Friday 1 August 2014

நுனிப்புல் பாகம் 2 முன்னுரை

முன்னுரை

ஒரு கதை நிகழும் காலகட்டத்தை வைத்து அந்த காலம் எத்தகைய காலம் என்பதை தீர்மானித்து விடலாம். மக்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என ஒரு கதை எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டுப் போகும். ஒரு கதை என்பது நடந்த நிகழ்வாக மனித மனம் நினைக்கத் தொடங்கும் போது பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது. கதையை கதையாக எண்ணக்கூடிய மன நிலையில் நாம் இருக்க இயல்வதில்லை. அது எங்கோ நடந்த, என்றோ நடந்த ஒன்று என்கிற பிரமை நம்மை பிடித்து ஆட்டுகிறது. அதனால்தான் அந்த கதாப்பாத்திரங்கள் பெரும் பாதிப்பை நம்மில் ஏற்படுத்திச் செல்கின்றன.

வாசன் எனும் கதாபாத்திரம் மட்டுமல்ல எல்லா கதாபாத்திரங்களும் கற்பனையில் தோன்றியதுதான் என்றாலும் அந்த கதாபாத்திரங்களின் பாதிப்பு எங்கோ எப்படியோ தோன்றி இருக்க கூடும். இந்த நாவலை எழுதும் போதெல்லாம் எனது கிராமத்து தெருக்கள் என்னுள் நடமாடிக் கொண்டு இருந்தது என்பதை மறுக்க இயலாது. சில அறிவியல் விசயங்கள் எல்லாம் கதையில் எழுதும்போது அவ்வப்போது படித்து அதனால் எழுந்த பாதிப்புதான் இந்த நாவலில் வைக்கப்பட்டு இருக்கிறது, எனக்கென்று என்ன சிந்தனை இருந்துவிடப் போகிறது.

தமிழ்நாட்டில் வாழ்ந்து அந்த தமிழகத்தை கடந்த பதினைந்து ஆண்டுகளாக  பிரிந்த பின்னர் அங்கே உள்ள வாழ்வுமுறை எல்லாம் எனக்கு சற்று அந்நியமாகிப் போனது என்னவோ உண்மை. எனவே கதையில் நான் வாழ்ந்த அந்த இருபத்தி நான்கு வருடங்களின் பாதிப்பு மட்டுமே இருக்க இயலும். இன்றைய சமூகம் எத்தனை மாற்றம் அடைந்து இருக்கிறது என தமிழக்கத்தில் சில வருடங்களுக்கு ஒருமுறை என விடுமுறை காலத்தை கழித்து போகும் எனக்குப் புரியப் போவதில்லை.

கல்லூரி சூழல், மாணவ மாணவியர் பழக்கம் என எல்லாமே இப்போது புதிதாகவே இருக்கும் நிலையில் மாதவி, பாரதி, ரோகினி எல்லாம் சற்று அந்நியப்பட்டு போவார்கள். எத்தனை கதைமாந்தர்கள், அவர்களுக்கென ஒரு குணாதிசயம் உருவாக்கி அவர்களை நடமாட விட்டு அவர்களோடு வாழ்ந்து முடித்த காலங்கள் இப்போது எனக்கு வெகு தொலைவில் இருக்கின்றன. ஐந்து வருடங்களுக்கு மேலாக இந்த கதையின் தொடர்ச்சி குறித்து நான் சிந்திக்கவே இல்லை. என்ன எழுத வேண்டும் என்பதை எழுதும்போதே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றே அடுத்த பாகம் வரை நிறுத்தி வைத்து விட்டேன். இந்த நாவல் எழுதும்போது இருந்த மனநிலை வேறு, இப்போதைய மனநிலை வேறு, ஆனால் இறைவன் இறைவனாகவே இருக்கிறான்.

முதல் நாவல் படித்து விட்டு இப்படியா ஒரு நாவலை வெளியிடுவது என எழுந்த குறையைப் போக்க இந்த நாவலின் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் திருத்தித் தந்த திரு. என்.சொக்கன் அவர்களுக்கு நன்றித் தெரிவித்து கொள்கிறேன்.

‘உன்னை என்னுள் உருவாக்கி
என்னை நீதான் உருவாக்கியதாக
இன்னும் நம்பிக் கொண்டு இருக்கும்
மனதுக்கு உண்மை எதுவென
உரைத்து நிற்பாய்

வெ.இராதாகிருஷ்ணன்

இலண்டன் 

Saturday 28 June 2014

அகவாழ்வு கொண்டனன்

புறவாழ்வு என்றும் அகவாழ்வு என்றும் பிரித்தா வைக்கப்பட்டு இருக்கிறது? நான் சில நேரங்களில் மட்டுமல்ல பல நேரங்களில் என்ன எழுதுகிறேன் என்றே எனக்கு தெரியாது. சட்டென வந்து விழும் சிந்தனைகளை நான் அலசுவதே இல்லை.

 அந்த அந்த நேரத்தில் ஏதோ ஒன்று தோன்றும் அதை அப்படியே எழுதி வைத்துவிடுவேன். பின்னர் எவரேனும் கேட்டால் மட்டுமே அது குறித்து விளக்கம் தர சிந்திப்பேன். எழுதிய எனக்கு தெரியாத பல அர்த்தங்களை பலர் வந்து சொல்லிவிட்டுப் போவார்கள். ஆச்சரியமாக இருக்கும்.

அப்படித்தான் இப்படி எழுதினேன்.

பரபரப்பான உலகத்தில் ஓடித் திரியும் மனிதர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி விரும்புகிறேன். உங்கள் ஆழ்மனதின் ஓசையை கேட்க சற்று நேரம் ஒதுக்குங்கள். 

மேற்சொன்ன விசயத்தில் ஆழ்மனதின் ஓசை என நான் எழுதியது subconscious mind எனும் அர்த்தம் தான். அதாவது தற்போது நாம் அனுபவித்துக் கொண்டு இல்லாத ஒன்றை கூட தனது அனுபவத்தில் இந்த subconscious mind சேகரித்து வைத்து இருக்கும் எனும் நம்பிக்கையே அது. அதாவது இந்த வரிகள் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியது.

நிகழ்காலம் பொற்காலம் எனில் 
கடந்தகாலம் என்ன 
கற்காலமா? 

எந்த ஒரு காலமும் நமக்கு ஏதோ ஒன்றை அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது. நிகழ்காலம் நிகழ்காலம் என எதிர்காலத்தினை நோக்கி நாம் பயணிப்பது நமக்கு புரியாமல் போய் விடுகிறது. நமது தொலைக்கப்பட்ட தேடல்கள் எல்லாம் இந்த ஆழ்மனதில் அடங்கி இருக்கும். ஆழ்மனதின் ஓசை குறித்து கேட்டவருக்கு அடுத்த வரிகள் இப்படி வந்து விழுகிறது.

நம் ஆழ்மனம் நம்முடன் பேசிக்கொண்டே இருக்கும், புற வாழ்வில் ஈடுபாடு கொண்ட நாம் அதை நிராகரித்துக் கொண்டே இருப்போம் அக வாழ்வு மறந்து. 

இங்குதான் எனக்கே தெரியாமல் வந்து விழுந்த வார்த்தைகள் , அகவாழ்வு மறந்து. அகவாழ்வு என்றால் என்ன எனும் கேள்வி எழுந்தபோது திருதிருவென விழித்தது எனது மனம்.

புற வாழ்வு குறித்த சிந்தனை அதிகம் இருக்கும்போது அகவாழ்வு குறித்து என்ன தெரியும். அக வாழ்வு என்பது இரட்டை வாழ்வா என்றெல்லாம் யோசிக்க முடியவில்லை.

அகவாழ்வு என்பது புறவாழ்வு குறித்த சிந்தனை அற்ற ஒன்று 

இவ்வளவுதான் என்னால் யோசிக்க முடிந்தது. புறவாழ்வுதனில் நாம் காணாத ஒன்றை எப்படி அகவாழ்வு தனில் காண இயலும். நிறைய பேர் அக வாழ்வு என்றால் ஏதோ ஆன்மிக சம்பந்தம் உடையது என சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

புறத்தே நடக்கும் விசயங்களின் பாதிப்பு அகத்தே நிகழ்ந்தே தீரும். அகத்தே நிகழும் பாதிப்பு புறத்தே பல சமயங்களில் வெளித் தெரிவதில்லை. 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஓரளவுக்குத்தான் சில விசயங்களை மறைத்து வாழ இயலும். களையான முகம், பொலிவான முகம் எல்லாம் அகத்தில் ஏற்படும் சிந்தனைகளின் நீட்சி.

அகவாழ்வு என்றால் என்ன? எங்கேனும் எவரேனும் எழுதி இருப்பார்கள் என திருடத் தொடங்கிய மனதுக்கு தொல்காப்பியர் வந்து சிக்கினார்.

அகவாழ்வு என்பது காதலில் திளைத்து இருப்பது. 
அகவாழ்வு அறம் நிரம்பிய இல்லறவாழ்வு குறித்த ஒன்று. 

இது நான் சொல்ல வந்த பதில் அல்ல. அப்போதைக்கு அந்த கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் சொன்னது. அவ்வளவே. அகத்திணை புறத்திணை என்றே அன்று பிரித்து வைத்து இருக்கிறார்கள். ஏழு வகை அகத்திணை என்றாலும் ஐந்து வகை அகத்திணை மட்டுமே பாடுபொருளில் வைக்கப்பட்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்தார்கள். இவை அனைத்துமே கற்பு தனை பறைசாற்றும் திணை என்றே சொன்னார்கள்.

காதலித்து இருப்பது தலைவன் தலைவிக்கு மட்டுமே உண்டான ஒரு பண்பு. அப்படிப்பட்ட இருவருக்கும் உண்டான பண்புகளை அவர்கள் அகத்தில் வைத்து போற்றுவார்கள். அது போலவே இல்லற வாழ்வும். அந்த இல்லற வாழ்வில் வேற்று மனிதர்க்கு இடம் இல்லை.

தமிழில் ஒரு பெரிய கலாச்சாரம் உண்டு.

என் உடம்பை நீ தீண்டினாலும் என் மனசில அவருதான் இருக்கார். அதனால நான் கற்புக்கரசி என சொல்வார்கள். மனதில் நீ வேறொருவரை தீண்டினாலே கற்பை இழந்து விடுவாய் என எச்சரிக்கை செய்வார்கள். இதற்கு பரத்தையர்கள் கூட பத்தினிகள் என பாடும் கூட்டம் இருந்தது உண்டு. உடம்பை மட்டுமே தருகிறேன், மனசை இழப்பதில்லை. தொல்காப்பியர் சொன்ன அகவாழ்வுக்கு இது சரி. கற்பு போற்றுதல் என்பன எல்லாம் சரி. ஆனால் நான் குறிப்பிட்ட அகவாழ்வு என்பது அது அல்ல. நான் குறித்த அகவாழ்வு உள்ளுணர்வு கூட அல்ல. நாம் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வுகளும், மனிதர்களும் இந்த அகவாழ்வில் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நம்முடன் பேச முற்படுகிறார்கள். நாம் அவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு தற்போதைய புற வாழ்வில் ஈடுபாடு கொண்டு மறந்து செயல்படுகிறோம்.

இந்த ஆழ்மனதின் ஓசையை நேரம் இருக்கும்போது சற்று கேட்டுப்பாருங்கள். அங்கே உங்களுடன் பேச முற்பட்டு பேச இயலாமல் போன ஏதோ ஒரு ஜீவன் துடிதுடித்துக் கொண்டு இருக்கலாம்.

புறவாழ்வின் பாதிப்பே அகவாழ்வு. 
அகவாழ்வின் அர்த்தம் தனை 
புறவாழ்வு புரிந்து கொள்ள விடுவதில்லை. 


Thursday 26 June 2014

எதற்கு பெண் குழந்தை வேண்டும்?

 என் தங்கைக்கு வளைகாப்பு எல்லாம் வெகு விமரிசையாக நடத்தி முடித்தோம். ஓராண்டு முன்னர் திருமணம் முடித்து எங்களை விட்டு சென்றவள் இப்போது எங்களுடன் சில மாதங்கள் தங்கி இருக்கப் போகிறாள் எனும் சந்தோசமே எனக்கு அதிகமாக இருந்தது. அண்ணா அண்ணா என எதற்கெடுத்தாலும் என்னை சுற்றி சுற்றி வருவாள். திருமணம் ஆன பின்னர் வாரம் ஒரு முறை போனில் பேசி விடுவாள் அல்லது நான் பேசி விடுவேன். அவ்வப்போது திருவிழா விசேசங்களில் சந்தித்து கொண்டதுடன் சரி.

நானும் தங்கையும் பேசிக் கொண்டு இருந்தோம்.

''என்ன பிள்ளை எனக்கு பிறக்கும் சொல்லுண்ணா''

''உனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்''

''நிசமாவாண்ணா''

''ஆமா, உனக்கு பெண் குழந்தைதான்''

''எப்படிண்ணா இவ்வளவு உறுதியா சொல்ற''

''பிறந்த பிறகு நீயே ஆச்சர்யப்படுவ''

''எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குண்ணா''

நாங்கள் பேசியது என் அம்மாவுக்கு கேட்டுவிட்டது. 

''ஏன்டா ஆம்பளை புள்ளை பிறக்கும்னு சொல்றதை விட்டுட்டு பொட்ட பிள்ளை பிறக்கும்னு சொல்ற''

''என்னமா பெண் குழந்தைன்னா என்ன, என்னை விட தங்கச்சி நல்லா படிச்சி நல்ல உத்தியோகத்தில் இல்லையா''

''அதுக்கு நான் பட்ட பாடு இருக்கே அது எல்லாம் உனக்கு என்ன புரியப் போகுது''

''அண்ணா, அம்மா கூட சண்டை போடாதே''

எனக்கும் அம்மாவுக்கும் ஏதேனும் வாக்குவாதம் வந்தால் அண்ணா அம்மா கூட சண்டை போடாதே என்று மட்டுமே என் தங்கை சொல்வாள். நானும் அதற்கு பின்னர் வாய் திறப்பதே இல்லை. அம்மா திட்டிக் கொண்டே இருப்பார்கள்.

''வாயில என்ன வார்த்தை வருது, பொம்பள பிள்ளையாம் பொம்பள பிள்ளை. வயித்துல நெருப்பு கட்டிட்டே போராடுற வாழ்க்கை''

அம்மாவின் அந்த வாக்கியத்திற்கு பின்னர் அங்கே இருக்க எனக்கு விருப்பமில்லை. வீட்டில் இருந்து வெளியே கிளம்பினேன். வேறு எங்கு போக போகிறேன். எனது காதலி கனகதுர்க்கை தான் எனக்கு எல்லாம்.

''என்ன ஒரு மாதிரி இருக்கே''

''அம்மா இன்னைக்கு திட்டிட்டாங்க''

''என்ன வம்பு இழுத்து வைச்ச''

''என் தங்கச்சிக்கு பெண் குழந்தை பிறக்கும்னு சொன்னேன். அதுக்கு என்னை திட்டினாங்க''

''ஆம்பளை பிள்ளைன்னு சொல்லி வைக்க வேண்டியதுதான எதுக்கு பெண் குழந்தைன்னு சொன்ன இல்லைன்னா சொல்லாம இருக்கலாம்''

''நீயே இப்படி பேசற''

''என் அக்காவுக்கு இப்படித்தான் பெண் குழந்தை பிறக்கும்னு நான் சொல்லி வைக்க என் அம்மா என்கிட்டே சரியாவே பேசறதே இல்லை. அதுவும் பெண் குழந்தை பிறந்ததும் கருநாக்கு காரினு என்னை அம்மா திட்டாத நாளே இல்லை. ஆனா என் அக்காவோட மாமியாருக்கு கொள்ளை சந்தோசம். முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்தா அவங்க குடும்பம் செழிப்பா இருக்கும்னு சொன்னதால அக்காவை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடினாங்க. ஆனா என் அம்மாவுக்கு என் மேல இன்னும் வருத்தம் போன பாடில்லை.''

''பெண் குழந்தைதானே குழந்தைகளில் சிறப்பு''

''எல்லா குழந்தைகளும் சிறப்புதான், ஆனா பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் படும் அல்லல்கள் குறித்து அக்கறைப்படும் அம்மாக்கள் பெண் குழந்தை வேண்டாம்னு சொல்லிருவாங்க. மத்தபடி பெண்ணுக்கு பெண் எல்லாம் எதிரி இல்லை. எங்கே தான் பட்ட துயரங்களை தனது மகள், பேத்தி படுவாங்கனு அவங்க கவலை''

''உனக்கு என்ன குழந்தை வேணும்''

''ரெண்டும். பெண் இஷ்டம்''

''ஏன்?''

''அழகு படுத்தலாம். நீ கூட உன் சின்ன வயசு போட்டாவுல தலை சீவி பொட்டு வைச்சி பூ சூடி இருப்ப. எல்லா குழந்தையும் பெண் குழந்தையாக பார்க்கிற மன பக்குவம் தாய் கிட்ட இருந்தாலும் பெண் அப்படின்னா கஷ்டம்னு ஒரு எண்ணம் இருக்கு, கூடவே இருக்க முடியாத துயரம். ஆனாலும் எனக்கு பெண் குழந்தை இஷ்டம்''

''சரி இந்த வரி பாரு. 'நமக்கு பெண் குழந்தை பிறக்கும் என எவராலும் எளிதாக சொல்லிவிட முடியும்' எப்படி இருக்கு? ''

''ம்ம் நல்லா இருக்கு''

''என்ன காரணம் தெரியுமா''

''நாம் இருவரும் ஒரே சிந்தனை கொண்டதால் எனது மரபணு x உனது மரபணு x இணையும் சொல்ற விஷயம் தானே''

''ஆமா, எப்படி கண்டுபிடிச்ச''

''உனக்கு வேற என்னதான் தெரியும்''

''அப்போ ஆண் குழந்தை நமக்கு கிடையாதா''

''கூடலின் போது ஊடலுடன் இருப்போம்''

எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. எப்போதும் என்னை ஏதேனும் சொல்லி சிரிக்க வைத்துவிடுவாள்.

என் தங்கையின் பிரசவ தினம் வந்தது. என் அம்மா என்னை கடுகடுவென பார்த்தார்கள். நான் சொன்னபடியே பெண் குழந்தை பிறந்தது. என் மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் கொண்டாடினார்கள். என் அம்மா மட்டும் என்னிடம் வந்து கருநாக்கு பயலே என திட்டிவிட்டு போனார்.

''அண்ணா எப்படிண்ணா கரெக்ட்டா சொன்ன''

''அது வந்து இருக்கறதே ரெண்டு குழந்தை. ஒண்ணு பொண்ணு பிறக்கும், இல்லைன்னா ஆணு பிறக்கும்''

''உனக்கு ஏதோ தெரிஞ்சி இருக்குண்ணா''

''சரி என்ன பெயரு மனசில வைச்சிருக்க''

''கனகதுர்க்கை''

''அது என்னோட ஆளு பேரு''

''அதான் அந்த பேரு''

என் தங்கையின் பாசத்தை என்னால் நிறைய புரிந்து கொள்ள முடியும். வீட்டு வேலை என அம்மா தங்கையை மட்டுமே சொன்னாலும் நான் உதவி செய்வதை வழக்கமாக வைத்து இருந்தேன். சமையலில் கூட அம்மாவுக்கு நிறைய உதவி செய்வதுண்டு. தங்கை நன்றாக படிக்க வேண்டும் எனும் அக்கறை எனக்கு நிறைய இருந்தது. அப்பா என்னை சத்தம் போட்டதுண்டு ஆனால் தங்கையை ஒருபோதும் கோபித்துக் கொண்டது இல்லை.

அப்பா என்னிடம் ஒருமுறை சொன்னார். ஒரு பெண் குழந்தையை பெத்துக்காம எந்த மனுசனோட வாழ்க்கையும் பூர்த்தி ஆகாதுடா. எனக்கு அது எப்போதுமே விளங்கியது இல்லை. அம்மாவிடம் சென்று நான் பேச்சு கொடுத்தேன்.

''இப்ப என்னம்மா அடுத்தவாட்டி பையனை பெத்து தந்துர போறா''

''பேசாம போயிரு''

''இல்லம்மா அது வந்து''

''ஒரு புள்ளையோட நிப்பாட்டுற வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கடா, என் எரிச்சலை கிளப்பாத''

''அம்மா தங்கச்சிக்கு பெண் குழந்தைதான் வேணுமாம்''

''நீ போறியா இல்லையா''

அம்மாவின் கோபம் அடங்கவே இல்லை. ஒருநாள் நான் அம்மா அப்பா ராமசாமி தாத்தா உடல் நலன் சரியில்லாமல் இருந்ததால் பார்க்க போயிருந்தோம். பேச முடியாமல் பேசினார்.

''எத்தனைஆம்பளை புள்ளை பெத்தேன், ஒன்னே ஒண்ணு பொம்பள புள்ள. இந்த கடைசி காலத்தில அந்த பிள்ளை தான் எனக்கு கஞ்சி ஊத்தி நல்லது கேட்டது பாக்குது''

அவர் வார்த்தை தடுமாறி வந்து விழுந்தது.

''அப்பா, எதுக்கு அதை எல்லாம் நினைக்கறீங்க'' என அவரது மகள் சொன்னபோது எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. சிறிது நேரம் பேசிவிட்டு வீடு நோக்கி நடந்தோம். அம்மா என்னிடம் அன்றிலிருந்து என்னிடம் கோபம் கொள்வதே இல்லை.

நானும் மனதில் உறுதியுடன் கூடலின் போது ஊடலே வேண்டாம் என கனகதுர்க்கையிடம் சொல்லி  வைத்தேன்.