Friday 2 July 2010

குடிசை - சினிமா விமர்சனம்

இப்படி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் தமிழில் வந்ததே இல்லை. இது போன்று ஒரு திரைப்படம் வருமா என எண்ண வைக்குமளவுக்கு அமைந்து விட்ட இந்த திரைப்படம் தமிழ் திரையுலகின் ஒரு மைல் கல் எனத் தைரியமாகச் சொல்லலாம்.

நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என அனைவருமே புதுமுகங்கள். இவர்கள் அனைவருமே ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான் படத்தின் சிறப்பம்சம்.

தமிழ் திரைப்படங்களில் கதை இல்லை எனும் குறையை தீர்த்து வைத்தப் படம் என சொல்லலாம். மசாலாவாக இருக்கட்டும் என நடிகையர்களை குழுவாக அரைகுறை ஆடையுடன் ஆட விடாமல், யதார்த்தம் இருக்க வேண்டும் என கிழிசல் உடையுடன் திரிபவர்கள் என எவரையும் காட்டாமல் இப்படியும் ஒரு திரைப்படம் எடுக்கலாம் கொஞ்சமும் மசாலா இல்லாமல் மிகவும் அழகாகவே ஒரு திரைப்படம் எடுத்து விட வேண்டும் என துணிந்து படம் எடுத்த இயக்குநர் அவர்களுக்கு ஒரு பாராட்டு.

பாடல்கள் இருக்கிறது. ஆனால் அவை எல்லாம் ஐந்து நிமிட பாடல்கள் என தனி இடம் பெறாமல் படத்தோடு ஒரு சில நிமிடங்கள் என அந்த கிராமத்தில் பாடித் திரிபவர்கள் பாடியதை படமாக்கி இருக்கிறார்கள். இதற்கெனவே பாடலை மிகவும் சிரமப்பட்டு ஆங்கில வார்த்தை கலக்காமல் அழகிய தமிழில் எழுதிய பாடலாசியருக்கு ஒரு பாராட்டு.

இசை. இதைப் பற்றி சொல்லித்தான் ஆக வேண்டும். எத்தனை தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஏதேதோ சொல்கிறார்கள். ஆனால் இந்த இசை அமைப்பாளர் இயற்கையாய் ஏற்படும் ஓசையை மட்டுமே பதிவு செய்து அதை படத்துடன் மிகவும் சாதுர்யமாக இணைத்து இருக்கிறார். கடமுடவன அதிர்வு சத்தங்களோ, காதினை குடையும் இரைச்சல் சத்தங்களோ படத்தில் எங்குமே கேட்க இயலவில்லை. நம்மை சுற்றி ஏற்படும் சப்தங்களையே இசையாக்கி தந்திருக்கும் இசை அமைப்பாளருக்கு ஒரு பாராட்டு.

நடிகர்கள், நடிகைகள் புதுமுகம் எனினும் படத்தின் கதைக்கு அருமையாக ஒத்துப் போகும் அழகிய முக பாவனைகள். முகத்தில் எவ்வித சாயமும் எவரும் பூசவில்லை. இது ஒரு திரைப்படம் என்கிற உணர்வே இல்லாமல் தங்களது வாழ்க்கையை அழகாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். இதில் யார் கதாநாயகன் எனக் கேட்டால் கதைதான் கதாநாயகன் என சந்தோசமாக சொல்லலாம்.

படத் தொகுப்பு செய்தவரையும், ஒளிப்பதிவாளரையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அதிக வெளிச்சம், கும்மிருட்டு, செயற்கை மழை என எதுவுமே இல்லாமல் இயற்கையோடு இணைந்து அந்த அந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். வறண்டு போன பூமி என்பதாலோ என்னவோ மழை காட்சி என படத்தில் இல்லவே இல்லை.

இந்த படமானது அனைத்தும் ஒரே ஒரு முறைதான் எடுக்கப்பட்டதாம். இப்படி நடி, அப்படி நடி என எந்த ஒரு காட்சியும் திரும்ப எடுக்கப்படவே இல்லையாம். இது திரையுலக வரலாற்றில் மாபெரும் சாதனை என சொல்லலாம்.

படம் முழுக்க ஒரு கிராமத்தை வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த கிராமம் மட்டுமே படமாகி இருக்கிறது.

இப்படி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் தமிழில் வந்ததே இல்லை. குடிசைக்கு அலங்காரம் அவசியமில்லை.

இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளும், நன்றிகளும்.

Thursday 1 July 2010

யாரைத்தான் நண்பர் என ஏற்பது?

உனது நண்பனை பற்றி சொல், உன்னை பற்றி சொல்கிறேன் என  ஒரு வழக்கு சொல் இருக்கிறதாம். எனக்கு அதில் எல்லாம் உடன்பாடு இல்லை. உன்னை பற்றி சொல், உன்னை பற்றி தெரிந்து கொள்கிறேன் என்பதுதான் எனது கோட்பாடு.

இப்படித்தான் நான் கல்லூரியில் படித்தபோது கல்லூரிக்கு அதிகம் வரவே மாட்டான் ஒருவன். பாடங்களை முறையாக படிக்கவும் மாட்டான். அவனை ஒழுங்காக படி என அவனுக்கு அறிவுரை சொல்லுவதோடு, கல்லூரிக்கு சரியாக வர வேண்டும் என அவனிடம் சொல்ல நான் தவறியதே இல்லை.  இத்தனைக்கும் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறான் என்பதை தவிர தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டியது இல்லை.

அவன் ஒரு முறை தவறிழைத்துவிட கல்லூரி முதல்வரிடம் அனுப்பபட்டான். அவர் அவனிடம் யார் உனது நண்பன் என கேட்டு இருக்கிறார். அவன் எனது பெயரை சொல்லி இருக்கிறான். அந்த கல்லூரி முதல்வர் சரி போ என அவனை அனுப்பிவிட்டார்.  ஒரு நாள் கல்லூரிக்கு போகவில்லை எனின்  அது மாபெரும் குற்றம் என மனதில் நினைத்து இருந்தேன்.

கல்லூரி முதல்வர் என்னை வகுப்பறையில் பார்த்து 'என்னய்யா உன்னைத்தான் பிரேன்டுனு அவன் சொல்றான்' என்றார்.  புன்முறுவல் செய்தேன். அவன் தவறிய போதெல்லாம் தவறு என திருந்த சொன்ன என்னை அவன் என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டாலும் அவன்  படிப்பை தொடர முடியாமல் செல்லும் நிலைதான் அவனுக்கு ஏற்பட்டது.

ஒரு நண்பன்/ நண்பி என்பவர் யார்? இதற்கு திருக்குறளில் எழுதப்பட்ட பாடலுக்கு விளக்கம் கேட்ட முத்து 'அட போய்யா' என நான் சொன்ன விளக்கத்தை கேட்டு ஏளன பார்வை பார்த்தது மறக்க முடியாது. சாமிக்கு அடிக்கிற உடுக்கையை கீழே தவறவிட்டா அதை தாங்கி பிடிப்பதுதான் நட்பு என சொல்லி இருந்ததாக நினைக்கிறேன். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. பின்னர் சரியாக விளக்கம் தந்தார் முத்து.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

ஊரில் இருந்தவரை என்னுடன் விளையாடித் திரிந்தவர்கள். படித்தபோது உடன் படித்தவர்கள். வேலை பார்த்த இடத்தில் உடன் வேலை பார்த்தவர்கள், பார்த்துக் கொண்டிருப்பவர்கள். இந்த எழுத்து  எழுதுமிடத்தில் உடன் எழுதுபவர்கள். எவரையுமே எனது நண்பர்கள் என என்னால் தொடர்ந்து அடையாளம் காட்டவே இயலவில்லை.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்

எனக்கு எவரையும் தெரிந்து எடுக்க வேண்டிய சூழல் அமையாமல் போனது. தேவையின் அடிப்படையில் மட்டுமே பலர் பழக்கமானார்கள். பழக்கமானவர்கள் என்பதற்காக எனது நண்பர்கள் என சொல்லிக் கொண்டாலும், நட்பு என்கிற பார்வை வெறும் பார்வையாகத்தான் இருந்து வருகிறது.

ஒரே கருத்துடையவர்கள் எளிதாக நண்பர்கள் ஆகிவிடலாம் என சொன்னால் வேறுபட்ட கருத்துள்ளவர்கள் நண்பர்கள் ஆக இயலாதா? எனும் கேள்வி என்னுள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

நட்பு பற்றி சிலாகித்து எழுதியது உண்டு.

நட்பு தினத்தில் நட்பு பாராட்ட எவருமில்லாமல் இருந்த நிலையையும் எழுதியது உண்டு.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

'இவன் என் நண்பன்டா' என என்னை எவரும் உரிமையோடு சொன்னதுமில்லை. 'இவர் என் ஆருயிர் நண்பர்' என எவரையும் நான் சொன்னதாக நினைவில் இல்லை.

எனது மனைவிக்கு நிறையவே நண்பிகள், நண்பர்கள் இருந்ததுண்டு. ஆனால் திருமணம் ஆன பின்னர் அந்த நண்பர்கள் நண்பிகள் என எவரும் தொடர்பில் இருந்தது இல்லை. நண்பராக என்னை மட்டும் கருதுவதாக சொல்லும் போதெல்லாம், இப்பொழுது இருக்கும் இந்த உலகில் இழந்த நண்பர்களை அடையாளம் காண்பது எளிது, எனவே தாராளமாக தேடலாம் என சொன்னாலும் காலம் கடந்துவிட்டதாகவே சொல்கிறார். இதே தேடல் இவரது நண்பர்கள், நண்பிகளிடம் இருக்குமா? எனக் கேட்டால் பதில் இல்லை.

பல வருடங்கள் தொடர்பில் இல்லாமல் பத்து வருடங்கள் பின்னர், இருபது வருடங்கள் பின்னர் சந்தித்து பழைய நட்பு பற்றி பேசுவது  நட்பிற்கு தரும் மரியாதையா? அவர்கள் நண்பர்களா? அவரவர் தேவை என ஓடிவிடும் உலகில் இந்த நட்பு பெறுகின்ற இடம் எது?

வழியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுவிட்டு குத்துதே குடையுதே என எதற்கு சொல்ல வேண்டும் என எச்சரிக்கை மொழி இருக்கத்தான் செய்கிறது. நட்பில்  எவையெல்லாம் புறந்தள்ள வேண்டும் என மிகவும் அருமையாகவே குறளில் சொல்லப்பட்டு இருக்கிறது.

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற பாற்று.

இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும்

ஆனால் நட்பு காதலைப் போன்று அத்தனை சுகமானது. காதலை சேர்த்து வைக்கும்  நண்பர்கள். புதிய வேலைக்கு என வழி செய்யும்  நண்பர்கள். துன்பத்தில் எப்போதும் உடனிருந்து துணையாய் நின்று நல்வழி படுத்தும் நண்பர்கள் என  இந்த நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

எனக்கு எதுதேவை எனினும் உடனே செய்து தர பலர் தயாராக இருந்து கொண்டிருக்கிறார்கள். செய்தும் தந்து இருக்கிறார்கள். நட்பு என அவர்களை சொந்தம் கொண்டாட எனக்கும் ஆசை தான். ஆனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய நான் தொடர்ந்து தயாராக இருக்கிறேனா? என எனக்குள் எழும்  கேள்வியில் என்னை தொலைத்து விடுகிறேன்.

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு 8

இருவரும் கல்லூரி முதல்வரின் அறைக்குள் நுழைந்ததும், இருவரையும் புன்முறுவலுடன் நாகராஜன் வரவேற்றார். தனது மேசையின் முன்னால் இருந்த இருக்கையை காட்டினார்.

''உட்காருங்க''

இருவரும் தயக்கத்துடனே அமர்ந்தார்கள்.

நாற்பத்தி எட்டு வயது நிரம்பிய நாகராஜன் திடகாத்திரமான தோற்றம் கொண்டவர். முகத்தில் எப்போதும் ஒரு புன்முறுவல் இருந்து கொண்டே இருக்கும். மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் மிகவும் மரியாதையாகவே பேசும் வழக்கம் கொண்டவர். இவருக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. இவரது தந்தை நிறுவிய இந்த கல்லூரியை தொடர்ந்து நிர்வகித்து வருகிறார். வயதாகிப் போனாலும் இவரது தந்தை அவ்வப்போது இந்த கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.

''மக்கள் ஒற்றுமை இயக்கம், கட்சியோட பேரு ரொம்ப நல்லாருக்கு, ஆனா நம்ம கல்லூரிக்குள்ள கட்சி நடவடிக்கைகள் எல்லாம் இருக்க வேணாம். உங்க கட்சி நடவடிக்கைகள், கூட்டங்கள் எல்லாம் உங்களோட படிப்பை பாதிச்சிராம பார்த்துக்கோங்க. படிச்சி முடிச்சிட்டு இதைச் செய்யுங்கனு நான் சொல்லலை, தாராளமா கட்சி ஆரம்பியுங்க‌''

''ரொம்ப நன்றி சார், நிச்சயம் கல்லூரிக்குள்ள கட்சி நடவடிக்கைகள் எதுவும் செய்யாம பாத்துக்கிறோம் சார்'' என்றான் ரகுராமன்.

''பிரியா, சமூக நல சேவகியா வருவீங்கனு பார்த்தேன், அரசியல் தலைவியா புது குறிக்கோள் எடுத்து இருக்கீங்க, பாராட்டுகள்'' என சிரித்தார் நாகராஜன்.

''அரசியல் மூலம் சமூக சேவை சிறப்பா செய்யலாமே சார்'' என நிறுத்தினாள் சண்முகப்பிரியா.

''தாராளமா செய்யலாம், ரகுராமன் நீங்க என்னை சாயந்திரம் என் வீட்டுல வந்து பாருங்க, ம்ம்... ஒரு ஆறு மணிக்கு, நிறைய பேசனும்''

''நன்றி சார்''

இருவரும் அறையைவிட்டு வெளியே வந்ததும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

''பிரியா, நீ வீட்டுல பேசிட்டுதான் எல்லாம் செஞ்சியா''

''இல்லை, இன்னும் இதைப்பத்தி நான் வீட்டுல பேசலை. உன்கிட்ட பேசிட்டு போனதும் நேரா நான் இருக்கற‌ சமூக நல அமைப்புல விசயத்தைச் சொல்லி கொஞ்சம் பேரை காலையில இங்க வர சொன்னேன்''

''வீட்டுல சொல்லி இருக்கலாமே''

''ம்ம்... சரி ஃபிரெண்ட்ஸ்ங்க கேட்டா பிரின்சிபால் என்ன சொன்னாரோ அதை மட்டும் சொன்னாபோதும்''

மதிய உணவு வேளையில் அனைவரும் என்ன ஆனது என விபரம் தெரிந்து கொண்டார்கள்.

''இதுதான் நம்ம பிரின்சிபால்கிட்ட எனக்கு பிடிச்சது'' என்றான் ஒருவன்.

சந்தானலட்சுமி, ரகுராமனிடம் 'இனிமேலாவது காலேஜுல இதைப் பத்தி எதுவும் பேசாத' என எச்சரித்தாள். ரகுராமன் அதன் பின்னர் கட்சியைப் பற்றி மாலை முழுவதும் பேசவே இல்லை.

மாலையில் சரியாக ஆறு மணியளவில் நாகராஜனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ரகுராமன். வீடு மிகவும் பளிச்சென இருந்தது. முன்புறத்தில் மலர்ச்செடிகள் நறுமணம் வீசிக்கொண்டிருந்தது. வீட்டு வாசலில் நாகராஜனின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. இவனுக்காக காத்திருந்தவர் போல நாகராஜன் ரகுராமனை வரவேற்றார்.

வீட்டின் உள்ளே சுவர்களில் இயற்கை காட்சிகள் அடங்கிய படங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தது. இருக்கைகள் அழகாக இருந்தது. ஆங்காங்கே வரையப்பட்டஓவியங்களும் தென்பட்டன. வீட்டின் அழகில் பிரமித்துப் போன ரகுராமன் நின்று கொண்டிருந்தான்.

''உட்காருங்க ரகுராமன்''

ரகுராமன் அமர்ந்தான்.

''பிரியா இங்கே வாம்மா''

சண்முகப்பிரியா அங்கே வந்தாள். அவளையும் அமருமாரு சொன்னார்.

''காபி, டீ என்ன குடிக்கிறீங்க ரகுராமன்''

''காபி குடிச்சிட்டுதான் வந்தேன் சார், அதனால எதுவும் வேணாம் சார்''

''என்னோட பொண்ணு இந்த கட்சி விசயத்துல சம்பந்தபட்டு இருக்காங்கனு உங்களை கூப்பிடலை ரகுராமன், எனக்கும் உங்களை மாதிரி உங்க‌ வயசுல கனவு இருந்தது. அதெல்லாம் எதுக்கு, நம்மாள முடிஞ்ச அளவு சமூகத் தொண்டு புரிவோம் அப்படினு எங்க அப்பாவோட அறிவுரையை கேட்டதோட இல்லாம அதுதான் சரினு எனக்கு மனசுக்குப் பட்டதால அந்த கனவை அப்படியே விட்டுட்டேன். நிறைய நல்ல மாணவர்களை உருவாக்கலாம்னு மனசுல என்னோட அப்பாவோட கல்லூரி கனவுல என்னையும் இணைச்சிட்டேன். ஆனா இந்த கல்லூரி ஆரம்பிக்க நாங்க பட்ட கஷ்டம் நிறைய. நாங்க ஆரம்பிக்க நினைச்சது பொறியியல் கல்லூரியோ, மருத்துவ கல்லூரியோ இல்லை. இப்போ இருக்கிற வணிகவியல், பொருளாதாரவியல், சமூகவியல் அப்படினு ஒரு கல்லூரி ஆரம்பிக்க நினைச்சப்போ எத்தனை தடைகள், அதையெல்லாம் தாண்டி இப்போ ஒரு நல்ல சிறந்த கல்லூரியா உருவாகி இருக்கறதுக்கு காரணம் நல்ல மாணவர்கள், நல்ல ஆசிரியர்களோட ஒத்துழைப்பு''

''என் மகன் நிறைய மதிப்பெண்கள் வாங்கி பொறியியல் துறை படிக்க போறேனு சொன்னார், படிக்கட்டும்னு விட்டேன். இன்னைக்கு அவர் அமெரிக்காவில இருக்கார். பிரியாவுக்கு மருத்துவமோ, பொறியியலோ இஷ்டம் இல்லை. இவங்க என்ன படிக்க விருப்பப்படறாங்களோ படிக்கட்டும்னு இருந்துட்டேன், நீங்கதான் உங்க வாழ்க்கையை தீர்மானிக்கனும்''

பேசிக்கொண்டிருந்த போதே பலகாரங்கள், இனிப்புகள் தண்ணீர் என மேசையில் வந்து வைத்தார் நாகராஜனின் மனைவி மகேஸ்வரி.

''எடுத்துக்கோங்க ரகுராமன்''

''நன்றி சார்''

''ஒரு கட்சியோட முழு வெற்றி அந்த கட்சியில இணையற உறுப்பினர்களோட செயல்பாடுல, கட்சித் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளார்களுனு நிறையவே இருக்கு. எல்லாம் நல்லா அமையனும், அல்லது அமைச்சிக்க கடும் முயற்சி எடுத்துக்கனும். இன்னைக்கு கல்லூரி வாசலுல‌ காலையில நடந்த விசயத்தை வைச்சித்தான் எல்லா விசயமும் எனக்கு கொண்டு வந்தாங்க. கல்லூரியில இதை பேச வேணாம்னுதான் உங்களை இங்க வரச் சொன்னேன்''

''சரி மாநில கட்சி, தேசிய கட்சி எது உங்களோடது?''

''எனது நோக்கம் தேசிய கட்சிதான் சார், முதல தேவையான வாக்குகள் சேகரிச்சி மாநில கட்சி அங்கீகாரம் தேர்தல் ஆணையம் மூலமா பெறனும், அப்படியே கட்சியை பக்கத்து மாநிலங்களுக்கு விரிவடைய செஞ்சி முதல் கட்டமா ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா அப்படினு நம்ம தமிழ்நாட்டோட சேர்த்து நல்ல வாக்குகள் வாங்கி தேசிய கட்சி அங்கீகாரம் பெறனும் சார்''

இதைக் கேட்டதும் நாகராஜன் ரகுராமனது கைகளைப் பிடித்து குலுக்கினார். அவரது கண்களில் பெரும் நம்பிக்கை தெரிந்தது.

''உங்களுக்கு என்ன உதவி வேணுமோ, அதை என்கிட்ட தயங்காம கேளுங்க ரகுராமன், நிச்சயம் செஞ்சி தரேன், என்னை மாதிரி எத்தனையோ பேர் நிச்சயம் இருப்பாங்க''

''ரொம்ப தேங்க்ஸ்பா''

ரொம்ப நன்றி சார்''

''படிப்புலயும் கவனம் இருக்கட்டும்''

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். ரகுராமன் மிகவும் சந்தோசத்துடன் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

தனது கனவுகள் சாத்தியப்படாதவைகள் என ஒதுங்கிப் போய்விடும் மனிதர்கள் யாவரும் சற்று சிந்தித்து அந்த கனவுகளை அடைய வேண்டிய முயற்சியில் இறங்கினால்தான் என்ன? கனவு மெய்ப்பட வேண்டும் என பாரதிக்கு மட்டும் தான பாட வருமா?

(தொடரும்)