Friday 14 March 2014

அவள் என்னை ஒதுக்கினாள்

என்னை உங்களுக்கு நினைவு இருக்குமா என தெரியாது. நான், என் மாமா மகள், என் மனைவி, என்னுடன் வேலை பார்த்த பெண் அப்புறம் புதிதாக பக்கத்து அலுவலகத்தில் வந்து சேர்ந்த பெண் என மூன்று வருடங்கள் முன்னர் ஒரு சின்ன கதை சொல்லி இருந்தேன். அந்த கதைக்கு அப்புறம் என்னைப் பற்றி சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏதும் வரவில்லை. ஆனால் இப்போது ஒரே ஒரு தடவை மட்டும் பேசிவிட்டு சென்று விடலாம் என இருக்கிறேன். மீண்டும் எப்போது நான் வருவேன் என எனக்குத் தெரியாது. இனிமேல் இது குறித்து நான் உங்களிடம் சொல்லாமலே போகலாம்.

கல்யாணம் ஆகி நான்கே வருடங்கள் தான் ஆகி இருந்தது. ஒரு மகள் பிறந்து ஓராண்டு முடிந்து இருந்தது. புதிதாக பக்கத்து அலுவலகத்தில் வந்து சேர்ந்த பெண்ணின் மீதான காதல் துளிர் விட்டதும் என்னுடன் வேலை பார்த்த பெண்ணின் காதலை உணர்ந்து இருந்தேன். அன்று இரவு மனைவியிடம் எனக்கு நேர்ந்து இருக்கும் விஷயத்தை சொன்னதும் நீங்கள் நம்பினால் நம்புங்கள், கையில் கிடைத்த பாத்திரத்தை எடுத்து எனது தலையில் ஓங்கி அடித்து விட்டாள். எனக்கு வலி பொறுக்க இயலவில்லை. தலை புடைத்து வீங்கி நின்றது.

'ஏன்டா, கட்டின பொண்டாட்டி நான் இருக்க இன்னொருத்தி மேல காதல்னு சூடு சொரணை இல்லாம அதுவும் என்கிட்டே வந்து சொல்வ' அதுதான் முதல் தடவை என் மனைவி என் மீது இத்தனை அளவுக்கு அதிகமான அகங்காரம் கொண்டது.

அன்று இரவு முழுவதும் விசும்பிக் கொண்டு இருந்தாள். 'எடுபட்ட பயலே, இனிமே எவளைப் பத்தியாவது பேசின உன்னை கொலை பண்ண கூட தயங்கமாட்டேன். உன்னை நம்பி தனிக்குடித்தனம் வந்தேன் பாரு, அது என் தப்பு தான். நானும் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாரிச்சு தனிச்சி வாழுறேன் பாரு' என்று அந்த விசும்பலின் ஊடே சொல்லிக் கொண்டு இருந்தவள் எப்போது தூங்கினாள் எனத் தெரியாது. காலையில் அவளைப் பார்த்தபோது அவளது கண்கள் எல்லாம் வீங்கி இருந்தது. கொஞ்சமும் கோபம் குறையாமல் இருந்தாள். நான் என் தலை வீக்கம் குறையட்டும் என மூன்று நாட்கள் வேலைக்கு விடுப்பு எடுத்தேன். எத்தனையோ சமாதானம் பண்ணிப் பார்த்தேன். ஆனால் அவள் கொஞ்சமும் கேட்பதாக இல்லை.

கொஞ்சம் வீக்கம் அன்றே குறைந்துவிட்டது. கடைக்கு சென்று சாப்பிடலாம்  வா என அழைத்தேன். 'ஏன் அவளுக எவளாச்சும் அங்க வரேன்னு சொல்லி இருக்காளுகளா' என்று அவளே அவர்களை பற்றி பேசினாள். நான் இல்லை என்று சொல்லிவிட்டு அதிகம் பேசவில்லை. இங்க பாரு, நீயில்லாம எனக்கு வேறு யாரும் இல்லை. ஏதோ புத்தி கொஞ்சம் புரண்டு போச்சு, இனிமே இப்படி நடக்கமாட்டேன் என்று இத்தோடு ஆயிரம் தடவை மேல் சொல்லி இருப்பேன்.

'உன்னை நம்பி எப்படி இருக்கிறது, அன்னைக்கே அந்த சிறுக்கி வீட்டுக்கு வந்தப்ப காலை வெட்டி அனுப்பி இருக்கணும். நீ எவளோடையும் போயிர கூடாதேனுதான் நான் உன்னோட உறவு வைக்க சம்மதிச்சேன். ஆனா நீ இப்ப காதல்னு சொல்லிட்டு கண்டவளோட அலைய ஆசைப்படற. உனக்கு இனிமே என்னோட உறவு கிடையாது, ஒட்டும் கிடையாது. அப்படி உனக்கு சுகம் தேவைப்பட்டுச்சினா அதான் இருக்காளுக அந்த ரெண்டு பேரு, அவள்கிட்ட போ' இப்படி எல்லாம் வார்த்தைகளை அவள் உதிர்த்து கொட்டுவாள் என ஒருபோதும் நான் நினைத்ததே இல்லை. அவளின் கோபம் தணியும் என்றே பார்த்தேன். ஆனால் வாரம் ஆகியது. கோபத்தை குறைத்துக் கொள்ளவே இல்லை.

ஒரு சின்ன விசயத்துக்கு இத்தனை தண்டனையா என என்னை நானே நொந்து கொண்டேன். ஒரு மாதம் கடந்து போனது. அவள் சொன்ன வார்த்தையில் உறுதியாக இருந்தாள். அவளை கல்யாணம் கட்டியபோது எப்படி என்னை பிரமச்சரியம் அனுபவிக்க வைத்தாளோ அதைப்போலவே இப்போதும் என்னை அனுபவிக்க வைத்துக் கொண்டிருந்தாள். இந்த சூழல் காரணமாக நான் பக்கத்து அலுவலக பெண்ணை மட்டுமல்ல எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்ப்பதை தவிர்த்து இருந்தேன்.

எனக்கு வேலை கிடைச்சிருக்கு. உன் அம்மாகிட்ட பேசினேன், அவங்க வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க, என்னோட அம்மாவும் அப்பாவும் நம்மளோட தங்கி இருப்பாங்க என சொன்னதும் எனக்கு மறுத்து பேச மனம் வரவில்லை. உன் விருப்பப்படியே செய் என சொல்லிவிட்டு வேலைக்கு செல்வது வீட்டுக்கு வருவது மகளுடன் கொஞ்சி விளையாடுவது என்று இருந்தேன். அவள் முகம் கொடுத்து கூட பேச மறுத்தாள். நம்பிக்கை போய்விட்டது என்றால் அதை திரும்ப பெறுவது மிகவும் கடினம் என்பதை உணர்ந்து கொண்டு இருந்தேன்.

அன்று அலுவலகத்திற்கு என்னுடன் முன்னால் வேலை பார்த்த பெண் வந்து இருந்தாள். வீட்டில் உள்ள பிரச்சினையை சொன்னேன். அவளை விவாகரத்து பண்ணிட்டு என்னோட வந்துரு, எதுக்கு இப்படி உன்னோட இளமை காலத்தை வீண் பண்ற, உன்னை நான் நல்லா பாத்துப்பேன் என்று காதல் மொழி பேசினாள். அதில் நான் கரைந்துவிடாது இருந்தேன். இல்லை இனிமே என்னோட நீ பேசாத, என்னை பார்க்க வராதே அதுதான் உனக்கும் எனக்கும் நல்லது. நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ என சொன்னதும் அலுவலகத்தில் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை கூட பொருட்படுத்தாமல் அவளது காலில் இருந்த செருப்பை கழட்டி எனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். 'சீ நீயெல்லாம் ஒரு நண்பன்னு பேச வந்தேன் பாரு, உன் பொண்டாட்டிக்கு பதிலா என்னை உன் பொண்டாட்டியாக்க எத்தனை கேவலமா பேசுவ என சொல்லிவிட்டு போய்விட்டாள். நான் குற்றுயிராய் நின்று இருந்தேன். நடந்தது வேறு என அங்கிருப்பவர்களிடம் சொல்லக்கூட என்னால் முடியவில்லை. எல்லோரும் என்னை கேவலமாக பார்ப்பது போன்று தோன்றியது. அடுத்த இரண்டு வாரங்களில் நான் வேறு வேலை மாறி இருந்தேன்.

எனது மனைவியும் வேலைக்கு சேர்ந்து இருந்தாள், என் மாமியார், மாமனார் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் முன்னால் சிரித்து பேசுவது போல நடிப்பாள், ஆனால் தூங்க செல்லும்போது மகளை எங்கள் இருவருக்கும் இடையில் தூங்க வைத்தே தூங்குவாள். தாம்பத்யம் என்பதை மறந்து இரண்டு மாதங்கள் ஆகி இருந்தது. இந்த காம இச்சையை எத்தனை சாதுர்யமாக கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறாள் என என்னால் கொஞ்சம் கூட நம்ப இயலவில்லை. நானும் அவளின் உணர்வுகளை மதித்து அதிகம் தொந்தரவு தராமல் இருந்தேன்.

ஆனால் ஓர் இரவு என்னால் பொறுத்து கொள்ள இயலாமல் அவளிடம் கெஞ்சினேன். இதுவரை என்னால் எந்த பிரச்சினையும் இல்லை என மன்றாடி அவளுடன் உறவு கொண்டேன். அவள் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தாள். விருப்பம் இல்லையா என்றே கேட்டு வைக்க, உனக்கு சுகம் கிடைச்சா போதும்ல என சொல்லிவிட்டு என் வாய் அடைத்தாள். எப்படி இப்படி காம இச்சை இன்றி இவள் போக கூடும்.

ஒரு மருத்துவரை அணுகினேன். மொத்தமாக அனைத்து கதையையும் கூறி முடித்ததும் அடுத்த வாரம் வா  என சொல்லி அனுப்பினார். எனக்கு காம இச்சை தோன்றும்போது அவளை பணிய வைத்தேன். அவளும் எவ்வித உணர்வு இன்றி சரி என்றே இணைந்தாள். எனக்கு இந்த பிரச்சினைக்கு முன்னால் அவள் நடந்து கொண்ட விதமும், இப்போது நடந்து கொண்டு இருக்கும் விதமும் வித்தியாசமாக இருந்தது. அடுத்த வாரம் சென்றபோது என்ன நடந்தது என கேட்டார். சொன்னேன். சில மாதங்கள் பின்னர் அழைத்தார், சென்றேன். ஒருமுறை கூட அவளாக காம இச்சை கொண்டு என்னை அணுகவில்லை என சொன்னேன். உங்ககிட்ட சில விசயங்கள் பேசணும் என மாலை பூங்காவிற்கு வர சொன்னார். சென்றேன்.

'உங்க மேல உங்க மனைவிக்கு நம்பிக்கை இல்லை. அந்த நம்பிக்கை இனிமே வருமான்னு சொல்லவும் முடியாது. அவங்களுக்கு காம இச்சை இருந்தாலும் அதை தீர்த்துக்கொள்ள நீங்கதான் வழி. ஆனாலும் அந்த காம இச்சையை எளிதாக நீங்கள் நடந்து கொண்ட நம்பிக்கை துரோகத்தை நினைச்சி அவங்களால கட்டுபடுத்திக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் உங்களை அவங்க இழக்கவும் விரும்பலை, அதனால நீங்க விரும்பற நேரம் எல்லாம் உங்களோட ஆசையை பூர்த்தி செஞ்சா போதும்னு இந்த விசயத்தில நடந்துக்கிறாங்க. நீங்க உங்க காம இச்சையை குறைக்கணும், அவங்களே உங்களை விரும்பி வரணும். அதுக்கு இன்னைக்குல இருந்து அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குங்க. குறைவில்லாத அன்பு, எந்த விசயத்துக்கும் சத்தம் போடாம இருப்பது மாதிரி நீங்க நடந்துக்கோங்க. இதுதான் நீங்க கடைபிடிக்க வேண்டியது. காமம் அல்லாத காதலை நீங்க அவங்ககிட்ட தந்தால் ஒழிய உங்களால உங்க மனைவியை நீங்க திரும்ப பெற இயலாது.

பெரும்பாலான ஆண்கள் தங்களோட காம இச்சை தீர்ந்தா போதும்னு நடந்துக்குவாங்க, மனைவியோட மனசை அவங்க புரிஞ்சிக்கிறதே இல்லை. மனைவி உறவுக்கு சம்மதிக்கிறானு எல்லாம் நல்லா இருக்குணு நம்பி வாழ்க்கையை ஒரு ஏமாத்தமா நடத்துறது இந்த உலகத்தில் வாடிக்கை. ஆனா நீங்க அப்படி வாழ வேண்டாம்னு சொல்றேன். அன்னியோனியம் அப்படிங்கிறது இரண்டு மனசு சேர்ந்து வரது. அந்த காலத்தில் மட்டுமல்ல இந்த காலத்திலும் தாசி முறை, விபச்சாரம் எல்லாம் ஒரு ஆணுக்கு காம இச்சை தீர்க்கும் வழின்னு வைச்சிட்டாங்க. பெண்ணுக்கு காம இச்சை இல்லாமலா இருக்கும். இதுவே நீங்க உங்க மனைவிக்கு முன்னால வேற யாருகிட்டயாவது உறவு வைச்சீங்களா, இல்லையே. எப்படி அப்போ கட்டுபாடா இருக்க முடிஞ்சது.

பாலினத்தை தீர்மானிக்கிற குரோமசோம்கள் முதற்கொண்டு காம இச்சையை தீர்மானிக்கிற ஹார்மோன்கள் இருப்பதாகவே அறிவியல் உலகம் நம்புறது. பாலின ஹார்மோன்கள் பெண்கள் பருவம் அடையறப்ப பிட்யூட்டரி சுரப்பி  மூலம் இந்த இரண்டு Luteinising Hormone (LH) and Follicle Stimulating Hormone (FSH)  சுரக்கிறது.  கருமுட்டை உற்பத்தி பண்ற இடத்தில் இருந்து  oestrogen and progesterone சுரக்கிறது. இந்த நிலையில் தான் ஒரு பெண் என்பவளோட உடலில் எல்லா மாற்றங்களும் உருவாகிறது. மார்பகங்கள் வளர்ச்சி முதற்கொண்டு, மாதவிடாய் காலங்கள் எல்லாம்  இந்த நிலைக்கு அப்புறம்தான். இதே மாதிரி ஆண்களிலும் LH, FSH சுரக்கிறது. ஆனால் விரைப்பையில் இருந்து testosterone சுரப்பதன் மூலம் தான் ஒரு ஆண், ஆண் தன்மையை பெறுகிறான். மீசை வளர்ச்சி முதற்கொண்டு. இந்த testosterone பெண்களிலும் எட்டு மடங்கு ஆணை விட குறைவாகவே சுரக்கிறது.

எல்லா விலங்கினங்களும் தாங்கள் உறவு கொள்ள தயாராக இருக்கிறோம் அப்படின்னு ஒரு குறிப்பு உணர்த்தும். அதைப்போலவே மனிதர்கள் உணர்த்துவாங்க. பொதுவா பெண்கள் மாதவிடாய் தொடங்கிய காலத்தில் இருந்து பதினாலாவது நாள் கருமுட்டை வெளியேறும். அந்த கருமுட்டை வெளியேறும் ஆறு நாட்கள் முன்னர், ஆறு நாட்கள் பின்னர் வரை அவர்களுக்குள் காம இச்சை அதிகமாக இருக்கும். அப்போது அவர்களின் நடவடிக்கை எல்லாம் கவனித்தால் ஒரு மாற்றம் இருக்கும் என்றே சில ஆராய்ச்சி முடிவுகளில் சொல்றாங்க. அதே வேளையில் இப்படி கருமுட்டை வெளியாகும் தருணத்தை வைத்து ஒரு பெண்ணின் காம இச்சையை கணிப்பது தவறுன்னு சொல்றாங்க. இப்படி ஆய்வக முடிவுகள் எல்லாம் வைத்து ஒரு உறவின் காம இச்சையை தீர்மானிக்ககூடாதுன்னு சொல்வாங்க. இப்போ உங்க வாழ்க்கையே ஒரு உதாரணம். உங்க மனைவிக்கு காம இச்சை குறைந்து போனதற்கு காரணம் அவங்களோட ஹார்மோன்கள் பிரச்சினை இல்லை. நீங்கதான்.

இப்படித்தான் 66 தம்பதிகளை தேர்ந்தெடுத்து பெண்களிடம் அவங்க ஆண்கள் கிட்ட என்ன பிடிக்கும்னும் இன்னொருத்தர் கிட்ட என்ன பிடிக்கும்னு கருமுட்டை வெளியாகும் தருணம் , கருமுட்டை வெளியாகாத தருணங்களில் ஒருவரோட அறிவு, புகைப்படம், மேலும் சில உடல் வடிவமைப்புகள் கொடுத்தாங்க. அதாவது ஒரு பெண் 66 ஆண்களை பார்த்து எப்படி நினைக்கிறாங்கன்னு சொல்லணும். நம்ம ஊருனா என்ன பொழப்புன்னு சொல்லிட்டு போயிருவாங்க. ஆனா அந்த ஆராய்ச்சி முடிவு என்ன சொன்னதுன்னா எந்த பெண்ணும் ஒரு ஆணின் அறிவு குறித்து காம இச்சை கொள்வதில்லை. மாறாக ஆணின் தோற்றத்தை கொண்டு காம இச்சை இந்த கருமுட்டை வெளியாகும் தருணத்தில் இருந்ததுன்னு கண்டுபிடிச்சாங்க. இதே மாதிரி வேறொரு ஆராய்ச்சியில் பெண் தான் கருமுட்டை வெளியாகும் தருணத்தில் கொஞ்ச நாள் உறவுக்கு ஏற்ற கொஞ்சம் கரடு முரடான தசைப்பிடிப்புள்ள ஆணையும், கருமுட்டை வெளியாகத தருணத்தில் அன்பு உள்ள ஆணை நெடுநாள் அவர்களுடன்  இருக்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டதா சொல்றாங்க. அதாவது காம இச்சை அற்று.

இப்ப பெண்கள் கரு தடுப்பு மாத்திரைகள் உட்கொண்டால் இந்த கருமுட்டை வெளியாகும் உணர்வுகள் எல்லாம் மறைந்து போனதா சொன்னாங்க. ஆனால் ஆண்களுக்கு இது போன்ற ஹார்மோன்கள் பிரச்சினை இல்லை என்றாலும் வயது ஆக ஆக testosterone அளவு குறைய அவர்களின் காம இச்சை குறையும்னு சொன்னாங்க. காம இச்சை அற்ற ஆண்கள் உண்டு என்பது அவங்களோட எண்ணம்.

இந்த மொத்த ஆராய்ச்சி தப்புன்னு சொல்லி கருமுட்டை உருவாகும் தருணத்தில் பெண்கள் நன்றாக ஆடை உடுத்துவார்கள் என்றெல்லாம் சொன்னாங்க. கிராமப்புறம் எல்லாம் இதை சொன்னா ச்சீ கருமம் என்றே போயிருவாங்க. இதில் கலாச்சாரம் எல்லாம் நிறைய பங்கு பெறுது. தங்களோட ஆசைகளை மனதில் அடக்கி கொள்ளும் பெண்களே அதிகம்.

ஒரு பெண் கோபமாக அழுது கொண்டு தலைவலியுடன் இருக்கும்போது காம இச்சையை நினைத்துக்கூட மாட்டார். பெரும்பாலான பெண்கள் இந்த காம இச்சை குறைவிற்கு அவர்களது ஹார்மோன்கள் என்றே எண்ணுகிறார்கள். ஆனா நிறைய பேருக்கு இந்த ஹார்மோன்கள் பத்தி எல்லாம் தெரியாது கூட.

யாரிடமாவது நீங்க போய் எப்ப காம இச்சையுடன் கவர்ச்சியா உணருறீங்கனு  கேட்டா அவங்களால உறுதியா சொல்ல முடியாது. ஒரு ஆணின் அல்லது பெண்ணின் இன உறுப்பில் ஏற்படும் எழுச்சிக்கும், உச்ச நிலைக்கும் காம இச்சைக்கும் வேறுபாடு உண்டு. அதாவது சுய இன்பம் மூலம் ஒரு பெண்ணோ ஆணோ தனது உச்சத்தை அடைந்து கொள்ளலாம், ஆனால் இன்னொருவருடன் உடல் உறவு கொள்ளும் காம இச்சை என்பது அத்தனை எளிதாக தோன்றுவது இல்லை. காம இச்சையே இல்லாத ஆணோ, பெண்ணோ எப்படி காம இச்சைக்கு உட்படுத்துவது என்பது குறித்து மருத்துவ உலகம் அதிக செலவு செய்யவில்லை. வயாகரா மாத்திரை ஆணின் இன உறுப்பின் எழுச்சிக்காக உருவாக்கப்பட்டது, காம இச்சைக்கு என்று இல்லை.

oestrogen காம இச்சையை அதிகரிக்காது காம இச்சையை ஆண் பெண் இருவருக்கும் அதிகரிக்க செய்வது testosterone என முப்பது ஆண்டுக முன்னர் ஒரு பெண் சொன்னாங்க. கடந்த 40 வருடம் பெண்ணுக்கு testosterone கொடுத்து காம இச்சை அதிகரிக்குமா என பார்த்தபோது அந்த பெண்ணின் இன உறுப்பி மட்டுமே மாற்றம் ஏற்பட்டது. காம இச்சை மாறாது இருந்தது.

இந்த காம இச்சை அதிகரிப்பது நமது எண்ணம் சார்ந்தது என கூறி இருக்காங்க. ஒரு பெண் தாய் ஆனபின்னர் காம இச்சை குறையும், இப்படி நிறைய காரணம்  இருக்கிறது. ஆகவே நான் உங்ககிட்ட் கேட்டுக்கிறது என்னன்னா நீங்க அன்பும் பாசமும் நிறைந்த கணவனாய் உங்க மனைவியின் உணர்வினை புரிந்தவராய் இருக்க வேண்டும்.

டாக்டர் பேசியதை கேட்டபின்னர் நான் வெகுவாக மாறி இருந்தேன். நீங்க நம்பினா நம்புங்க மூன்று மாதம் பின்னர் என் மனைவி என் மீது பிரியம் அதிக காட்டினார். இனி பிரியம் அகன்றுவிடாது இருக்க பாசத்துடன் இருந்தேன்.

முற்றும். 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட

வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - சிம்லா ஸ்பெஷல் - குப்ரி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கணவன் மனைவி அறிய வேண்டிய சிறப்பான பதிவு வலைசர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்
தலைப்புக்கு என் பாராட்டுக்கள் இது போன்ற பதிவுகளுக்கு கவர்ச்சியான தலைப்பை தவிர்த்தது சிறப்பு

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கணவன் மனைவி அறிய வேண்டிய சிறப்பான பதிவு வலைசர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்
தலைப்புக்கு என் பாராட்டுக்கள் இது போன்ற பதிவுகளுக்கு கவர்ச்சியான தலைப்பை தவிர்த்தது சிறப்பு

Radhakrishnan said...

நன்றி தனபாலன் சார். நன்றி ரூபக் ராம்

Radhakrishnan said...

நன்றி முரளிதரன் சார்