Saturday 16 April 2016

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு -9

பகுதி 8   பகுதி 7 பகுதி 6  பகுதி 5 பகுதி 4  பகுதி 3 பகுதி 2 பகுதி 1

9. 

ரகுராமன் தான் சொன்ன நாளுக்கு முன்னதாகவே கல்லூரியில் இருந்து தோணுகாலுக்குச் சென்றான். அவனைப் பார்த்த அழபா, பழனிச்சாமி சுப்பிரமணியன் என எல்லோரும் சந்தோசம் கொண்டார்கள். எத்தனை நாள் இருப்ப என்றவர்களுக்கு சனிக்கிழமை காலையில் கிளம்ப இருப்பதாக கூறினான். அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. 

ரகுராமன் முதலில் தனது ஊரில் உள்ள அனைவரையும் தனது பக்கம் திருப்ப வேண்டும் என ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஊரின் மந்தையில் அனைவரையும் வெள்ளிக்கிழமை இரவு வருமாறு கூறினான். பெயர், சின்னம், கொடி  எல்லாம் தனது மனதில் பதித்துக் கொண்டு தன்னோடு எடுத்துக் கொண்டான். ஆனால் எவருமே அவனது பேச்சை கேட்டது போலத்  தெரியவில்லை. இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என ஊரில் இருந்தவர்கள் சத்தம் போட்டார்கள். எதையும் பொருட்படுத்தாமல் ரகுராமன் சின்ன கூட்டமாவது வர வேண்டும் எனத் தொடர்ந்தான். ரகுராமனுடன் கிரிக்கெட் விளையாடும் நபர்கள் ஆதரவு தருவதாக சொன்னார்கள். 

அன்று இரவு கொஞ்ச நபர்கள் வந்து மந்தையில் அமர்ந்தார்கள். ரகுராமனின் வீட்டில் அனைவருமே வந்துவிட்டார்கள். ரகுராமன் ஊருக்குப் பொதுவான ஒலிப்பெருக்கி மூலம் பேச ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் மக்கள் வந்து சேர்ந்தார்கள். 

''நான் மக்கள் ஒற்றுமை இயக்கம் அப்படின்னு கட்சியை இந்த இடத்தில் வைச்சி நான் ஆரம்பிக்கிறேன், அதுக்கு உங்களுடைய ஆதரவுதான் வேண்டும். கட்சியோட சின்னம் இதயம். இதை எப்படியும் நடத்திக்காட்டுவேன். நம்ம ஊருல இருக்க எல்லாரும் இனிமே இந்த மக்கள் ஒற்றுமை இயக்கத்தோட உறுப்பினராக மாறனும்''

கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்தார். 

''கால காலமா நாங்க ஆதரிக்கிற கட்சியை விட்டுட்டு வானு சொன்னா நாங்க வர முடியுமா? அதுவும் நீ சின்னப்பையன் வேற உனக்கு எல்லாம் என்ன அரசியல் தெரியும்னு கட்சி ஆரம்பிக்கிற. பேசாம எங்க நேரத்தை நீ வேஸ்ட் பண்ணாத''

ரகுராமன் அவரை அமரச் சொன்னான். அவரும் மறு பேச்சு பேசாமல்  அமர்ந்தான்.

''நீங்க வேற வேற கட்சி உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனா நான் நம்ம ஊருக்காரன் ஒரு கட்சி ஆரம்பிக்கிறப்ப நம்ம ஊரே என்னை ஏத்துக்கலைன்னா அப்புறம் எப்படி மத்த ஊர்க்காரங்களை எல்லாம் சம்மதிக்க வைக்கிறது. நம்ம ஊர்த்தலைவர் ராமசுப்பு ஐயா என்னோட கட்சியை ஆதரிக்கனும். அப்படி நீங்க ஆதரிக்காட்டியும் பரவாயில்லை இதுதான் கட்சி, இதுதான் சின்னம். கட்சிக்கொடி ஒரு வெள்ளை நிற பின்னணியில் ஒரு சாம்பல் நிற புறா''

ராமசுப்பு எழுந்தார். 

''நீ கட்சி ஆரம்பி ஆதரவு கேளு ஆனா ஆதரிக்கிறதா, வேணாமானு அவங்க அவங்க முடிவு செய்யட்டும், என்னோட கட்சியை விட்டுட்டு நான் மாறமாட்டேன். நான் கிளம்பறேன்''

ஊர்த் தலைவர் ராமசுப்பு கிளம்பிச் சென்றதும் அவரோடு பலரும் கிளம்பிப் போனார்கள். இன்னும் பலர் அமர்ந்தபடியே இருந்தார்கள். 

''அடுத்த வருசத் தேர்தலுக்குள்ள நம்ம கட்சியை பெரிசாக்கி எல்லாத் தொகுதியிலும் தனிச்சி நிக்கணும். எந்த கட்சிகாரங்களையும் நாம திட்டிப் பேசக்கூடாது. நீங்க எல்லோரும் வந்து இந்த கட்சி பெயர், சின்னம், கொடி இதை எல்லாம் ஆசிர்வதிக்கணும்''

பலர் எழுந்து வந்து ஆசிர்வாதம் பண்ணினார்கள். ரகுராமனின் அம்மா, அப்பாவும் வந்தார்கள். 

''சொல்லச் சொல்ல கேட்க மாட்ற, ஆனா முடிவு பண்ணிட்ட அதுக்கான வழியைப் பாரு''

ரகுராமனின் அப்பாவின் வார்த்தை அவனுக்குள் பெரும் பலம் ஒன்றை உருவாக்கியது. ரகுராமன் தனது நண்பர்களை எல்லாம் அழைத்தான். 

''ஒவ்வொரு சனிக்கிழமை இங்கே வருவேன். நீங்க என்ன பண்ணனும்னா நம்ம ஊரை சுத்தமா வைச்சிருக்கணும், ஒருத்தருக்கு உதவினா ஓடோடிப் போய்  செய்யணும். கிரிக்கெட் விளையாடறது எல்லாம் மறந்துருங்க. காசு விசயத்தில் சரியா இருங்க. கல்குறிச்சி, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி அப்படின்னு முதலில் போவோம்''

அழகர்பாண்டி குறுக்கிட்டான். 

''அருப்புக்கோட்டை வேணாமா''

''போவோம், புதிய கட்சி உதயம்னு ஒரு பெரிய விளம்பரம் தருவோம்''

''பணம் செலவாகுமே, நீ வேலைக்குப் போனா பரவாயில்லை, படிக்க வேற செய்ற''

''விவசாய நிலத்தில வர பணம் கொஞ்சம்  ஒதுக்குவோம், நீங்க எல்லாம் வேலை செய்ற பணம் இதுல போடுவோம். நமக்கு ஆதரவு தர பெரியவங்க எல்லாம் கட்சி உறுப்பினர்களாக மாத்துவோம்''

எல்லாம் விபரமாக சொல்லி முடிக்க இரவு பத்து ஆனது. ரகுராமன் வீட்டிற்குச் சென்றான். 

''விளையாட்டுத்தனமில்லை, இப்பவே உனக்கு எதிரிங்க தயாராகி இருப்பங்க''

அப்பாவின் எச்சரிக்கை மனதில் ஓடியது. எவரைப் பற்றியும் குறை சொல்லாமல் மக்களுக்கு நிறை செய்வதே பணி  என்று இருந்தால் எதற்கு எதிரிகள் உருவாகப் போகிறார்கள் என யோசித்தான் ரகுராமன். 

ஊரில் இருந்தே தொடங்க வேண்டும் எனும் தனது எண்ணத்தால் தன்னுடன் சண்முகப்பிரியாவை அழைத்து வரவில்லை. நாளை சண்முகப்பிரியா ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் எல்லாம் சிறப்பாகச் செய்ய வேண்டும் என உறங்க ஆரம்பித்தான். 

மக்களுக்காக உழைக்கும் நோக்கம் உடைய கட்சிகள் தனித்தனியாக இருப்பதன் அவசியம் என்ன, கொள்கைகள் அற்ற கட்சிகள், கொள்கைகள் வெவ்வேறான கட்சிகள் கூட்டணி என அமைத்துக் கொள்வதன் அவசியம் என்ன? மக்கள் எப்போதும் தமது சிந்தனைகளை தமக்குள் மட்டுமே வைத்துக் கொள்கிறார்கள். 

(தொடரும்) 

Wednesday 13 April 2016

பேய் மலை பாகுபலியும் செவ்வாய் கிரகமும் - 2

இப்படியொரு மரங்களை நான் கண்டது இல்லை கீழே காலுக்குத் தட்டிய பழங்களை எடுத்து உண்டேன் சுவையாக இருந்தது காட்டைகடக்க வேண்டியது இல்லை காடு அப்படியே மலையாக மாறுவதை உணர்ந்தேன் விலங்குகள் சத்தம் ஏதுமில்லை பறவைகள் கூட காணவில்லை காற்று வீசியது திரும்பி விடலாம் எனதோணியது அந்த நொண்ணன் இந்நேரம் வந்து இருப்பார் எந்தஎல்லையை கடக்கக்கூடாது என சொன்னார்களோ கடந்து இருந்தேன் விறுவிறுவென அங்கிருந்துதோட்டத்திற்கு ஓடியாந்தேன் நொண்ணன் இன்னும் வரவில்லை படுத்தமாத்திரத்தில் எந்திருடே எங்கட போன என்றார் பழம் சாப்பிடுணே என தந்தேன் எடே என்ன நீ சொல்லசொல்ல மலைக்குப் போயிருக்க என பழம் வாங்கி கடித்தவர் இனிப்பா இருக்குடே என்றதும் எல்லை கடந்ததை சொன்னேன் நிசமாவாடே ஆமாணே என்றதும் சரி வாடே வேலையை செய் என்றார் இந்த சேதிஊருக்குள் பரவியது என்னை எல்லோரும் வந்து கேட்டார்கள் பொய் பேசாதடே என்றார்கள் சிலர் கூடவாங்க என அழைத்தேன்.

ஒருவரும் வரத்தயார் இல்லை அந்த பொட்டி என்னிடம் வந்து எதுக்குடே ஊரை ஏமாத்துற நாசமா போவ என திட்டினார் ஏ பொட்டி உன் நொப்பா செத்தாரு அதுக்கு என்னைத் திட்டுவியா? என் அப்பா மட்டும் சாகலைடே ஊருல நிறைய பேரு போயி செத்தாங்க உன் தாத்தா பாட்டி கூடதான் செத்தாங்க அதான் அந்த எல்லை போட்டது என்னமோ வீரன் கணக்கா பேசற என பொட்டி சொன்னதும் நான் கொண்டு வந்த பழம் ஒன்று தந்தேன் போடா கிறுக்குப்பயலே மலைக்குப் போனானாம் என சொல்லி நடந்தது. ஏ பொட்டி போனவங்க திரும்பதான வரலை செத்தாகனு சொல்ற அங்குட்டு எங்கேனாலும் போயிருக்கலாம்ல பேசுவடே தொலைஞ்சி போறது திரும்பக்கிடைக்காதுடே என்றபடி மண்ணை வாரி தூற்றியது சாகத்தான போற என்னோட வா பொட்டி எல்லையை கடந்து காட்டுறேன் என சொன்னதும் நாலைஞ்சு பொணம் அந்த எல்லைக்கு கிட்ட கிடந்துச்சு ன கதை சொன்னது நான் அடுத்தநாள் கிளம்பத்தயார் ஆனேன் எடே பத்திரமா வந்துடுடே என நொண்ணன் சொன்னார் புளிச்சாதம் கட்டிக்கொண்டு கிளம்பினேன் வீரனாக உணர்ந்தேன் அடுத்த தோட்டம் கடந்தபோது இனிமே திரும்பமாட்ட என மொமா சொன்னார் திரும்பினா நீ செத்துரனும் என நடந்தேன் எல்லையைத் தொட்டேன் கைகால்கள் நடுங்கியது பின்வாங்கினேன் இந்த எல்லையை கடப்பது பற்றி யோசிக்காமல் ஓடித் தாவினேன் வியர்த்தது செடிகளுக்கு மத்தியில் அமர்ந்தேன் மரவாசனையானது பலமாக இருந்தது பூ வாசனை இலை வாசனையைவிட மர வாசனையை நுகர்ந்தேன் தண்ணீர் குடித்தேன் உயர நடக்க ஆரம்பித்தேன் மர வாசனை மாற வேறொரு வாசம் லேசாக வர ஆரம்பித்தது தடுமாற ஆரம்பித்தேன் உடலுக்குள் ஏதோ ஊர்வது போல இருந்தது சட்டென்று கீழே குதித்தேன். மரவாசனை அடிக்க உடல் சற்று சரியானது இதைத்தான் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

நிச்சயம் ஏதோ ஒன்று இத்தகைய செயலைச் செய்கிறது என அறிவற்ற மூளைக்கு எட்டியது முகத்தை துணியால் மூடி மீண்டும் செல்ல நினைத்து பக்கவாட்டில் நடந்தேன் துணி விலக்கியபோது எவ்வித வாசமும் இல்லை அதே அளவில் நடந்து சென்றேன் மேலே ஏற முடிவு செய்து ஏறியபோது அதே வாசம் அடித்தது கீழே உருண்டேன் பேச முயற்சித்தபோது பேச வரவில்லை நினைவு எல்லாம் இருந்தது கை கால்கள் மரத்துப் போன உணர்வு அசைத்துப் பார்த்தேன் அசைந்தது மெதுவாக ஊன்றி எழுந்து கீழ் நோக்கி நடந்தேன் பேச முடியவில்லை கைகால்களை வேகமாக ஆட்ட இயலவில்லை காட்டினைத் தாண்டி வந்தபோது சற்று ஓரளவு நிம்மதியாக இருந்தது ஆனால் பேச்சு மட்டும் தொலைந்து போயிருந்தது அழுகையாக வந்தது நடந்து தோட்டம் கடந்தபோது என்னடே ஒருமாதிரி இழுத்து நடக்கற என மொமா சொன்னபோதுதான் பார்த்தேன் இடது காலை இழுத்து இழுத்து நடந்தேன் அந்ந வாசம் என்னை ஏதோ செய்துவிட்டது பதில் சொல்ல நினைத்தும் சொல்ல இயலாது.

தோட்டத்தில் சென்று படுத்தேன் இம்முறை எதுவும் எடுத்து வரவில்லை கொண்டு போன தண்ணீர் புளிச்சாதம் எல்லாம் அப்படியே போட்டபடி வந்துவிட்டேன் எடே எந்திரு என காலையில் வந்து நொண்ணன் எழுப்பினார் பேச்சு வரவில்லை என்னடே ஆச்சு கை கால் எல்லாம் தடிச்சி இருக்கு என்றபோது சொல்லவே முடியாது நான் தவித்த தவிப்பு படித்து இருந்தாலாவது எழுதி காமிக்கலாம் பாவிப்பய மூளைக்கு தெரியலையே அழுது கண்ணீர் வடித்தேன் எழ முடியாமல் எழுந்தேன் வாடே என அழைத்து ஆஸ்பத்திரி போவோம் என்றார் செடியை பறித்து மலை போல கைகள் காட்டி நுகர்ந்து காண்பித்து இப்படி ஆனதாக சொன்னேன் எதுக்குடே இப்படி பண்ணின என திட்டியபடி ஊருக்குள் போனோம் அந்த பொட்டி வந்து, சொன்னேன் கேட்டியாடே முகரைக்கட்டை என்றதும் போயிரு பாட்டி கொன்னுருவேன் என நொண்ணன் திட்ட எனக்கு என்னால் தான் இப்படி என மனம் வலித்தது ஆஸ்பத்திரி போனோம் அலர்ஜி என மருந்து ஊசி போட்டார் பேச்சுதான் என்ன பண்றதுனு தெரியலை என்றார்.

சொல்லு என கைகாட்டினேன் மலைக்குப் போனது நுகர்ந்தது சொன்னதும் அது ஆவி மலை ஆச்சே என்றார் டொக்டர். இல்லை என தலை ஆட்டினேன் பின்னர் யோசித்தேன்ஆவி என்றால் வாயு தானே அப்படி எனில் ஏதோ விஷவாயு அந்த மலையில் இருக்குனு தெரிஞ்சி இருக்கு எனப்பட்டது ஐயோ படிப்பு வரலையே என கதற நினைத்தால் சத்தம் ஏதும் வரவில்லை ஏன்டே மலை மலைனு சொல்லி இப்படி பேச்சை தொலைச்சி நிக்கிற. பொட்டி சொன்னது நினைவுக்கு வந்தது தொலைஞ்சிட்டா திரும்பாது அப்போது அங்கே வந்த ஒருவர் நாங்க பேசினது கேட்டு இங்கன வாப்பா அந்த மலையில் தசைகளை செயல் இழக்கச் செய்யும் கொடிய மருந்து இருக்குனு ஒருத்தர் கண்டு பிடிச்சி இருக்காரு நமக்கு மயக்க மருந்து தருவாங்கல அதைப்போலவே அது வேலை செய்யுமாம் ஆனா இது அதிக விஷத்தன்மை வாய்சசது இவன் தப்பிச்சதுகூடஅதிசயமான விஷயம் தான் இதை ஏன் எங்களுக்கு முன்னமே சொல்லலை அதான் பேய் மலை ஆவி மலைனு போகாதீங்கனு சொல்லி இருக்குல ஒரு பறவையும் விலங்கும் அங்கன எட்டிப்பார்க்கறது இல்லை இவன் எதுக்குப் போனான் என்றதும் என்ன இருக்குனுப் பார்க்கப் போனான் என சமாளித்தார் நொண்ணன் ஏன்டே உனக்கு இதெல்லாம் எனநொண்ணன் சொல்ல படிப்பில் இதே அக்கறை காட்டி இருக்கலாம் என நினைத்தேன் சிலவாரங்கள் பிறகு ஒருவர் எங்க ஊருக்குள் என்னைத் தேடி வந்தார்.

வீக்கமானது குறைந்து இருந்தது. பேச்சு வரவில்லை. ஒரு மருந்தை கொடுத்தவர் ஒரு வாரம் சாப்பிடச் சொன்னார் அதிசயமாக எனக்கு பேச வந்தது உன்னோட குரல் தசையை அந்த வாயு ரொம்பத்தாக்கி இருக்கு என்றார் இனிமே அங்க போகாத அந்த மரங்களை அழிக்கச்சொன்னா யாரு கேட்கிறா என்றவரைப் பார்த்தேன் ஏன்டே உனக்காக அந்த ஆளை தேடி வரதுக்குள்ள போதும்னு ஆயிருச்சி என்றார் நொண்ணன் இப்போது எவரும் பேய் மலை ஆவி மலை என எவரையும் அந்த மலையை நான் அழைக்கவிடுவது இல்லை

(பேய்மலை பாகுபலி முற்றும் இனி செவ்வாய் கிரகம் தொடரும்)

Friday 8 April 2016

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 30

''ஆமா சார், என்ன சார் விஷயம்''

''இதோ இவனை உனக்குத் தெரியுமா?''

''தெரியும் சார், இவன் பேரு கோரன், என்னோடதான் படிச்சான், பாதியில படிப்பை விட்டுட்டான். நேத்துகூட எங்க வீட்டுக்கு வந்து இருந்தான். இப்போ கரியநேந்தல் அப்படிங்கிற ஊருல பிசினஸ் வைச்சி இருக்கிறதா சொன்னான்''
''இவனை யாரோ கொலை பண்ணி இருக்காங்க''

பயத்தில் முருகேசு நடுங்கிக்கொண்டு இருக்க காயத்ரி உடனே வந்தவள்
''சார், சுபத்ராகிட்ட நீங்க விசாரிச்சா எல்லாம் தெரியும், இவருக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை''

''நீ யாருமா''

''என்னோட பேரு காயத்ரி''

''சரி நீங்க ரெண்டு பேரும் எங்களோட கிளம்பி வாங்க, சுபத்ரா ஊருக்குப் போகலாம், ஊரு தெரியும்ல''

அதற்குள் முருகேசுவின் அம்மா என்னடா இதெல்லாம் என்றபடி வந்து நின்றார்கள்.

''அந்த பையனை இங்க தங்கிட்டுப் போகச் சொன்னோம் அவன் தான் கேட்கலை''

''நீ யாருமா இவனோட அம்மாவா, நீயும் கூட வாம்மா''

மறுப்பேதும் சொல்லாமல் மூவரும் உடன் சென்றார்கள்.

''சார்  இங்க சுபத்ராவோட சொந்தக்காரங்க இருக்காங்க ரங்கநாதனு பேரு என்னோட அக்காவைத்தான் கட்டி இருக்காங்க, அவங்களையும் விசாரிச்சிட்டு கூட்டிட்டுப் போகலாம்''

''அதெல்லாம் இருக்கட்டும், முதலில அந்த சுபத்ராவை விசாரிப்போம்''

சுபத்ராவின் ஊருக்குள் சென்றபோது இருவர் வந்து நின்றார்கள்.

''அந்த பையன் கொலைக்கேசு விஷயமாவ வந்து இருக்கீங்க, நாங்கதான் அவனை கொன்னுபோட்டோம். உங்களுக்கு தகவல் சொன்னதே நாங்கதான். இவங்களை கூப்பிட்டு வந்து இருக்கீங்க''

காவல் அதிகாரி கடும் கோபம் கொண்டார்.

''என்ன தைரியம்டா உங்களுக்கு''

''இருக்காத பின்ன, இந்த ஊரு மண்ணு அப்படி''

''தம்பி நீங்க மூணு பெரும் போகலாம். உன்னைத் தேடித்தான் கோரன் வந்தான்னு அவங்க அப்பா தகவல் சொன்னதாலதான் உன்னை விசாரிக்க வந்தோம்''.

கொலை செய்தோம் என சொன்ன அந்த இருவரையும் காவல் அதிகாரிகள் பிடித்து வைத்தார்கள்.

''சுபத்ரா யாருடா''

''எங்க ஊரு பொண்ணுதான், ஆனா அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நேத்து எங்க தோட்டம் பக்கம் வந்தான் அப்போ யாரு என்னனு  விசாரிச்சப்ப திமிரா பேசினான் அப்போ இவனுக்கும் எங்களுக்கும் நடந்த தகராறுல கொஞ்சம் வரம்பு மீறிப் போச்சு நாங்க அவனை தொலைச்சி கட்டிட்டோம் இதெல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம். புடிச்சிட்டுப் போயா, சுபத்ரா எங்க சுமித்ரா எங்கனுட்டு''

பலர் அங்கே கூடி நின்றார்கள். நீங்க எல்லாம் எப்பவுமே திருந்த மாட்டீங்களாடா என்று ஆளாளுக்குப் பேசியபடி நின்றார்கள்.

''நாங்க எதுக்கு திருந்தனும், அவனவன் ஒழுங்கா இருந்தா நாங்க ஒழுங்கா இருக்கப்போறோம்''

காயத்ரி முருகேசுவிடம் வா போகலாம் என்றாள் . கொஞ்சம் இரு என்றான் முருகேசு.

''சுபத்ராவை கூப்பிடுங்க''

சுபத்ரா அங்கு வந்து நின்றாள்.

''என்ன சார் என்ன விஷயம்''

''கோரன் அப்படின்னு ஒருத்தனை கொன்னு இருக்காங்க உனக்கு இதில சம்பந்தம் இருக்கா''

''எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை சார், அவனை எதுக்கு சார் நான் கொல்லனும் எனக்கு என்ன கொல்லுறது தான் தொழில்னு நினைச்சீங்களா''

''ஏன்டா போலிசு மூதேவி, நாங்கதான் கொன்னோம்னு இந்த இரண்டு பேரும் சொல்றாங்க பிடிச்சி வேற வைச்சி இருக்க அவகிட்ட விசாரிக்கிற''

அங்கிருந்த ஒருவர் சொன்னபடி கத்தியை ஓங்கி காவல் அதிகாரியை குத்த வந்தார். அவரை சிலர் பிடித்துக்கொண்டார்கள்.

''சரிம்மா நீ போம்மா''

''எதுவும் மேல் விபரம் தேவைப்பட்டா என்னை கூப்பிடுங்க சார்''

''என்ன நீ அந்த போலிசு  மூதேவிகளை  சார்னு சொல்லிட்டு இருக்க, அவனுகளையும் சேர்த்து வகுந்துட்டா சரியாப் போயிரும்''

இன்னும் அவர் சத்தம் இட்டுக் கொண்டு இருந்தார். அவரை எதுவும் காவல் அதிகாரிகள் சொல்லவில்லை.

காவல் அதிகாரிகள் கொலை செய்தோம் என சொன்ன இருவருடன் கிளம்பினார்கள்.

சுபத்ராவை நோக்கி முருகேசு சென்றான். காயத்ரி எவ்வளவோ தடுத்துப் பார்த்தாள். அவர்களை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு சுபத்ராவின் வீட்டுக்குள் சென்றான்.

''சுபா நீ போன்ல சொன்னது போல நீதான கொலை பண்ணின''

''ஆமாடா நான்தான் அவனை என்னுடைய தடயம் எதுவும் இல்லாம கொன்னுட்டு பழியை இவனுங்க ரெண்டு பேரையும் ஏத்துக்க சொன்னேன்''

''எதுக்கு சுபா''

''அவன் உன்னையும் என்னையும் கொலை பண்ணத்தான் நேத்து வந்தான். உன் அம்மாவைப் பார்த்து மனசு மாறிட்டான். ஆனா அவன் வஞ்சம் தீரலை. என்கிட்டே அவன் இந்த விபரத்தை சொன்னப்ப அவனை கொலை பண்ணினேன், இப்போ என்னடா அதுக்கு, போயி அதோ அவ இருக்காள அவளோட பிள்ளை குட்டி பெத்து சந்தோசமா இரு. இது இந்த உலக பரிணாமம்டா. புத்தியுள்ளதே பிழைக்கும். அவளைக் கொல்ல எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது, ஆனா எனக்கு நீ சரிப்பட்டு வரமாட்டடா  அதனால அவளைக் கொன்னு பிரயோசனம் இல்லை''

''ஒன்னுமே இல்லாத விஷயத்தை இப்படி கொலையில கொண்டு வந்து நிறுத்திட்டியே சுபா''

''இந்த பூமி கூட ஒன்னுமே இல்லாமத்தான்டா இருந்துச்சு. புல், பூச்சி, மனுஷன் எல்லாம் வரலை, அது போலத்தான்டா, நீ கிளம்பிப் போ. கர்ம வினை அது இதுன்னு சொல்லிட்டு திரியாதே இது பரிணாமம். இன்னும் விலங்குகள் மனம் கொண்ட மனிதர்கள் திரியும் பூமி, கொஞ்சம் மாறி இருக்கேன் இதுவே விலங்கா இருந்து இருந்தா அவளை எப்பவோ கொன்னு போட்டு இருப்பேன்''

''சுபா நீ பண்ணினது தப்புன்னு தோணலையா''

''என்னை உன்னை காப்பாத்திக்க நான் பண்ணினதை எப்படிடா தப்புன்னு சொல்வ, பேசாம போயிருடா, என்னைத் தேடி இனிமே வராதடா''

''என்னப்பா அந்த பொண்ணு சொல்லுது''

''கொலை பண்ணிட்டு அவனுகளை ஏத்துக்கச் சொன்னேன்னு சொல்லுதுமா''

''முருகேசு வா போலீசுக்குப் போகலாம்''

''வேணாம் காயூ''

''இன்னும் அவ மேல உனக்கு கரிசனம் போகலைல முருகேசு''

''ஐயோ அம்மா இவளை கொஞ்சம் பேசாம இருக்கச் சொல்லு''

''காயத்ரி, இத்தோட இந்தப் பிரச்சினை முடிச்சிருச்சினு பேசாம இரும்மா''

''சரி அத்தை''

சில வருடங்கள் கழிந்தது. முருகேசுவிற்கும் காயத்ரிக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. திருமணநாள் அன்று சுபத்ரா வாழ்த்து பூங்கொத்தோடு வந்து இருந்தாள். காயத்ரிக்கு மனதில் பயம் குடி புகுந்தது.

''டேய் முருகேசு நீ சந்தோசமா இருக்க நான் எதுவும் செய்வேன்னு உன்னோட புதுப் பொண்டாட்டிக்கு சொல்லி வை, திருமண வாழ்த்துக்கள் காயத்ரி'' என வாழ்த்திவிட்டு சுபத்ரா சென்றாள். காயத்ரிக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

''கர்ம வினைன்னு சொல்வாங்களே அதுதான் இதுவா முருகேசு''

''இல்லை காயூ, இது பரிணாமம்''

(முற்றும்)