Monday 28 November 2011

மனைவியின் மயோர்கா 3

கியரின் தலைப்பாகம் இல்லாமல் காரை செலுத்திவிடுவது என எங்கேயும் நிறுத்தாமல் ஹோட்டல் வந்து அடைந்தேன். ஹோட்டலில் அதற்குள் மகனும், மனைவியும் கீழே வந்து காத்து கொண்டிருந்தார்கள். நடந்த விசயம் சொன்னதும் சற்று பயம் அவர்களுக்குள் வந்து சேர்ந்தது.

காலை உணவு ஹோட்டலிலே சாப்பிட்டோம், காலை உணவு நன்றாக இருந்தது.  அங்கே இருக்கும் கார்களில், சாலைகளில்  நமது ஊரில் இருக்கும் கார்களைப் போல, சாலைகளை போல  கிலோமீட்டர் கணக்குதான். சாலைகள் மிகவும் நன்றாக இருந்தன. அதி வேகமாக செல்லும் கார்கள் பயத்தை தந்துவிட்டு போனது. மதிய வேளை வந்தது. ஓரிடத்தில் நிறுத்தினோம். அங்கே இருந்த ஒரு பெரிய கட்டிடத்தை பார்வையிட்டுவிட்டு வீதிகளில் நடந்து செல்ல பெரிய கடைத்தெரு இருந்தது. இந்த கடைகள் எல்லாம் அன்றே முளைத்து அன்றே மறையக்கூடியவை போலிருந்தது. கூட்டம் அலை மோதியது. சில பொருட்கள் ஆசையாக இருந்தது என வாங்கினோம். இந்திய கடைகள் எதுவும் தென்படவில்லை மாறாக ஆப்பிரிக்கா போன்ற நாட்டு கடைகள் இருந்தன. தனித் தொழில் திறமையுடைய மனிதர்கள் ஆங்காங்கே அமர்ந்து படங்கள் வரைந்து கொண்டு இருந்தார்கள்.








வெவ்வேறு நாடுகளின் அழகிய பொருட்கள் விற்பனைக்கு இருந்தது. மதிய வேளையில் அங்கே இருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சுற்றுவழி மூலம் நாங்கள் தங்கும் இடம் வந்து சேர்ந்தோம். மாலை வேளையில் நடந்து நாங்கள் தங்கி இருந்த இடத்தை நடந்தே சுற்றி பார்க்க சென்றோம்.

அப்போது இரண்டு இந்திய உணவகங்கள் தென்பட்டன. ஒரு உணவகத்தில் சாப்பிட்டபோது அங்கே இருந்த பையன் நன்றாக பேசினான். வட இந்திய நாடு எனவும், வந்து சில வருடங்களே ஆனது எனவும் சொல்லிக் கொண்டிருந்தான். சாப்பாடு மிகவும் பிரமாதமாக இருந்தது. ஆங்காங்கே இருந்த கடைகளைப் பார்த்துவிட்டு ஹோட்டல் திரும்பினோம்.

அடுத்த தினம் வேறு வழியாக பயணத்தை செலுத்தினோம். இந்த முறை மிகவும் அபாயகரமான சாலை ஒன்று உள்ளது எனவும் அதில் சென்றால் நாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருந்து மறுகோடியில் இருக்கும் பகுதியை பார்க்க முடியும் என்பதால் சற்று பயத்துடனே கிளம்பினோம். முதலில் கடலில் நிறுத்தப்பட்ட படகுகளைப் பார்த்துவிட்டு சின்ன கிராமங்களைப் பார்க்க கிளம்பினோம்.

இந்த சின்ன சின்ன கிராமங்களை தொடாமல் நேராக அந்த அபாயகர பகுதிக்கு செல்லலாம் எனினும், மயோர்காவில் பல இடங்களை பார்த்து விட வேண்டும் எனும் ஆர்வத்தில் கிராமங்களைத் தொட்டு சென்றோம். அங்கே கைவினைப் பொருட்கள் விற்று கொண்டிருந்தார்கள். மிகவும் அருமையான இடங்களாக தெரிந்தது.




மலைகளின் ஊடே போடப்பட்டிருந்த பாதையில் சென்ற பயணம் மிகவும் அருமையாக இருந்தது. சில இடங்களில் எல்லாம் பயத்துடனே வாகனம் செலுத்த வேண்டி இருந்தது. மூணாறு சென்றபோது வந்த பயம் இங்கேயும் வந்து சேர்ந்தது. அழகிய இயற்கை காட்சிகள் என அதி அற்புதமாக மயோர்கா காட்சி தந்து கொண்டிருந்தது. சில ஊர்களில் அத்தனை பெரிய வசதிகளோ, தொழிற்சாலைகளோ இல்லை. அவர்களின் தொழில் என்ன, எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நினைத்தாலும் இயற்கையும், அதன் காட்சிகளும் கவிதை சொல்லிக் கொண்டிருந்தன.

சில பாதைகளில் எல்லாம் செல்ல முடியாது என வழிகாட்டி சொல்லிக் கொண்டிருந்தது. மீறியும் அந்த சாலைகளில் எல்லாம் பயணம் செய்தோம். இந்த பாதை மிகவும் அபாயகரமானது என எச்சரிக்கை எழுதப்பட்டு இருந்தது. அந்த பாதையில் சென்றால் தான் மலை உச்சியை அடைந்து அங்கே இருந்து கடலை பார்க்க இயலும்.

இத்தனை தூரம் வந்துவிட்டு பார்க்காமல் திரும்பி செல்வதா எனும் யோசனையுடன் ஓரிடத்தில் காரினை நிறுத்தினோம்.

(தொடரும்)

Thursday 24 November 2011

ஒழுக்கம்

எத்தனையோ வருடங்கள் முன்னர் கவிஞர் வைரமுத்து சொன்னதாக ஒருவர் என்னிடம் சொன்னது இன்னும் மனதில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கிறது. அவர் உண்மையிலேயே அப்படி சொன்னாரா என்பதை இப்போது அவரிடம் கேட்டால் அவர் மறந்து இருக்க கூடும். ஒரு நல்ல கவிஞர், ஆனால் நடிகைகள் பற்றி எதற்கு அப்படி சொன்னார், உண்மையிலேயே சொல்லி இருப்பாரோ என எண்ணும் போது அந்த கவிஞரை நடிகை சிம்ரனை பற்றி இணைத்து பேசிய செய்தி கசிந்தது. 

நடிகையாக என்ன தகுதி வேண்டும் என கேட்டால் தகாத உறவுக்கு தயாரானவராக இருக்க வேண்டும் என்றுதான் பலர் மனதில் சொல்லிக்கொள்கிறார்கள். குடும்ப பாங்கான படங்களில் நடித்தவுடன், ஓரளவுக்கு புகழ் பெற்றவுடன் ஒரு நடிகை தனது முந்தைய வரலாற்றினை அழித்துவிடுகிறார் எனும் குற்றச்சாட்டு உண்டு. இதன் மூலம் ஒரு நடிகை என்றாலே எத்தனை கேவலமான எண்ணம் மக்களின் மனதில் உள்ளது என்பதை அறியலாம். விலைபொருட்கள் போலவே நடிகைகள் நடத்தப்படுகிறார்கள் எனும் பொதுவான குற்றச்சாட்டு உண்டு. இந்த நடிகைகள் குறித்து ஒருமுறை நாளிதழ் ஒன்று வெளியிட்டதை எதிர்த்து பெரும் போராட்டமே வெடித்தது. நடிகைகளும்  சாதாரண பெண்மணிகள் எனும் எண்ணம், சகோதரத்துவம் போன்றவை பொதுவாக ஒரு பாமரனிடம் எழுவதில்லை. 

ஒரு நடிகையின் கதை என குமுதம் ஒன்றில் வந்த தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது எல்லாம் கற்பனை, அந்த தொடருக்கு தடை விதிக்க போராடி வருகிறோம் என அரசியல் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அன்று என்னிடம் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது. அவர் சொன்ன ஓரிரு வாரங்களில் தொடர் நின்று போனது. 

சமீபத்தில் கூட கவிஞர் வாலி ஒழுக்கமில்லாத துறை திரைத்துறை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த திரைத்துறையில் வெகு சிலரே ஒழுக்கத்துடன் இருக்கிறார்கள் என்று அவர் சொன்னது குறித்து எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவில்லை. மது உட்கொள்தல் ஒழுக்க கேடு என கவிஞர் வாலி நினைக்கிறார் போலும். 

கிசுகிசுக்கள் அதிகம் உலவும்  துறை திரைத்துறை தான். இரண்டு மூன்று படங்களில் ஒரே நடிகர், நடிகை சேர்ந்து நடித்தால் காதல் என கிசுகிசுக்கப்படுகிறார்கள். அதற்கு அலங்காரம் செய்வது போல சில நடிகை, நடிகர்கள் செயல்படுவது உண்மைதான்.  இயக்குனர்கள் சேரன் மற்றும் தங்கர்பச்சான் மீது பொய்யான கற்பழிப்பு வழக்கு போடப்பட்டதாக செய்திகள் உலவின. தற்போது பிறிதொருவரின் மனைவியை, குழந்தையை கடத்தியாக கவிஞர் சினேகன் மீதான குற்றச்சாட்டு. அரசியல் பலத்தினாலும், சொந்த செல்வாக்கினாலும் நடிகை சோனா சொன்ன பாடகர் எஸ் பி பி மகன் சரண் மீதான குற்றச்சாட்டு ஒன்றும் இல்லாமல் போனது. நடிகைகள் பற்றிய படம் எடுத்தால் என்ன ஆகும் என்கிற பயம் பலருக்கும் இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை திருமணங்கள், விவாகரத்து என எதிர்கொண்டது திரைத்துறையில் உள்ளவர்கள் என அறியலாம். 

நடிகர் கமல்ஹாசன், நடிப்பு என சொல்லிக்கொண்டு இவர் நடிகைகளிடம் பண்ணும் அட்டகாசம் பெருமளவில் ரசிக்கப்படுவது உண்டு.  தன்னை தானே ஒழுக்கம் கெட்டவன் என தைரியமாகவே சொல்லக்கூடியவர் இவர் என சொல்கிறார்கள். இவர் மட்டும் காந்தியை போன்று சத்திய சோதனை எழுதினால் திரை உலகம் சந்தி சிரித்துவிடும் என சொல்பவர்கள் உண்டு. நடிகர் ரஜினிகாந்த் பற்றியும் நடிகை அமலா பற்றியும் கூட வேலைக்காரன் படத்தின் போது அரசல் புரசலான செய்திகள் பரவியது உண்டு. 

சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அமலா பால் இடையே தகாத உறவு இருந்ததால் தான் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என ஒரு இணையம் எழுதி இருந்தது. சமீபத்தில் நடிகை ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தா சாமியார் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியது. நடிகர் சிம்பு, நடிகர் பிரபுதேவா, நடிகை நயனதாரா விவகாரங்கள் திரையுலகின் ஒழுக்கம் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பின. 

இப்படி இருக்க திரைத்துறையில் பேசப்படும் இதெல்லாம் எந்தளவுக்கு உண்மை? உண்மையிலேயே திரைத்துறை ஒழுக்கம் கெட்டதா? எல்லா துறைகளிலும் ஒழுக்க கேடு என்பது கொஞ்சம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் என பாலியல் வன்முறைக்கு உட்படும் பெண்கள் மூலம் அறியலாம். ஆனால் இந்த திரைத்துறையில் நடிப்பு என்ற போர்வையில் பாலியல் வன்முறைக்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாகவே வெளியில் இருப்போர்க்கு தென்படுகிறது. மேலும் திரைத்துறை பெருமளவு மக்களால் பார்க்கப்படுவதால், ரசிக்கப்படுவதால் அங்கே நடக்கும் சில விசயங்கள் பூதகாரமாக்கப்படுகின்றன. அவரவர் கற்பனைக்கேற்ப தவறான கண்ணோட்டம் பரப்பப்படுகிறதோ என அச்சம் நிலவுகிறது. 

அப்பொழுதெல்லாம் நினைவு வரும், எங்கிருந்து இந்த கற்பனைவாதிகள் புறப்படுகிறார்கள் என! உறவுகள் குறித்து எதற்கு ஒரு தவறான கண்ணோட்டம் நமது தமிழ் மக்களிடம் வந்து சேர்ந்தது. புறம் பேசுதல் குறித்து இலக்கியங்கள் அதிகமாகவே பேசுகிறது. ஒழுக்கம் கெட்ட விசயங்களின் அடிப்படையில் இதிகாசங்கள், இலக்கியங்கள் உருவாகி இருக்கின்றன. 

இது அவரவர் தனிப்பட்ட பிரச்சினை என எவரும் விடுவதில்லை. ஊரெல்லாம் இவர்கள் பற்றி தெரிவதால் நமட்டு சிரிப்புடன், பரிகாச பார்வையுடன் இவர்களைப் பற்றி பேசுகிறார்கள். அதே வேளையில் கவிஞர் கண்ணதாசன் போல எவரும் தன்னைத்தானே இந்த திரையுலகில் மட்டுமல்ல உலகில்  நிர்வாணப்படுத்தி கொள்ள முன்வருவதில்லை. 

திரைத்துறையில் ஒழுக்கம் இல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை பின்பற்றும் ரசிகனும், ரசிகையும் அதிகமாக தமிழகத்தில் இருக்கிறார்கள் எனும் போது மொத்த தமிழகமே ஒழுக்கம் கெட்டதோ எனும் கேள்வி எதற்கு எழுவதில்லை. 

திருவள்ளுவர் அற்புதமாக சொல்கிறார் 

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். 

அதாவது ஒழுக்கம் உடையவர்கள் தவறியும் கூட தகாத வார்த்தைகளை சொல்லமாட்டார்களாம்! 

வள்ளுவர் சொல்வதைப் பார்த்தால் அத்தகைய ஒழுக்க நெறி இந்த உலகில் மிகவும் குறைவாகவே இருக்கிறது எனலாம். எனவே ஒழுக்கம் கெட்டதுதான் திரைத்துறை என சாலமன் பாப்பையா அங்க வை, இங்க வை என தீர்ப்பு கூறலாம். 

போதைப் பொருளால் கசங்கிய பெண்

இப்ஸ்விச் எனும் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஊரில் வசித்து வந்தாள் அந்த பெண். அழகிய மேனி. பளபளக்கும் கண்கள். வாழ்வில் சாதிக்க வேண்டும் எனும் வெறி. பள்ளிபடிப்பு, கல்லூரி எல்லாம் கடந்து தனக்குப் பிடித்தவரை மணமுடித்து தொடங்கிய இந்த பெண்ணின் வாழ்க்கையில் புதிதாய் வந்தான் ஒருவன்.  பிரேசில் நாட்டில் வசித்து வந்தான். மாநிறம். பண வெறி. நீண்ட மூக்கு. 

இருவருக்கும் இணையம் மூலம் மெதுவாக தொடங்கிய நட்பு, ஒரு சில மாதங்களில் அவனை இவளது வீட்டுக்குள் வரவைத்தது. இவளது குடும்பத்தில் நல்ல நண்பன் ஆனான். இங்கிலாந்து வருவதும் போவதுமாய் சில வருடங்கள் இருந்தான். வர இயலாத காலங்களில் தொலைபேசி மூலம், இணையம் மூலம் தொடர்பு கொண்டு இருந்தான். இவர்களுக்குள் எவ்வித தவறான பழக்கங்களும் இல்லை. எவ்விதமான சண்டை சச்சரவு என எதுவும் இல்லை. கணவன், மனைவியின் நட்பினை வெகுவாக சம்பாதித்தான். ஐந்து வருடங்கள் அதற்குள் கடந்து இருந்தன.

சில வருடங்கள் பிரேசில் நாட்டுக்கு அழைத்து இருக்கிறான். அப்பொழுது இவளால் செல்ல வழியில்லாமல் இருந்தது. மறுமுறையும் அழைத்தான். 

'பிரேசில் நாட்டினை சுற்றிப் பார்க்க வருகிறாயா, எனது மனைவி, குழந்தைகள் உன்னைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்' என்றான்.

'சரி வருகிறேன்'

பெண்ணின் கணவன் பலமுறை தடுத்தும் கேளாமல் இந்த பெண் பிரேசில் நாட்டுக்கு சென்றாள். அங்கே விமான நிலையத்தில் இவளை வரவேற்க அவன் இல்லை. அவனது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது அது உபயோகத்தில் இல்லை என வந்தது. கலங்கியபடியே நின்றாள்.

சிறிது நேரம் கழித்து தொடர்பு கொண்டபோது ஒரு மார்கெட் இடத்திற்கு வர சொன்னான். அங்கே சென்று பார்த்தபோது அவனுடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். 

மொழி தெரியாத ஊரில் வேதனையுடன் தான் கழித்த நேரங்களை சொல்லியவள் 'எங்கே மனைவி, பிள்ளைகள்?' என்றாள்.

'வீட்டில் இருக்கிறார்கள், பிறகு அழைத்து செல்கிறேன் என தன்னுடன் இந்த பெண்ணை அறிமுகப்படுத்தினான்' 

'நான் சில பொருட்கள் ஊருக்கு செல்ல வாங்க வேண்டும்' என இந்த பெண் சொன்னதும் 'இவளை அழைத்துக் கொண்டு போ, நான் ஒரு விசயமாக வேறு இடம் செல்ல வேண்டி இருக்கிறது' என சென்றான். 

பல பொருட்கள் வாங்கியவள் அவனை தொடர்பு கொண்டபோது தொடர்பில் இல்லை. வழக்கம் போல சிறிது நேரம் பின்னர் நீங்கள் இந்த ஹோட்டல் அறைக்கு சென்று தங்குங்கள், எனது மனைவியும் குழந்தைகளும் இப்போது அவர்களது தந்தை ஊருக்கு சென்று விட்டார்கள். வர எப்படியும் சில மாதங்கள் ஆகும் என்று சொன்ன விசயத்தை கேட்டு ஏமாந்து போனாள். 

அதன்படியே அவன் வந்தான். வந்தவன் தன்னிடம் இருந்த பையை தந்தவன் அனைத்து பொருட்களையும் இந்த பையில் வைத்து செல், இந்த பையானது ஒரு வகை மரத்தினால் ஆனது, எனவே சற்று வாடை அடிக்கும், அதைப் பற்றி கவலைப்படாதே, உனக்காக வாங்கி வந்தேன் என தந்துவிட்டு சில இடங்களை காட்டிவிட்டு ஊருக்கு அனுப்பி வைத்தான். இப்படி வாடை அடிக்கிறதே என அவள் சுதாரிக்க வில்லை. இதற்கு முன்னர் போதைப் பொருள் பழக்கம் இல்லாததால் எப்படி இருக்கும் எனும் சிந்தனை அவளுக்கு இல்லை. 

விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டபோது அந்த பையினுள் போதைப்பொருள் வைக்கப்பட்டு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைக்கேட்ட மறுநிமிடமே இவள் மயங்கி விழுந்தாள். தன்னை ஏமாற்றிவிட்டானே என மனதுக்குள் புலம்பினாள். விமான சோதனை அதிகாரிகளிடம் எத்தனையோ முறை சொல்லியும் அவளை விடவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் புரியாத காரணம் வேறு. 

தனக்கும், போதைப்பொருளுக்கும் சம்பந்தம் இல்லை என அழுது பார்த்தாள், எதுவும் நடக்கவில்லை. அவளை சிறையில் அடைத்தார்கள். அவளிடம் காவல் அதிகாரிகள் தவறாக நடக்க முயன்றார்கள். அத்தனை வேதனைகளையும் சுமந்து கொண்டு எப்படியாவது தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என ஆங்கிலம் தெரிந்த ஒரு அதிகாரியிடம் பேசிப் பார்த்தாள். ஆனால் எவரும் இவளை நம்புவதாக இல்லை. கதறினாள். கெஞ்சினாள்.

விசயம் கணவனுக்கு தெரிந்தது. தன்னுடன் ஒரு வழக்கறிஞர் ஒருவரை அழைத்து வந்து பேசிப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. இவளுடன் பழகியவன் மாயமாக மறைந்து இருந்தான். தான் கொடுத்தனுப்பிய பொருள் கிடைக்காதது கண்டு சுதாரித்து கொண்டான். 

கணவனும் வழக்கறிஞரும் ஒரு திட்டம் தீட்டினார்கள். மருத்துவமனைக்கு அவளை கொண்டு சென்று அங்கே இருந்து அவளை தப்பிக்க சொல்லி ஒரு போலி பாஸ்போர்ட் உருவாக்கி இங்கிலாந்து சென்று விடலாம் என நினைத்தார்கள். இவளுக்கு அந்த தைரியம் வரவில்லை. மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட முடியாமல் தவித்தாள். தனக்கு தைரியம் வரவில்லை என மீண்டும் சிறைக்கே சென்றாள். இனிமே வாழ்க்கையே சிறையில் தான் என எண்ணி வேதனையுற்றாள். கணவனும் ஒன்றும் செய்வதறியாது திரும்பினார்.

நமது ஊரில் சில தலைவர்கள் பிறந்த நாள் வரும்போது சில கைதிகளை வெளியிடுவது போல அந்த ஊரிலும் செய்யும் வழக்கம் உண்டு. அப்படி ஒரு நாள் வந்தது. அந்த நாளில் இவளையும் விடுதலை செய்தார்கள். தப்பித்தோம் பிழைத்தோம் என இங்கிலாந்து வந்தபோது அதிர்ச்சி காத்து இருந்தது.கணவன் தனது வாழ்க்கை சீரழிந்து போனதாக இவளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

போதைப் பொருட்கள் பக்கமே தலைவைத்து படுக்காதவர் நட்பு எனும் போதையினால் தனது வாழ்க்கையையே தொலைத்தது மிகவும் கொடுமையான விசயம். 

எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என எவராலும் கண்டு கொள்ள முடிவதில்லை. நட்புகளே, உறவுகளே நாம் பல வருடங்கள் ஒருவருடன் பழகி இருந்தாலும் மிக மிக எச்சரிக்கையாக இருப்பது நமது பொறுப்பு.