Monday 28 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 24


பகுதி 23 

கோரன் ஆசிரியர் அவனது தாய்க்கு பெரும் கொடுமையை இழைத்ததாக தனது கதையை சொல்லி முடித்து இருந்தான். அவன் மிகவும் சுருக்கமாகவே சொன்னவன் என்னை நோக்கி முறைத்தவண்ணம் இருந்தான். அவனை நோக்கி நான் மட்டுமே பேசினேன்.

''நீ சொல்வது எல்லாம் பொய்''

''உன்னை கொலை செய்தால் அந்த உண்மை தெரியும்''

கோரனின் ஆவேசம் எனக்கு ஒன்றும் இப்போது புதிதாக தெரியவில்லை. பிறரது பிடியில் இருந்து விலக்கிக் கொள்ள போராடினான். அதற்குள் காவல் வண்டி கல்லூரி வளாகத்தில் நுழைந்தது. அதைக் கண்ட கோரன் அங்கிருந்து தப்பித்து ஓடினான். அவனை சில மாணவர்கள் விரட்டிக்கொண்டு சென்றவர்கள் எதற்கு நமக்கு வம்பு எனத் திரும்பினார்கள். காவல் அதிகாரிகள் வேறொரு விசயத்திற்காக வந்தார்கள் என்பது எங்களுக்குப் பின்னரே தெரிந்தது.

கோரன் சைக்கோத்தனம் கொண்டவன் என முடிவுக்கு வரவேண்டி இருந்தது. நான் வாசித்த புத்தகத்தில் இருந்து சில வரிகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தன.

சைக்கோக்கள் என்போர் எவரென அடையாளம் தெரியாமல் இந்த உலகம் அல்லாடிக் கொண்டு இருந்தபோது எல்லோரும் ஒருவகையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களே எனும் முடிவுக்கு வருவது பொருத்தம் ஆகாது.

தார்மீக உணர்வுகள் அற்றுப் போனவர்களை சைக்கோ என்றே அழைக்கின்றனர். இவர்கள் எப்படி உருவாகிறார்கள்? இந்த சைக்கோக்கள் இருவகைப்படுகின்றனர். ஒன்று மரபணு ரீதியாக உருவாகும் வகையினர், மற்றொன்று சூழ்நிலை காரணமாக உருவாகும் வகையினர். இவர்களால் சமூகத்திற்கு பெரும் அச்சம் உண்டாக்கப்படுகிறது. 

பிறருடைய உணர்வுகளை மதிக்காதவர்கள் சைக்கோக்கள். இந்த வகையினரின் மூளையில் பிறரின் உணர்வுகளை மதிக்கக்கூடிய இணைப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அப்படியெனில் ஆசிரியரை ஏதேனும் ஒரு காரணம் காட்டி கொல்ல  வேண்டும் என உள்ளத்தில் இத்தகைய எண்ணங்கள் எப்படி கோரனுக்கு வந்தது. அவனது விசயத்தில் தலையிட்டேன் என்பதற்காக என்னையும் கொலை பண்ண வேண்டும் என கோரன் இருப்பது எப்படி என யோசித்தேன்.

''என்ன யோசனை?''

''காயூ, கோரன் பத்தி என்ன நினைக்கிறே''

''நீ அவன் விசயத்தில தலையிட்டு இருக்கக் கூடாது''

''என்ன அப்படி சொல்ற''

''நிச்சயம் அவன் உன்னை கொல்ல  மறுபடியும் முயற்சிப்பான்''

''இல்லை என்னை இனி தேடி வரமாட்டான், ஆனா அவன் சொன்ன கதை பொய் அப்படின்னு எனக்குத் தோணுது''

''உண்மைன்னு இருந்தா?''

''காயூ''

''ஆமா முருகேசா, அவன் சொன்னபோது இருந்த ஆவேசம், ஆத்திரம் எனக்கு என்னமோ உண்மைன்னு தோணுது''

''இல்லை காயூ, அவன் ஒரு கதையை உருவாக்கி இருக்கான்''

''உருவாக்கப்பட்ட கதை இல்லை''

மாலை நாங்கள் இருவரும் வீட்டிற்கு நடந்து சென்றபோது சட்டென ஒரு மறைவில் இருந்து எங்கள் முன்னால் கோரன் வந்து நின்றான்.

''நான் சொன்னது பொய்னு சொன்னல, என்னோட வாடா வந்து பாரு''

''கோரன் உன் படிப்பு எல்லாம் யோசிச்சிப் பாரு''

''டேய், எனக்கு படிப்பு எல்லாம் தேவை இல்லை, நான் சொன்னது உண்மைடா, என்னோட வாடா''

அவனது வார்த்தைகளில் கோபமும் ஆத்திரமும் கொப்பளித்தது. காயத்ரி சற்று பயப்பட ஆரம்பித்தாள்.

''என்னோட வந்தா உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன், நீ வரலை, உன்னை கொலை பண்ண தயங்கமாட்டேன்டா''

''நடடா வரேன்''

''அவளை வீட்டுக்குப் போகச் சொல்லுடா''

''அவளும் என்னோட வருவா''

''நீ வீட்டுக்குப் போடி''

அவனது வார்த்தைகள் எனக்கு எரிச்சலைத் தந்தன. காயத்ரியை வீட்டுக்குப் போகச் சொன்னேன். ஆனால் அவளோ அவனை நம்பிப் போகாதே என சொன்னாள். அதற்குள் சிலர் கூடி விட்டார்கள்.

''வாடா''

''என்ன தம்பி தகராறு?''

''அவனை என்னோட வரச்சொல்லு''

''கூப்பிட்டா, போப்பா''

நானும் காய்தரியும் வெகு வேகமாக அங்கிருந்து நகர்ந்தோம். கோரன் எங்களை பின் தொடர்ந்தான்.

''வந்துருடா''

''நாளைக்கு வரேன் கோரன், இன்னைக்கு வீட்டுக்குப் போறேன்''

''இப்போவே வாடா''

''இல்லை கோரன்''

பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குள் நுழைந்தோம். கோரன் வெளியில் நின்று கொண்டே இருந்தவன் அங்கிருந்து சென்றான்.

''போலீசில் சொல்லலாமா?''

''வேணாம் காயூ''

அரைமணி நேரம் கழித்து வேறு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். வீட்டில் எல்லா விசயங்களையும் அம்மாவிடம் ஒப்பித்துக் கொண்டு இருந்தாள் காயத்ரி. எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தவர்

''உனக்கு இது எல்லாம் தேவையாப்பா?''

''நான் ஒன்னும் செய்யலைம்மா''

''அப்புறம் எதுக்கு அவன் உன்னை கொல்ல வரணும், கூட வா வானு கூப்பிடனும்''

''தெரியலைம்மா''

கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றோம். எல்லோரும் உறங்கியபின்னர் நான் மட்டும் எழுந்து கோரன் வீட்டுக்குச் செல்ல நினைத்து காயத்ரியிடம் சொன்னேன்.

''நீ போகவே கூடாது''

''சொன்னால் கேளு காயூ, இதில் ஏதோ இருக்கு. உதவி பண்ணு''

''காயத்ரியை சம்மதிக்க வைத்து கோரன் வீட்டிற்கு தனியாக சென்றேன். அவனது வீட்டில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. சன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப் பார்த்தேன். கோரன் மட்டும் உறங்காமல் அறையில் முன்னும் பின்னும் நடந்து கொண்டு இருந்தான். வாசற்கதவைத் தட்டினேன்.

''கோரன்''

கதவைத் திறந்தான்.

''உள்ளே வாடா''

அவனது குரலில் ஒன்றும் அத்தனை ஆவேசம் இல்லை. வீட்டிற்குள் சென்றேன். சட்டென கதவுகளை சாத்தி தாழிட்டான்.

''கோரன்''

''உட்காருடா''

''எதுக்கு''

''அப்படியே உட்காருடா''

உட்கார்ந்தேன்.

(தொடரும்)
No comments: