Monday 3 March 2014

தாலேலோ ஆண்டாள்

அடேங்கப்பா ஆண்டாள் - 5

விஷ்ணுசித்தர் வில்லிபுத்தூரில் முகுந்த பட்டருக்கும், பத்மவல்லி அம்மையாருக்கும் பிறந்த ஐந்தாவது புதல்வர். முகுந்த பட்டரும், பத்மவல்லி அம்மையாரும் வடபெருங்கோவிலுடையானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு இருந்தார்கள். வேத விற்பன்னராக முகுந்தபட்டார் திகழ்ந்தார்.

விஷ்ணு சித்தரை ஒரு அந்தணர் போலவே வளர்த்தது முகுந்தபட்டர்தான். மற்ற குழந்தைகள் பற்றி எங்கேனும் குறிப்பு இருக்கிறதா, என்ன ஆனார்கள் என்பது குறித்த ஆராய்ச்சி இங்கே அவசியமற்று போகிறது. விஷ்ணுசித்தர் தன்னை ஒரு வைஷ்ணவராய் உருவகித்து பரமனுக்கு கைங்கர்யம் செய்வதில் நாட்டம் கொண்டு வந்தார். எந்தவகையான கைங்கர்யம் சிறப்பு என நினைத்தபோது மாலைகள் அணிவித்து மகிழ்ந்திருப்பது என எண்ணினார் விஷ்ணுசித்தர்.

ஒரு பூந்தோட்டம் அமைத்திட பெரும்பாடுபட்டு குளங்கள் எல்லாம் உருவாக்கி நந்தவனம் உருவாக்கினார். அங்கே எல்லா பூக்களும் பூத்து குலுங்கின. துளசி, தாமரை, முல்லை, மல்லிகை அழகு சேர்த்தன. அம்மலர் வாசனையை தான் நுகரக்கூடாது என நாசிகளை துணிகளால் மூடி மாலையாக்கி வடப்பெருங்கோவிலுடையானுக்கு சமர்ப்பித்து வந்தார்.

பாண்டிய நாட்டின் அரசன் வல்லபதேவன் மறுமையில் பேரின்பம் பெற என்ன வழி என ஒரு அந்தணரை சந்தித்ததால் உண்டான சிந்தனையில் வித்வான்களைத் திரட்டிட பறை அறிவித்து பெரும் பொருளை ஒரு வஸ்திரத்தில் கட்டி பொற்கிழியை ஒரு தோரணத்தில் தொங்கவிடப்பட்டது. எவர் மறுமையில் பேரின்பம் பெற இம்மையில் வழி சொல்கிறார்களோ அவர்கள் பொற்கிழி எடுத்துச் செல்லாமல் என அறிவித்தான்.

அன்றைய காலத்தில் புலவர்களுக்கு வேத விற்பன்னர்களுக்கு எப்போதும் ஒருவித போட்டி இருந்து கொண்டே இருப்பதாகவே வரலாறு குறிக்கிறது. முகுந்தபட்டர் விஷ்ணு சித்தருக்கு வேத சாஸ்திரங்கள் கற்று தந்து இருக்கக்கூடும், ஆனால் வேத சாஸ்திரங்கள் மூலம் இறைவனுக்கு கைங்கர்யம் செய்யாமல் மாலைகள் மூலம் மட்டுமே செய்துவந்தவர் விஷ்ணுசித்தர்.

பாண்டிய மன்னன் அறிவித்தமை கண்டு விஷ்ணுசித்தர் நிச்சயம் நினைத்து இருக்கக்கூடும். தந்தை கற்று தந்த கல்வி மனதில் ஓடியிருக்கும். ஆனால் இறைவனே விஷ்ணுசித்தரின் கனவில் வந்து பொற்கிழி அறுத்து வரும்படி சொல்லப்பட்டு இருக்கிறது. விஷ்ணுசித்தர் இறைவன் தம்மை வைத்து காரியம் நடத்த இருக்கிறார் எனும் உறுதி கொண்டு மதுரைக்கு கிளம்புகிறார்.

விஷ்ணுசித்தர் குறித்து வல்லபதேவன் தனது அவையில் இருந்த அந்தணர் செல்வநம்பிகள் மூலம் அறிந்து  இருந்தான். இப்போது வெறும் மாலைகள் மட்டுமே அணிவித்த ஒரு அந்தணர் ஒரே நாளில் பாண்டித்யம் பெறுவது கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம். சாஸ்திரங்கள் தெரியாத ஒருவரை இந்த அவையில் அனுமதிப்பது தவறு என்றே மற்ற அந்தணர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள். இறைவன் அருளிச்செய்த சாஸ்திரங்களை விஷ்ணுசித்தர் சொல்லி முடிக்கிறார். நாராயணனே பரம்பொருள் என்பதாக அது அமைகிறது.

விஷ்ணுசித்தர் பட்டர்பிரான் என அழைக்கப்பட தருணம் அது. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடிய பட்டர்பிரான் பரம்பொருளால் பெரியாழ்வார் என அழைக்கபட்டார் என்கிறது சேதி. இப்படி வாழ்ந்து வந்த பெரியாழ்வார் கண்ணனை தன்னை ஒரு யசோதாவாக பாவித்து பல பாடல்கள் இயற்றினார்.

தன்னை அன்னையாக வர்ணித்த பெரியாழ்வார் துளசி செடிக்கு அடியில் ஐந்து வயது குழந்தையாய் கண்டெடுக்கப்பட்டவர் ஆண்டாள். கண்ணனை குழந்தையாக, தன்னை தாயாக பாவித்து வர்ணிக்கும் பெரியாழ்வார் கண்டு ஆண்டாள் தனது காதலனாக கண்ணனை சித்தரித்தாள். சின்ன குழந்தையாய் ஆண்டாள். ஆண்டாள் வளர வளர அவள் கண்ணனும் வளர்கிறான் என்றே மனதில் பாடம் கொண்டாள்.

ஆண்டாள் செய்கை கண்டு பெரியாழ்வார் இப்படித்தான் பாடி வைக்கிறார்.

காறை பூணும் கண்ணாடி காணும் தன்
கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறி தேறி நின்று ஆயிரம் பேர்த்
தேவன் திறம் பிதற்றும்
மாறில் மாமணி வண்ணன் மேல் இவள்
மால் உருகின்றாளே

பெரியாழ்வார் போலவே ஆண்டாளும் பாடி முடித்து இருப்பாள். 'வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்' என்பார் பெரியாழ்வார். 'பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலை' 'புதுவையர்கோன் விட்டு சித்தன்கோதை' என்பார் ஆண்டாள்.

தாலேலோ ஆண்டாள், இளம் பிராயத்தில் அப்படியே உள்வாங்கி உன்னையே மாற்றிக் கொண்டாய்

(தொடரும்)

No comments: