Friday 21 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 5

கிராமம் நோக்கிய பயணம். மின்சார தட்டுபாடு பற்றி இதுவரை ஒன்றும் அறிய வாய்ப்பு இல்லை. சென்னையில் கால் வைத்ததில் இருந்து கிராமத்திற்கு வந்த ஒரு நாள் வரை மின்சாரம் நின்றதாக தெரியவே இல்லை. மின்சார வெட்டு என்றெலாம் பேசினார்களே என யோசிக்க தோணியது. ஆனால் அன்று இரவு பன்னிரண்டு மணி இருக்கும். மின்சாரம் வெட்டப்பட்டது. மின்சாரம் மீண்டும் ஒரு மணிக்கு வந்தது. இந்த வேளையில்  யுபிஎஸ் உதவியது. அடுத்தடுத்து மின்சாரத் தட்டுபாடு வெகுபாடு படுத்தியது. ஒருமுறை ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்தது. மறுமுறை அதுவும் கும்பாபிஷேக விழா செல்ல காலையில் எழுந்து தயாராக மின்சாரம் இல்லாமல் போனது. யுபிஎஸ் இருந்தும் உபயோகமின்றி இருந்தது. எப்பொழுது மின்சாரம் வரும் என காத்திருந்ததுதான் மிச்சம். 

தினம்தோறும் மதுரை பயணம். துணிக்கடைகள். பாத்திரக்கடைகள். வேறு என்ன சொல்ல. பல வருடங்கள் கழித்து ஒரு நாள் மாலையில் மீனாட்சி அம்மன் ஆலயம் சென்ற திருப்தி. பணம் எதுவும் கொடுக்காமல் சாதாரண வரிசையில் நின்று சென்றபோது அலாதி இன்பம். அப்போது கூட்டம் அவ்வளவாக இல்லை. கோவில் சுற்றி வந்தபோது சரியான கூட்டம். நல்லவேளை முன்னரே சென்று வந்தோம் என நினைத்துக் கொண்டோம். 

மதுரையில் கிளி ஜோசியரை தேடித் தேடி அலைந்ததுதான் மிச்சம். எங்குமே கிளி ஜோசியரை காண இயலவில்லை. கடைசிவரை கிளி ஜோசியமே பார்க்க இயலவில்லை. இந்த ஜோசிய அனுகூலங்கள் எல்லாம் ஒருவகையான பொழுதுபோக்கு. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இந்த ஜோசியம், நட்சத்திரம் எல்லாம் பித்தலாட்டங்கள், இதனால் நான் அடைந்த பாதிப்புகள் நிறைய என இந்த கிளி ஜோசியம் பற்றி பேசியபோது வெகுண்டு எழுந்த ஒரு மாணவியின் வார்த்தையில் எத்தனையோ அர்த்தங்கள் இருக்கத்தான் செய்தது.

இந்தியாவில் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் குறைவு என்று சொல்வார்கள். இதற்கு காரணம், உறவு, பந்தங்கள் எல்லாம் இருப்பதால் ஆறுதலுக்கு என இருப்பார்கள், அதன் காரணமாக மன அழுத்தம் வர வாய்ப்பு குறைவு என்பார்கள். ஆனால் இன்று மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவதிப்பட்டு கொண்டு இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். 

கேரளாவிற்கு பயணம். எங்கு சென்றாலும் ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் ஆகிவிடுகிறது. படகு வீட்டில் ஒரு நாள் தங்கிய அனுபவம் நன்றாகவே இருந்தது. அதற்கு முன்னர் பதநீர் குடிக்க வேண்டும் என பல நாள் ஆசையை கேரளா செல்லும்போது வழியில் காரை நிறுத்தி குடித்தோம். பதநீர் பதநீர் போன்றே இல்லை. பாட்டில்களில் அடைத்து விற்றார்கள். அளவுக்கு அதிகமாக குடித்ததால் வாந்தி எடுத்து அடுத்த இரண்டு நாட்கள் பெரும் அவஸ்தை தான். அதற்கு பின்னர் ஒரு முறை பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கதை எல்லாம் அப்பப்பா. விமான நிலையம் செல்வோமா, மாட்டோமா என பெங்களூர் நகருக்குள்ளேயே வழி தெரியாமல் இரண்டு மணி நேரம் செலவழித்தது. மதுரை - கோயம்புத்தூர் - பெங்களூர் - மதுரை. இரண்டே தினத்தில் சென்று வந்ததும் மூன்றாம் நாள் எங்கும் செல்ல முடியாத நிலை. 

என்றுமே செல்லாத குற்றாலம் இந்த முறை செல்ல வாய்ப்பு வந்தது. அருவிகளில் தண்ணீர் கொட்டிக் கொண்டு இருந்தது. குற்றாலத்தில் வந்து தங்கி விடலாமா என்கிற சீதோஷ்ண நிலை. ஒரு திருமணத்திற்கு சென்றபோது திருமணம் முடிந்த மறுகணமே மனிதர்கள் பறந்து போயிருந்தார்கள். 

சில நண்பர்கள் கோவித்து கொண்டார்கள். ஒரே ஒரு நண்பர் பல வருடங்கள் கழித்து வந்து பார்த்தார். பழைய கதைகள் பேசிய பொழுது நன்றாகவே இருந்தது. உறவினர்கள் எவரும் பார்க்க வேண்டும் என வரவில்லை. நானாக தேடி சென்று பார்த்த வரை மட்டுமே. 

இந்தியா என்றால் உறவுகள் , விருந்தோம்பல். திருவிழாக்கள். என்ன சொல்லி தந்தது இந்தியா என்று எண்ணி பார்க்கையில் என்ன நான் கற்று கொண்டேன் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. திருவள்ளுவர் சொன்னதுதான். கனியிருப்ப காய் கவர்ந்தற்று. இந்தியா என்றுமே நல்லதை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது. எடுத்துக் கொள்பவர்கள் மாறிவிட்டார்கள். 

முற்றும். 

5 comments:

ராஜ நடராஜன் said...

ஊர் அனுபவங்களா?வித்தியாசமாக இருந்திருக்குமே!

ஊருக்குள்ளேயே சுழல்பவர்களுக்கும்,இப்படி வெளியே இருந்து வந்து திடீரென உணர்வதற்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றன.

ராஜ நடராஜன் said...

மதுரையில் கிளி ஜோஸ்யரைக் காணோமா!ஆச்சரியம்தான்.

bandhu said...

//உறவினர்கள் எவரும் பார்க்க வேண்டும் என வரவில்லை. நானாக தேடி சென்று பார்த்த வரை மட்டுமே.//
இதை நாங்களும் உணர்ந்தோம். அவரவருக்கு அவரவர் வாழ்க்கையை பார்க்கவே நேரம் கிடைப்பதில்லை. தொ(ல்)லை காட்சி, அலுவலகம் சென்று திரும்பும் பெரும் பாடு (பஸ் கூட்டம், ட்ராபிக்), போன்றவை கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை எல்லோரிடமும் இருந்து திருடிக்கொண்டுள்ளது!

தமிழ் காமெடி உலகம் said...

மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது உங்கள் பயணம்...பகிர்வுக்கு மிக நன்றி....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Radhakrishnan said...

ஆமாம் நடராஜன். ஊரிலேயே இருப்பது வேறு. ஊரை விட்டு வெளியில் பல வருடங்கள் இருந்துவிட்டு ஊருக்குள் செல்வது வேறு.

ஆமாம் பந்து. மிகவும் சரிதான்.

புதிய தொலைகாட்சியா மலர்?