Wednesday 25 September 2013

பச்சை மாமலைபோல் மேனி

காலையில் இருந்து மாலை வரை எப்படியும் ஆயிரத்து எட்டு தடவை இந்த பாசுரத்தை கேட்டு இருந்து இருப்பேன். ''பச்சை மாமலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்''. எப்படித்தான் இப்படி ஒரு அற்புதமான பாசுரத்தை இயற்ற முடிந்ததோ என்றே எண்ணிக கொண்டே இருந்தான். என்னப்பா யோசனை என்றே அப்பா கேட்டார். நானும் பாசுரம் பற்றிய விசயம் சொன்னேன். இதில் என்ன பெரிய அற்புதம் இருக்கு என்றே சொல்லிவிட்டார்.
ஆனாலும் மனம் கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் அதே பாசுரம் மனதில் நிழல் ஆடிக் கொண்டு இருந்தது.

பக்கத்தில நாலு பிளாட் விலைக்கு வருதுடா, எப்படியாவது வாங்கிரனும் என்றார் அம்மா. ஏதுமா, நாலு போகம் நெல் விளையுமே, அந்த நிலத்திலா பிளாட் போடுறாங்க என ஆச்சர்யத்துடன் கேட்டேன். ஆமாடா, அடுத்த அறுவடையோட அந்த நிலம் எல்லாம் அபார்ட்மென்ட் ஆகிப் போகும்டா, யோசனை பண்ணிட்டு இருக்காதே, லோன் போடனும்னா, உடனே ஏற்பாடு செய்டா. பச்சை மாமமலைபோல் மேனி என பாடியபோது தொண்டை விக்கியது.

நகர்ப்புறங்களில் தான் இப்படி செய்கிறார்கள் எனில், கிராமப்புறங்களிலும் இந்த அவலம் தொடர்கிறதே என்றே மனம் வேதனையுற்றது. அந்த வேதனையில் அப்படியே தூங்கிப் போனேன்.

''பக்தா''

''வாருங்கள் சாமி, அமருங்கள்''

''மிகவும் மன வேதனையில் உழன்று கொண்டு இருக்கிறாயோ''

''ஆமாம், சாமி, விளைநிலங்கள் எல்லாம் வீடுகள் ஆகி கொண்டு இருக்கின்றன, இப்படியே போனால் இந்த பூமி தரிசாக மாறிவிடுமே, மக்கள் உணவுக்கு மிகவும் கஷ்டப்படுவார்களே, அதை நினைத்துதான் வேதனை அடைந்தேன்''

''பக்தா, உனது வேதனை புரிகிறது, எனினும் இந்த வேதனை எல்லாம் ஆகாது, எல்லாம் அந்த விஷ்ணு பார்த்து கொள்வான்''

''விளைநிலங்களை காப்பாற்ற தெரியாத விஷ்ணு, என்ன விஷ்ணு''

''பக்தா, விஷ்ணுவை கோபித்து என்ன லாபம், நமது மானிடர்களின் செயல்பாடு அப்படி, என்ன செய்வது''

''சாமி, இறைவன் நினைத்தால் எல்லாம் நடத்தலாமே''

''நடத்தலாம், நினைக்க வேண்டுமே, சரி, ஒரு பாசுரம் பற்றி நிறைய யோசனையில் இருந்தாயே''

''ஆமாம், சாமி, நல்ல வேளையாக நினைவுபடுத்தி விட்டீர்கள், பச்சை மாமலைபோல் மேனி எனும் பாசுரம் தான் என்னை நிறைய யோசிக்க வைத்தது''

''அது அற்புதமான பாசுரம் ஆயிற்றே, அதில் என்ன ஐயப்பாடு''

''அதெப்படி பச்சை மாமலைபோல் மேனி?''

''காக்கை சிறகினிலே நந்தலாலா எனும் பாடலில் கூட ஒரு அற்புதம் இருக்கிறது. நீல வண்ண கண்ணா வாடா எனும் பாடலில் கூட அற்புதம் இருக்கிறது''

''சற்று விளக்கமாக சொல்லுங்கள் சாமி''

''பக்தா, இப்போதெல்லாம் உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது, முன்னர் எல்லாம் நான் வந்தால் என்னை விரட்டுவதில் என் மீது வெறுப்பு காமிப்பதில் மட்டுமே குறியாய் இருப்பாய், ஆனால் இப்போதோ பொறுமையை கடைபிடிக்கும் வழக்கம் வைத்து இருக்கிறாய்''

''சாமி, விளக்கம் சொல்லுங்கள்''

''இந்த பூமியில் கரியமில வாயு மட்டுமே நிரம்பி இருந்தது. அப்போது இந்த விஷ்ணுவின் உடல் கரியநிறம் கொண்டு இருந்தது. வெறும் கரியமில வாயுவை உட்கொண்டே வந்த விஷ்ணு தனது செல்களில் குளோரோபிளாஸ்ட் அதாவது தற்போது செடி, மர இலைகளில் எல்லாம் இருக்குமே அது போல கொண்டு வந்தார். அப்படி கொண்டு வந்த சமயத்தில் அவரது உடல் பச்சை நிறமானது. அப்படி நமது பூமியில் இருந்த கரியமில வாயு எல்லாம் இந்த குளோரோபிளாஸ்ட் மூலம் ஆக்சிஜன், குளுக்கோஸ் எல்லாம் உருவாக்கினார். இந்த ஆக்சிஜன் குறைவான போது அவரது உடல் நீல வண்ணம் ஆனது. எப்போது பச்சை வண்ணம் கொண்டாரோ இதே சமயத்தில் தான் ஆர்கேபாக்டீரியா, சையனோபாக்டீரியா எல்லாம் தோன்றியது. அவைகளும் இந்த கரியமில வாயுவை உட்கொண்டு உணவு உற்பத்தி செய்தன. இப்படி உருவானபோது நீராவி எல்லாம் குளிர்ந்து தண்ணீராக மாறியது. அப்போது தண்ணீரில் பாசிகள் உருவான. அந்த பாசிகள் கூட பச்சை வண்ணம் கொள்ள ஆரம்பித்தது. அதற்கு பின்னர் மரம் செடிகள், கொடிகள் எல்லாம் தோன்றியதும், விலங்கினங்கள் உருவானதும் நீ அறிந்தது தானே''

''செவ்வாய் கிரகத்தில் சென்று எதற்கு விஷ்ணு பச்சை வண்ணம் கொள்ள வில்லை சாமி"

''அங்கே இன்னும் கரிய நிறமாகத்தான் இருக்கிறார் பக்தா''

''சாமி, பச்சை மாமலைபோல் மேனிக்கு ஏதோ விளக்கம் சொல்கிறீர்களே, கரியமில வாயு இந்த பூமியில் அதிகரிப்பதாக சொல்கிறார்களே''

''பக்தா, இந்த பூமியில் எல்லா விளைநிலங்களும் மாறிவிடும் எனில் மனிதர்களில் உள்ள தோல் செல்கள் எல்லாம் குளோரோபிளாஸ்ட் உருவாக்கிக் கொண்டு தனக்கு தானே உணவு தயாரித்து கொள்ளும். அதனால் எதற்கும் கவலைப்பட வேண்டாம். கரியமில வாயு அதிகரிப்பின் இந்த குளோரோபிளாஸ்ட் கொண்ட செல்களுக்கு கொண்டாட்டம் தானே. இந்த பூமி எத்தகைய இன்னல்களுக்கு உட்பட்டாலும் மீண்டும் வளமாகவே இருக்கும்''

''சாமி, இப்படி நீங்கள் பேசுவதுதான் எனக்கு வெறுப்பை வரவழைக்கிறது''

''பச்சை மாமலைபோல் மேனி''

சாமியார் பாடியதை கேட்டு விழித்துப் பார்த்தேன். சாமியார் அங்கே இல்லை. வீட்டில் தேடினேன் அம்மா, அப்பா கூட இல்லை. வீட்டின் வெளியில் வந்து பார்த்தேன். அம்மாவும், அப்பாவும் வீட்டுத் தோட்டத்தில் மரங்கள் நற்றுக் கொண்டு இருந்தார்கள். நானும் வேகமாக அவர்களுக்கு உதவப் போனேன். 

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ரசித்தேன்...

அன்புடன் DD

Yaathoramani.blogspot.com said...

நாமும் நம்பிக்கையை நடவு செய்வோம்
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

Radhakrishnan said...

நன்றி தனபாலன் மற்றும் ஐயா