Monday 20 September 2010

விளையாட்டுப் பெண்கள்

மணமான என்னை என்னுடன் வேலை பார்க்கும் பெண் மணந்து கொள்ள எதற்கு நினைத்தாள் என்பதற்கான காரணத்தை என்னால் சிறிது நேரம் கூட யோசிக்க இயலவில்லை. அறையின் கதவை திறந்து கொண்டு அவளின் அறைக்கு செல்ல இருக்கையில் அவளே அவளது அறையில் இருந்து வெளியில் வந்தாள். அவளது கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தது.

'உங்களிடம் பேச வேண்டும்' என்றாள். கவனியுங்கள், அவர் என அவளை இதற்கு முன்னர் வரை சொல்லிக் கொண்டு இருந்தேன். இனிமேல் அவள் தான். 'எனது அறையா? உனது அறையா?' எனக் கேட்டேன். 'எனது அறை' என்றாள். எனக்கு எனது மனைவி கன்னத்தில் அறை விடுவது போன்று ஒருவித உணர்வு வந்து போனது. அவளின் விருப்பப்படியே அவளது அறைக்கு சென்றேன். அங்கிருந்த நாற்காலியில் நான் அமர்ந்தேன். அவளும் என் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

'நீங்கள் என்னை ஏன் மணம் முடிக்க கூடாது?' எனக் கேட்டாள். 'நான் மணமானவன், மறந்துவிடாதே' என்றேன். 'மணமுடிக்காமல் இருந்தால்?' என்றாள். 'எனக்கு வேலை கிடைத்து இருந்து இருக்காது என நினைப்பவர்கள் அதிகம்' என்றேன். எனது பதிலை மிகவும் சாதுர்யமாக நான் பேசியது எனக்கு வியப்பை தந்தது. அவளிடம் உன்னை திருமணம் பண்ணும் வாய்ப்பே இருந்து இருக்காது  என ஏன் என்னால் நேரடியாக சொல்ல இயலவில்லை என யோசனை எழுந்தது. அதற்குள் அவள் ஒரு சின்ன கதை சொன்னாள்.

முருகனுக்கு எதற்கு இரண்டு பொண்டாட்டிகள்  எனக் கேட்டாள். எனக்கு தெரியாது என சொன்னேன். மனிதர்களின் வாழ்க்கையில் அவர்களை தேடி ஒன்று வரும், அது போல மனிதர்கள் அவர்களாகவே ஒன்றை தேடி போவார்கள் என்பதை சொல்லும் வண்ணம் தான் முருகனுக்கு இரண்டு பொண்டாட்டிகள் என்றாள். வள்ளி அவராக தேடி சென்றது, தெய்வானை அவரை தேடி வந்தது. அது போல உங்கள் மனைவி நீங்கள் தேடியது, நான் உங்களை தேடி வந்தது என நிறுத்தினாள். நான் இருந்த சூழலையே மறந்து கட்டிடங்கள் இடிந்து விழும் வண்ணம் சிரித்து தொலைத்தேன்.

அப்படியெனில் உன்னைத்  தேடி ஒருவன் வந்தான் எனில் அவனையும் ஏற்றுக் கொள்வாயா என சிரிப்பின் இடைவெளியில் கேட்டு வைத்தேன். எனது கேள்வி எனக்கு சரியாகத்தான் பட்டது. அவள் முகத்தில் கோபம் அனலாக வெடித்தது. நான் ஒன்றும் கேவலமான பிறவி இல்லை என்றாள். உனது எண்ணத்தை சரிபார்த்து கொள் என சொல்லிவிட்டு எழுந்தேன். அன்று பேசியவள்தான், அதற்கு பின்னால் ஒருநாள் கூட பேசவும் இல்லை, நானும் பேசுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவும் இல்லை.

வாழ்க்கையை விளையாட்டுத்தனமாக பார்ப்பவர்களுக்கு வாழ்க்கையின் அன்பின் அடித்தளம் புரிவது இல்லை. வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக எதையும் யோசிக்காமல் செய்பவர்களின் நிலைமை அத்தனை நிம்மதியாக இருப்பதில்லை. எவரோ சொன்னது எனது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. நான் எனது உறுதியான செயல்பாடினால் மிகவும் நிம்மதியாக இருந்தேன். நேரம் இருக்கும்போதெல்லாம் தொலைபேசி மூலம் எனது மனைவியின் உடல்நலம் விசாரித்து கொண்டிருந்தேன்.

ஹாங்காங்கில் இருந்து ஊருக்கு திரும்பினேன். அவளும் தான் விமானத்தில் உடன் வந்தாள். ஆனால் அடுத்த நாளில் இருந்து வேலைக்கு வரவே இல்லை. வேலையை விட்டுவிட்டதாக அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். கேட்கவா வேண்டும்? எனது மாமா மகளை தவிர அலுவலகத்தில் இருந்த பெண்கள் அவள் வேலையை விட்டுவிட்டதற்கு நான் தான் காரணம் என பேச ஆரம்பித்து இருந்தார்கள். சில வாரங்கள் பின்னர் அவளுக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொன்னார்கள். வேலையை  விட்டு விட்டதற்கு திருமணம் தான் காரணம் என இப்போது சொன்னார்கள். மனதில் சிரித்து கொண்டேன்.

எனது மனைவி ஒவ்வொரு நாள்தனையும் மிகவும் கொண்டாடி வாழ்ந்து கொண்டிருந்தார். தான் தாய் ஆகப் போகிறோம் எனும் எண்ணம் அவரை அளவில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தி கொண்டிருந்தது.

இந்த வேளையில் தான் எனது மாமா மகள்  'மாமா, என்னை காதலிச்சவனுக்கு இப்போ விவாகரத்து ஆயிருச்சி' என்றாள். 'நீ எதாச்சும் பண்ணினயா' என பதட்டத்துடன் கேட்டேன். 'எனக்கு எதுக்கு அந்த வேலை, கட்டாய கல்யாணம் பண்ணி வைச்சதால தினமும் சண்டைதானாம். என்னை பிடிக்காம எதுக்குடா கல்யாணம் பண்ணின அப்படினு விவாகரத்து வரைக்கும் அந்த பொண்ணு போயிருச்சாம். பெரியவங்க சொல்லியும் அந்த பொண்ணு கேட்கலையாம், விவாகரத்து வாங்கிருச்சாம்' என்றாள். 'இந்த கதை உனக்கு எப்படி தெரியும்' என்றேன். 'என்னோட பிரண்டுதான் சொன்னா, நான் அவனுக்கு வாழ்க்கை தரலாம்னு இருக்கேன் மாமா' என கலகலவென சிரித்தாள். 'விளையாட்டுத்தனமா எதுவும் பண்ணிராதே' என சொன்னேன். 'அவன் வாழ்க்கையில விளையாடப் போறேன்' என சொல்லிவிட்டு விறுவிறுவென கடந்து போனாள். 'ஐயோ பெண்கள்' என தலையில் அடித்து கொள்ள வேண்டும் போலிருந்தது.

அன்று வீட்டுக்கு சென்றபோது வீட்டில் என்னுடன் முதலில் வேலை பார்த்த பெண் எனது மனைவியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்ததும் எழுந்து வரவேற்றாள். எனது கையில் காகிதம் ஒன்றை தந்தாள். சரி பாருங்க, அச்சடிக்கனும் என்றாள். மணமகன் எனும் இடத்தில் எனது பெயர் போட்டு இருந்தது. கொதித்து போனேன். என்ன காரணம் என யோசிக்க எல்லாம் எனக்கு அப்போது தோணவே இல்லை.

(தொடரும்)

Wednesday 15 September 2010

கருணாஸ் நடித்ததால் எந்திரன் படம் தோல்வி?

பல விசயங்கள் புரிந்து கொள்ள முடியாத வாழ்க்கையில் மனிதர்களின் நம்பிக்கைகள் புரிய முடியாத விசயங்களுக்கு பதிலாக அமைந்து விடுவது காலம் காலமாக நடந்து கொண்டு வருவதுதான். இந்த மனிதர்களின் நம்பிக்கைகள் எல்லாம் மிகவும் சரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவரின் அனுபவத்தின், நம்பிக்கையின் காரணமாக விசயத்தின் முழு உண்மையை எவரும் ஆராய முற்படுவதில்லை. இதன் காரணமாக இது நடந்தது என மிகவும் சர்வ சாதாரணமாக சொல்லிவிடுவது வழக்கம்.

அதீத திறமையுடைவர்களை  கூட அதிர்ஷ்டத்தினாலும், கடவுள் கிருபையினாலும் மட்டுமே வெற்றி பெற்றார்கள் எனும் எண்ணும் வழக்கம் இருக்கிறது. இதற்கு வாழ்வில் நடக்கும் காரண காரியங்கள் ஆதாரம்.

'இது என்னால் மட்டுமே சாத்தியமில்லை' எனும் எண்ணம் உடையவரை மற்ற காரணிகளுக்கு மதிப்பு தந்து தன்னடக்கத்துடன் இருப்பதாகத்தான் எடுத்து கொள்ளவேண்டும்.

சகுனம் பார்க்கும் சங்கடம் நம்மில் அதிகம் உண்டு. ராசி பார்க்கும் பாசம் நம்மிடம் மிக மிக அதிகம் உண்டு. இதன் காரணமாகவே பலர் தன்னம்பிக்கையை தொலைத்து விடுகிறார்கள்.

அறிமுகமே இல்லாத ஒருவர் 'பாபா படத்தில் தலைவருடன் சேர்ந்து கருணாஸ் நடித்ததால்தான் பாபா படம் தோல்வி அடைந்தது, அதே நிலைமை எந்திரன் படத்துக்கு வந்து விடுமோ என அச்சப்படுகிறேன்' என்றார்.

'எந்த ஒரு படமும் மக்கள் பார்க்க மறுத்தால்தான் வியாபார ரீதியாக தோல்வி அடையும், எனவே இது போன்ற குருட்டுத்தனமான எண்ணங்களை கைவிடுங்கள்' என சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தேன்.

ஏன் மனிதர்கள் மட்டும் இப்படி இருக்கிறார்கள்?

Thursday 9 September 2010

நுனிப்புல் (பாகம் 2) 15

15. கிராமத் தலைவர் வாசன்

அனைவரையும் வழியனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்தான் வாசன். சாப்பிட அமர்ந்தான்.

''நல்லா சாப்பிடுப்பா''

கண்கள் கலங்கியபடியே வாசனின் தாய் சொன்னார்.

''என்னம்மா, என்னை சென்னைக்குப் போகச் சொன்ன, இப்ப கண் கலங்குற''

''அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா, ஜோதி உன்னை பத்திரமா பாத்துக்கிறேனு சொல்லியிருக்கா, அவங்க வீட்டுலயே தங்கி இருப்பா''

''கவலைப்படாதேம்மா, நாங்க வேகமா வந்துருவோம்''

சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வாசனின் மனம் கலங்கியது. வாசன் சாப்பிட்டு வெளியில் வந்து அமர்ந்தான். தாய் தோட்டம் செல்ல தயாரானார்கள். அம்மாவிடம் மீண்டும் சென்று சொன்னான்.

''பொன்னுராஜ் மாமாவும், முத்துராசு அண்ணனும் விவசாயத்தை கவனிச்சிக்கிருவாங்கம்மா''

''நீ தைரியமாப் போய்ட்டு வாப்பா''

தைரியம் இல்லாமல் சொன்னார் ராமம்மாள். வாசன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இது குறித்து கேட்டபோது அதிகம் யோசிக்காமல் நல்ல காரியம் என சரியென சொல்லியவர் இரண்டு தினம்தான் இருக்கிறது என்றதும் வருத்தம் வந்து அவருக்குச் சேர்ந்தது. சிறுவயதில் இருந்தே எங்கும் பிரிந்து செல்லாத வாசன் தற்போது விலகிச் செல்வதை நினைக்கும்போது வேதனையாக இருந்தது. இந்த காரியம் வெகுவிரைவில் நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார். வாசனும் அம்மாவுடன் தோட்டம் சென்றான். தோட்டத்தில் இன்னும் வேலை தொடங்கி இருக்கவில்லை. பொன்னுராஜ், முத்துராசு பேசிக்கொண்டு இருந்தார்கள். வேலனும் வந்து சேர்ந்தார். ராசாத்தி மற்றும் பலரும் வந்து சேர்ந்தார்கள்.

''என்ன மருமகனே, திருவில்லிபுத்தூருக்கு தயாரா''

''ஆமா மாமா''

''வாசு அங்க பொண்ணு பார்த்து அங்கேயே தங்கிரு, இனி நான் தான் இந்த ஊருக்கு தலைவரு''

முத்துராசு சிரித்துக் கொண்டே சொன்னார். வாசன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான்.

''நீங்க தலைவருன்னா, ஊரே செழிப்பாயிரும்''

''ராசு வா வா வேலையை கவனிப்போம்''

பெண் பார்க்கும் பேச்சை ஆரம்பித்ததால் பொன்னுராஜ் முத்துராசுவை அழைத்துச் சென்றார். வாசனும் வேலை செய்யத் தொடங்கி்னான். பெண்கள் களையெடுக்கத் தொடங்கினார்கள்.

''என்ன ராமக்கா, தம்பி எப்ப திரும்பி வரும், செடிய அனுப்பிவைக்கச் சொன்னா கேசவன் போயிருக்குல்ல, கொண்டு வந்துரப் போகுது, இதுக்கு எதுக்கு இவங்க இரண்டு பேரும் அங்க போய்த் தேடனும், அப்படி என்ன செடியோ''

ராசாத்தி செடியின் அருமை தெரியாது பேசினார்.

''அதான் அன்னைக்கி கூட்டத்துல பெரியவரு சொன்னாருலே, இது என்னமோ வளர ஒரு வருசம் ஆகும்னு, அதுக்குள்ள எத்தனை தரம் களை எடுக்கறது, எத்தனை தரம் மருந்தடிக்கிறது நமக்கு எல்லாம் நல்ல வேலை இருக்கு, நம்ம வேலையும் பார்க்கனும்''

முனியம்மாள் தெரிந்தவிசயம் போல் சொன்னார்.

''தெரியலை ராசாத்தி, மலைப்பகுதியெல்லாம் தேடனுமாம், ஊரே போனா என்னன்னு தோணுது''

ராமம்மாள் வருத்தமாகச் சொன்னார்.

''ஏன் ராமக்கா, தம்பி ஊர்த்தலைவரு ஆயிருச்சே நம்ம ஊருல வேலை வெட்டி இல்லாம இருக்கறவங்களுக்கு ஏதாச்சும் பண்ணலாம்ல''

''யார் வேலையில்லாம இருக்கா, வேலைக்குத்தான் ஆள் இல்லாம இருக்கு, விவசாயம் யார் பார்க்குறா''

''ஏன் ராசாத்தி, மரத்தடியில உட்கார்ந்து விளையாடறவங்களை சொல்றியா, ராமக்கா நாம அவங்களைத் திருத்த முடியாது''

முனியம்மாள் சரியாகவே சொன்னார். வாசனிடம் அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கினார்கள். பெரியவரிடம் பேச அச்சப்பட்டவர்கள் வாசனிடம் நேரடியாய் பேசலாம் என நினைத்தார்கள். ஆனால் வாசன் பெரியவரை மீறி எதுவும் செய்யமாட்டான் என எண்ணவும் செய்தார்கள். பேசிக்கொண்டே அவர்கள் வேலையும் எளிதாக சென்று கொண்டிருந்தது.

மதியவேளை உணவு உண்ண அனைவரும் அமர்ந்தார்கள். வாசன் வேலை செய்து கொண்டிருந்தான். வேலன் சித்தப்பா வாசனிடம் சென்றார்.

''அடுத்தவாரம் கோவில்பட்டியில இருந்து உன் சித்தப்பா வரானாமே''

''அப்பா சொல்லிட்டு இருந்தார், ரோஹிணிக்கு படிப்பு முடிய இன்னும் மூணு மாசம் இருக்கு, முடிச்சிட்டுதான் வருவாங்கனு நினைக்கிறேன்பா''

சுந்தரன் பற்றி பேச்சை ஆரம்பித்தார் வேலன். இப்பொழுது வேண்டாம் என்றான் வாசன். ஆனால் வேலன் சுந்தரன் நேற்று பேசியதாகவும் விபரங்களைச் சொன்னார்.

''நல்லவேளை அவனே மனசு மாறிக்கிட்டான்''

''எனக்கு வருத்தம்பா''

''இது நடக்கிற காரியம் இல்லைனு அன்னைக்கு சொன்னேனே நாம ஏதாவது பேசி இருந்தா பிரச்சினை வந்துருக்கும் எல்லாம் நல்லபடியா நடக்கனும்னு பெருமாளை வேண்டிக்கிறேன்''

சாப்பிட வருமாறு அழைத்தார்கள். வாசன் சென்று அமர்ந்தான்.

''என்ன வாசு, வேலை செஞ்சு களைச்சிட்டே, மரத்தடியில உட்கார்ந்து இருக்கறவங்களை ஏதாவது செய்யலாம்ல''

முனியம்மாள் சொன்னார். திருவில்லிபுத்தூர் சென்று வந்து செய்வதாக சொன்னான் வாசன். முத்துராசு கேட்டார்.

''என்ன பண்றதா உத்தேசம், பட்டணத்துக்கு அனுப்பப் போறியா''

''அனுப்பி வைச்சிருவோம்ணே''

ராமம்மாள் குறுக்கிட்டார்.

''உன் இஷ்டத்துக்கு எதுவும் செய்யாதப்பா''

''மருமகன் சரியாத்தான் செய்வாரு, என்ன மருமகனே''

வாசன் தலையாட்டினான். அனைவரும் சாப்பிட்டுவிட்டு வேலை செய்யத் தொடங்கினார்கள். வாசனுக்கு மாதவி பற்றிய நினைவு வந்து சேர்ந்தது. பூங்கோதையின் நிலை நினைத்து வருந்தினான். மாலை வந்து இரவும் நகர்ந்தது. அடுத்த நாள் சற்று வேகமாகவே கடந்தது. வாசன் மாலை வேளையில் அனைத்தும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான். சாரங்கன் வாசனின் வீட்டிற்கு வந்தார். சாரங்கனைப் பார்த்ததும் வாசனுக்கு தேவையில்லாத பிரச்சினை ஒன்று வந்திருப்பதாகப் பட்டது. சாரங்கன் வந்ததும் வராததுமாய் வாசனைப் பார்த்து கேட்டார். வாசன் திடுக்கிட்டான்.

(தொடரும்)