Thursday 19 May 2011

எப்படி காதலிப்பது

வாழ்க்கையில் காதல் மிகவும் சுவராஸ்யமானது. ஆனால் எப்படி காதலிப்பது? 

வாழ்க்கையில் காதல் ஒருமுறைதான் வருமாம். ஆனால் எவரை காதலிப்பது? 

திரைப்படங்களில் காட்டப்படும் காதல் காட்சிகள் பல மிகைப்படுத்தப்பட்டவை என சொன்னாலும், உண்மையான வாழ்க்கையில் காதல் மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. 

'நீ இல்லையினா நா செத்து போயிருவேன்' வெறும் பேச்சுக்காக பேசப்பட்ட வசனங்கள் இல்லை இவை. பலர் இறந்து போயிருக்கிறார்கள். 

'மனசுக்கு பிடிச்சவரை காதலிச்சம், ஆனால் கல்யாணம் பண்ண முடியலையே' எனும் ஏக்கத்தில் பலர் வாழ்வதாகத்தான் சொல்கிறார்கள். 

காதல் வெகு அதிகமாகவே கொச்சைப்படுத்தப்படுவதும் உண்மைதான். 

அப்படி என்னதான் காதல்?! 

காதல் புரிய முடியாதது என்கிறார்கள் புரிந்து கொண்டவர்கள் போல! 

காதலின் சுவையை அறியாதவரை காதல் இனித்து கொண்டிருக்கும் என்கிறார்கள் பலர். 

காதலிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் காதலிப்பதில்தான் ஒரு அலாதிப் ப்ரியம் இருக்கிறது. 

எப்படி காதலிப்பது? எவரை காதலிப்பது? 

காதல் சொல்லிக்கொண்டு வருவதில்லை. காதல் இவரை காதலி என கை காட்டுவதும் இல்லை. 

காதல் மனதில் தோன்றும் ஒரு உணர்வு. இந்த காதல் ஒரு விதமான நோய் என சொல்லி வைத்தார்கள். 

நோய் தீர்ந்துவிட்டால் காதல் இல்லாது போய்விடும் போல. 

இந்த காதல் பற்றிய பல காவியங்கள் மாபெரும் வெற்றி பெற்று இருக்கின்றன. காதலித்து வாழ்தலில் இருக்கும் சுகம் எதிலும் இல்லை என ரகசியமாகவே காதல் புரிந்து கொண்டிருக்கிறார்கள். கள்ளக்காதல். 

எது எப்படியெனினும் எப்படி காதலிப்பது? எவரை காதலிப்பது? 

காதல் புரிந்து கொண்டே பலரும் கேட்டு கொள்ளும் கேள்விதான் இது. 

காதல் ஒருபோதும் எவருக்குமே ஒழுங்காக வந்தது இல்லை. எவருமே முறையாக காதலித்ததும் இல்லை. 

Wednesday 18 May 2011

ஈழத் தமிழா பரமேஸ்வரா நீ கெட்டிக்காரன்

சட்டென ஒரு தொலைக்காட்சி நிகழ்வு. கண்கள் நிலை குத்தி நிற்கிறது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டியும், அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதை நிறுத்த வேண்டியும் லண்டன் பாராளுமன்ற வளாகத்தின் அருகில் சாகும் வரை உண்ணாவிரத்தில் ஈடுபடுகிறார் தன்மான தமிழன், ஈழத் தமிழன் பரமேஸ்வரன். வருடம் 2009. 

அந்த போராட்டம் நடைபெற்றபோது மக்கள் வெகுவாக திரண்டு சென்று கொண்டிருந்தனர். இந்த மக்களின் எழுச்சி போராட்டம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. புலம் வாழ் தமிழர்களின் ரணப்பட்ட மனம். பல வருடங்களாக மாறாத சோகம். உண்மை வரலாற்றினை மறைத்து வைத்த கொடுமைகள். உலகெங்கும் எழுச்சி அலைகள். 

சொந்த நாட்டில் வாழ இயலாத பெரும் துயரம். பிற நாடுகளின் குடியேறி சொந்த நாட்டிற்கென பணம் அனுப்பி துயரம் துடைத்திட துடித்திட்ட மக்கள், துடித்திடும் மக்கள். போராட்டம் வலுப்பெற்று இருந்தது. 

பரமேஸ்வரனின் உடல்நலத்தை சமயந்தோறும் சரிபார்த்திட மருத்துவ வசதிகள், பிரச்சினைகள் பெரிதாகிவிடக் கூடாதென பணியமர்த்தப்பட்ட காவல் அதிகாரிகள். இதற்கான செலவுகள் மிகவும் அதிகம் என்றே கணிக்கப்பட்டது. உயிர்களை விட பணமா பெரிது?! 

இந்த நிகழ்வினை கண்டு பொறுக்கவில்லை பத்திரிகைகள். முதல் வேலையாக டெய்லி மெயில் எனும் பத்திரிகை தமிழர்களை கேவலப்படுத்தி எழுதியது. அதாவது பரமேஸ்வரன் திருட்டுத்தனமாக பர்கர் சாப்பிட்டார் என்று சொன்னது. போலித்தனமான உண்ணாவிரதம் என எழுதியது. இதைப் படித்த சில தமிழ் நல்ல உள்ளங்கள் உடனே செய்தியை உண்மை என நம்பி பரமேஸ்வரனுக்கு மிரட்டல்களும், பரமேஸ்வரனின் செயலால் தமிழர்களுக்கு அவமானமும் நிகழ்ந்தது என பரமேஸ்வரனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பினார்கள். 

பரமேஸ்வரன் கூனி குறுகிப் போனார். தான் நியாயமான முறையில் நடந்து கொண்டும், தம் இன மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது எத்தனை முட்டாள்தனம் என நினைத்து இருக்க வேண்டும். நன்றி கெட்ட மனிதர்கள் எல்லா இனத்திலும் உண்டு. 

நமது ஊரில் ஏதேனும் சாதாரண மனிதர்களைப் பற்றி பத்திரிக்கை எழுதினால் எதுவும் செய்ய இயலாது, ஆனால் இலண்டனில் சட்டம் ஓரளவுக்கு வேலையை செய்யும், மேலும் பத்திரிகைகள் நினைத்ததை எழுதி தப்பிக்க இயலாது. பார்த்தார் பரமேஸ்வரன். 

தெருக்களில் சுதந்திரமாக நடமாட இயலவில்லை. கருங்காலி என பட்டம் சூட்டப்படாத குறைதான். அந்த இரண்டு பத்திரிக்கைகள் மீது வழக்கு தொடர முடிவு எடுத்தார் பரமேஸ்வரன். நல்ல நேர்மையான வழக்கறிஞர்கள். பத்து மாதங்களில் தாங்கள் செய்தது தவறு என பத்திரிகைகள் மன்னிப்பு கேட்டன. போனா போகுது என்கிற தொனியில் இருந்தது அந்த மன்னிப்பு. வழக்கு மன்றத்தில் போராடி அந்த இரண்டு பத்திரிக்கைகள் மன்னிப்பு கேட்டதோடு கிட்டத்தட்ட 80,000 பவுண்டுகள் பரமேஸ்வரனுக்கு நஷ்ட ஈடு தந்தது, அதுவும் வழக்கறிஞர்களின் செலவுடன் சேர்த்து. 

ஈழத்தமிழா பரமேஸ்வரா நீ கெட்டிக்காரன். உனக்கு நீதி கிடைத்துவிட்டது. ஆனால் இன்னும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு நீதியும் கிடைக்கவில்லை. நீ இருந்த உண்ணாவிரதம் மூலம் எவருக்கு ஐயா விடுதலை கிடைத்தது? அன்று புலம் பெயர்ந்த நாடுகளில் ஏற்பட்ட எழுச்சிகள் மூலம் என்ன ஐயா விடிவு வந்தது? 

ஈழத்தமிழர்கள் நடத்த வேண்டிய இந்த உண்ணாவிரத போராட்டம் இலங்கையில் நடந்து இருந்தால் எத்தனையோ இழப்புகள் தவிர்த்து இருந்திருக்கலாம். அதற்காக மறைந்த தலைவர் பிரபாகரன் எடுத்துக்கொண்ட பாதை தவறு என ஒருபோதும் சொல்லவில்லை. இலங்கையில் நமது இனம் மெல்ல மெல்ல அழிய நாமே காரணமாகிப் போனோம் என்பதுதான் மறைக்க முடியாத துயரம். 

இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அங்கு வாழும் தமிழ் மனிதர்களிடம் கேட்டுப் பாருங்கள்! அவர்கள்தான் உண்மையான ஈழத்தமிழர்கள். புலம் வாழ் தமிழ் நெஞ்சங்களே, நமது இதயத்தைத் தொட்டு சொல்வோம், நாம் வீரமற்ற வாய்ச்சொல் வீரர்கள். 

பல நேரங்களில் உண்மையை சொல்லாமல் இருப்பதே நல்லது என்கிறார்கள். 

கண்ணு பட்டுருச்சோ ரஜினி!

எப்ப, எனக்கும் எந்த குறையும் இல்லைன்னு ஒரு இடத்தில பேசினாலும் பேசினாரு, சோதனைக்கின்னே வந்து சேர்ந்துச்சு நோயி. அந்த பேச்சை கேட்டதும் என்னை அறியாமலே 'அட பாவமே' என்றுதான் தோணிச்சி, ஆனா இப்படி வந்து சேரும்னு நினைக்கல. வேதனையுடன் சொல்கிறார் ரஜினியின் மீது பிரியம் வைத்து இருப்பவர். கண்ணு பட்டுருச்சோ ரஜினி. 

உங்களுக்கு சிறு பிரச்சினை என்றால் அதை பெரும் பிரச்சினை என வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் உண்டே ரஜினி. நீங்கள் எண்பதுகளில் பட்ட வேதனையை விட இது ஒன்றும் பெரிது இல்லைதான். வயது வளர்கிறதல்லவா! 

இந்த கஷ்ட நேரத்தில்  எதையும் எழுதி உம்மை கஷ்டபடுத்த விரும்பலை, உம்மை என் எழுத்து கஷ்டபடுத்தவும் படுத்தாது. ஆனால் உம்மை பின்பற்றும் பல கோடி ரசிகர்களின் மனம் வேதனை படுமே ரஜினி. அவர்கள் வாழ்க்கையில் இனிமேலும் வேதனை படுவது அவசியமில்லாத ஒன்றுதான். நீங்கள் கைவிட்டு விட்ட புகை பழக்கம், மது பழக்கம் பலரும் கைவிட கூடும். எண்பது வயதாகும் என் தந்தையின் உடல்நலம் சீரடைந்து பின்னர் சீராகி பல வருடங்களாக உண்ணாமல் இருந்த முட்டையை உண்பதாக சொன்னபோது 'வாழ்க்கையை எப்படியும் வாழ்ந்துவிட வேண்டும் எனும் ஆசை எவரையும் விட்டுவிடுவதில்லைதான். வெளிப்படையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களை பலருக்கும் பிடித்துதான் இருக்கிறது, உங்களில் அவர்களை பார்க்கிறார்கள். 

புகை பிடிக்கும் பழக்கத்தை இத்தனை வருட காலம் கொண்டிருந்தீர்களே, அது உடனடியாக எதுவும் செய்யாது என்பதலா? நீங்கள் பிடிக்கிறீர்கள் என நானும் பிடிக்கிறேன் என பிடித்து காட்டிய நண்பர்கள் கண்டு வெறுப்பு அடைந்திருக்கிறேன். 'தலைவர் பிடிக்கிராருடா' என என்னை ஏளனம் பேசியவர்கள் உண்டு. 

மது பழக்கம் இல்லாத மக்களை மேலை நாடுகளில்  பார்ப்பது கடினம், அந்த மதுவையே மறைந்து இருந்து குடிக்கும் வழக்கம் கொண்ட பலர் நம் ஊரில் அதிகம். இந்த மதுவை விட முடியாத வாழ்க்கை கொண்டீர்களே, என்ன காரணம் ரஜினி. கணித மேதை ராமனுஜரின் வாழ்க்கை வரலாறு மிகவும் மோசமானது ரஜினி. தெரிந்து இருப்பீர்கள். கடல் கடந்து சென்றால் ஒரு பிராமணர் என்ற அந்தஸ்து தொலையும் என்ற நிலையிலும் கடல் கடந்து சென்றவர். ஆனால் தனது உயிர் புலால் உண்பதால் சரியாகும் என்கிற நிலையிலும் அதை தொடாதவர் என்றே வரலாறு சொல்கிறது. அது என்ன காரணமோ ரஜினி. தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமே சொந்தம். ஆனால் எப்பொழுது அவர்கள் பொது மனிதர்கள் ஆகிறார்களோ அப்பொழுது அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லைதான். 

சாதாரண மனிதருக்கு இருக்கும் பொறுப்பை விட பிரபலமான மனிதர்களுக்கு இருக்கும் பொறுப்பு மிக மிக அதிகம் என சொல்வார்கள். ஆனால் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் பக்குவம் அந்த பிரபலமானவர்களுக்கே  உரித்தான ஒன்று. எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை கதைகள் படித்து இருப்பீர்கள். எத்தனை கதைகள் சொல்லி இருப்பீர்கள். உங்களுக்கு தெரியாததா ரஜினி. 

ஆன்மிகம் என சொல்லிக்கொண்டு சக உயிரினங்களை உண்டு வாழும் வாழ்க்கை எப்படி சரியென சொல்வது. தனது அன்னை, தந்தை, உறவினர்களின் உடல் நலம் பற்றி அக்கறை கொள்ளாத பலர் உங்கள் உடல் நலம் குறித்து வேதனை கொண்டிருப்பதை கண்டீர்களா ரஜினி. மது, புகை என இருந்தாலும் இத்தனை வருடம் பிரச்சினை இல்லாமல் வாழ்ந்ததே உங்களின் கட்டுகோப்பான வாழ்க்கைதான். உங்களின் கட்டுகோப்பு எங்களை போன்றவர்களிடம் இல்லையே ரஜினி. 

நீங்கள் நல்ல மனிதர் என்றே பலராலும் அறியப்பட்டு இருக்கிறீர்கள். ஆனால் குடிப்பழக்கம், புகைப்பழக்கம், புலால் உண்ணல், கோபம் போன்றவை கொண்டிருப்போர் நல்ல மனிதர்களாக இருந்திடல் சாத்தியம் எனினும் நல்ல உடல் நலத்துடன் இருப்பது சாத்தியம் இல்லை என்பது உங்களுக்கு இமயமலை கற்றுத் தராததா. 

சூழ்நிலை கைதி என சொன்னீர்களே ரஜினி. பணம் சம்பாதிக்கும் வியாபாரிகள் அனைவருமே அப்படித்தான். அந்த வியாபாரிகள் தனது சொந்த நலனுக்காக எதையும் விற்றுவிடும் அளவுக்கு துணிந்தவர்கள். நேர்மையும், நியாயமும் உலகில் எங்குமே இல்லையே ரஜினி. 

இத்தனை விசயங்கள் என்னை போன்று எழுதும் பலர், பேசும் பலர் எல்லாம் யோக்கியவான்கள் இல்லை ரஜினி. இந்த எழுத்தை, பிறர் எழுத்தை, பிறர் பேசுவதை நீங்கள் படிக்க, கேட்க நேரிட்டால் மனதுக்குள்  சிரித்து கொள்வீர்கள் அல்லவா. அதுதான் மனிதர்களின் ரகசியம். பிறருக்கு ஒன்று எனில் உடனே அறிவுரை சொல்லும் வித்தைகாரர்கள். தன்னை பற்றி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். நீங்கள் இதற்கெல்லாம் கவலைப்பட போவது இல்லை. விரைவில் நலம் பெறுங்கள் ரஜினி. உங்களால் மனதளவில் உற்சாகம் கொள்ளும் கோடி மக்கள் உண்மையிலேயே உண்டு.