Monday 7 November 2011

புத்தகங்களும் ஆராய்ச்சி கனவுகளும்

 நுனிப்புல் பாகம் இரண்டு தயாராகி சில வருடங்கள் ஆகிவிட்டது. அந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என நண்பர் அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களிடம் சென்ற வருடம் விசாரித்தபோது 'தொலைக்கப்பட்ட தேடல்கள்' சிறுகதை தொகுப்பு இன்னமும் அப்படியே இருக்கிறது, நீங்கள் அனுப்பி வைத்த நுனிப்புல் பாகம் ஒன்று நாவல் இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒரு அறை எல்லாம் புத்தகங்களாக நிரம்பி வழிகின்றன என்றார். சரி என்ன செய்வது சற்று தாமதிக்கலாம் என விட்டுவிட்டேன். சில பல காரணங்களால் வலையுலகத்தில், இணைய உலகத்தில் பழகிய பலர் தொடர்பில் தற்போது இல்லவே இல்லை. இதற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம் என நான் நினைத்தாலும், என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என எவருமே நினைக்கவில்லை என்பது சற்று வித்தியாசமாகவே உணர முடிந்தது. வாழ்க்கை புரிந்து போனது. 

சரி, தம்பி செல்வமுரளியிடம் விசாரிப்போம் என சில வருடங்கள் முன்னர் முதலில் கேட்டபோது, நீங்கள் எந்த புத்தகத்தையும், எந்த பதிகப்பதார் மூலமாவது வெளியிடுங்கள் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை ஆனால் ஒரு ஆராய்ச்சியாளனின் பாதையை நீங்கள் எழுதி முடித்தபின்னர் எனது பதிப்பகத்தின் மூலம் தான் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். சரி என ஒப்புதல் தந்தாலும் இன்னமும் எழுதி முடிக்கவில்லை. இதில் பல விசயங்கள் இணைத்து, கழித்து பின்னர் வெளியிட வேண்டும். எனவே இன்னும் சில வருடம் கால தாமதம் ஆகலாம். 

எனது மகன் பெறும் 'ப்ளாக் பெல்ட்' கராத்தே சான்றிதழ் வழங்கும் விழா அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடக்கலாம். அதற்கு எனது புத்தகம் ஒன்றை வெளியிடலாம் என கராத்தே மாஸ்டர் சில மாதங்கள் முன்னர் சொன்னபோது எனக்கு மனதில் இருந்த இரண்டு கதைகள் ஒன்று நுனிப்புல் பாகம் இரண்டு, மற்றொன்று அடியார்க்கெல்லாம் அடியார். நுனிப்புல் பாகம் இரண்டு வெளியிட்டால் தான் நுனிப்புல் பாகம் மூன்று அடுத்த வருடம் எழுதலாம் என்கிற யோசனை வேறு. என்ன செய்வது?

ஒரு நல்ல பதிப்பகம் வேண்டும், புத்தகங்களை மட்டும் வெளியிட்டு விட்டு அத்தோடு நிறுத்திவிடாமல் அதை நல்ல முறையில் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை பல தொண்டு நிறுவனங்களுக்கு தர வேண்டும். இதை சிரத்தையுடன் செய்வது யார்? எழுதும் ஆசிரியன் எனக்கே இந்த விளம்பர புத்தி இல்லாமல் இருந்தால் எவரைப் போய் குற்றம் சொல்வது? ஆங்கில நாவல் எழுத வேண்டும் என ஆவலுடன் தொடங்கிய எழுத்து ஒரு அத்தியாயம் கூட தாண்டாமல் அப்படியே இருக்கிறது. 

இந்த புத்தகங்களை எல்லாம் சிறப்பாக அச்சிட ஏதேனும் நிறுவனம் கிடைக்குமா? நாமே பதிப்பகம் என போட்டு வெளியிடலாமா எனும் ஓராயிரம் யோசனையுடன் புத்தக கனவுகள் அப்படியே நிற்கின்றன. 

நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இதோடு பதினான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு வருடத்தையும் திரும்பி பார்க்கும்போது ஏதோ ஒன்று மிச்சப்பட்டு போனது போன்றே உணர்வுகள். 

பலமுறை கிடைத்த தொடர் தோல்விகள். பலமுறை ஏற்பட்ட தடங்கல்கள். இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும், மக்கள் பயன் பெறுவார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு மருந்து ஆமை போலவே நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இதை செய்து தாருங்கள், அதை செய்து தாருங்கள் என பல ஆய்வுகள் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். இன்னமும் மருந்து வெளிவந்தபாடில்லை. 

புதிய மருந்துகள் கண்டுபிடிக்க எண்ணற்ற விலங்குகளை கொன்றது மட்டுமே மிச்சமாக இருக்கிறது. சில ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் சில மூலக்கூறுகளை காப்புரிமை செய்து வைத்திருக்கிறார்கள், ஆனால் எனக்கு அதில் உரிமை என்றே சொல்லிவிட்டார்கள். பல ஆய்வு கட்டுரைகள் வெளியிட முடியாத நிலையில் இருக்கின்றன. எனது ஆய்வு குறித்த முழு விபரங்களும் எங்கேயும் சொல்ல முடியாத நிலைதான் நிலவுகிறது. இரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்றே சொல்கிறார்கள். மக்கள் பயன் பெற எவர் பெயர் எடுத்தால் என்ன என்கிற மனநிலையே எனக்கு இருக்கிறது. 
இந்த ஆராய்ச்சி கனவுகள் கூட முழுமை பெறாமல் அப்படியே நிற்கின்றன.

கனவுகள்தனை நிறைவேற்றும் முயற்சிக்கான போராட்டம் தொடரட்டும். 

Sunday 6 November 2011

புகழைக் கண்டு அஞ்சுபவரோ?

பாராட்டு மழைக்கு மகிழாதவர்களே இல்லை. நாம் செய்வது நமக்கு திருப்தியாக இருந்தாலும் மற்றவர் அந்த செயலை சுட்டிக்காட்டி பாராட்டினால் மனதில் ஒருவித சந்தோசம் நிலவும். இதை வெளிக்காட்டிக் கொள்ளும் நிலை ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. 

ஒரு செயலை செய்துவிட்டு அதற்கான பாராட்டுகளை எதிர்நோக்கி இருப்போரும் உண்டு. அப்படி பாராட்டு கிடைக்காத பட்சத்தில் எதற்கு அந்த செயலை செய்தோம் என்கிற சலிப்பும் ஆற்றாமையும் ஏற்படுவது உண்டு. 

எனது கடமையை செய்கிறேன், இதன் மூலம் எனக்கு பாராட்டுகளோ, அவமதிப்புகளோ ஏற்பட்டாலும் பரவாயில்லை, எனது வேலையை தொடர்ந்து செய்வதுதான் எனது தலையாய பணி என இருப்பவர்கள் வெகு சிலரே. ஏனெனில் நமது மனம் சின்ன சின்ன அங்கீகாரத்தை எதிர்நோக்கியே பயணத்தைத் தொடர்கிறது.  இந்த சின்ன சின்ன அங்கீகாரம், பாராட்டுதனை  'உந்து சக்தி' என அழைக்கிறார்கள்.

சின்ன சின்ன பாராட்டுகள் மனிதர்களை மிகவும் மகிழ்ச்சியுடன் வைப்பதோடு மட்டுமன்றி தொடர்ந்து சிறப்புடன் பணியாற்ற வைக்கின்றன. தொழிற்சாலைகள் போன்றவற்றில் இதற்காகவே சிறப்பு விருதுகள், அன்பளிப்புகள், ஊக்கத் தொகை என கொடுத்து பணியாளர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். 

'நாம பண்ற காரியத்தைப் பாத்து நாலு பேரு பாராட்டுனும்யா, அதுதான்யா மனுசனுக்கு அழகு' என்றும் 'செய்ற செயலுக்கு உதவி செய்யாட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் இல்லாம இருந்தா போதும்' என்றும் வழக்கு மொழிகளில் பரிமாறி கொள்பவர்கள் உண்டு. 

இப்படித்தான் மனைவியுடனும், மகனுடனும் நேற்று இரவு காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது 'ஒரு செயலை செய்ததற்காக என்னை வெகுவாக பாராட்டினார்கள். அவர்கள் செய்யும் செயலை கூட உங்களோட ராசி, இதை செய்து தாருங்கள், அதை செய்து தாருங்கள் என கேட்டார்கள். நானோ இதில் என்ன இருக்கிறது, எல்லாம் இறைவன் செயல், எனது கடமையை செய்தேன், நடந்தது. இதில் எனது ராசி எல்லாம் எங்கே வந்தது, நீங்களே செய்து கொள்ளுங்கள் என சொன்னேன்' என்றேன். இதைக் கேட்ட 'எனது மனைவியோ, ஊருக்கு எல்லாம் செய்துட்டு தான் ஒண்ணுமில்லை என வந்துவிடுபவர் உனது அப்பா' என்றார். எனது பதினோரு வயது மகன் 'நீ புகழுக்கு அஞ்சுகிறாய்' என்றான்.  எனக்கு எனது மகன் சொன்னதை கேட்டதும் 'உண்மையோ, நான் புகழுக்கு அஞ்சுகிறேனா' எனும் எண்ணம் பரவியது. இதே மாதம் சென்ற வருடம் என்னை நோக்கி 'எதற்கு அந்த தொண்டு நிறுவனத்தில் நீ செயலாளராக பணியாற்றுகிறாய், தலைவராக அல்லவா இருக்க வேண்டும், ஏதேனும் இளைய தலைவர் பதவி இருந்தால் எனக்கு கொடுக்க சொல்' என்றான். 

அவன் சொன்னதை யோசித்துப் பார்க்கிறேன். புகழுக்கு அஞ்சுபவர்கள் இருக்கக் கூடும். பேரும் புகழும் அடைந்துவிட்டால் சுதந்திரம் பறிபோய்விடும் என நினைக்கலாம். நான் ஒரு செயலாளர் என்பது அங்கு வருபவர்கள் பலருக்கு இன்னமும் தெரியாது. என்னை முன்னிலைப்படுத்தி அங்கே ஒருபோதும் நான் நிற்பது இல்லை. எனது எழுத்துகள் மட்டும் பலருக்கு தெரியட்டும், என்னைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாம் என எனது குறிப்புகள் கூட இந்த வலைப்பூவில் இருந்து நீக்கி இருக்கிறேன். எனது நூல்கள் பற்றிய விளம்பரம் கூட விலக்கி இருக்கிறேன்.  அவையெல்லாம் இனி திருப்பி எழுதிவிட வேண்டும், புகழுக்காக அல்ல, விபரத்துக்காக. 

பதவிகளும், பாராட்டுகளும் என்னை யோசிக்க வைக்கின்றன. எல்லாம் சரியாக இருந்தால் ஆஹோ ஓஹோ என பாராட்டும் அதே வாய் வார்த்தைகள் தான் சிறு தவறு இருப்பினும் மாற்றி பேசுகின்றன எனும் அச்சம் வெகுவாக நிலவுவது உண்டு. பாராட்டப்பட வேண்டும் என்றோ, பெருமைப்பட வேண்டும் என்றோ காரியம் செய்ய பலரும் துணிவதில்லை.  விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் பணியாற்றுகிறார்கள். மக்களுக்கென சேவை செய்ய தனது மொத்த வாழ்க்கையை அர்பணித்த, அர்பணித்து கொண்டிருக்கும் மாமனிதர்கள் இந்த பூவுலகில் உண்டு. 

வசதிகள், வாய்ப்புகள் எல்லாம் பெருக பெருக பணிவும், அடக்கமும் அவசியம் என்றே அறிவுறுத்தப்படுகிறார்கள். தலைமையில் இருப்பவர்கள் பிறரை அச்சுறுத்தி வைத்தே காரியங்களை சாதிக்கிறார்கள். பயம் ஏற்படுத்தி சாதித்தல். இல்லையெனில் 'தலயில மிளகா அரைச்சிருவாங்க' என புரிந்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். 'நேர்மையும், நீதியும், தைரியமும் உடையவர்கள்' பிறரை அச்சுறுத்தி வாழ வேண்டிய அவசியமில்லை, பிறருக்கு அச்சப்பட வேண்டிய தேவையும் இல்லை. 

எத்தனையோ மாமனிதர்கள் தங்கள் கடமையை செய்து கொண்டே இருக்கிறார்கள், இவர்கள் புகழுக்கு என ஏங்குவதும் இல்லை, புகழ்தனை கண்டு அஞ்சுவதுமில்லை. 

நாம் செய்யும் பணி பலருக்கும் உதவட்டும், அது ஒன்றே உன்னதமானது. 

Friday 4 November 2011

திரு. ஞாநி கதை விடுபவரா?

திரு ஞாநி ஒரு டுபாக்கூரா? என்பதற்கும், திரு ஞாநி கதை விடுபவரா, காதில் பூ சுற்றுபவரா என்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது ஆனால் அர்த்தம் என்னவோ ஒன்றுதான். டுபாக்கூர் என்பது கொச்சை தமிழ், இழிவுபடுத்தி சொல்லப்படும் வார்த்தை. கதை விடுபவர் என்பது சுத்த தமிழ், வஞ்ச புகழ்ச்சி அணியை தழுவியது. 

கதை விடுபவர் என்பதற்கும் கதை சொல்பவர் என்பதற்கும் கூட வித்தியாசம் இருக்கிறது. கதை சொல்பவர் என்பது ஒருவரின் செயலை நல்லவிதமாக குறிக்கிறது, அதே வேளையில் கதை விடுபவர் என்பது ஒருவரின் செயலை கெட்டவிதமாக குறிக்கிறது. அதாவது ஏமாற்றுக்காரர் என்கிற தொனியில் அது அமைகிறது. 

இப்பொழுது திரைப்படம் என்றால் என்ன? அது ஒரு கனவு தொழிற்சாலை எனவும், பொழுதுபோக்கு கலை எனவும் குறிப்பிடப்படுகிறது. கற்பனைகளின் கூடாரம் என்று கூட குறிப்பிடலாம். ஒரு திரைப்படத்திற்கான அளவுகோல் எது? மக்களின் ரசனைக்கு ஏற்றமாதிரி எடுப்பதா? சிறந்த கதையுடன் அல்லது சிறந்த கதையாக இல்லாவிட்டாலும் சிறப்பான திரைக்கதை கொண்டதா? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதா? இப்படி பல கேள்விகள் இந்த திரைப்படத்தை குறித்து எழுந்தாலும் அது ஒரு கனவு மட்டும் கற்பனை தொழிற்சாலை என்பது உண்மை. 

நடந்த விசயங்களை சொன்னாலும் அது ஒரு கதை வடிவமே. உண்மையான பாத்திரங்களை சொல்ல முடியாது. திரைப்படம் சமூகத்தை சீரழிக்கின்றன என்றும், சமூகத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பது அவ்வப்போது நடைபெறும் சில விசயங்கள் உறுதிபடுத்தினாலும் முழுமையான தாக்கத்தை, ஒட்டுமொத்த சமூக மாற்றத்தை திரைப்படங்கள் கொணர இயலுவதில்லை. நமது கற்பனைகளை, ஆதங்கங்களை வடிவமாக கண்டு மகிழும் நிலையில் இருப்பவர்கள்தான் நாம். அதற்காகவே ஒரு எம் ஜி ஆரோ, ரஜினியோ பெரும் புகழ் அடைய வழிவகுத்தது. 

தமிழில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு உண்டு. தமிழில் நல்ல படங்கள், மசாலா படங்கள், குப்பை படங்கள் என பிரித்து பார்த்தால் ஐம்பது சதவிகிதம் குப்பை படங்களும், நாற்பத்தி ஐந்து சதவிகிதம் மசாலா படங்களும் மீதி ஐந்து சதவிகிதம் மட்டுமே நல்ல படங்கள் என பிரித்துவிடலாம். சிறந்த பொழுதுபோக்கு படங்கள்தனை  விரும்பும் மக்கள் அதிகம் உள்ளவர்களே தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு பல மசாலா படங்கள் சாட்சி. இதில் கதை எல்லாம் இரண்டாம்பட்சம் தான். 

இப்படிப்பட்ட சூழலில் திரு ஞாநி அவர்கள் ஒரு சிறந்த படம் எடுக்க வேண்டும் எனும் முனைப்போடு ஒரு செயலில் ஈடுபட்டார்கள். அதாவது ஆள் பிடிப்பது. நல்ல படங்கள் வரவேண்டும் என முனைப்புடன் இருப்பவர்களை சேர்த்து ஒரு படம் எடுப்பது. இன்றைய காலகட்டத்தில் குறைந்த செலவில் படங்கள் எடுப்பது மிகவும் அரிதான விசயம். இந்த திரைப்படத்தில் பணியாற்றும் குழுவினர்கள் என பார்த்தால் ஒரு நிறுவனம் போலவே அந்த படத்தில் பங்கு பெற்று இருப்பவர்கள் இருப்பார்கள். அதற்காக செலவாகும் தொகை மிகவும் பெரிது. அதைப்போலவே அந்த திரைப்படத்தின் வாடிக்கையாளர்கள் என பார்த்தால் மிகவும் அதிகம். அதன் காரணமாகவே பல கோடி செலவு செய்து லாபம் அடையவும் செய்கிறார்கள். இதனால் இந்த திரைப்படம் எடுப்பது சாதாரண விசயம் இல்லை என்பதை பலரும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். 

சமீபத்தில் எனது நண்பர் செல்வமுரளி தனது விசுவல் மீடியா நிறுவனத்தை விரிவாக்கம் செய்துள்ளார். அவருக்கும் வாடிக்கையாளர் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் விளம்பரம் செய்தது மிகவும் குறைவே. இது ஒரு சிறிய நிறுவனம், மிகப் பெரிய நிறுவனமாக வளரும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால் திரைப்படம் என்பது அப்படியல்ல. அது ஒரு பொழுதுபோக்கு சித்திரம். உடனடி லாபதாரர்கள் ஒரு படத்தின் மூலம் பார்க்கலாம், அதைப்போலவே பெரும் நஷ்டம் அடைபவர்களையும் காணலாம். 

திரு. ஞாநி அவர்களின் விளம்பரம் இப்படித்தான் இருந்தது. 

'நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம். 

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும். 

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும். 

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்'

அதற்கான எனது மறுமொழி இப்படித்தான் இருந்தது. 

'இப்படி அவசர அவசரமாக ஒரு படம் எடுத்து எதைச் சாதிக்க நினைத்து இருக்கிறீர்கள். ஒரு படத்தின் மூலம் சமுதாயத்தில் என்ன சாதித்துவிட முடியும் என நினைக்கிறீர்கள். இதுவரை வெளியான படங்கள், கதைகள் சாதித்தது என்ன? தனிமனிதனின் முயற்சியினால் மட்டுமே ஒவ்வொருவரும் சாதித்து காட்டி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் காரணங்கள் குறிப்பில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைதான். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து திருந்தினேன் என ஒரு காந்தி தான் சொன்னார், நாடகம் பார்த்த பலர் எங்கே போனார்கள்?

ஒரே ஒரு படம் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் மாற்றுமாறு எடுங்கள், பாராட்டுகிறேன். நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி எனக்கு என்னவோ மனிதர்களை முட்டாளாக்க முயற்சிப்பதாகத்தான் படுகிறது. இருப்பினும் தங்கள் முயற்சி நன்மை பயக்குமெனின் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.'

இந்த உரையாடல் எனது வலைப்பூவில்  நடந்த வருடம் ஆகஸ்ட் 2009. திரு ஞாநி அவர்கள் தங்களது இலக்கை அடைந்தாரா? இலக்கை நோக்கிய பயணம் தொடர்கிறதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. திரு ஞாநி நீங்கள் கதை விடுபவரா? என்கிற கேள்வி மட்டுமே தொக்கி நிற்கிறது. 

இவரைப்போலவே ரூபாய் 30,000 முதலீடு செய்யுங்கள், ஒரு அழகிய படம் எடுத்து காட்டுகிறேன் என முயற்சி செய்து கொண்டிருக்கும் நண்பர் திரு. கேபிள் சங்கர் எனும் சங்கர் நாராயண் இலக்கை அடைந்தாரா? இந்த திரைபடத்தின் மூலம் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களுக்காக மூலதனம் செய்பவர்கள் மூலம் நல்ல திரைப்படம் எடுக்கப்பட்டு நிறைய பொருளாதாரம் ஈட்டிட்டால் மேலும் மேலும் இது போன்ற நிகழ்வுகள் பெருகும். வாழ்த்துகள். 

இவர்களை போன்றே பல கனவுகளுடன் வாழும் பலர் தங்கள் இலக்குகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெற பெரும் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வெற்றி பெற வாழ்த்துகள். எங்களது  ஆய்வில் பத்து பதினைந்து வருடங்கள் போராடி ஒரு மருந்தினை கண்டுபிடித்து உலக மக்களை நோயிலிருந்து விடுபட செய்தாலும்  எங்களுக்கு கிடைக்கும் வரவோ வெறும் வாய். 

ஒரு மருந்தினை கண்டுபிடிக்கிறேன், நீங்கள் மூலதனம் செய்யுங்கள் என உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் என்பது எனக்கு தெரியும். :)