Saturday 25 June 2011

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 2


இதற்கு அனைத்துக்கும் விடையாய் அமைவது எது தெரியுமா? மனிதரின் எண்ணங்கள்.

இது எங்களுக்கு தெரியாதா? என உங்கள் மனம் நினைத்தால் அதுதான் இந்த சிந்தனைக்கு கிடைத்த வெற்றி. ஏனெனில் வேறு ஏதேனும் இருக்க கூடுமோ என மனம் கணக்கு போடத் தொடங்குகிறது. என்னவாக இருக்க கூடும் என்பதில் மனதின் எண்ணங்கள் அலைபாயத் தொடங்குகிறது. இது ஒரு சாதாரண மனிதரின் மன நிலை.

சற்று அதிகப்படியான சிந்தனையாளரின் மனநிலை என்ன செய்யும்? 

என்னவாக இருக்க கூடும் எனும் வினாவில் இருந்து வெளியேறி இதுவாகத் தான் இருக்கும் என கணக்கு பண்ண தொடங்குகிறது. பல விசயங்களை இதனுடன் இணைத்து கொள்கிறது. இதுவாகத்தான் இருக்கும் என்பதற்கான விசயத்திற்கு உறுதுணையாக இருப்பவைகளை கணக்கில் எடுத்து கொண்டு திட்டவட்டமாக இதுதான் என நினைத்து விடுகிறது. 

ஒருவர் நமக்கு தீங்கு இழைக்கிறார். இது நிகழ்கால நிகழ்வு. எதிர்காலத்தை நாம் தீர்மானிக்க தயாராகிறோம். எப்படி? இந்த மனிதர் கெட்டவர். எனவே அவர் எதிர்காலத்திலும் கெட்டவராகவே இருப்பார் எனும் ஒரு எண்ணம் உறுதியாகிறது.

இப்படி ஒவ்வொரு விசயத்திலும் எதிர்காலத்தை தீர்மானிக்கிறோம். இதே போலவே இறந்தகாலமும் தீர்மானிக்கப்படுகிறது. நிகழ்கால நிகழ்வுகளை கொண்டே எதிர்காலமும், இறந்தகாலமும் நிர்ணயிக்கப்படுகிறது. 

இப்படித்தான் இந்த உலகம் நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு விசயங்கள் மனிதர்களின் மனதில் ஊசலாடி கொண்டு இருக்கின்றன. இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுவது இதனால்தான். 

'இப்படித்தான் எனது வாழ்க்கை இருக்கும்' என வாழ்ந்து முடித்தவர்கள் உண்டு. இல்வாழ்க்கை. துறவற வாழ்க்கை, இதுவும் அற்ற, அதுவும் அற்ற வாழ்க்கை என மனிதர்களின் வாழ்க்கைதனை பிரிக்கலாம். அதே வேளையில் இப்படி பிரித்துதான் வாழ வேண்டிய கட்டாயம் கூட நமக்கு இல்லை. ஆனால் அப்படித்தான் இருக்கிறது. 

ஒரு மனிதரின் சராசரி ஆயுட்காலம் சுமார் அறுபது வயதில் இருந்து நூறு வயது வரை வைத்துக் கொள்வோம். இந்த நூறு வருட காலத்தை ஒருவர் எப்படி வாழ்ந்து முடிக்கிறார், என்ன செய்து முடிக்கிறார் என ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வரலாறு எழுதி வைப்போம். அப்படி எழுதப்படும் வரலாறுகளில் கிட்டத்தட்ட தொன்னூற்றி ஐந்து சதவிகிதம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மீதமுள்ள ஐந்து சதவிகித வரலாறு மட்டுமே மிகவும் வித்தியாசமாக இருக்கும். யார் அந்த மனிதர்கள்? 

புராணங்களில் புனையப்பட்ட மனிதர்களா? இதிகாசங்களில் எடுத்துரைக்கப்பட்ட மனிதர்களா? வாழ்ந்து கொண்டிருக்கும் நாமா?  யார் அந்த முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்? 

(தொடரும்) 


No comments: