Saturday 10 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 3

அந்த போட்டாவை திருப்பி என்னிடம் தந்துவிட்டு என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அடுக்களைக்கு சென்றுவிட்டார் அம்மா. எனக்கு பகீரென இருந்தது. இந்நேரம் சத்தம் போட்டு பெரும் ரகளையே நடந்து இருக்க வேண்டும். ஆனால் அம்மா எதுவுமே சொல்லவில்லை. நான் எனது நோட்டுகளை எல்லாம் வைத்துவிட்டு அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தேன். உள்ளே சென்ற அம்மா வழக்கம் போல காபியும், ரொட்டியும் கொண்டு வந்து வைத்தார்கள். இதை சாப்பிட்டு முடித்ததும் விளையாட சென்றுவிட்டு இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புவேன். ஓடி ஆடி விளையாடும் விளையாட்டு எல்லாம் இல்லை. ஆனால் இன்று எங்கும் செல்ல மனம் விருப்பம் கொள்ளவில்லை.

'அம்மா' என்றேன். 'சொல்லுப்பா' என்றார்கள். 'நான் சொன்னதை எல்லாம் கேட்டு நீ ஒண்ணுமே சொல்லலையே அம்மா' என்றேன். என் அம்மாவின் முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லை. 'பேசும்மா' என்றேன். 'கொஞ்சம் அடுக்களையில வேலை இருக்கு, பத்திரமா விளையாடிட்டு வா' என அம்மா மீண்டும் அடுக்களைக்கு சென்றுவிட்டார். இப்படியொரு நிகழ்வு என் வாழ்வில் நடந்ததே இல்லை. என் அம்மா கோபமோ, சந்தோசமோ அப்படி அப்படியே போட்டுடைத்துவிடுவார். ஆனால் அவர் இன்று நடந்து கொண்ட விதம் என்னால் ரொட்டியை, காபியை தொடக்கூட மனம் இடம் தரவில்லை. அடுக்களைக்கு போன அம்மா திரும்பி வந்தார். 'காபி ஆறிப்போயிரும் முருகேசு, திரும்ப திரும்ப சூடு பண்ணினா காபி நல்லா இருக்காது' என்று சொல்லிவிட்டு போனார். சில நேரங்களில் எதார்த்தமாக சொல்லப்படும் வார்த்தைகள் ரண வேதனைகள் தந்துவிட்டு போகும். அவர் அப்படி சொன்னது எனக்கு ரண வேதனையாக இருந்தது. நான் சொன்ன விசயங்களால் அம்மாவின் உணர்வுகளை தைத்துவிட்டேனோ, கிழித்துவிட்டேனோ என புரியாமல் வழக்கத்திற்கு மாறாக வீட்டில் சில வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். காபி டம்ளரையும், ரொட்டி தட்டையும் கழுவிக்கொண்டிருந்தேன்.

'அதெல்லாம் இருக்கட்டும், நான் செஞ்சிக்கிறேன். நீ விளையாடிட்டு வா' என அம்மா மீண்டும் வந்து சொல்லிவிட்டு போனார். அவை இரண்டையும் கழுவி தொடைத்து வைத்துவிட்டு அடுக்களைக்கு போன நான் அம்மாவை கட்டிபிடித்தேன். 'என்னை மன்னிச்சிருமா' என்றேன். 'என்ன தப்பு பண்ணின நீ, மன்னிக்க சொல்ற' என்றார். 'என் மேல கோவமே வரலையாம்மா' என்றேன். 'இல்லை முருகேசு, அந்த பொண்ணோட பேரு என்ன' என்றார். 'உன் பேருதான்மா' என்றேன். 'என் பேரா' என்றார். 'ம்' என்றேன். 'சரி நாழியாகுது, விளையாட போ' என்றார். 'இல்லைம்மா நான் விளையாட போகலை, வீட்டு வேலை இருந்தா சொல்லு' என்றேன். அம்மா என்னை பார்த்த பார்வையில் நான் கூனி குறுகிப் போனேன். இத்தனை நாள் இல்லாத அக்கறை இன்று எனக்கு வந்தது என அம்மா நினைத்து இருக்கலாம்.

'தலைவலி என அம்மா அமர்ந்தபோது, மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அழைத்தபோது என அம்மாவினை நிறையவே உதாசீனப்படுத்தி இருக்கிறேன். அந்த எண்ணமெல்லாம் என்னை குற்றுயிராக்கி கொண்டிருந்தது. ஆனால் அதையெல்லாம் நினைத்து என்னை நானே மட்டம் தட்டி கொள்ள வேண்டாம் என முடிவுடன் அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் வீட்டினை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். 'நான் எல்லாம் செஞ்சிக்கிறேன்' என்றார் அம்மா. அவரின் பேச்சை எதுவும் சட்டை செய்யாமல் நிறைய வேலைகள் அன்று செய்தேன். உடம்பு அத்தனை வலி வலித்தது. அம்மாவுக்கு இப்படித்தான் வலித்து இருக்குமோ? என மாடியில் இருந்து கீழி இறங்கி வந்தேன்.

'அம்மா' என அவரை மீண்டும் கட்டிபிடித்து கொண்டேன். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததை கண்டு என்னால் ஒரு கணம் எதுவுமே செய்ய முடியவில்லை. 'என்னம்மா' என்றேன். 'மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு முருகேசு' என்றார். 'காயத்ரிக்கு நான் தேங்க்ஸ் சொன்னேன்னு நாளைக்கு சொல்லு' என்றார். 'உனக்குத்தான்மா நான் நன்றி சொல்லணும்' என்றேன். 'நான் உன் அம்மாடா, எனக்கு போய் நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு' என குளிக்க சென்றுவிட்டார். தினமும் காலையிலும், மாலையிலும் குளிக்கும் வழக்கத்தை அம்மா கடைபிடிப்பார். காய்ச்சல் வந்தாலும் குளிக்காமல் இருக்கமாட்டார். புறச்சுத்தமும், அகச்சுத்தமும் அத்தனை அவசியம் இவ்வுலகுக்கு என எங்கோ படித்து இருக்கிறேன்.

அடுத்து நகர்ந்த ஒவ்வொரு நிமிடமும் எனது வாழ்வில் நடந்த விசயங்கள் நிறையவே நினைவுக்கு வந்தது. இந்த அம்மா மட்டும் இல்லாவிட்டால் நான் இந்நேரம் சின்னாபின்னமாகிப் போயிருப்பேன். என்னை இந்த அளவுக்கு வளர்த்து வந்தது அம்மா தான். எந்த நேரமும் என்னை கண்காணித்து எதை எதை சரியாக செய்ய வேண்டும் என சொல்லித்தந்து படிக்க பிடிக்காத என்னை படிக்க வைத்து எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. இது ஒரு அம்மாவின் கடமை என்று என்னால் புறம் தள்ள இயலவில்லை. பன்னிரண்டாவது வரையே படித்த என் அம்மாவின் கல்வி ஞானம் பெரிது. வாழ்க்கை கற்றுத்தரும் பாடத்தை எவர் ஒருவர் கற்று கொள்கிறாரோ அவரே வாழ்க்கையில் பெரும் சாதனையாளர் ஆகிறார் என மாலை வகுப்பில் ஒரு ஆசிரியர் சொன்ன வாசகம் எனது அம்மாவுக்கு நிறையவே பொருந்தும். அப்பா எப்போதுமே 'அம்மாதான் எல்லாம், சத்தம் போடுறா, திட்டுறா அப்படினுட்டு அவளை வெறுத்துராதே' என என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். என் அம்மாவின் நச்சரிப்பு எனக்கு அதிக எரிச்சல் தந்து இருந்தாலும் அவர் என் அம்மாதானே. அந்த நச்சரிப்புதான் என்னை நன்றாக படிக்க வைத்தது.

அம்மா தான் எல்லாம் செய்கிறாரே என இறுமாந்து இருந்துவிட்டேன். அம்மா செய்யட்டும் எனும் இளக்காரம்! அக்கா கூட அடிக்கடி சொல்வார், அம்மா பாவம் டா, கொஞ்சம் உதவி செய்யக்கூடாதா என. நீ தான் மாடாட்டம் இருக்கியே என்பார். அக்காவின் பேச்சை அத்தனை பெரிதாக காதில் நான் போட்டு கொண்டதில்லை. ஆம்பளை பையனுக்கு அதிகம் செல்லம், பொம்பளை பிள்ளைக்கு கொஞ்சம் செல்லம் என்றெல்லாம் என் அம்மாவோ, அப்பாவோ பார்த்தது இல்லை. எங்கள் இருவரையும் பிரித்து பார்த்ததும் இல்லை. அக்கா நிறையவே சமர்த்து. அம்மா தன்னை சத்தம் போடாமல் பார்த்து கொள்வாள். காதல் என வந்ததும் அதை என் அக்கா அம்மாவிடம் சொல்லி வைக்க, அம்மா தான் அந்த பையன் பற்றி விசாரித்து எல்லாம் தெரிந்த பின்னர் இந்த பையனே வேண்டாம் என பிடிவாதமாக நின்றார். இன்றுவரை எரிச்சல் தந்த இந்த விசயம் இப்போது அம்மாவின் செயல் சரியென்றே நினைக்க வைத்தது.


அம்மா குளித்துவிட்டு சாமி கும்பிட்டு வந்தார். எனது நெற்றியில் திருநீறு வைத்தார். நான் அம்மாவை சாமியாகத்தான் அன்று கும்பிட்டேன்.  அவரது காலில் முதன் முதலில் விழுந்தேன். அம்மா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'முருகேசு, என்னடா இது புது பழக்கம் எல்லாம்' என என்னை தொட்டு தூக்கியபோது எனது கண்கள் குளமாகி இருந்தன. அம்மா பதினெட்டு வருட வாழ்க்கையில் பதின்மூன்று வருடம் உனது உணர்வுகளை சிதைத்தே வாழ்ந்து இருக்கிறேனே என மனதில் நினைக்கையில்  அந்த வேதனை கண்களில் நீராகி இருந்தது. 


'நான் காயத்ரியை பார்க்கணும்' என்றார் அம்மா. 'நாளைக்கு கேட்டு சொல்றேன்மா' என்று சொன்னேன். அப்பா வந்தார். அப்பாவிடம் எல்லா விசயங்களையும் அம்மா சொல்லி இருக்க வேண்டும். என்னை அப்பா உச்சி மோர்ந்தார். போட்டாவை கேட்டார். பார்த்தார். யார் அந்த பொண்ணு என்றார். 

அம்மா போல அப்பா காயத்ரியை கவனிக்கவில்லை போல என நினைத்து கொண்டு படத்தில் இருந்த காயத்ரியை காட்டினேன். அவரது முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

எங்கோ எப்போதோ படித்த கவிதை நினைவுக்கு வந்தது. தாயில்லா பிஞ்சுக்கெல்லாம்     அழுதபோதாவது அம்மா வருவாளா! அன்றே மனதில் பெரிய திட்டம் தீட்டினேன்.

(தொடரும்)

Friday 9 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 2

புரையேறிய எனக்கு வேகமாக தண்ணீர் பாட்டில் திறந்து தண்ணீர் தந்தாள்.

'யாரோ நினைக்கிறாங்க' என சொல்லிக்கொண்டே 'உன் பேரு என்ன' என திருப்பி கேட்டேன்.

யார் உன்னை நினைப்பாங்க என்றாள் அவளது பெயரை சொல்லாமல்.

என் அம்மா தான் என சொல்லி வைத்தேன்.

உங்க அம்மா மட்டும் தான் நினைப்பாங்களா என அவள் கேட்டதும் உலகம் கண்ணுக்கு முன் வேகமாக சுழன்றது.

என் பேரு காயத்ரி.

'என் அம்மாவோட பேரு கூட காயத்ரிதான். ஆனா அவங்க ஒரே தொனதொன ரகம். எப்ப பார்த்தாலும் அதை செய், இதை இப்படி செய் அப்படின்னு நச்சரிச்சிட்டே இருப்பாங்க. அதனால எனக்கு எரிச்சலா வரும். நிறைய பொய் சொல்வேன் என் அம்மாகிட்ட. எதுனாலும்னா உடனே விரதம் இருக்க ஆரம்பிச்சிருவாங்க.

இப்படித்தான் என் அக்கா ஒருத்தரை லவ் பண்ணினா. அதெல்லாம் கூடாது, அந்த பையன் சரியில்லை அப்படி இப்படி பாட்டு பாடி என் அக்கா மனசை மாத்தி போன வருஷம் தான் வேற ஒருத்தரோட கல்யாணம் ஆச்சு. இதுல என் அக்கா வேற அட்வைஸ். அம்மா பேச்சை கேட்டு நட, யாரையும் லவ் பண்ணி தொலைச்சிராதேனு. ஆனா என் அப்பா எதையும் கண்டுக்க மாட்டாரு' என சொன்னதும் காயத்ரியின் முகத்தில் சின்ன மாற்றம் தெரிந்ததை கவனித்தேன்.

'அம்மாகிட்ட இனிமே பொய் சொல்லாத. இன்னைக்கு என்ன நடந்துச்சோ எல்லாத்தையும் சொல்லு' என்றதும் 'வகுப்பை விட்டு வெளியே அனுப்பினது, உன்னை பாத்துட்டு இருந்தது எல்லாமா' என்றேன்.

'ஆமா, எல்லாத்தையும் தான். இனிமே அம்மா என்ன சொன்னாலும் உடனே செஞ்சிரு. எந்த அம்மாவும் தன்னோட பிள்ளை நல்லா இருக்கனும்னுதான் நினைப்பாங்க, குட்டிச்சுவரா போகணும்னு நினைக்க மாட்டாங்க. அதனால நீ அவங்க சொன்னா மறுக்காம செய்யி. என்னையவே பாத்துட்டு இருக்காத, படிப்புல கவனம் செலுத்து' என்றாள்.

'அப்ப இனிமே என் கூட சாப்பிட வரமாட்டியா, பேசமாட்டியா' என்றேன்

'அதது அதுபாட்டுக்கு நடக்கும், இனிமே உன் அம்மாகிட்ட பொய் பேசாத. நானும் என் அக்காவும் என்ன நடந்தாலும் எங்க அம்மாகிட்ட சொல்லிருவோம். அப்படித்தான் என் அக்கா எட்டாவது படிக்கையில ஒரு திருட்டு தம் அடிச்சிட்டு இன்னைக்கு திருட்டு தம் அடிச்சேன் அப்படின்னு அம்மாகிட்ட சொல்ல, அடுத்த நாளு ஸ்கூலுக்கு போறப்ப என் அக்கா கையில சார்மினார் சிகரெட்டும், லைட்டரும் எங்க அம்மா கொடுத்தாங்க. அக்கா, அம்மாவை கட்டிபிடிச்சிட்டு அழுதுட்டா. ஒன்னே ஒன்னு எங்க அம்மா சொன்னாங்க. நீங்க தப்பு செஞ்சா உங்களை மட்டும் இல்ல, என்னையும் உங்க அப்பாவையும் சேர்த்துதான் பாதிக்கும், அதே போல நாங்க தப்பு செஞ்சா எங்களை மட்டுமில்ல உங்க ரெண்டு பேரையும் சேர்த்துத்தான் பாதிக்கும்னு. அம்மாகிட்ட மறைக்க வேண்டாம்' என்றாள். அவள் சொன்னதை கேட்டதும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் என் அம்மா!

'அவ்வளவுதான், என் அம்மா சாமி ரூம்ல உக்காந்துட்டு பகவானே என்ன இப்படி செய்ற என அழ ஆரம்பிச்சிருவாங்க' என்றேன்.

'அம்மாகிட்ட பொய் சொல்லாத இனிமே. அவங்களுக்கு ஒரு பாதுகாப்பு, நம்பிக்கை தேவை. தன்னோட பிள்ளை தனக்குத்தான் என்கிற ஒரு அன்பு' என சொன்னாள் காயத்ரி.  பின்னர் வகுப்புக்கு நகர்ந்தோம். அனைவரின் கண்களும் எங்களையே மொய்த்தன. அருகில் இருந்த நண்பனிடம் 'எனக்கு தெரிஞ்ச பொண்ணு, எங்க குடும்பத்துக்கு பழக்கம் என பொய் சொன்னேன். இனி அவன் எல்லாரிடமும் சொல்லிவிடுவான், நாங்கள் பழக எந்த பிரச்சினையும் இருக்காது என்றே கணக்கு செய்தேன்.

அன்றைய மாலை பாட வகுப்புகளில் நான் அவளை பார்க்கவே இல்லை. நன்றாக பாடத்தில் கவனம் செலுத்தினேன். மாலை நாங்கள் பிரிந்து செல்லும்போது 'நான் நாளைக்கு சைவம்' என்றாள் காயத்ரி. 'நானும் சைவம்' என சொல்லிக்கொண்டேன். தனது பையில் இருந்து ஒரு புகைப்படத்தை காட்டி 'இது என் அம்மா, இது என் அப்பா, இது என் அக்கா, இது நான், உன் அம்மாகிட்ட காட்டு' என தந்தாள். 'நானும் போட்டோ கொண்டு வரேன்' என சொல்லி விடைபெற்றேன். அவள் முகம் மிகவும் தெளிவாக இருந்தது.

வீட்டிற்குள் நுழையும் முன்னர் 'இன்னைக்கு காலேஜு எப்படி இருந்துச்சி, என்ன பாடம் நடத்தினார்கள், என பல கேள்விகள் கேட்டு வைத்தார் அம்மா. ஆனால் கடைசியாக ஒரு கேள்வி கேட்பார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.


'அந்த பொண்ணு வந்து இருந்தாளா'


'எந்த பொண்ணும்மா'


'அதான், காலேஜுல சேரப் போன  நாளு பார்த்துட்டே இருந்தியே'


அம்மாவின் இந்த கேள்வி என்னை பொய் சொல்ல வைக்க தூண்டியது. ஆனால் பொய் சொல்ல மனமில்லாமல் நடந்த அனைத்து விசயங்களையும், காயத்ரி சொன்ன பொய் சொல்லாதே என்ற விசயத்தையும் சொல்லி வைத்தேன்.  அதோடு காயத்ரி கொடுத்த போட்டோவையும் கொடுத்தேன்.


அதைப் பார்த்த அம்மா...


(தொடரும்)



Thursday 8 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 1

நான் முதன் முதலாக கல்லூரியில் சேர சென்றபோது எனது கண்ணில் ஒரு பெண் தென்பட்டாள். எத்தனையோ பேர் நடமாடிக் கொண்டிருக்க அவள் மட்டுமே எனது கண்ணில் பட்டாள். ஆனால் அவளிடம் எப்படி பேசுவது என்று ஒரு தயக்கம் மனதில் நிழல் ஆடியது. அருகில் அம்மாவும், அப்பாவும் வேறு இருந்தார்கள். 'கண்ணு எங்கே போகுது?' அம்மா என்னை பார்த்து கேட்டுவிட்டார். 'எங்கேயும் போகலை' என வேண்டா வெறுப்பாக பதில் சொன்னேன். 'ஒழுங்கா படி' என அம்மா அன்பு உத்தரவு போட்டார்.

எத்தனையோ சினிமாவைப் பார்த்து பார்த்து இந்த பார்வை எல்லாம் பழகி போய் இருந்தது. கல்லூரியின் முதல் நாள் வகுப்பு. அதே வகுப்பில் அன்று பார்த்த பெண் வந்து அமர்ந்தாள். எனக்கு மனதில் துள்ளல் அதிகம் ஆகியது. அவளையே பார்த்து கொண்டிருந்தேன். அவள் என்னைப் பார்க்க வேண்டும் எனும் நோக்கம் அதிகமாகவே இருந்தது. ஆனால் கழுதை என்னை பார்க்கவே இல்லை. கழுதை என்றால் அழகு என்று தமிழில் அர்த்தம் என எவரோ சொன்னது பிற்பாடுதான் தெரிந்தது.

என்னை நோக்கி வகுப்பு ஆசிரியர் ஒரு கேள்வியை கேட்டார் என்பதே எனது பக்கத்தில் இருந்த மாணவன் சொல்லித்தான் தெரியும். நானும் சினிமாவில் நடிக்கும் ஹீரோ போல ஆகிவிட்டேன் என நினைக்கும்போது மனதில் வெட்கத்தை விட கர்வம் அதிகமாகவே இருந்தது. முதல் வகுப்பிலேயே வகுப்பை விட்டு வெளியேற்றபட்டேன். கால் கடுக்க வகுப்பின் வெளியில் நின்று கொண்டிருந்தேன். அவள் முகம் தெரியவில்லை. இங்கும் அங்கும் அலைந்து பார்த்தேன், ஆனால் அவள் அமர்ந்து இருந்த இடம் கண்ணுக்கு தென்படவில்லை. ஏகலைவன் போல ஆகிவிட்டேன். வெளியில் நின்று பாடத்தை கற்று கொள்ளலாம் என பாடத்தை கேட்க ஆரம்பித்துவிட்டேன். அம்மா வேறு சொன்னது அடிவயிற்றில் புளியை கரைத்தது, அமிலத்தை வயிற்றில் வளர்த்தது.

அந்த வகுப்பு முடிந்ததும் வெளியில் வந்த ஆசிரியர் என்னை முறைத்து பார்த்துவிட்டு 'உள்ளே போ மூதேவி, இனிமே இப்படி நடந்துகிட்ட உங்க அப்பாவை கூப்பிட்டு வர வேண்டி இருக்கும்' என்றார். ஆனால் அவர் எவர் பெயரையும் அழைத்து பதிவு செய்யவே இல்லை. அப்பாவா, ரொம்ப வசதியாக போய்விட்டதே என நினைத்து கொண்டேன். அம்மா என்றால் அவ்வளவுதான். நான் தொலைந்தேன். இப்படி மனதில் சின்ன பயம் ஒட்டி கொண்டாலும் இதுபோன்ற திரில்லான விசயங்களை செய்ய ஒரு தில் வேண்டும்.

வகுப்புக்குள் சென்றதும் எல்லோரும் என்னை பார்த்து கெக்கே பிக்கே என சிரித்தார்கள். நானும் அவர்களுடன் சிரித்து வைத்தேன். மானம், ரோசம் இருப்பவர்களுக்குத்தான் சுர்ரென்று கோபம் வரும். எனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் அவள் மட்டும் சிரிக்காமல் இருந்தாள். அடுத்த பாட வகுப்புகளில் அவளையே பார்த்து கொண்டிருந்தேன். என்ன பாடம் நடத்தினார்கள் என எனக்கு தெரியாது ஆனால் மதியம் எனது நோட்டினை பார்த்தபோது அவளது அழகிய முகத்தை படங்களாக வரைந்து வைத்து இருந்தேன். கல்லூரி என நினைத்தால் இது ஒரு பள்ளிக்கூடம் போல் அல்லவா இருக்கிறது என மனதில் நொந்து கொண்டேன், ஆனால் எவருமே வரவு பதிவு செய்ய பெயரை கூப்பிடவே இல்லை. அவள் பெயர் தெரிய வாய்ப்பே இல்லாமல் போனது.

மதிய உணவு வேளை வந்தது. 'உன்கிட்ட பேசணும்' என்றாள் அந்த பெண். மனதில் திக்கென்று இருந்தது. எத்தனையோ கவிதைகளை யோசித்து வைத்தேன். ஆனால் ஒரே ஒரு கவிதை மட்டும் நினைவில் நின்றது. கல்லூரியில் நான் கற்றது கல்வி அல்ல, காதல்.

'எதுக்கு என்னை பார்த்துக்கிட்டே இருக்க' என்றாள். 'நான் உன்னைத்தான் பார்த்துக்கிட்டே இருந்தேன்னு உனக்கு எப்படி தெரியும், அப்படின்னா வேற எங்கயோ பார்க்கிற மாதிரி நீ என்னை பார்த்துகிட்டே இருந்தியா' என்றேன். 'இங்க பாரு, தேவையில்லாம பிரச்சினை பண்ணாத, நான் அப்பப்ப பார்க்கறப்ப என்னையவே பார்த்துட்டே இருந்த, பொய் சொல்லாத' என்றாள்.

திக்கென்று இருந்த மனம் திண்டாட தொடங்கியது. 'இனிமே உன்னை பார்க்கலை' என சொல்லிவிட்டு சாப்பிட சென்றேன். நாங்கள் இருவரும் பேசிய வார்த்தைகளில் அன்னியோன்யம் தெரிந்தது. நான் அவளை நீங்க என்றோ அவள் என்னை நீங்க என்றோ சொல்லவே இல்லை.

தனியாக இருந்த ஒரு மரத்தின் கீழே நான் தனியாக சென்று சாப்பிட அமர்ந்ததும் 'என்ன சாப்பாடு' என்றே அவள் வந்து அருகில் அமர்ந்தாள். 'முட்டை, கருவாடு குழம்பு உள்ள சாப்பாடு' என காட்டினேன். அவளும் சிக்கன் சாப்பாடு என காட்டினாள். காலையிலேயே சிக்கன் எல்லாம் உன் வீட்டுல சமைப்பாங்களா' என பெரிய கேள்வியை கேட்டு வைத்தேன். சமைக்க கூடாதா? என ஒரு சிக்கன் துண்டை எனக்கு வைத்தாள். 'உன்னை நான் பார்க்கறதை நீ தப்பா எடுத்துக்கலையே' என்றேன். 'அதைப் பத்தி எல்லாம் பேசாத, சாப்பிடு என்றாள். 'என்னிடம் இருந்த முட்டையை பாதியாக வெட்டி அவளுக்கு தந்தேன்'

'உன் பேரு என்ன?' என்றாள்.

என் பேரு முருகேசு என்றேன். நட்டு கழண்ட கேசு அப்படின்னு வைச்சி இருக்கலாம் என சிரித்தாள்.

'உன் பேரு என்ன' என்றேன்.

'சோகேசு' என்றாள். நான் சிரித்துவிட்டேன், எனக்கு புரை ஏறியது.

(தொடரும்)