறையாக உங்கள் வேலை அமைந்தால் என்ன செய்வீர்கள்?

அப்படிப்பட்ட வேலைதான் செய்து கொண்டு இருக்கிறேன் சகோதரி!

நான் இந்தியாவில் இருந்த வரை (1998) அசைவம் சாப்பிடுவேன், அதுவும் எப்போதாவது தான். எங்கள் வீட்டில் எப்போதாவதுதான் அசைவம் சமைப்பார்கள். எனது அம்மாவிடம் அசைவம் சாப்பிடுவது பிடிக்கவில்லை எனக் கூறிக்கொண்டே சாப்பிட்ட தருணங்கள் பல. சாப்பிட்ட பின்னர் மிகவும் கவலையாக இருக்கும். இந்த எண்ணமெல்லாம் வந்தது ஒரு 18 வயது பின்னர்தான். அதற்கு முன்னர் அஹிம்சை பற்றி நினைக்கவே இல்லை. ஏதோ சாப்பிட வேண்டும் எனத் தோன்றும், அவ்வளவுதான்.

எனது தாயின் மரணத்திற்கு பின்னர் அசைவம் சாப்பிடுவது இல்லை என்ற முடிவு எடுத்தேன், எனது மனைவியும் (திருமணத்திற்கு முன்னர்) என்னிடம் அதிசயமாக அசைவம் பற்றி கேட்க நான் சாப்பிடமாட்டேன் என உறுதி அளித்தேன். அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய நாள் 12-04-1998. இதுநாள்வரை அசைவம் சாப்பிட்டது இல்லை. என்னை ஆச்சரியமாக என்னை அறிந்தவர்கள் பார்த்தார்கள், எனது நண்பர்கள் வியந்தார்கள், இதில் என்ன வியப்பதற்கு என்ன இருக்கிறது என என் அண்ணன் ஒருமுறை எதில் எதில் உறுதி கொள்ள வேண்டுமோ அதில் உறுதி கொள் என்றார். என்னைப் பொறுத்தவரை எதை ஒருவனால் ஒரு விசயத்தை சிக்கெனப் பிடித்துக் கொள்ள முடியுமோ, அதே வேளையில் மிகவும் பிடித்த விசயத்தை உடனடியாய் விட்டுவிடவும் முடியுமோ அவனால் கடவுளை உணர முடியும் என்ற கருத்தை எனக்குள் நான் புதைத்த காலங்கள் எனக்கு ஞாபகம் வந்து போகும். கடவுளை நான் உணரவில்லை என்பது வேறு விசயம்.

நான் இலண்டனில் ஆராய்ச்சியை ஆரம்பித்தபோது எனது ஆசிரியர் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான் 'நீ சைவம், உனக்கு விலங்குகளைக் கொன்று ஆராய்ச்சி செய்வதில் ஆட்சேபனை இல்லையா?' என்பது தான். இது எதற்கு கேட்டார் எனில் இங்கு இது போன்ற ஆராய்ச்சி செய்ய அனுமதி வேண்டும், தனிப்பட்ட படிப்பினை படிக்க வேண்டும், அதனால்தான் கேட்டார். நான் எதுவுமே நினைக்கவில்லை சரி என்று சொல்லி அன்று ஆரம்பித்து இன்றுவரை நிறுத்தவில்லை.

எனது மனம் பாடுபடும். கொல்வதற்கு முன்னர் மிகவும் கவலையாக இருக்கும். சில தினங்களில் கண்ணீர் வந்ததும் உண்டு. ஒரே நாளில் 250 எலிகளையெல்லாம் கொன்று இருக்கிறேன். பாவமாக இருக்கும், மனதில் எத்தனையோ சமாதானங்கள் சொல்லிக் கொள்வேன். இருந்தும் இந்த வேலை எனக்குப் பிடித்து இருப்பதால் எனது உடல்நலம் பற்றி கூட கருதாமல் பணிபுரிந்து வருகிறேன். இறக்கும் உயிர்களை தியாகச் செம்மல்கள் என மனதில் நினைத்துக் கொள்வேன். ஏதோ ஒரு நல்ல விசயத்துக்காக தங்கள் வாழ்வினை படைத்துக் கொண்ட அந்த விலங்கினங்கள் பாக்கியசாலிகள்.

நான் எனது ஆராய்ச்சி நூலில் எழுத நினைத்தது இதுதான்!

''Dedicated to my beloved mice''

இன்னும் அந்த உயிரினங்களை நினைத்து மனம் வலிக்கிறது, இருந்தும் தொடர்கிறேன், ஒருநாளாவது கண்ணன் வந்து எனக்கு கீதை சொல்லமாட்டானா என்று!

(தொடரும்)

Sunday 28 June 2009

ஒரு நாவல் என்ன செய்துவிட முடியும்?!

புத்தகமாக இன்னும் வெளிவராத ஒரு நாவலுக்கு (நுனிப்புல் பாகம் 2) எழுதிய முன்னுரை:

காலம் காலமாக நடந்து வரும் இந்த இயற்கையான விசயத்திற்கு இறைவன் எனப் பெயரிட்டு, நமது நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டுக்கோப்பாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திட நாம் நினைத்தது எத்தனை தவறாகிவிட்டது. ஒன்றாய் நிற்க வேண்டிய நாம் பிரிந்து கிடக்கிறோம். எண்ணங்களும் செயல்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. இதில் யார் பெரியவர், யார் சிறியவர் எனும் சச்சரவு நீங்கியபாடில்லை. ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படுவதும், அடுத்தவர் எப்படி போனால் நமக்கு என்ன என்ற குறுகிய மனப்பான்மையும் வந்து சேர்ந்துவிட்டது. இதற்காக இறைவன் எந்த பொறுப்பும் ஏற்றுக் கொள்ள மாட்டார், நாம்தான் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். இனி எவரும் வந்து பாவ புண்ணியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கப் போவதில்லை, ஒருவேளை ஒருவர் அப்படி தோன்றினாலும் நின்று கேட்டு நிற்கும் நிலையில் எவரும் இல்லை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிட்டது.

என்னவெல்லாம் மாற்றங்கள் நேர வேண்டுமென ஒவ்வொருவரும் மனதில் நினைக்கின்றோமோ, அந்த மாற்றங்களை நம்மில் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. எத்தனையோ விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டு இருக்கின்றன. நம்மைப் பார்த்துத்தான் நமது சந்ததியினரும் வளர்ந்து வருவார்கள். ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் நாம் இத்தனை காலமும் செயல்பட்டு இருப்பதும், இனியும் செயல்பட்டு வருவதும் நமது மனித குலத்திற்கே பெரும் அச்சம் விளைவிக்கும் செயலாகும். போராட்டங்களும், அழிவுகளுமே கண்டு பழகிப் போன பூமியிது, எத்தனையோ நல்ல விசயங்களை மறந்து போன பூமி இது. அனைத்து ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்வு சரியாக இருக்கும் என தவறான கண்ணோட்டத்தில் வாழப் பழகி விட்டோம். எந்த ஒரு கொள்கையும் ஏற்புடையதாக இல்லை. நமது வாழ்க்கை முறை மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது.

அனைவரும் சமம் என்று கூறிக்கொண்டு உழைப்பாளரை அவமானப்படுத்த நான் தயாராக இல்லை. சமத்துவம் தொலைந்து போன பூமியில் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என எனது கண்களை மூடிக்கொண்டு இருக்கவும் எனக்கு சம்மதம் இல்லை. ஒரு விசயத்தின் அடிப்படையில் ஒன்று சேரும் மனிதர் கூட்டம், அந்த விசயம் முடிந்து போனதும் விலகிப் போகும்! எந்த அடிப்படையை வைத்து மனிதரை ஒன்று சேர்க்க நினைத்தோமோ அந்த அடிப்படை இப்பொழுது ஆட்டம் கண்டு தவிக்கிறது. மனிதரின் பண்பு நலன்கள் என எதுவுமே அவசியமற்றுப் போனது. தெரிந்தே தவறு செய்து விட்டோம், தவறு எனத் தெரிந்தும் இதுதான் சரி என நமக்குள் நாம் சொல்லிக்கொள்ளும் முட்டாள்தனமான நிலை இருந்து வருகிறது. இதை தனிமனிதரின் பார்வையிலிருந்து சொல்கிறேனே தவிர இதைச் சொல்ல தகுதியிருக்கும் நிலையில் சொல்லவில்லை என்பதை குறித்துக் கொள்வது நல்லதாகும். 'போனது போய்விட்டது, இனி பகுதி போனால் என்ன, முழுமை போனால் என்ன' என்ற நிலையை அடைந்து விட்டோம்.

இதில் கலியுகம் என்று வேறு கூறிக்கொண்டு திரிகிறோம். கலிகாலம் இப்படித்தான் இருக்கும் என யார் உங்களுக்கு சொன்னது? பல வருடங்களுக்கு முன்னால் எதிர்மறையாக சிந்திக்கத் தெரிந்த ஒருவரின் கருத்தை எப்படி உங்களால் ஏற்று கொள்ள முடிகிறது. நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை! இதற்கு அர்த்தம் என்றாவது யோசித்து வைத்தது உண்டா? தனிமனித உணர்வுகளை உதாசீனப்படுத்துவதாக நினைக்கும் ஒவ்வொருவரும் எண்ணிப்பாருங்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பது உண்மையான உணர்வுகளை சிதைப்பது எனத் தெரியவில்லையா? 'எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம், எழுதத் தெரியும் என்பதற்காக எதையும் எழுதுவது அழகல்ல' எனச் சொல்லிக்கொண்டேயிருங்கள். எந்த மாற்றமும் இதுவரை நிகழ்ந்தது இல்லையே, என்ன முடிந்ததை செய்தீர்கள்? இப்படித்தான் எழுதிக் களித்திருந்தோம், படிப்பவரின் எண்ணத்தை சுயமாக எண்ணவிடாமல் கிழித்திருந்தோம். 'போன கதை போகட்டும், இனிமே என்ன செய்யறதுனு சொல்லு' இப்படி கேட்டு கேட்டே சொல்ல வருபவரை சோர்வடையச் செய்யும் மகாபாவத்தை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

இனி எப்படி விதை விதைப்பது? எந்த மரபணுவில் எந்த நோய் இருக்கிறது என அடையாளம் கண்டு கொள்வது? இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் இருக்கும், எல்லாம் அவன் செயல் என வாழ்ந்து முடித்து விடலாமா? அப்படியெல்லாம் விடமுடியாது, இனியும் ஐம்பது வருட காலகட்டத்திற்குள் இந்த மொத்த பூமியும் ஒரு அமைதி நிலையும், கலியுகத்திலேயே சத்யயுகமும் இருக்கும் என நிரூபிக்காமல் போகப்போவது இல்லை.

'என்ன கதை சொல்ல வருகிறாயா, நாங்கள் கூட என்னமோ ஏதோனு நினைச்சிட்டோம்' எனும் இந்த மனப்பான்மையை அகற்றுவோம்.

கதை எழுதுவது எப்படி எனத் தெரியாமலே!


ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் எனில் அனைவரையும் கவரும் வண்ணம், அனைவரும் விரும்பும் வண்ணம் இருக்க வேண்டும் என சொல்லலாம். மேலும் கதை எழுதும் முன்னர் கதைக்கான கரு, கதாபாத்திரங்களின் குணநலன்கள், சூழல்கள் என பல விசயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். திட்டமிடுதல் மிகவும் அவசியமாகிறது. எந்த காலகட்டத்தில் கதையானது நடந்தது என்பதையும் அந்த காலகட்டத்தில் மக்களின் பழக்கவழக்கங்கள் என பலவிசயங்களை உள்ளடக்கி சிறந்த தமிழ் கொண்டு வளம் நிறைந்து எழுதப்படும்போது அந்த கதை இலக்கிய உலகில் இடம்பெற்றுவிடுகிறது.

மனித உணர்வுகளை அடிப்படையாக வைத்தும், கற்பனையை மையமாக வைத்தும், நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்தும், காதலை அடிப்படையாக வைத்தும், சமூக நலனை கருத்தில் கொண்டும், மற்றும் வரலாற்று விசயங்களை அடிப்படையாக வைத்தும் எழுதப்படும் கதைகள் என பிரித்துக்கொண்டே செல்லலாம்.

கதை எழுதுவதற்குத் தேவை மிகச் சிறந்த கதை. ;) ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையானது சிறந்த கதையாக இருந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அதை மிகவும் சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும்!

இதுவரை நான் எழுதிய கதைகள் எப்படிப்பட்டவை எனில் எழுத்துப்போக்கில் எழுதப்பட்டவை எனலாம். நுனிப்புல் முதற்கொண்டு தற்போதைய கதைகள் வரை எதுவுமே திட்டமிடப்படாமல் எழுதப்பட்டவையே. எழுதும் கதையில் அவசரம் அவசியமில்லை என்ற கருத்தினைக் கொண்டபோதும் லெமூரியாவும் அட்லாண்டீஸும் அவசரகதியில் முடிக்கப்பட்ட ஒன்று. சில அத்தியாயம் தாண்டியதும் நிறுத்துவது சரி எனப்பட்டது. பழங்காலச் சுவடுகள் எந்த ஒரு சுவடும் இன்றி தொடரப்பட்டது, அவசரத்தில் அந்த கதையும் முடிக்கப்பட்டது. சில்வண்டுகளில் எப்படியெல்லாம் மனிதர்கள் சச்சரவுடன் வாழ்கிறார்கள், ஆனால் அதுவே சிறந்த வாழ்க்கை முறை எனச் சொல்லும் முழு அத்தியாயம் எழுதப்படாமலே அவசர அவசரமாக முடிக்கப்பட்ட கதையே.

நுனிப்புல் பாகம் 1 அவசரமாக முடிக்கப்படவில்லையெனினும் நுனிப்புல் பாகம் 2 மிக அவசரமாக முடிக்கப்பட்ட ஒன்று. மரபியலும், நரம்பியலும் உள்ளே திணிக்கப்படும் அபாயமும், சாத்திரம்பட்டி சரித்திரம் எழுத வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட அதிவேகமாக கதையை முடிக்க வேண்டி வந்தது. நூல் வெளியிடும் முன்னர் அவைகளை இணைத்துவிடலாமா என எண்ணமும் எழுவது உண்டு. இப்படி எழுத வாய்ப்புக் கிடைத்த காரணத்தினாலேயே எழுதிய கதைகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. இந்த கதைகளை பிறர் படித்து என்ன நினைக்கிறார்கள் எனும் அறியும் வாய்ப்பும் குறைவே. நூலாக வெளியிடும் வரை காத்திருப்பதா அல்லது தமிழ் நூல்களை விரும்பிப் படிப்பவரிடம் தந்து கருத்துக்கள் அறிந்து கொள்வதா எனத் தெரியவில்லை.

இலக்கியத்தரம் என்னவென்பது எனக்குத் தெரிகிறதோ இல்லையோ, கதை எழுதுவது எப்படி எனத் தெரியாமலே என்னால் பல கதைகள் எழுதப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன, வாழ்க்கை எதுவெனத் தெரியாமல் நாம் வாழ்ந்து முடித்துவிடுவது போல ;)