Saturday 17 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 3

என்னால் எழுத்தாளன் ஆக இயலாது என உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டபோது எழுதுவது எனக்கு மிகவும் எளிதானது. நான் பாடப்புத்தகங்கள் வாசித்து வளர்ந்தவன். எனக்கு இந்த நாவல், சிறுகதை தொகுப்பு எல்லாம் அதிகம் வாசிப்பது ஒரு பதினாறு வயதுடன் முடிந்து போனது என்றே கருதுகிறேன். அவ்வப்போது சில நாவல்கள் வாசிப்பது உண்டு. நாவல் எழுத அமர்ந்தபோது எப்படி எழுத வேண்டும், என்ன எழுத வேண்டும் என்ற சிந்தனை இல்லை. எழுத வேண்டும், அவ்வளவுதான். எனது எழுத்துக்களைப் பார்த்து இன்னும் சிறப்பாக எழுதுங்கள், விரிவாக, விபரமாக எழுதுங்கள் என சொன்னவர்கள் ஏராளம், அவர்களை எல்லாம் ஏமாற்றுவது எனக்கு வாடிக்கை. ஆனால் ஒரு எழுத்தாளன் யார், அவன் எப்படிப்பட்டவன், எப்படியெல்லாம் எழுத்தாளன் உருவாகிறான் என நீங்கள் தெரிந்து கொள்ள இந்த 'தமிழ்' மின்னிதழில் வெளியாகி இருக்கும் மின்காணல்தனை நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.

பொதுவாக நேர்காணலில் உள்ள பிரச்சினை என்னவெனில் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே எழுதுவது சற்று சிரமம். அப்படியே எழுதினாலும் வசதிக்கேற்ப எழுத்துகளை மாற்றி அமைத்து வெளியிடுவார்கள். அந்த பிரச்சினை இதில் இல்லை, அவர் என்ன எழுதி அனுப்பினாரோ அதையே பிரசுரித்து இருக்கிறேன் என்கிறார் ஆசிரியர். அதற்கு முதலில் பாராட்டுகள்.

அடேங்கப்பா! எத்தனை பெரிய மின்காணல். கிட்டத்தட்ட 47 பக்கங்கள், 54 கேள்விகள். புத்தகத்தில் 35 சதவிகித பக்கங்கள். வெற்றி பெற்ற எழுத்தாளன், படைப்பாளி  பேசினால் அதில் திமிர்த்தனம், தலைக்கனம் எல்லாம் வெளிப்படும். பணிவாக இருப்பவனே சிறந்தவன் என்கிற பண்பாடு எல்லாம் இப்போது மட்டுமல்ல எப்போதுமே இல்லை. எழுத்துலகில் மட்டுமல்ல எதிலும் அரசியல் எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒன்று. வெற்றி பெற்ற சக மனிதனின் மீது பொறாமை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவே காணப்படுகிறது. அனைவராலும் சொல்லப்படும் ஈகோ.

ஜெமோ என செல்லமாக அறியப்படும் ஜெயமோகன். எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். இவரது கருத்துகளில் எல்லோரும் உடன்பட வேண்டிய அவசியமில்லை. தனக்குத் தெரிந்ததை, தனக்குப் புரிந்ததை, தனக்குள் பிறர் நிரப்பிய விசயங்களை பகிர்தல் என்பது ஒரு எழுத்தாளன் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் செய்துகொண்டுதான் இருக்கிறான். எனக்கு இவரைப்பற்றி நிறையத் தெரியாது என்பதால் எல்லாமே சுவாரஸ்யமாக இருந்தது. அதுவும் 'ஒருபோதும் எழுத்தாளன் அன்றி பிற அடையாளங்களை நான் ஆசைப்பட என் அம்மா விரும்பியதில்லை' என்ற வரிகள் அட! 'எழுத்தில் சாதித்துவிட்டதாகத் தோன்றியபின் எழுதவே தோணாது'.

'வாசிப்பே என்னை எழுத்தாளனை உருவாக்கியது' என்பதோடு ஆன்மிக நாட்டம் குறித்து நண்பன் மற்றும் அம்மாவின் தற்கொலையை குறிப்பிடுகிறார். எனது நண்பன் கிரியின் தற்கொலையை நினைவுபடுத்தியது. கற்பனையே எழுத்துக்கு வழி. அமரர்கள் சுந்தர ராமசாமி, சுஜாதா, சுஜாதாவின் மனைவி குறித்த இவர் கருத்துகள், மனுஷ்யபுத்திரன், பெண்கள், மலையாளி முத்திரை, சொல் புதிது, குருநாதர், சினிமா உலகம், இவரது நாவல்கள், நோபல் பரிசு, நகைச்சுவை கதைகள், குழந்தை நாவல்கள், அறிபுனைவு, வாசிப்பாளனின் இயலாமை, விமர்சனம் பண்ணவேணும் எனும் அயோக்கியத்தனம், இணைய மொண்ணைகள் என இவரது விவரிப்பு ஆச்சரியங்களை உள்ளடக்கியது. ஆசிரியரின் கேள்விகள் எழுத்தாளனின் உள்ளக்கிடங்கை கிளறி இருக்கிறது.  'நல்ல எழுத்தாளன் புகழ் அங்கீகாரம் எதற்காகவும் எழுதுவது இல்லை'. அடடே! எதற்கும் நீங்களே எல்லாம் வாசியுங்கள். அவரது ஒவ்வொரு வரிகளை எழுதிக்கொண்டு இருந்தால் நான் ஒரு புத்தகம் தான் எழுத வேண்டி இருக்கும். அப்புறம் என்னை அவர் வசையாகத் திட்டிவிடுவார். எனக்குப் பிறரிடம் திட்டு வாங்கும் அளவுக்கு எழுதும் தைரியம் இல்லை.

அடுத்து வினோத நகரம். - முரளிகண்ணன் எழுதி இருக்கிறார். அதுவும் எங்கள் விருதுநகர். அவர் எழுதியதில் எண்ணையில் குளித்த புரோட்டா, சினிமா காட்சிகள் மட்டுமே எனக்குத் தெரியும். மற்றபடி பெண்கள் இதற்காகத்தான் திருவிழா செல்வது, குடும்ப உறவுகளின் பலம், நகை எடுக்கும் பாங்கு இதெல்லாம் நான் ஊன்றி கவனித்தது இல்லை. ஐந்தாம் திருவிழா என டிராக்டர் சென்ற அனுபவம் சினிமா சென்று தொலைந்து போன அனுபவம் என பல உண்டு. விருதுநகரில் இருந்து பதினோரு  கிலோமீட்டர் தொலைவில் எனது ஊர் என்பதால் எனக்கு விருதுநகர் சற்று அந்நியம்  தான். மிகவும் நன்றாக எழுதி இருக்கிறார்.

அடுத்து புனைவுகள். எல்லா புனைவுகளையும் வாசித்து முடித்துவிட வேண்டும் என திட்டமிட்டே வாசித்தேன். நளீரா, என்னை நடுநடுங்க வைத்துவிட்டாள். தோழர் கர்ணா சக்தி எழுதி இருக்கிறார். கருவில் உள்ள குழந்தை கதை சொல்வது போல அமைந்து இருக்கிறது. அபிமன்யு நினைவுக்கு வந்தான். தோழர் கர்ணா சக்தி ஒரு புரட்சி சிந்தனையாளர். பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தது என கேட்கும் பலரிடம் பிறக்கும் முன்னரே குழந்தை என்ன செய்தது என சமூகத்திடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். தோழரே, இந்த சமூகம் மூடர்களால், மடையர்களால் ஆனது, அறிவாளிகள் கூட சாதி, மதம் என வந்தபின்னர் அறிவிழந்து போகிறார்கள். சந்ததியை அழித்தால் எல்லாம் அழியும் எனும் கொடூர எண்ணம் கொண்டு வல்லூறுகள் வட்டமிட்டுக் கொண்டே இருக்கின்றன. இணக்கமான சமூகம் அழிந்து கொண்டே இருக்கிறது. மனதை கலங்க வைத்த கதை.

0 F  மத்யமன் என்பவர் எழுதி இருக்கிறார். வித்தியாசமான கதை, வித்தியாசமாகவே தொடங்குகிறது. அதுவும் ட்விட்டர் சம்பவங்களை வைத்தே தொடங்கி ஆருத்ரா தரிசனம், ஒரு ஆத்திகனுக்குள் நாத்திகன் என கதை பரபரப்பாக நகர்கிறது. குளிர் குறித்த விவரிப்பு, சமன்பாடு என கடைசியில் மனித நேயம் சொல்லி முடிகிறது கதை. உதவும் மனப்பான்மையை நட்புகளிடம் மட்டுமே கொண்டு இருக்க வேண்டியது இல்லை என சொல்லும் கதை எனவும் கொள்ளலாம். நன்றாக இருக்கிறது.

சிறகில்லாப் பறவைகள் - அல்டாப்பு வினோத் எழுதி இருக்கிறார். எனக்கு சரியாக ஞாபகம் இருந்தால் காந்திய கோட்பாடுகளுக்கு எதிரானவர் என்றே எண்ணுகிறேன். ரஜினி ரசிகர் என்பது கூட இவர் அடையாளம் என எண்ணுகிறேன். கதை சொல்லும் பாணி ஒரு சினிமாவைப் போன்று காலங்கள் நேரங்கள் குறித்து எழுதி இருக்கிறார். ஒரு இளைஞனின் வாழ்க்கை குறித்த கதை. இறுதி நிகழ்வு மனதில் ஒரு வெறுமையை ஏற்படுத்திவிடுகிறது. வெளிநாடு செல்பவர்கள் எல்லாம் பணத்தில் குளிப்பவர்கள் அல்ல என எளிமையாக உலகிற்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார். அருமை வினோத்.

அடுத்து கவிதைகள் தாவினேன். நிறைவேறாத ஆசைகள் - மிருதுளா. எதிர்நீச்சல் என்ற பாடல் வரிகள் போல இருக்கிறது என எனது எதிர்பார்ப்புகள் கவிதைகள் குறித்து என் தங்கை சொன்னது உண்டு. ஆனால் இந்த நிறைவேறாத ஆசைகள் இருபக்க விசயங்களை அழகாக தொட்டு செல்கிறது. இருக்கலாம் என்பதான வார்த்தையே கவிதைக்கு அழகு, அதுவும் முடித்த விதம் சிறப்பு.

சிரஞ்சீவியும் ஜீவிதாவும் - சொரூபா. மனதை கனக்க  வைத்த கவிதை. சிரஞ்சீவிடா, ஜீவிதாடி. கவிதையில் கலங்க வைக்க இயலும் என சொல்லி இருக்கிறார். நிறுத்தி நிதானமாக நிகழ்வுகளை அசைபோடுங்கள்.

நா ராஜு கவிதைகள். மிருதுளா, சொரூபா அற்புதமான எழுத்தாளர்கள் என ட்விட்டர் உலகம் அறியும். எனக்கு ராஜு, அசோகர் பரிச்சயமில்லை. முத்தம் மூர்க்கமெனினும்  காதல். அருவி, நீர், பறவையின் பாட்டு என வேறொரு பொருள் உண்டு இங்கு என்கிறார். முன்னேற்பாடுகள் அற்ற விசயங்கள் என கவிதையின் ஆழம் அருமை.

ஒரு பெண் ஒரு ஆண் - அசோகர். வித்தியாசமான கவிதைக்களம். சிந்தனை மாறுபாடு ஒன்றும் காதலுக்கு அலுக்காதுதான். நன்றாகவே இருக்கிறது. ஒப்புமை குறியீடுகளில்  மூழ்கி முத்தெடுங்கள்.

விமர்சனம். ஸ்டான்லி க்ப்யூரிக் - இயக்குனர்களின் ஆசான்  எழுதி இருப்பவர்  நவீன் குமார். நல்ல சுவாரஸ்யமாக படம் பார்க்கும் உணர்வை தந்து இருக்கிறது எழுத்து. மிகவும் அற்புதமாக எழுதி இருக்கிறார். படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் வந்து போகிறது, அதே வேளையில் நேர்மையாக இருக்கும் கணவன் மனைவி குடும்பத்தில் சர்ச்சை தோன்ற வைத்துவிடும் அளவிற்கு இந்த படம் ஒரு மன உளைச்சலை தந்துவிடும் எனும் அபாயமும் உள்ளது. பொதுவாக கணவனுக்கும் மனைவிக்கும் நல்லிணக்கம் அத்தனை இருப்பதில்லை என்பதுதான் பெரும்பாலான குடும்பங்களில் காணப்படுவது. நக்கல், கேலி, கிண்டல் என இருந்தாலும் மெல்லிய காதல் குடும்ப அமைப்பில் இருந்து கொண்டே இருக்கும். எப்போது நிராகரிப்பு, புறக்கணிப்பு நிகழ்கிறதோ அப்போது பிரச்சினை தலைதூக்கும். ஒருமித்த கருத்து உள்ள தம்பதிகள்  வாழ்வின் வரம்.

இப்படியாக 'தமிழ்' மின்னிதழை வாசித்துக் கொண்டே இருக்கிறேன். புனைவுகள், கவிதைகள், நேர்காணல் எனும் மின்காணல் என வாசித்து முடித்த தருணத்தில் இந்த தமிழ் மின்னிதழ் ஒரு அருமையான இலக்கிய இதழ் என தைரியமாக சொல்லலாம். இது ஆசிரியரின் முதல் முயற்சி என்றாலும் தெரிவு செய்த விதங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த மின்காணல் இந்த தமிழ் மின்னிதழின் முத்தாய்ப்பு.

நான் நேசிக்கும் ஓவியர்கள் என ட்விட்டரில் நிறைய உண்டு. எவராவது கோலம் படம் போட்டால் கூட ஓடிச்சென்று அதை சேமித்து விடுவேன். அதுபோல எவரேனும் படம் வரைந்தால் அட என பிரமித்துவிடுவேன். ஓவிய ஈடுபாடும் இந்த தமிழ் மின்னிதழில் உள்ள வேறு சில ஓவியங்களோடு விமர்சனம் அனுபவங்கள் என சில நாளைப் பார்க்கலாம்.

மின்காணல் வாசித்து முடித்ததும் மனதில் எழுந்தது இதுதான். எதையும் முழுதாய் வாசிக்கத் திராணியற்ற இணைய மொண்ணைகளே, ஒன்றை விமர்சனம் செய்ய முழுவதுமாக வாசித்துவிட்டு பின்னர் விமர்சனம் செய்யுங்கள், இல்லையெனில் போங்கடா வெண்ணைகளா என திட்ட வேண்டி இருக்கும். ஷப்பா... தமிழ் எழுத்துலகம் என்னை மிரள வைக்கிறது.

(தொடரும்)


No comments: