Thursday 29 January 2015

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - யூதர் உலகம்

முந்தைய பகுதி   சென்ற பதிவுக்கு சில எதிர்ப்புகள்  இருந்தது என்பதால் இந்த தொடரை எழுதுவதை தள்ளிவைக்கவில்லை. அவ்வப்போது எழுதுவதுதான் வாடிக்கை. என்றோ வாழ்ந்து அழிந்தவர்களின் வரலாற்றை அருகில் இருந்து பார்த்தது போல  எழுதப்படும் விசயங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க இயலாது.

எகிப்து, பாபிலோனிய பயணத்தின் போது  இந்த இஸ்ரேல் குறித்து என்னவென பார்க்க ஆவல் பிறந்தது. இன்றைய இஸ்ரேல் குறித்து எழுதப்படும் பார்வை அல்ல இது. மேலும் பைபிளில் குறிப்பிடப்படுவது எல்லாம் அத்தனையும் பொய் புரட்டு என ஒதுக்கி விட இயலாது, அதே வேளையில் எல்லாம் உண்மை எனவும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு சுவாரஸ்ய வாசிப்புதனை முன்னர் எழுதப்பட்டு இருப்பவை தந்து போகின்றன. அதை எடுத்துக்கொண்டு பிரம்மனின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் என இப்போதும் கட்டி அழ வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் ஒன்றின் மீது நம்பிக்கை, தைரியம் இல்லாதவன் எதிரியை பலவீனப்படுத்தும் முறை என ஒன்று உண்டு.

இந்த இஸ்ரேல் முன்னர் எகிப்தியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இறைத்தூதர்கள் என அறியப்பட்டவர்களின் கட்டுபாட்டில் இருந்தது என பைபிள் குறிப்பிடுகிறது. கிட்டத்தட்ட 3035 வருடங்களுக்கு முன்னர் சால் என்பவன் ஒரு பேரரசனாக இருந்தான். இவனைப் பற்றி குறிப்பிடும்போது இவன் ஸ்திரதன்மை  அற்றவனாக இருந்து இருக்கிறான். மன உறுதி அற்றவர்கள் வாழ்க்கையில் சீரழிந்து போவார்கள் என்பதற்கு இவன் ஒரு உதாரணம். அதற்குப் பின்னர் வந்த டேவிட் என்பவன் இந்த இஸ்ரேலிய பேரரசுதனை விரிவாக்கம் செய்தான். இவனது காலத்தில் ஜெருசலம் புனித தலமாக  விளங்கி வந்தது. இவனது மகன் சாலமன் ஒரு மாநிலத்தை பன்னிரண்டு மாவட்டங்களாக பிரித்தான். இவனது காலத்தில் வியாபாரம் பெருகியது. ஜெருசலத்தில் பெரிய கோவில் ஒன்றை கட்டினான் சாலமன்.

பழங்குடியினரை இந்த சாலமன் மிகவும் மோசமாக நடத்தினான் எனும் குற்றச்சாட்டு உண்டு. இந்த காலகட்டத்தில் இஸ்ரேலில் வன்முறைகள் வெறியாட்டம் போட்டன. எப்போது ஒரு மக்களின் உரிமைகளை மறுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும். அது அந்த காலம் என்றல்ல, எந்த காலமும் அப்படித்தான். அஷ்ஷிரியர்கள் இந்த இஸ்ரேலை குறி வைத்து இருந்தார்கள். வட  பகுதியில் ஏற்பட்ட அதிருப்தியை பயன்படுத்தி அஷ்ஷ்ரியர்கள் இஸ்ரேலை தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். இஸ்ரேலின் தென் பகுதி மட்டுமே சாலமன் மற்றும் அவனது மகனின் வசம் இருந்தது. சாலமன் வட  பகுதி மக்களை ஒழுங்காக நடத்தி இருந்தால் இந்த பிரச்சினை வந்து இருக்காது.

இந்த அஷ்ஷிரியர்களை எதிர்த்து வந்தவன் ஹெசக்கியா. பெர்சியன் அரசன் பாபிலோனியாவை கைப்பற்றியதும் யூதர்களை அங்கு அனுமதித்தான். அவர்களுக்கு முழு சுதந்திரம் தரப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்கள் எல்லாம் ஜெருசலத்தில் கட்டப்பட்டன. இஸ்ரேலியர்கள் இதுதான் சமயம் என மத வழிபாடுகளில் மிகவும் ஈடுபாடு கொண்டார்கள். பெர்சியர்களின் தலைமையில் யூதர்கள் பெரும் சமூகமாக உருவானார்கள். இந்த மத சுதந்திரம் எல்லாம் ஒரு முன்னூறு ஆண்டுகள் செழிப்பாக இருந்தது.

கோவில்கள் கட்டுவது என ஒரு கூட்டமும், கோவில்களை இடிப்பது என ஒரு கூட்டமும் அன்றே இருந்து இருக்கின்றன. மேலும் கோவில்கள் மூலம் சேர்க்கப்படும் பொருளை கைப்பற்றி அரசையே மாற்றியவர்கள் இருந்தார்கள். இந்த காலகட்டத்தில் ரோமானியர்கள் இஸ்ரேலில் காலடி எடுத்து வைத்தார்கள். ஒற்றுமையின்மையை பயன்படுத்தி ரோமானியர்கள் ஜெருசலத்தினை கைப்பற்றினார்கள், அதோடு கோவில்களை இடித்து தள்ளினார்கள்.

யூதர்கள் இஸ்ரேலில் இருந்து உலகம் எல்லாம் பரவிய காலம் அது. யூதர்கள் ஜெருசலத்தில் தங்கக்கூடாது என கிட்டத்தட்ட 2125 வருடங்கள் முன்னர் ஒரு அரசர் கொண்டு வந்த சட்டம் யூதர் சமூகத்தை அலங்கோலம் செய்தது. இப்போது நமது இலங்கையை எடுத்துக் கொள்வோம். இலங்கையில் ஒரு கொடுங்கோலன் ஆட்சி செய்தான், தமிழர்களை இலங்கையில் இருக்கவே விடாமல் உலகம் எல்லாம் விரட்டிட செய்தான் என 2025 வருடங்கள் கழித்து படிப்பவனுக்கு அது எல்லாம் உண்மை அல்ல என நினைப்பான் எனில் நாம் கண்டது எல்லாம் பொய்யா?

ஒற்றுமையின்மை, பலமின்மை வாழ்க்கையில் தனி மனிதரை மட்டுமல்ல, ஒரு சமூகத்தையே சீரழித்து விடும்.

(தொடரும்)


Monday 19 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை நிறைவு 4

நிறைய நாட்கள் கழித்து முதன் முறையாக ஒரு தமிழ் இதழை வாசித்து முடித்து இருக்கிறேன். முத்தமிழ்மன்றத்தில் நிறைய பேர் நிறைய எழுதுவார்கள். 2006 ம் வருடத்தில் இருந்து அங்கே உறுப்பினராக இருந்தேன். அப்போது திரு. ரத்தினகிரி, திருமதி பத்மஜா போன்றவர்களின் எழுத்துகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவர்கள் தந்த கருத்துகளால் எனது நுனிப்புல் முதல் பாகம் நாவல் வளர்ந்தது என்றால் மிகையாகாது, அந்த நன்றியை அவர்களுக்கு முதல் நாவலில் தெரிவித்தேன். அதற்குப் பின்னர் அவர்களது ஊக்கம் இருந்தாலும் எழுதுவது எனது எண்ணமாக இருந்ததால் இரண்டாம் பாகம் அவர்களின் அதிக பங்களிப்பு இன்றி எழுதி முடித்தேன். மூன்றாம் பாகத்திற்கு எவரேனும் என்னோடு பயணிக்க கூடும். குழு மனப்பான்மை, சச்சரவுகள் என பல இருந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று. அப்படித்தான் எழுதினேன். பின்னர் வலைப்பூ ஆரம்பித்தபிறகு முத்தமிழ்மன்றம் மட்டுமல்ல எனது வலைப்பூவில் எழுதுவது கூட குறைந்து போனது. இதற்கு நான் 2010 ல் மீண்டும் ஆலயம் ஒன்றில் தொண்டுபுரியும் அறங்காவலராக பணிபுரிய சென்றது என்று சொல்லலாம். அவ்வபோது எழுதி வந்து இருக்கிறேன், முற்றிலும் நிறுத்தியது இல்லை. அப்படி இந்த ட்விட்டரில் கடந்த ஒரு வருடம் முன்னர் எழுத ஆரம்பித்து தமிழ் எழுத்துகள் வாசித்து வந்தது மகிழ்வாக இருந்தது.

அப்படி ட்விட்டரில் எழுத்து மூலம் பழகியதால்  திரு. என். சொக்கன், திரு கண்ணபிரான் ரவிசங்கர், 'திருப்பூர் இளவரசி' சு.ஐஸ்வர்யா இவர்களின் பழக்கம் அவ்வளவாக இல்லாதபோதும் இவர்களிடம் நுனிப்புல் பாகம் 2 க்கு அவர்களது எண்ணங்களை வாங்கி புத்தகம் வெளியிட முடிந்தது. அதுவும் திரு என். சொக்கன் அவர்கள் என் நாவலை திருத்தித் தந்தது இங்கு நினைவுகூறத்  தக்கது. இப்படி பலர் எழுதிக்கொண்டு இருக்கும் ட்விட்டரில் இருந்து ஒரு மின்னிதழ் வெளியே வந்து இருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். ஆசிரியர் ஒரு எழுத்தாளர் என்றாலும் முதல் பார்வையில் சொன்னது போல ரைட்டர் என செல்லமாக அழைக்கப்பட்டாலும், ட்விட்டர் உலகில் இருந்து பலரை இந்த தமிழ் மின்னிதழில் அறிமுகம் செய்து இருக்கிறார். அது எழுத்துக்கு கொடுக்கப்பட்ட கௌரவம்.

பொதுவாக நான் எதையும் விமர்சனம் பண்ணும் தகுதி உள்ளவன் என என்னை எண்ணுவதில்லை. அதனால் எனது சினிமா விமர்சனம் கூட மேலோட்டமாகவே இருக்கும். விமர்சனம் என்பது ஒன்றை பண்படுத்த உதவ வேண்டும், பழுதுபடுத்த அல்ல. மென்மேலும் முயற்சிக்க வைக்க வேண்டும், முடங்க வைக்கக்கூடாது. இங்கே இந்த தமிழ் மின்னிதழில் எனது பார்வையை முன் வைத்து இருக்கிறேன், இது எனக்கே கூட ஒரு புது அனுபவமாக இருந்தது. பக்கத்து ஊர்க்காரர் எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணனின் எழுத்துலக பயணம் எனக்கு ஆச்சரியம் உண்டுபண்ண வைத்தது. எங்கள் ஊரில் கூட சில எழுத்தாளர்கள் உண்டு. முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் எல்லாம் எங்கள் கிராமத்தில் உண்டு. அப்படி சிறு வயதில் எழுத ஆரம்பித்தேன். கல்லூரியில் படித்தபோது இப்படி நோட்டில் கிறுக்கிக் கொண்டே இருக்காதே என அறிவுரை எல்லாம் எனக்குத் தந்தார்கள். நான் எழுத்துலகில் ராமனுஜனாக எழுத்தில் பரிமாணம் எடுக்க இயலாமல் போனதற்கு ஒரே ஒரு காரணம் எனது திமிர், ஈகோ. எழுதி ஏமாற்றுகிறார்கள் என்பதே எனக்குள் இருக்கும் எழுத்து மீதான விமர்சனம். எழுதுபவன் எழுத்தில் மட்டுமல்ல, களத்திலும்  இறங்க வேண்டும் என எண்ணுபவன், அதனால் எனது எழுத்துகளில் ஒருவித ஏக்கப் பெருமூச்சு அவ்வப்போது இருந்து கொண்டே இருக்கும். அதை எல்லாம் தாண்டிப் பார்த்தால் எழுத்து ஒரு தவம். அது சிலருக்கே கை வந்து இருக்கிறது. அப்படி பலரை கௌரவம் செய்து இருக்கிறது இந்த தமிழ்  மின்னிதழ். அனைவருக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

தமிழ் திரைப்பட விருதுகள் - 2014  எனக்கு சிறு வயதில் இந்தவிருதுகள் பட்டியல் எல்லாம் பார்க்க பேரானந்தமாக இருக்கும். இப்போது கூட தேசிய விருதுகள் பட்டியலை ஆர்வத்தோடு பார்ப்பேன். எனக்கு பிலிம்பேர் விருதுகள், இன்னபிற விருதுகள் எல்லாம் பல வருடங்களாக ஈடுபாடு தந்தது இல்லை. தேசிய விருது மட்டுமே நான் அதிகம் விரும்பி பார்ப்பது. இங்கே என்ன விருதுகள் என்ன தரப்பட்டு இருக்கிறது என்று பார்த்தால் பெரும்பாலான படங்கள் நான் இன்னமும் பார்க்கவில்லை. இதற்கு ஒரு காரணம் நமது ஊரில் உள்ளதுபோல திரையரங்கு சென்று பார்க்கும் அளவுக்கு படங்கள் வருவது இல்லை. குறிப்பிட்ட சில படங்களே வரும். மேலும் பெரும்பாலான படங்கள் இணையம் அல்லது டிவிடியில் பார்க்க வேண்டிய சூழல். ஊரில் இருக்கும்போது பாடல்கள் நிறைய கேட்பது உண்டு, இங்கே வெகுவாக குறைந்துவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கலை உலகினருக்கு பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக விருது என்பது விமர்சனத்திற்குரியது, பலருக்கு திருப்தி தருவதைவிட அதிருப்தி தந்துவிடும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விருது வழங்குவது தொடர்ந்து நடைபெறுவது நல்ல விஷயம்.

அடுத்து படித்த எழுத்து சற்று வித்தியாசமானது.  முதலில் சில வரிகள் படித்ததும் தமிழ் - மின்னிதழை மூடிவிட்டேன். பொதுவாக இப்படி இருப்பவர்கள் என குறிப்பிட்டு வாசிக்க வேண்டாம் என சொல்லிவிட்டால் அதில் ஏதேனும் ஒன்று எனக்குப் பொருந்தும் எனில் கூட நான் வாசிப்பதே இல்லை. எழுதுபவருக்குத்  தரும் மரியாதையாகவே நான் அதை கருதுவேன். அப்படித்தான் படிக்கவே வேண்டாம் என முடிவு செய்தேன். ஆனால் இந்த தமிழ்-மின்னிதழ் அந்த கொள்கையை தகர்த்த சொன்னது. முழுமையாகப் படிக்காமல் வாசிப்பது முழுமை அடையாது என வாசித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. புதிய எக்சைல் - புனைவும் புனைவற்றதும் - சுரேஷ் கண்ணன் எழுதி இருக்கிறார். அதிலும் எழுதுவதற்கு ஆசிரியரின் பரத்தை கூற்று தனை காரணம் காட்டுகிறார். உங்ககளை  வாசிக்கக் வைக்கவே அப்படி தொடக்கத்தில் எழுதினேன் என்கிறார். அப்படி எல்லாம் வாசிக்கமாட்டேன் சுரேஷ்கண்ணன். வாசிக்காதே என்றால் வாசிக்கவே மாட்டேன். எவருக்காகவும் எழுத்து சமரசம் செய்யக்கூடாது, தனது நிலையை எழுத்து மாற்றக்கூடாது என எண்ணுபவன் நான். காமக்கதைகளுக்கு இங்கு மவுசு அதிகம் என நான் எழுதிய கதை ஒன்றில் ஒரு வார்த்தை கூட வேறு விதமாக எழுதி இருக்க மாட்டேன். வாசகனுக்கு எழுத்தாளனை விட கற்பனை சக்தி அதிகம் என நினைப்பேன். கதாபாத்திரங்கள் மூலம் அழகாக பல விசயங்களை எழுதி இந்த புதிய எக்சைல்  எனும் தமிழ் நாவலுக்கு இரண்டு விமர்சனங்கள் வைத்து இருக்கிறார். அவரே குழப்பம் அடைந்து இருக்கிறார் என முடிவில் நையாண்டியாக முடிக்கிறார். சுவாரஸ்யமான எழுத்து.

காமத்தை முன்னிறுத்தி எழுதப்படும் கதைகளில் சமீபத்தில் ராஜன் என்பவர் எழுதிய தேர்க்கால் எனும் சிறுகதை அப்படியே மனித உலகில் உபயோகிக்கப்படும் வார்த்தைகளை பிரயோகித்து இருப்பார். வாசகன் இதைக் கண்டு அஞ்சக்கூடாது அதுதான் நிதர்சனம். இதைவிட மோசமான வார்த்தைகளை எங்கள் கிராமத்தில் உபயோகம் செய்வார்கள். சுரேஷ் கண்ணன் மறைமுகமாக சில வார்த்தைகளை உபயோகம் செய்கிறார். ஜ்யோவரம் சுந்தர் என நினைக்கிறேன், ஒரு கட்டுரையில் அப்படியே வார்த்தைகளை உபயோகம் செய்து இருப்பார்.  எழுத்து நாகரீகம் கருதி அப்படியே எவரும்  எழுதுவதில்லை. ஆங்கில நாவல்கள் விதிவிலக்கு என கருதுகிறேன். இப்போதெல்லாம் எவ்வித மன சஞ்சலம் இன்றி எதையும் வாசிக்க முடிகிறது. எனது மனம் சிறுவயது கட்டுக்கோப்பில் இருந்து வெகுவாக வெளியேறிவிட்டது ஆனால்  என்னால் இப்படி எழுதவே இயலாது, எழுத வேண்டிய நிர்பந்தமும் எனக்கு இல்லை. எழுதுபவர்கள் எழுதட்டும்.

இசை - இசையை நோக்கி நகர நகர இசையை விட்டு வெளியேறிக்கொண்டே இருக்கிறேன். ராகங்கள் எல்லாம் கற்று தாளங்கள் கற்று நானும் ஒரு இசை மேதை ஆக விருப்பம். ஆனால்  சாத்தியமற்ற ஒன்று. இளையராஜா, இசைஞானி. இவரது ரமண மாலை, திருவாசகம் எல்லாம் நான் திரும்பத் திரும்ப கேட்பவை. ஆனால் என்ன ராகம் என்ன இசை வாத்தியங்கள் என்ன என்றெல்லாம் மனம் சஞ்சரிப்பது இல்லை. வார்த்தைகளுக்காக நான் மயங்குவேன். காரணமின்றி கண்ணீர் வரும் என்றவுடன் எனக்கு கண்ணீர் வரும். ஆனால் எஸ். சுரேஷ் சுவப்னம் கனவுகளுக்கான இசை என ஒரு ஆல்பத்தை அழகாக இசைத்து இருக்கிறார். கானடா, காம்போதி, ஜோக், பிலஹரி என பல ராகங்கள், மிருதங்க இசை, பாடல் பாடும் அழகு என ஆராதனை செய்து இருக்கிறார். நிச்சயம் இவரை நம்பி இந்த ஆல்பம் கேட்டு மகிழலாம் என நினைக்கிறேன்.

இந்திரன் எழுதிய பந்து புராணம். அட்டகாசம். எனது கிரிக்கெட் வாழ்நாளை அசைபோட வைத்தது. என்ன இந்திரன் வேறு ஊர்களுக்கு சென்று விளையாடவில்லையா என்றே கேட்கவேண்டும் என இருக்கிறேன். வேறு ஊர் அணிகளில் அவர்களுக்காக களம் இறங்கவில்லையா என்ற கேள்வியும். எங்கள் ஊரில் பெண்கள் கிரிக்கெட் விளையாண்டது இல்லை. அவர் குறிப்பிட்டது போல ஊரில் உள்ள அக்காக்கள் எல்லாம் வேற பொழப்பே இல்லையா இப்படியா வேகாத வெயிலில் விளையாடுறீங்க நீங்க சின்ன பசங்க எங்க மாமாவை எல்லாம் ஏன்டா  இப்படி விளையாட இழுத்துட்டு போறீங்க என திட்டாத நாளில்லை. வெயிலில் விளையாடியே கருத்து போனேன் என வீட்டில் சொல்வார்கள். பழைய நினைவுகளை அசைபோட வைத்த அற்புத விபரிப்பு, அதுவும் கடைசியில் முடிக்கும் போது  ஒரு காவியம் போல முடித்து இருக்கிறார்.

பாலா மாரியப்பனின் நிழோலோவியம். ஏதேனும் தென்படுகிறதா என பூவினை தாண்டி பார்த்தேன். புகைப்படம் அருமை. எனக்கு ஓவியம் என்றால் கொள்ளைப்பிரியம். ஓவியத்தில் மனதை அழகாக சொல்லலாம். ட்விட்டரில் ஓவியம் வரையும் ராகா, பாரதி, அகழ்விழி, அண்ணே ஒரு விளம்பரம், தமிழ்பறவை, பிரசன்னா மீனம்மாகயல் என ஒரு பெரிய ஓவியர்கள்  பட்டாளமே உண்டு. எனது  நுனிப்புல் பாகம் 2 நாவலுக்கு அகழ்விழி தான் ஓவியம் வரைந்து தந்தார். அப்படியே நான் அவரது ஓவியத்தை எடுத்துக்கொண்டது அவருக்கு சற்று ஆச்சரியம். இந்த தமிழ் மின்னிதழில் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த இயக்குனர் கே பாலசந்தர் அவர்களைப் பற்றிய நினைவு கூறல் என தனது அருமையான அனுபவத்தை அவர் ஒரு தொடர்கதை என கார்த்திக் அருள் அழகாக எழுதி இருக்கிறார். அதுவும் அவருடன் நேரடியாய் பேசிய அனுபவம் சிறப்பு. நானும் கே பாலசந்தர் படங்களை பார்க்கலாம் என இருக்கிறேன்.  தமிழ் மின்னிதழின் கடைசி பக்கத்தில் பரணிராஜன் வரைந்த பாலசந்தர் ஓவியம் அப்படியே பாலசந்தரை ஒரு விழாவில் அமர்ந்து இருப்பதை பார்ப்பது போன்ற போன்ற உணர்வைத் தந்தது. இவர் வரையும் ஓவியங்கள் அத்தனை தத்ரூபமாக இருக்கும். மாதுளம் பழம் ஒன்று உரித்து அது தட்டின் மேல் இருக்கும் ஒரு ஓவியம் பிரமிப்பு தரும், பாராட்டுகள். எப்படி இப்படி வரைவது என இவரிடம் ஓவியம் கற்றுக்கொள்ளவும் ஆசைதான்.

இணைய நூற்றாண்டு குறித்து சிறகு அவர்கள் மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார். மிகவும் உண்மை. இந்த உலகம் இணையம் மூலம் பெரும் உதவியையும் அச்சுறுத்தலையும் சந்தித்து வருகிறது. அருமையான  எழுத்து. இறுதியாக திறமைசாலிகள்  என ட்விட்டர் மூலம் அடையாளம் காட்டப்படும் எழுத்து என எஸ்கே செந்தில்நாதனின் குவியொளி வெகு சிறப்பு. ஆத்திசூடி போன்று டிவிட்டர்சூடி. எழுதிய அனைவருக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த தமிழ் மின்னிதழ் குறித்து இரு வாக்கியங்களில் ஒரு விமர்சனம்.

'நிர்வாணத்தை மறைக்க விரும்பாத ஒரு அழகியல் -தமிழ் மின்னிதழ்' 

'நிர்வாணத்தை மறைத்த பின்னும் கண்களை அகற்ற இயலாத பேரழகியல் - தமிழ் மின்னிதழ்'

எனது பார்வை நிறைவுப் பெற்றது. இந்த தமிழ் மின்னிதழ் காலாண்டு இதழாக தொடரும். அன்றும் தமிழ் - மின்னிதழில்  பகிரப்படும் படைப்புகள் குறித்து இங்கே எழுதுவேன் எனும் நம்பிக்கையுடன் வாழ்த்தி மகிழ்கிறேன்.

 (முற்றும்)

Saturday 17 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 3

என்னால் எழுத்தாளன் ஆக இயலாது என உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டபோது எழுதுவது எனக்கு மிகவும் எளிதானது. நான் பாடப்புத்தகங்கள் வாசித்து வளர்ந்தவன். எனக்கு இந்த நாவல், சிறுகதை தொகுப்பு எல்லாம் அதிகம் வாசிப்பது ஒரு பதினாறு வயதுடன் முடிந்து போனது என்றே கருதுகிறேன். அவ்வப்போது சில நாவல்கள் வாசிப்பது உண்டு. நாவல் எழுத அமர்ந்தபோது எப்படி எழுத வேண்டும், என்ன எழுத வேண்டும் என்ற சிந்தனை இல்லை. எழுத வேண்டும், அவ்வளவுதான். எனது எழுத்துக்களைப் பார்த்து இன்னும் சிறப்பாக எழுதுங்கள், விரிவாக, விபரமாக எழுதுங்கள் என சொன்னவர்கள் ஏராளம், அவர்களை எல்லாம் ஏமாற்றுவது எனக்கு வாடிக்கை. ஆனால் ஒரு எழுத்தாளன் யார், அவன் எப்படிப்பட்டவன், எப்படியெல்லாம் எழுத்தாளன் உருவாகிறான் என நீங்கள் தெரிந்து கொள்ள இந்த 'தமிழ்' மின்னிதழில் வெளியாகி இருக்கும் மின்காணல்தனை நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.

பொதுவாக நேர்காணலில் உள்ள பிரச்சினை என்னவெனில் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே எழுதுவது சற்று சிரமம். அப்படியே எழுதினாலும் வசதிக்கேற்ப எழுத்துகளை மாற்றி அமைத்து வெளியிடுவார்கள். அந்த பிரச்சினை இதில் இல்லை, அவர் என்ன எழுதி அனுப்பினாரோ அதையே பிரசுரித்து இருக்கிறேன் என்கிறார் ஆசிரியர். அதற்கு முதலில் பாராட்டுகள்.

அடேங்கப்பா! எத்தனை பெரிய மின்காணல். கிட்டத்தட்ட 47 பக்கங்கள், 54 கேள்விகள். புத்தகத்தில் 35 சதவிகித பக்கங்கள். வெற்றி பெற்ற எழுத்தாளன், படைப்பாளி  பேசினால் அதில் திமிர்த்தனம், தலைக்கனம் எல்லாம் வெளிப்படும். பணிவாக இருப்பவனே சிறந்தவன் என்கிற பண்பாடு எல்லாம் இப்போது மட்டுமல்ல எப்போதுமே இல்லை. எழுத்துலகில் மட்டுமல்ல எதிலும் அரசியல் எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒன்று. வெற்றி பெற்ற சக மனிதனின் மீது பொறாமை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவே காணப்படுகிறது. அனைவராலும் சொல்லப்படும் ஈகோ.

ஜெமோ என செல்லமாக அறியப்படும் ஜெயமோகன். எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். இவரது கருத்துகளில் எல்லோரும் உடன்பட வேண்டிய அவசியமில்லை. தனக்குத் தெரிந்ததை, தனக்குப் புரிந்ததை, தனக்குள் பிறர் நிரப்பிய விசயங்களை பகிர்தல் என்பது ஒரு எழுத்தாளன் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் செய்துகொண்டுதான் இருக்கிறான். எனக்கு இவரைப்பற்றி நிறையத் தெரியாது என்பதால் எல்லாமே சுவாரஸ்யமாக இருந்தது. அதுவும் 'ஒருபோதும் எழுத்தாளன் அன்றி பிற அடையாளங்களை நான் ஆசைப்பட என் அம்மா விரும்பியதில்லை' என்ற வரிகள் அட! 'எழுத்தில் சாதித்துவிட்டதாகத் தோன்றியபின் எழுதவே தோணாது'.

'வாசிப்பே என்னை எழுத்தாளனை உருவாக்கியது' என்பதோடு ஆன்மிக நாட்டம் குறித்து நண்பன் மற்றும் அம்மாவின் தற்கொலையை குறிப்பிடுகிறார். எனது நண்பன் கிரியின் தற்கொலையை நினைவுபடுத்தியது. கற்பனையே எழுத்துக்கு வழி. அமரர்கள் சுந்தர ராமசாமி, சுஜாதா, சுஜாதாவின் மனைவி குறித்த இவர் கருத்துகள், மனுஷ்யபுத்திரன், பெண்கள், மலையாளி முத்திரை, சொல் புதிது, குருநாதர், சினிமா உலகம், இவரது நாவல்கள், நோபல் பரிசு, நகைச்சுவை கதைகள், குழந்தை நாவல்கள், அறிபுனைவு, வாசிப்பாளனின் இயலாமை, விமர்சனம் பண்ணவேணும் எனும் அயோக்கியத்தனம், இணைய மொண்ணைகள் என இவரது விவரிப்பு ஆச்சரியங்களை உள்ளடக்கியது. ஆசிரியரின் கேள்விகள் எழுத்தாளனின் உள்ளக்கிடங்கை கிளறி இருக்கிறது.  'நல்ல எழுத்தாளன் புகழ் அங்கீகாரம் எதற்காகவும் எழுதுவது இல்லை'. அடடே! எதற்கும் நீங்களே எல்லாம் வாசியுங்கள். அவரது ஒவ்வொரு வரிகளை எழுதிக்கொண்டு இருந்தால் நான் ஒரு புத்தகம் தான் எழுத வேண்டி இருக்கும். அப்புறம் என்னை அவர் வசையாகத் திட்டிவிடுவார். எனக்குப் பிறரிடம் திட்டு வாங்கும் அளவுக்கு எழுதும் தைரியம் இல்லை.

அடுத்து வினோத நகரம். - முரளிகண்ணன் எழுதி இருக்கிறார். அதுவும் எங்கள் விருதுநகர். அவர் எழுதியதில் எண்ணையில் குளித்த புரோட்டா, சினிமா காட்சிகள் மட்டுமே எனக்குத் தெரியும். மற்றபடி பெண்கள் இதற்காகத்தான் திருவிழா செல்வது, குடும்ப உறவுகளின் பலம், நகை எடுக்கும் பாங்கு இதெல்லாம் நான் ஊன்றி கவனித்தது இல்லை. ஐந்தாம் திருவிழா என டிராக்டர் சென்ற அனுபவம் சினிமா சென்று தொலைந்து போன அனுபவம் என பல உண்டு. விருதுநகரில் இருந்து பதினோரு  கிலோமீட்டர் தொலைவில் எனது ஊர் என்பதால் எனக்கு விருதுநகர் சற்று அந்நியம்  தான். மிகவும் நன்றாக எழுதி இருக்கிறார்.

அடுத்து புனைவுகள். எல்லா புனைவுகளையும் வாசித்து முடித்துவிட வேண்டும் என திட்டமிட்டே வாசித்தேன். நளீரா, என்னை நடுநடுங்க வைத்துவிட்டாள். தோழர் கர்ணா சக்தி எழுதி இருக்கிறார். கருவில் உள்ள குழந்தை கதை சொல்வது போல அமைந்து இருக்கிறது. அபிமன்யு நினைவுக்கு வந்தான். தோழர் கர்ணா சக்தி ஒரு புரட்சி சிந்தனையாளர். பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தது என கேட்கும் பலரிடம் பிறக்கும் முன்னரே குழந்தை என்ன செய்தது என சமூகத்திடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். தோழரே, இந்த சமூகம் மூடர்களால், மடையர்களால் ஆனது, அறிவாளிகள் கூட சாதி, மதம் என வந்தபின்னர் அறிவிழந்து போகிறார்கள். சந்ததியை அழித்தால் எல்லாம் அழியும் எனும் கொடூர எண்ணம் கொண்டு வல்லூறுகள் வட்டமிட்டுக் கொண்டே இருக்கின்றன. இணக்கமான சமூகம் அழிந்து கொண்டே இருக்கிறது. மனதை கலங்க வைத்த கதை.

0 F  மத்யமன் என்பவர் எழுதி இருக்கிறார். வித்தியாசமான கதை, வித்தியாசமாகவே தொடங்குகிறது. அதுவும் ட்விட்டர் சம்பவங்களை வைத்தே தொடங்கி ஆருத்ரா தரிசனம், ஒரு ஆத்திகனுக்குள் நாத்திகன் என கதை பரபரப்பாக நகர்கிறது. குளிர் குறித்த விவரிப்பு, சமன்பாடு என கடைசியில் மனித நேயம் சொல்லி முடிகிறது கதை. உதவும் மனப்பான்மையை நட்புகளிடம் மட்டுமே கொண்டு இருக்க வேண்டியது இல்லை என சொல்லும் கதை எனவும் கொள்ளலாம். நன்றாக இருக்கிறது.

சிறகில்லாப் பறவைகள் - அல்டாப்பு வினோத் எழுதி இருக்கிறார். எனக்கு சரியாக ஞாபகம் இருந்தால் காந்திய கோட்பாடுகளுக்கு எதிரானவர் என்றே எண்ணுகிறேன். ரஜினி ரசிகர் என்பது கூட இவர் அடையாளம் என எண்ணுகிறேன். கதை சொல்லும் பாணி ஒரு சினிமாவைப் போன்று காலங்கள் நேரங்கள் குறித்து எழுதி இருக்கிறார். ஒரு இளைஞனின் வாழ்க்கை குறித்த கதை. இறுதி நிகழ்வு மனதில் ஒரு வெறுமையை ஏற்படுத்திவிடுகிறது. வெளிநாடு செல்பவர்கள் எல்லாம் பணத்தில் குளிப்பவர்கள் அல்ல என எளிமையாக உலகிற்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார். அருமை வினோத்.

அடுத்து கவிதைகள் தாவினேன். நிறைவேறாத ஆசைகள் - மிருதுளா. எதிர்நீச்சல் என்ற பாடல் வரிகள் போல இருக்கிறது என எனது எதிர்பார்ப்புகள் கவிதைகள் குறித்து என் தங்கை சொன்னது உண்டு. ஆனால் இந்த நிறைவேறாத ஆசைகள் இருபக்க விசயங்களை அழகாக தொட்டு செல்கிறது. இருக்கலாம் என்பதான வார்த்தையே கவிதைக்கு அழகு, அதுவும் முடித்த விதம் சிறப்பு.

சிரஞ்சீவியும் ஜீவிதாவும் - சொரூபா. மனதை கனக்க  வைத்த கவிதை. சிரஞ்சீவிடா, ஜீவிதாடி. கவிதையில் கலங்க வைக்க இயலும் என சொல்லி இருக்கிறார். நிறுத்தி நிதானமாக நிகழ்வுகளை அசைபோடுங்கள்.

நா ராஜு கவிதைகள். மிருதுளா, சொரூபா அற்புதமான எழுத்தாளர்கள் என ட்விட்டர் உலகம் அறியும். எனக்கு ராஜு, அசோகர் பரிச்சயமில்லை. முத்தம் மூர்க்கமெனினும்  காதல். அருவி, நீர், பறவையின் பாட்டு என வேறொரு பொருள் உண்டு இங்கு என்கிறார். முன்னேற்பாடுகள் அற்ற விசயங்கள் என கவிதையின் ஆழம் அருமை.

ஒரு பெண் ஒரு ஆண் - அசோகர். வித்தியாசமான கவிதைக்களம். சிந்தனை மாறுபாடு ஒன்றும் காதலுக்கு அலுக்காதுதான். நன்றாகவே இருக்கிறது. ஒப்புமை குறியீடுகளில்  மூழ்கி முத்தெடுங்கள்.

விமர்சனம். ஸ்டான்லி க்ப்யூரிக் - இயக்குனர்களின் ஆசான்  எழுதி இருப்பவர்  நவீன் குமார். நல்ல சுவாரஸ்யமாக படம் பார்க்கும் உணர்வை தந்து இருக்கிறது எழுத்து. மிகவும் அற்புதமாக எழுதி இருக்கிறார். படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் வந்து போகிறது, அதே வேளையில் நேர்மையாக இருக்கும் கணவன் மனைவி குடும்பத்தில் சர்ச்சை தோன்ற வைத்துவிடும் அளவிற்கு இந்த படம் ஒரு மன உளைச்சலை தந்துவிடும் எனும் அபாயமும் உள்ளது. பொதுவாக கணவனுக்கும் மனைவிக்கும் நல்லிணக்கம் அத்தனை இருப்பதில்லை என்பதுதான் பெரும்பாலான குடும்பங்களில் காணப்படுவது. நக்கல், கேலி, கிண்டல் என இருந்தாலும் மெல்லிய காதல் குடும்ப அமைப்பில் இருந்து கொண்டே இருக்கும். எப்போது நிராகரிப்பு, புறக்கணிப்பு நிகழ்கிறதோ அப்போது பிரச்சினை தலைதூக்கும். ஒருமித்த கருத்து உள்ள தம்பதிகள்  வாழ்வின் வரம்.

இப்படியாக 'தமிழ்' மின்னிதழை வாசித்துக் கொண்டே இருக்கிறேன். புனைவுகள், கவிதைகள், நேர்காணல் எனும் மின்காணல் என வாசித்து முடித்த தருணத்தில் இந்த தமிழ் மின்னிதழ் ஒரு அருமையான இலக்கிய இதழ் என தைரியமாக சொல்லலாம். இது ஆசிரியரின் முதல் முயற்சி என்றாலும் தெரிவு செய்த விதங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த மின்காணல் இந்த தமிழ் மின்னிதழின் முத்தாய்ப்பு.

நான் நேசிக்கும் ஓவியர்கள் என ட்விட்டரில் நிறைய உண்டு. எவராவது கோலம் படம் போட்டால் கூட ஓடிச்சென்று அதை சேமித்து விடுவேன். அதுபோல எவரேனும் படம் வரைந்தால் அட என பிரமித்துவிடுவேன். ஓவிய ஈடுபாடும் இந்த தமிழ் மின்னிதழில் உள்ள வேறு சில ஓவியங்களோடு விமர்சனம் அனுபவங்கள் என சில நாளைப் பார்க்கலாம்.

மின்காணல் வாசித்து முடித்ததும் மனதில் எழுந்தது இதுதான். எதையும் முழுதாய் வாசிக்கத் திராணியற்ற இணைய மொண்ணைகளே, ஒன்றை விமர்சனம் செய்ய முழுவதுமாக வாசித்துவிட்டு பின்னர் விமர்சனம் செய்யுங்கள், இல்லையெனில் போங்கடா வெண்ணைகளா என திட்ட வேண்டி இருக்கும். ஷப்பா... தமிழ் எழுத்துலகம் என்னை மிரள வைக்கிறது.

(தொடரும்)