Friday 9 December 2011

எனது எழுத்துகள் சுடப்படுகின்றன - ஸ்ரீமத் பாகவதம்

இஞ்சிக்கொல்லை சிவராம சாஸ்திரிகளால் 1908ம் வருடம்  தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஸ்ரீமத் பாகவதம்தனை தொடர்ந்து இந்த வலைப்பூவில் எழுதப் போகிறேன்.

இந்த ஸ்ரீமத் பாகவதத்தில் நிறைய விசயங்கள் இருப்பதாக கேள்விப்பட்ட காரணத்தினால் அதைப் படிக்க வேண்டும் எனும் ஆர்வம் மிஞ்சியது. ஆனால் சில பல காரணங்களால் என்னால் படிக்கவே இயலவில்லை. அவ்வப்போது ஆவல் எழும் போதெல்லாம் ஸ்ரீமத் பாகவதம் தேட ஆரம்பிப்பேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஸ்ரீமத் பாகவதம் கண்ணுக்கு தென்படும். 

ஸ்ரீரங்கத்தில் எனது தாத்தா ஒருவர் விஷ்ணுபுராணம் புத்தகம் வைத்து இருந்தார். அதைப் படிக்கும்போது 'என்ன எழுதி இருக்கிறார்கள்' என அன்று தூக்கி போட வைத்துவிட்டது. அன்றைய காலத்தில் குமுதமும், ஆனந்தவிகடனும், ராணியும், கல்கியும் பெரிய விசயங்களாக இருந்தன. 

இந்த ஸ்ரீமத் பாகவதம் புத்தக வடிவில் கிடைக்கின்றன. அவையெல்லாம் இணையத்தில் தொகுத்து வைத்தால் என்ன எனும் எண்ணத்தின் விளைவாக இந்த பணியை எடுத்து இருக்கிறேன். மொத்தமாக எழுதினால் கூட எத்தனை வருடங்கள் ஆகும் என தெரியாது. எனது நேரத்தில் இதற்காக தினமும் செலவிடலாம் எனும் எனது எண்ணத்திற்கு அந்த நாராயணரே அருள் பாலிக்கட்டும். 

ஸ்ரீமத் பாகவதம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு எந்தவிதமான ஆவலும் இருக்கப் போவதில்லை. இத்தனை புத்தகங்களை வாங்கி படிப்பார்களா என தெரிய வாய்ப்பும் இல்லை. 

சினிமா பதிவுகள், அனுபவ பதிவுகள், பயண கட்டுரைகள், அறிவியல் பதிவுகள் என எத்தனையோ எழுதி வைத்துவிட்டாகி விட்டது. அந்த பதிவுகள் எல்லாம் அவ்வப்போது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதை நிறுத்தி வைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. ஸ்ரீமத் பாகவதம் என்ற ஒரு அற்புதத்தை வெட்டி ஒட்டுதல் என இல்லாமல் கைப்படவே எழுத இருக்கிறேன். 

எவரோ செய்த அற்புத பணி, நூற்றி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அதை இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் இங்கு எழுதுகிறேன். இந்த முயற்சிக்கு பாலமாக இருக்க போகும் சிவராம சாஸ்திரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 

ஸ்ரீமத் பாகவதம் விரைவில் தொடரும்.  


Thursday 8 December 2011

எப்பவுமே சாம்பார் தானா!

கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் இருக்கும் தீராத பிரச்சினை சமையல் பிரச்சினை.

கூட்டு குடும்பமாக இல்லாமல் தனிகுடித்தனகாரர்களாக இருந்தால் இந்த பிரச்சினை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

அதிகாலை எழுந்து சமையல் செய்து சாப்பிட்டு செல்லும் நிதானம் எல்லாம் இந்த ஊரில் இல்லை.

சாம்பார், கூட்டு என டிபன் கேரியரில் மதிய சாப்பாடுக்கு தூக்கி செல்லும் வழக்கம் எல்லாம் இங்கே இல்லை.

மாலை வேளையில் வந்து நிம்மதியாக சமைத்து சாப்பிடும் அளவிற்கு நேரமும் இல்லை.

எல்லாம் ஒருவித சோம்பலோ என எண்ணத் தோன்றினாலும் வேலைக்கு சென்று வரும் அலுப்பு, சமையல் பண்ணியதும் அந்த சமையல் பாத்திரங்களை அலச வேண்டும் என்கிற நினைப்பு பாடாய் படுத்தும். ஒரு போனை எடு. இது இது என சொல்லிவிடு. வாசலில் வந்து நிற்கும் சாப்பாடு எனும் வழக்கம் அதிகமாகவே உண்டு. இருப்பினும் அவ்வப்போது வீட்டு சமையலும் உண்டு, வார இறுதி நாட்களில் மனைவியின் கைவண்ணத்தில் அற்புத சாப்பாடு என்றும் உண்டு.

வார வேலை நாட்களில் இருப்பதோ மூன்று பேரு, எதற்கு சமையல் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் வருவது இயல்புதான். தோசையா, இட்லியா? மாவாட்ட தேவையில்லை. அரைத்த மாவே விற்பனைக்கு கிடைக்கிறது. அரைத்த மாவை வாங்கி தோசைக்கு சட்னி அரைத்து சாப்பிடும் முன்னர் சரவண பவனில் ஒரு தோசை வாங்கி சாப்பிட்டு பொழுது கழித்துவிடலாம் என்கிற நினைப்பு வரும். ஒரு பர்கர், ஒரு பிச்சா அதோடு கூடிய சிப்ஸ் வாழ்க்கை ரொம்பவே எளிதாக போனது.

இருந்தாலும் நம்ம ஊரு வழக்கப்படி சோறு ஆக்கியும் தீர வேண்டி வரும். அதற்கு என்ன குழம்பு வைப்பது. வேலையில் இருந்து வேகமாக வீடு சென்றுவிட்டால் சிரமம் பாராது சோறு ஆக்கி சாம்பார் வைத்து விடும் வழக்கம் உண்டு. எனக்கு சாம்பார் தவிர இதுவரை வேறு குழம்பு வைத்தே பழக்கம் இல்லை. நான் சமைத்தால் 'எப்பவுமே சாம்பார் தானா' என பையன் கேலி பண்ணும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.

சரியென ஒரு நாள் அவனுக்கு அருமையான குழம்பு வைக்கலாம் என மிராவின் கிச்சன் பக்கம் போனேன்.

அங்கே ஒரு கத்தரிக்காய் கார குழம்பு இருந்தது. மிகவும் வசதியாக போய்விட்டது என வீட்டில் என்ன இருக்கிறது என தேடினேன். சிறிய பிஞ்சு கத்தரிக்காய் தேடினேன். இல்லை. பெரிய கத்தரிக்காய் இருந்தது, அதை பிஞ்சு பிஞ்சாக வெட்டி போட்டேன். சின்ன வெங்காயம் தேடினால் பெரிய வெங்காயம் தான் இருந்தது. அதை சின்ன சின்னதாக வெட்டி போட்டேன். பூண்டு இருந்தது. அப்பாடா என நினைக்கும்போதே தக்காளியை காணவில்லை. கடைக்கு சென்று தக்காளி வாங்கும் அளவுக்கு பொறுமை இல்லை. எனவே தக்காளி இல்லாமல் சமைப்பது என முடிவு கட்டினேன்.

தேங்காய் துருவலும் இல்லை, முந்திரியை அரைக்க மனசும் வரல்லை. கறிவேப்பிலையும் காணலை, தனியா தூளும் தனியாவே இல்லை. சோம்பு, உளுத்தம் பருப்பு எல்லாம் எங்கே என தெரியவும் இல்லை. காரக் குழம்பு வைக்க சொன்ன வகையில் பல பொருட்கள் வீட்டில் இல்லவே இல்லை. என்ன செய்வது, இந்த குழம்பு வைத்தே தீர்வது என இறங்கினேன்.

கொஞ்சூண்டு புளியை அதிகமாக தண்ணீரில் கரைத்து வைத்திருந்தேன்.

நல்லெண்ணெய் ஊற்றி கடுகையும், வெங்காயத்தையும் நன்றாக வதக்கினேன். அதோடு கத்தரிக்காய், பூண்டு தனையும் போட்டு வதக்கினேன். காத்திருந்த புளி தண்ணீர்தனை எடுத்து ஊற்றினேன். பார்க்க ரசம் போலிருந்தது. 'வத்தகுழம்பு பொடி' அலமாரியிலே தேமே என இருந்தது. அதை எடுத்து மூன்று ஸ்பூன்கள் போட்டேன். நன்றாகவே கொதிக்க விட்டேன். இரண்டு வத்தலை கிள்ளிப் போட்டேன். இன்னும் ரசம் போலிருந்தது.

என்ன செய்வது என முடிந்தவரை கொதிக்க வைத்துவிட்டு நிறுத்திவிட்டேன். பையனும் வந்தான், இணையதளத்தில் இருந்த படத்தை காட்டி இந்த குழம்பு வைத்தேன் என சொன்னேன். யாரது காஞ்சனா ராதாகிருஷ்ணன் என்றான். சமையல் சொல்லி தரும் அம்மா என்றேன். சிரித்தான். எனது பெயர் போலிருக்கவே யார் எனும் தேடல் அவனுக்கு.

நான் வைத்த குழம்புவையும், காஞ்சனா அம்மா வைத்த குழம்பு படத்தையும் பார்த்தான். 'அந்த குழம்பு போல இல்லையே' என்றான். 'எதோ எனக்கு தெரிஞ்சி வைச்சது' என்றேன்.

சாப்பாடு எடுத்து வைத்து குழம்பு (தண்ணீராகவே இருந்தது) ஊற்றி சாப்பிட்டான். நன்றாக இருக்கிறது என்றான். பாவம் பசி. கொஞ்சம் காரம் அதிகம் என்றான். தயிர் பக்கத்தில் வைத்து கொள் என்றேன். காளான் வறுத்து வைத்திருந்தேன்.

'எப்பவுமே சாம்பார் வைக்கிறேன் என சொல்வாய் அல்லவா, அதற்குதான் இந்த குழம்பு' என்றேன். சாப்பிட்டு முடித்த பின்னரும், அந்த படத்தில் இருப்பதை போல வைத்து இருக்கலாம் என்றான். 'இந்த சாப்பாடு கூட இல்லாமல் எத்தனையோ பிஞ்சு குழந்தைகள் வாடுகிறார்கள்' என எனது வழக்கமான பாடலைப் பாடினேன். 'அதற்காக எப்படி வேண்டுமெனினும் சமைப்பதா' என எதிர் கேள்வி கேட்டான். 'நன்றாக சமையல் கற்று கொள்ள வேண்டும்' என மனதில் உறுதி கொண்டேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மனைவி வந்தார். சட்டியை திறந்து பார்த்தார். என்ன குழம்பு என்றார். கத்தரிக்காய் கார குழம்பு இணையத்தில் இருந்து பார்த்து செய்தேன் என்றேன். 'பேசாம சாம்பாரே வைச்சிருக்கலாம்' என்றார். நான் அசடு வழிந்தேன்.

சாப்பிடு, இன்று வெளியில் சாப்பாடு வாங்கும் எண்ணம் இல்லை என்றேன். சாதம் எடுத்து வைத்து குழம்பினை ஊற்றி சாப்பிட்டார். சாப்பிட்டு முடிக்கும் வரை காத்து இருந்தேன்.

சாப்பிட்டுவிட்டு நன்றாக இருந்தது என்றார். கார குழம்பு செய்ய அனைத்து வகைகள் இல்லாவிட்டாலும் இருந்தவற்றை கொண்டு அன்போடு சமைத்த அந்த குழம்பு அன்று நிறையவே மணம் வீசிக் கொண்டிருந்தது.

 மிரா கிச்சன் நடத்தும் காஞ்சனா அம்மாவுக்கு நன்றி. 

Tuesday 6 December 2011

போராளி பேரொளி

சமீபத்தில் திரு. விஜய ராஜேந்தர் அவர்களின் பேச்சுதனை கேட்க நேரிட்டது. அந்த பேச்சில் இருந்து அவருக்கும் ஆனந்த விகடனுக்கும் அவரது படம் சம்பந்தமாக மன வருத்தம் என புரிந்து கொள்ள முடிந்தது. எதுக்கு விமர்சனம் எழுதுற, எதுக்கு மார்க் போடுற என ஆனந்த விகடனை பிடி பிடி என பிடித்துவிட்டார். உன்னால ஒரு நல்ல தமிழ் படம் எடுக்க முடியுமா? உன்னால சின்னத்திரையிலதான் எல்லாரையும் அழ வைக்க முடியும், ஒரு படம் எடுத்தியே அது எப்படி இருந்துச்சி என ஏகத்துக்கும் பேசிவிட்டார், ஏசிவிட்டார்.

விமர்சனம் என்பது என்ன? ஒருவரின் படைப்பை, செயலை உண்மையிலேயே மனம் திறந்து குறைகளை மட்டுமே சொல்லாமல் நிறைகளையும் சுட்டி காட்டுவதுதான். பெரும்பாலான விமர்சனங்கள் எப்படி அமைகிறது என்பது அவரவரின் மனோபாவத்தைப் பொறுத்து அமைகிறது. ஒருவர் இப்படி என்பார், மற்றொருவர் அப்படி என்பார். இந்த இரண்டையும் கேட்டுவிட்டு படைப்பை பார்ப்பவர் இப்படி அப்படி என்பார். 

'போராளி' என பேரு வைச்சிருக்காங்களே அப்படின்னு நினைச்சா, நட்பு பற்றிய கதை என அரசல் புரசலாக தெரிய ஆரம்பித்தது. பொதுவாகவே முழு விமர்சனங்கள் படம் பார்க்கும் முன்னர் நான் படிப்பது இல்லை. அதைப்போல முழு விமர்சனங்கள் படத்தைப் பற்றி நான் எழுதுவதும் இல்லை. ஏனெனில் மேலே சொன்ன திரு. விஜய ராஜேந்தர் அவர்களின் வரிகள் தான். 

போராளி என்பவர் யார்? போராளி என்பவர் சொந்த பந்தம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கமால் தனது சமூகத்திற்காக பாடுபடுவர். அதாவது சொந்தங்களும் அதில் உள்ளடக்கம். இந்த போராளிகள் தனக்கென குடும்பத்தை வைத்து இருந்தாலும், இவர்களது போராட்டம் எல்லாம் சமூக அவலங்களை களை எடுப்பதுதான். இவர்களுக்கு தனது சமூகமே அவர்களது குடும்பம்.  இந்த போராளிகள் ஒரு இலக்கோடு தங்களது பயணத்தைத் தொடங்குவார்கள். அந்த இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள். இந்த போராளிகள் தனி தனி குழுக்களாக செயல்படுவார்கள். இந்த போராளிகளுக்கு என ஒரு தலைவர் இருப்பார். இப்படிப்பட்ட போராளிகளால் சமூகங்கள் விழிப்புணர்வு அடைவது உண்டு. ஆனால் இந்த போராளிகளை விட தொழிலாளிகளே மேல் எனும் கருத்து நிலவுவது உண்டு. தொழிலாளிகள் தங்களது அடிமைத்தனத்தில் இருந்து தங்களை தாங்களே மீட்க தெரிந்து கொண்டால் இந்த போராளிகள் உருவாகும் சாத்தியம் இல்லை. 

சரி இந்த திரைப்படத்திற்கு வருவோம். படத்தில் சில பல காட்சிகள் பார்க்கும்போது இயக்குனரை, படக் குழுவினரை பாராட்ட வேண்டும் என மனம் சொல்லிக் கொண்டது. இப்படியெல்லாம் படம் எடுப்பதன் மூலம் சமூகத்தில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்த முடியாதா என்கிற சின்ன அபிலாசை இந்த இயக்குனருக்கு இருக்கலாம். இந்த படத்தில் காட்டப்படும் கதாநாயகரைப் போல ஆங்காங்கே ஓரிரு மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறருக்கு உதவும் குணம். 

அன்பிற்காக, அரவணைப்பிற்காக ஏங்கும் மனிதர்கள் இவ்வுலகில் மிகவும் அதிகமாகவே உண்டு. நான் வேலைக்கு செல்லும் வழியில் சுரங்க பாதையில் எப்போதும் உறங்கி கொண்டிருப்பது போன்று இருக்கும் நபர்களை காண்பது உண்டு. ஏதாவது சில்லறை தாருங்கள் என கேட்பார்கள். அவர்கள் மிகவும் உடல் வலிமையுடனே காணப்படுவார்கள். மனதில் இவர்கள் எதற்கு இப்படி இருக்கிறார்கள் என அவர்களை சட்டை செய்யாமல் சென்று விடுவது உண்டு. வீடு இல்லாதவர்களுக்கு என ஆதரவு கரம் இந்த அரசு அளித்தாலும் இவர்கள் உழைக்க முயற்சி செய்வது இல்லை, அல்லது உழைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு தரப்படுவது இல்லை. எப்படித்தான் இந்த குளிரிலும் இவர்களால் இப்படி வாழ முடிகிறது எனும் ஆச்சரிய குறி எழுந்துவிட்டு போகும். 

நான் கடவுள் எனும் திரைப்படம் எப்படி ஒரு அவல நிலையை சுட்டி காட்டி அதற்கு ஒரு முட்டாள்தனமான தீர்வு சொன்னதோ, அதை விட பல மடங்கு மேலாக நல்லதொரு தீர்வை இந்த படத்தில் சொல்வதாகவே தெரிகிறது. ஆனால் நட்பு என்பதை தூக்கி நிறுத்துகிறோம் என்கிற பெயரில் அதே பழைய பஞ்சாங்கத்தை கையில் எடுத்து குடும்பம், சொந்தங்களை கொச்சை படுத்தி இருக்கிறார்கள். கொச்சை படுத்தி இருக்கிறார்கள் என்பதை விட நடப்பதை காட்டி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். 'கிட்ட இருந்தால் முட்டப் பகை'

குடும்பங்கள், உறவினர்கள் என்றாலே சொத்து சிக்கல்கள் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது. இது காலம் காலமாகவே நடைபெற்று வரும் ஒரு பொல்லாத விசயம். பணம் இது ஒன்றுதான் பிரதானம். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை விறுவிறுப்பாகவே செல்கிறது, அதுவும் நகைச்சுவையுடன் நளினம் ஆடுகிறது. 'தொட்டதெற்கெல்லாம் குற்றம் சொல்லும் மனைவி' 'குடித்தும் தன்னிலை மறவா பாத்திரம்' மிகவும் அழகாகவே நகர்கிறது. படத்தின் கருவில் ஒரு மாபெரும் குறை இருக்கிறது! எவர் எவரையோ நல்வழி படுத்தும் கதாநாயகர் தனது சொந்தங்கள் மீது வெறி கொள்வது எதற்கு. சொந்தங்களின் பேராசையை புரிந்து கொண்டு விலகி முன்னரே விலகி இருந்தால் பல இழப்புகள் நேர்ந்து இருக்காது. இது போன்ற சொந்தங்களின் உறுதியை வலுப்படுத்தும் கதைகள் வந்திருக்கின்றன என்பதாலும், தான் கொண்ட நட்பு உயர்ந்தது என்பதாலும் அதற்காக மட்டுமே இந்த அன்பு உபயோகப்படுவதாக கட்டம் கட்டி இருக்கிறார்கள். 'இன்னா செய்தாரை ஒறுத்தல்'

அன்பு, அரவணைப்பு இல்லாத பட்சத்தில் மனநிலை பிறழ்வதற்கான வாய்ப்புகள் அனைவருக்குமே சாத்தியம். இந்த அன்பும், அரவணைப்பும் மனிதர்களின் மனதில் பெரும் மகிழ்ச்சியை தருகிறது. தவறு செய்யும் குழந்தையை அடிப்பதை காட்டிலும், அன்புடன் பேசும்போது ஒரு பாதுகாப்பாகவே அந்த குழந்தை உணர்கிறது. மனம் விட்டு பேசுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். எவராவது பிரச்சினை என சொல்லும்போது அவர்களின் வலியை நீங்கள் முதலில் உணர கற்று கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் பிரச்சனைகளை பற்றி பேசினாலே பெரும் பிரச்சனைகளை உருவாக்குபவர்களாகவே நாம் இருக்கிறோம். மேலும் ஒரு திட்டமிட்ட மனநிலை. நான் இப்படித்தான் என்கிற போக்கு. மாற வேண்டும், மாற்ற வேண்டும் என இல்லாத அக்கறை. 

இதற்கு காரணமாக அறிவியல் விசயங்கள் கூட உண்டு என்கிறார்கள். அதாவது செரோடொனின் எனும் மூலக்கூறானது நாம் மகிழ்ச்சியாக இருக்க உதவுதாக கண்டுபிடிக்க பட்டு உள்ளது. 

             

நாம் சந்தோசமாக இருக்கும்போது இந்த மூலக்கூறு நரம்புகளில் இருந்து வெளிப்படுகிறது. இதன் அளவு குறையும் போது நமக்கு மன அழுத்தம் வர வாய்ப்பு இருப்பதாக அறியப்பட்டு அதற்காகவே மன அழுத்தம் தனை குறைக்க செய்யும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல பில்லியன் டாலர்கள் விற்பனை செய்தது. அது ப்ரோஜாக் எனப்படும் மருந்து ஆகும். இந்த ப்ரோஜாக் இந்த செரோடொனின் அளவை அதிகரிக்க செய்து மனதை மகிழ்வாக வைக்க உதவும் என்கிறார்கள்.  


இதற்காகவே நமது முன்னோர்கள் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என சொல்லி வைத்தார்கள். இந்த வாசகமும் படத்தில் வருகிறது. சினிமா என்பதால் ரசனைக்கு பஞ்சமில்லை. ஆனால் போராளி சமூகத்திற்காக போராடுபவன். திருந்தும் அல்லது திருத்தப்படும் சில மனிதர்கள் மட்டுமே சமூகம் ஆகிவிட முடியாது!