Tuesday, 10 June 2014

பயந்த சுபாவம்

எனக்கு நிறைய கடவுள் பக்தி உண்டு. காலையில் குளித்த பின்னர் திருநீறு அணியாமல் நான் எங்கும் செல்வது இல்லை. மிகவும் பயந்த சுபாவம் எனக்கு உண்டு. ஊருக்குள் குடுகுடுப்பைக்காரர் வந்தாலோ சாட்டையால் தன்னைத்தான் அடித்துக் கொண்டு வருபவர் கண்டாலோ மிகவும் அச்சமாக இருக்கும்.

ஒரு முறை அவளைப் பார்த்தேன். அவளை எனக்குப் பிடித்து போனது. தைரியத்துடன் நீ அழகாக இருக்கிறாய் என சொல்லிவிட்டு என் வீட்டுக்கு ஓடிப்போனேன். மிகவும் பயமாக இருந்தது. என்னடா ஒரு மாதிரியாக இருக்க என அம்மா கேட்டார். ஒன்னுமில்லை என்று சொன்ன என்னைப் பார்த்து வெலவெலத்துப் போயிருக்க, யாரும் திட்டுனாங்க, என்றார். இல்லைம்மா, ஒரு பெண்ணை அழகாக இருக்கனு சொல்லிட்டு வந்துட்டேன், அதான் பயமா இருக்கு. யாருடா அது, இப்ப அதுக்கு எதுக்கு பயப்படற என்னமோ கையப் பிடிச்சி இழுத்தவன் மாதிரி, ஆமா எங்க பார்த்த  என அம்மா கேட்டார்.

கோடாங்கி தாத்தா தெரு என்றேன். பேய் ஓட்ட வந்த பெண்ணாக இருக்கப் போவுது, வா என் கூட என்றார். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. வேணாம்மா, எதுக்கு பிரச்சினை என்றபோதும் என்னை அம்மா வம்பாக இழுத்துக்கொண்டு போனார். கோடாங்கி தாத்தா வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இருந்த அவளை கைகாட்டினேன்.

நீ எந்த ஊரு? யார் மக? என அம்மா கேட்டதும் பழகியவள் போல ஊரு புளியந்தோப்பு சுப்பு சார் மக என்றாள். புதுசா குடி வந்து இருக்கீங்களா? என கேட்டதற்கு இல்லை, என் சித்தி பெண்ணுக்கு பேய் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க அதான் குறி பார்க்க வந்து இருக்கோம். என்றாள். இத்தனை சகஜமாக பேசுகிறாளே என நினைத்தேன்.

ஓஹோ, யாரையாவது லவ்வு பண்ணுதா உன் சித்தி பொண்ணு என அம்மா கேட்டதும், என்னம்மா இப்படி கேள்வி கேட்குற என நான் சொல்லி முடிக்கும் முன்னரே, ஆமா ஒரு பையனோட சுத்துறா என்றாள் அவள். அதானே பார்த்தேன், அவளை அவனுக்கு கட்டி வைச்சா சரியா போயிரும் அதுக்குப் போயி பேயி பிசாசுனுகிட்டு என்றார் அம்மா. சரி என சொல்லிக்கொண்டு கோடாங்கி தாத்தா வீட்டுக்குள் சென்றாள்.

எவடி அவ சொன்னது? என் பிள்ளைக்கு காதல் கல்யாணம் பண்ணிவைக்க அவ யாரு என்றபடி கோடாங்கி தாத்தா வீட்டினுள் இருந்து அவளது சித்தி கத்தியபடி வந்தார். என் அம்மாவை கைகாட்டினாள் அவள். ஏண்டி என ஆரம்பிக்கும் முன்னர் கொஞ்சம் நிதானமாக யோசிங்க என அவரை வீட்டுக்கு அழைத்தார் என் அம்மா. அவர்கள் அனைவரும் அம்மாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

அம்மா அவர்களுடன் நிறைய பேசினார். சம்மதம் சொன்னார்கள். அப்போதுதான் சுப்பு சார் இறந்தது எல்லாம் தெரிந்தது. அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. புளியந்தோப்புக்கு தினமும் செல்வதையும் ஆவலுடன்அவளுடன் பேசுவதையும் வழக்கமாக கொண்டு இருந்தேன். அவள் ஒருமுறை அவளுக்கும் பேய் பிடிக்கும் என சொன்னது எனக்கு சிரிப்பாக இருந்தது. என்னை ஊரில் ஒருமாதிரியாக பேச ஆரம்பித்து இருந்தார்கள். என்ன  மாப்ளே புளியந்தோப்புல வேலை என நக்கல் பண்ணினார்கள். பயம் இருந்தாலும் வறட்டு தைரியம் என்னை விடாமல் துரத்தியது. அம்மாவும் கேள்வி பட்டார்கள்.

நேத்து எங்க போன என்றபோது அவளை பார்க்க போனேன் என்றேன். அன்பு இருக்குமிடத்தில் பயம் அற்றுப் போகிறது. அந்த நேரம் வீட்டுக்குள் வந்த அப்பா ஓங்கி என் கன்னத்தில் அறைந்தார். தெருப் பொறுக்கித் தனமா பண்ற என்ற வார்த்தைகள்தான் நிறைய வலி வந்தது. அப்பா நிறையவே பயம் காட்டினார். அம்மாவுக்கும் ஒரு அடி விழுந்தது என அம்மா பிற்பாடு சொன்னார். என் எதிரில் அம்மாவை ஒருநாளும் அப்பா அடித்தது இல்லை. இதுவே முதல் அடி என நினைக்கத் தோணியது.

நான் அவளை சென்று பார்ப்பதை தவிர்த்து இருந்தேன். சில நாட்கள் பின்னர் அம்மா எனும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தால் அவள் நின்று கொண்டிருந்தாள். யாரு என்ன வேணும் என அப்பா குரல் உயர்த்தும் முன்னர் உள்ள வாம்மா, உட்கார் என்றார். புளியந்தோப்பு பெண் என அம்மா அப்பாவிடம் அப்போதுதான் அறிமுகம் பண்ணினார்.

நல்லா இருக்கியாம்மா என்ற அப்பாவின் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அப்பா வீட்டுக்கு எவர் வந்தாலும் மரியாதை தரும் வழக்கம் கொண்டவர். தவறானவர் எனத் தெரிந்தால் வீட்டுக்கு வெளியில் செமத்தியாக அவருக்கு அடி விழும். அவளுடன் நிறைய பேசினார். சாப்பிட்டு போம்மா என அப்பா சொன்னது கனவோ என்றே நினைத்தேன். அன்று நிறைய சாமி கும்பிட்டேன். அவள் மாலை வரை வீட்டில் இருந்தாள்.

வெளியில் சென்று திரும்பிய எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்ன என அம்மாவிடம் விசாரித்தேன். அவளை பெண் பார்க்க வருவதாகவும், நம்மை பெண் பார்க்க வரச் சொல்வதாகவும் சொன்னார். அப்பாவை நினைச்சா பயமா இருக்குடா என்றார். அப்பா வந்த பின்னர் அம்மா மென்று விழுங்கி எல்லாம் சொன்னார். அப்பா சரிம்மா ஆகட்டும் என்றாரே பார்க்கலாம். என்னால் என்னை நம்பவே முடியவில்லை. அந்த சனிக்கிழமை பெண் பார்க்க சென்றோம். மூத்தவ இவ இருக்க இளையவளுக்கு எப்படி கல்யாணம் பண்றதுன்னு இவளுக்கு அவசர கல்யாணம் என்று சொன்னார்கள். எல்லாம் பேசி முடிவானது. அவர்களும் சம்மதம் சொன்னார்கள்.

எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என எப்படி சொல்வது என தெரியாமல் தவித்தேன். என்ன ஒருமாதிரி இருக்க என அம்மா கேட்டபோது கல்யாணம் இப்ப பண்ணனுமா என யோசிப்பதாக சொன்னேன். என்ன என கேட்டார். அதில்லைம்மா, அழகா இருக்கறதை வைச்சி பேசறதை வைச்சி அவசர முடிவுன்னு யோசிக்கிறேன். அதுவும் நாலு காசு இன்னமும் சேர்த்து வைக்கலை அதான் பயமா இருக்கு என்றேன். அதற்குள் மூன்று மாதத்தில் கல்யாணம் என அப்பா நாள் குறித்து வந்தார்.

இதுவே பெரும் குழப்பம் தந்து கொண்டு இருந்தது.அவளிடம் கல்யாணம் வேண்டாம் என சொன்னால் அவளை வேறு எவருக்கேனும் கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்கள் என்பது பயம் தந்து கொண்டு இருந்தது. அன்று இரவு நான் தொலைந்து போனதால் கல்யாணம் நின்று போனதாக கனவு கண்டேன். அதுவே தீர்வா? ஒருமுறை என் சித்தப்பா மகன் இப்படித்தான் தொலைந்து போனார். தேடி சலித்து விட்டோம். பதினைந்து நாட்கள் பின்னர் வீடு சேர்ந்தார். அவரை எவரோ கடத்தி சென்றுவிட எப்படியோ தப்பித்து கோவை நகரில் ஹோட்டலில் வேலை பார்த்து வீடு சேர்ந்த கதை திகிலூட்டியது. தனியாய் ஆதரவற்று அல்லல் படுவது துயரம் என்றே அன்று அறிந்தேன். அவளை சந்திக்க நினைத்தேன். என் மனதில் உள்ளதை தயங்கி தயங்கி சொன்னேன். கல்யாணம் பண்ணிக்கொண்டு குடும்பம் இல்லாமல் இருப்போம் என்றாள். சரியெனப்பட்டது.

கல்யாணம், பெண் என்றாலே நேர்மறை எண்ணம் கிடையாது போல, அடிமைக்கு வாழ்த்துகள் என்றார்கள். நிறைய அச்சப்பட்டேன். மணநாள் நெருங்கியது. திடீரென அவளது வீட்டில் இருந்து திருமணம் நிறுத்த வேண்டும் என சொன்ன செய்தி அதிர்ச்சி அளித்தது. அப்பா சென்று விசாரித்து வந்தார்கள். நானும் உடன் சென்று இருந்தேன். சித்தியின் பெண் ஓடிப்போன செய்தி அவர்களை நிலைகுலைய செய்தது. அவசரப்பட்டு ஓடிப் போய்ட்டாளே என அவர்கள் அரற்றியது கண்டு அப்பா ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்தார். அப்பா இந்த முறை தனது நண்பர்களிடம் எல்லாம் சொல்லி தேடினார். சித்தப்பா பையனை தேடியது விட இப்போது சுலபமாக இருந்தது.

பையனின் வீடு போர்க்கோலம் பூண்டது. பெரும் சண்டை நடந்தேறியது. அப்பா மட்டும் இல்லை என்றால் ஒரு கொலை அன்று விழுந்து இருக்கும். நான் வீட்டுக்குள் பயத்தில் ஒளிந்து கொண்டேன். சாமி காப்பாத்து என வியர்த்துக் கொட்டிக்கொண்டு இருந்தது. வம்பு பண்ணியவர்களை அனாயசமாக அடித்து வீழ்த்தினார். உங்க குடும்பம், எங்க குடும்பம்தான் பிரச்சினை ஊருல இருக்கிற சல்லிப்பயக உள்ள வந்தா நடக்கறது வேற என அப்பாவின் குரலில் அங்கே இருந்தவர்கள் நடுங்கினார். அப்பாவின் நண்பர்கள் அங்கே எப்படி உடனே வந்தார்கள் என எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

வீட்டுக்குள் ஒளிந்து இருந்த என்னை ஏன்டா அங்க வெட்டு குத்து நடக்குது பொம்பளையாட்டம் உள்ள ஒளிஞ்சி வேடிக்கை பார்க்கிற, உசிரு மேல ஆசை? உன்னை என அறை தரப் போனார். மாமா என அவள் வந்து தடுத்தாள்.தோணுகால் நோக்கி நடந்தோம். அங்கதான் அவங்க இருக்காங்க என்றனர் அப்பாவின் நண்பர்கள். பையனின் குடும்பமும் உடன் வந்தது. அப்பா அவர்களைப் பார்த்து திட்டினார். அப்பாவின் வசவுகள் அவர்களை அழ வைத்தது. காதல்னா தைரியம் தரனும் இப்படி ஓடி ஒளிஞ்சா போதுமா? நானும் தான் அன்னைக்கு காதல் கல்யாணம் பண்ணினேன். அப்பாவின் கதை கேட்டு அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள். எனக்கு உள்ளூர பயம் போனதே இல்லை.

எப்படி ஓடினீங்க, பயமா, தைரியமா.என் அப்பா அவனது குடும்பத்தை சம்மதிக்க வைத்தார். இரண்டு திருமணங்களும் ஒரே நாளில் நடக்கட்டும் என சொல்லிவிட்டு ஏதாவது தப்பு நடந்துச்சி நடக்கறதே வேற என அப்பாவின் கர்ஜனையை கேட்டு ஊரே நடுங்கியது. அப்பா நடந்த சிங்க நடையில் நான் சிறு எலியாய் தெரிந்தேன். இந்த வீரம் குறித்து அறியத் தொடங்கினேன்.

அப்பா, எப்படி வீரனாக இருப்பது என பயத்துடன் கேட்டேன். புறம் பேசுதல், மற்றவரை மட்டம் தட்டுதல், தவறாக நடத்தல் எல்லாம் செய்யாதே. அதுதான் வீரத்துக்கு முதல் படி. உன்னை உயர்வாக நினை என அப்பா சொன்னது பிடித்து இருந்தது. அப்பாவிடம் நெருங்கி பழக பயமாக இருக்கும். வீரனாக முடிவு எடுத்து அய்யனார், கருப்பசாமி என சாமி கும்பிட ஆரம்பித்தேன். அப்பாவின் வரவு செலவு நோட்டு புத்தகம் பார்த்தபோது அதில் ஒரு வாசகம் அன்று கண்ணில் பட்டது. கோழையாய் இருப்பவனே ஏழை.

ஒருமுறை ஊரில் பிரச்சினை வந்தது. அங்கே தப்பு செய்தவர்களை எல்லாம் புரட்டி எடுத்தேன். பின்னர் தான் அது கனவு என தெரிந்தது. மனம் தைரியம் வேணுமெனில் உடல் தைரியம் அவசியம். உடல் உறுதிபட உள்ளம் உறுதிப்பட்டது. நேர்மையாக் இருந்தேன். ஆமாம் இந்த பயத்துக்கு மரபணு உண்டா என தேடினேன். அவளிடம் கேட்டேன். உண்டு என்றாள். நமக்கு உண்டாகும் பயம் யாவும் இந்த மரபணுக்களின் செயலால் வருவது அதை நமது எண்ணத்தால் மாற்ற இயலும் என்றாள்

உயிரினங்களில் பயம் என்பது பாதுகாப்பு காரணி. தன்னை தற்காத்து கொள்ள பயமே முதல், பின்னர் தைரியம் என அறிந்தேன். பயந்த சுபாவங்கள் உடையவர்கள் வாழ்வில் முன்னேற முடிவதில்லை. ஆனால் இந்த சமூகம் பயத்தினால் ஒடுங்கிப் உள்ளது.

பயத்துடனே தனது குடும்பம் பிள்ளைகள் என வாழும் பெரும்பாலான மக்கள் மத்தியில் என் அப்பா வித்தியாசமாக இருந்தார். பயந்த சுபாவத்தை தொலைக்க ஆரம்பித்து இருந்தேன் அவளை கை  பிடித்ததும்.

Thursday, 22 May 2014

இந்த கதை தெரிகிறதா?

பத்தாம் நூற்றாண்டில் ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் காம களியாட்டங்களில் தனது மனைவியுடன் ஈடுபட்டு கொண்டிருந்தான். இதனால் நாட்டின் மீது அவனால் அக்கறை செலுத்த முடியவில்லை. இதைக் கண்ட அமைச்சர் மன்னன் மீது வெறுப்பு அடைந்தான்.

''மன்னா, உங்களது நடவடிக்கைகள் மிகவும் அச்சுறுத்தலை தருகிறது''.

''என்ன அமைச்சரே, திடீரென உயரிய சிந்தனை''.

''மன்னா, நீங்கள் எப்போதும் மகாராணியாருடன் மஞ்சத்தில் பள்ளி கொண்டு இருப்பதால் மக்கள் பஞ்சத்தில் தத்தளிக்கிறார்கள்''

''அமைச்சராகிய நீங்கள் என்ன கிழித்து கொண்டு இருக்கிறீர்கள்?''

''நான் என்னால் முடிந்த காரியங்களை செய்து வருகிறேன், மன்னன் சொல்லட்டும் சொல்லட்டும் என நண்டு சிண்டுகள் எல்லாம் என்னை ஏளனமிட்டு பேசி தொலைக்கின்றன''

''அமைச்சரே, மகாராணியார் கர்ப்பமாக இருக்கிறார், எனவே எனக்கு அவருடன் இருப்பதுதான் முக்கியம், நாடு அல்ல''

''மன்னா, இது மிகவும் தவறு. உங்களால் முடியாது எனில் நான் அதுவரை மன்னன் பொறுப்பில் இருந்துவிட்டு கவனித்து கொள்கிறேன், எப்போது நாட்டின் மீது அக்கறை கொள்ள முடியுமோ அப்போது வாருங்கள்''

''மன்னர் பதவி மீது ஆசை வந்துவிட்டதா அமைச்சரே''

''இல்லை மன்னா, மக்கள் நலம் தான் நமக்கு முக்கியம்''

''நாடு சுபிட்சமாகத்தானே இருக்கிறது, பஞ்சம் என நீங்கள் பஞ்சப்பாட்டு பாடுவது பதவிக்கு குறி வைப்பது போல் அல்லவா இருக்கிறது''

''எனது அமைச்சர் பதவியை துறந்து செல்வது தவிர வேறு இல்லை, நீங்கள் பள்ளியறை விட்டு வெளியே வருவதே இல்லை, எப்படி நாட்டின் நிலைமை புரியும். நீங்கள் எப்போது முடியுமோ அப்போது வாருங்கள், மன்னர் பதவியை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்''

''அமைச்சரே, மன்னன் பதவியை எடுத்துக் கொள்ளும், நானே நாளை அறிவிக்கிறேன்''

''நல்லது மன்னா''

அமைச்சர் தன வீடு செல்கிறார். தனது மனைவியிடம் ஆலோசனை செய்கிறார்.

''நாதா, நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள்''

''நாட்டிற்கே ஆலோசனை சொல்லும் நான் உன் ஆலோசனை கேட்கும் நிலை வந்துவிட்டது, என்ன சொல்''

''அரசாட்சி ஏற்றதும் அந்த காமத்தில் மூழ்கி கிடக்கும் அந்த நயவஞ்சக அரசரை கொன்று விடுங்கள். வயிற்றில் பிள்ளை சுமக்கும் அந்த பாதகியை நாடு கடத்தி விடுங்கள்''

''உனக்கு எதற்கு இந்த வன்மம்''

''என்னிடம் அந்த மன்னர் பலமுறை தவறாக நடக்க முயன்றார், இதை உங்களிடம் எப்படி சொல்வது என நினைத்து இருந்தேன்''

''உன்னிடமே அப்படி நடந்து கொண்டானா?''

''ஆம்''

அமைச்சர் யோசித்தார், மன்னர் அப்படி நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை. தனது மனைவிக்கு எப்போதும் மகாராணியாக இருக்கும் ஆசை வந்துவிட்டது. எனவே அவள் சொல்படி செய்வோம் என நினைத்தான்.

அமைச்சர் அரசன் ஆனான். அரசரை கொன்றான். மகாராணி நாடு கடத்தப்பட்டார். மகாராணி ஒரு பையன் பெற்று எடுத்தார. அந்த பையனிடம் தனது கதைகள் சொல்லி வளர்த்தார்.

'அம்மா, எப்படியாவது அந்த அமைச்சரை பழி தீர்த்து நாட்டை கைப்பற்றுவேன்'

''ஆனால் உன் அப்பா போல் பெண்ணிடத்தில் மயங்கி இருக்காது இருந்தால் மட்டுமே சாத்தியம்'

''நான் அப்படி செல்ல மாட்டேன், அப்படி சென்றாலும் இந்த அமைச்சரை பழி வாங்காமல் விடமாட்டேன்''

பையன் பல கலைகள் கற்று வளர்ந்தான்.

''அம்மா, இந்த பெண் உனக்கு பிடித்து இருக்கிறதா'

''என்ன காரியம் செய்ய தொடங்கி இருக்கிறாய். உனது அப்பாவின் பாதையை நீயும் தேர்ந்து எடுக்கிறாயா'

'பதில் சொல்ல இயலாது, அந்த அமைச்சர் அழிவது உறுதி'

முதலில் ஒரு பெண், இரண்டாவது ஒரு பெண் என ஏழு பெண்களை அழைத்து வந்து அனைவரையும் மணம் முடித்தான்.

''நீ செய்வது மிகவும் மோசமான காரியம்''

''நான் பெண் பித்தன் இல்லை. எனக்கு இவர்கள் எல்லாம் ஒவ்வொரு வழியில் உதவியாக இருக்கிறார்கள், அவர்களுக்குள் எவ்வித மன வேறுபாடு இல்லை. எனவே நீங்கள் பயப்பட தேவை இல்லை''

''உனது செயல் அழிவுக்கு தான் மகனே''

''அம்மா, இந்த பெண்கள் எல்லாம் ஒவ்வொரு சிற்றரசர்களின் இளவரசிகள். அவர்களை தேர்ந்தெடுத்து நான் மணமுடித்தேன், இப்போது புரிகிறதா ராஜதந்திரம்''

''மகனே''

''நாளை போர் நடக்க இருக்கிறது, வாழ்த்தி அனுப்புங்கள்''

தனது தந்தையின் நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி வாகை சூடுகிறான்.

''அமைச்சரே''

''நான் மன்னன்''

''என் தந்தைக்கு நீ தான் அமைச்சர்.என்னை எவர் என தெரிகிறதா''

''அன்றே உன்னை நான் கொன்று இருக்க வேண்டும்''

''அது உன் முட்டாள்தனம்''

''என் தந்தையை கொன்ற உன்னை கொல்வது எனக்கு உத்தமம்''

''என்னை ஒன்றும் செய்து விடாதே, நாங்கள் வேறு எங்கேனும் பிழைத்து போகிறோம்''

''நாளை முடிவு சொல்கிறேன்''

தனது குருவை சென்று பார்க்கிறான்

''குருவே வணக்கம்''

''போர் எடுத்து சென்றாயா''

''ஆம்''

''நீ இப்படி நடந்து கொள்வது முறையல்ல, நீ இறைவன் பணி ஆற்றி மகிழ்ந்து இருக்க வேண்டும்''

''அந்த அமைச்சரை பழி வாங்க வேண்டும்''

''கூடாது, நீ பல பெண்களை மணம் முடித்தது எல்லாம் இந்த இறைவன் அடி சேரத்தான், அதற்காகவே நான் எதுவும் உன்னை சொல்ல வில்லை. நீ அரசராக இருந்து கொள் ஆனால் கொலைப்பாதகம் செய்யாதே அன்பை, அமைதியை உலகில் நிலைநாட்டு''

''அப்படியெனில் நான் என்ன செய்ய வேண்டும்''

''ஒரு யோசனை சொல்கிறேன்,கேள்''

''சொல்லுங்கள் குருவே''

''அந்த அமைச்சரின் மகளை எட்டாவதாக மணம் முடித்துக் கொள்''

''சரி குருவே''

''அவர்கள் உனக்கு எதிரியாக இருக்கமாட்டார்கள். இப்போது எல்லா ராஜ்ஜியங்களிலும் நீயே அரசர், இளவரசர் எல்லாம். எனவே இறைப்பணி ஆற்று. உலகில் அமைதி ஒன்றே குறிக்கோள். அன்பை நிலைநாட்டிட போராடு''

''அப்படியே ஆகட்டும் குருவே''

அமைச்சரின் மகளை எட்டாவதாக மணம் முடிக்கிறான். ரத்தமும், போரும் என கண்ட பூமி அன்றிலிருந்து அமைதி உருவாய் தொடங்கியது.

இந்த கதைக் கருவை திருடிய இடம் நீங்கள் கண்டு பிடித்து விட்டால் கண்டுபிடிக்கப்பட்ட இடம் பொறுத்து ஒன்று நீங்கள் தமிழ்ப் புலமை உடையவர்கள் அல்லது சினிமாப் பைத்தியம்.

Monday, 19 May 2014

வானத்தைக் காணோம்

'அம்மா, வானத்தை காணோம்' என கத்தினேன்.

'பக்தா, என்ன வானத்தை காணோம் என கத்துகிறாய்'

'வானம் இல்லை, வாங்க காட்டுகிறேன்' என வெளியே ஓடினேன். கும்மிருட்டாக இருந்தது. சாமியார் என்னை தொடர்ந்து வந்தார்.

'என்ன பக்தா, வானம் அதோ தெரிகிறதே'

'இல்லை, ஒன்றுமே தெரியவில்லை. வானம் காணாமல் போய்விட்டது'

'பக்தா, என்ன உளறுகிறாய்?'

'வானம் நமது சூரிய குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது. ஒளிக்கீற்று பல வண்ணங்களை உருவாக்கும் வல்லமை கொண்டது. நமது பூமியில் நீல நிறத்திலும் செவ்வாயில் சிவப்பு நிறத்திலும் இந்த வானம் பகலில் தென்படும். ஒளியானது துகள்களில் மீது பட்டு இத்தகைய வண்ணம் ஏற்படுத்துகிறது'

'பக்தா, இந்த வானம் பிரபஞ்சத்தில் உள்ள மாயத்தோற்றத்தில் ஒன்று. நமது சூரிய குடும்பத்திற்கு மட்டுமல்ல சொந்தம் இது. மொத்த பிரபஞ்சத்திற்கும் உண்டான ஒருவித சொந்தம்'

'இல்லை இல்லை. நீங்கள் வானம் ஏறி வைகுண்டம் போவது குறித்து சொன்னீர்கள், எனவே வானம் ஏறினால் அதற்கு பின்னர் வைகுண்டம் தானே'

'பக்தா, அது வேறு இது வேறு'

'எது வேறு'

'வைகுண்டம் என்பது வேறு, வானம் வேறு'

'நட்சத்திரங்கள் வானத்தைத் தாண்டி தானே இருக்கிறது, வானம் பூமிக்கே சொந்தம்'

'பக்தா, வானம் என்பது என்னவெனில் நமக்கு மேல் உள்ளது எல்லாம் வானம். இப்போது பூமிக்கும் நமக்கும் மேல் உள்ள ஒரு பொருளுக்குமான தொடர்பே வானம். தொடுவானம் கேள்விபட்டது உண்டா, அது போலவே ஒரு தொலைவுக்கு உண்டான எல்கை'

'வானத்தைக்  காணோம்'

'பக்தா, பூமிக்குள் நாம் இல்லை. பூமிக்கு மேலே இருக்கிறோம். எப்படி சொல்வது. பறவை எடுத்துக் கொள், பறவை மீது நீ அமர, பறவை பறக்க மேலே வானம், கீழே பூமி. சரியா?'

'என்னை சுமக்கும் அளவுக்கு பறவை உண்டா?'

'இப்ப எதற்கு அந்த கேள்வி, இதுவே நீ பறவையின் வயிற்றில் போனால், உனக்கு பறவையின் உடலே எல்லாம். அது போலவே பூமி மீது நீ, அதன் மேல் இருப்பது வானம். இப்போது நீ பிரயாணம் செய்து வேறொரு நட்சத்திரம் செல்'

'நான் எதற்கு செல்ல வேண்டும்'

'அங்கே வானம் இருக்கும்'

'நமது வானம் அங்கே இருக்குமோ?''

'அதற்கே உண்டான ஒரு வானம், அங்கே எல்லாம் வியாபித்து இருக்கும்'

'எனக்கு புரியும்படி சொல்லுங்கள்'

'இது ஒரு மாபெரும் வெளி. அதாவது ஒரு பாய் எடுத்து விரித்துக் கொள்வோம்'

'சாமி, கில்மா கதை எதுவும் சொல்ல போறீங்களா?

'பக்தா, எனது சாபத்திற்கு நீ ஆளாக நேரிடும். என்னிடம் நீ முறையோடு பேச வில்லையெனில் நான் எப்படி நடந்து கொள்வேன் என உனக்குத் தெரியாது'

'இப்ப என்ன கேட்டுட்டேன்'

'வானத்தைக்  காணோம் என்ற உனக்கு வழி சொல்ல வந்தோம்'

'சொல்லுங்க சாமி'

'பாய் ஒரு பிரபஞ்சம். அந்த பாயில் வடகம் போடுவோம்'

'வட்டமாகவா, நீளமாகவா சாமி'

'இதை எல்லாம் எவரும் ரசிக்க மாட்டர்கள், நீ வாய் மூடி இருக்கவும்'

'ஒவ்வொரு வடகமும் ஒரு சூரிய குடும்பம். அந்த அந்த  வடகத்திற்கு ஒரு வானம் உண்டு. எல்லா வடகங்களுக்கும் பாய் ஒரு வானம்'

'பாய் ஒரு பிரபஞ்சம்'

'இல்லை பாய் ஒரு வானம்' 

'சாமி, அப்படியெனில் வானத்தைக் காணோம்'

'இல்லை, வானம் என்பது பொதுவான ஒன்றாகவே இந்த அண்ட வெளியில் சொல்லப்பட்டு வருகிறது. எனவே பூமிக்கு வானம் உண்டு, வானமே அந்த பிரபஞ்சத்தில் உண்டு'

'அந்த வானத்தைக் காணோம் சாமி'

எந்திருடா, வேலைக்கு போகாம இன்னும் தூங்குற

வெளியில் வந்து பார்த்தேன். வானம் மஞ்சள் கலந்து எழுந்து  இருந்தது. சாமியார் இப்படி என்னை தொல்லை பண்ணுவார் என நினைக்கவே இல்லை.

வானம் என்றால் என்ன?

'A sky is the region of atmosphere or outer space seen from the earth' 

ஒருவேளை செவ்வாயில் நாம் இருந்தால் 'A sky is the region of atmosphere or outer space seen from the mars'