Friday 8 April 2016

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 30

''ஆமா சார், என்ன சார் விஷயம்''

''இதோ இவனை உனக்குத் தெரியுமா?''

''தெரியும் சார், இவன் பேரு கோரன், என்னோடதான் படிச்சான், பாதியில படிப்பை விட்டுட்டான். நேத்துகூட எங்க வீட்டுக்கு வந்து இருந்தான். இப்போ கரியநேந்தல் அப்படிங்கிற ஊருல பிசினஸ் வைச்சி இருக்கிறதா சொன்னான்''
''இவனை யாரோ கொலை பண்ணி இருக்காங்க''

பயத்தில் முருகேசு நடுங்கிக்கொண்டு இருக்க காயத்ரி உடனே வந்தவள்
''சார், சுபத்ராகிட்ட நீங்க விசாரிச்சா எல்லாம் தெரியும், இவருக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை''

''நீ யாருமா''

''என்னோட பேரு காயத்ரி''

''சரி நீங்க ரெண்டு பேரும் எங்களோட கிளம்பி வாங்க, சுபத்ரா ஊருக்குப் போகலாம், ஊரு தெரியும்ல''

அதற்குள் முருகேசுவின் அம்மா என்னடா இதெல்லாம் என்றபடி வந்து நின்றார்கள்.

''அந்த பையனை இங்க தங்கிட்டுப் போகச் சொன்னோம் அவன் தான் கேட்கலை''

''நீ யாருமா இவனோட அம்மாவா, நீயும் கூட வாம்மா''

மறுப்பேதும் சொல்லாமல் மூவரும் உடன் சென்றார்கள்.

''சார்  இங்க சுபத்ராவோட சொந்தக்காரங்க இருக்காங்க ரங்கநாதனு பேரு என்னோட அக்காவைத்தான் கட்டி இருக்காங்க, அவங்களையும் விசாரிச்சிட்டு கூட்டிட்டுப் போகலாம்''

''அதெல்லாம் இருக்கட்டும், முதலில அந்த சுபத்ராவை விசாரிப்போம்''

சுபத்ராவின் ஊருக்குள் சென்றபோது இருவர் வந்து நின்றார்கள்.

''அந்த பையன் கொலைக்கேசு விஷயமாவ வந்து இருக்கீங்க, நாங்கதான் அவனை கொன்னுபோட்டோம். உங்களுக்கு தகவல் சொன்னதே நாங்கதான். இவங்களை கூப்பிட்டு வந்து இருக்கீங்க''

காவல் அதிகாரி கடும் கோபம் கொண்டார்.

''என்ன தைரியம்டா உங்களுக்கு''

''இருக்காத பின்ன, இந்த ஊரு மண்ணு அப்படி''

''தம்பி நீங்க மூணு பெரும் போகலாம். உன்னைத் தேடித்தான் கோரன் வந்தான்னு அவங்க அப்பா தகவல் சொன்னதாலதான் உன்னை விசாரிக்க வந்தோம்''.

கொலை செய்தோம் என சொன்ன அந்த இருவரையும் காவல் அதிகாரிகள் பிடித்து வைத்தார்கள்.

''சுபத்ரா யாருடா''

''எங்க ஊரு பொண்ணுதான், ஆனா அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நேத்து எங்க தோட்டம் பக்கம் வந்தான் அப்போ யாரு என்னனு  விசாரிச்சப்ப திமிரா பேசினான் அப்போ இவனுக்கும் எங்களுக்கும் நடந்த தகராறுல கொஞ்சம் வரம்பு மீறிப் போச்சு நாங்க அவனை தொலைச்சி கட்டிட்டோம் இதெல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம். புடிச்சிட்டுப் போயா, சுபத்ரா எங்க சுமித்ரா எங்கனுட்டு''

பலர் அங்கே கூடி நின்றார்கள். நீங்க எல்லாம் எப்பவுமே திருந்த மாட்டீங்களாடா என்று ஆளாளுக்குப் பேசியபடி நின்றார்கள்.

''நாங்க எதுக்கு திருந்தனும், அவனவன் ஒழுங்கா இருந்தா நாங்க ஒழுங்கா இருக்கப்போறோம்''

காயத்ரி முருகேசுவிடம் வா போகலாம் என்றாள் . கொஞ்சம் இரு என்றான் முருகேசு.

''சுபத்ராவை கூப்பிடுங்க''

சுபத்ரா அங்கு வந்து நின்றாள்.

''என்ன சார் என்ன விஷயம்''

''கோரன் அப்படின்னு ஒருத்தனை கொன்னு இருக்காங்க உனக்கு இதில சம்பந்தம் இருக்கா''

''எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை சார், அவனை எதுக்கு சார் நான் கொல்லனும் எனக்கு என்ன கொல்லுறது தான் தொழில்னு நினைச்சீங்களா''

''ஏன்டா போலிசு மூதேவி, நாங்கதான் கொன்னோம்னு இந்த இரண்டு பேரும் சொல்றாங்க பிடிச்சி வேற வைச்சி இருக்க அவகிட்ட விசாரிக்கிற''

அங்கிருந்த ஒருவர் சொன்னபடி கத்தியை ஓங்கி காவல் அதிகாரியை குத்த வந்தார். அவரை சிலர் பிடித்துக்கொண்டார்கள்.

''சரிம்மா நீ போம்மா''

''எதுவும் மேல் விபரம் தேவைப்பட்டா என்னை கூப்பிடுங்க சார்''

''என்ன நீ அந்த போலிசு  மூதேவிகளை  சார்னு சொல்லிட்டு இருக்க, அவனுகளையும் சேர்த்து வகுந்துட்டா சரியாப் போயிரும்''

இன்னும் அவர் சத்தம் இட்டுக் கொண்டு இருந்தார். அவரை எதுவும் காவல் அதிகாரிகள் சொல்லவில்லை.

காவல் அதிகாரிகள் கொலை செய்தோம் என சொன்ன இருவருடன் கிளம்பினார்கள்.

சுபத்ராவை நோக்கி முருகேசு சென்றான். காயத்ரி எவ்வளவோ தடுத்துப் பார்த்தாள். அவர்களை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு சுபத்ராவின் வீட்டுக்குள் சென்றான்.

''சுபா நீ போன்ல சொன்னது போல நீதான கொலை பண்ணின''

''ஆமாடா நான்தான் அவனை என்னுடைய தடயம் எதுவும் இல்லாம கொன்னுட்டு பழியை இவனுங்க ரெண்டு பேரையும் ஏத்துக்க சொன்னேன்''

''எதுக்கு சுபா''

''அவன் உன்னையும் என்னையும் கொலை பண்ணத்தான் நேத்து வந்தான். உன் அம்மாவைப் பார்த்து மனசு மாறிட்டான். ஆனா அவன் வஞ்சம் தீரலை. என்கிட்டே அவன் இந்த விபரத்தை சொன்னப்ப அவனை கொலை பண்ணினேன், இப்போ என்னடா அதுக்கு, போயி அதோ அவ இருக்காள அவளோட பிள்ளை குட்டி பெத்து சந்தோசமா இரு. இது இந்த உலக பரிணாமம்டா. புத்தியுள்ளதே பிழைக்கும். அவளைக் கொல்ல எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது, ஆனா எனக்கு நீ சரிப்பட்டு வரமாட்டடா  அதனால அவளைக் கொன்னு பிரயோசனம் இல்லை''

''ஒன்னுமே இல்லாத விஷயத்தை இப்படி கொலையில கொண்டு வந்து நிறுத்திட்டியே சுபா''

''இந்த பூமி கூட ஒன்னுமே இல்லாமத்தான்டா இருந்துச்சு. புல், பூச்சி, மனுஷன் எல்லாம் வரலை, அது போலத்தான்டா, நீ கிளம்பிப் போ. கர்ம வினை அது இதுன்னு சொல்லிட்டு திரியாதே இது பரிணாமம். இன்னும் விலங்குகள் மனம் கொண்ட மனிதர்கள் திரியும் பூமி, கொஞ்சம் மாறி இருக்கேன் இதுவே விலங்கா இருந்து இருந்தா அவளை எப்பவோ கொன்னு போட்டு இருப்பேன்''

''சுபா நீ பண்ணினது தப்புன்னு தோணலையா''

''என்னை உன்னை காப்பாத்திக்க நான் பண்ணினதை எப்படிடா தப்புன்னு சொல்வ, பேசாம போயிருடா, என்னைத் தேடி இனிமே வராதடா''

''என்னப்பா அந்த பொண்ணு சொல்லுது''

''கொலை பண்ணிட்டு அவனுகளை ஏத்துக்கச் சொன்னேன்னு சொல்லுதுமா''

''முருகேசு வா போலீசுக்குப் போகலாம்''

''வேணாம் காயூ''

''இன்னும் அவ மேல உனக்கு கரிசனம் போகலைல முருகேசு''

''ஐயோ அம்மா இவளை கொஞ்சம் பேசாம இருக்கச் சொல்லு''

''காயத்ரி, இத்தோட இந்தப் பிரச்சினை முடிச்சிருச்சினு பேசாம இரும்மா''

''சரி அத்தை''

சில வருடங்கள் கழிந்தது. முருகேசுவிற்கும் காயத்ரிக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. திருமணநாள் அன்று சுபத்ரா வாழ்த்து பூங்கொத்தோடு வந்து இருந்தாள். காயத்ரிக்கு மனதில் பயம் குடி புகுந்தது.

''டேய் முருகேசு நீ சந்தோசமா இருக்க நான் எதுவும் செய்வேன்னு உன்னோட புதுப் பொண்டாட்டிக்கு சொல்லி வை, திருமண வாழ்த்துக்கள் காயத்ரி'' என வாழ்த்திவிட்டு சுபத்ரா சென்றாள். காயத்ரிக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

''கர்ம வினைன்னு சொல்வாங்களே அதுதான் இதுவா முருகேசு''

''இல்லை காயூ, இது பரிணாமம்''

(முற்றும்)

1 comment:

ப.கந்தசாமி said...

ஆமா, இது என்ன பெனாத்தல்?