Friday 7 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 2

காரினை நடு சாலையில் நிறுத்திவிட்டு, சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களிடம் பேசி அவர்களை அழைத்து வந்தார் டிரைவர். நானும் இறங்கி கொள்கிறேன் என நான் சொல்ல, வேண்டாம் சார் என்றே சொன்னவர் அந்த மூன்று நபர்கள் காரினை தள்ள, கார் ஏனோ கிளம்பவே இல்லை. அவர்கள் காரினை சாலையின் ஓரமாக தள்ளிவிட்டு  சென்றுவிட்டார்கள். 

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் எதுவுமே வேகமாக செல்லாமல் இருந்தது மனதில் அச்சத்தை விலக்கி இருந்தது. மீண்டும் காரில் இருந்து இறங்கிய டிரைவர் வேறு ஆட்களிடம் பேசிவிட்டு வந்தார். வாகனங்கள் கிளம்ப, பேசி வைத்த ஆட்கள் மறக்காமல் வந்து காரினை தள்ளினார்கள். கார் இந்த முறை கிளம்பியது. காரினை தள்ளியவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டோம். ஓகே என ஒரு வார்த்தையோடு விலகிப் போனார்கள். யார் இவர்கள்? உதவி என கேட்டதும் ஓடோடி வந்து செய்துவிட்டு போகும் யார் இவர்கள்? 

லண்டனில் ஏழு வருடங்கள் முன்னர் மாலை ஏழு மணிக்கு சாலையில் திடீரென நின்று போன எனது காரினை நான் மட்டுமே தள்ளி சென்ற நினைவுகள் வந்தது. அதிகமான வாகனங்கள் சாலையை அலங்கரித்தாலும் அவரவர் வேகம் அவரவருக்கு தெரிந்தே இருக்கிறது. யார் மீதும் அத்தனை எளிதாக மோதமாட்டார்கள் என டிரைவர் சொன்னபோது எத்தனை நெருக்கடியிலும் வாழப் பழகிப் போன இந்திய சமூகம் மனதோடு நின்றது. 

மகாபலிபுரம் சாலை என நான் தவறாக தகவல் தர, ஈ சி ஆர் சாலையில் செல்லாமல் மகாபலிபுரம் சாலையில் சென்று ஓரிடத்தில் விசாரித்தபோது இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும் என சொன்னார் ஒருவர். அவர் சொன்ன பின்னர் தான் எனக்கு ஈ சி ஆர் சாலையே நினைவுக்கு வந்தது. ஈ சி ஆர் சாலை நேர் பாதை. மகாபலிபுரம் சாலை சுற்றுப் பாதை. ஒரு வழியாக ஹோட்டல் வந்தடைந்தபோது போதும் போதும் என்றாகிவிட்டது. இத்தனை தொலைவிலா ஹோட்டல் என சற்று அயர்ச்சியாக இருந்தது. சென்னை நகரத்துக்குள் செல்ல மலைப்பாக இருந்தது. 

ஹோட்டல் சென்றதும், அங்கே மாலை போட்டு வரவேற்றார்கள். மிகவும் சிறப்பான வரவேற்பாக இருந்தது. தனியாக வில்லா ஒன்றை பதிவு செய்து இருந்தோம். வில்லாவிற்கு வெளியே ஊஞ்சல். வில்லாவில் இருந்து நடக்கும் தொலைவில் கடல். மிகவும் ரம்மியாமாக இருந்தது. அறையின் அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. திறந்த வெளியில் குளிக்கும் வண்ணம் ஒரு அறை இருந்தது. அந்த அறையை சுற்றிய சுவர் இருப்பினும், வெளியில் இருந்து பார்த்தால் மூங்கில் வைத்து கட்டப்பட்டு இருந்தது. விலை அதிகம் தான். ஆடம்பரத்திற்கு எப்போதுமே விலை அதிகம் தான். சில நேரங்களில் வாய்ப்புகளை பயன்படுத்தாது போனால் வேறொரு வாய்ப்பு அத்தனை எளிதாக வந்துவிடுவதில்லை. சிறிது நேரம் ஒய்வு எடுத்துவிட்டு சென்னை நகரத்திற்குள் சென்றோம். 

வாகனத்தை ஒரு சாலை விதி கண்காணிப்பாளர் நிறுத்தினார். டிரைவர் அவரிடம் சென்று பேசி நூறு ரூபாய் அபராதம் கட்டிவிட்டு வந்தார். என்னவென விசாரித்ததில் வாகனத்தின் கண்ணாடியில் குளிர்ச்சிக்காக ஒட்டப்பட்ட தாளினை அகற்ற வேண்டும் எனும் விதி உள்ளது என சொன்னார். இருப்பினும் இது குறித்து வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது என சொன்னதும், இதெல்லாம் பிரச்சினை இல்லை என்று சொன்னார். எனக்கு ஏனோ எதற்கு விதிகள் மதிக்கப்படுவதில்லை என்றே தோன்றியது. உடனே எடுத்துவிடுங்கள் என டிரைவர் நண்பரிடம் சொல்லிவைத்தேன். மதுரைக்கு சென்ற பின்னர் எடுத்துவிடலாம் என்றே சொன்னார். 

சாலையின் தன்மை என்னை மிரள செய்தது. வேலை நடக்கிறது என எங்கே பார்த்தாலும் சாலைகள் தங்களது அழகை சூறையாடிக் கொண்டிருந்தன. புதிதாக கட்டப்பட்ட எக்ஸ்பெராஸ் மால் சென்றோம். கட்டிடத்திற்குள் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. ஆடம்பரத்திற்கு விலை மிக மிக அதிகம். மனைவிக்கு மிகவும் சந்தோசம். சிறிய சிறிய கடைகளாக இருந்தாலும் மிகவும் அழகிய பொருட்கள் நிறைந்தே காணப்பட்டன. இந்தியா கலைக்கு மட்டுமல்ல, கலைத்துவம் வாய்ந்த பொருட்களுக்கும் உன்னதமான இடம். கண்ணில் எடுத்து ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது. ஒரு கடையில் அந்த பொருட்களை செய்து கொண்டிருந்தவரை கண்டபோது பிரமிப்பு மிஞ்சியது. எத்தனை திறமையான மனிதர்களை கொண்டது இந்தியா என்று நினைக்கும் பொது பெருமிதமாக இருந்தது. அவரிடம் நான் பேசிய தமிழ் அவருக்கு புரியாமல் போனதற்கு காரணம் அவர் வடநாட்டினை சேர்ந்தவர் என்பது பின்னர் தெரிய வந்தது. 

துணிகள் வாங்கி அங்கேயே தைக்க கொடுத்துவிட, மாலை ஆறு மணிக்கு வாருங்கள் என அவர்கள் சொல்லி வைக்க, நகைக் கடை ஒன்றுக்கு சென்றோம். பணம் இல்லை என்கிற புலம்பல் ஒரு பக்கம். மக்கள் நிறைந்த கடைகள் என மறுபக்கம். மேல்தட்டு மக்கள், கீழ்தட்டு மக்கள். எல்லா நாட்டிலும் உண்டு. பழைய நகை கொடுத்து புதிய நகை வாங்க இந்தியா ஒன்றே சிறந்த இடம். 

லண்டனில் பழைய நகை கொடுத்தால் பத்து சதவிகிதம் கூட நகைக்கான பணம் தரமாட்டார்கள். ஆனால் இந்தியாவில் மட்டுமே பழைய  நகை எனினும் நகைக்கான பணத்தை ஓரளவு மதிப்புக்கு தருகிறார்கள் என்றே தோணியது. கையில் இருந்த பிளாஸ்டிக் அட்டையை கொடுத்ததும், பணம் எடுக்க இயல வில்லை என கடையில் இருந்த பெண் சொன்னதும் திடுக்கென இருந்தது. சரி என கிரெடிட் கார்ட் வாங்கி பார்த்தால் முடிந்து போன கிரெடிட் கார்ட். அடக்கடவுளே, என்ன செய்வது என திகைக்க எதை உபயோக்கிக்க கூடாது என்று இருந்தேனோ அந்த கார்டுகளை கொடுத்து நிலைமையை சரி செய்து  நகை வாங்கி கொண்டு வெளியே வந்தால் மழை. அந்த மழை சத்தத்தில் எத்தனை முறை சொன்னேன், எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்து வாருங்கள் எனும் மனைவியின் அன்பு பாராட்டு வேறு. 

இந்த மழை கிராமப் பகுதியில் விழுந்து தொலைய கூடாதா எனும் ஆதங்கம் மனதை தொட்டு சென்றது. மழை விடும் வரை கடையின் வாசலிலேயே நின்றோம். உடலில் பட்டு தெறிக்கும் மழை குமிழிகள், அந்த மழையோடு வந்து போகும் காற்று. இந்தியா இன்னும் இதமாகவே இருக்கிறது. 

துணிகள் தைக்க கொடுத்த கடைக்கு தகவல் சொல்லலாம் என அவர்கள் கொடுத்து இருந்த அட்டையில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, இந்த எண் தற்போது தொடர்பில் இல்லை என்றே வந்தது. அருகில் இருந்த நபரை தொடர்பு கொள்ள சொன்னேன். அவரும் மறுப்பேதும் சொல்லாமல் தொடர்பு பண்ணியவர், இந்த நம்பர் இணைப்புல இல்லையே சார் என்றார். இந்தியா என்னதான் சொல்லி தந்தது?

(தொடரும்) 


Wednesday 5 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா?

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்திய  விடுமுறை பயணம்  முடிந்து போன அலுப்பு மனதை அழுத்தத்தான் செய்கிறது. மீண்டும் விரைவில் இந்தியா செல்ல வேண்டும் எனும் ஆர்வம் இருப்பினும், எப்போது லண்டன் சென்று சேர்வோம் என்கிற மனநிலையை இந்த விடுமுறை பயணம் விதைத்து சென்றது. 

இரண்டு வருடங்கள் முன்னர் சென்ற பயண நினைவுகள் மனதை அழுத்த, காளையார்கரிசல்குளம் ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்தனை முன்னிட்டே இந்த பயணம் முடிவானது. சென்னையில் எத்தனை நாட்கள் தங்குவது என்று சில மாதங்கள் போராட்டத்திற்கு பின்னர் மூன்று நாட்கள் தங்கி செல்லலாம் என முடிவானது. இந்த மூன்று நாட்களில் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்வதாகவே திட்டம், அதோடு சென்னையில் கடைகள் எல்லாம் வேடிக்கைப் பார்த்து செல்லலாம் என நினைத்து தங்குவதற்கு ஹோட்டல் தேடினோம். சென்னையில் இருக்கும் உறவினர்கள் ஏதேனும் நினைப்பார்களோ எனும் எண்ணம் எட்டிப் பார்த்தாலும் ஹோட்டலில் தங்குவது என முடிவு செய்து தாஜ் ஹோட்டல் தெரிவு செய்தோம். இந்த தாஜ் ஹோட்டல் ஒன்று நகரத்திலும், மற்றொன்று நகரத்தை தாண்டியும் இருந்தது. நகரம் வேண்டாம் என முடிவு செய்து ஈ சி ஆர் சாலையில் கோவளம் கடற்கரையில் அமைந்து இருக்கும் விவான்டா தாஜ் ஹோட்டல் முன்பதிவு செய்தோம். 

பெரும் ஆவலுடன் லண்டனில் இருந்து கிளம்பி அதிகாலை சென்னை வந்தடைந்தது விமானம். என்றுமில்லாத திருவிழாவாக மேலும் இரண்டு விமானங்கள் துபாய் மற்றும் இன்னொரு இடத்தில் இருந்து அதே வேளையில் வந்து இறங்க விமானநிலையத்தை விட்டு வெளியே வரும் முன்னர் போதும் போதும் என்றாகிப்போனது. நேராக விளாச்சேரியில் உள்ள ஆள் இல்லாத உறவினர் வீட்டில் சென்று முதலில் இறங்கினோம். புதிதாக கட்டப்பட்ட வீடுகள். அந்த இடத்திற்கு செல்லும் பாதையோ கிராமப் பாதை போல் மோசமாக இருந்தது. 

காலை உணவு சாப்பிடலாம் என கடைக்கு சென்று பொட்டலம் வாங்க சென்றவர்கள் வர நாழிகை ஆகி கொண்டே இருந்தது. ஓரிரு மணி நேரம் பின்னர் அவர்கள் பொட்டலங்கள் வாங்கி வர, சாப்பாடு கடைகள்  எல்லாம் ஏழர மணிக்கு மேல் தான் திறப்பார்கள் என்றதும் இத்தனை தாமதமாகவா திறப்பார்கள் என்றே மனம் எண்ணியது. 

லண்டனில் இருந்து எங்களுடன் வந்து இருந்த உறவினர்கள் கிராமம்  நோக்கி கிளம்பி செல்ல நாங்கள் ஹோட்டல் நோக்கி சென்றோம். மதியம் இரண்டு மணிக்கு பின்னர் தான் அறை கிடைக்கும் என்றாலும், வாருங்கள் அறை காலியாக இருந்தால் தருகிறோம் என ஹோட்டல் பணியாளர் வர சொல்லவே தைரியமாக சென்றோம். 

இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய கார். சோளிங்கநல்லூர் அருகில் சென்றபோது சென்னையில் போக்குவரத்து நெரிசலை புரிந்து கொள்ள முடிந்தது. திடீரென எங்களது கார் நின்று போனது. எத்தனையோ முறை முயற்சி செய்தும் கார் கிளம்பவே இல்லை. சாலை நடுவே கார். இருபுறங்களிலும் வாகனங்கள் விலகி சென்று கொண்டு இருந்தது. காரினை தள்ளிவிட்டால் கிளம்பிவிடும், பேட்டரி பிரச்சினை என டிரைவர் சொல்ல எவர் வந்து தள்ளுவது என நினைக்க, எங்கள் இருவரை காரிலியே இருக்க வைத்துவிட்டு காரினை அப்படியே விட்டுவிட்டு டிரைவர் இறங்கி சென்றதும் திக் திக் என்று இருந்தது. பயமுறுத்திய கார். 

(தொடரும்)


Thursday 2 August 2012

எல்லாம் அந்த காலமய்யா

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்
நிகழ்காலமும் கடந்த காலம்
ஆகும் வரை.

ராமநாதனும், ராமச்சந்திரனும் பால்ய கால நண்பர்கள். ராமநாதனை சந்திப்போம் என்று ஒருபோதும் ராமச்சந்திரன் நினைத்ததே இல்லை. ராமச்சந்திரனை சந்திப்போம் என்று ஒருபோதும் ராமநாதனும் சிந்தித்தது இல்லை. ஆனால் இருபது வருடங்கள் பின்னர் ஒரு நாள் இவர்களுக்கு இடையில் சந்திப்பு நடந்தேறியது. பழைய கதைகளை பேசி கசிகின்றன இவர்களது பொழுதுகள்.

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்.

ராமநாதன் தனது கதைகள் சொல்லி முடிக்க, ராமச்சந்திரன் தனது கதைகள் சொல்லி முடிக்க இவர்களின் இருபது வருட வாழ்க்கை பரிமாறப்படுகிறது. இந்த இருபது வருட கால கட்டத்தில் ராமச்சந்திரனால் ராமநாதனுக்கோ, ராமநாதனால் ராமச்சந்திரனுக்கோ எந்த வித உதவியோ, உபத்திரவமோ இல்லை. இருவரும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சூழலில் வாழ்ந்துதான் பழகிப் போனார்கள்.

'ராமநாதா, உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் துடிதுடிச்சி போயிருவேன், ஞாபகம் இருக்கா' என்ற ராமச்சந்திரனை நோக்கி 'உனக்காக நம்ம கணக்கு வாத்தியார் மண்டையை பொளந்தேன், இன்னும் அவர் என்னை மறந்து இருக்க மாட்டாரு' என்றார் ராமநாதன்.

'அது எல்லாம் அந்த காலமய்யா, சுதந்திரமா சுற்றி திரிஞ்சி நமக்கு எந்தவித பொறுப்பும் இல்லாம அந்த காலம் எல்லாம் திரும்ப வருமாய்யா' என்றார் ராமச்சந்திரன்.

'நம்ம பிள்ளைகள இப்போ அதே நிலைமைக்கு நம்மால விடமுடியுதா, நம்ம காலம் வேற' பெருமூச்சு விட்ட ராமநாதன்.

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்.

இ மெயில், செல்பேசி எண்கள் என பரிமாறிக் கொண்டார்கள். இந்த சந்திப்பு ஒன்றும் திட்டமிட்டது அல்ல. இனிமேல் சந்திப்புகள் திட்டமிடப்படும். இனி நடப்பவைகளை பற்றி பேச இருபது வருடங்கள் இனி காத்துக் கொண்டிருக்க வேண்டியது இல்லை, இருபது நொடிகள் போதும். தொழில்நுட்ப வசதிகள், வாய்ப்புகள் என எல்லாம் பெருகிக்  கொண்டே போகின்றன.

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்
நிகழ்காலமும் கடந்த காலம்
ஆகும் வரை.