Wednesday 5 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா?

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்திய  விடுமுறை பயணம்  முடிந்து போன அலுப்பு மனதை அழுத்தத்தான் செய்கிறது. மீண்டும் விரைவில் இந்தியா செல்ல வேண்டும் எனும் ஆர்வம் இருப்பினும், எப்போது லண்டன் சென்று சேர்வோம் என்கிற மனநிலையை இந்த விடுமுறை பயணம் விதைத்து சென்றது. 

இரண்டு வருடங்கள் முன்னர் சென்ற பயண நினைவுகள் மனதை அழுத்த, காளையார்கரிசல்குளம் ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்தனை முன்னிட்டே இந்த பயணம் முடிவானது. சென்னையில் எத்தனை நாட்கள் தங்குவது என்று சில மாதங்கள் போராட்டத்திற்கு பின்னர் மூன்று நாட்கள் தங்கி செல்லலாம் என முடிவானது. இந்த மூன்று நாட்களில் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்வதாகவே திட்டம், அதோடு சென்னையில் கடைகள் எல்லாம் வேடிக்கைப் பார்த்து செல்லலாம் என நினைத்து தங்குவதற்கு ஹோட்டல் தேடினோம். சென்னையில் இருக்கும் உறவினர்கள் ஏதேனும் நினைப்பார்களோ எனும் எண்ணம் எட்டிப் பார்த்தாலும் ஹோட்டலில் தங்குவது என முடிவு செய்து தாஜ் ஹோட்டல் தெரிவு செய்தோம். இந்த தாஜ் ஹோட்டல் ஒன்று நகரத்திலும், மற்றொன்று நகரத்தை தாண்டியும் இருந்தது. நகரம் வேண்டாம் என முடிவு செய்து ஈ சி ஆர் சாலையில் கோவளம் கடற்கரையில் அமைந்து இருக்கும் விவான்டா தாஜ் ஹோட்டல் முன்பதிவு செய்தோம். 

பெரும் ஆவலுடன் லண்டனில் இருந்து கிளம்பி அதிகாலை சென்னை வந்தடைந்தது விமானம். என்றுமில்லாத திருவிழாவாக மேலும் இரண்டு விமானங்கள் துபாய் மற்றும் இன்னொரு இடத்தில் இருந்து அதே வேளையில் வந்து இறங்க விமானநிலையத்தை விட்டு வெளியே வரும் முன்னர் போதும் போதும் என்றாகிப்போனது. நேராக விளாச்சேரியில் உள்ள ஆள் இல்லாத உறவினர் வீட்டில் சென்று முதலில் இறங்கினோம். புதிதாக கட்டப்பட்ட வீடுகள். அந்த இடத்திற்கு செல்லும் பாதையோ கிராமப் பாதை போல் மோசமாக இருந்தது. 

காலை உணவு சாப்பிடலாம் என கடைக்கு சென்று பொட்டலம் வாங்க சென்றவர்கள் வர நாழிகை ஆகி கொண்டே இருந்தது. ஓரிரு மணி நேரம் பின்னர் அவர்கள் பொட்டலங்கள் வாங்கி வர, சாப்பாடு கடைகள்  எல்லாம் ஏழர மணிக்கு மேல் தான் திறப்பார்கள் என்றதும் இத்தனை தாமதமாகவா திறப்பார்கள் என்றே மனம் எண்ணியது. 

லண்டனில் இருந்து எங்களுடன் வந்து இருந்த உறவினர்கள் கிராமம்  நோக்கி கிளம்பி செல்ல நாங்கள் ஹோட்டல் நோக்கி சென்றோம். மதியம் இரண்டு மணிக்கு பின்னர் தான் அறை கிடைக்கும் என்றாலும், வாருங்கள் அறை காலியாக இருந்தால் தருகிறோம் என ஹோட்டல் பணியாளர் வர சொல்லவே தைரியமாக சென்றோம். 

இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய கார். சோளிங்கநல்லூர் அருகில் சென்றபோது சென்னையில் போக்குவரத்து நெரிசலை புரிந்து கொள்ள முடிந்தது. திடீரென எங்களது கார் நின்று போனது. எத்தனையோ முறை முயற்சி செய்தும் கார் கிளம்பவே இல்லை. சாலை நடுவே கார். இருபுறங்களிலும் வாகனங்கள் விலகி சென்று கொண்டு இருந்தது. காரினை தள்ளிவிட்டால் கிளம்பிவிடும், பேட்டரி பிரச்சினை என டிரைவர் சொல்ல எவர் வந்து தள்ளுவது என நினைக்க, எங்கள் இருவரை காரிலியே இருக்க வைத்துவிட்டு காரினை அப்படியே விட்டுவிட்டு டிரைவர் இறங்கி சென்றதும் திக் திக் என்று இருந்தது. பயமுறுத்திய கார். 

(தொடரும்)


Thursday 2 August 2012

எல்லாம் அந்த காலமய்யா

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்
நிகழ்காலமும் கடந்த காலம்
ஆகும் வரை.

ராமநாதனும், ராமச்சந்திரனும் பால்ய கால நண்பர்கள். ராமநாதனை சந்திப்போம் என்று ஒருபோதும் ராமச்சந்திரன் நினைத்ததே இல்லை. ராமச்சந்திரனை சந்திப்போம் என்று ஒருபோதும் ராமநாதனும் சிந்தித்தது இல்லை. ஆனால் இருபது வருடங்கள் பின்னர் ஒரு நாள் இவர்களுக்கு இடையில் சந்திப்பு நடந்தேறியது. பழைய கதைகளை பேசி கசிகின்றன இவர்களது பொழுதுகள்.

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்.

ராமநாதன் தனது கதைகள் சொல்லி முடிக்க, ராமச்சந்திரன் தனது கதைகள் சொல்லி முடிக்க இவர்களின் இருபது வருட வாழ்க்கை பரிமாறப்படுகிறது. இந்த இருபது வருட கால கட்டத்தில் ராமச்சந்திரனால் ராமநாதனுக்கோ, ராமநாதனால் ராமச்சந்திரனுக்கோ எந்த வித உதவியோ, உபத்திரவமோ இல்லை. இருவரும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சூழலில் வாழ்ந்துதான் பழகிப் போனார்கள்.

'ராமநாதா, உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் துடிதுடிச்சி போயிருவேன், ஞாபகம் இருக்கா' என்ற ராமச்சந்திரனை நோக்கி 'உனக்காக நம்ம கணக்கு வாத்தியார் மண்டையை பொளந்தேன், இன்னும் அவர் என்னை மறந்து இருக்க மாட்டாரு' என்றார் ராமநாதன்.

'அது எல்லாம் அந்த காலமய்யா, சுதந்திரமா சுற்றி திரிஞ்சி நமக்கு எந்தவித பொறுப்பும் இல்லாம அந்த காலம் எல்லாம் திரும்ப வருமாய்யா' என்றார் ராமச்சந்திரன்.

'நம்ம பிள்ளைகள இப்போ அதே நிலைமைக்கு நம்மால விடமுடியுதா, நம்ம காலம் வேற' பெருமூச்சு விட்ட ராமநாதன்.

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்.

இ மெயில், செல்பேசி எண்கள் என பரிமாறிக் கொண்டார்கள். இந்த சந்திப்பு ஒன்றும் திட்டமிட்டது அல்ல. இனிமேல் சந்திப்புகள் திட்டமிடப்படும். இனி நடப்பவைகளை பற்றி பேச இருபது வருடங்கள் இனி காத்துக் கொண்டிருக்க வேண்டியது இல்லை, இருபது நொடிகள் போதும். தொழில்நுட்ப வசதிகள், வாய்ப்புகள் என எல்லாம் பெருகிக்  கொண்டே போகின்றன.

பசுமை நினைவுகள் என்று
கடந்த காலத்தைத்தான்
சொல்கிறார்கள்
நிகழ்காலமும் கடந்த காலம்
ஆகும் வரை. 

Friday 20 July 2012

எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு

இந்த முறை நான் சாமியாரை பார்க்கச் சென்றபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. எவரையுமே அவரை சுற்றி காணவில்லை.

நான் மெதுவாக அவரிடம் சென்று "சாமி" என்றேன்.

மூடிய கண்களைத் திறந்தவர் "என்ன இந்த பக்கம்" என்றார்.

"எங்கே உங்கள் சிஷ்ய கோடிகள்"

"கடந்த சில நாட்களாக எவரும் இங்கே தென்படவில்லை"

"என்ன காரணமாக இருக்கும்"

 "தெரியவில்லை"

"சாமி நீங்கள் சற்று கிளுகிளுப்பான சாமியாராக இருந்து இருந்தால் எல்லாரும் மயக்கத்தில் வந்து இருந்து இருப்பார்கள். நீங்கள் எப்போது பார்த்தாலும் பூமி, ஆகாயம், நட்சத்திரம் என சொல்லிக் கொண்டிருந்தால் எவர் உங்களைத் தேடி வருவார்கள்"

"இதோ நீ வந்து இருக்கிறாயே"

 எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அட கருமமே, என நினைத்துக் கொண்டு

"இல்லை சாமி, பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதே என்று வந்தேன்".

"சரி உட்கார்"

நான் மறு பேச்சின்றி அமர்ந்தேன்.

"நீ பூமி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என சொன்னாய் அல்லவா"

"ஆமாம் சாமி, பக்தா என என்னை எதற்கு கூப்பிட மறுக்கிறீர்கள்"

"பக்தா என்றால் உனக்குப் பிடிக்காதே, சரி சரி பூமி பற்றி கேள்"

"ஆமாம் சாமி இத்தனை கோளங்கள் இருக்க பூமியில் உயிரினங்கள் தோன்றி இருப்பதற்கு காரணம் இயற்கை தேர்வு என சொல்கிறார்களே, அதாவது ஆண்டவன் உயிரினங்களை படைக்கவில்லை என்று"

"சரி, ஆண்டவன் உயிரினங்களை படைக்கவில்லை, அப்படியெனில் இந்த இயற்கை இப்படி இருக்க வேண்டுமென எவர் படைத்தது?"

அட கண்றாவியே என நினைத்துக் கொண்டு

"சாமி, இயற்கை தானாக உருவானது அதனால் தான் இயற்கைத் தேர்வு"

சாமி கலகலவென சிரித்தார்.சோளிகளை எடுத்தார். சிதறடித்தார். எல்லாம் ஆங்காங்கே உருண்டு புரண்டு நின்றது.

"மொத்தமாக இருந்த சோளிகளை சிதறடித்தது நான். நான் சிதறடிக்காமல் இருந்து இருந்தால் எப்படி அவை சிதறும்"

"சாமி இந்த சோளிகள் எங்கே இருந்து வந்தது?"

"எதற்கு கேட்கிறாய்?"

"எல்லாம் ஒரு கணக்குதான்"

"ஓஹோ, நீ என்ன சொல்ல வருகிறாய் என புரிகிறது"

"இவ்வுலகில் உள்ள மொத்த சக்தியும் இதுவரை மாற்றம் அடைந்தது இல்லை என்கிறார்களே"

 "எந்த வகையான மாற்றம்"

"புரியவில்லை"

"இதோ சோளிகள் எப்படி ஒரு பொருளில் இருந்து உருவானதோ, அந்த பொருளானது எப்படி வேறு ஒரு பொருளில் இருந்து உருவானதோ அதைப்போலவே சக்தியும் மாற்றம் கொள்ளும்"

 "சக்திக்கும், ஆற்றலுக்கும் உள்ள வேறுபாடு யாது?"

"இரண்டும் ஒன்றுதான். சக்தியும் விசையும் வேறு வேறு"

"சக்தியின் அளவு வேறுபாடு அடையவில்லை, அதனை உருவாக்கவும் முடியாது,  அழிக்கவும் முடியாது என்றால் என்ன அர்த்தம்? இப்படித்தான் இருக்க வேண்டும் என இயற்கைத் தேர்வு செய்ததா? எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு என்று சொல்லுங்களேன்"

"இறைவன் தவிர எல்லாமே இயற்கைத் தேர்வு தான், போய் வா"

"எதற்கு சாமி இப்படி விட்டேந்தியாக பதில் சொல்கிறீர்கள்"

"பிறகு என்ன, இறைவன் ஒருவனே அனைத்தையும் தேர்வு செய்தவன். இதில் இயற்கைத் தேர்வு, செயற்கைத் தீர்வு என்றெல்லாம் சொல்லக் கொண்டிருந்தால்  எப்படி"

"சாமி, தேர்வு, தீர்வு. எவ்வளவு அழகான பதில். இயற்கைத் தேர்வு செய்ய வாழ்க்கைக்குத் தீர்வு கிடைக்கும்"

"இறைவன் தீர்ப்பு இறுதி தீர்ப்பு"

சாமியாரை அழைத்துக் கொண்டு நடந்தேன். ஒரு இடத்தில் அளவு கடந்த கூட்டம். என்னவென விசாரித்ததில் புதிதாக ஒரு சாமியார் வந்து இருப்பதாகவும் பல விசயங்களை மிகவும் எளிமையாக சொல்வதாகவும் சொன்னார்கள்.

சாமியாரைப் பார்த்தேன்.

"சாமி, நீங்க கொஞ்சம் புரியும்படியா பேசினா எல்லாரும் உங்களைத் தேடித்தான் வருவாங்க"

 "எல்லாம் இயற்கைத் தேர்வு"

"சாமி, இறைவன் தீர்ப்பு இல்லையா?"

உன் சோலிய பாரு என சாமி தனது வேடம் கலைக்க, நான் என் தூக்கம் தொலைக்க  விட்டத்தில் இருந்த பல்லி  ஒன்று எனது வாயின் அருகில் எச்சம் விட்டுச் சென்றது. இனி அங்கே சிறு பருக்கள் முளைக்கும்.

ஆமாம் இவ்வுலகில் எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு?

(முற்றும்)