Thursday 17 September 2015

எங்ஙனம் தொலைந்தீர்கள்?

அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அம்மா, நான் தொலைந்து போனால் நீ அழுவாயா? சிரிப்பாயா?

அம்மா சற்றும் யோசிக்காமல் நீ தொலைந்தால் அழவும் மாட்டேன் சிரிக்கவும் மாட்டேன் நீ கிடைக்கிற வரைக்கும் உன்னை நான் தேடுவேன்டா

அம்மாவின் அந்த சொல் என்னை அப்படியே உலுக்கிவிட்டது.

''பக்தா, எங்கே தொலைவதாக உத்தேசம்?''

''சாமி, நீங்கள் எப்படி இப்போது, அதுவும் நான் என் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் ஒட்டு கேட்டுவிட்டு இப்படி குறுக்கே வந்து பேசலாமோ''

''பக்தா, உன் அன்னை அப்போதே எழுந்து சென்றுவிட்டார், அதை கவனித்துதான் நான் உள்ளே வந்தேன் ஆனால் நீயோ உன் அன்னையுடன் பேசிக்கொண்டு இருப்பதாக சொல்கிறாய்''

''சாமி, அமருங்கள்''

''என்ன பக்தா, வரவேற்பு மாறுகிறதே, சாமியார் ஆக வேண்டும் என சொல்லி இருந்தாய் என்ன நடவடிக்கை எடுத்தாய்''

''அதெல்லாம் இல்லை சாமி, என் அம்மா நான் கல்யாணம் பண்ண வேண்டும் என ஒரேயடியாக பிடிவாதம் பிடிக்கிறார் அதனால் நான் குழப்பத்தில் இருக்கிறேன்''

''பக்தா, உனக்காக நீ முடிவுகள் எடுக்காதவரை அது உன்னை எப்போதும் வருத்திக்கொண்டே இருக்கும். நீயாக சுயமாக சிந்தித்து எடுக்கும் முடிவுகளே உனக்கு நல்வழி தரும்''

''சாமி, எனக்கு சாமியார் ஆக வேண்டும் எனும் ஆசை உள்ளுக்குள் இருக்கிறது, உங்களைப் போல சுதந்திரமாக எங்கும் செல்லலாம், குழந்தை குடும்பம் என உழன்று திரிய வேண்டியது இல்லை. என்னைப்போல ஒவ்வொருவரை சென்று தேடிப்பார்த்து ஒரு கதை சொல்லலாம்''

''பக்தா, அப்படி எல்லாம் திட்டமிட்டு ஒன்றை பற்றி நீ முடிவு எடுக்காதே''

''சாமி, நான் பேசாமல் ஏதேனும் காட்டிற்கு ஓடி விடட்டுமா?''

''பக்தா, நான் உன் பின்னால் வருவேன்''

''நீங்க வந்தால் எனக்குப் பயமில்லை. ஆனால் இந்த திருமணம் தான் என்னை பயமுறுத்துகிறது. அது எப்படி சாமி இந்த மனிதர்கள் திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள்''

''பக்தா, அது எல்லாம் என்னிடம் கேட்டால் நான் சொல்லும் பதில் உனக்கு திருப்தி அளிக்காது. வா, நான் உன்னை ஓரிடம் அழைத்துச் செல்கிறேன்''

''இங்கேயே சொல்லுங்கள். வேறு எங்கும் நான் வரத் தயாரில்லை''

''பக்தா, என் தந்தை என் தாய் என எவருமே எனக்குத் தெரியாது, ஆனால் நான் பிறப்பதற்கு காரணம் அவர்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் நான் தந்தை ஆகும் வாய்ப்புதனை  எல்லாம் நான் தேடிச்  செல்லவில்லை, என்னை தேடி எதுவும் வரவும் இல்லை. எனக்கு ஐந்து வயது ஆன போது  நான் சாமியார் ஆனேன்''

''சாமி உங்க கதை நான் கேட்கவில்லை, மனிதர்கள் எப்படி திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லுங்கள்''

''பக்தா, உனக்கு ஒரு காதலி இருக்கிறாள் அல்லவா, அவளிடம் நீ திருமணம் செய்து கொள் என கேட்டால் அவள் மாட்டேன் என சொல்லமாட்டாள் அல்லவா, அப்படித்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்''

''எனக்கு காதலி இருப்பது என்பதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் சரி, சாமி  காதலிக்காமல் எப்படி திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள்''

''பக்தா, இதை நீ என்னிடம் கேட்பது கொஞ்சமும் நன்றாக இல்லை. எனக்கு திருமண பந்தம் என்று எதுவும் இல்லை''

''சாமி, உங்களுக்கு ஒரு பொண்ணு பார்த்து வைத்து இருக்கிறேன், அவரை திருமணம் பண்ணிக்கொள்ள இயலுமா''

''பக்தா, என்ன விளையாடுகிறாயா? யாரிடம் என்ன பேச்சு பேசுகிறாய்''

''அப்படியெனில் என்னிடம் நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும்''

''பக்தா, தாய் தந்தையர் தனது மகனுக்கு மகளுக்கு இன்னார்தான் என முடிவு செய்து திருமணம் பண்ணி வைக்கிறார்கள்''

''அதையேதான் என் தாயும் செய்கிறார் சாமி, நான் காதலிக்கும் பெண்ணையே எனக்கு மணம் முடித்து வைக்க வெகுவாக போராடுகிறார். காதலித்தால் மட்டும் போதாதா, எதற்கு இந்த திருமணம் எல்லாம் எனக் கேட்டாலும் உனக்கு ஒரு மண்ணும் தெரியாது என என்னை திட்டிவிடுகிறார்''

''பக்தா, நீ திட்டுகள் வாங்கவே பிறந்தவன், அதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை, ஆனால் நீ திருமணம் பண்ண வேண்டியவன் அதில் இருந்து விலகி விட வேண்டாம்''

''எனக்குப் பிடிக்கவில்லை''

''பக்தா, பிடிக்காத விசயங்களை செய்பவர்கள் தன்னைத் தொலைத்தவர்கள் ஆவார்கள்''

''சாமி, எப்படி இப்படி எல்லாம் நீங்கள் பேசுகிறீர்கள் என ஆச்சர்யம் கொள்கிறேன்''

''பக்தா, நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டே இருக்கின்றன. நாம் தான் இந்த உலகத்தின் நேரத்தை காலத்தை நடத்துகிறோம் எனும் மனப்பாங்கு ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. இதனால் பல மன இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

இப்போது ஓரிடத்தில் நீ இருக்கிறாய், அங்கு உன்னைச் சுற்றியே பல வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உனக்குள் ஒரு மாயை உருவாகிறது. நாம் இங்கே இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்பதான மாயை. உன் மீது அநேகர் பிரியம் கொண்டு உள்ளதாக உன்னுள் உவகை கொள்கிறாய். எங்கே நீ இல்லாமல் போனால் அனைவரது பிரியமும் உனக்கு கிடைக்காமல் பொய் விடுமோ என அச்சம் கொள்கிறாய், அதனால் பிடிக்காத இடத்திலும் நீ உழன்று திரிகிறாய். நீ அந்த இடம் விட்டு வெளியேறி விடு. உனக்கு ஒரு உண்மை புரியும். நீ இல்லாமலும் எல்லாம் நடக்கும், நீ இல்லாமல் கூட அவர்கள் பிரியம் கொண்டு இருப்பார், ஆக தொலைவது என்பது நமக்குப் பிடிக்காத விசயங்களை செய்வது, பிடிக்காமல் வாழ்வது என்பதுதான்.

உடலால் தொலைவது கண்டுபிடித்துவிடலாம். மனதால் தொலைந்தால் உன்னைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம். எனவே இப்போதே திருமண வாழ்வுக்கு எல்லாம் முடியாது என சொல்லி என் பின்னால் வா, நீ தொலையாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்''

''சாமி, என் அம்மா என்னைத் தேடுவார்களே''

''பக்தா, உன் அம்மா உன்னைத் தேடவில்லை, தன்னைத் தேடுகிறார். தனக்குப் பிரியமான ஒன்றைத் தேடுகிறார். நீ அவர்களின் பிரியம்''

''அப்படியெனில் எப்படி நான் தொலையாமல் இருப்பது''

''பிடித்த விசயங்களைச் செய்''

அம்மா என அலறினேன். அம்மா என்னடா ஆச்சு என ஓடோடி வந்து விளக்கைப் போட்டார். வியர்த்து விறுவிறுத்து இருந்த நான் அம்மாவை நோக்கியபடி சொன்னேன்.

''அம்மா அந்த சுபாவோட எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சிருமா நான் தொலையவே மாட்டேன்''.

''என்னடா அந்த சாமியார் கனவா?''

''ஆமாம்மா''

''உனக்கு மந்திரிச்சி விடனும்''

 எனக்குள் ஒரு பெரும் கேள்வி ஒன்று உங்களை நோக்கி எல்லாம் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.

இவ்வுலக வாழ்வில் பிடிக்காத செயல்களை எல்லாம்  செய்யும் அளவுக்கு நீங்கள் எல்லாம் எங்கனம் தொலைந்தீர்கள்? 

No comments: