Wednesday 29 June 2011

பிரபஞ்சமும் ஐந்தும்

வெளிச்சத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இருட்டில் சென்று விழுந்தது பந்து. விழுந்தது என்பதைவிட தொலைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இனி இருட்டில் வெளிச்சம் பரவினால் தான் கண்ணுக்கு தெரியும் பந்து. சூரியன் வரும் வரை காத்திருப்பதா? ஏதேனும் சுடர் ஏற்றிக்கொண்டு தேடி அலைவதா?

எந்த நட்சத்திரங்களும் தென்படவில்லை. நிலவு கூட நிசத்தில் இல்லை என்பதுதான் பெரும் கவலையாக இருந்தது.

'இருட்டுனப்புறம் என்ன விளையாட்டு' சற்று நேரத்திற்கு முன்னர் தான் அம்மாவின் சத்தம் செவிப்பறையை மோதி சென்றது.

இருட்டில் பந்தை தேடும் பொருட்டு செல்வதின் மூலம் நானும் தொலைந்து விடும் வாய்ப்பு இருப்பதாகவே மனம் பயமுறுத்தியது.

அந்த பயமுறுத்தல் கொடுத்த எண்ணம், காலையில் எடுத்து கொள்ளலாம் எனும் சின்ன நம்பிக்கையுடன் படுக்க நினைத்தபோது தூக்கம் பிடிக்கவே இல்லை.

'டார்ச் லைட்' இருக்கா எனும் முனகல் வார்த்தைகள் எவருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை என் சகோதரன் உட்பட. அனைவரும் உறங்கியதன் அடையாளம் தெரிந்தது.

இருட்டான அறையில் தேடி சென்று விளக்கொளி பொத்தானை அழுத்தியபோது மனதில் வெளிச்சம் பரவியது. முதன் முதலில் இவ்வுலகம் இருட்டில் தான் இருந்தது. காலையில் படித்தது மனதில் ஓடிட 'லைட்ட எதுக்கு இப்போ போட்ட' என உறக்கத்தில் இருந்து விழிக்காத வண்ணம் என் சகோதரன் கேட்டதும் 'பந்து தொலைஞ்சி போயிருச்சி' பளிச்சென வந்து விழுந்தன வார்த்தைகள்.

'பந்தை தொலைச்சிட்டியா' படுக்கையில் இருந்து அவன் எழுந்து வந்தது எனக்குள் பயத்தை அதிகரித்தது. மற்றவர்கள் உறங்கி கொண்டுதான் இருந்தார்கள்.

வந்ததும் பளாரென கன்னத்தில் அவனது கைகள் விழுந்தது. அவனது அடுத்த கை விளக்கினை அணைத்தது. 'எத்தனை கஷ்டப்பட்டு இந்த பந்தை வாங்கினேன், உன்னை யாரு என்னை கேட்காம எடுத்து விளையாட சொன்னது, வா தேடு, காலையில எவனாச்சும் எடுத்துட்டு போயிருவான்' என கதவினை மெதுவாக திறந்து என்னை வெளியே தள்ளிவிட்டதில் அழுகையின் ஈரம் காய தொடங்கியது.

இருட்டில் விளக்கொளி பொத்தான் தேடிய கைகள். விளையாடிய இடத்தில் இருந்து ஒரு திசை நோக்கி தரையில் காலை உதைத்தபடி உட்கார்ந்து நடந்தபோது கன்னத்தில் வலித்தது. தொலைந்து போய்விடுதல் குறித்த சிந்தனை அகன்றது. உடன் தேடினான் சகோதரன். 'இனிமே பந்தை தொட்ட' அவனது மிரட்டல்.

கைகளை தரையில் பரப்பியபோது கையில் பட்டது கல். மீண்டும் தேடினேன் அகப்பட்டது பந்து. 'பந்து கிடைச்சிருச்சி' என்றே பரவசமானேன். 'கொண்டா' என வாங்கியவன் மீண்டும் அதே வாசகம் சொன்னான்.

அன்றிலிருந்து அந்த பந்தினை தொடும் பாக்கியம் கிட்டவில்லை. அழுது அழுது ஒரு புது பந்தினை வாங்கினேன். அன்று நன்றாக விளையாடினேன். வீடு திரும்பும் வழியில் ஒருவர் 'புது பந்தா' என்றார். 'ஆம்' என தலையாட்டினேன்.

பந்து தொலைத்த கதையை சொன்னேன்.

சிறுவனாக இருந்த என்னை பார்த்து நீ வாழ்வில் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என தொடங்கினார்.

முதலில் பிறர் என்ன சொல்கிறார்கள் என கவனமாக கேள். கவனமாக கேட்பது என்பதுதான் மிகவும் முக்கியம். நீ கேட்கும் திறனை வளர்த்தால் தான் கற்று கொள்ளும் திறன் வளரும். பிறர் சொல்வது பிடிக்கவில்லை என்றாலும் என்ன சொல்கிறார்கள் என்பதை கேள். எதற்கு இப்படி முடிவை எடுத்தார்கள் என்பதை அவர்கள் சொல்வதில் இருந்து அறிய முடியும். நீ பொருட்படுத்தாத பிறர் சொன்னாலும் கேள். இப்படி கேட்கும் திறன் வளர்த்து கொள்வது மிக மிக கடினம். அதற்கு நிறைய பொறுமை வேண்டும். ஆனால் அதுதான் நீ கற்றுக் கொள்ளும் பாடம்.

இரண்டாவதாக கேள்வி கேட்கும் திறனை வளர்த்து கொள். விதண்டாவாதமாக  இருக்கும் என கேள்வி கேட்பதை தவிர்த்து விடாதே. நேற்று சரியாக நடக்கும் விசயம் இன்று சரியாக நடக்கும் என சொல்லிவிட இயலாது. சரியாக கேள்வி கேட்டு கொள்வதன் மூலம் நடந்த தவறுகளை களையலாம். வாழ்வில் ஒரு தெளிவு வேண்டுமெனில் கேள்வி கேட்பதில் தான் இருக்கிறது. என்ன சொன்னாய்? இவ்வுலகம் இருட்டில் தான் இருந்தது. இதை மீண்டும் தெளிவுபடுத்தி கொள்ள கேள்வி கேட்டுப்பார்.

மூன்றாவதாக உனது உள்ளுணர்வு என்ன சொல்கிறது என கேள். அது சரியாக இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு நல்ல பாதையை அது நிச்சயம் காட்டும். அந்த உள்ளுணர்வினை வளர்த்து கொள்ளும் பக்குவம் வளர்த்து கொள்.

நான்காவதாக நீ என்ன கற்று கொள்கிறாயோ அதை உனது குழந்தைகளுக்கு போதிக்கும் நிலையை அடைகிறாய். நீ உனக்காக செய்கிறாயா, அல்லது உனது குழந்தைகளுக்காக செய்கிறாயா என்பதை அந்த சூழலில் உன்னை கேட்டு கொள். நீ படிப்பது, விளையாடுவது என்பது உனக்கா, பெற்றோருக்கா என்பதை தெளிவுபடுத்தி கொள். உனக்காக நேரம் ஒதுக்க கற்று கொள்.

ஐந்தாவதாக 'எதுவுமே முன்னர் இருந்ததை விட இப்போது மோசமாக இருக்கப் போவதில்லை' என்பதில் திடமாக இரு. எந்த ஒரு சோதனை வந்தாலும், அதை முறியடித்து வாழும் பக்குவம் எல்லா உயிரினங்களிலும் உண்டு. அந்த பக்குவத்தை வளர்த்து கொள்ளும் தைரியம் வேண்டும். புதிய புதிய வாய்ப்புகளை உருவாக்கிட முனைபவர்க்கு பழையவை மோசமாக இருக்கப் போவதில்லை. அழுவதில் இல்லை சிறப்பு. அழும் கண்களை துடைப்பதில்தான் இருக்கு சிறப்பு.

இத்தனை நேரம் சொன்னதை கவனத்துடன் கேட்டாயா என்றார். 'ம்' என்றேன். திருப்பி சொல் என்றார். அவர் சொன்னதை அப்படியே சொன்னேன். நான் சொன்னதை கேள்வி கேட்க எதற்கு மறுக்கிறாய் என்றார்.

நீங்கள் பெரியவர்... நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளது என்றேன். பயனுள்ளது எனினும் கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால் எவரும் இந்த இரண்டாவது நிலையை அடைய துணிவதில்லை என்றார்.

நீ தொலைத்த பந்தினை எங்கு தொலைத்தாய் என்று தெரிந்ததால் எளிதாக தேடி கண்டு கொண்டாய். நீ தேடியபோது உனக்கு தேவையில்லாத கல்லும் அகப்பட்டது. அதை பந்து என்று எதற்கு நீ நினைக்கவில்லை.

இப்பிரபஞ்சத்தில் உண்மை தொலைந்து போய்விட்டது. அது எவர் தொலைத்தது, எப்படி தொலைந்தது என ஒரு விபரமும் இல்லை. இப்பொழுது கையில் அகப்படும் விசயம் கொண்டு உண்மை அதுவென இதுவென உரைக்கிறார்கள், நீ கேள்வி கேள் என சொல்லிவிட்டு நடந்தார்.

அப்பொழுது ஒரு கேள்வி எழுந்தது.கேட்டு விடவேண்டும் என நினைத்து பின்னர் கேட்காமல் பந்தை வானத்தை நோக்கி எறிந்தும், பின்னர் அதைப் பிடித்தும் வீடு வந்து சேர்ந்தேன்.

'இவ்வளவு நேரம் விளையாடிட்டா வர, ஹோம் வொர்க் செய்யனும், பாட்டு பழகனும், அக்கறையே இல்லையா' மொத்தென்று முதுகில் விழுந்தது அடி.

சிறுவனாகிய எனக்கு விளையாட சுதந்திரம் வேண்டும். எனது பந்து தொலைந்து விடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுதான் எனது தேவை.

முதன் முதலில் மட்டுமல்ல எப்போதுமே இவ்வுலகம் இருட்டில் தான் இருக்கிறது. புத்தகத்தில் எழுதப்படாத வாசகத்தை மிகவும் சத்தம் போட்டு படித்தேன்.

No comments: