Tuesday 31 January 2012

கூகிள் குரோமில் என்னதான் பிரச்சினை - பின்னூட்டம்

நான் internet explorer அதிகம் உபயோகம் செய்வது கிடையாது. நான் மிகவும் விரும்பி உபயோகம் செய்வது google chrome. மின்னல் வேகத்தில் வேலை செய்யும். அதைப்போல எதாவது தளம் வைரஸ் போன்ற விசயங்களால் தாக்கப்பட்டு இருந்தால் காட்டி கொடுத்துவிடும். அதனால் எப்போதும் கூகுள் குரோம் தான் எனக்கு சிறந்த ஒன்று. 

அதுவும் இந்த வலைப்பூ எழுதுவது என்றால் குரோம் அல்லது ஆப்பிள் சஃபாரி. ஆப்பிள் சஃபாரியில் என்ன பிரச்சினை என்றால் நேரடியாக பின்னூட்டத்தில் தமிழ் வைத்து எழுத முடியாது. கூகுள் சென்று அங்குதமிழில் மாற்றி எழுதி அதை கொண்டு வந்து பின்னூட்டத்தில் வந்து பதிவிட  வேண்டும். அதனால் படிக்கும் வலைப்பூக்களுக்கு என்னால் எளிதாக பின்னூட்டம் இடவே முடிவதில்லை. அதனால் சுயநலமியாக எனது வலைப்பூவில் மட்டும் பின்னூட்டம் எழுதிவிட்டு அவ்வப்போது ஒவ்வொரு வலைப்பூவிற்கு பின்னூட்டம் இடுவது உண்டு. 

கூகிள் குரோம் என்னவென்றால் பதிவுக்கு கீழே வைத்திருக்கும் பின்னூட்ட பெட்டியில் மறுமொழி பதிவு போட இயலாது. அதுவே மற்றொரு பக்கத்தில் வரும் பின்னூட்ட பெட்டி என்றால் எளிதாக பின்னூட்டம் எழுத முடியும். இப்படி இருப்பதால் குரோமில் படித்துவிட்டு பின்னர் எக்ஸ்ப்லோறேர் சென்று போதும் என்றாகிவிடும். 

பொதுவாக பின்னூட்டம் எழுதுவது அந்த நேரத்தில் எழுதுவதும், சிறிது நேரம் பின்னர் எழுதுவதும் வித்தியாசமாக இருக்கும். சிந்திக்க அவகாசமே தரக்கூடாது என்பதுதான் நான் படிக்கும்போது நினைப்பது. படித்தவுடன் பளிச்சென ஒரு எண்ணம் வரும், அதுதான் எனக்குப் பிடித்த  பின்னூட்டம். சிறிது நேரம், சிறிது நாட்கள் கழித்து எழுதினால் மொத்த சிந்தனையும் வேறு மாதிரி இருக்கும். 

நண்பர் கிரி பதிவில் குரோம் பற்றி எழுதி இருந்தார். இந்திய மக்களுக்கு நான் அனுபவிக்கும் சோதனைகள் வருமோ என்னவோ. 

சில மாதங்கள்தான் இந்த பிரச்சினை. அதுவும் புதிய வலைத்தள வடிவமைப்புக்கு சென்ற பின்னர் என கருதுகிறேன். ஏதாவது தொழிநுட்பம் தெரிந்தால் சொல்லுங்கள். 

இத்தருணத்தில் மேலும் சில நாட்கள் நீட்டித்தமைக்கு நேசம் குழுவுக்கு நன்றி. கட்டுரை எழுதி கொண்டிருக்கிறேன். தமிழ் படுத்தும் பாடு! 

Monday 30 January 2012

முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள்

ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. 
ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். 

எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இல்லை. 

முஸ்லீம் என்றால் இறைவனிடம் தம்மை ஒப்புவிப்பவர் என அரபிக் மொழியில் பொருள்படும் என சொல்லப்படுகிறது. ஆஹா, எத்தனை ஆனந்தமான சொல். 

ஆனால் முஸ்லீம் என்றால் உலகில் வெறுப்புக்கு உள்ளாகும் நபர்கள் என்பது முஸ்லீம் என்ற பெயர் கொண்டு சிலர் செயல்படும் நடவடிக்கைகள் தான். ஆனால் எந்த மனிதர்தான் அடவாடித்தனமாக செயல்படவில்லை? தனது கொள்கைகளை நிலை நிறுத்த எல்லோருமே அடாவடியாக செயல்படத்தான் வேண்டி இருக்கிறது. 

தமிழை பழித்தால் தாய் தடுத்தாலும் விடேன் எனும்போது ஒரு ஆவல் பிறக்கிறது. அதே போல எமது இறைவனை, எமது புனித நூலை பழித்தால் விடேன் என முஸ்லீம்கள் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என புரியவில்லை. 

முஸ்லீம்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் எனும் ஒரு பொதுவான எண்ணம் நிலவுகிறது. எதற்கு ஐயா சகித்து கொண்டு போக வேண்டும்? எதை சகித்து கொண்டு போக வேண்டும்? திருக்குர்ஆன் பற்றி உங்களால் சகித்து கொண்டிருக்க இயலாத நிலையில் அவர்கள் எதற்கு அதற்கான எதிர்ப்பை சகித்து கொண்டிருக்க வேண்டும்?

பரிணாம கொள்கையை எதிர்க்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு ஆத்திகர்கள் மேல் அதாவது முஸ்லீம்கள் மேல் அதிகமாகவே சொல்லப்படுவது உண்டு. எதற்கு பரிணாம கொள்கையை எதிர்க்க கூடாது? ஏதேனும் சட்டம் இருக்கிறதா? பரிணாம கொள்கையை முற்றிலும் ஏற்று கொள்ள இயலாது. இதுவரை கண்டெடுக்கப்பட்ட விசயங்களை நிறையவே ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. 

பில்லியன் ஆண்டுகள் முன்னாள் ஒன்றுமே இல்லை என அறிவியல் சொல்லும், அதை மட்டும் ஆஹா, ஓஹோ என கேட்டுக் கொள்வோம். ஆனால் . அதை எதிர்த்து ஒருவரும் கருத்து சொல்ல மாட்டோம். அற்புதமான பகுத்தறிவு. அறிவியல் பில்லியன் ஆண்டுகள் முன்னாள் எந்த இயற்பியல் விதிகளும் இல்லை என்கிறது, என்ன பைத்தியகாரத்தனம், என்னதொரு மூட நம்பிக்கை என எவருமே சிந்தித்துப் பார்ப்பதில்லை. நாம் அனைவருமே நமது வாழும் காலங்களில் ஏமாற்றப்பட்டு கொண்டே இருக்கிறோம், அல்லது ஏமாறுவதற்கு ஆயத்தமாகவே இருக்கிறோம். 

இந்த ஆத்திகர்கள், நாத்திகர்கள்.  இந்த பதம் தனை எவர் கண்டுபிடித்தது என்று தெரியவில்லை. ஆத்தி, நாத்தி. என்ன கொடுமையான தமிழ் இது. ஆத்தி சொல்வதை மாத்தி சொல்வது நாத்தி. நாத்தி சொல்வதை மாத்தி சொல்வது ஆத்தி. அடி ஆத்தி, என்னதொரு விளக்கம். 

ஆதிகர்கள் என்பதுதான் ஆத்திகர்கள் என மருவிற்று. ஆதி என்றால் முதலானவை. முதல் முதலில் உலகில் தோன்றியவைகள் எல்லாம் ஆதிகர்கள். ஆதியும் அந்தமும் இல்லாத சோதி இறைவன் என குறிப்பிடப்படுகிறது. இப்படி ஆதி இல்லாத இறைவனை கேள்விக்குறியுடன் பார்க்கும் உலகம், ஆதி இல்லை என சொல்லும் அறிவியலையும் கேள்விக்குறியுடன் பார்க்கட்டும்.

இஸ்லாம், கிறிஸ்துவம்தனை தன்னுள் உள்ளடக்கியது என்கிறார்கள். இஸ்லாம், கிறிஸ்துவம் என எல்லாவற்றையும் இந்துமதம் தன்னுள் உள்ளடக்கியது என்கிறார்கள். 

இவை எல்லாவற்றையும் அறிந்து கொள்ள உதவும் அறிவியல் அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ள துடிக்கிறது. 

இதெல்லாம் இருக்கட்டும், உலகில் பஞ்சங்களும் , திருடுகளும், கொள்ளைகளும் குறையவா போகிறது, உலகம் சுபிட்சம் பெற்று சிறப்புடன் இருக்கவா போகிறது. 

எது எப்படியோ...

நமது நோக்கம் எல்லாம் உலகம் செழிக்க போராடுவதில் இருக்கட்டும். உலகம் இப்படியே இருக்கிறது என்பதை சகித்து கொள்வதை ஒருபோதும் நாம் அனுமதிக்க வேண்டாம். 

Thursday 26 January 2012

நண்பனால் தடுமாறிய தமிழ்வெளி

ஹிட்ஸ் ஹிட்ஸ் ஹிட்ஸ்! 

பதிவு எழுத வந்திருப்பவர்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்களா என்பது பற்றிய விவாதம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். 

பதிவு எழுத வந்திருப்பவர்கள் தரமிக்க பதிவுகளை எழுதுகிறார்களா என்பது பற்றிய கலந்துரையாடல் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். 

எந்த பதிவர் எப்படி தலைப்பு வைத்து எழுதி எப்படி ஹிட்ஸ் அள்ளி குவிக்கிறார் என்பதுதான் இன்றைய விவாதம் எல்லாம். ஹிட்ஸ் வைத்து வீடா கட்டப் போகிறோம் என அறைகூவல் விடுத்தாலும் ஹிட்ஸ் என்பது ஒரு அங்கீகாரத்தின் அடையாளம். 

எழுத்துகள் அத்தனை எளிதாக எவரையும் வசீகரிப்பதில்லை. எந்த ஒரு எழுத்தாளரும் அனைத்து சமூகத்தையும் தன்னருகே ஒருங்கே நிறுத்தியது இல்லை இதுவரை. பிரிவினைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. நான் இவரது ரசிகன் என ஒருவர் சொல்லும்போதே மற்றவர்களை ரசிக்கும் தன்மை குறைந்தவராகவே தென்படுகிறார். 

எழுதுவது அவரவர் உரிமை. எப்படி எழுதுவது, எதை எழுதுவது என்பதை எழுதுபவரே தீர்மானிக்கிறார். 

இப்பொழுதெல்லாம் ஒரு சட்டம் இருக்கிறது. இதை மறுமொழி இடுபவர்க்கு என வெப்துனியா தனது மறுமொழி இணைப்புக்கு முன்னர் எழுதி இருக்கிறது. 

//விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.//

இதே விசயத்தை பதிவு எழுதுபவர்கள் மீதும் ஒருவர் தொடங்கலாம் என்பது அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்று. 

இணையத்தில் நல்ல விசயங்களை மட்டுமே வாசிக்க நினைப்பவர்கள் கையில் தான் மவுஸ் உள்ளது. இவர்கள் அவ்வாறு செய்யாமல் சர்ச்சைக்குரிய விசயங்களைப் பற்றி பேசி பொழுதை வீணடிக்கிறார்கள் என்கிறார் இணையதளத்தை அதிகமாக உபயோகிக்கும் ஒருவர். 

மேலும் இணையதளத்திற்கும், மொபைல் போன்களுக்கும் அடிமையாகிவிட்டு இதற்கெல்லாம் அடிமையாகி விடாதீர்கள் என பிறருக்கு அதே அடிமைத்தனத்தில் இருந்து கொண்டே எச்சரிக்கை விடுப்பது குடிகாரன் பிறரை குடிக்காதே என அறிவுரை சொல்வது போன்றதுதான். அவரவருக்கு தெரியும் எது செய்ய வேண்டும், எது செய்ய கூடாது என. எந்த போதையும் கண்களை மறைக்கும். 

இந்த ஹிட்ஸ் பற்றி என்ன சொல்வது?

எந்திரனை மிஞ்சிய நண்பன் எனும் பதிவுக்கு தமிழ்வெளி மூலம் வந்த வாசகர்கள் என ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேலே காட்டியது. அதைவிட கூகுள் பக்கம் பார்வைகள் ஒரே நாளில் நான்காயிரம் அருகில் என காட்டியது. இதுவரை எந்த ஒரு பதிவுக்கும் இப்படி ஒரு நிலை வந்தது இல்லை. இத்தனைக்கும் எந்திரனை மிஞ்சிய நண்பன் எனும் பதிவு எனது கணக்கில் ஒரு கமர்சியல் பதிவு. அவ்வப்போது ஒரு கமர்சியல் பதிவு எழுதுவது வாடிக்கை.



இப்படி எந்த பதிவு எத்தனை பேரால் வாசிக்கப்பட்டது என்பது பெரிய விசயமாக பேசப்பட்டாலும் அதில் எத்தனை பேர் பயன் அடைந்தார்கள் என பார்த்தால் சைபர். சைபர் என்றால் இருவேறு அர்த்தங்களும் உண்டு. 

ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடித்து இருக்கிறது. பிடித்த விசயத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். தனக்கு அதாவது தனக்கு தவறென தெரிந்தால் எதிர்த்து பதிவு போடுகிறார்கள். இவர்களது கருத்து பரிமாற்றங்கள் தனிமனித தாக்குதல் வரை சென்று அச்சத்தை விளைவிக்கிறது. 

ஹிட்ஸ் குவிக்க நினைப்பவர்கள் எழுத வேண்டிய விசயங்கள் 

சினிமா சம்பந்தமான கிசுகிசுக்கள், பரபரப்பு செய்திகள். 

பாலியல் சம்பந்தமான போக்கிரித்தனமான பதிவுகள். 

பதிவர்கள் சம்பந்தமான உள்குத்து வெளிகுத்து கும்மாங்குத்து பதிவுகள். 

ஆனால் இதை எல்லாம் தாண்டி பல வாழ்வியல், அறிவியல் விசயங்களை மட்டுமே அற்புதமாக எழுதும் பதிவர்கள் இந்த பதிவுலகில் நிறையவே உண்டு. அவர்களை இனம் கண்டு கொள்வதில் எந்த சிரமமும் எவருக்கும் இல்லை. அவரவர் கையில் மவுசும், கீபோர்டும் உள்ளது.